சமூகமே உணர்வாயா?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 7, 2026
பார்வையிட்டோர்: 28 
வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்

(2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பசி வயிற்றைக் கிள்ளியது. மிக வேகமாக பைக்கை செலுத்திக் கொண்டு வந்தான் ரஸ்லான். வீட்டை நெருங்கியதும் அவனுக்கு வியப்பாக இருந்தது. அவனது நண்பன் ஸபாரின் பைக் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதைக் கவனித்துக்கொண்டே வந்தவனின் பைக் திடீரென நின்றுவிட்டது. பல முறைகள் உதைத்துப் பார்த்தான். இயங்கவில்லை. பெற்றோல் முடிந்திருந்ததை அப்போது தான் உணர்ந்தான். பசி மயக்கத்தில் அதைக் கவனிக்கவில்லை என தன்னையே கடிந்துகொண்டான். 

பைக்கைத் தள்ளிக்கொண்டே வீட்டை அடைந்தான் ரஸ்லான். ஏதாவது முக்கியவிடயமாக ஸபார் தன்னை சந்திக்க வந்து வீட்டில் காத்திருப்பதாக எண்ணிக்கொண்டு வந்து சுற்றுமுற்றும் பார்த்தான். ஸபாரைக் காணவில்லை. வீட்டின் வாசற் கதவு மூடிக்கிடந்தது. அப்படியானால் பைக்கை நிறுத்திவிட்டு, தான் இல்லாததால் அருகில் எங்கேயாவது ஸபார் போயிருப்பான் என எண்ணினான். வீட்டின் பின் புறத்தில் அமைந்திருந்த பைக் நிறுத்தும் இடத்தை நெருங்கிய ரஸ்லானுக்கு இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது. 

அங்கே அவன் கண்ட காட்சி அவனை அதிர வைத்தது. அப்படியே கற்சிலை போல் நின்றுவிட்டான் ரஸ்லான். ஆம்! அவனது ஆருயிர் நண்பனான ஸபார் சமையலறையின் வெளியே நின்று ஜன்னலூடாக ஒரு திருடனைப் போல எட்டிப் பார்த்துக்கொண்டு நின்றான். யாரோ நடந்து வரும் ஓசை கேட்டு திடுக்குற்று திரும்பிய ஸபார் ரஸ்லானைக் கண்டதும் அதிர்ச்சியடைந்தான்.

‘ரஸ்…லா…ன் நா… உன்னைத் தேடித்தான் வந்தேன்’ என நாவு குழறியபடி பேச்சின்றித் தோற்றுப் போனான். ரஸ்லானின் கண்கள் கோபத்தில் சிவந்துவிட்டன. எதுவும் பேசாமல் முன் வாசலுக்கு வந்து அழைப்பு மணியை அழுத்தினான். வீட்டுக்குள்ளிருந்து ஓடி வந்த ஆபிதா, வாசற் கதவைத் திறந்தாள். தனது கணவனைக் கண்டதும் சந்தோஷத்தில் பூரித்துப் போனாள்.

‘என்ன புதினமாயிருக்கு இன்றைக்கு நேரத்தோட வந்திருக்கீங்க? என மகிழ்ச்சி பொங்கக் கேட்டாள். அவளைப் பொருட்படுத்தாமல் விருவிரு என அறைக்குள் சென்றுவிட்டான் ரஸ்லான். அப்போது தான் வீட்டின் முன்னால் ஸபார் நிற்பதைக் கண்டாள் ஆபிதா. 

‘ஆ… ஸபார் காக்கா…! நீங்களுமா வந்திருக்கீங்க? ஏன் வெளியில நிற்கிறீங்க? உள்ள வந்து உட்காருங்க’ என வரவேற்றுவிட்டு உள்ளே சென்றாள்.

சமைத்த உணவுகளை மேசை மீது பரத்தினாள். அனைத்தையும் ஒழுங்கு படுத்தி முடித்துவிட்டு ஹோலுக்கு வந்தவள் வியப்படைந்தாள். தனது கணவன் ஸபாரை அழைத்து வந்து இருவரும் பேசிக்கொண்டு இருப்பார்கள் என எண்ணி வந்தவளுக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது. அங்கே இருவரையும் காணவில்லை. எங்கே போயிருப்பார்கள் என எண்ணியபடி மீண்டும் உள்ளே வந்தவள் தற்செயலாக அறையை எட்டிப் பார்த்தாள். உடைகளைக் கூட மாற்றிக்கொள்ளாமல் ரஸ்லான் கட்டிலில் வீழ்ந்துகிடந்தான். 

‘என்ன நீங்க உடுப்பைக் கூட மாற்றாமல் படுத்துட்டீங்க. உங்க கூட்டாளி எங்க? சாப்பிடாமல் போயிட்டாரா’ என கேட்டாள். பதில் எதுவும் கூறாமல் சிந்தனையில் ஆழ்ந்திருந்தான் ரஸ்லான். 

‘என்ன ஏதும் பிரச்சினையா? 

‘இல்லை’ 

‘ஏன் உங்க கூட்டாளி சாப்பிடாமல் போயிட்டார்? 

‘பசிக்கலயாம்’ 

‘நீங்க வந்து சாப்பிடுங்களேன்..’ 

‘வேணாம் ஆபிதா பசிக்கல்ல’ என பதில் கூறினான். அவனது பசி காணாமல் போயிருந்தது. 

சற்று முன் நடந்த விடயத்தை தனது மனைவியிடம் சொல்லுவோமா என ரஸ்லான் நினைத்தான். ஆனால் அது அவனுக்கு அவமானமாகத் தோன்றியது. அதைவிட ஸபார் வீட்டுக்கு வருவது ஆபிதாவுக்கு பிடிப்பதில்லை. இதையும் சொன்னால் ஏச்சுத்தான் விழும் என்று எண்ணி பேசாமல் இருந்தான். 

முன்பு ஒருமுறை ஸபாரின் வீட்டில் ஒரு விருந்து ஏற்பாடாகியிருந்தது. சிறப்பு விருந்தினர் என இவர்களை கட்டாயப்படுத்தி அழைப்பு விடுத்திருந்தான் ஸபார். ஆனால் எவ்வளவு அழைத்தும் ஆபிதா விருந்துக்கு வர முடியாது என மறுத்துவிட்டாள். இதனால் மனமுடைந்து போன ரஸ்லான் அவளோடு சண்டை பிடித்துவிட்டு தானும் போகாமல் இருந்துவிட எண்ணினான். அதற்குள் பலமுறைகள் தொலைபேசினான் ஸபார். வேறு வழியின்றி அவன் தனியாக சென்றதோடு சமாளிப்பதற்காக ஆபிதாவுக்கு சுகமில்லை என ஒரு சின்ன பொய்யை உதிர்த்தது இன்னொரு வம்பை ஏற்படுத்தியது. 

மறுதினமே ஸபார் தனது மனைவியோடு ஆபிதாவை நோய் விசாரிக்க வந்துவிட்டான். இதை எதிர்பார்க்காத ரஸ்லான் தர்மசங்கடத்தில் சிக்கிக்கொண்டு நிலைமையை சமாளிப்பதற்குத் திணறிப் போனான். அதைவிட அன்று ஆபிதாவை சமாளிப்பதற்குள் போதும் போதுமென்று ஆகிவிட்டது. எது எப்படியானாலும் ஸபார், தனது வீட்டுக்கு வருவது ஆபிதாவுக்கு பிடிக்கவில்லை என்பது மட்டும் ரஸ்லானுக்குப் புரிந்தது. அதையெல்லாம் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை ரஸ்லான். இத்தனைக் கால அலட்சியம் இன்று பெருங் கவலையை ஏற்படுத்தியது. திடீரென ஏதோ எண்ணியவனாக சட்டென எழுந்து அமர்ந்துகொண்டான். 

‘ஆபிதா… இன்றைக்கு ஒரு டினருக்குப் போகனும்’

‘எங்க?’ 

‘ஸபார் வீட்டுக்குத்தான். அதை சொல்லத்தான் வந்தானாம்’ என்றதோடு உடனே அவள் முகம் மாறுவதைக் கவனித்தான். 

‘என்னால முடியாது. வேணும்னா நீங்க போங்க’ என கோபத்தோடு வெடுக்கென பதிலளித்துவிட்டு எழுந்து போய்விட்டாள். இது எப்போதும் நடப்பது தான். அவளது அந்த வெறுப்பிற்கான காரணத்தை இன்று அறிந்தே ஆகவேண்டும் என தீர்மானித்தான். ஆகவே இன்று அவளிடம் கோபம் காட்டவில்லை.

‘ஏன் வரமுடியாது ஆபிதா? 

அவள் பதில் சொல்லவில்லை. மீண்டும் வினவினான். 

‘சொல் ஆபிதா அவன் ஏழை என்பதால் தானா இந்த அலட்சியம்?’ 

‘சத்தியமா இல்ல. நான் நேத்து வந்தவ. அவர் சின்ன வயதிலிருந்து உங்க நண்பன். அவரோட ஏழ்மைக்காக இரக்கப்பட்டு நிறைய உதவிகள் செய்றீங்க. உங்க நட்புக்கும், நீங்கள் செய்ற உதவிகளுக்கும் நிச்சயமாக நான் முட்டுக்கட்டையாக இருக்கப் போறதில்ல. ஆனால் அதையெல்லாம் வெளியில வெச்சிக்கொள்ளுங்க. அவர் இங்க வருவது எனக்கு சுத்தமாக பிடிக்கல்ல’

‘அது தான் ஏன்? 

‘சொன்னாலும் நீங்க நம்பப் போறது இல்ல. சண்டை தான் பிடிப்பீங்க’

‘ஓகே.. சண்டை போடல்ல. இப்ப சொல்லேன்’ 

‘அவர் பேச்சு, பார்வை எதுவுமே சரியில்ல. எல்லாத்துலயும் சபலம்தான். ப்ளீஸ் புரிஞ்சுக்குங்க. இவ்வாறானவங்கள்ட சகவாசமே வேணாம். நாங்க நிம்மதியா சந்தோஷமா வாழனும்னா இதுபோல வெளியில் இருந்து யாரையும் வீட்டுக்கு அழைத்து வராதீங்க. இவ்வாறான விஷயங்களால் எத்தனையோ குடும்பங்கள் பாதிக்கப்பட்டு சீரழிஞ்சு போயிருக்கு’ என என கூறும் போதே அவளுக்கு கண்ணீர் துளிர்த்தது. அவனும் உடைந்து போனான். 

இத்தனைக் காலம் அவள் சொன்னவற்றை அவன் பெரிதுபடுத்தவில்லை. ஆனால் இன்று இதை அலட்சியப்படுத்த அவனால் முடியவில்லை. எந்தவொரு பிரச்சினைக்கும் ‘ஆரம்பம்’ என ஒன்று உள்ளது. அந்த ஆரம்பத்தை உணரும் பட்சத்திலேயே அதைத் தவிர்த்துவிட வேண்டும். இல்லையாயின் அதன் விளைவுகள் விபரீதத்திலேயே முடியும். 

இதை இன்று ரஸ்லான் உணர்ந்துவிட்டான். ஆனால் இந்த சமூகம் உணர்வது எப்போது?

– மார்ச் 2012, பூங்காவனம் கலை இலக்கிய சமூக சஞ்சிகை – இதழ் 8.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *