பிரிவிலும் ஓர் உறவு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: July 20, 2026
பார்வையிட்டோர்: 1,159 
வாசிப்பு நேரம்: 14 நிமிடங்கள்

“சரிம்மா. நான் கிளம்பிட்டேன். இன்னும் நாலு அல்லது அஞ்சு நாள் கழிச்சுதான் வருவேன். நீ கவலைப்படாமல் உன் ஹெல்த்தை நல்லா பாத்துட்டு சந்தோஷமா இரு. தினமும் ஈவினிங் ஆர் நைட்ல வீடியோ கால் பண்ணுவேன். ஓகே?” தர்ஷ் தன் அம்மா சரஸ்வதியிடம் சொல்லிக் கொண்டே, அம்மாவின் உச்சந்தலையில் முத்தமிட்டான்.

“எனக்கு உடம்புக்கு என்னடா, குறைச்சல்? நல்லாத்தான் இருக்கேன். நீ ஜாக்கிரதையா போய்ட்டு வா. தேவகிதான் என்னோட இருக்காளே, ஒரு கவலையும் இல்லை. சரி நீ இப்ப எந்த ஊருக்கு போறே?” என்று கேட்டாள் சரஸ்வதி.

“இங்கேருந்து முதல்ல நம்ம கார்ல விண்ணூர் போறோம். அங்கே ஒரு நாள் வேலை.அப்புறம் காரை ஸேஃப் பண்ணிட்டு அங்கேருந்து ஃப்ளைட்ல மலைக்கனியூர் போய்ட்டு அங்கே தங்கிட்டு இன்னும் ரெண்டு மூணு பக்கத்து சில இடங்களுக்கு போய்ட்டு திரும்பவும் விண்ணூருக்கு வந்துட்டு இங்கே வருவேன்.ஒரே இடமாயிருந்தா உங்களையும் அழைச்சிட்டு போகலாம். போன தடவை நாம போனோமே, அது போல. ஆனால் இந்த ப்ளான்ல முடியாது. அதனால் அந்த ஐடியாவை ட்ராப் பண்ணிட்டேன் ” என்றான் தர்ஷ்.

“ஏய், அது எனக்கு தெரியும். நீ போன தடவை அழைச்சிட்டு போய்ட்டு அஞ்சு நாளும் பகல் நேரத்தில் தனியா ஹோட்டல் ரூம்ல உட்கார்ந்து ஒரே அலுப்பு தட்டிடுச்சு. அதெல்லாம் தேவையே இல்லை. நான் இங்கே நிம்மதியாத்தான் இருக்கேன். அதைத்தவிர நீ உன் பிஸினஸ் ப்ளான் எப்படியோ அப்படித்தான் செய்யணும். எனக்கு பயமே இல்லை. நீ தைரியமா, அதே நேரத்தில் உன் வேலைல ஃபோகஸ்டா இருடா கண்ணா.” என்று சொல்லி அவனைக் கட்டிப்பிடித்து வழியனுப்பினாள் சரஸ்வதி.

“இல்லேம்மா, இப்ப எல்லாம் நீ கொஞ்சம் சோர்ந்து போன மாதிரி தெரியுது. ஏதாக இருந்தாலும் எங்கிட்ட சொல்லும்மா. தேவகி அக்கா கிட்ட நான் சொல்லிட்டேன் உன்னை கவனமா பாத்துக்க சொல்லி.சரிம்மா, நேரம் ஆயிடுச்சு, நான் போய்ட்டு வரேன்.” என்று கூறி தர்ஷ் வண்டியில் ஏறிச் சென்றான்.

மாவிலையூர் நகரத்தில் ‘தி ஸ்டோன் ஒர்க்கர்ஸ்’ என்ற நிறுவனம் அறுபதுகளின் ஆரம்பத்தில் பரமசிவம், தர்ஷின் தந்தை சிறியதாகத் தொடங்கினார். கட்டுமானத்துறை பொறியியல் கல்வி கற்று சிறிது காலம் சில கட்டமைப்பு நிறுவனங்களில் பணி புரிந்தவர், சிறிய முதலீட்டு நிறுவனங்களுக்கு அலுவலகக் கட்டிடம் கட்டும் வேலைகளை இடையிடையே தனியாக செய்து வந்தார். அவருடைய சிறப்பான, நேர்மையான பணிகளுக்கு வணிக உலகில் வரவேற்பு நல்ல அளவில் உருவாகியது. பின்னர் வேலையை துறந்து, வங்கி உதவி மூலம் தன் சொந்த நிறுவனத்தை மேற்கூறிய பெயரில் தொடங்கினார். மிக விரைவில் நல்ல வளர்ச்சியும் கண்டார்.

இதனிடையே அவர் சொந்த நிறுவனம் தொடங்கி ஆறு மாதங்களில் சரஸ்வதியுடன் திருமணம் ஆனது. அடுத்த மூன்று வருடங்களில் அவருடைய நிறுவனம் வணிக உலகில் பாராட்டு பெற்று நன்றாகவே வளர்ந்து வந்தது. அவருடைய சிறப்பான திட்டமிடலாலும், குறித்த நேரத்தில் பணிகளை நிறைவு செய்ததாலும், மதிப்பீட்டு தொகைக்குள் கட்டுமானங்களை நல்ல முறையில் கட்டித் தந்ததாலும் தொடர்ந்து பணி ஆணைகள் கிடைத்த வண்ணம் இருந்தன. நாட்கள் ஓடியது. ஆறு வருடங்களில் பரமசிவம், சரஸ்வதி இருவரும் மிகவும் வசதியான நிலைக்கு சென்றனர். ஆனாலும் அவர்களுக்கு ஒரு பெரிய மனக்கவலையை ஆண்டவன் தந்து விட்டான். குழந்தை பாக்கியம் இல்லாமல் ஆகிவிட்டது இந்த தம்பதியினருக்கு. மருத்துவ முறைகள், ஆன்மீக வழிகள், ஜோதிடர்களின் வழிகாட்டுதல் மூலம் பரிகாரம் செய்தல் இப்படி பல வழிகளையும் கடைபிடித்தும் அதற்கு பயனில்லாமல் போனது. சரஸ்வதி மிகவும் நொந்து போய்விட்டாள். அவள் நிலை கண்டு பரமசிவத்தின் உடல்நிலை பலவீனம் அடைந்தது. அவரால் முன்னைப்போல் தன் நிறுவனப்பணிகளில் முழுமையாக ஈடுபட முடியவில்லை. அதைக் கண்ட அவர் நிறுவனத்தின் மேலாளர் கணேஷ் ” சார், நான் உங்களுக்கு அட்வைஸ் பண்றேன்னு நினைக்காதீங்க. நீங்களும், மேடமும் ஏன் ஒரு நல்ல குழந்தையை, குறிப்பாக வறுமைல இருக்கற ஒரு குடும்பத்தில அப்பவே பிறந்த குழந்தையை, அதிகபட்சமா ஒரு மாசம் நிறைஞ்ச குழந்தையை தத்து எடுத்துக் கொள்ள கூடாது? நீங்க அந்த குடும்பத்துக்கு வேண்டியதை செஞ்சுடுங்க. அவங்களும் சந்தோஷப்படுவாங்க. உங்களுக்கும் வீட்டில் தவழ்ந்து விளையாட பிள்ளைச் செல்வம் இருக்கும். என் மனசில பட்டதை சொன்னேன் சார். இந்த முடிவால உங்க ரெண்டு பேருக்கும் உடல்நலம் சீராக ஆகிடும் சார்! யோசிச்சு பாருங்க சார்!” என்றான். பரமசிவத்துக்கும் அது நல்லதாகப்பட்டது.

“சரிப்பா, அவள்கிட்ட இதைப் பத்தி பேசி பாக்கறேன். அவளும் சம்மதிச்சுட்டா மேற்கொண்டு பாக்கலாம். உனக்கு அது மாதிரி ஏதாவது ஃபேமிலி தெரியுமா? டூ யூ ஹாவ் எனி ஐடியா?” என்று கேட்க, ” நான் என் காண்டாக்டை கேட்டு சொல்றேன் சார்! இன்னும் ஒரு வாரம், பத்து நாள்ல சொல்றேன் சார. அதுக்குள்ள நீங்க மேடம் கிட்ட பேசிட்டு சொல்லுங்க சார்!” என்றான்.

அன்றிரவு பரமசிவம், இந்த உரையாடல் பற்றி சரஸ்வதியிடம் சொல்ல, அவளும் சம்மதித்தாள். அதன் பிறகு சில கோயில் பரிகாரங்கள் இவைகளுக்காக சென்ற போது அவர்கள் மனதில் எண்ணியபடி, பிறந்து முப்பத்தைந்து நாட்களே ஆன ஒரு ஆண் குழந்தை கண்ணில் படும்படியான ஒரு சூழல் ஏற்பட்டு, அவர்கள் சம்மதத்துடன் தத்து எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தனர். கணேஷ் இந்த விவரம் கேட்டு பரமசிவம் வீட்டுக்கு உடனே வந்து தன் வாழ்த்துகளை தெரிவித்தான். அந்தக் குழந்தைதான் தர்ஷ்.

தர்ஷ் வீட்டிற்கு வந்த நேரம் மிகவும் நல்ல நேரமாக இருந்ததால், ‘தி ஸ்டோன் ஒர்க்கர்ஸ்’ வியாபாரம் மேலும் முன்னேறியது. வெளி மாநிலங்களில் இருந்தும் நிறைய பணியாணைகள் கிடைக்கப்பெற்று நிறுவனம் அமோகமான வளர்ச்சி கண்டது. அதேபோல் பரமசிவம், சரஸ்வதி தம்பதியினரின் உடல்நலம் சீராக ஆனது.

சரஸ்வதி குழந்தை தர்ஷ் மீது அதீத அன்பு காட்டி வளர்த்து வந்தாள். அவளுக்கு எப்போதும் உதவியாக இருந்து வந்த தேவகியும் தர்ஷை மிகப்பிரியமாக கவனித்து பார்த்துக் கொண்டாள். பரமசிவம் வீட்டில் இருக்கும் நேரத்தில் தர்ஷுடன் அதிக நேரம் செலவழித்து அவன் வளர்ச்சியையும், மழலைகளையும் ரசித்து வந்தார்.காலம் மிக விரைவாக சென்றது.

தர்ஷ் படிப்பு, விளையாட்டு எல்லாவற்றிலும் முதன்மை நிலையில் இருந்தான். தனக்கு தோன்றிய சந்தேகங்களை தந்தையிடம் கேட்டு விடையறிவான். சில நேரங்களில் தாயிடம் கேட்பான். சரஸ்வதியும் பட்டதாரி என்பதால் அவளும் அவன் கேள்விகளுக்கு அலுக்காமல் பதில் சொல்லுவாள். ஒரு வழியாக தர்ஷ் இளங்கலை கட்டிடக் கலை படிக்க, அவனுக்கு அதைப் பற்றி மேலும் படிக்க ஆர்வம் இருந்ததால் மேற்படிப்புக்கு அவனை பரமசிவம் வெளிநாட்டிற்கு அனுப்பினார்.

தர்ஷ் வெளிநாட்டில் முதுகலை கட்டிடக்கலை கல்வியை படித்து முடித்து திரும்பியதும் அவர்களுடைய ‘தி ஸ்டோன் ஒர்க்கர்ஸ்’ நிறுவனத்திலேயே பயிற்சிக்காக எல்லா துறைகளிலும் பணி செய்தான். அந்நிறுவனத்தின் முதலாளியின் மகன் என்ற ஆடம்பரம், கர்வம் இவைகள் சிறிதுமின்றி இரண்டரை வருடங்கள் எல்லா துறைகளிலும் உள்ள கடைநிலை ஊழியர்கள் வரை மரியாதையுடன் நடந்து கொண்டதைப் பார்த்து நிறுவனமே வியந்தது. பரமசிவமும் இதைக்கண்டு மகிழ்ச்சி அடைந்தார்.

பின்னர் பரமசிவத்திற்கு நிறுவனப்பணிகளில் தர்ஷ் வலது கரம் போல் செயல்பட்டு வந்தான். நிறைய நாட்களில் பரமசிவத்தை ஓய்வு எடுக்கச் சொல்லி விட்டு, அலுவலகத்தை தனியே கணேஷின் உதவியோடு கவனித்து வந்தான். அவன் எடுக்கும் பல முடிவுகள் நிறுவனத்திற்கு லாபம் அளித்தது. அதே நேரத்தில் நிறுவனத்தின் நற்பெயருக்கும் எந்த ஊறும் ஏற்படவில்லை. பரமசிவம் அப்போது எழுபதைத் தொட்டதால் மெள்ள, மெள்ள அலுவலகத்திற்கு வருவதை நிறுத்திக் கொண்டார். இதனால் தர்ஷ் தன் முழுத்திறமைகளையும் காட்டி நிர்வாகம் நல்ல முறையில் செய்து வந்தான்.

‘கண் பட்டதோ’ என்று எல்லோரும் நினைக்கும் வகையில் ஒரு நாள், ஒரு நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய பரமசிவம், அன்று மாலையே மாரடைப்பால் காலமானார். மாவிலையூர் வணிக சங்கங்கள் இந்த சோகத்தை கண்டு அதிர்ந்து போனார்கள். தர்ஷ் தன் அழுகையையும், வேதனையையும் அடக்க முடியாமல் நின்று கொண்டிருந்தான். நிலைகுலைந்து உட்கார்ந்திருந்த சரஸ்வதியை மிகவும் சிரமத்துடன் சமாதானப் படுத்த முயற்சி செய்து வந்தான்.

நிறுவனத்தின் அதிகாரிகள் மற்ற பணியாளர்கள் எல்லா ஏற்பாடுகளையும் செய்து வந்தனர். கணேஷ் மற்றும் அவரது உதவியாளர் இந்திராணி இருவரும் தர்ஷ் அருகில் அவ்வப்போது வந்து ஆறுதல் கூறியபடி இருந்தனர்.

மின் மயானத்தில் தன் அன்பு தந்தைக்கு விடை கொடுத்து அனுப்பிய பின்னர் வீட்டிற்கு வந்த தர்ஷ் தன் அம்மா சரஸ்வதியிடம் கூறினான். ” அம்மா, நமக்கு இப்படி திடீர்னு ஒரு சோகம் ஏற்படும்னு யாரும் எதிர்பார்க்கலை. நம்ம கையில இதெல்லாம் இல்லைன்னு தெரிஞ்சும் துக்கமும், ஆத்திரமும் சேர்ந்து வந்துட்டேதாம்மா இருக்கு. என்னால இன்னிக்கு எவ்வளவு அழ முடியுமோ அழுதுடறேன். நாளைலேர்ந்து அப்பா ஆரம்பிச்சு இந்த அளவுக்கு ஏத்தி விட்ட கம்பெனியை இன்னும் பல மடங்கு உயரமா கொண்டு போனாத்தான் நான் அவரோட சரியான வாரிசு. அதுக்காக பாடுபடப்போறேன். அதனால நீயும் சமாதானம் ஆகி எனக்கு சப்போர்ட்டிவா இரும்மா. நீ எனக்கு கொடுக்கற ஊக்கத்திலதான் என் தைரியமே இருக்கும் இனிமேல். இந்த வீட்ல மூணு பேர் சேர்ந்து இருந்தோம். இப்போ அப்பா தெய்வமாகிட்டார். இனிமேல் ‘உனக்கு நான், எனக்கு நீ ‘ அப்படின்னு இருப்போம். அப்பா நிச்சயம் நம்மை ஆசீர்வாதம் செய்வார்.நீயும் இன்னி முழுக்க எத்தனை அழ முடியுமோ அழுதுக்கோ. உனக்கு எந்த குறையும் வராமல் பாத்துக்க வேண்டியது என் கடமை. அதை நிச்சயம் நிறைவேத்துவேன். அதே சமயம் நம்மோட நிறுவனத்தை இன்னும் பிரபலமாக்க வேண்டிய வைராக்கியம் எனக்கு இப்போ ஏற்பட்டிடுச்சு. கவலைப்படாதே அம்மா” என்று அழுது கொண்டே இருந்த அம்மாவைக் கட்டிப்பிடித்தபடி இருந்தான் தர்ஷ்.

அடுத்த நான்கு வருடங்களில் தர்ஷ், தான் சொன்னது போலவே செய்து காட்டினான்.அவர்களுடைய ‘தி ஸ்டோன் ஒர்க்கர்ஸ்’ மிகச் சிறந்த நிறுவனங்களில் ஒன்றாக மாற்றி விட்டான். ஆனால் அதற்காக அவன் இரவு, பகல் பாராது உழைத்தான். புதுமைகளை புகுத்தினான். அடிக்கடி பயணங்கள், பெரிய பணி ஆணைகள் பெறுவதற்காக பலதரப்பட்ட சந்திப்புகள், இதனிடையே கணேஷின் பணி ஓய்வு இப்படி பலவற்றையும் திறம்படச் சமாளித்து வெற்றியும் கண்டான். கணேஷின் இடத்தில் அவனிடம் உதவியாளராக இருந்து நிறுவனத்தின் செயல்பாடுகளை நன்கறிந்த இந்திராணியையே அமர வைத்தான்.அது அவனுக்கு மிகவும் உதவியாக இருந்தது. இந்திராணி அலுவலக நிர்வாகங்களை தர்ஷ் இல்லாத போதும் நன்றாக செயல்படுத்தி வந்தாள்.

இப்போதெல்லாம் சரஸ்வதிக்கு அதிக அளவில் களைப்பு, அலுப்புத் தன்மை இவைகள் கூடியதால், வழக்கமாக சமையல் வேலைகளை விடுத்து மற்ற வேலைகளுக்கு உதவி வந்த தேவகியை சமையல் செய்ய வேண்டினாள் சரஸ்வதி. “எனக்கு அவ்வளவு நல்லா சமைக்கத் தெரியாதே அம்மா” என்றாள் தேவகி.

“நான் இங்கே உட்கார்ந்துட்டே உனக்கு சொல்றேன். அதை மட்டும் செய். எல்லாம் சரியா வரும். கொஞ்ச நாளில நல்லா தெரிஞ்சுடும் உனக்கு.” என்று சரஸ்வதி அவளை ஊக்குவித்தாள்.

அதன் பின் வந்த நாட்களில் அந்த வீட்டில் தேவகிதான் அதிகமாக சமையல் செய்தாள். சரஸ்வதி சமைத்து சாப்பிட்டு வந்த தர்ஷுக்கு இது ரசிக்கும்படியாக இல்லை என்றாலும் தன் அம்மாவுக்கு ஓய்வு கிடைக்கிறதே என்ற திருப்தியில் அனுசரித்து போனான். தேவகி அடிக்கடி சரஸ்வதியை ” இன்னிக்கு நல்லா இருந்துதா அம்மா, இன்னும் என்ன குறைன்னு சொல்லுங்க, நான் அடுத்த முறை திருத்தமா செய்றேன்” என்று தினமும் கேட்டவாறே இருந்தாள். சரஸ்வதி “பரவாயில்லேடி தேவகி. ஓரளவு தேவலாம். இன்னும் கொஞ்ச நாளில் கரெக்டா தெரிஞ்சுப்பே.” என்று சொல்லி அவளை ஆதரித்து வந்தாள்.

தர்ஷ் வெளிநாடு சென்றிருந்த போது, திடீரென ஒரு நாள் காலை வேளையில் சரஸ்வதிக்கு இருமல் வந்தது. யாரும் எதிர்பாராத வண்ணம் அந்த இருமல் நிற்காமல் ஆறேழு நிமிடங்கள் தொடர்ந்து முடிவில் துப்பும்போது இரத்தம் வந்திருந்தது. இதைக் கண்ட தேவகி உடனே சரஸ்வதியை, ‘ வேண்டாம், வேண்டாம்’ என்று அடம் பிடித்த போதிலும் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்றாள். சரஸ்வதி எப்போதும் தன் உடல்நிலை சிகிச்சைக்காக செல்லும் மருத்துவர் ஜோதிராம் அவர்களின் ‘தீர்க்கம் மருத்துவமனை’ க்கு தேவகி சரஸ்வதியை அழைத்துச் சென்றாள். அங்கு ஜோதிராம் நன்றாகப் பரிசோதனை செய்தபின், கொஞ்சம் யோசனையில் ஆழ்ந்தார். ஏதோ ஒரு எதிர்மறையான செய்தியைத்தான் சொல்லப் போகிறார் அவர் எனப் புரிந்து கொண்ட சரஸ்வதி ” என்னவாக இருந்தாலும் சொல்லுங்க டாக்டர், நான் கலங்க மாட்டேன். நீங்க எதையும் மறைக்க வேண்டாம்” என்றாள்.

ஜோதிராம் லேசாகச் சிரித்தபடி “சொல்றேன்.அதெல்லாம் மறைக்க மாட்டேன். ஆனால் நான் ஆச்சரியப் பட்டேன். உங்களுக்கு எப்படி இதுபோல் நுரையீரல் அழற்சி, வீக்னெஸ் ஏற்பட்டதுன்னு நினைச்சு யோசனையில முழுகிட்டேன். இது ஜெனடிக்கா கூட இருக்கலாம். எதுக்கும் ஒரு எக்ஸ்ரே, இன்னொரு ஸ்கேன் எடுத்துப் பாத்துடலாம். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க” என்று சொல்லி அவருடைய உதவியாளர்களுக்கு அது சம்பந்தமான கட்டளை இட்டார்.

அடுத்த ஒரு மணிநேரம் கழித்து தெரியவந்தது சரஸ்வதியின் உடல்நிலை அவ்வளவு நன்றாக இல்லை என்பதும் நுரையீரல் புற்றுநோயால் நாளுக்கு நாள் பலவீனம் அடைந்து வருகிறாள் என்பதும். எவ்வளவு தூரம் மருந்து, சிகிச்சைகளால் குணப்படுத்த முடியும் என்பதையும் ஜோதிராம் பாதி நம்பிக்கையுடன்தான் சொன்னார்.

“டாக்டர், நான் புரிஞ்சுகிட்டேன். ஆனால் என் பையன் கிட்ட இதை முழுக்க இப்போ ரிவீல் பண்ணிடாதீங்க. அவன் உடைஞ்சு போய்டுவான். நேரம் வரும்போது நானே சொல்லிடறேன். ப்ளீஸ், டாக்டர்” என்றாள்.

சரிம்மா, ஆனால் இதுக்கு அடுத்த ஸ்டேஜ் போகும்போது அவரே என்னைக் கேப்பாரு. அப்போ நாங்க மறைக்க முடியாது. அந்த நிலைக்கு நீங்க போகாமல் இருந்து இன்னும் நிறைய நாள் நல்லா வாழணும்னு அந்த கடவுளை உங்களுக்காக நான் வேண்டிக்கிறேன். டோன்ட் ஒர்ரி..குணமாகிடுவீங்க!” என்று புன்னகையுடன் கூறி சரஸ்வதிக்கு தைரியம் கொடுத்தார் ஜோதிராம்.

“அம்மாவுக்கு எந்த உணவு செஞ்சு கொடுக்கணும், எது எல்லாம் கூடாதுன்னு சொல்லுங்க டாக்டர், நான் அதன்படி செய்றேன்” என்றாள் தேவகி.

“நீதான் சமையல் செய்றியா இப்போ! ஓகே, அதிக காரம், எண்ணெய் உணவுகள், குளிர்ச்சியான உணவுகள் இதெல்லாம் வேண்டாம். மற்றபடி அவங்களுக்கு எல்லாம் சாப்பிடலாம். காய், கீரை இதெல்லாம் நிறைய செஞ்சு கொடு ” என்று கூறினார் ஜோதிராம்.

“சரிங்க டாக்டர் ” என்று தலையாட்டினாள் தேவகி. ஜோதிராம் எழுதிக் கொடுத்த மருந்துகளை வாங்கிக் கொண்டு வீடு திரும்பினர் இருவரும்.

நான்கு மாதங்கள் இப்படியே ஓடிவிட்டன. சரஸ்வதியின் உடல்நிலை ஒரு சீரான நிலையில் இல்லாமல் அவ்வப்போது தொல்லைகள் கொடுத்து வந்தது. ஒரு நாள் தர்ஷ் வீட்டில் இருக்கும் நேரத்தில் சரஸ்வதிக்கு இருமல், மூச்சிரைப்பு, எச்சிலில் ரத்தத்துளிகள் அதிகமாகவே, அவனே மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று, அவளை தொடர் சிகிச்சைக்காக சேர்த்து விட்டான். அன்று தேவகி அவனிடம் முன்பு நடந்தவைகளை கூறி, ” அம்மா என்னை உங்களிடம் சொல்லக்கூடாது என்று தடுத்து வைத்திருந்ததால் சொல்லவில்லை. என்னை மன்னிச்சிடு தர்ஷ். நீ என்ன தண்டனை வேணும்னாலும் எனக்கு கொடு. நான் ஏத்துக்கறேன்” என்று கூறி அழுதாள்.

தர்ஷ் தன் அம்மாவிடம் இதைச் சொல்ல, சரஸ்வதி ” அவள் மேல் குத்தமில்லைப்பா. நான்தான் எனக்கு சரியாகிடும், உங்கிட்ட இதைப் பத்தி சொல்லி குழப்ப வேண்டாம்னு கண்டிப்பா சொன்னதாலே அவ அப்படி இருந்துட்டா. அவள்தான் இன்னி வரையில் என்னை நல்ல விதமா கவனிச்சிட்டு இருந்தா. இந்த ஆறு மாசமா நீ கம்பெனி விஸ்தரிப்பு வேலைகள்ல ரொம்ப பிஸியாவும், நிறைய ட்ராவல் பண்ணிட்டும் இருந்ததால நானும் அவளும் உனக்கு தொந்தரவு தர வேண்டாம்னு முடிவு செஞ்சோம். அதையும் தவிர எனக்கு ஒரு நம்பிக்கை இருந்தது நான் மறுபடியும் நார்மல் ஆகிடுவேன், அதுக்கப்புறம் சொல்லலாம்னு இருந்தேன்.” என்றாள்.

“அம்மா, இது சாதாரண விஷயம் இல்லை. உன் உயிர் பிரச்னை இல்லையா அம்மா. என் வேலை என்னிக்கும் இருக்கும்.ஆனால் உன் உடல்நலத்தை விட அது முக்கியம் இல்லைம்மா. அதனால இனிமேல் இப்படி இருக்காதேம்மா. தேவகி அக்கா நல்லாதான் பாத்துகிட்டாங்க. இனிமேலும் உனக்கு உதவியாத்தான் இருக்கப் போறாங்க. அதுல எந்த சந்தேகமும் இல்லை எனக்கு. ஆனால் எதுவானாலும் எனக்கு உடனே தகவல் சொல்லிடுங்க ” என்று தர்ஷ் மெல்லிய தழுதழுத்த குரலில் கூறினான்.

இந்த நேரத்தில் தேவகி அவனிடம்” தர்ஷ், இன்னொரு விஷயமும் இருக்கு, எப்படி சொல்றதுன்னு நினைச்சிட்டு இருந்தேன். ஆனால் சொல்லாமலும் இருக்க முடியாது. அம்மா கிட்ட சொல்லிட்டேன். என் கணவர் அவங்க குடும்ப தகராறினால இவருக்கு வரவேண்டிய சொத்துக்காக கேஸ் போட்டிருந்தது இவ்வளவு நாளைக்கு அப்புறம் நேத்திக்கு தீர்ப்பு எங்களுக்கு சாதகமா வந்திருக்கு. அதனால் நாங்க அவரோட சொந்த ஊர் மலையந்தூருக்கே போகலாம்னு முடிவு செஞ்சோம். இங்கே அவரு நடத்திட்டு வர்ற ஆட்டோமொபைல் மெக்கானிக் ஒர்க்ஸ் அங்கேயும் ஒண்ணு ஓப்பன் பண்ணிடலாம்னு அவரு சொல்லிட்டாரு. இந்த ஒர்க் ஷாப்பை அவரோட சித்தப்பா பையன், மெக்கானிக் படிச்சவன் பாத்துக்கறேன்னு உறுதி சொல்லிருக்கான். ஆனால் அம்மாவை, உன்னை எல்லாம் இப்படி விட்டுட்டு போகமாட்டேன். உங்களை நல்லவிதமா, வீட்டோடு இருந்து பாத்துக்கற மாதிரி, நான் இருக்கறது போலன்னு வச்சுக்கோ, யாரையாவது ஏற்பாடு செய்றது என் கடமை. என் கணவர் கிட்டயும் இதை சொல்லிருக்கேன். நானும் இன்னிக்கு காலைலேர்ந்து தெரிஞ்சவங்களுக்கு ஃபோன் பண்ணிருக்கேன். இன்னும் ரெண்டு வாரத்தில் ஏதாவது ஏற்பாடு பண்ணிடலாம். நீ கவலைப்படாதே. புதுசா வரவங்களோட நான் ஒரு மாசம் இருந்து எல்லாத்தையும் சொல்லி அவங்க எப்படிப்பட்டவங்களா இருக்காங்கங்கறதை முடிவு செய்யாம இங்கேருந்து நான் நகர மாட்டேன். ” என்றாள்.

“ஆமாம்பா, தர்ஷ். அவ குடும்பமும் இத்தனை நாளுக்கப்புறம் கடவுளருலால திருப்பி வர்ற சொத்துக்களை விட்டு இருக்க முடியாது இல்லையா? நானும் சரின்னு சொல்லிட்டேன். யாராவது நிச்சயம் நல்லவரா நமக்கு கிடைப்பாங்க. இந்த அம்மா மாதிரி உன்னை நல்லா பாத்துக்க ஒரு அம்மா கிடைக்க மாட்டாங்களா,என்ன?” என்று சரஸ்வதி சிரித்துக் கொண்டே சொன்னாள்.

“தேவகி அக்கா, நீங்க சொல்றது எனக்கு கொஞ்சம் ஷாக்தான். இருந்தாலும் உங்கள் குடும்ப நிலைமையை நான் உணருவேன். உங்கள் ஹஸ்பெண்ட் எடுத்த முடிவு கரெக்ட் தான். அம்மா சொல்ற மாதிரி நம் உதவிக்கு உங்களைப் போலவும், எங்களை புரிஞ்சுகிட்டு அனுசரித்து நடக்கற ஒருத்தரை நீங்களே பாருங்க. நானும் என் ஸோர்ஸ் மூலம் கேட்டுப் பார்க்கிறேன். அப்புறம் உங்க பொண்ணு ஏதோ காலேஜ்ல படிக்கறதா சொன்னீங்க. அவ மேற்படிப்பு படிக்கறதா இருந்தாலும் இல்லே வேலை வேணும்னாலும் எங்கிட்ட சொல்லுங்க. எல்லா உதவியையும் செய்றேன் ” என்ற தர்ஷ் தன் அம்மாவிடம் திரும்பி ” தைரியமா இரும்மா. நீ சொன்னது போலவே நமக்கு உதவிக்கு நல்ல பெண்மணியா யாராவது நிச்சயம் கிடைப்பாங்க. நான் டாக்டரைப் பாத்துட்டு வர்றேன்” என்றான்.

“நான் தைரியமா இருக்கேண்டா கண்ணா. நீ முதல்ல ஒரு கல்யாணத்தை பண்ணிக்கோயேன். அதை ஏன் தள்ளிப் போட்டுட்டே வர்றே?” என்றாள் சரஸ்வதி. ” நெக்ஸ்ட் இயர் பாக்கலாம். கம்பெனி விரிவாக்கம் முடிஞ்ச உடனே. ப்ராமிஸ் ” என்று அம்மாவின் கையைப் பிடித்து முத்தமிட்டு சொன்னான் தர்ஷ்.

“வர்ற ஞாயிற்றுக்கிழமை என் ஹஸ்பெண்ட், என் பொண்ணு கலா இவங்களை கூட்டிட்டு நம்ம வீட்டுக்கு வர்றதா இருக்கேன் தர்ஷ். அப்போ நீயே கலா கிட்ட பேசிக் கோ” என்றாள் தேவகி. ” ஓகே ஃபைன். லஞ்ச் சாப்பிட வரும்படியா கூட்டி வாங்க ” என்று சொல்லி தர்ஷ் மருத்துவரை சந்திக்க போனான்.

மருத்துவர் ஜோதிராம் சொன்ன தகவல் தர்ஷுக்கு பெரிய அதிர்ச்சியாகவே இருந்தது. சரஸ்வதியின் உடல்நிலையில் முன்னேற்றம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்பது தெரிய வந்தது. ஆனால் அதைப் பற்றி மிகவும் விளக்கமாக அம்மாவிடம் கூறி அவளைக் குழப்ப வேண்டாம் என்று இருந்து விட்டான். அதனால் உடனடியாக தேவகியின் இடத்திற்கு சீக்கிரமே யாரையாவது அமர்த்தி விட வேண்டும் என்று முடிவு செய்தான்.

மறுநாள் சரஸ்வதியை மருத்துவ பரிசோதனைகள் முடிந்து வீட்டிற்கு அழைத்து வந்து விட்டனர். அம்மாவிடம் சொல்லி விட்டு அலுவலகத்தை அடைந்து பணிகளில் முழுகிய தர்ஷ் மதியம் இடைவெளியில் மிகவும் சோகமாகவும், அமைதியாகவும் உட்கார்ந்திருந்ததைப் பார்த்து “என்ன சார் ஆச்சு? ஏதாவது பிரச்னையா?” என்று இந்திராணி கேட்டாள்.

அவளை உட்காரச் சொல்லி, அவளிடம் எல்லாவற்றையும் விவரித்தான் தர்ஷ். மேலும் அவன் ” அம்மா உடல்நிலை ஒரு சீரான இல்லை. அவங்களுக்கு எப்போ என்ன நடக்கும்னு சொல்றதுக்கு இல்லை. இந்த நேரத்தில் தேவகியும் ஊரைவிட்டு போறதால எனக்கு அர்ஜெண்டா ஒரு நல்ல பெண்மணியை வீட்டோட இருந்து உதவிகள் செய்ய ஏற்பாடு செய்யணும். அதான் யோசிச்சிட்டு இருந்தேன்.” என்றான்.

“சார், எங்க ஊர் மேட்டுக்குளத்தில் ஒரு அம்மா அம்பது, அம்பத்தஞ்சு வயசுல இருக்காங்க. ஃபர்ஸ்ட் கிளாஸா சமைப்பாங்க. ஆக்சுவலா வேற ஏதோ ஊர்லேர்ந்து முப்பது வருஷம் முன்னாடி வந்து செட்டில் ஆனவங்கன்னு அவங்க சொல்லித்தான் தெரியும். ரொம்ப நல்ல மாதிரி. ஊர்ல சின்ன அளவில் இட்லி, சாப்பாடு இதெல்லாம் செஞ்சு சம்பாதிச்சிட்டு இருந்தாங்க. பக்கத்து ஊரில் இருக்கற ரெண்டு ரைஸ் மில் லேபர் கேண்டீனுக்கு சாப்பாடு, டிஃபன் எல்லாம் செஞ்சு தரச்சொல்லி ஒரு பனிரெண்டு வருஷம் முன்னாடி காண்ட்ராக்ட் போட்டு இந்தம்மா நல்லபடியா பிழைப்பு ஓட்டி வந்தாங்க. ஆனால் போன மூணு வருஷமா அந்த மில்கள் வியாபாரம் சரியா இல்லாமல் காண்ட்ராக்ட் எல்லாம் கேன்சல் பண்ணிட்டாங்க. அப்பப்போ ஏதாவது தேவைக்கு ஏற்ப கொஞ்சம் ஆர்டர் தர்றாங்க. அதுவும் தொடர்ந்து இல்லை. போன தடவை நான் ஊருக்கு போனப்ப இதெல்லாம் அவங்க சொன்னாங்க. அவங்களுக்குன்னு யாரும் மனுஷங்க இல்லை. எங்கிட்ட நல்லா பேசி பழகுவாங்க. அவங்க கிட்ட நீங்க நேரடியா பேசினா உங்களுக்கு உதவியா இருக்க நிச்சயம் வருவாங்கன்னு நான் நம்பறேன்.” என்றாள் இந்திராணி. தர்ஷ் உடனே சந்தோஷத்துடன் ” இந்திராணி, நீங்க என்னோட இப்பவே வரீங்களா, அந்த அம்மாவை போய் சந்திச்சு விவரத்தை சொல்லி கூட்டிட்டு வந்துடலாம்.” என்றான்.

இந்திராணி சரியென்று சொல்லி, இருவரும் மேட்டுக்குளம் ஊருக்கு கிளம்பினார்கள். காரில் போகும்போது அந்தம்மாவின் பெயர் மகாதேவி என்று தெரிந்து கொண்டான் தர்ஷ்.

மேட்டுக்குளம் சேரும்போது மணி நாலரை ஆகிவிட்டது. மகாதேவி என்ற அந்த பெண்மணியை சந்தித்து இந்திராணி விவரங்களைக் கூறி அதன் பின்னர் தர்ஷ் அவன் பங்குக்கு விஷயங்களை தெளிவாக விவரித்து எடுத்துரைத்தான். தர்ஷ்” என் அம்மாவுக்கு மட்டும் நீங்க உதவியாக இல்லை அம்மா. எனக்கும் அம்மா மாதிரியேதான் இருக்க போறீங்க. எனக்கென்னவோ நீங்க வந்தா என் அம்மா உடல்நிலை நல்லா ஆகிடும்னு நினைக்கிறேன். கடவுளா பாத்து இந்திராணி மூலமா என்னை உங்களை சந்திக்க வச்சிருக்கார். மறுக்காமல் வரணும் நீங்க ” என்று பொறுமையாக கூறியது மகாதேவி யின் மனதை பிசைந்தது.

கூடவே இந்திராணியும் ” மகா அம்மா, நான் உங்களுக்கு அடிக்கடி சொல்வேனே, எங்க பாஸ் நல்ல மனுஷர் அப்டின்னு, இவருதான் அது. நிச்சயமா ஒரு நல்ல மாற்றமா அமையும் உங்களுக்கு. அதே சமயம் இவங்களுக்கும் ஹெல்ப்பா இருக்கும். இவரோட அம்மா, சரஸ்வதி அம்மா ரொம்ப ரொம்ப நல்லவங்க.” என்று சொல்லியபடி இருந்தாள்.

மகாதேவிக்கு தர்ஷ் பேசிய விதம், அவன் நடந்து கொண்ட முறை, தன் தாய் மேல் அவன் காட்டுகின்ற அன்பு அனைத்தும் மனங்கவர்ந்த குணங்களாகத் தெரிந்தன. “ரெண்டு பேரும் கொஞ்சம் இருங்க. எலுமிச்சை சேவை,சட்னி செஞ்சேன். சாப்பிடுங்க. டீ போட்டு தரேன். அந்த நேரத்தில் நான் கொஞ்சம் யோசிக்கிறேன். முடிவைச் சொல்றேன்.” என்று மகாதேவி கூறிச் சென்று இரண்டு தடட்டுக்களில் வாழை இலை போட்டு அவள் கூறியவைகளைக் கொண்டு வந்தாள். தர்ஷ் அதை ருசித்துப் பார்த்து ” அருமையான லெமன் சேவை. ரொம்ப நாளுக்கப்புறம் இப்படி சாப்டறேன். இனி வர்ற நாட்கள்லயும் உங்க கையால சமைச்ச உணவை சாப்பிடணுங்கறதுதான் என் ஆசை. எங்க அம்மாவுக்கு நிச்சயம் இந்த பக்குவம் பிடிக்கும்” என்று கூறி ரசித்து சாப்பிட்டு விட்டு, மகாதேவி கொண்டு வந்த ஏலக்காய் தேநீரையும் பாராட்டியபடி அருந்தினான்.

“ரொம்ப சந்தோஷம் தர்ஷ். இந்திராணியும், நீங்களும் சொன்னதை யோசிச்சேன். எனக்கு இந்த ஊர்ல ஒரு பந்தமும் இல்லை. இந்த இந்திராணி, குளக்கரையில் இருக்கற பிள்ளையார் கோவில் குருக்கள் குடும்பம், தெரு கடைசில இருக்கற அண்ணாச்சி கடை குடும்பம் இவங்கதான் எனக்கு நண்பர்கள். உங்க பேச்சு என் மனசுக்கு ரொம்ப பிடிச்சிருந்ததால உங்க வீட்டோடு இருந்து உங்களுக்கும், அம்மாவுக்கும் உதவியா இருக்க வர்றேன். ரெண்டு நாள் மட்டும் டைம் கொடுங்க. மில்காரங்க கிட்ட நேர்ல போய் சொல்லிவிட்டு வந்துடறேன்.” என்று மகாதேவி உறுதி அளித்தாள்.

இந்திராணிக்கு தாங்க முடியாத சந்தோஷம் ஏற்பட அப்படியே மகாதேவி அம்மாவைக் கட்டிப்பிடித்தபடி தர்ஷை பார்த்தாள்.

தர்ஷ் சொன்னான். “நீங்க என்னோட ரெக்வஸ்ட்க்கு சம்மதிச்சு எங்க வீட்டுக்கு வர்றதில சொல்ல முடியாத அளவுக்கு மகிழ்ச்சி. அதே நேரத்தில் நீங்க என்னை ‘ நீங்க, வாங்க ‘ இப்படி எல்லாம் கூப்பிடாம ‘ நீ, வா, போ’ ன்னு ஒருமைலேயே உரிமையா பேசலாம்.அப்போ என் சந்தோஷம் ரெட்டிப்பாகும். ரெண்டு நாள் கழிச்சு எனக்கோ, இந்திராணிக்கோ ஃபோன் பண்ணினீங்கன்னா உங்களுக்கு கார் அனுப்பிடறேன். வேற ஏதாவது இங்கேருந்து உங்களோடு எடுத்து வரணும்னு நினைச்சிங்கன்னா சொல்லுங்க. அதுக்கும் நான் ஏற்பாடு செய்றேன்.” என்று மகிழ்ச்சி பொங்க பேசினான் தர்ஷ்.

“சரிப்பா, உன் விருப்பப்படி அப்படியே கூப்பிடுறேன். எனக்கு ஒண்ணும் பெருசா இங்கேருந்து எடுத்து வர்ற மாதிரி இல்லை. ரெண்டு பெட்டிதான். ஆனால் இந்த பெரிய கிரைண்டர், மிக்ஸி ஃபேன் இதெல்லாத்தையும் யாராவது வாங்கிட்டா நல்லா இருக்கும்” என்றாள் மகாதேவி.

“அந்த கவலையை விடுங்க அம்மா. நான் பாத்துக்கிறேன். இன்னும் ஒரு வாரத்தில் வித்து உங்ககிட்ட பணத்தை தர்றேன்.” என்று சிரித்தபடி சொன்னாள் இந்திராணி. மாவிலையூருக்குத் திரும்பும் வழியில் தர்ஷ் இந்திராணிக்கு நன்றி சொன்னான் மகாதேவி அம்மாவை சந்திக்க வைத்ததற்கு. ” அவங்க உங்க வீட்டுக்கு வந்து, கொஞ்ச நாளில, நீங்க எல்லாரும் அவங்க வந்ததுல சந்தோஷமாவும், திருப்தி யாவும் இருக்கீங்கன்னு எனக்கு தெரியும்போது என் மனசு இன்னும் நிறைவா இருக்கும் சார்.” என்றாள் இந்திராணி.

இந்திராணியை அவள் இருப்பிடத்தில் இறக்கி விட்டு வீட்டுக்கு திரும்பிய தர்ஷ் மிகவும் உற்சாகமாகவும், சந்தோஷமாகவும் இருப்பதைப் பார்த்து சரஸ்வதி,” என்னடா, ஏதோ நல்ல சேதி கிடைச்சுடுச்சா, இப்படி கலகலப்பா இருக்கியே” என்று கேட்டாள்.

“அம்மா இன்னிக்கு நம்ம ஆஃபீஸ் மானேஜர் இந்திராணி மூலமா அவங்க ஊர்ல இருக்கற ஒரு மகாதேவி அம்மாவை போய் பார்த்து பேசிட்டோம். இன்னும் ரெண்டு நாளில நம்ம வீட்டுக்கு வராங்க. தேவகி அக்கா, நீங்க அவங்களுக்கு எல்லாம் சொல்லிடுங்க. ரெண்டு வாரம் அவங்க வேலை செய்யும் முறையைப் பாத்தாலே, நீங்க கணிச்சிடுவீங்க. ஆனால் நான் பேசிய வரையில் நல்ல பெண்மணியா இருக்காங்க. சூப்பரா புக்கிங் செய்றாங்க ” என்றான் தர்ஷ்.

சரியாக மூன்றாவது நாள் மதியம் மகாதேவி, தர்ஷ் வீட்டுக்கு வந்தாள். வந்தவுடன் சரஸ்வதியின் கால் தொட்டு வணங்கி ஆசீர்வாதம் வேண்டினாள். சரஸ்வதி மனதில் அவளைப்பற்றிய அபிப்ராயம் உயர்ந்தது. தேவகியும் மகாதேவியின் பேசும் முறை, பணிவு இவைகளை பார்த்து திருப்தி அடைந்தாள்.

அடுத்த ஒரு மாதம் விரைவாக சென்றது. சரஸ்வதிக்கு சரியான நேரத்திற்கு மருந்து, மாத்திரைகள் தருவது, உணவு நேரத்தில் மிதமான, அருமையான உணவு தருவது, அவளுக்கு உடை மாற்றுவதற்கு உதவி செய்வது, ஒரு சிறிய நடைப்பயிற்சிக்கு தோட்டத்துப்பக்கம் அழைத்துச் செல்வது எல்லாவற்றையும் மகாதேவி இந்த ஒரு மாதத்தில் மிகவும் சாமர்த்தியமாகவும், அன்புடனும் செய்து வந்ததைப் பார்த்த தேவகியும், தர்ஷும் முழு திருப்தி அடைந்தனர். இதற்கிடையில் தர்ஷுக்கு என்னவெல்லாம் உணவு வகைகள் பிடிக்கும் என்பதை சரஸ்வதி மூலம் அறிந்து, அவைகளையும் செய்து கொடுத்து அசத்தினார் மகாதேவி. தர்ஷ் நிம்மதிப் பெருமூச்சு விட்டபடி, இந்திராணியிடம் இந்த சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டான். ஒரு முறை தேவகி ஏதோ அவள் குடும்பத்தின் அவசர வேலையாக அருகில் உள்ள ஒரு ஊருக்கு செல்லும்படி நேரிட்ட போது, சரஸ்வதி உடல்நிலை சற்று மோசமாகி விட்டதால், மகாதேவி உடனடியாக அவளை மருத்துவரிடம் காலதாமதமின்றி அழைத்துச் சென்று சிகிச்சையளித்து கூட்டி வந்தாள். இதையறிந்த தர்ஷ் மகாதேவியை கட்டிப்பிடித்து தன் மகிழ்ச்சியை காட்டினான்.

சரஸ்வதி இப்போதெல்லாம் மகாதேவி மீது உயர்ந்த மதிப்பும், பாசமும், நம்பிக்கையும் கொண்டதால், மகாதேவி பேச்சைத் தட்டுவதே இல்லை எனலாம்.இதனிடையே, தேவகியும் அவள் குடும்பத்தினரும் தர்ஷ், சரஸ்வதி இவர்களிடம் சொல்லி விட்டு, முன்னமே முடிவு செய்தபடி தங்கள் ஊருக்கு இடம் பெயர்ந்தனர். போகும் முன் தேவகி மகாதேவியிடம் ” மகா அம்மா, நீங்க உண்மைலயே மிக அருமையான பெண்மணி. கடவுள் உங்களை தனிமையில் விட்டாலும் உலகத்தில் நாம் நினைச்சா நல்லபடியா வாழ்ந்து காட்டலாங்கறதுக்கு உதாரணம். நீங்க தனியா இருந்ததே இந்த மாதிரி சரஸ்வதி அம்மா, தர்ஷ் தம்பி இருக்கும் இந்த நல்லவங்களோட இருக்கணுங்கற கடவுள் விதியாலதான். நான் இவங்களை நல்லா பாத்துகிட்டேன் அப்டின்னு பெருமை பட்டேன். ஆனால் என்னை விட அற்புதமான ஒருத்தர் இவங்களுக்கு கிடைச்சத பாத்து ரொம்ப சந்தோஷப்படறேன்” என்று அன்போடு கூறினாள்.

“இதை நான் மனப்பூர்வமா ஏத்துகிட்டேன் தேவகி. தர்ஷ் பையனை பாக்கும்போது என்னை அறியாமல் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. இங்கே வந்து சரஸ்வதி அம்மாவைக் கண்டதும் என்னோட மனசு ஆழமா ஒன்றிப்போயிடுச்சு. நீ சொன்னது போல இறைவன் செயல்தான் இது. நீ நல்லபடியா உடல்நலத்தை கவனிச்சுட்டு இரு. உனக்கு கடலை உருண்டை, லட்டு, அதிரசம் இதெல்லாம் செஞ்சு அங்கே இருக்கற டப்பாவில ரெடியா வச்சிருக்கேன். எடுத்துட்டு போ” என்று மகாதேவி தேவகியின் கன்னத்தில் முத்தமிட்டு புன்னகையுடன் கூறி முடிக்க, ” பாத்தீங்களா அம்மா, இதை எல்லாம் செய்து வச்சிருக்காங்க?” என்று சரஸ்வதியிடம் கூறினாள் தேவகி. சரஸ்வதி உடனே ” இனிமேல் இந்த வீட்டு சமையல், மத்தபடி எல்லாத்தையும் அவதான் கவனிக்க போறா. அதனால நான் எதுவும் சொல்ல மாட்டேன்” என்று சிரித்தபடி கூறிவிட்டு, ” ஜாக்கிரதையா போய்ட்டு வாம்மா, நேரம் கிடைக்கறப்ப ஃபோன் பண்ணு” என்று சொல்லி அவளையும் அவள் மகள் கலாவையும் ஆசீர்வாதம் செய்து அனுப்பினாள்.

அடுத்த நான்கு மாதங்களில் சரஸ்வதிக்கும், தர்ஷுக்கும் வீட்டு பராமரிப்பு, உணவு சமைப்பது இம்மாதிரி செயல்களில் எந்த பிரச்னையும் இல்லாதபடி மகாதேவி எல்லாவற்றையும் திட்டமிட்டு மிகச்சரியாக செய்து வந்தாள்.

ஆனால் சரஸ்வதியின் உடல்நிலை மட்டும் நாளுக்கு நாள் மோசமடைந்தது. தர்ஷுக்கு இந்த கவலை ஒவ்வொரு நிமிடமும் இருந்த போதிலும் நன்றாக வளர்ந்து கொண்டிருக்கும் நிறுவன வேலைகளின் சுமையால் அம்மாவிடமிருந்து அதிக நாட்கள் வெளியே இருக்கும்படியான சூழ்நிலைகள் ஏற்பட்டன. இன்னொரு பக்கம் மகாதேவி, அம்மாவை கவனித்துக் கொள்ளும் விதம் அவன் மனச்சுமையை சரி செய்தது.

அந்த மாதம் தர்ஷ் ஐந்து நாட்களுக்கு வெளி மாநிலங்கள் செல்ல நேர்ந்தது. அவன் கிளம்பிச் சென்ற இரண்டாம் நாள் பலவீனமடைந்திருந்த சரஸ்வதி ” மகா, இப்படி என் பக்கத்தில் உட்காரு. உங்கிட்ட ஒண்ணு சொல்லணும்னு என் உள் மனசு அடிச்சிட்டே இருக்கு. இதை சொல்லாம போய்ச்சேந்துட்டேன்னா என் ஆத்மா சாந்தி பெறாது. ஆனால் இதை நீ யார் கிட்டயும் முக்கியமா தர்ஷ் கிட்ட சொல்லாம இருக்கணும். சத்தியம் பண்ணு” என்றாள்.

“என்னம்மா ஏதேதோ சொல்றீங்க, சரி என்னை நீங்க நம்பலாம். சத்தியமா நீங்க சொல்ற விஷயம் என் மனசுக்குள்ளயே இருக்கும். யார் கிட்டயும் சொல்ல மாட்டேன்” என்று சரஸ்வதியின் கையைப் பிடித்து சொன்னாள் மகாதேவி.

சரஸ்வதி மெல்லிய குரலில் பேச ஆரம்பித்தாள். “கல்யாணம் ஆகி ஆறு வருஷங்களுக்கு மேல் எங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. அப்பவே நான் பாதி நடைப்பிணம் போல ஆயிட்டேன். என் வீட்டுக்காரருக்கும் அந்த கவலை வாட்டியதை காமிச்சுக்காம எனக்கு தைரியம் சொல்லிட்டு இருந்தாரு. ஆனால் நான் தூங்கறேன்னு நினைச்சுட்டு ராத்திரி எல்லாம் வேதனையோடு முழிச்சு உட்கார்ந்து சாமி படத்தை பார்த்து வேண்டிகிட்டு அழுதிட்டிருப்பாரு. நிறைய வைத்தியமெல்லாம் செஞ்சு பலனில்லே. ஜோசியக்காரனுகளையும் நம்பினோம்.அப்படி ஒரு நாள் அருவம்புல்லூர் அம்மன் கோவில் ரொம்ப சக்தி வாய்ந்த ஸ்தலம். பரிகாரம் செய்ய நல்ல இடம்னு ஒருத்தர் சொன்னதால அங்கே போனோம். சாயந்திரம் கோவில் திறக்கறதுக்கு முன்னாடியே போய்ட்டோம். சின்ன ஊர்னால எங்கயாவது பக்கத்தில் கடை இருந்தா போய் உக்காந்துக்கலாம் கார்லயே எவ்வளவு நேரம் இருக்க முடியும்னு நினைச்சு பாத்தப்போ, அங்கே ஒரு பூக்கடைக்காரரு, எங்களை கூப்பிட்டு நாற்காலி போட்டு உட்காரச் சொன்னாரு. பேரு சின்னப்பன் அப்டின்னு நினைக்கிறேன். சரியா ஞாபகம் இல்லை. முப்பது வருஷம் ஆயிடுச்சு பாரு. நல்ல மரத்து நிழலா இருந்தது அந்த இடம். பக்கத்து டீ கடைல எங்களுக்கு ஸ்பெஷலா டீ போடச் சொல்லி தரச் சொன்னாரு. நாங்க எதுக்காக வந்திருக்கோம்னு சொன்னோம். அந்த அம்மன் சக்தி வாய்ந்ததுன்னும் நிறைய பேருக்கு பலன் அளிச்சிருக்குன்னும் சொன்னாரு. அவரு அங்கே பதினஞ்சு வருஷமா பூக்கடை, பக்கத்தில் இருக்கற டீக்கடை நடத்திட்டு வரதா சொன்னாரு. நாங்க இதான் கடைசி பரிகார பூஜை பண்ணப்போறோம். இல்லேன்னா ஏதாவது குழந்தைய தத்து எடுத்துக்கறதா முடிவு பண்ணோம்னு சொன்னோம். அவரு உடனே நீங்க பூஜைய முடிச்சுட்டு வாங்க. நான் ஒண்ணு சொல்றேன். விருப்பம் இருந்தா செய்ங்க. இல்லேன்னா உங்க இஷ்டம்னு சொன்னாரு. அதன்படியே பூஜை எல்லாம் முடிஞ்சு அவரை மறுபடியும் பாத்தோம். அவரு என் தங்கை, எனக்கு சித்தப்பா பொண்ணு ஒருத்தி அவங்க பெத்தவங்க பேச்சுக்கு மாறா ஒரு பையனை கல்யாணம் பண்ணிட்டா. வீட்டுக்கு வரவே வராதேன்னு அவளை அடிச்சு துரத்திட்டாங்க. அந்த பையன் நல்லவன்தான். அவளை கூட்டிட்டு இந்த ஊருக்கு வந்து டூ வீலர் ரிப்பேர் வேலை, எலக்ட்ரிக் வேலை இதெல்லாம் செஞ்சு பிழைப்பை ஓட்டிட்டு இருந்தான். அவங்க வீட்டிலயும் எதிர்ப்பு. நான் ஒருத்தன் எல்லா உறவுக்காரங்க, பெத்தவங்க எல்லாரையும் பாத்து சேத்து வைக்க பாத்தேன். என்னையே அடிச்சு விரட்டிட்டானுக. பொண்ணு பத்தாவது வரைக்கும் படிச்சிருக்கா. என்னோட மட்டும்தான் இப்போ பேசுற மாதிரி சூழ்நிலை. அவளுக்கு போன மாசம் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த ஒரு வாரத்தில அந்த பையன் ஒரு ஆக்சிடென்ட்ல செத்துட்டான். அந்த விஷயம் அவங்க உறவுங்க காதுக்கு போனாலும் ஒரு நாதியும் பாக்க வரலை. நான்தான் அவளை சமாதானப்படுத்தி இன்னிக்கு வரைக்கும் உதவி செய்றேன். அவனுக்கு ஏதோ இருந்த கடனை தீத்துட்டு எனக்கு கிடைக்கிற வருமானத்தில அவளுக்கும் சோறு போட்டு வர்றேன். அவளும் கிடைச்ச வேலைக்கு போறா. ஆனால் யாரும் அவளை கூப்பிட மாட்டேங்கறாங்க. பொறந்தவுடனே அப்பனை முழுங்கிடுச்சுன்னு குழந்தைய திட்டறாங்க. நொந்து அழுதுகிட்டே சரியா சாப்பிடாம கூட இருக்கா. நல்லா சமைப்பா. நான் சொன்னேன் வேற ஊருக்கு போய் சின்னதா ஒரு மெஸ் வை, உனக்கு பணம் ஏற்பாடு செய்றேன்னு சொன்னேன். குழந்தைய ஏதாவது ஆசிரமத்தில விட்டுடு அப்டின்னேன். ரெண்டு மனசா கொஞ்ச நாளா அல்லாடி புலம்பிட்டிருக்கா. உங்களுக்கு ஆட்சேபணை இல்லேன்னா அந்த குழந்தைய தத்து எடுத்துப்பீங்களா? நான் அவகிட்ட சொல்றேன். அவளுக்கு ஏதாவது பண உதவி செஞ்சா அவளுக்கு ஒரு கடை வச்சு வழி காமிச்சு விட்டுடுவேன் நான். ” என்று கூறி நிறுத்தி குடிக்க தண்ணீர் கேட்டாள் சரஸ்வதி.

மகாதேவி கொண்டு வந்த தண்ணீர் அருந்திவிட்டு சரஸ்வதி தொடர்ந்தாள்.”அந்த விவரங்களை கேட்டபோது எங்களுக்கு அது நல்லதாகப் பட்டது. ஆனால் அந்த பொண்ணு மனதார சம்மதிக்காமல் நாங்க முடிவு செய்யமாட்டோம் அப்டின்னு சொன்னோம். அவ பேரு ராணின்னு நினைக்கிறேன். அப்படித்தான் அவன் அவளை கூப்பிட்டான். ராணி தன் குழந்தையை பிரிய மனசு இல்லேன்னாலும் எப்படியோ சின்னப்பன் அவளை சமாதானப்படுத்தி குழந்தையை வாங்கி வீட்டின் முன்புறம் வந்தான். எங்களுக்கு அந்த முப்பத்தைந்து நாள் குழந்தைய பார்த்தவுடன் பிடிச்சு போச்சு. நாங்க உடனே லட்சம் வரைக்கும் தர ரெடி ஆகிட்டோம். ராணியைப் பார்க்கணும்னு சின்னப்பன் கிட்ட சொல்ல, அவ அழுதுகிட்டே எனக்கு சங்கடமா இருக்கு. இது போல் செய்றேனேன்னு வெக்கமா இருக்குன்னு உள்ளே சத்தம் போட, நாங்க உள்ளே போய்ட்டோம். தலைவிரி கோவமா, கண்ணீரும், கம்பலையுமாக நின்னிட்டு இருந்தவ எங்களை பார்த்ததும் படார்னு கால்ல விழுந்து அவனை நல்லா வச்சு காப்பாத்துங்க. நானும் ஆசீர்வாதம் பண்றேன். ஆண்டவனை வேண்டிக்கறேன். நீங்க பண உதவி செய்றதா அண்ணன் சொன்னாரு. எனக்கு எந்த டிமாண்டும் இல்லை. அவருகிட்ட பேசிக்குங்க. உங்களால முடிஞ்சதை செய்ங்க. அப்படி சொல்லிவிட்டு விருட்னு சமையலறை பக்கம் போய்ட்டா. அந்த முகத்தை ஞாபகம் கூட வச்சுக்க முடியலை. இப்ப எப்படி இருக்காளோ, என்ன செய்றாளோ தெரியலை. சின்னப்பன் கிட்ட ஒரு லட்சம் கொடுத்துவிட்டு குழந்தைய இங்கே கொண்டு வந்து வளர்ந்தவன்தான் இந்த தர்ஷ். நான் தினமும் அந்த ராணிக்காக பிரார்த்தனை பண்ணுவேன். இந்த விஷயம் முழுக்க தேவகிக்கு கூட தெரியாது. மகா, நான் கொஞ்ச நாள்தான் இருப்பேன். அவனுக்கு நீ அம்மாவா இருந்து நல்லா கவனிச்சுக்கோ. அவன் ரொம்ப வெளிப்படையாக பேசுவான். நல்ல மனசு. ” என்று சொல்லும்போது மகாதேவி அழுதபடி இருந்தாள். “நீங்க சொன்னதை கேட்ட உடனே என்னையும் அறியாமல் அழுகையா வந்துடுச்சும்மா.என்னை மன்னிச்சுக்கோங்க” என்றாள். அவள் கையை சரஸ்வதி அழுத்தி பிடித்தாள். மகாதேவி மேலும் ” நீங்க இன்னும் ரொம்ப நாளைக்கு நல்லா இருப்பீங்க. நாம ரெண்டு பேரும் தர்ஷை நல்லா பாத்துப்போம்.கவலைப்படாதீங்க” என்றாள் அழுத குரலில்.

இது நடந்த பதினைந்து நாட்கள் சென்று சரஸ்வதி காலமானாள். தர்ஷ் பல பிரபலமான மருத்துவ மனைகள், மருத்துவர்களை நாடி சரஸ்வதியை குணப்படுத்த எவ்வளவோ முயற்சி செய்தும் பலனின்றி போய்விட்டது. நிலைகுலைந்த தர்ஷை மகாதேவி கொஞ்சம் கொஞ்சமாக தேற்றி யதார்த்த சூழ்நிலைக்கு கொண்டு வந்தாள்.

அன்று சரஸ்வதி கூறியவற்றை மனதில் அசைபோட்டாள். ஒரு நிகழ்வு மனத்திரையில் ஓடியது.

சின்னப்பன்: ராணி, ஊர் என்ன சொல்ல போவுதோன்னு கவலைப்படாதே. உன்னை துரத்தி அடிச்சு தனியா ஓட விட்டாங்க. உன்னோட கஷ்டத்தில வந்து யாரு ஆறுதல் சொன்னாங்க? இப்போ நல்ல மனுஷங்களா இருக்கிறவங்க வந்திருக்காங்க. லட்ச ரூபாய் தர ரெடியா இருக்காங்க. நீ இந்த ஊர்ல இருக்க வேண்டாம். மேட்டுக்குளத்தில எனக்கு தெரிஞ்ச அண்ணாச்சி மூலமா உனக்கு ஒரு வீடு ஏற்பாடு செஞ்சுடறேன். அங்க போய் ஒரு மெஸ் வச்சு பிழைச்சுக்கலாம். இதைவிட பெரிய ஊர். பக்கத்து ஊர்ல வேலை பார்க்கற நிறையபேருங்க மேட்டுக்குளத்தில தங்கியிருக்காங்க. உன் கை பக்குவத்தை பாத்து சாப்பிட நிறைய பேர் வருவாங்க. கவலைப்படாதே ராணி. எல்லாம் நல்லதுக்கு தான். உன் குழந்தையும் ஒரு உயர்ந்த நிலைல இருப்பான். அவனுக்கு இப்பவே ஒரு வாழ்க்கை வழி அமைச்சு கொடுத்த மாதிரி நினைச்சுக்க.

ராணி (அழுதுகொண்டே): சரியண்ணே. எனக்கு உன்னை விட்டா யாரு இருக்கா? நீ சரியாத்தான் முடிவு எடுப்பே. புள்ளைய தரேன். நீயே கொண்டு போய் கொடுத்துடு.

ராணி என்ற வீட்டில் அழைக்கும் பெயரில் இருக்கும் மகாதேவி கண்களைத் துடைத்துக் கொண்டாள். முப்பது வருடங்களுக்கு முன்பு பிரிந்த உறவு இன்று வேறு வழியில் கிடைத்தது பற்றி சந்தோஷப்படுவதா அல்லது தான் தர்ஷுக்கு பிறவி தந்த அம்மா என்பதை சொல்ல முடியாத சூழ்நிலை நினைத்து அழுவதா என்று குழம்பினாள். சரஸ்வதிக்கு கொடுத்த சத்தியம் நினைவுக்கு வந்தது. சரஸ்வதி அவர்களை விட்டு பிரிந்து விட்டாள். ஆனால் அந்த பிரிவில் தன் மனதுக்கு பிடித்த ஒரு உறவைக் கொடுத்து விட்டு மறைந்திருக்கிறாள். என்றாவது தனக்கு பிறந்தவனை பார்க்கும் படியாக ஏதாவது நடக்குமா என்று சில நேரங்களில் கடவுள் சந்நிதியில் நினைத்தது நடந்திருப்பதை எண்ணி சந்தோஷமும் உண்டாகியது.

இவைகள் பற்றி ஏதும் அறியாத தர்ஷ் அழுது அழுது களைப்பு ஏற்பட்டதால் அமைதியாகத் தூங்கிக் கொண்டிருந்தான்.

அருகில் சென்று அவன் தலையை இதமாக மகாதேவி, இல்லை ராணியாக வருடிக் கொடுத்தாள்.அவள் மனதில் ஒரு அலாதியான மகிழ்ச்சி உண்டானது.

ரா.நீலமேகம் பெயர்: நீலமேகம். வயது 71. பூர்வீகம்: திருவாரூர் மாவட்டம், கீழமணலி என்ற கிராமம். தந்தை: ராமஸ்வாமி அய்யங்கார். கிராமத்து கணக்கராக இருந்தவர். தாயார்: ஜானகி படிப்பு: பி.எஸ்சி (இயற்பியல்), திருச்சி தேசியக் கல்லூரி. வேலை தேடி மும்பைக்கு சென்று இருபத்தைந்து ஆண்டுகள் பல தனியார் கப்பல் துறை அலுவலகங்களில் பணிசெய்து கோயம்புத்தூர் இடமாற்றம். உலகின் முதல் பெரிய கப்பல் பணியகமான, 'மெர்ஸ்க் லைன்' (Maersk Line) கோவை அலுவலகத்தில் பொது மேலாளராக…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *