ஏடிஎம் மகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 20, 2026
பார்வையிட்டோர்: 1,230 
வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்

கோலாலம்பூரின் மையப்பகுதியில், ஒளியும் ஒலியும் கலந்து நிற்கும் அந்தப் பிரம்மாண்டமான அரங்கில் கவி நடந்து வந்தாள், கேமராக்கள் தானாக அவளைத் தேடி திரும்பும். அவளது நம்பிக்கையான நடை, இயல்பான புன்னகை, முகத்தில் குடிகொண்டிருக்கும் அமைதி, காந்தம் போன்ற கண்களின் அழகு , அனைத்தும் சேர்ந்து அவளை மலேசியாவின் மிகவும் பிரபலமான மாடல்களில் ஒருத்தியாக உயர்த்தியது. மேடையில் அவள் ஒர் அழகு தேவதையைப் போலப் பிரகாசிப்பாள்.

ஆனால், அந்த வெளிச்சத்துக்குப் பின்னால் கவி ஒரு மிகச் சாதாரண குடும்பப் பெண்தான். வீட்டுக்கு வந்தவுடன் விலைமதிப்பற்ற தன் மேக்கப்பைக் கழுவிவிட்டு, சமையலறைக்குச் சென்று, “அம்மா, சாம்பார் சாதம் இருக்கா?” என்று கேட்கும் எளிமையான மகள் அவள். தந்தையிடம், “அப்பா, கார் சரியா ஓடுதா?” என்று அக்கறையோடு கவலைப்படும் மகள். தங்கை தாராவுக்கு, “நீ கவலையில்லாம படிச்சுக்கோ, உன்னோட காலேஜ் செலவை நான் பார்த்துக்கறேன்” என்று சொல்லும் பாசமான அக்கா.

கவியின் மொத்த உலகமும் அவள் குடும்பம் மட்டும்தான். தன் குடும்பத்தை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் தன் கனவு, ஆசைகளை எல்லாம் தன் மனதிற்குள்ளேயே புதைத்துக் கொண்டு இரவு பகல் பாராமல் உழைப்பதிலே குறியாக இருந்தாள்.

ஒருநாள், கவி தன் தந்தைக்காகப் புதிய பிராண்டட் கார் ஒன்றை வாங்கி வந்தாள். வீட்டின் முன் அந்தப் பளபளக்கும் கார் நின்றதும், அண்டைவீட்டார் ஆச்சரியத்துடனும் பொறாமையுடனும் பார்த்தார்கள். “அப்பா, இது உங்களுக்காக,” என்று கவி சாவியை நீட்டியதும், அப்பா செய்வதறியாது திகைத்து நின்றார். பின்னர் மகிழ்ச்சியோடு மகள் வாங்கி தந்த காரைப் தடவிப் பார்த்தார்.

கவி அம்மா, “என் பொண்ணு மாதிரி குடும்பத்துக்காக உழைக்கிற தங்கமான பொண்ணு யாருக்கும் கிடைக்காது,” என்றாள். அந்த வார்த்தைகள் கவியின் மனதை முழுமையாக நிரப்பின. ஆனால் பக்கத்து வீட்டு அக்கா மட்டும் அவளைத் தனியே அழைத்து, “கவி, எல்லாப் பணத்தையும் வீட்டுக்காகவே செலவு செய்யாதே. நாளைக்கு உனக்கும் ஒரு வாழ்க்கை இருக்கு என்றாள். ஆனால், குடும்பத்தின் மீது கண் மூடித்தனமான பாசம் வைத்திருந்த கவி, அந்த வார்த்தைகளைப் பொருட்படுத்தவில்லை.

கவிக்கு நவீன் என்ற காதலன் இருந்தான். அவன் பார்ப்பதற்கு மிகவும் அழகானவன், வசீகரமானவன். ஆனால், அவன் கவியின் உள்ளதை நேசிக்கவில்லை ஆனால்,அவளது உடலையும், மாடலிங் அழகையும் மட்டுமே நேசித்தான். “இன்று ஜிம் போனியா? அடுத்த வாரம் பெரிய ஷூட் இருக்கு, ஸ்கின் பளபளப்பா இருக்கணும்” என்று மட்டுமே அவன் அக்கறையாக அவளிடம் கேட்பான் .

அதே துறையில் அவளுடன் வேலை செய்பவன் தேவன். அவன் நவீனை விட முற்றிலும் மாறுபட்டவன். கவி சோர்வாக இருந்தால் ஊக்கம் முட்டுவன். ஒருநாள் தன் மனதைத் திறந்து, “உன் புகழுக்காகவோ, அழகுக்காகவோ இல்ல, நீ யாருக்கும் தெரியாம அமைதியா சுமக்கிற அந்த அன்பான மனசுக்காக,” என்றான்.

கவி பதறிப்போய், “நான் நவீனைக் காதலிக்கிறேன். எனக்காக அவன் எப்பவும் நிற்பான்,” என்று மறுத்தாள். அதற்குத் தேவன் மெல்லிய புன்னகையுடன், “நிற்கிறவனை மழையில்தான் தெரியும் கவி. வெயிலில் எல்லாரும் நிழல் தருவாங்க,” என்று கூறிவிட்டு விலகினான். “நேரம் வரும்போது உனக்கு புரியும், உனக்ககே எப்பவும் காத்திருப்பேன் “, என்றான் .

சில மாதங்களுக்குப் பிறகு, பினாங்கில் ஒரு மாபெரும் ஃபேஷன் நிகழ்ச்சி முடிந்து திரும்பும் வழியில் பழத்த மழை பெய்தது. கவி பயணம் செய்த கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

மருத்துவமனையில் கண் விழித்த கவியால், தன் உடலின் கீழ்ப்பகுதியைச் சிறிதும் அசைக்க முடியவில்லை என்று பதறினாள். மருத்துவர் அவளருகே வந்து, “விபத்தால் உன் முதுகுத்தண்டு பலத்த பாதிப்படைந்துள்ளது. நீ மீண்டும் நடக்கப் பல மாதங்கள், வருடங்கள் கூட ஆகலாம். நிறைய சிகிச்சையும் பயிற்சியும் தேவை,” என்றார். கவி உடைந்து அழுதாள்.

விபத்து நடந்த முதல் நாள் நவீன் அவளைப் பார்க்க வந்தான். படுக்கையில் கிடந்த அவளது அசைவற்ற உடலைப் பார்த்தவன் சட்டென்று வெளியே சென்று மருத்துவரிடம், “டாக்டர், அவளோட மாடலிங் கரியர் என்ன ஆகும்? பாடி பழைய மாதிரி ஆகுமா? ஃபேஸ் மாறுமா?” என்று தன் சுயநலத்தை வெளிப்படுத்தினான். காதலியின் உயிரை விட அவளது உடல் அழகை அவன் எதிர்பார்த்ததைக் கண்டு கோபமடைந்த மருத்துவர், அவனைக் கடுமையாகத் திட்டி வெளியே அனுப்பினார். அதன்பின் நவீன் மருத்துவமனைப் பக்கமே தலைவைத்துப் படுக்கவில்லை.

நாட்கள் நகர்ந்தன. மருத்துவமனை செலவுகள் அதிகரிக்க ஆரம்பித்ததும், கவியின் குடும்ப உறுப்பினர்களின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. “இவள் ரிக்கவர் ஆகுவாளானு உறுதியா தெரியல. இனிமேல் இவளால் சம்பாதிக்க முடியலன்னா, இவ்வளவு செலவு பண்ணி என்ன பயன்?” என்று அவள் அப்பா பேசுவது கவியின் காதுகளில் விழுந்து அவளை உருக்குலைத்தது. சில நாட்களில், மருத்துவமனைச் செலவைக் குறைப்பதற்காக கவியை வீட்டுக்கு அழைத்துச் சென்றார்கள்.

ஆரம்பத்தில் ஒரு கடமைக்காக அவளைக் கவனித்த குடும்பம், கவியால் இனி மீண்டும் பணம் சம்பாதிக்க முடியாது என்ற கசப்பான உண்மை தெரிந்ததும், ஒரு பெரும் சுமையாகப் பார்க்கத்

தொடங்கினர். கவி, வீட்டின் கடைசியில் இருந்த ஒரு சிறிய, காற்றோட்டமில்லாத இருண்ட அறைக்குத் தள்ளப்பட்டாள்.

ஒருநாள் மதிய நேரம், பசியால் தவித்த கவி, “அம்மா… கொஞ்சம் சாப்பாடு கொண்டு வரிங்களா?” என்று மெல்லிய குரலில் கேட்டாள். அம்மா எரிச்சலுடன் ஒரு தட்டில் பழைய சாதத்தை மட்டும் கொண்டு வந்து வைத்தாள். “அம்மா… குழம்பு எதுவும் இல்லையா?” என்று கவி பாவமாக கேட்டாள்.

“உட்கார்ந்த இடத்துலேயே படுத்துக் கிடக்கிறவளுக்கு எதுக்கு இவ்வளவு சாப்பாடு? முன்ன மாதிரி ஹோட்டல் சாப்பாடு எல்லாம் இங்கே கிடைக்காது. வேலை செய்ற எங்களுக்குத்தான் எல்லாம் வேணும். இருக்கிறதைத் தின்னு,” என்று கடுகடுப்புடன் சொல்லிவிட்டுப் போனாள் தாய். பெற்ற தாயின் இந்த அவமதிப்பு அவளைச் வெகுவாக பாதித்தது.

பிறகு, படுக்கையிலேயே கிடக்கும் அவளைச் சுத்தம் செய்வது அவர்களுக்கு அருவருப்பாக மாறியது. அவளைக் குளிப்பாட்டுவதையே முற்றிலுமாக குறைத்துவிட்டார்கள். ஒரு காலத்தில் அழகின் அடையாளமாகப் பத்திரிகைகளின் அட்டையை அலங்கரித்த கவி, இப்போது அழுக்கடைந்த ஆடைகளுடன், சிக்குப்பிடித்த தலையோடு, வியர்வை நாற்றத்துடன் குப்பையைப் போலக் கிடந்தாள்.

ஒருநாள் தங்கை தாரா, ஒரு புதிய விலையுயர்ந்த ஐப்போனை வாங்கிக்கொண்டு வந்தாள். கவி தன் சிகிச்சைக்காக வங்கியில் சிறுகச் சிறுகச் சேமித்து வைத்திருந்த கடைசிப் பணத்தை எடுத்துத்தான் தாரா அதை வாங்கியிருந்தாள். இதை அறிந்த கவி “தாரா… என் பிசியோதெரபிக்கு அந்தப் பணம் வேணுமே…” என்று கதறினாள்.

“நீ இப்போதைக்கு நடக்கப் போறதில்லை. அந்தப் பணத்தை பேங்க்ல வச்சு நாங்க என்ன பண்றது? நான் காலேஜ்ல என் ப்ரெண்ட்ஸ் முன்னாடி கெத்தா இருக்க வேண்டாமா? உனக்குத்தான் இப்போ எந்தச் செலவும் இல்லையே, சும்மாதானே படுத்துருக்க,” என்று இரக்கமே இல்லாமல் கொடூரமாகச் சொல்லிவிட்டு நகர்ந்தாள் தாரா.

பணத்தின் சுயரூபத்தைக் கவி அப்போதுதான் வலியோடு உணர்ந்தாள். எந்தக் குடும்பத்திற்காகத் தன் ஆசைகளை எல்லாம் கொன்று பணத்தைக் கொட்டித் தீர்த்தாளோ, அதே பணம் அவர்களை எவ்வளவு விஷமாக மாற்றிவிட்டது. என்னை ஒரு ‘ஏடிஎம்’ இயந்திரம் போல பயன்படுத்தும் பொழுது அன்பைக் கொட்டியவர்கள், இப்பொழுது தன்னைத் தூக்கி வீசியதை நினைத்து பெரும் ஏமாற்றம் அடைந்தாள்.

அதே சமயத்தில் ஒரு வேலைக்காக வெளிநாட்டிற்குச் சென்ற தேவன் மலேசியாவிற்குத் திரும்பி இருந்தான். நாடு திரும்பிய அவனுக்கு, கவியின் விபத்துக் குறித்தும், அவளது குடும்பத்தின் கொடூரமான புறக்கணிப்பு குறித்தும் தெரியவந்தது. துடிதுடித்துப் போனான். நேராக கவியின் வீட்டுக்கு வந்தான்.

வீட்டினுள் நுழைந்து அவளைப் பார்த்த அந்த நொடி அவனது கண்களில் கண்ணீர் பெருகியது.

அங்கே இருண்ட மூலையில், மெலிந்து எலும்பும் தோலுமாக, யாருமற்ற அனாதையைப் போலக் கிடந்தாள் கவி. கண்கள் குழிவிழுந்து காணப்பட்டன. அந்தப் பரிதாபக் காட்சியைக் கண்ட தேவனின் இதயம் சுக்குநூறாக உடைந்தது. முழங்காலிட்டு அவளருகே அமர்ந்து, ஒரு சிறுபிள்ளை போல விக்கி விக்கி அழுதான்.

“எழுந்திரு கவி… என் கூட வந்துடு. இனி ஒரு நிமிஷம் கூட நீ இந்த நரகத்துல இருக்கக் கூடாது. நான் உன்னைப் பார்த்துக்கிறேன்,” என்றான்.

கவி தட்டுத்தடுமாறி, தன் அழுக்கடைந்த கைகளால் முகத்தை மூடிக்கொண்டு, தேம்பலான குரலில் “தேவன்… என்னை விட்டுடு… நான் ஒரு அனாதை. பிச்சைக்காரி. இப்போ… என்கிட்ட உனக்குக் கொடுக்க எதுவமே இல்லையே…”

பெற்ற குடும்பமே பணத்துக்காகத்தான் அன்பைக் காட்டியது என்ற உச்சக்கட்ட வலியில், அவனும் தன்னை அப்படி நினைத்துவிட்டாளோ என்று அவனது நெஞ்சம் வெடித்தது. “எனக்கு உன் பணம் வேண்டாம் கவி… எனக்கு நீ வேணும்! உன் மனது வேணும்!” என்று சத்தமாகக் கத்தியவன், பெற்றோர் தடுத்ததையும் பொருட்படுத்தாமல், அந்த அழுக்கடைந்த உடலோடு அவளைத் தன் நெஞ்சோடு அணைத்துத் தூக்கிக்கொண்டு தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.

தேவனின் வீடு கவிக்கு ஒரு புதிய பிறவியைக் கொடுத்தது. தேவனின் அம்மா உதவியோடு, தேவன் அவளை ஒரு சிறு குழந்தையைப் போலப் பார்த்துக் கொண்டான். காலையில் சரியான நேரத்தில் மாத்திரை, சத்தான உணவு என ஒரு தாயைப் போலப் பணிவிடை செய்தான். அவளைப் புது பெண்ணாக மாற்றினான்.

தினமும் பிசியோதெரபி பயிற்சிக்காக அவளது கால்களை அசைக்கும்போது, கவி வலியால் துடித்து அழுவாள். அவள் அழும்போது தேவனின் கண்களிலும் கண்ணீர் வழியும். ஆனால், அவன் அதைத் துடைத்துக்கொண்டு, “நீ நடக்கலாம் கவி… இன்னும் கொஞ்சம் முயற்சி செய். நான் பிடிச்சுக்கிறேன்,” என்று அவளுக்குத் தூணாக நின்றான்.

எந்த ஒரு பிரதிபலனையும் எதிர்பாராத அந்தத் தூய்மையான காதலில் அவள் தன் மனதை முழுமையாகப் பறிகொடுத்தாள். பணத்தை எதிர்பார்க்காத உண்மையான அன்பின் முன், அவள் இருண்ட வாழ்க்கை மீண்டும் மெல்ல மெல்லத் துளிர்விடத் தொடங்கியது. தேவனின் ஒவ்வொரு ஊக்குவிப்பிலும் அவள் குணமடைந்தாள்.

இரண்டு வருடங்கள் உருண்டோடின. தேவனின் அளப்பரிய விடாமுயற்சியால், கவி மீண்டும் தன் சொந்தக் கால்களில் கம்பீரமாக நின்றாள். தேவனின் முழு ஆதரவோடு, அவள் மீண்டும் மாடலிங் உலகில் தன் இரண்டாம் அத்தியாயத்தைத் தொடங்கினாள்.

அது அவள் இழந்த இடத்தை மீண்டும் பிடிக்கும் மாபெரும் ஃபேஷன் ஷோ. கோலாலம்பூரின் அதே பிரம்மாண்ட அரங்கம். தேவனின் கைகளைப் பிடித்தபடி மேடையை நோக்கி மிடுக்காக நடந்து வந்துகொண்டிருந்தாள். பழைய பொலிவுடன், அதைவிட ஆயிரம் மடங்கு அதிக தன்னம்பிக்கையுடன் அவள் வருவதைப் பார்த்த பலரும் ஆச்சரியத்தில் வழிவிட்டு நின்றனர்.

அப்போது, தூரத்திலிருந்து மூன்று உருவங்கள் அவளை நோக்கி வேகமாக ஓடி வந்தன. அவளது அப்பா ,அம்மா மற்றும் தங்கை தாரா! கவி மீண்டும் பிரபலமாகிவிட்டாள், பழையபடி சம்பாதிக்கத் தொடங்கிவிட்டாள் என்பதை அறிந்து, மீண்டும் அவளிடம் ஒட்டிக்கொள்ளும் பேராசையுடனும் போலித்தனத்துடனும் ஓடி வந்தனர்.

“கவி… என் செல்ல மகளே… எங்களை மன்னிச்சிடுமா. நாங்க செஞ்சது பெரிய தப்பு. உன் அருமை இப்போதான் புரியுது…” என்று கவி அம்மா போலியாகக் கண்ணீர் வடித்தாள்.

கவி அங்கேயே மரமாக நின்றாள். அவர்களை ஒரு நொடி ஆழமாகப் பார்த்தாள். அந்தப் பார்வையில் துளியும் கோபமோ, வருத்தமோ, பழியுணர்வோ இல்லை. எந்தப் பணம் அவர்களைத் தன்னிடம் இருந்து பிரித்ததோ, அதே பணம்தான் அவர்களை மீண்டும் நாய்களைப் போலத் தன்னிடம் இழுத்து வந்திருக்கிறது என்பதை அவள் முழுமையாக அறிந்திருந்தாள்.

அவள் உதடுகளில் ஒரு மெல்லிய, ஆழமான புன்னகை பூத்தது. அது அவர்களை ஒரு பொருட்டாகவே மதிக்காத அலட்சியப் புன்னகை தோன்றியது.

அவள் அவர்களுக்கு ஒரு வார்த்தை கூடப் பதில் சொல்லவில்லை. எதையும் பேசாமல், தன் பார்வையை அவர்களிடமிருந்து முற்றிலுமாக விலக்கிக் கொண்டாள். ஒளி வெள்ளம் நிரம்பிய அந்த மேடையின் நுழைவாயிலில், தனக்காகத் தன் கைகளை நீட்டியபடி பெருமையுடன் காத்து நின்ற தன் வாழ்க்கையின் உண்மையான வெளிச்சமான தேவனின் கைகளை இறுக்கமாகப் பற்றிக்கொண்டாள்.

தன் கடந்த கால இருட்டை அங்கேயே குப்பையாக வீசிவிட்டு, மேடையை நோக்கியும், தன் உண்மையான காதலை நோக்கியும் சளைக்காமல் நடக்கத் தொடங்கினாள் கவி. அரங்கம் அவளுக்காக எழுந்து நின்று கைதட்டியது.

– தரணி த/பெ யோகேஸ்வரன், பேராசிரியர்: முனைவர் முனீஸ்வரன் குமார், சுலுத்தான் இதுரீசு பல்கலைக்கழகம், மலேஷியா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *