ஸ்ரீ வேங்கடேச மகாத்மியம்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: August 7, 2026
பார்வையிட்டோர்: 62 
வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்

(1976ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் -1 | அத்தியாயம் – 2 | அத்தியாயம் – 3

மகாவிஷ்ணு கண்ணனாக அவதரித்திருக்கையில் யசோதையிடம் நீண்ட நாட்கள் வளர்ந்தார். பிறகு திருமணமானதும் வளர்ப்புத்தாய் யசோதையை மறந்து தம் தேவிமார்களுடன் வாழ்ந்து வந்தார். 

கடைசி காலத்தில் யசோதை கண்ணபெருமானிடம், “கண்ணா, உன்னைச் சிறிய வயதில் அன்புடன் வளர்த்தேன். நீ பெரியவனானதும் என்னை அடியோடு மறந்து சென்றுவிட்டாய். மீண்டும் உன்னைப் பேணி வளர்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்காதா?” என்று வருந்திக் கூறினாள். 

“தாயே, கவலையுற வேண்டாம். நான் பூலோகத்தில் வேங்கடேசனாக அவதரிக்கும்பொழுது தாங்கள் வகுளா தேவியாக வந்து எனக்குத் தொண்டு புரிவீர்கள்” என்று கூறினார். 

அதன்படி யசோதா தேவி வேங்கடமலையில் வகுளாதேவியாக அவதரித்து வளர்ந்து வந்தாள். 

வைகுந்தத்தை விட்டுக் கிளம்பிய பரந்தாமன் இலட்சுமி தேவியைப் பிரிந்த துக்கத்தினால் பூவுலகை அடைந்தார். பல இடங்களிலும் பித்துப்பிடித்தவர்போல் சுற்றினார். எந்த இடமும் அவருக்குப் பிடிக்கவில்லை. முடிவில் வேங்கடமலைக்கு வந்தார். அந்த மலையில் உள்ள வனங்களும் நீர்ச்சுனைகளும் அவர் உள்ளத்தைக் கொள்ளை கொண்டன. மலைமேல் உள்ள புஷ்கரணி தீர்த்தக்கரையில் உள்ள ஒரு புளிய மரத்தின் பொந்தைத் தம் இருப்பிடமாகக் கொண்டார் பரந்தாமன். 

ஒரு நாள் வேங்கடமலையில் வாசம் செய்யும் வராகப்பெருமான் புற்றிலிருந்து வெளிப்படும் வேங்கடேசனைக் கண்டார். 

“திருமாலே, வைகுந்தத்தைவிட்டு நீர் இங்கு வரக் காரணம் என்ன?” என்று திருமாலைப் பார்த்துக் கேட்டார் வராகப்பெருமான். 

“வராகமூர்த்தி, ஒரு நாள் பிருகு முனிவர் என் மேல் கோபம் கொண்டு என் மார்பில் உதைத்தார். அதனால் கோபம் கொண்டு இலட்சுமி தேவியானவள் என்னை விட்டுப் பிரிந்து சென்று கொல்லாபுரத்தில் வசித்து வருகிறாள். நான் வைகுண்டத்தில் இருக்கப் பிடிக்காமல் இங்கு வந்துவிட்டேன். எனவே நான் வசதியாக இருக்கக்கூடிய ஓர் இடத்தை நீங்கள் எனக்குத் தரவேண்டும்” என்று வராகமூர்த்தியைக் கேட்டுக்கொண்டார் மகாவிஷ்ணு. 

“இலவசமாக எப்படி இடம் தரமுடியும்? ஏதாவது விலை கொடுத்துப் பெற்றுக்கொள்ளும்” என்றார் வராக மூர்த்தி. 

“வராகமூர்த்தி, இலட்சுமிதேவி என்னை விட்டுப் பிரிந்ததனால் நான் மிகவும் ஏழையாகி விட்டேன். இப்போது என்னிடம் ஒன்றும் கிடையாது. ஆனால் நான் இங்கே வாசம் செய்தாலும் உமக்கு நிவேதனம் செய்த பின்னரே எனக்கு நிவேதனம் செய்யும்படியும், பக்தர்கள் முதலில் உம்மைக் கண்ட பிறகே என்னைக் காணவேண்டும் என்றும் செய்விப்பேன். இதுதான் நீர் கொடுக்கக்கூடிய இடத்துக்கு நான் அளிக்கும் விலை” என்றார் திருமால். 

அவர் மேல் அன்புகொண்ட ஆதிவராகப் பெருமான் வேங்கடேசனாக வந்திருக்கும் திருமாலுக்கு வேங்கடமலையில் ஓர் இடத்தை அளித்தார். இதைத் தவிர தம்மிடம் பணிபுரியும் வகுளாதேவியையும் வேங்கடவனிடம் அனுப்பி அவருக்குத் தொண்டு புரியுமாறு கூறினார். 

முன் பிறவியில் யசோதையாக இருந்த வகுளா தேவி, மீண்டும் வேங்கடேசனான திருமாலுக்குத் தொண்டு புரியும் பாக்கியத்தைப் பெற்றாள். 

– தொடரும்…

– ஸ்ரீ வேங்கடேச மகாத்மியம், முதற் பதிப்பு: அக்டோபர் 1976, பைலட் பப்பிளிகேஷன்ஸ், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *