கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 7, 2026
பார்வையிட்டோர்: 207 
வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்

(1978ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

‘செவப்பா இருக்கிற புருஷன்-பெண்டாட்டிக்குக் கறுப்புப் புள்ளை பொறக்குமாங்காட்டியும்?’. கிராமத்துப் பெண்டு பிள்ளைகளின் சம்சயம் இது. 

‘சபியா பொண்ணு, உரிச்ச கோழி நெறத்திலே இருக்கு. நம்ம ஷரீபு தம்பியோட நெறம் உளுவை மீனாட்டம். இவுகளுக்குப் போயி வறால் குட்டி மாதிரி பொறந்திருக்கே – ஒரு புள்ளை. அல்லாவோட ‘குதரத்’தா இல்லே இருக்கு!’ 

மீன்கார காதர்பாட்சாவின் மனைவி கதீசா, தனக்குப் பட்டதைச் சொல்லி விட்டுப் போகிறாள். தினமும் நாலு பேராவது குழந்தையைப் பார்க்க வருகிறார்கள். வியப்பில் இரண்டு வார்த்தை சொல்லிவிட்டுப் போகிறார்கள். 

சபியா மௌனம் சாதிக்கிறாள். அவளுக்கு அது தலைச்சன். தாய் வீட்டிலிருந்து குழந்தையோடு வந்திருப்பவளை மாமியார் எப்படிக் கவனிக்க வேண்டுமோ அப்படி கவனிக்கவில்லை. குழந்தையை முதல் முறையாகப் பார்த்து விட்டு முகத்தை எட்டு கோணலாக்கிக் கொண்டவள் இன்னும் நிமிர்த்தவில்லை. மருமகள் காதில் படுகிற மாதிரி சதா முணுமுணுத்துக் கொண்டிருக்கிறாள்: 

‘அல்லாவே, அவரைக்கொடியிலே துவரை காய்ச்ச மாதிரில்ல இருக்கு. வம்ச வம்சமா இல்லாதபடிக்கு இப்புடி ஒரு கரிக்கட்டையை புள்ளேண்டு குடுத்திருக்கிறியே… இந்த வூட்டு வாரிசிண்டு எப்புடி நம்புவேன், ரகுமானே!’ 

மாமியாரின் ஆற்றாமை சபியாவுக்கு உறைக்கிறது. வாய் திறக்க வேண்டுமே; இல்லை. 

குழந்தையின் நிறம் கறுப்பு. சாயல், சம்பந்தமில்லாமல் இருக்கிறது. தாயைப் போலவும் இல்லை; தகப்பனைப் போலவும் இல்லை. பார்க்கிறவர்கள் ஒருமித்த குரலில் விமரிசித்து விட்டுப் போகிறார்கள். 

பிள்ளையைப் பார்க்க வேண்டிய தகப்பன் இன்னும் வரவில்லை. இன்றோ நாளையோ ஷரீப் வரப் போகிறான். பெரிய பிரசங்கி, வாரக்கணக்கில், மாதக் கணக்கில் வெளியூர்களில் பிரசங்கம் செய்வதே வேலையாகப் போய்விட்டது அவனுக்கு. 

இந்த முறை ஷரீப் வீட்டை விட்டுக் கிளம்பி இரண்டு மாதம் ஆகிறது. மகன் பிறந்த செய்திக்கு ஒரு கடிதம் போட்டார்கள். மகிழ்ச்சி தெரிவித்துப் பதில் எழுதியிருந்தான். ‘முக்கியமான தொடர் பிரசங்கம் என்பதால் உடனே புறப்பட்டு வரமுடியவில்லை’ என்று சபியாவுக்குத் தனிப்பட தெரிவித்திருந்தான். தான் வந்ததும் மகனுக்குப் பெயர் சூட்டு விழா நடத்தலாம் என்றும் குறிப்பிட்டிருந்தான். 

அவன் வரப் போகிறான். மகனைப் பார்த்ததும் என்ன சொல்வான்? 

‘என்னைப் போலவும் இல்லை. உன்னைப் போலவும் இல்லையே சபியா? இது என்ன நிறத்தில் சேர்த்தி?’ என்று மற்றவர்களைப் போல சந்தேகக் கணை தொடுப்பானோ! 

மற்றவர்களுக்குப் பதில் சொல்லாமல் இருக்கலாம். கணவன் கேட்டால்…? ஷரீப் நூறு கேள்வி கேட்கலாம். அவன் சுபாவமும் தோரணையும் சபியாவுக்குத் தெரியும். எதையும் விளக்கமாகப் பேசுவான்; கேட்பான். 

அவள் சில முறை குறும்பாகக் கேட்டிருக்கிறாள் – “பெண்டாட்டிகிட்டே பேசுறப்பகூட நீங்க பிரசங்கியா மாறிடுறீகளே!” 

“நான் ஒன்னை சந்திச்சதே பிரசங்கியாத்தானே, சபியா! பெண்டுக கூட்டத்திலே முன்வரிசையிலே உக்காந்து தெறந்த வாயை மூடாமெ நீ என்னோட பேச்சைக் கேக்கலையா? அத்தனை பெண்டுக மத்தியிலே ஒன்னை மட்டும் நான் புடிச்சேனே அதுதான் ஆச்சரியம்” என்பான் ஷரீப். 

அவர்கள் சந்திக்க நேர்ந்தது அப்படித்தான். சபியாவின் கிராமத்தில் அவன் ஒரு மாதம் புராணப் பிரசங்கம் செய்த போது ஏற்பட்ட சந்திப்பு. ஒரு நாள் சபியா வீட்டிற்குச் சாப்பிடப் போனான் பார்வைகள் சங்கமிக்க, வாழ்க்கையிலும் ஒன்று கலந்துவிட்டார்கள். அதெல்லாம் இரண்டு வருஷத்துக்கு முந்திய நடப்பு. 

தலைச்சன் குழந்தை பிறந்திருக்கிறது. சுறுப்புக் குழந்தை. வித்தியாசமான சாயல். 

சந்தேகம், மாமியாரைப் பிடித்துக் கொண்டிருக்கிறது. சபியா புரிந்து கொண்டு விட்டாள். கணவனுக்கு அந்தச் சந்தேகம் ஏற்படாமல் போகும் என்பது என்ன நிச்சயம்? 

சபியா மருண்டு போயிருக்கிறாள். குழந்தையை வெறித்துப் பார்த்தபடி வெகு நேரம் தன்னை மறந்து உட்கார்ந்து விடுகிறாள். 


ஷரீப் வந்துவிட்டான். 

ஆவலோடு தொட்டுத் தூக்கி, அள்ளி அணைத்து, சீராட்டிப் பாராட்ட வேண்டும் என்று மனம் கொள்ளாத சுற்பனைகளுடன் குழந்தையைப் பார்க்க வந்தவன் மறு நாளே முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு உட்கார்ந்து விட்டான். 

சபியா பயந்த மாதிரியே எல்லாம் நடக்கிறது. ஷரீப் அவளை அடுக்கடுக்காகக் கேள்வி கேட்கவில்லை. துருவித் துருவி விசாரிக்கவில்லை. அவனுடைய மௌனமான பார்வையே அவளைத் துரப்பணமிட்டது. 

“நீ ஊர் ஊரா சுத்தப் போயிடுறே… அதுக்குக் கை மேலே பலன் கிடைச்சிருக்கு’” என்று சூசகமாக மகனிடம் சொல்லிக் காட்டுகிறாள், சபியாவின் மாமியார். 

இதற்கு என்ன அர்த்தம்? வந்தவன் நிம்மதியாக இருக்க முடியவில்லை. சபியாவின் நிலைமையும் அதுதான். குழந்தையைப் பார்த்தவர்கள் என்னென்ன சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்கள் என்பது அவன் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டிருக்கிறது. அம்மாவின் அங்கலாய்ப்பு, ஆற்றாமையில் பாதி இப்பொழுது ஷரீபுக்கு வந்து விட்டது. 

”நீ ஊர் சுத்தப் போயிடுறே. அப்பல்லாம் உன் பெண்டாட்டி தாய் வூடுண்டு போயிடுறா… ஒரு விசையா, ரெண்டு விசையா… எதுக்காக நீ போறேண்டு நான் கேக்க முடியு மாப்பா? சமயா சமயத்திலே அவ சொந்தக்காரங் கண்டு யாராச்சும் வர்றாங்க.. சொந்த பந்தமிண்டு விடலை விடலையா தலைக்கொசந்தவனுங்க உள்ள குடும்பமாம்… எந்தப் புத்திலே எந்தப் பாம்பு இருக்குமிண்டு யார் கண்டதுங்கிறேன்……?”

அம்மா அவனைக் கொத்திக் கொண்டிருக்கிறாள். சபியா துவண்டு விட்டாள், 

‘இதற்கெல்லாம் உன் பதில் என்ன?’ என்று அவளை ஷரீப் கேட்கலாம். கேட்கவில்லை. சந்தேகச் சூறாவளி சுழன்று கொண்டிருக்கிறதோ? 

நெஞ்சு கொள்ளாத குறுகுறுப்பில் நிலைகுலைந்திருக்கிறாள் சபியா. அவனுக்கு அவள் என்ன பதில் சொல்ல முடியும்? 

‘அல்லாவே, நீதான் கிருபை செய்யணும். அறிஞ்சோ அறியாமியோ நான் செஞ்ச குத்தம் குறைகளையெல்லாம் நீதான் பொறுத்துக்கணும். எங்களுக்கு நல்ல வழி காட்டு அல்லாவே! – சபியாவின் கண்ணும் மனமும் கசிகின்றன. 

சதா முகத்தைக் கவிழ்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறான் ஷரீப். 

சந்தேகச் சாயல் அழுத்தமாகத் தடம் பதித்துக் கொண்டிருக்கிறது. ஆற்றொழுக்காகப் பிரசங்கம் செய்கிறவனின் வாய் அடைபட்டுப் போயிருக்கிறது. 

காரணம்- 

குழந்தையின் நிறம்… சாயல்? 

சபியாவின் மௌனம்? 

தாய் போடுகிற தூபம்? 

‘தூபம் என்று எப்படிச் சொல்ல முடியும்? தீர்க்கமான உண்மையாக அது இருக்கக்கூடாதா? அம்மா சொல்கிற மாதிரி சபியா அடிக்கடி. தாய் வீட்டுக்குப் போகிறவள்தான். அவள் குடும்பத்தில் விடலைகளான முறைப் பையன்கள் இருக்கத்தான் இருக்கிறார்கள். எதுவும் நடந்திருக்கலாம்’. மனக் குரல் ஒவ்வொரு சமயம் எதிரொலிக்கிறது. 

சபியா அவனுக்கு உரிமையான அந்தப் புதிய நாட்களில் ஷரீப் கேட்டிருக்கிறான்; 

“சொந்தத்திலேயே உனக்கு மாப்பிள்ளைப் பையன்கள் இருக்கிறப்ப என்னைக் கட்டிக்க எதுக்கு சம்மதிச்சே, சபியா?”

“ஊர் ஊரா பயணம் போற நீங்க வேறு யாரையும் ஏத்துக்காம என்னியே முடிச்சிருக்கீங்களே, எதுக்காக?” 

“ஓ! நீ இப்படித் திருப்புறியா?” 

“அது அது அல்லாவுடைய நாட்டப்படிக்கு நடக்குது. இல்லேண்டா நாம ஒண்ணு சேர்ந்திருப்பமா?” 

“அப்ப, உன் மச்சான்மார்கள்லே யாரையும் புருஷனா அடையலேங்கிற மனக்குறை உனக்கு இல்லையா, சபியா?” 

“நீங்க என்ன பேச்சுப் பேசுறீங்க? இப்புடியெல்லாம் நீங்க பேசினா எனக்கு கெட்ட கோவம் வரும்… எனக்கும் குறை இல்லே…அவங்கள்லே யாருக்கும் குறை இல்லே.. என் பேர்லே எல்லாருக்குமே பிரியம். சின்ன வயசிலேருந்து மச்சான்மார்களோட ஒண்ணா விளையாடி விகல்பமில்லாமெ பளகி வந்திருக்கோம்…” 

“ஆனாக்கா, அவங்கள்லே யாரும் என்னை மாதிரி செவப்பா இல்லே.. சுறுப்பு மச்சான்களா இருக்காங்கண்டு வெறுப்பு உண்டா இல்லையா?” 

“நீ செவப்பா இருந்தபடியினாலேதான் பெண்டுங்க கூட்டத்திலே பளிச்சிண்டு பார்வையிலே தெரிஞ்சே!” 

“யார் கண்டாங்க? போற ஊர்லேயெல்லாம் பெண்டுக கூட்டத்தை அலசிப்பாப்பீங்க போல….. அப்புடிப் பார்த்தீங்கண்டா ஆபத்தாபோயிடும்!” என்றாள் குறும்பாக. 

“யாருக்கு? ஒனக்கா, எனக்கா?”

“ரெண்டு பேருக்குந்தான்!” 

இப்பொழுது ஏற்பட்டிருப்பது ஆபத்துதான். ஆனால் இதன் சாயல் வேறு விதமானது. நிறம் இத்தனை பூதாகாரமான பிரச்னையைக் கொண்டு வருமா, என்ன? 

கொண்டு வந்துவிட்டது. 

‘இது என் குழந்தை என்று சத்தியம் செய்தால்கூட யாரும் நம்ப மாட்டார்கள். எத்தனை வித்தியாசம்! எத்தனை பேதம்!’ என்று அலையாய், பொங்கி நுறைக்கிறது ஷரீபின் நெஞ்சம். 

அவ்வப்போது கேட்கும் குழந்தையின் அழுகுரல் மட்டுமே அந்த வீட்டில் ஒரு கறுப்பு குழந்தை-ஷரீபின் மகன்-இருப்பதை நினைவுறுத்திக் கொண்டிருக்கிறது. 

“தெனைக்கும் இப்புடியே உட்காந்திருந்தா என்ன ஆவப் போவுது? மனசிலே என்னத்தை வச்சிருக்கே மவனே?” என்று உசுப்பி விடுகிறாள் தாய். 

“நான் பிரயாணம் கிளம்பப் போகிறேன். லெட்டர் மேலே லெட்டர் வந்துகிட்டே யிருக்கு. நாலு போனா ஊருக்குப் மனசு கொஞ்சம்…” 

ஷரீப் தழுதழுக்கிறான். 

“புள்ளைக்கி எப்ப பேர் வைக்கப் போறீங்கண்டு ஊர்க்காரங்க கேக்குறாங்களே, என்னத்தை செய்றதா நெனைப்பு?” 

அம்மாவின் கேள்விக்கு அவன் பதில் சொல்லவில்லை.

“நீபாட்டுக்கு நாடோடியாட்டம் கிளம்பிப் போயிட்டா நடக்கிறதை யாரு கவனிப்பாங்க? செய்யுறதை ஒளுங்கா, மொறையா செய்து போட்டுப் போ” 

தாய்க்காரி என்ன சொல்கிறாள், எதைக் கருதுகிறாள் என்று அவனால் முடிவுகட்ட முடியவில்லை. 

சபியாவும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறாள். அவளுக்கு உறைக்கிறது. உடலெல்லாம் எரிகிறது. 

‘அல்லாவே, அறிஞ்சோ அறியாமியோ செய்த குத்தங் குறைகளை நீதான் பொறுத்துக்கணும். எங்களுக்கு நல்ல வழி காட்டு அல்லாவே!’ 

குழந்தையைப் பார்க்கிற பொழுதெல்லாம் அழுகை நெஞ்சை அடைக்கிறது, கண்ணீர் முட்டிக் கொண்டு வருகிறது. 


ஷரீப் பயணத்துக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறான். இந்தச் சில தினங்களுக்குள் வெவ்வேறு ஊர்களிலிரூந்து அழைப்புக் கடிதங்கள் வந்திருப்பது சபியாவுக்குத் தெரியும். 

அவன் போவதில் அவளுக்கு வருத்தம் இல்லை. ஆனால் வழக்கம் போல் அவளிடம் மனம் விட்டுச் சிரித்துப் பேச மாட்டானா? பிள்ளைக்குப் பெயர் வைக்கப் போவதாக வரிந்து வரிந்து எழுதியவன் ஒப்புக்காகவாவது அதைப் பற்றி ஒரு வார்த்தை பேசக்கூடாதா? 

‘இந்த முறை இன்ன ஊரில் இன்னின்ன பேசுவேன்’ என்று சபியாவிடம் அவன் உற்சாகமாகச் சொல்வது வழக்கம். அவளிடமும் சில கருத்துகளைக் கேட்பான். பெண்களுக்குப் பிடிக்கிற மாதிரி பேசுவதற்கு அவளுடைய யோசனைகள் உதவியாக இருக்கும். 

இப்பொழுது தலைகீழ் நிலைமை. சபியாவிடம் முகம் கொடுக்கவில்லை. குற்ற உணர்ச்சியின் பாதிப்புக்கு இலக்கானவள் போல் அவளும் தலை நிமிரவில்லை. 

அந்த மௌனத்தை அழித்தே தீர்வது என்று உறுதி யெடுத்துக் கொண்ட மாதிரி சபியா, கணவனிடம் வந்தாள். “பயணம் புறப்படுறியளாக்கும்?” சபியா சன்னக் குரலில் பேச்சுக் கொடுக்கிறாள். 

‘ஆமாம்’ என்று ஷரீப் தலையை ஆட்டினாலும் கவனம் அவள்மீது இல்லை. 

“நீங்க ஒண்ணும் கேக்கலையே!”

”என்னத்தைக் கேக்கப் போறேன்?”‘ 

“எதனாச்சும் சொல்லச் சொல்லுவிகளே, ஒவ்வொரு விசையும்.”

“சொல்லணுமிண்டா சொல்லேன்.”

“ரசூலுல்லா நபிகளோட ஒரு ஹதீஸ் படிச்சேன். போற எடத்துலே ஒங்க பிரசங்கத்துக்கு ஒதவுமாங்காட்டி யுமிண்டு” 

ஷரீப் மெல்ல நிமிர்ந்து பார்த்தான். அவள் சொல்வதும் அவன் கேட்பதும் வழக்கம்தான். 

சபியா சொல்லத் தொடங்கினாள்: 

“நபிநாயகத்தைப் பாக்க வந்த ஒருத்தர் தனக்குக் கறுப்புக் குழந்தை பொறந்திருக்கிறதா சொன்னார். அந்தக் கறுப்புப் பையன் தனக்கு பொறந்திருக்க முடியாதுண்டு வாதாடினார்…”

ஷரீப் செவிகளைத் தீட்டிக்கொண்டான். 

“நாயகம் அவர் சொன்னதை நம்பலை: ‘உம்மகிட்டே ஒட்டகம் இருக்காண்டு’ கேட்டாங்க. ‘ஆமா இருக்கு!’ அப்புடீண்டார் வந்தவர். அந்த ஒட்டகத்தோட நெறம் என்னதுண்டு நாயகம் கேட்டப்போ, சிவப்புண்டு சொன்னார்.” – அவள் நிறுத்திவிட்டு கணவனை நோட்டமிட்டாள். 

ஷரீபின் விழிகளில் கூர்மையேறியது. 

“அந்த செவப்பு நெற ஓட்டத்திலே எங்கேயாச்சும் வெள்ளை நெறம் கலந்திருக்காண்டு நாயகம் கேட்டாங்க. இருக்கிறதா சொன்னார். சரி, அப்ப செவப்பு ஒட்டகத்திலே வெள்ளை நெறம் எப்புடி வந்திச்சுண்டு நபி வினாவினாங்க… வந்தவர் யோசிச்சார்..” 

அவள் நிறுத்தினாள். அவன் யோசித்தான். 

“ஏதாச்சும் நரம்பு வித்தியாசத்தினாலே செவப்பு ஒட்டகத்துக்கு வெள்ளை நெறமும் ஏற்படும். வேற நெறமும் உண்டாகலாமிண்டு நாயகத்துக்கிட்டே அவர் சொன்னார். ‘அது மாதிரிதான் ஒங்க விசயத்திலேயும் நடந்திருக்கும். ஒரு வேளை உங்க மகனுக்கு ஒரு நரம்புதான் அந்த வெதமா செய்திருக்கும். அப்புடீண்டு நாயகம் வெவரிச்சதும் வந்தவர் திருப்தியோட திரும்பிப் போயிட்டார்…” 

சபியா அப்புறம் பேசவில்லை; யோசிக்கவும் இல்லை.

ஷரீபுக்கு மின்சாரம் தாக்கிய மாதிரி இருந்தது.

சபியா மீது சந்தேகமா? உள்ளுக்குள் களங்கம் இருந்தால் இப்படிப் பேச முடியுமா ஒரு பெண்ணால்? 

 குழந்தையைத் தொட்டுத் தூக்க ஷரீபின் கரங்கள் துறுதுறுத்தன. 

“சபியா, நம்ம குழந்தையைத் தூக்கிட்டு வா” என்றான் அவன்.

– 1978, ஆனந்த விகடன்.

– சாயல் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: மே 1983, தமிழ் மன்றம். கல்ஹின்னை, கண்டி. 

jmsali ஜே.எம்.சாலி (பிறப்பு: ஏப்ரல் 10 1939), சிங்கப்பூர் தமிழ் இஸ்லாமிய எழுத்தாளர். எரவாஞ்சேரியில் பிறந்த இவர் தற்போது யசும் தெருவில் வசித்துவருகின்றார்.2015ம் ஆண்டின் சிறந்த தென்கிழக்கு ஆசிய இலக்கிய விருது பெற்றவரும், சிங்கப்பூர் தொலைக்காட்சி செய்தி ஆசிரியரும், பன்னூலாசிரியரும், பத்திரிகையாளரும், பல்வேறு இதழ்களில் சிறுகதைகள், தொடர்கதைகள், கட்டுரைகளை எழுதியவரும், இஸ்லாமியத் தமிழிலக்கியக் கழகத்தின் வெளிநாட்டுத் தொடர்பாளருமாவார். எழுதிய நூல்கள் கனாக் கண்டேன் தோழி விலங்கு அலைகள் பேசுகின்றன தமிழகத்துத் தர்க்காக்கள்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *