கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 4, 2026
பார்வையிட்டோர்: 59 
வாசிப்பு நேரம்: 31 நிமிடங்கள்

அத்தியாயம் 19-21 | அத்தியாயம் 22-24 | அத்தியாயம் 25-27

அத்தியாயம் – 22

அங்கங்கே வேலைகளக்கு முயன்றேன். சில இடங்களுக்கு எழுதினேன். சில இடங்களில் நேரில் சென்றும் முயன்றேன். சர்வீஸ் கமிஷனுக்கு விண்ணப்பம் எழுதினேன். அதற்கு உரிய தேர்வும் எழுதினேன். தொழிலும் இன்றிக் கல்வியும் இன்றி வாலாசாவில் பொழுது போக்குவது ஒரு துன்பமாக இருந்தது. பெரிய குடும்பத்தில் ஒரு சின்னக் குடும்பமாக எங்கள் இல்வாழ்க்கை நடந்தது. ஆகையால் குடும்பச் சுமை உணரவில்லை. மனைவி கயற்கண்ணிக்கு எங்கள் வீடு புதிது அல்ல; எனக்கும் அவள் புதியவள் அல்ல. இடையிடையே வேளூர்க்கும் வேலூர்க்கும் போய் வந்தது தவிர மாறுதல் ஒன்றும் இல்லை. மாலன் வீட்டுக்கு ஒருமுறை குடும்பத்தோடு போய்வர எண்ணினேன். முதலில் அவன் அல்லவா குடும்பத்தோடு இங்கே வந்து போகவேண்டும். அவன் வந்தபிறகு வேண்டுமானால் நாம் போகலாம் என்று போலி மானம் தடுத்தது. ஆகையால் அங்கும் போகவில்லை. அவனுக்கு ஒரு மகன் பிறந்த செய்தி தெரிவித்திருந்தான். அதற்கு மறுமொழியாக என் வாழ்த்தை அறிவித்திருந்தேன். அதற்குப் பிறகு தேர்வுக்குப் படித்து வருவதாக எழுதியிருந்தான். பிறகு தன் மனைவி எங்கே இருப்பதைப் பற்றியும் அவன் குறிக்கவில்லை. தேர்வு எழுதி முடித்த செய்தியைத் தெரிவித்து இந்த முறை நம்பிக்கையோடு இருப்பதாகக் குறித்திருந்தான்.

அவன் தேர்வில் வெற்றி பெற்ற செய்தியை அறிந்ததும் அவனுக்குக் கடிதம் எழுதி என் மகிழ்ச்சியைத் தெரிவித்தேன். வேலை தேடும் முயற்சியைக் குறித்து என் அறிவுரையைக் கோரி மறுமொழி எழுதினான்.

என் நிலையே சோர்வாக இருக்கும்போது, நான் எப்படி அவனுக்கு வழி காட்டுவது என்று அவனுக்கு ஒன்றும் எழுதாமல் இருந்தேன். எதிர்பாராத வகையில், என்னை நேரில் வருமாறு சர்வீஸ் கமிஷன் அழைத்திருந்தது. அவர்கள் கேட்ட வினாக்களுக்குத் தக்க விடைகள் தந்தேன். சில நாட்களுள் வேலைக்கு உத்தரவும் வந்தது. கோயமுத்தூரில் கூட்டுறவுத் துணைப்பதிவராக வேலை வந்திருந்தது. மனைவியை வீட்டிலேயே விட்டுக் கோவைக்குப் புறப்பட்டுத் தொழிலில் சேர்ந்தேன்.

தொழில்துறை புதியது ஆகையால் இரவும் பகலும் என் சிந்தனை அதில் மூழ்கியிருந்தது. ‘செய்வன திருந்தச் செய்’ என்ற அறிவுரையைக் கடைப்பிடித்துத் தொடக்கத்திலிருந்தே சிறு கடமையையும் செம்மையாய்ச் செய்து வந்தேன். இரண்டு வாரங்களுள் வேலையில் பழகிவிட்டேன். எனக்கு மேலதிகாரியாக வாய்த்தவர் நல்லவராகவும் திறமையுடையவராகவும் இருந்தார். ஆகையால் வேலையைக் கற்றுக் கொள்வது எனக்கு மகிழ்ச்சியாகவும் ஊக்கமாகவும் இருந்தது. கோவையில் மூன்று மாதங்கள் பயிற்சி போல் இருந்து கற்றுக் கொண்ட பிறகு வேறு எந்த இடத்திற்காவது மாற்றுவார்கள் என அறிந்தேன். ஆகையால் மனைவியை அழைத்துக் கொண்டு போய்க் கோவையில் குடும்பம் நடத்தும் முயற்சியை மேற்கொள்ளவில்லை.

இடையே ஒருமுறை ஊர்க்குப் போயிருந்தேன். தங்கை மணிமேகலை அப்போது புக்ககத்திலிருந்து எங்கள் வீட்டுக்கு வந்திருந்தாள். ஒருநாள் நான் பகலுணவுக்குப் பிறகு கட்டிலில் படுத்துறங்கி விழித்தபோது தங்கையும் கயற்கண்ணியும் பாக்கிய அம்மையாருடன் பேசிக்கொண்டிருந்தது கேட்டது. தங்கை தன் கணவரைப் பற்றிக் குறை சொல்லிக் கொண்டிருந்தாள்.

“எதிலும் பிடிவாதக்காரராக இருக்கிறார். எதை எடுத்தாலும், ஒரு கோடு போட்டாற்போல் இப்படித்தான் நடக்க வேண்டும் என்கிறார். இல்லாவிட்டாலும் இது தப்பு அது தப்பு என்கிறார்” என்றாள் தங்கை.

“அய்யய்யோ! இதைக் கேட்டாலே பயமா இருக்குது அம்மா” என்றாள் என் மனைவி.

“என் அண்ணன் ஒரு நாளும் அப்படிக் கண்டிப்பாக நடக்கமாட்டார். நான் சொல்கிறேன் அண்ணி” என்றாள் தங்கை.

“மணிமேகலை! நீ சொல்வதைப் பார்த்தால் அவர் ஒன்றும் கெட்டவராகத் தெரியவில்லையே” என்றார் பாக்கியம்.

“கெட்டவர் அல்ல. பிடிவாதக்காரர். உலகத்தில் அங்கங்கே குடும்பங்களில் மனைவியின் விருப்பம்போல் விட்டு விட்டுக் கணவன்மார் எதிலும் தலையிடாமல் இருக்கிறார்கள். நம் வீட்டில் அப்பா இல்லையா? என் வீட்டுக்காரர் நான் கட்டுகிற புடைவை முதல் வாங்குகிற பொருள்கள் வரையில் எதற்கும் இப்படி அப்படி என்று கட்டளை போடுகிறார். பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்கள் கொடுத்த உரிமைகூட இவர் கொடுப்பதில்லை. சிவப்பு மையில் எழுத வேண்டியதைக் கறுப்பு மையில் எழுதினால் ஆசிரியர்கள் பெரிய குற்றமாகக் கருதுவதில்லை. இரண்டு பக்கம் எழுத வேண்டியதை இரண்டரைப் பக்கமாக எழுதினால் கோபித்துக் கொள்வதில்லை. ஒரு நாள் இரண்டு நாள் படிக்காமலே வந்தாலும், நேரம் கழித்து வந்தாலும் மன்னித்து விடுகிறார்கள். இவருடன் குடும்பம் நடத்துவது பெரிய பள்ளிக்கூடமாக இருக்கிறது. பள்ளிக்கூடமோ இராணுவப் பள்ளிக்கூடமாக இருக்கிறது. தாய் வீட்டுக்கு வந்தது சிறையிலிருந்து விடுதலையாகி வந்ததுபோல் இருக்கிறதே.”

தங்கையின் இந்தப் பேச்சைக் கேட்டு என் மனைவி சிரித்தாள்.

பாக்கிய அம்மையாரின் சிரிப்புக் கேட்கவில்லை. “ஊ-ம்?” என்ற குரல் மட்டும் பெருமூச்சோடு கலந்து கேட்டது. “கோடு போட்டு வாழ்க்கை நடத்துவது நல்லதுதானே அம்மா! போட்ட கோட்டில் நடப்பது எளிது அல்லவா? ஒரு காட்டில் நடக்க வேண்டுமானால், வழி இல்லாமல் நடந்து போவதுதான் துன்பம். ஒற்றையடிப்பாதை ஒன்று இருந்தால், அதில் நடந்து போவதில் கவலையே இல்லை. ஒரு பாதையும் இல்லாத இடத்தில் இப்படி நடப்பதா அப்படி நடப்பதா, வலக்கைப் பக்கம் திரும்பலாமா இடைக்கைப் பக்கம் திரும்பலாமா, இந்தத் திசையா அந்தத் திசையா என்று நூறு முறை தயங்கித் தயங்கிப் போகவேண்டும். அப்போதும் மனக்குறை தீராது. அல்லலாக முடியும். ஒற்றையடிப்பாதை இருந்துவிட்டால் போதுமே. கவலை இல்லாமல் போகலாமே” என்றார்.

“மெய்தான் அக்கா! உலகத்தார் போகிய போக்கில் நாம் போகலாமே. துன்பம் இல்லாமல் இருக்குமே!”

“நீ சொல்வது நல்லதுதான். நம்முடைய முன்னோர் காலத்தில் அப்படித்தான் வாழ்க்கை நடத்தினார்கள். கவலையே இல்லாமல் இருந்தது. பெண்களுக்குக் குடும்பப் பண்பாடு என்று இருந்தது. ஆண்களுக்கு உலகத்தோடு ஒட்ட ஒழுகல் என்று இருந்தது. இப்போது நம் நாட்டில் பலவகையான நாகரிகம் வந்து கலந்துவிட்டன. பணம் ஏற்பட்டு வாழ்க்கையைப் பலவகையாகப் பிரித்துவிட்டது. யாரை யார் பின்பற்றுவது என்று தெரியவில்லை. ஐம்பது ரூபாய் வருவாய் உள்ளவர் ஐந்நூறு ரூபாய் வருவாய் உள்ளவரைப் பின்பற்ற முடியுமா? அவர் ஐயாயிர ரூபாய் வருவாய் உள்ளவரைப் பின்பற்ற முடியுமா?” எல்லோரும் ஒரே ஊரில் அடுத்தடுத்து வாழவேண்டியுள்ளது. போக்கு வரவுக் கருவிகள் பலரைக் கொண்டுவந்து கலந்துவிட்டன. பத்திரிகை, சினிமா முதலானவை பல கருத்துகளைக் கொண்டு வந்து கலந்துவிட்டன. இப்போது குடும்பப் பண்பாடு என்று ஒன்று தனியே எப்படிக் கற்றுக் கொள்வது? உலகத்தோடு ஒட்ட ஒழுகல் என்று சொன்னாலும் உலகில் எந்த வகையான மக்களைப் பார்த்து நடப்பது? முன்காலத்தில் நம் நாட்டு நாகரிகமே ஒரு கிராம அமைப்புப் போல் தெளிவாக எளிமையாக இருந்தது. இப்போது நம் நாட்டு வாழ்க்கை ஒரு சந்தைபோல் பெருங் கலப்பாக ஆவாரமாக ஆகிவிட்டது. ஆகையால் இப்போது உலகத்தாரைப்போல் நடப்பது என்றால் யாரைப் பார்த்து நடப்பது? கணவன் மனைவி என்ற இரண்டே பேர் தனிக்குடும்பம் நடத்துகிறவர்கள் இதோ நம்முடைய பெரிய குடும்பத்தைப் பார்த்துப் பின்பற்ற முடியுமா? கிராமத்துக் குடும்பம் நகரத்துக் குடும்பத்தைப் பார்த்துப் பின்பற்ற முடியுமா? நகரத்தில் பஸ் பயணத்துக்குக் காசு இல்லாதவர்கள் கார் வைத்து வாழ்பவர்களைப் பின்பற்ற முடியுமா?”

“இதே போராட்டம்தான். எல்லாம் வரவு செலவு வகையில் வரும் துன்பங்கள்தான்.”

“பார்த்தாயா, மணிமேகலை! இப்போது தெரிந்து கொண்டாயா? அடிப்படையில் இந்தக் குறை இருக்கும்போது உலகத்தைப் பார்த்து வாழவேண்டும் என்று ஏன் சொல்கிறாய்?”

“நான் வரவு செலவு வகையில் தலையிடப் போவதே இல்லை அம்மா! பேசாமல் சமைத்துப் போட்டுக்கொண்டு கவலை இல்லாமல் இருக்கப்போகிறேன்” என்றாள் என் மனைவி குறுக்கிட்டு.

“உனக்கு என்ன அண்ணி! அண்ணனுக்குச் சம்பளம், படி எல்லாம் முந்நூறு ரூபாய்க்குக் குறையாமல் வரும். தடபுடலாகக் குடும்பம் நடத்தலாம். நாங்கள் எழுபது ரூபாய்க்கு ஏங்குகிறோம். நீ கேட்டு வந்தவள்” என்றாள் தங்கை.

தங்கையின் சொல்லைக் கேட்டதும் என் உள்ளம் வருந்தியது. ஏழைக்குக் கொடுத்தோமே என்று கவலை எங்கள் உள்ளத்திலே முதலிலிருந்தே இருந்துவந்தது. இருந்தாலும், அன்று தங்கையே வாய்விட்டுக் குடும்பத் துன்பத்தைச் சொன்னபோது வேதனையாக இருந்தது. என்ன செய்வது. கொடுத்துவிட்டோம், இனி எப்படியாவது வாழவேண்டும் என்று மனம் ஆறுதல் அடைவதைத் தவிர வேறு வழி இல்லை. முதலில் தங்கை தன் கணவரைப் பற்றிக் குறை சொன்னபோது எனக்கு அவர்மேல் வெறுப்புத் தோன்றியது. அன்பும் இரக்கமும் இல்லாத கல் நெஞ்சராக இருக்கிறாரே. கதர் உடுத்தும் காந்தி நெறியராக இருந்தும் இப்படி நடக்கக் காரணம் என்ன என்று வருந்தினேன். அடிப்படைக் காரணத்தை நான் உணரவில்லை. ஆனால் பாக்கிய அம்மையார் எவ்வாறோ உணர்ந்து கொண்டார். அதனால்தான் அந்தப் போக்கில் பேசி அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தார். அந்த அம்மையாரின் நுட்பமான அறிவை எண்ணி வியந்தேன். படிப்புப் பல படித்துப் பரந்த உலகத்தில் பழகிய நான் உணராத, சிக்கல்களை எல்லாம், மூலைவீட்டில் தொண்டு செய்து வாழும் ஒருவர் உணர்ந்தது வியப்பாக இருந்தது. அவர் மேலும் பேசத் தொடங்கவே, ஆர்வத்தோடு கேட்டேன்.

“இப்போது உண்மை வெளிப்படையாகத் தெரிந்து விட்டது அல்லவா? உன் கணவர் ஏன் கோடு போடுகிறார் என்று காரணம் தெரிந்ததா? அவர் தம் குடும்பத்துக்கு என்று தனி வழி வகுத்துக் கொண்டு கவலை இல்லாமல் வாழ முயற்சி செய்கிறார். நல்லதுதானே?”

“சரி, அக்கா! சிக்கனமாக வாழ வேண்டியதுதான். ஒப்புக் கொள்கிறேன். பட்டு உடுத்த வேண்டா என்கிறார். திருமணங்களுக்குப் போனாலும் வேறு அலுவல்களுக்குப் போனாலும் பருத்தியாடையே போதும் என்கிறார். தாம் கதர் உடுத்திக்கொண்டே எதற்கும் போகவில்லையா என்று தம்முடைய பழக்கத்தைக் காட்டுகிறார். அவர் ஆண்மகன், எப்படிப் போனாலும் மதிப்பு உண்டு. நான் அப்படிப் போனாலும் மற்றப் பெண்கள் மதிக்கமாட்டார்களே என்று சொன்னால், அப்படிப் பட்டுக்காக மதிக்கின்றவர்களாக இருந்தால் அவர்கள் நல்லவர்கள் அல்ல என்கிறார். அப்படிப்பட்டவர்களின் உறவும் பழக்கமும் இல்லாமலிருப்பதே நமக்கு நல்லது என்கிறார். ஆடம்பரக்காரரோடு பழகினால் ஒரு வேளையாவது மனத்தில் ஏக்கம் வரும்; கவலை வரும்; பழகாமலே இருந்தால் தலைநிமிர்ந்து வாழலாம் என்கிறார். நாட்டு எலி நகரத்து எலியோடு பழகாமல் இருப்பதே நல்லதாம், பட்டுச் சேலைக்காக நீங்கள் பணம் செலவிட வேண்டா; எங்கள் தாய்வீட்டார் கொடுக்கும் பட்டுச் சேலை போதும் என்று சொன்னேன். அதற்கும் என்னை விடவில்லை. மனத்திலேயே ஆடம்பரம் இல்லாமல் வாழ்ந்தால்தான் சிக்கன வாழ்க்கையும் கவலையற்ற வாழ்க்கையும் முடியுமாம். தாய்வீட்டுப் பட்டாக இருந்தாலும், அதை விரும்புகிற மனமே நல்ல மனம் அல்லவாம். இன்றைக்கு அந்த ஆசைக்கு இடம் கொடுத்தால் நாளைக்கு வேறு பல ஆடம்பர ஆசைகள் மனத்தில் வருமாம். நாம் தனிச்சாதி போல் ஆடம்பரக்காரரிடமிருந்து பிரிந்து வாழலாம் என்கிறார். இது நடைமுறையில் முடியுமா?”

எனக்கு இந்தப் பேச்சு ஒரு முறையீடுபோல் இருந்தது. தங்கையின் நிலைமை இரங்கத்தக்கதாக இருந்தது. அதே நேரத்தில் அவளுடைய கணவரைக் குறை கூறவும் முடியவில்லை.

“நல்ல கதைதான்” என்றாள் என் மனைவி.

பாக்கிய அம்மையாரின் குரலில் இரக்கம் புலப்பட்டது. “என்ன செய்வது அம்மா! அவர் சொல்வதில் உண்மை இருக்கிறது. அப்படி நடந்தால் நல்லது என்றுதான் சொல்வேன். ஆனால் நீ இங்கே குழந்தை போல் செல்வமாக வளர்ந்துவிட்டாய். உன் மனத்துக்கு எல்லாம் புதுமையாக இருக்கும். பயப்படாதே, கவலை வேண்டா. முதலில் அவர் சொன்னபடியே நட, எதிர்த்துப் பேசாதே, உன்மேல் அன்பு வளரட்டும்; நாளடைவில் உன்மேல் அவருக்கே இரக்கம் ஏற்பட்டு விடும். ஆனால் அதுவரையில் பொறுக்க வேண்டும். பொறுப்பது துன்பமாகத்தான் இருக்கும். ஆனாலும் பொறு” என்றார்.

“அவர் நெஞ்சம் கல் நெஞ்சம்; அவருக்கு இரக்கம் வரும் என்று எனக்குத் தோன்றவில்லை.”

“அப்படிச் சொல்லாதே மணிமேகலை; அம்மாவிடம் முதல் முதலில் அப்பா எப்படி இருந்திருக்கிறார் தெரியுமா? இன்றைக்கு எப்படி இருக்கிறார்? அம்மாவுக்கு காய்ச்சல் என்றால் மளிகைக் கடையை விட்டு நான்கு முறை வந்து பார்க்கிறார். யாருக்குமே நாளடைவில்தான் அன்பும் இரக்கமும் வளரும். நீ மட்டும் கொஞ்சம் பொறுமையைக் கற்றுக் கொள்ள வேண்டும். பொறுமையும் விட்டுக் கொடுத்தலும் இல்லாவிட்டால் ஒரு பயனும் இல்லை. காதல் காதல் என்று ஒரே நிலையில் நின்று திருமணம் செய்து கொள்கிறார்களே, அவர்களுக்கும் இந்தப் பொறுமையும் வேண்டும் விட்டுக் கொடுத்தலும் வேண்டும். நம் ஊரிலேயே பார், அந்த நெல்மண்டிக்காரர் பிள்ளை எதிர்வீட்டுப் பெண்ணோடு பழகிக் காதல் ஏற்பட்டு மணம் செய்து கொண்டான். ஊரெல்லாம் தெரியும். இப்போது அவர்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கிறதாம் தெரியுமா? அந்த வீட்டு வேலைக்காரி ஒரு நாள் இங்கு வந்திருந்தபோது சொன்னாள். எலியும் பூனையுமாக இருக்கிறார்களாம். வேறு வழி இல்லை என்று இப்போது வாழ்கிறார்கள். காதல் ஒரு வகை ஆசை. அது வெறிபோல் வளரும்போது குற்றங்களே தெரிவதில்லை. அது தணியும்போது மற்றக் குடும்பங்களின் நிலை வந்து விடுகிறது. அப்போது பண்புகள் இருந்தால்தான் வாழமுடியும். இல்லையானால் வாழ்வு இல்லை. ஆகவே முதலிலே அன்பு இல்லை, இரக்கம் இல்லை என்று நீ கவலைப்படாதே. நம்பிக்கையோடு நான் சொல்வதைக்கேள். எந்த ஆண்களை நம்பக்கூடாது தெரியுமா? தன்னலம் மிகுந்தவர்களைத் தான் நம்பக்கூடாது. அவர்கள் இன்றைக்கு அன்போடு நடப்பதுபோல் இருக்கும். நாளைக்கு கைவிட்டு விடுவார்கள். உன் கணவர் கொள்கை உடையவர்; ஒரு நெறியை நம்புகிறவர்; சொல்கிறபடி நடக்கிறவர். ஆகையால் நீ அவரை நம்பலாம். உனக்கு ஒரு வழி அவருக்கு ஒரு வழி என்று நடந்தால், அப்படிப்பட்ட ஆளை நம்பக்கூடாது. சில ஆண்கள் வீட்டிலேயே சிக்கனம் பிடிக்கச் சொல்லி வெளியே சீட்டு ஆடிக் காசைத் தொலைப்பார்கள். மனைவி மக்கள் வெறுஞ்சோறு உண்ணச் செய்து தாம் மட்டும் ஓட்டலில் சுவையாகத் தின்பார்கள். மனைவி மக்களை வீட்டில் ஏமாற்றிவிட்டுத் தாம் மட்டும் நாடகமும் சினிமாவும் விடாமல் பார்ப்பார்கள். மனைவி மக்களுக்குக் கந்தை போதும் என்று விட்டு விட்டுத் தாம் மட்டும் அலமாரியிலிருந்து மடிப்பு மடிப்பாக எடுத்து உடுத்திக்கொண்டு ஊர் சுற்றுவார்கள். அப்படிப்பட்டவர்களைத்தான் நம்பக்கூடாது. அவர்களுக்கு ஒரு நாளும் உண்மையான அன்பு ஏற்படாது. உயிரையே விடுவது போல் உருகி உருகிப் பேசினாலும் அவர்களை நம்ப முடியாது; நம்பக்கூடாது. உன் கணவர் அப்படிப்பட்டவரா, மணிமேகலை! உனக்குப் பட்டு வேண்டா என்று சொல்லிவிட்டு அவர் மட்டும் ஆடம்பரமாகத் திரிகிறாரா? திருமணத்தின்போதே அவர் வெள்ளைக் கதர் தவிர வேறு உடுத்தவில்லையே. அப்பா போட்ட மோதிரத்தையும் மறுநாளே கழற்றி உன் கையில் கொடுத்துவிட்டார் என்று சொன்னாயே. பட்டாசை பொன்னாசை இல்லாமல் அவர் தம் மனத்தைப் பயன்படுத்திக் கொண்டார். நீயும் அப்படி ஆகிவிட்டால், வாழ்க்கை கவலை இல்லாததாக இருக்கும் என்று நம்புகிறார். அது உண்மைதான். காந்தியடிகள் பெரிய பெரிய போராட்டம் எல்லாம் நடத்தியும் கவலை இல்லாமல் இருப்பதற்கு அதுதானே காரணம்? கஸ்தூரிபாவின் வாழ்க்கை எவ்வளவு உயர்ந்த வாழ்க்கை! அவ்வளவு தொலைவு உன்னால் நடக்கமுடியாதிருக்கலாம். இருந்தாலும், அந்த வழி நல்ல வழி, நேர் வழி, கவலையற்ற வழி, துணிவான வழி, வீரர் நடக்கும் வழி. அதனால்தான் சத்தியசோதனை படி படி என்று உனக்குப் பலமுறை சொன்னேன். நீ அக்கறையோடு படிக்கவில்லை. அன்று காலையில் தாயுமானவர் பாடலில் ஒரு பாட்டுப் படித்து அப்படியே மனம் உருகிவிட்டது. ‘ஓடும் செம்பொன்னும் ஒன்றாகக் கண்டவர்கள், நாடும் பொருளான நட்பே பராபரமே.’ அந்த நிலை எவ்வளவு பெரிய நிலை! நாம் அவ்வளவு தொலைவுக்குப் போகவேண்டா. ஆடம்பரத்தில் ஆசை குறைந்தால் போதுமே. உடனே எனக்குத் திருக்குறள் நினைவுக்கு வந்தது. “வேண்டாமை அன்ன விழுச் செல்வம் வேண்டின் உண்டாகத் துறக்க.” மனப்பாடம் செய்தாயே, நினைவு இருக்கிறதா? இனிமேல் கொஞ்சம் ஆழ்ந்து படி. மற்றப் பெண்கள் மதிப்பதைப் பற்றிக் கவலைப்படாதே. நீ அவர்களை விட மகிழ்ச்சியாக வாழமுடியும் என்று வாழ்ந்து காட்டு. அதுவே பெரிய செல்வம்!”

பாக்கியம் பேச்சைக் கேட்டதும், என்னால் படுக்கையில் அமைதியாக இருக்க முடியவில்லை. எழுந்து உட்கார்ந்தால் அதனால் அவர்களின் பேச்சு நின்று விடுமே என்று எண்ணி மறுபடியும் அப்படியே கிடந்தேன். சில புத்தகங்களையும் சில இதழ்களையும் படித்துவிட்டு அந்த அம்மையார் எப்படி இவ்வளவு விரைவில் அறிவை வளர்த்துக்கொள்ள முடிந்ததோ என்று வியந்தேன். கல்லூரியிலும் பல நூல்களைப் படித்தேன். அறிவை வளர்த்துக்கொண்டேன். ஆனாலும் இவ்வளவு தெளிவு ஏற்படவில்லையே என்று உணர்ந்தேன். சிலர் நூல்களைப் படிப்பதால் மூளையில் இன்னும் கொஞ்சம் சரக்குச் சேர்த்துக் கொள்கிறார்கள். என் நிலைமை அப்படித்தான் இருந்தது. என் நிலை மட்டும் அல்ல. பெரும்பாலும் நிலை அதுதான். அதனால்தான் படிப்பு என்பது ஒரு சுமையாகத் தோன்றுகிறது. பாக்கிய அம்மையார் படித்த புத்தகங்களின் கருத்துக்களை உணர்ந்தார்; தெளிவு பெற்றார். எங்கள் கல்விச் சுமை, உடம்பில் தோன்றும் தொந்தியும் வீண் தசைகளும் கட்டிகளும் போன்றது. பாக்கியத்தின் அறிவு வளர்ச்சி, உடம்பின் இயற்கையான வளர்ச்சி போன்றது. இயற்கையான வளர்ச்சியில் எவ்வளவு எடை மிகுந்தாலும் சுமையாகத் தோன்றுவதில்லை; உடம்புக்கு ஊக்கமாகவும் வலுவாகவுமே தோன்றும். ஆனால் செயற்கையான சிறு கட்டியும் உடம்புக்கு வேண்டாத துன்பமாகத்தான் தோன்றுகிறது. பாக்கியத்தின் அத்தகைய அறிவு வளர்ச்சி இவ்வளவு குறைந்த காலத்தில் ஏற்பட்டதை எண்ணி எண்ணி வியப்படைந்தேன். கணவரைப் பற்றிக் குறை கூறிய தங்கையின் உள்ளம் இரும்பாக இருந்தது. வேறு எந்தப் பெண்ணிடமாவது தங்கை அவ்வாறு கணவரின் குறையைச் சொல்லியிருந்தால், அந்த இரும்பு நெஞ்சம் துருபிடித்துக் கெடுமாறு செய்திருப்பார். என்னிடம் சொல்லியிருந்தாலும், கணவர்மேல் மேலும் வெறுப்பு வளருமாறுதான் செய்திருப்பேன். பாக்கியம் அந்த இரும்பைப் பொன்னாகுமாறு செய்துவிட்டாரே என வியந்தேன். அடுத்துத் தங்கை பேசிய பேச்சிலிருந்து அந்த இரசவாத வித்தை நடைபெற்றுவிட்டதை அறிந்தேன்.

“நீ சொல்வது சரி அக்கா. அவர் கெட்டவர் அல்ல. ஆனால் நாம் மற்றப் பெண்களோடு பழகாமல் இருக்க முடியுமா? திருமணங்களுக்குப் போகாமல் இருக்க முடியுமா?” என்றாள் தங்கை.

“பழகு, போ. ஆனால் நான் ஏழை என்ற தாழ்வு மனப்பான்மையோடு சிறுமை மனப்பான்மையோடு போகாதே. நான் எளிய வாழ்க்கை வாழவல்ல உயர்ந்த பெண் என்று பெருமிதமாக எண்ணிக் கொண்டு போ. கண்ணகி, மணிமேகலை, குயூரியம்மையார், கஸ்தூரிபா முதலான உத்தமப் பெண்களின் நெறியைப் உணர்ந்துவிட்டவள் என்ற உயர்வு மனப்பான்மையோடு போ. அப்படிப்போய்ப் பழகினால் ஒரு நாளும் நம் மனம் ஏக்கம் அடையாதே” என்றார் பாக்கியம்.

யாரோ ஒருவர் கொட்டாவி விட்டது கேட்டது. என் மனைவியாகத்தான் இருக்கும் என்று எண்ணினேன். அவளுடைய மூளை இந்த அறிவுரையின் சுமை தாங்காமல் சோர்ந்து போயிருக்கும் என எண்ணி எனக்குள் சிரித்துக் கொண்டேன்.

“என்ன, தூக்கம் வருகிறதா கண்ணி!” என்றார் பாக்கியம்.

“போய்த் தூங்கு அண்ணி” என்றாள் தங்கை.

“துக்கம் இல்லை. நீங்கள் பேசுவதைக் கேட்டால் எனக்குப் பயமாக இருக்கிறது! வாழ்க்கை இவ்வளவு தொல்லையாக இருக்கிறதே!” என்றாள் மனைவி.

பாக்கியம் சிரித்தபடியே பேச்சுத் தொடங்கினார்: “பயமாகவா இருக்கிறது? நீ இப்போது படிக்கிற நூல்களை விடாமல் படித்துக் கொண்டு வா! இன்னும் ஆறு மாதத்தில் பயம் இருக்கிறதா, என்று பார். மணிமேகலைக்கு இப்படிச் சொல்லி சொல்லிப் படிக்க வைத்ததனால்தான், இப்போது ஏதாவது சொன்னால் கேட்டுக் கொள்கிறாள்; சொல்வது விளங்குகிறது. நீயும் படி, உனக்கும் தெளிவு வரும்; பயமே இருக்காது” என்றார். சிறிது நேரம் அமைதி நிலவியது. பேச்சு முடிந்ததோ என்று எழ எண்ணினேன். மறுபடியும் அவரே பேசினார்: “பயமே இல்லாமல் இருக்கலாம். சுருக்கமான வழி சொல்லட்டுமா? இங்கிருந்து வேலூர்க்குப் போகணும். நீ தனியே போனால் எவ்வளவு பயம், கவலை! உன் அப்பாவுடன் போகிறாய் என்று வைத்துக் கொள். அப்போது பயம் உண்டா? கவலை உண்டா? அப்பா போகிற வழியில், அவர் பின்னே அடிவைத்து நடந்துகொண்டே இருக்கிறாய். வழியைப் பற்றியும் சிந்திப்பதில்லை. வழியில் கல்லும் முள்ளும் உண்டா என்றும் பார்ப்பதில்லை. திருடர்கள் வந்து அப்பாவை அடித்தால் என்ன செய்வது என்றும் எண்ணிப் பார்ப்பதில்லை. எல்லாம் அப்பாவின் பொறுப்பு. அவர் நடக்கிறார். அவர் பின்னே நீ நடக்கிறாய் அவ்வளவுதான். இல்வாழ்க்கையில் அப்படி நடக்கிற பெண்களுக்கு ஒரு கவலையும் இல்லை; போராட்டமும் இல்லை. கணவர் நல்லவராக, வாழ வல்லவராக வாய்த்துவிட்டால் போதும்! மனைவி மூளைக்கே வேலை கொடுக்காமல் கண்ணை மூடிக்கொண்டு அவரைப் பின்பற்றி நடக்கலாம். அப்போது பட்டு வேண்டுமா வேண்டாவா, வைரம் வேண்டுமா வேண்டாவா, திருவிழாவுக்குப் போவதா இல்லையா, சினிமாவுக்குப் போவதா இல்லையா என்று எந்தச் சிந்தனையும் இல்லாமல் வாழ்க்கை நடத்தலாம். அவர் அழைத்தால் போவது, இல்லையானால் அமைதியாய் வீட்டில் இருப்பது. ஆனால் இது எல்லோராலும் முடியாது. இப்படி வாழ்வதற்கு எவ்வளவோ பண்பாடு வேண்டும்! எவ்வளவோ தியாக மனப்பான்மை வேண்டும். தனக்கு என்று ஒரு சிறு ஆசையும் இல்லாமல் அற்றுப்போன மனநிலை யாருக்கு வரும்? கண்ணகியிடத்தில் பார்த்தோம்! கஸ்தூரிபாவிடத்தில் பார்த்தேன். வேறு யாரிடத்தில் பார்க்கிறோம்” என்றார்.

“படிக்காத பெண்கள், பயங்காளிப் பெண்கள் அப்படி அடங்கி நடக்கலாம். அண்ணியைப் போல் பத்தாவது படித்த பெண் அப்படி ஏன் அடங்கி நடக்கவேண்டும்?” என்றாள் மனைவி.

“பயந்து அடங்கி நடப்பது வேறே. அது தியாகம் அல்ல. அப்படிப் படிக்காத பெண்கள் பயந்து நடப்பதும் காணோமே! கணவன் இல்லாதபோது விருப்பம் போல் நடக்கிறார்கள்! அந்த வாழ்க்கையில் உண்மை இல்லையே! அது ஏமாற்றுகிற வாழ்க்கை, உள்ளத் தூய்மை இல்லாத வாழ்க்கை! போலி வாழ்க்கை! கணவனுக்குத் தெரியாமல் குழந்தைக்கு மந்திர தந்திரங்கள் செய்வது, காட்டேறி பூசை போடுவது, கணவனுக்கு தெரியாமல் சிறுவாணம் பிடித்து வட்டிக்குக் கொடுப்பது, இவைகள் போன்ற உண்மை இல்லாத வாழ்க்கை அது. அதனால் ஒரு பயனும் இருக்காது” என்றார் பாக்கியம். மறுபடியும் அவரே “மணிமேகலை! பெண்களில் மட்டும் அல்ல, அரசியல் தலைவர்களில் பலர் அப்படி இருக்கிறார்கள்; தாங்களாக ஒரு வழி தேடிக்கொள்ளாமல், தங்கள் தலைவர் ஒருவர் காட்டிய வழியில் கண்ணை மூடி நடப்பார்கள். அதனால் அவர்களுக்குக் கவலை குறைகிறது; ஒரு குறையும் இல்லாமல் தொண்டு செய்யவும் முடிகிறது” என்றார்.

“ஆமாம்” என்றாள் தங்கை, தொடர்ந்து “சினிமாவுக்கு அடிக்கடி போய்க் காசு செலவழிக்க நமக்கு வசதி இல்லை என்கிறார். சரி என்று நானும் அதைக் குறைத்துக் கொண்டேன். குடும்பக் கடமைகள் பல இருக்கும்போது, சடங்குகளிலும் பூசையிலும் மணிக்கணக்காச் செலவழிக்காதே என்கிறார். ஓய்விருக்கும்போது பக்திப் பாட்டுக்களைப் படித்தால் போதும் என்கிறார். வெள்ளிக்கிழமைப் பூசையையும் குறைத்துக் கொண்டேன்” என்றாள்.

“வீடு வாயில் முதலியவற்றைத் தூய்மையாக்குவதற்கு வெள்ளிக்கிழமை ஒரு நல்ல நாள்” என்றார் பாக்கியம்.

“அதை எல்லாம் அவர் தடுக்கவில்லை. தூய்மையை அவர் மிக விரும்புவார்” என்றாள் தங்கை. அப்போது தங்கையின் பேச்சுப் போக்கைக் கேட்டால் கணவர் மேல் ஒரு குற்றமும் காணாதவள் பேசுவதுபோல் இருந்தது.

பாக்கியம் தவிர வேறு பெண்களிடம் என் தங்கை அகப்பட்டிருந்தால், மேலும் மேலும் தூபம் இட்டு வெறுப்பையே வளர்த்து அவளுடைய மனத்தைக் கெடுத்து வாழ்க்கையைப் பாழ்படுத்தியிருப்பார்களே என்று எண்ணினேன். தங்கைக்கும் மனைவிக்கும் பாக்கியத்தின் பழக்கம் வாய்த்தது எவ்வளவு நன்மை என்று எண்ணி மகிழ்ந்தேன்.

தங்கையும் கயற்கண்ணியும் சந்திரனுடைய தங்கை கற்பகமும் ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன் சிறுமியராக இருந்தபோது, ஒன்றாகக் கூடி ஆடிக் குலாவியது நினைவுக்கு வந்தது. பாக்கியத்தின் அறிவின் பயனை இவர்கள் இருவரும் பெறும்போது, கற்பகமும் பெறுவதற்கில்லையே என்று வருந்தினேன்.

மறுநாள் காலையில் பல் துலக்கியதும், தோட்டத்தின் பக்கம் சென்றேன். அங்கே பாக்கியம் அமைதியாக படித்துக் கொண்டிருந்ததையும் ஒரு குறிப்பில் எழுதிக் கொண்டிருந்ததையும் கண்டு பேசாமல் திரும்பினேன். பாத்திரம் துலக்குதல் முதலிய எல்லாக் கடமைகளையும் முடித்து அவ்வளவு காலையில் படிக்க ஓய்வு கிடைத்து விட்டதே என்று எண்ணினேன். கூடத்தில் புத்தக அலமாரியைத் திறந்து பார்த்தேன். முதலில் கிடைத்தது தாயுமானவர் பாடல். அதில் அங்கங்கே ஓரத்தில் கோடிட்டிருந்ததைக் கண்டேன். திருக்குறளிலும் அவ்வாறே கண்டேன். அப்போது தங்கை வந்து, “என்ன அண்ணா பார்க்கிறீர்கள்?” என்றாள்.

“இந்தப் புத்தகங்களில் ஏன் இப்படிக் கோடு போட்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டேன்.

“நான் போட்ட கோடுகள் அல்ல, அக்கா போட்டார்கள். கோடு போட்ட பகுதிகளைத் திரும்பத் திரும்பப் படித்து மனப்பாடம் செய்ய வேண்டும் என்று சொல்லி அப்படிச் செய்திருக்கிறார்கள்” என்றாள்.

தங்கை போய்விட்ட பிறகு அங்கே இருந்த வேறு நூல்களையும் புரட்டிப் பார்த்தேன். அருட்பாவும் கைவல்லியமும் பார்த்தேன். இராமதீர்த்தரின் அறவுரைகள் என்று ஒரு நூல் பார்த்தேன். இப்படி ஒரு நூல் பார்த்ததே இல்லையே. கேள்விப்பட்டதும் இல்லையே என்று சில வரிகள் படித்தேன். உயர்ந்த கருத்துகள் இருந்தன. சிலப்பதிகாரக்கதை, மணிமேகலை வசனம் என்ற இரு நூல்கள் பார்த்தேன். அவற்றிலும் சில பகுதிகள் கோடிட்டிருந்தன. செய்யுள் வடிவமான மூலத்தைப் படிப்பதற்கு வேண்டிய இலக்கியப் பயிற்சி இல்லாத காரணத்தால், பாக்கியம் இந்த உரைநடைக் கதைகளை மட்டும் படிக்க முடிகிறது.

இலக்கியப் பயிற்சி இருந்திருந்தால், இன்னும் சிறப்பாக இருக்குமே என்று எண்ணினேன். இன்னும் பல உரைநடை நூல்களும் இருக்கக் கண்டேன்.

அன்று இரவு உணவுக்குப் பிறகு நான் திண்ணைமேல் சாய்ந்து படுத்துக் கொண்டிருந்தேன். மறுபடியும் எப்படியோ பட்டுப்புடவை பற்றிய பேச்சு நடப்பது கேட்டது. மெல்ல எழுந்து சன்னல் பக்கம் உட்கார்ந்து கேட்டேன். எனக்கு முதலில் கேட்டது மனைவியின் குரல்தான்.

“எல்லாரும் பட்டு உடுத்திக் கொள்ளாமல் விட்டுவிட்டால், பட்டு நெசவாளர்கள் என்ன ஆவார்கள்? பட்டு வியாபாரிகள் என்ன ஆவார்கள்?” என்றாள் மனைவி.

அம்மா சிரிக்க, மற்றவர்களும் சேர்ந்து சிரித்தார்கள்.

“நாம் வீடுகளுக்கு வலுவான கதவும் சன்னலும் வைத்து, உறுதியான தாழ்ப்பாளும் போட்டு இரவில் படுத்துக் கொள்கிறோம். வாசலுள் யாரும் இறங்கி வராதபடி வாசலிலும் கம்பிகள் போட்டுவிடுகிறோம். எல்லோரும் இப்படிச் செய்தால் திருடர்கள் எப்படிப் பிழைப்பார்கள்? அவர்களுடைய மனைவி மக்கள் என்ன ஆவார்கள்?” என்றார் பாக்கியம்.

இப்போது என் மனைவியும் சேர்ந்து ஒரே ஆரவாரமாகச் சிரித்தது கேட்டது.

“பட்டுத் தொழிலும் வீட்டில் திருடுவதும் ஒன்றுதானா?” என்று சிரித்தபடியே மனைவி கேட்டாள். “வேறுபாடு உண்டு. திருடுகிறவன் பசிக்காகத் திருடுகிறான். ஆடம்பரத்துக்காகத் திருடவில்லை. ஆனாலும் அது குற்றமே. உணவுக்காக ஆடு மாடுகளை வெட்டுகிறார்கள். அதுவும் குற்றமே. ஆனாலும் ஆடம்பரத்துக்காக கொலை செய்யவில்லை. பட்டுத் தொழில் இந்த இரண்டையும் விடக் கொடுமையானது. பட்டுப் பூச்சிகளைத் தீனியிட்டு வளர்க்கிறார்கள். நூலுக்குள் சுற்றிக்கொண்டு கிடக்கும் நிலை வந்ததும் கொதிக்கும் நீரில் அந்தப் பட்டுப் பூச்சிகளை அப்படியே உயிரோடு போட்டுச் சாகடிக்கிறார்கள். பிறகு வெளியே எடுத்து, நுலைச் சேர்த்துக் கொண்டு செத்த உடம்புகளை எரிக்கிறார்கள். ஆடம்பரத்துக்காகச் செய்யும் கொலை இது. ஒருவன் பசிக்கு ஒரு சின்ன கோழி அல்லது அரைக்கால் ஆடு போதும். ஆனால் ஒரு பட்டுச் சேலைக்கு ஆயிரக்கணக்கான பட்டுப் பூச்சிகளைக் கொதிக்கும் வெந்நீரில் இட்டு வதைத்துக் கொல்ல வேண்டும். நான் கண்ணாரப் பார்த்தேன். அந்தக் கொடுமையை!” என்றார் பாக்கியம்.

உடனே அம்மா, “மெய்தான். ஆனால் பட்டுச் சேலைக்குப் போடும் காசு பழுது அல்ல. நன்றாக உழைக்கிறது. அழகாகவும் இருக்கிறது” என்றார்.

“என்ன இருந்தாலும், ஆடம்பரத்துக்காக, அழகுக்காகச் செய்யும் கொலை அது! மூட்டைப் பூச்சிகளை, கொசுக்களை, எலிகளைக் கொல்கிறோம். அவைகள் நம் வாழ்வுக்கு இடையூறு செய்கின்றன. அதனால் கொல்கிறோம். புலி சிங்கங்களையும் அப்படியே வேட்டையாடிக் கொல்கிறோம். ஆனால், ஆடம்பரத்துக்காக அழகுக்காகக் கொலை செய்யலாமா? அது அறமா?” என்றார் பாக்கியம்.

அவ்வளவு தெளிவாக அவர் சொன்னதைக் கேட்டதும் இனிப் பட்டாடையே உடுப்பதில்லை என்ற உறுதி என் நெஞ்சில் ஏற்பட்டது. அந்த உறுதி இன்று வரையில் தளராமல் இருக்கிறது. அப்படி இருப்பதால், அன்று இரவு, பாக்கியம் பேசிய பேச்சும் இன்னும் என் செவியில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

“என் வீட்டுக்காரர் இதற்குமேலே ஒரு படிபோய் விட்டார்” என்றாள் தங்கை.

“எப்படி” என்றாள் மனைவி.

“தோட்டத்தில் ரோசாச் செடி பூத்திருக்கும். நான் போய்ப் பறிக்கும்போது அவர் பார்த்துவிட்டால், ‘அய்யோ பாவம்’ என்பார். ஒருநாள் வெள்ளிக்கிழமை பூசைக்காக அரளிப் பூக்களைப் பறித்து ஒரு தட்டில் கொண்டுவந்தேன். அவைகளைத் தட்டோடு வாங்கிக் கண்ணில் ஒற்றிக்கொண்டு இரக்கத்தோடு பார்த்து, ‘மனிதர் கையில் அகப்பட்டுக் கொண்டீர்களா?’ என்றார்.”

இதைக் கேட்டதும் பாக்கியம், “நல்ல மனம்தான். தாயுமானவரும் ஒரு பாட்டில் இப்படி உணர்ந்து பாடி இருக்கிறார். நவசக்தி இதழில் பார்த்தேன். காந்தியடிகளின் ஆசிரமத்தில், யாரும் அங்குள்ள பூக்களைப் பறிக்கக்கூடாது என்று ஒரு விதி உண்டாம். ஜெர்மனி நாட்டு ஸ்வெயிட்சர் என்ற மருத்துவர் – பெரிய விஞ்ஞானி ஒருவர் – புல்மேல் கால்வைத்து நடக்கமாட்டாராம்” என்றார்.

“இவைகள் எல்லாம் நடக்க முடியாத விதிகள்” என்றாள் தங்கை.

“நடக்க முடிந்தவை என்று சிலவற்றை ஏற்படுத்திக் கொண்டு, அவைகளையாவது கடைப்பிடிப்போம். அதுவும் செய்யாமல், பழையபடியே இருந்தால் பயன் என்ன?” என்றார் பாக்கியம்.

“அப்படியானால் உனக்குப் பூவும் வாங்கிக் கொடுக்க மாட்டார் உன் வீட்டுக்காரர்” என்றாள் மனைவி.

“அவர் கையால் வாங்கிக் கொடுப்பதில்லை. ஆனால் நானாகப் பூ வாங்கிக் கொண்டால் தடுப்பதில்லை.”

பாக்கியம் குறுக்கிட்டு, “பார்த்தாயா? அவருடைய கொள்கையாக இருந்தும், இந்தப் பூ வகையில் உன் விருப்பம் போல் நடப்பதற்கு விட்டுக்கொடுத்திருக்கிறார். இந்த அன்பை நீ உணரவில்லையே” என்றார்.

“உணராமலா நல்லபடி வாழ்ந்துவிட்டு வந்திருக்கிறேன்? என்ன அக்கா, அப்படிச் சொல்லிவிட்டாயே!” என்றாள் தங்கை.

“தாய் தந்தைக்கு அடுத்தபடி கணவர்தான் அன்பு மிகுந்தவர். தன்னலம் இல்லாத ஆளாக இருந்தால் அந்த அன்பு நாளடைவில் வளர்ந்து பெருகும். முதலில் பொறுமையோடு அவர் வழியில் நடந்தால், காலம் செல்லச் செல்ல முழுதும் உன் வழியில் வந்துவிடுவார். உலகத்தில் பார்! பெண்கள் இட்ட கோட்டைக் கடக்காமல் எத்தனை ஆண்கள் வாழ்கிறார்கள்? பயந்து வாழ்கிறவர்களைக் கணக்கில் சேர்க்க வேண்டா, அன்பால் முழுதும் விட்டுக்கொடுத்து வாழ்கிற கணவன்மார் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள்” என்றார் பாக்கியம்.

“இரண்டு பேரும் விட்டுக்கொடுத்துப் போக வேண்டியதுதான். ஒரு மாடு மட்டும் இழுத்து இன்னொரு மாடு சும்மா இருந்தால் வண்டி போகுமா?” என்றார் அம்மா.

“சரிதான் அக்கா! கண்ணகிபோல் பயந்து அடங்கிப் பதில் பேசாமல் வாழ்க்கை நடத்தவேண்டும் என்று சொல்கிறாய்” என்றாள் தங்கை.

“அதுதான் நல்லது” என்றார் அம்மா.

பாக்கியம் மறுத்தார். “இதுதானா நீ படித்தது? அந்தச் சிலப்பதிகாரக் கதையைப் படித்ததும் உண்மையைத் தெரிந்து கொள்ளவில்லையே. கண்ணகியா பயந்த பெண்? அவளைப் போல் அஞ்சாமையும் வீரமும் யாருக்கு உண்டு? காந்தி பட்டினி கிடப்பதைப் பார்த்து அவரைக் கோழை என்று ஒரு வெள்ளைக்காரன் சொன்னால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது உன் பேச்சு! துன்பம் பொறுப்பவர்கள் கோழைகள் அல்ல. கொள்கையோடு அமைதியாய் இருப்பவர்கள் கோழைகள் அல்ல. கண்ணகி பயந்த பெண் அல்ல என்பதற்கு அந்தக் கதையிலேயே பல இடங்கள் வருகின்றனவே. தோழி ஒருத்தி சந்திர சூரிய வழிபாட்டுக்கு அழைக்கிறாள். கணவனுடைய மனத்தை மாற்றுவதற்கு அது உதவும் என்கிறாள். கண்ணகி அது தகாத வழி என்று உடனே மறுத்துவிடுகிறாள். செப்பனிட்ட பாதைபோல் இருந்தது கண்ணகியின் வாழ்க்கை. அதில் தடுமாற்றமே இல்லை. மதுரையில் அயலார் வீட்டில் இருக்கும்போது கணவன் செய்த தவறு இப்படிப்பட்டது என்று எடுத்துக் காட்டுகிறாள். கணவன் கொலையுண்ட பிறகு, அரசனை எதிர்த்து எவ்வளவு பேசுகிறாள்!” என்றார்.

“கோவலன்” என்று எதையோ கேட்கத் தொடங்கிப் பேசாமல் நிறுத்தினாள் மனைவி.

“கோவலன் செய்தது தவறுதான். என் மனத்துக்கே அது வருத்தமாக இருக்கிறது. பல ஆண்கள் மனைவியைப் பிரிந்து வாழ்ந்தது பெருங்குற்றம்” என்றார்.

“ஆண்கள் மட்டும் அப்படித் தவறு செய்யலாமா?” என்றாள் மனைவி.

“செய்யகூடாதுதான். ஆனால்” என்று நிறுத்தினார்.

“ஏதோ சமாதானம் செய்து மழுப்பப் பார்க்கிறீர்கள்! நீங்கள் எப்போதும் ஆண்களின் கட்சியே” என்றாள் தங்கை.

“உண்மையான கட்சி நான் சொல்கிறேன். ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் ஒழுக்கம் தவறாதவர்களுக்குத்தான் முதல் மதிப்பு உண்டு. ஆனால் ஒன்று எண்ணிப்பார்க்க வேண்டும். சிலர் மணலில் நடக்கிறார்கள். சிலர் சேற்றில் நடக்கிறார்கள் என்று வைத்து கொள்வோம். யார் வழுக்கி விழுந்தால் பெருந்தவறு?” என்றார்.

“சேறு வழுக்கும். விழுந்தால் தப்பு இல்லை, மணலில் நடப்பவன் விழுந்தால் அது தான் பெரிய குற்றம்” என்றார் அம்மா.

“அதுபோல்தான் ஆண்பெண் வாழ்க்கை. ஆணின் வாழ்க்கை வெளியே பலரோடு பழகித் திரியும் வாழ்க்கை. பலரோடு பழகுவதால் மனம் கெடுவதற்கு வாய்ப்பு உண்டு. ஒழுக்கம் கெடுவதற்கும் வழி உண்டு. சேற்றில் நடந்து வழுக்குவது போன்றது அது. பெண்ணின் வாழ்க்கை குடும்பத்தளவில் பெரும்பாலும் இருந்து, கணவனோடும் மக்களோடும் பழகி அமையும் வாழ்க்கை. மனம் கெடுவதற்கும் வாய்ப்பு இல்லை; ஒழுக்கம் தவறுவதற்கும் வழி இல்லை. மணலில் நடப்பது போன்றது இது. ஆகையால் தவறி விழவே கூடாது. விழுந்தால் நொண்டியாக இருக்க வேண்டும் அல்லது நோயாளியாக இருக்க வேண்டும்.”

இவ்வாறு பேசிய பேச்சு முடிவதற்குள் தங்கை குறுக்கிட்டு, “இந்தக் காலத்தில் பெண்களும் வீட்டைவிட்டு வெளியே போய்ப் பலரோடு பழகவேண்டியிருக்கிறதே” என்றாள்.

“படித்துவிட்டு வேலைக்குப்போகும் பெண்களைச் சொல்கிறாய். அவர்கள் மணலில் நடப்பவர்கள் அல்ல, சேற்றில் நடப்பவர்கள். ஆகவே வழுக்கி விழுந்தால் மன்னிக்க வேண்டும். ஒரு முறை அனுபவப்பட்டு அறிவு பெற்ற பிறகாவது திருந்த வேண்டும். வெளியே பழகும் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும், ஊன்றுகோல் இல்லாமல் நடக்கக்கூடாது. புலனடக்கம் கட்டாயம் வேண்டும். திருமணம் ஆகாத பெண்களுக்கும், என்னைப் போல் கைம்பெண்களுக்கும் ஊன்றுகோல் இருந்தாலும் போதாது. எங்கள் வாழ்க்கை மலைச்சரிவில் பெருங்காற்றில் நடப்பது போன்றது. நாங்கள் நிமிர்ந்து கைவீசி நடக்க ஆசைப்படவே கூடாது. மண்ணோடு மண்ணாய் ஒட்டிப் பற்றிக் கொண்டு நடக்க வேண்டும். இல்லையானால் பெருங்காற்றில் கால் தவறினால் புரண்டு விழுந்து அழிய வேண்டியதுதான்” என்றார் பாக்கியம்.

சிலப்பதிகாரத்தில் கொலைக்களக் காதையும் வழக்குரை காதையும் எனக்குப் பாடமாக இருந்த பகுதிகள். அவற்றிற்காகச் சிலப்பதிகாரக் கதையை நன்றாகப் படித்தேன். ஆசிரியரும் நன்றாகச் சொல்லிக் கொடுத்தார். ஆயினும் பாக்கியம் தந்த விளக்கமும் அமைதியும் எனக்குப் புதுமையாக இருந்தன. மூல நூல் படிக்கக்கூடிய பயிற்சியும் அவருக்கு இல்லை; ஆசிரியரின் துணையும் இல்லை. வெறுங்கதையைப் படித்தே இவ்வளவு தெளிவு பெற முடிந்ததே என்று எண்ணி எண்ணி வியந்தேன்.

சன்னலருகே இருந்தபடியே பேசினேன். “சிலப்பதிகாரத்தை நீயே படித்ததுதானே? இவ்வளவு தெளிவாகத் தெரிந்து கொண்டிருக்கிறாயே அக்கா?” என்றேன்.

“இல்லை, தம்பி! போன வேனில் விழாவில் இங்கே இரண்டு நாள் சொற்பொழிவுகள் நடந்தன. அப்போது ஒருவர் கண்ணகியைப் பற்றி நன்றாகப் பேசினார். தலைவரும் பேசினார். அப்போது கேட்டதால் தெளிவு ஏற்பட்டது” என்றார் பாக்கியம்.

அது மட்டும் காரணமாக இருக்க முடியாது. இயற்கையான அறிவு வளர்ச்சிக்கு உரிய ஆர்வமும் உழைப்பும் முக்கியமான காரணங்கள் என்று உணர்ந்தேன்.

மறுநாள் கோவைக்குப் புறப்பட்டுச் சென்றபோது, ரயில் வண்டியில் அவருடைய அறிவின் சிறப்பை அடிக்கடி எண்ணி வியந்தேன். அந்த வளர்ச்சி, ஓவியன் கைப்பட்டதும் வெறுந்துணி வண்ண ஓவியமாக மாறுவதுபோல் இருந்தது. வெறுங்கல் சிற்பியின் கைத்திறனால் அழகிய சிலையாக மாறுவதுபோல் இருந்தது. இன்னும் உணர்ந்து வியந்து கொண்டிருந்தபோது, மேற்குவானத்தில் கருமுகில்களும் செவ்வொளியும் கூடிப் பலவகைக் காட்சிகள் அமைத்தலைக் கண்டேன். சிறிது நேரத்திற்கு முன் பார்க்கக் கண்கூசும் அளவிற்குக் கதிரவன் காய்ந்து கொண்டிருந்த அந்த வானத்தில் – சிறு சிறு வெண்முகில்கள் தவிர வேறொன்றும் இல்லாதிருந்த அந்த வானத்தில் – இயற்கை இழைத்த அந்தக் காட்சிகள் வியக்கத் தக்கவாறு அமைந்திருந்தன. பாக்கியத்தின் வாழ்க்கையில் விளைந்த இடர்களும் உள்ளத்தின் உயர்ந்த பண்பாடும் கூடி, அவருடைய அறிவை வளர்த்து உயர்த்திவிட்ட விந்தையும் இத்தகையதே என்று உணர்ந்தேன்.

அத்தியாயம் – 23

கோவைக்குச் சென்றதும் மாலனுடைய கடிதம் பார்த்தேன். வேலை எங்கும் கிடைக்கவில்லை என்பதைக் குறித்து வருந்தி எழுதியிருந்தான். நான் இருக்கும் கூட்டுறவுத் துறையிலேயே தனக்கும் வேலை தேடித் தருமாறு கோரி இருந்தான். ஒரு வேளை சோதிடர் சொன்னதைக்கேட்டே இந்த முடிவுக்கு வந்தானோ என எண்ணினேன். இயன்ற முயற்சி செய்து கேட்டும் பார்த்தேன். பி.ஏ. ஆனர்ஸ், எம்.ஏ. படித்தவர்கள் போட்டியிட்டுக்கொண்டு வருவதால் பி.ஏ.வில் ஒருமுறை தவறியவர்களுக்கோ, மூன்றாம் வகுப்பில் தேறியவர்களுக்கோ இடமே இருக்காது என்று சொல்லிவிட்டார்கள். அதை அவனுக்கு வருத்தத்தோடு தெரிவித்தேன். பிறகு அவன் எழுதிய கடிதத்தில் வேறு ஏதாவது ஒரு வேலை தேடித்தருமாறு கேட்டிருந்தான். வேறு சில துறைகளில் முயன்றேன். விண்ணப்பமும் அனுப்புமாறு செய்தேன். வேலை ஒன்றும் கிடைக்கவில்லை.

கோவையிலிருந்து என்னை ஈரோட்டுக்கு மாற்றினார்கள். உடனே ஈரோட்டுக்குச் சென்று வேலை ஏற்றேன். அந்த வட்டத்திற்குத் தனி அதிகாரியாக முழுப் பொறுப்பும் என்னிடம் இருந்தபடியால் வேலையைத் திறம்படச் செய்வதில் கண்ணும் கருத்துமாக இருந்தேன். கூட்டுறவு இயக்கத்தில் மிக்க ஆர்வத்தோடு ஈடுபட்ட அவ்வூர் நகர மன்றத் தலைவர் பொதுநல ஆர்வம் மிக்கவர்; உள்ளொன்று புறமொன்று இல்லாத பளிங்குமனம் படைத்தவர்; மேலுக்குப் படபடப்பு உடையவராக இருந்தபோதிலும் உள்ளத்தில் அன்பு நிறைந்தவராக இருந்தபடியால், அவரிடத்தில் எனக்கு நம்பிக்கை மிகுதியாயிற்று. தன்னலம் இல்லாமல் பொதுத்தொண்டு செய்வதையே அவர் பொழுதுபோக்காகக் கொண்டிருந்தபடியால், மக்களிடத்தில் அவருக்குச் செல்வாக்கும் மிகுதியாக இருந்தது. அப்படிப்பட்டவருடைய ஆதரவு எனக்கு விரைவில் கிடைத்தபடியால், என்னுடைய கடமைகளைச் செய்வதில் எனக்குத் தனி மகிழ்ச்சியும் இருந்தது. சில வாரங்களில் அவர் எனக்கு நண்பராகவே ஆகிவிட்டார். நான் குடும்பத்தோடு வந்திருப்பதற்கு நல்ல வீடும் பார்த்து ஏற்பாடு செய்தார். ஊருக்குச் சென்று மனைவியை அழைத்து வந்து குடும்பம் நடத்தத் தொடங்கினேன்.

கயற்கண்ணியோடு தனியே வாழ்ந்த வாழ்க்கை இன்பமாகவே இருந்தது. பல கடமைகளைச் செய்து முடித்து அலுத்தபின் வீட்டுக்கு வருவது ஆறுதலாக இருந்தது. அவளுடைய இளைமையழகும் இனிமைக் கவர்ச்சியும் எனக்குக் கள்வெறி ஊட்டி என்னுடைய களைப்பை மறக்கச் செய்தன. தனியே நான் மட்டும் வீட்டில் இருந்தபோது அவள் கரவற்ற உள்ளத்தோடு சிறு பெண்போல் என்னென்னவோ பேசுவாள். என் வயதையும் பொறுப்பான தொழிலையும் மறந்து நானும் சிறு பையன் போல் அவற்றைக் கேட்டுக் கொண்டிருப்பேன். உண்மையாகவே, அவள் பேசச் சலிக்கவில்லை; நான் கேட்கச் சலிக்கவில்லை. அவள் பேசிய பழைய பேச்சையே பேசினாலும் அதைக் கேட்பது எனக்கு இன்பமாகவே இருந்தது. தன் தாய் வீட்டின் அக்கம் பக்கத்தில் உள்ள குடும்பங்களைப் பற்றிப் பேசுவாள். அந்த ஊரில் சில பெண்கள் கணவன்மாரோடு சண்டை போடும் வகைகளைப் பற்றிப் பேசுவாள். என்னுடைய தங்கையும் அவளுடைய கணவரும் பேசும் முறைகளையும் பழகும் முறைகளையும் பற்றிச் சொல்வாள். வாலாசாவில் கண்ட பலவகைப் பெண்களைப் பற்றியும் மதிப்புரை வழங்குவாள். பாக்கியத்தைப் பற்றி அடிக்கடி சொல்வாள். அவரைப் பற்றிப் பேசும் போதெல்லாம் தனி மதிப்புத் தந்து அன்போடு பேசுவாள். சில சமயங்களில் அவருடைய திக்கற்ற வாழ்வை நினைத்து இரக்கத்தோடு பேசுவாள். அவர் தனக்குச் சொல்லிக் கொடுத்த சமையல் பாகங்களைப் பற்றி எனக்குச் சொல்வாள்; நான் ஒன்றும் விளங்காமலே கேட்டுக் கொண்டிருப்பேன். மிளகுவடை, கோதுமை அல்வா, தேன் குழல் இவற்றைப் பாக்கியம் கைப்படச் செய்தால் தனிச் சுவையாக இருக்கும் என்பாள். “உனக்கு என்ன தெரியும்? நீ நேற்று வந்தவள். நான் குழந்தையாக இருந்தது முதல் அவர் கைப்படச் செய்து கொடுத்த தின்பண்டங்களைச் சாப்பிட்டுப் பழகியிருக்கிறேன்” என்று நானும் என்னுடைய இளமை அனுபவங்களை மெல்லச் சொல்வேன். வேலையைச் சுறுசுறுப்பாகச் செய்து முடிப்பதில் பாக்கியத்துக்கு யாரும் இணை இல்லை என்று என் மனைவி சொன்னபோது கேட்ட என் உள்ளம் குழைந்தது. அறிவுத்திறன் உடையவர்கள் எந்தச் சிறு வேலையில் ஈடுபட்டாலும் தனிப்பெயர் பெற முடிகிறது என உணர்ந்தேன். பாக்கியம் தோட்டத்தில் நடத்தும் பள்ளிக் கூடத்தைப் பற்றி மனைவி பல குறிப்புகள் சொன்னாள். எந்தப் பையனையும் பெண்ணையும் அடிக்காமலே அன்பாகச் சொல்லித்திருத்தியது பற்றிப் பல நிகழ்ச்சிகளைச் சொன்னாள். பக்கத்துத் தெருவில் ஒரு பையன் பெற்றோர் என்ன சொன்னாலும் கேட்காமல் பள்ளிக்கூடத்துக்கும் போகாமல் அடம் பிடித்தானாம். அவனை முதலில் பாக்கியம் சேர்த்துக் கொள்ளவில்லையாம். “பிள்ளைகள் மிகுதியாக இருக்கிறார்கள். இடம் இல்லை. என்னாலும் கவனிக்க முடியவில்லை” என்று பாக்கியம் சொல்லி மறுத்து விட்டாராம்.

கடைசியில் பெற்றோர் என்னுடைய தாயிடம் வந்து முறையிட்டார்களாம். தாய் சிபாரிசு சொல்லவே சரி என்று பாக்கியம் சேர்த்துக் கொண்டாராம். அந்தப் பையனைத் தோட்டப் பள்ளிக்கூடத்தில் உட்கார வைத்து, படி என்று சொல்லவே இல்லையாம். அவன் பக்கத்தில் உட்கார்ந்து, கதைகளே சொல்லிக் கொண்டிருந்தாராம். இப்படி இரண்டு வாரம் கதை சொல்லிச் சொல்லி அவனுடைய மூளைக்கு உணவு கொடுத்த பிறகு ஒரு நாள் அவனே பெற்றோரைக் கேட்டு ஒரு புத்தகம் வாங்கிக் கொண்டு வந்தானாம். அதையும் பார்த்துவிட்டுப் பாக்கியம் பேசாமலே இருந்தாராம். அவனே அவரிடம் புத்தகத்தைக் காட்டிக் கற்றுக் கொடுக்கும்படி சொல்லும் நிலை வந்ததாம். இப்போது அந்தப் பையன் மற்றவர்களைவிடப் படிப்பில் ஆர்வம் மிகுந்தவனாக இருக்கிறானாம்.

சின்ன பெண் ஒருத்தி திருடுவதில் பொல்லாதவளாக இருந்தாளாம். பக்கத்துப் பெண்களிடமிருந்து நாள்தோறும் ஏதாவது ஒன்று திருடிக் கொண்டு போவாளாம். வீட்டிலும் சுற்றுப்புறங்களிலும் இப்படியே எதையாவது திருடிக் கொண்டு போவதும் அடிபடுவதுமாக இருந்தாளாம். என்ன சொல்லியும் திருத்தமுடியவில்லையாம். நம் வீட்டுத் தோட்டத்திலும் பூவோ வேறு எதுவோ திருடாமல் போவதில்லையாம். பாக்கியம் அவளிடமிருந்து ஒவ்வொரு பொருளாக எடுத்து மறைத்து வைத்துக் கொள்ளத் தொடங்கினாராம். அவள் தேடித் தேடி அழும்போது, “நீ யாரிடமிருந்தாவது எதையாவது திருடியிருப்பாய், அதனால் உன்னிடமிருந்து பொருள் போகும்படியாகச் சாமி செய்கிறார்” என்று அடிக்கடி சொன்னாராம். கடைசியில் அந்தப் பெண் எப்படியோ உணர்ந்து தானாகவே திருடுவதை விட்டுவிட்டாளாம்.

இதை கேட்டவுடன் நான், “பாக்கியமே சாமி ஆகிவிட்டாரா? சரிதான்” என்றேன்.

“சின்ன பெண்ணைத் திருத்துவதற்கு வேறு என்ன செய்வது?” என்றாள் மனைவி.

“நீ அந்தப் பிள்ளைகளுக்கு ஏதாவது சொல்லிக் கொடுத்திருக்கிறாயா?” என்று மனைவியைக் கேட்டேன்.

“பாக்கியம் ஏதாவது வேலையாகப் போனால், நான் போய்ப் பார்த்துக் கொள்வேன். அய்யோ! அந்தச் சிறுவர்கள் பொல்லாத அமர்க்களம் செய்வார்கள். இது அது என்று என்னென்னவோ கதை கேட்பார்கள். கதையில் ஏதாவது மறந்து விட்டுவிட்டால், தவறாகச் சொல்லிவிட்டால், பூனைக்குப் பதிலாகக் குரங்கு என்று வாய் தவறிச் சொல்லி விட்டாலும், எல்லாச் சிறுவர்களும் சேர்ந்து கொல்லென்று சிரிப்பார்கள். அய்யோ! அவர்களை மேய்ப்பது துன்பமான வேலை! அந்த அம்மாவுக்குச் சலிப்பே இல்லை” என்றாள்.

“என்ன வரும்படி கிடைக்கும்” என்று கேட்டேன்.

“சில பெற்றோர்கள் பணம் கொடுக்கிறார்கள். சிலர் கொடுப்பதாகத் தெரியவில்லை. ஏழை வீட்டுப் பிள்ளைகளுக்காக அந்த அம்மாவும் பணம் கேட்டு வாங்குவதில்லை. எப்போதாவது கிடைத்ததை, அரிசி காய் முதலியவற்றைக் கொடுத்தனுப்புவார்கள். அவற்றை எல்லாம் நம் வீட்டுக்குத்தான் கொடுத்துவிடுவார். கையில் ஒன்றும் சேர்த்து வைப்பதில்லை. அவ்வப்போது கிடைப்பதை அம்மாவிடத்தில் கொடுத்துவிடுகிறார். அப்படி நூற்றைம்பது ரூபாய் சேர்ந்தது. அதில் இரண்டு மோதிரம் செய்து, உங்கள் தங்கைக்கு ஒன்றும் எனக்கு ஒன்றுமாகக் கொடுத்தார். இதைப் பார்த்து உங்கள் தம்பி தனக்கு ஒன்று வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்” என்று தன் கைவிரலில் அணிந்திருந்த பச்சைக்கல் மோதிரத்தைக் காட்டினாள்.

அதைக் கண்டேன். என் நெஞ்சம் உருகியது. திக்கற்றவர் உழைத்து வயிறு வளர்த்து அதில் மீதியானதைக் கொண்டு இப்படி நகையும் சேர்த்துத் தருகிறாரே என்று அவருடைய உள்ளன்பை நினைத்தேன். கலங்கிய என் கண்களைக் கயற்கண்ணி பார்த்தாள்.

“நீங்கள் வருத்தப்படுவீர்கள் என்று தெரியும். வேண்டா என்று எவ்வளவோ மறுத்துப் பார்த்தேன். அந்த அம்மா கேட்கவில்லை. ‘மறுக்கவேண்டா. மறுத்தால் பாக்கியத்துக்கு வருத்தமாக இருக்கும்; வாங்கிக்கொள்’ என்று மாமி சொன்னபிறகுதான் போட்டுக் கொண்டேன்” என்று அவள் தயங்கித் தயங்கிப் பேசினாள்.

“வாங்கிக் கொண்டது தவறு அல்ல. அந்த அம்மா யார்? நாம் யார்? அவருடைய உள்ளத்தின் அன்பை நினைத்துத்தான் உருகுகிறேன்” என்று கண்களைத் துடைத்தேன்.

“அது மட்டும் அல்ல. ஆளுக்கு ஒரு சோளி தைத்துக் கொடுத்தார்கள். ஆளுக்கு ஒரு திருக்குறளும் பெண்ணின் பெருமையும் புதுப் புத்தகங்களாக வாங்கிக் கொடுத்தார்கள்.”

“நீ படித்து வருகிறாயா? நான் ஒரு நாளும் பார்த்ததில்லையே”.

“நீங்கள் வெளியூர்க்குப் போகும்போது படிக்கிறேன். நீங்கள் வீட்டில் இருக்கும்போது நான் ஏன் படிக்கவேண்டும்?”

சிரித்தேன். “படித்தால் விளங்குகிறதா?” என்று கேட்டேன்.

“திருக்குறள் பாதி விளங்குகிறது. பெண்ணின் பெருமை விளங்கவில்லை. உங்கள் தங்கையைப் பத்தாவது வரையில் படிக்க வைத்தார்கள். என்னை யார் அப்படிப் படிக்க வைத்தார்கள்? கிராமப் பள்ளிக்கூடத்தில் எட்டாவதோடு சரி” என்றாள்.

“அதைப் பற்றிக் கவலை இல்லை. பாக்கியம் எத்தனையாவது படித்தார்? படிக்கப் படிக்கத்தானே அறிவு வளரும்” என்றேன்.

உடனே, “தொட்டனைத்து ஊறும் மணற்கேணி” என்ற குறளைச் சொன்னாள்.

எனக்கு வியப்பாக இருந்தது. “கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி சொல்லும் என்பதுபோல் இருக்கிறதே பாக்கியத்தோடு பழகியதால்-“

நான் சொல்லி முடிப்பதற்குள், “அந்த அம்மா அடிக்கடி சொன்ன குறள் இது. அதனால் மனப்பாடம் ஆகிவிட்டது” என்றாள்.

இருந்தாலும், புத்தகப் படிப்பில் அவளுக்கு, ஆர்வம் இல்லை. போகப் போக அதை நன்றாக உணர்ந்தேன். புத்தகப் படிப்பில் அக்கறை இல்லாவிட்டாலும், அறிவுப் பசி மட்டும் இருந்தது. செய்தித்தாள் படித்து ஏதாவது சொன்னால், ஆர்வத்தோடு கேட்பாள். வார இதழிலிருந்து ஏதாவது கதை படித்துச் சொன்னால் கேட்பாள். நாளடைவில் அவளே அந்த இதழ்களில் இருந்த கதைகளைப் படித்துப் பழகினாள். பழக்கம் விடவில்லை. வார இதழ்கள் எப்போது வரும் என்று காத்திருந்தாள். சிறு கதைகளைவிடத் தொடர் கதைகளில் ஆர்வம் காட்டினாள். போன வாரத்தில் கதைத் தலைவன் இந்த ஊருக்குப் போனான். தலைவி இப்படி இருந்தாள். இந்த வாரத்தில் என்ன நடக்குமோ தெரியவில்லை என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தாள். அவளுக்கு அதைவிட ஆர்வம் மிகுதியாக இருந்த ஒரு துறை சினிமா என்று தெரிந்து கொண்டேன். சினிமாவுக்குப் போகவேண்டும் என்ற ஆசையை அவள் வெளியே காட்டிக் கொள்ளாமல் இருந்தாள். நெருங்கிப் பழகிய பிறகு, “அங்கே புதுப்படம் ஓடுகிறதாமே இங்கே புதுப்படம் ஓடுகிறதாமே. வாங்க போகலாம்” என்று என்னை வருமாறு வற்புறுத்தலானாள். எனக்கு வேலை நெருக்கடி மிகுதியாக இருந்த நாட்களில் “உங்களுக்கு வேலை தீர்ப்பாடு இல்லை. நீங்கள் வரமாட்டீர்கள். அந்த வீட்டுப் பெரியம்மா போகிறார்களாம். நான் அவர்களோடு போகட்டுமா?” என்று அனுமதி கேட்டாள். அவள் விருப்பம்போல் இசைந்து போகச் செய்தேன். ஆனாலும் அவளுடைய சினிமா வேட்கை தீரவில்லை. போன ஆண்டில் பார்த்த பழைய படமே திரும்பி வந்தால், மறுபடியும் போய்ப் பார்க்க வேண்டும் என்று விரும்பினாள். வேண்டா என்று தடுத்தால் உடனே அவளுடைய முகம் மாறுவதைக் கண்டேன். அது எனக்கும் வருத்தமாக இருந்தது. இந்த வகையில் அவளைத் திருத்த முடியாதுபோல் இருக்கிறதே என்று அவள் விருப்பம் போல் விட்டேன்.

ஓய்வு கிடைத்தபோது நானே அவளைச் சினிமாவுக்கு அழைத்துச் சென்றேன். ஒருமுறை அடுத்தடுத்து மூன்று நாள் படம் பார்க்கப் போயிருந்தோம். அப்போது நான் விளையாட்டாக ஒரு தந்திரத்தைக் கையாண்டேன். வீட்டுக்கு வந்த பிறகு, சினிமா நடிகைகளைப் பற்றியே புகழ்ந்து பேசினேன். இன்னாருடைய முகவெட்டு இப்படி, கண் இப்படி, புருவத்தின் அழகே தனி, கன்னமும் உதடுகளும் அமைந்த அமைப்பே சிறப்பு. மார்பு இப்படி, வயிறு இப்படி கைவிரல்கள் இப்படி, கழுத்தின் அழகு இப்படி, மூக்கின் எழில் இப்படி, இன்ன நடிகையின் கூந்தல் அழகே அழகு, பேசும்போது அவளுடைய உதடுகளின் அசைவு என்ன அழகு, நடக்கும்போது என்ன ஒயில், கைகளை வீசும்போது அதுவே ஒரு தனிக்கலை, அப்படி எட்டிப் பார்க்கும்போதே உயிர் போகும்போல் இருக்கிறது. ஒரு சிறு கண்சிமிட்டுக்கு இந்த உலகத்தையே கொடுத்தாலும் ஈடு ஆகாது என்று இப்படியே நாள்தோறும் ஒரு நடிகையைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். அவள் ஒரு நாள் பொறுத்தாள், மறுநாளே என் பேச்சில் வெறுப்புக் காட்டத் தொடங்கினாள். பிறகு நான் இந்தப் பேச்சில் ஈடுபட்டபோதெல்லாம் எழுந்து போய்விட்டாள். சினிமாப் படங்களைப் பற்றி எந்நேரமும் பேசிக் கொண்டிருந்தவள், என் போக்கு இவ்வாறு ஆன பிறகு அந்தப் பேச்சையே விட்டுவிட்டாள். நானோ விடவில்லை. இந்த விளையாட்டின் எல்லைக்குப் போய்ப் பார்த்துவிட வேண்டும் என்று முனைந்தேன். ஒரு நாள் அவள் உணவு பரிமாற வந்தபோது, அவளுடைய கால்களைப் பார்த்தபடியே இருந்தேன். “என்ன, சினிமா நட்சத்திரங்களின் நினைப்பா?” என்றாள். “ஆ ஆ! அந்த படத்தில் பார்த்த நடிகை உன்னைப் போல் நடந்து வரும்போது ஆ ஆ! என்ன அழகு, என்ன ஒய்யாரம்! அந்தக் கால்களையே பார்த்துக் கொண்டிருக்கலாம் போல் இருந்தது. ஒரு ரோசாப்பூவை ஒய்யாரமாகப் பறித்து அவள் தன் தலையில் சூட்டிக் கொண்டபோது அந்தக் கையை எடுத்ததே ஒரு கலை! அந்த விரல்களின் வளைவு நெளிவு அடடா! பூவைத் தலையில் சூடிக்கொண்டே அவள் திரும்பிப் பார்த்த பார்வை! அடடா! உயிரே கொள்ளை போகிறாற் போல் இருந்ததே!” என்றேன்.

“அய்யய்யோ! வர வர ஆபத்தாக வந்து முடியும்போல் இருக்கிறதே! உங்களுக்கு நடிகைப் பைத்தியமே பிடித்துவிடும் போல் இருக்கிறதே! என்ன இப்படிக் கெட்டுவிட்டீர்களே! இனிமேல் தயவு செய்து சினிமாவுக்கே போகவேண்டா. நானும் போகப் போவதில்லை. அடிக்கடி சினிமா பார்த்தால் குடும்ப ஆண்கள் கெட்டுப் போவார்கள் போல் இருக்கிறதே” என்றாள்.

அவள் இதைச் சொல்வாளா என்றுதான் காத்திருந்தேன்.

“ஆண்கள் கெட்டுப் போவது போல் பெண்களும் கெட்டுப் போவார்கள் அல்லவா?” என்றேன்.

“ஒரு காலும் பெண்கள் இப்படிக் கெட்டுப்போக மாட்டார்கள். உங்களுக்குத்தான் அந்த நட்சத்திரங்கள் கண்ணிலேயே வந்து குடிபுகுந்து விடுகிறார்களே, நாங்கள் படம் பார்க்கிறோம். கதை தெரிந்து கொள்கிறோம். வந்து விடுகிறோம்.”

“எல்லோருமா அப்படி?”

“யாரோ சில பெண்கள் உங்களைப் போல் பைத்தியம் பிடித்துப் பிதற்றுவார்கள். நாங்கள் அப்படி ஒருநாளும் நினைக்கவே மாட்டோம். இது என்ன அவமானம்! யாராவது கேட்டால் என்ன எண்ணுவார்கள்?” என்று கடுகடுப்பாகப் பேசினாள்.

மறுநாள் காலையில் மற்றொரு தந்திரம் செய்தேன். உணவு முடித்து அலுவலகத்திற்குச் செல்வதற்குமுன் கூடத்தில் இருந்த ஒரு காலண்டரை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் ஒரு சினிமா நடிகையின் படம் இருந்தது. அவளுடைய தோற்றமும் பார்வையும் அழகாக அமைந்திருந்தன. நான் அதைப் பார்த்தபடியே நெடுநேரம் இருந்தேன். கூடத்துப் பக்கமாக மனைவி வந்தபோது, நடிகையின் அழகை அனுபவிப்பது போல் பாசாங்கு செய்தேன். அழகில் மயங்கிப் பார்ப்பதுபோல் பார்த்து அடிக்கடி தலையை அசைத்துக் கொண்டிருந்தேன். வந்தவள் விர்ரென்று போய்விட்டாள். அன்று மாலையில் அலுவலகத்திலிருந்து வந்து பார்த்தபோது அந்தக் காலண்டர் அங்கே காணோம். அதோடு இன்னும் இரண்டு சினிமாப் படங்களும் காணப்படவில்லை; எங்கே அந்தப் படம் என்று மனைவியைக் கேட்டேன். அடுப்பில் இட்டு எரித்துவிட்டதாகக் கூறினாள்.

“அழகு இன்னது என்று தெரியாத களி மண் நீ! யாரைக் கேட்டு அதை அடுப்பில் போட்டாய்? அதற்காகவா நான் கேட்டு வாங்கிவந்து, கூடத்தில் மாட்டினேன்? உனக்கு அப்படிப்பட்ட அழகு இல்லையே என்ற பொறாமையால் செய்திருப்பாய்? இருக்க இருக்க உன் மூளையே மாறுகிறது” என்று பொய்க் கோபத்துடன் பேசினேன்.

“நான் அப்படித்தான் செய்வேன். உங்கள் நடத்தையே எனக்கு ஒன்றும் பிடிக்கவில்லை. ஊருக்கு வாங்க. பாக்கிய அம்மாவிடத்திலே மாமியிடத்திலே சொல்லிப்பார்க்கிறேன். யாருக்கு மூளை மாறிவிட்டது என்று அவர்களே சொல்லட்டும்” என்று அழத் தொடங்கினாள்.

“அழகான படம், கூடத்துக்கு அலங்காரமாக இருக்கும் என்று வாங்கிக் கொண்டு வந்தேனே” என்று கொஞ்சம் தணிந்த குரலில் சொல்லி வருந்தினேன்.

“பார்க்கிறவர்களின் மனம் கெடுமானால், எவ்வளவு அழகான படமாக இருந்தாலும் வாழ்கிற வீட்டுக்குள் வரக்கூடாது. உங்களுக்குத் தேவையானால், என்னை ஊருக்கு அனுப்பிவிட்டு, அப்புறம் என்னாவாவது செய்யுங்கள்”.

இதற்கு மேல் போகக்கூடாது என்று நடிப்பை நிறுத்திக் கொண்டேன். உடனே உண்மையைச் சொன்னாலும் பயன்படாது என்று அமைதியாக இருந்தேன்.

மூன்று நாள் கழித்து, “இன்று சினிமாவுக்குப் போகலாமா?” என்றேன்.

“வேண்டா. நான் வரவில்லை” என்றாள்.

“என்ன அவ்வளவு வெறுப்பு”

“ஆமாம். வெறுப்புத்தான். அதை பார்த்துக் கெட்டுப் போவதைவிட வீட்டோடு நல்லபடி இருக்கலாம்.”

“நான் வாயால் அழகைப் பாராட்டியது குற்றமா? மனத்திற்குள்ளே நினைத்துக் கொண்டு மனத்திலேயே அவர்களின் அழகைப் போற்றிக் கொண்டு இருந்திருக்க வேண்டும். எல்லாரும் அப்படித்தான் இருக்கிறார்கள். நான் வெளிப்படையாக உன்னிடம் பாராட்டிச் சொன்னது குற்றம். பெண்கள் மனத்திற்குள்ளேயே வைத்துக்கொண்டு நல்லவர்கள் போல் நடிக்கிறார்கள். ஆண்கள் அழகை அழகு என்று வாயால் சொல்கிறார்கள். அது குற்றமா?”

அதற்கு மறுமொழியாக என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாக இருந்தாள்.

இரண்டு நாள் கழித்து மறுபடியும் படம் பார்க்க அழைத்துப் பார்த்தேன். முடியவில்லை. மறுநாள் முயன்றேன். அன்றும் மறுத்துவிட்டாள்.

எல்லாம் பழங்கதையாய்ப் போகட்டும் என்று இரண்டு வாரம் சும்மா இருந்தேன். பிறகு, இனி அப்படி நடிகைகளின் அழகில் மயங்குவதில்லை என்று உறுதிமொழி கொடுத்து, சினிமாவுக்கு வருமாறு அழைத்தேன். அன்று மனம் இறங்கி வந்தாள். நானும் பழைய நடிப்பு ஒன்றும் இல்லாமல் நடந்து கொண்டேன். இருந்தாலும், வீட்டுக்கு வந்த பிறகு, “ஆண்களையே நம்ப முடியாது. நீங்கள் அந்த நடிகைகளின் அழகை அடிக்கடி மனத்திற்குள் நினைக்கிறீர்கள் அல்லவா?” என்று கேட்டாள்.

“எனக்கு இப்போது வேலை மிகுதி. ஓய்வு ஏது? அவர்களின் அழகைப் பற்றிய நினைப்பே வருவதில்லை” என்றேன்.

“கடவுள் உங்களுக்கு எந்த நாளும் ஓயாத வேலை கொடுத்தபடியே இருக்கவேண்டும்” என்று கையெடுத்துக் கும்பிட்டாள்.

எனக்குச் சிரிப்பாக இருந்தது. “இதற்காக நான் மாடுபோல் ஓயாமல் உழைக்கவேண்டும் என்று சாபம் கொடுக்கிறாயா? நீ மட்டும் ஓய்வாக வீட்டில் சுகப்படு” என்றேன்.

அவளும் சிரித்தாள்.

அப்போதுதான் என் உள்ளம் திறந்து சொன்னேன். “நான் அப்படிப் படத்தின் அழகில் மயங்கிக் கெட்டுப் போகிற ஆள் அல்ல. அதெல்லாம் உண்மை அழகு அல்ல. மேற்பூச்சும் அலங்காரமுமே அதிகம். அவற்றை நம்புகிற பேர்வழி நான் அல்ல. நடிப்பு மட்டும் உண்மையாகவே சிறந்த கலை. அதைத்தான் பாராட்ட வேண்டும்” என்றேன்.

“அப்படியானால் நீங்கள் அவர்களின் அழகில் மயங்கவில்லையா?”

“நீ ஆண் நடிகரின் அழகில் மயங்கவில்லையா?”

“சேச்சே! அந்த எண்ணம் வந்தால் நான் சினிமாவுக்கே போகமாட்டேன். தெரியுமா?”

“அவர்கள் என்னைவிட அழகாக இல்லையா? அதனால் உனக்கு ஆசையாக இல்லையா!”

“சே! என்ன பேச்சு இது! தெருவில் போகிற ஒருவன் அழகாக இருந்தால், அதனால் அவன்மேல் ஆசை தோன்றி விடுமா? நம் அம்மாவைவிட இன்னொருத்தி அழகாக இருந்தால் அவள்மேல் ஆசை வளருமா? அழகு குறைவாக இருந்தாலும் என்னைப் பெற்று வளர்த்தவள்தான். எனக்கு வேண்டும், அவள்தான் எனக்குத் தாய். அப்படித்தான் நீங்களும் எனக்கு.”

“கண்ணி! என் நிலையும் அதுதான். ஊரில் எந்தப் பெண் எவ்வளவு அழகாக இருந்தால் எனக்கு என்ன? அயலாருடைய கண் அழகாக இருந்தால் அதற்காக என் கண்ணைக் குத்திக்கொள்வேனா? என் கண்தான் என் கண்! என் கண்ணிதான் என் கண்ணி!” என்று அன்போடு அவள் முகத்தை நோக்கினேன்.

உடனே அவள் என் தோள்மேல் சாய்ந்து என் கன்னங்களைத் தடவினாள்.

இவ்வாறாக எங்கள் சினிமா நாடகம் முடிந்தது.

அத்தியாயம் – 24

ஏதாவது ஒரு வேலை வேண்டும் வேண்டும் என்று மாலன் அடிக்கடி கடிதம் எழுதிக் கொண்டிருந்தான். நண்பராகிய நகர்மன்றத் தலைவரிடம் அவனுடைய நிலையை எடுத்துரைத்தேன். உள்ளூரிலே ஒன்றும் இல்லையே என்று அவர் வருந்தினார். அவருடைய பொதுத் தொண்டு காரணமாகச் சென்னையில் அவருக்கு நல்ல செல்வாக்கு இருந்த காரணத்தால் அங்காவது ஒரு வேலை தேடித் தருமாறு வேண்டிக் கொண்டேன். அவ்வாறே அவர் அடுத்த முறை சென்னைக்கு சென்றபோது இதே கூட்டுறவுத் துறையில் நூறு ரூபாய் வருவாயில் இன்ஸ்பெக்டர் தொழில் பெற்றுத் தந்தார். மாலனுக்கு அதுவும் பெரிய மனக்குறையாக இருந்தது. நான் முந்நூறு ரூபாய்க்கு மேல் சம்பளம் பெற, என்னுடன் என்னைப்போல் படித்த ஒருவன் நூறு ரூபாயளவில் நின்றது யாருக்குத்தான் வருத்தமாக இருக்காது? ஆனாலும் என்ன செய்வது? வேறு வழி இல்லையே என்று அத்தொழிலில் கொஞ்ச காலம் மனம் பொருந்தி இருக்குமாறு மாலனுக்குக் கடிதம் எழுதியிருந்தேன்.

சென்னைக்குப் போகவேண்டிய வாய்ப்பு எனக்கு ஒரு முறை நேர்ந்தது. தொழில் துறையின் தொடர்பாகவே போயிருந்தேன். முன்னதாகவே மாலனுக்கு எழுதியிருந்தேன். அவனுடைய வீட்டுக்கே போயிருந்தேன். திருமணத்துக்குப் பிறகு கற்பகத்தைப் பார்த்தது அப்போதுதான். “வாங்க” என்று அவள் வரவேற்றாள். அவளுடைய முகத்தில் மலர்ச்சி இருந்தபோதிலும் சிறுமியாக இருந்தபோது கண்ட துடிதுடிப்பு இல்லை. மாலன் தன் குழந்தையைக் கொண்டு வந்து என் கையில் தந்தான்.

அன்போடு பெற்றுத் தோள்மேல் ஏந்திக்கொண்டு “என்ன பெயர்?” என்றேன்.

“எழுதியிருந்தேனே! மறந்துவிட்டாயா! நீ பெரிய உத்தியோகத்தில் இருக்கிறாய். என்னைப் போன்ற ஆட்களை எல்லாம் நினைவில் வைத்திருப்பாயா?” என்றான்.

“அப்படி என்னிடம் சொல்லக்கூடாது. நான் என்றைக்கும் உன் நண்பன். ஏதோ வாய்ப்பு என்று சொல்கிறார்களே! அதன்படி எனக்குப் பெரிய வேலை கிடைத்தது. உனக்குக் கிடைக்கவில்லை. அதற்காக வருத்தப்படாதே.”

“சும்மா சொன்னேன்.”

அவன் அவ்வாறு சொன்னபோதிலும், அந்தச் சொல் அவனுடைய உதட்டிலிருந்து வந்த விளையாட்டுப் பேச்சு அல்ல என்றும், உள்ளத்தில் ஆழ்ந்திருந்த வேக்காட்டிலிருந்தே வந்தது என்றும் எண்ணினேன். “சரி, இவன் பெயரைச் சொல்” என்றேன்.

“திருவாய்மொழி” என்றான்.

“என் தம்பி பொய்யாமொழி. இவன் திருவாய்மொழியா? நல்ல பெயர்தான்” என்று சொல்லிக்கொண்டே கற்பகத்தின் முகத்தைப் பார்த்தேன். அவள் புன்சிரிப்போடு நின்று கொண்டிருந்தாள்.

“சொந்த மாமா இப்படி எடுத்துப் பழகாவிட்டாலும் இந்த மாமாவையாவது பாரப்பா” என்றாள் கற்பகம்.

“நான் இந்தப் பையனுக்கு மாமாவா?” என்றேன்.

“ஆமாம்” என்று சிரித்தாள் கற்பகம்.

“என்ன மாலா! நான் உனக்குச் சம்பந்தி ஆகிவிட்டேன். இனிமேல் அண்ணன் தம்பி முறையை மாற்றிக்கொள்ள வேண்டும்” என்றேன்.

“நண்பர்களாக இருந்தால் அதில் ஒரு நன்மை இருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் முறையை மாற்றிக் கொள்ளலாம். பெண் இருந்தால் மாமன் மைத்துனன். இல்லாவிட்டால் அண்ணன் தம்பி. உறவாக இருந்தால் இப்படி மாற்றிக் கொள்ளும் உரிமை இல்லையே” என்றான் மாலன்.

“மாமாவுக்கு எப்போது பெண் பிறக்கப்போகிறது என்று பார்க்கிறான்” என்றாள் கற்பகம்.

“இன்னும் நான்கு ஐந்து மாதத்தில்” என்றேன். மாலன் சிரிக்க, நானும் சிரித்தேன்.

“இப்போதே பணம் சேர்த்து வைத்துக்கொள். இல்லையானால் நல்ல மாப்பிள்ளையாகக் கிடைக்க மாட்டான்” என்றான்.

என் தங்கையின் வாழ்க்கை என் நினைவுக்கு வந்தது. உடனே அதைப் பொருட்படுத்தாமல், “இந்தப் பையனுமா அப்படிப் பணம் கேட்பான்?” என்றேன். குழந்தை திருவாய்மொழி அப்போது தன் பொக்கை வாய் திறந்து முழுச் சிரிப்பு சிரித்தான். அந்த காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. எல்லோருமே குழந்தைகளாய் மாறிச் சிரித்தோம்.

மறுநாள் சென்னைக் கடமையை முடித்துக்கொண்டு ஊர்க்குப் புறப்பட்டேன். மாலன் ரயிலடிக்கு வந்திருந்தான். அவனுக்குத் தேறுதல் சொன்னேன். “இங்கே இருந்தபடியே வேறு நல்ல தொழில் கிடைத்தால் மாறிவிடலாம்” என்றேன்.

“எங்கே கிடைக்கிறது? வர வர வேலையில்லாத் திண்டாட்டம் வளர்கிறது. படிக்காதவர்கள் நன்றாகப் பிழைக்கிறார்கள். பணம் தேட அவர்களுக்கு வழி தெரிகிறது. படித்தவர்களுக்குத் தெரியவில்லை. எங்கள் ஊரில் நெல் ஆலை வைத்த ஒருவர் இன்றைக்குப் பெரிய செல்வராகி விட்டார். என்னோடு உயர்நிலைப் பள்ளியில் எட்டாவது வரையில் படித்தவன் லாரி வைத்துப் பணக்காரனாகி விட்டான். என்னை இந்த நூறு ரூபாய்ச் சம்பளத்துக்கு அழைக்கிறான். பேசாமல் இந்த வேலையை உதறிவிட்டு ஒரு நெல் ஆலையாவது லாரியாவது வைத்து நடத்தலாமா என்று எண்ணுகிறேன். அதைப்பற்றித்தான் இனி முயற்சி செய்ய வேண்டும்” என்றான்.

“அவசரப்படாதே நன்றாக எண்ணிப்பார். நமக்குப் பழக்கம் இல்லாத துறைகள்.”

“படிக்காதவர்கள் செய்யும்போது படித்தவர்கள் செய்யக்கூடாதா?”

“வேண்டா என்றோ கூடாது என்றோ நான் சொல்லவில்லை. எண்ணிப் பார்த்து, ஒரு முறைக்குப் பல முறை எண்ணிப் பார்த்து இறங்கவேண்டும். படித்ததனாலேயே நமக்குத் திறமை இருப்பதாகச் சொல்ல முடியாது. சின்ன பிள்ளைகள் ஒரு நாளில் சைக்கிள் விடக் கற்றுக்கொள்கிறார்கள். வளர்ந்த பெரியவர்கள் கற்றுக்கொள்ள ஒரு வாரத்துக்கு மேலும் ஆகிறது.”

என் பேச்சை அவன் ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை.

வீட்டுக்கு வந்த பிறகு கற்பகத்தையும் குழந்தையையும் பார்த்த செய்தியை மனைவியிடம் சொன்னேன். “கற்பகத்தை நான் பார்த்துப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஒரு முறை பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது” என்றாள்.

ஏழாம் மாதம் வேலூரிலிருந்து அத்தையும் திருமந்திரமும் வந்து சிலநாள் இருந்து மனைவியை அழைத்துச் சென்றார்கள். அப்போதுதான் முதல் முறை பிரிவுத் துன்பத்தை உணர்ந்தேன். மனைவி கண்ணீர் விட்டுக் கலங்கினாள். பக்கத்தில் வேலையாட்கள் இருந்ததையும் மறந்து, நானும் கண்ணீர்விட்டேன். ரயில் நகரும் வரையில் அவள் கலங்கிக்கொண்டே இருந்தாள். அவளுடைய கண்கள் சிவந்திருந்தன. நான் மூச்சுப் பிடித்துக் கொண்டு இருந்தேன். என் உள்ளத்தை அடக்கிக்கொண்டிருந்தது பெரு முயற்சியாக இருந்தது. வீட்டிற்கு வந்து என் அறையில் நுழைந்த பிறகு என் உள்ளத்தை அடக்கு முறையிலிருந்து விட்டேன். நன்றாகக் கண்ணீர் விட்டு அழுதேன். அதன் பிறகு என் செயல் எனக்கே சிறுபிள்ளைத் தன்மையாக இருந்தது.

அடுத்த மாதமே வேலூர்க்குச் சென்று சில நாள் இருந்துவந்தேன். ஒரு பெண் குழந்தைக்குத் தந்தையான செய்தி அறிந்தவுடன் மற்றொரு முறை போனேன். அப்போது அம்மாவும் அப்பாவும் அங்கே வந்திருந்தார்கள். குழந்தைக்கு “மாதவி” என்று பெயர் வைத்தார் அப்பா. வந்தவர்களில் சிலர் குழந்தை அப்பனைப்போல் இருப்பதாகச் சொன்னார்கள். சிலர் மூக்கும் விழியும் மட்டும் தாயைப் போல் இருப்பதாகச் சொன்னார்கள். வளர்ந்த பிறகுதான் உண்மை தெரியும் என்று அம்மா தீர்ப்புச் சொல்லிவிட்டார்.

தங்கை தம்பி பாக்கியம் எல்லாரும் எப்படி இருக்கிறார்கள் என்று அம்மாவைக் கேட்டேன். அப்போது அவர் சொன்ன ஒரு செய்தி துன்பமாக இருந்தது.

“கற்பகமும் அவளுடைய அப்பாவும் நம் தெருவில்தான் இருக்கிறார்கள். முன் இருந்த அதே வீட்டில் குடியிருக்கிறார்கள். ஊரில் சந்திரனுக்கும் அப்பாவுக்கும் சொத்து வகையில் சச்சரவாம்.”

“அதனால் அவனுடைய அப்பா வந்தது சரி, கற்பகம் ஏன் கணவனை விட்டு வரவேண்டும்.”

“அவன்தான் அனுப்பிவிட்டானாம். சோழசிங்கபுரத்தில் நெல் ஆலை வைக்க வேண்டும் என்று முயற்சியாம். அதற்காக மாமனாரிடம் பணம் கேட்கிறான். நீ போய் உட்கார்ந்து பிடிவாதம் செய்து வாங்கிக் கொண்டுவா என்று அனுப்பிவிட்டான். சந்திரன் மிகக் கெட்டுப் போய்விட்டானாம். கண்டபடி கண்ட பெண்களுக்கும் நோய்க்கும் பணத்தைச் செலவு செய்து சொத்தை அழித்து வருகிறானாம். அவன் இப்படிச் செய்வதைத் தெரிந்துகொண்டு மருமகன் கேட்கிறான். அழியும் சொத்தில் ஒரு பங்கு கொடுத்தால் என்ன என்று மகளும் கேட்கிறாள். ஆனால், மகன் ஒத்து வரவில்லை. வீண் குழப்பம் செய்கிறானாம். அப்பாவால் அந்த ஊரிலேயே இருக்க முடியவில்லையாம். மன அமைதியாவது கிடைக்கும் என்று மகளை அழைத்துக்கொண்டு இங்கே வந்திருக்கிறார். அவர் வேறு என்ன செய்வார்?” என்றார்.

“இருந்தாலும் கற்பகம் வந்திருக்கக் கூடாது” என்றேன்.

“நீ ஒரு பைத்தியம்’டா. அவள் என்ன செய்வாள்? கையோடு அழைத்துக்கொண்டு வந்து விட்டு விட்டான். சொத்தோடு வந்தால் வா, இல்லாவிட்டால் வரவேண்டா என்று சொல்லி விட்டுவிட்டுப் போனால் அந்தப் பெண் என்ன செய்யமுடியும்?”

“மறுபடியும் புறப்பட்டுக் கணவன் வீட்டுக்கே போகவேண்டும்?”

“அவன் கழுத்தைப் பிடித்துத் தள்ளினால்? – அவன் அப்படிப்பட்ட முரடனாகத் தெரிகிறதே”

என்னால் நம்பவே முடியவில்லை. “அப்படிச் சொல்லாதே அம்மா! தப்பு, தப்பு” என்றேன்.

“உன் கண்ணுக்கு எல்லாரும் நல்லவர்களாகத் தெரியும். கற்பகத்தின் திருமணத்துக்கு முன் அவனைப் பற்றி உனக்குத் தான் எழுதி கேட்டார்களாம். நீ நல்ல பிள்ளை என்று எழுதியிருந்தாயாம். அந்தப் பெண் அதை என்னிடம் சொல்லிக் கண்ணீர் விடுகிறாள்” என்றார்.

என் உள்ளம் நைந்தது. சென்னைக்குச் சென்று அவர்களின் குடும்பத்தைக் கண்டபோது, அவர்கள் அன்பாக வாழ்ந்திருந்தார்களே என்று எண்ணினேன். அதை அம்மாவிடம் குறிப்பிட்டேன்.

“ஒருநாள் விருந்தாளிபோல் போய்ப் பார்ப்பவர்களுக்கு அந்தக் குடும்பத்தைப் பற்றி ஒன்றுமே தெரியாது. அதிலும் கற்பகம் நல்ல பெண். உள்ள துன்பத்தை வெளியே காட்டிக் கொள்வாளா?” என்றார்.

“மாலனா அப்படிச் செய்தான் என்று என்னால் நம்பவே முடியவில்லை அம்மா”

“நீ வெளுத்ததெல்லாம் பால் என்று நம்புகிறவன்.”

இவ்வளவும் செய்துவிட்டு மாலன் எனக்கு ஒரு கடிதமும் எழுதாமலிருக்கிறானே என்று எண்ணியபோது அவன் மேல் வெறுப்பும் தோன்றியது.

ஈரோட்டுக்குத் திரும்பிச் சென்றபோது வீட்டில் அவனுடைய கடிதம் வந்திருந்தது கண்டேன். பிரித்துப் படித்தேன்.

“நான் உன்னிடத்தில் நேரில் சொன்னபடி ஊரில் நெல் ஆலை வைப்பதற்கு ஏற்பாடு செய்துவருகிறேன். அதனால் வேலையை விட்டு விட்டேன். நீ என்மேல் வருந்தமாட்டாய் என்று நம்புகிறேன். என் தந்தை கொஞ்சம் பணம் கொடுத்திருக்கிறார். அது போதவில்லை. மாமனாரிடம் கொஞ்சம் கேட்டு வாங்கிவருமாறு கற்பகத்தை அவளுடைய ஊர்க்கு அனுப்பியிருக்கிறேன்” என்று எழுதி இருந்தான்.

அம்மா சொன்னதற்கும் அவன் எழுதியதற்கும் உள்ள வேறுபாட்டை உணர்ந்தேன். இன்னும் கற்பகத்தைக் கேட்டால், அவள் சொல்வது எப்படி இருக்குமோ? ஒரே இடத்தில் நடந்த நிகழ்ச்சியை வெவ்வேறு கட்சிச் செய்தித் தாள்கள் வெவ்வேறு வகையாய்த் திரித்து எழுதுவது போல் இருக்கிறதே என்று எண்ணினேன். மாலன் சோதிடம் கேட்டிருப்பான். வியாபாரத்துக்கு வேண்டிய பொருத்தம் இருப்பதாகச் சோதிடர் ஏதாவது சொல்லி இருப்பார். அவனுடைய லக்கினாதிபதி இப்படிச் செய்து விட்டிருப்பான் என்று வெறுப்படைந்தேன்.

சந்திரன் மிகக் கெட்டுவிட்டான் என்றும், சொத்தை அழித்து வருகிறான் என்றும் அம்மா சொன்னது நினைவுக்கு வந்தது. இனிச் சந்திரனை யாரும் திருத்த முடியாது; அவன் சொத்தை அழிக்கத் தொடங்கிய பிறகு அந்தச் சொத்தில் ஒரு பகுதியைக் கற்பகத்துக்கு எழுதி வைத்தால் நல்லதுதானே! ஏன் அவனுடைய தந்தை அப்படிச் செய்யத் தயங்குகிறார்? அப்படிச் செய்துவிட்டால் மாலன் எப்படியாவது வியாபாரமோ தொழிலோ செய்து முன்னேறுவானே என்று எண்ணிக் கொண்டிருந்தேன்.

உண்மை எதுவும் தெளிவாகத் தெரியாததால், மாலனுக்கு மறுமொழி எழுதாமலிருந்தேன். அடுத்த கடிதம் வரும் என்று எதிர்பார்த்தேன். ஒன்றும் வரவில்லை. எனக்கு வேலை மிகுதியாக இருந்தது. புதிய பொறுப்புகள் சில வந்து சேரவே, அவற்றில் சிந்தனை செலுத்தி இருந்தேன்.

மனைவியைக் குழந்தை மாதவியுடன் மூன்றாம் மாதத்தில் போய் அழைத்து வரலாமா என்று ஊருக்கு எழுதிக் கேட்டிருந்தேன். மூன்றாம் மாதத்தில் அம்மா போய் வாலாசாவுக்கு அழைத்து வருவதாகவும், ஐந்தாம் மாதத்தில் ஈரோட்டுக்கு அனுப்புவதாகவும் எழுதியிருந்தார்கள்.

இடையில் நான்கு நாள் சேர்ந்தாற்போல் விடுமுறை வர, ஈரோட்டில் இருக்க மனம் கொள்ளாமல், ஊருக்குப் புறப்பட்டேன். ஊருக்குச் சென்று வீட்டில் நுழைந்ததும் நான் முதலில் கண்ட காட்சி, கற்பகம் ஒரு சிறுமிக்குத் திண்ணையில் கணக்குக் கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்த காட்சிதான். கற்பகம் என்னைக் கண்டதும், “வாங்க அண்ணா; இப்போதுதான் வருகிறீர்களா?” என்றாள்.

“இது என்ன?” என்று அந்தச் சிறுமியை காட்டிக் கேட்டேன்.

“பாக்கியம் அக்காவிடத்தில் படிக்கும் பெண். கடைசி வீட்டுப் பெண். நானும் இப்போது அக்காவின் தொழிலைச் செய்யக் கற்றுக்கொள்கிறேன். என்ன செய்வது?” என்று வேதனையோடு கலந்த புன்சிரிப்பை மேற்கொண்டாள்.

“இருக்கட்டும். அப்பாவும் இருக்கிறாரா?” என்று வருந்தியவாரே கேட்டேன்.

“அதே வீட்டில்தான் இருக்கிறோம். அங்கே இருக்கிறார்” என்றாள்.

உள்ளே நுழைந்ததும் காக்கி உடை உடுத்தி ஒரு சிறு பையன் குறுக்கே நிற்பதைக் கண்டு வியந்தேன். “அடே யாரடா சிப்பாய்?” என்றேன்.

கற்பகம் என்பின் வந்தவள் “திருவாய்மொழி” என்றாள்.

உடனே, “என் மருமகனா? அடடே” என்று அவனைத் தூக்கித் தோள்மேல் வைத்துக் கொண்டேன்.

என் குரலைக் கேட்டதும் கயற்கண்ணி பால் குடிக்கும் குழந்தையுடன் எட்டிப் பார்த்தாள்.

“மாதவி என்ன செய்கிறாள்?” என்றேன்.

“அப்பா எங்கே என்று கேட்கிறாள்” என்றாள் கற்பகம்.

“இல்லை இல்லை. அப்பா வந்தால்தான் பேசுவேன் என்று அடம்பிடிக்கிறாள்” என்றாள் என் மனைவி.

“நீ ஒன்றும் அடம்பிடிக்காமல் இருந்தால் போதும்” என்றேன்.

அம்மா ஆர்வத்தோடு வந்து பார்த்து, “கடிதமும் எழுதாமல் வந்து விட்டாயே. உன் மகள் மேல் ஏக்கம் வந்து விட்டதா?” என்கிறார்.

“பாட்டி ஆச்சு, பேர்த்தி ஆச்சு. உன் பேர்த்தியைப் பற்றி எனக்கு என்ன அம்மா ஏக்கம்?” என்று சிரித்தேன்.

சிறிது நேரம் வீடு முழுவதும் ஆரவாரமாக இருந்தது. எல்லாருடைய முகங்களும் மலர்ந்திருந்தன. கற்பகத்தின் மகன் திருவாய்மொழியும் சிரித்து ஆடிக்கொண்டிருந்தான். மாதவியும் தன் விரலைச் சுவைத்துக் கொண்டே ஆ ஊ என்று ஒலித்துக் கொண்டிருந்தாள். கற்பகத்தின் முகத்தில் மட்டும் துன்பத்தின் சாயல் வந்து வந்து கவிந்துகொண்டிருந்தது. தானும் மற்றவர்களோடு கலந்து மகிழ வேண்டும் என்று அவள் எவ்வளவு முயன்றபோதிலும் முழு வெற்றி பெறமுடியவில்லை.

மாலனைப் பற்றிக் கேட்பதற்கு வாய்ப்பை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். சிற்றுண்டி முடிந்ததும், கற்பகத்தைப் பார்த்தேன். அவள் அங்கே இல்லை. சிறிது நேரத்தில் வந்தாள். “உன் கணவர் கடிதம் எழுதினாரா?” என்று கேட்டேன்.

“இல்லை. உங்களுக்கு எழுதினாரா?” என்றாள்.

“எழுதினார். நான் எழுதவில்லை.”

“நடந்ததெல்லாம் தெரியும் அல்லவா?”

“தெரியும். அம்மா சொல்லித் தெரிந்து கொண்டேன்?”

“உங்களுக்கு எல்லாவற்றையும் எழுதினாரா?”

“எழுதினார். சுருக்கமாக, அந்த நெல் ஆலை ஏற்படுத்தி ஆயிற்றா?”

“நடக்கிறது என்று கேள்விப்பட்டேன். அங்கிருந்து வந்தவர்கள் சொன்னார்கள்.”

அவளுடைய கழுத்தையும் கைகளையும் பார்த்தேன். நகைகள் காணப்படவில்லை. கேட்கலாமா என்று வாயெடுத்தேன். இப்போது கேட்டு அவளுடைய துயரத்தைக் கிளற வேண்டா என்று அமைதியானேன்.

“உன்னிடத்தில் உண்மை தெரிந்து கொண்டு கடிதம் எழுத எண்ணியிருக்கிறேன்” என்றேன்.

“எழுதியும் பயன்படாது. அவர் மனத்தை மாற்ற முடியாது. அவரே உணரும் காலம் வந்தால்தான் திருந்துவார்.”

“வேறே ஒன்றும் கெட்ட பழக்கம் இல்லையே.”

“நீங்கள்தான் திருமணத்துக்கு முன்னமே கெட்ட பழக்கம் ஒன்றும் இல்லை என்று எழுதியிருந்தீர்களே. அப்படியேதான் இருக்கிறார்.”

“பிறகு எப்படி இந்த முரட்டுக் குணம் வந்தது.”

“யார் சொன்னது முரட்டுக் குணம் என்று. அப்படி ஒன்றும் இல்லையே.”

வேண்டும் என்றே மறுக்கிறாளோ என்று அவளுடைய முகத்தைப் பார்த்தேன். அவள் பார்வை கூரையைப் பார்த்தப்படி இருந்தது. முகக் குறிப்பு ஒன்றும் தெரியவில்லை.

பக்கத்து அறையிலிருந்து எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த என் மனைவி, “கற்பகம் வாய் திறந்து சொல்லமாட்டாள். இதோ நான் வந்து சொல்வேன். கொஞ்சம் இருங்கள்” என்றாள்.

கற்பகம் கண்ணைத் துடைத்துக்கொண்டே தோட்டத்தின் பக்கம் நடந்தாள்.

நான் என் மனைவி இருந்த அறைக்குள் நுழைந்து “நகைகள் காணோமே எங்கே?” என்றேன்.

“நகைகள் எல்லாவற்றையும் கழற்றிக் கொடுத்து விட்டுத்தான் இங்கே வந்தாள்” என்றாள் மனைவி.

“இவளே கழற்றிக் கொடுத்துவிட்டாளா? அவனே வற்புறுத்தினானா?”

“இவளே கொடுக்க, இவளுக்குப் பைத்தியமா? அவர் வற்புறுத்தினார் கொடுத்தாள். கடன் கடன் என்று கேட்டாராம் கொடுத்து விட்டாள். அப்படியாவது அவருடைய கவலை தீருமா, அன்பாக நடத்துவாரா என்று எதிர் பார்த்தாள். அவர் ஒன்றும் மனம் மாறவில்லை.”

பெருமூச்சு விட்டேன். “சிக்கனமானவன். கடன்படக் காரணம் இல்லையே” என்றேன்.

“அது பெரிய கதை. பாக்கிய அம்மாவைக் கேட்டுப் பாருங்கள். அவருக்குத்தான் முழு உண்மையும் தெரியும்.”

திகைத்தேன். “அவனே பெருங்காஞ்சிக்கு வந்து விட்டு விட்டானா” என்று கேட்டேன்.

“வீட்டு வாயில் வரைக்கும் வந்து விட்டுவிட்டு, ஒரு வேளையும் சாப்பிடாமல், சொல்லாமல் போய்விட்டாராம். கற்பகத்தின் அண்ணி எவ்வளவோ சொல்லி வேண்டிப்பார்த்தாளாம். பின் தொடர்ந்து சென்று அழைத்தும் முயன்றாளாம். அவர் திரும்பி வராமலே போய்விட்டாராம். அப்போது கற்பகத்தின் அப்பா இல்லையாம். எங்கோ போயிருந்தாராம்.”

“அண்ணன் சந்திரன்?”

“அவர் வீட்டிலேயே சரியாகத் தங்குவதில்லையாம் மனம்போன படி வாழ்கிறாராம்.”

“அய்யோ குடும்பமே! இந்த நிலைமைக்கா வரவேண்டும்?

“இவள் என்ன செய்வாள்? நல்லவள்; சூது வாது அறியாதவள்.”

அப்போது அம்மா வந்து, “போனது போகட்டும் அப்பா. இப்படி நடப்பது உண்டுதான். நீ போய் அவளுடைய வீட்டுக்காரரைப் பார்த்துத் தக்கபடி சொல்லி அழைத்து வா. எப்படியாவது கணவனும் மனைவியுமாக வாழும்படியாகச் செய். கர்ப்பமாக இருக்கிற பெண் அடிக்கடி கண்ணீர் விட்டுக் கலங்குவது நல்லது அல்ல. கற்பகத்தின் அப்பாவுக்கும் தீராத கவலையாகிவிட்டது. மகனால் ஒரு பங்கும், மருமகனால் ஒரு பங்கும். அப்பனும் மகளுமாய் வீடு வாசல் நிலபுலம் எல்லாவற்றையும் மறந்து இங்கே வந்து கலங்கி நிற்கிறார்கள்” என்றார்.

சோழசிங்கபுரம் போய் மாலனைக் கண்டு பேசி முடிந்ததைச் செய்ய வேண்டும் என்று தீர்மானம் செய்து கொண்டேன். “அப்படியே செய்கிறேன் அம்மா” என்றேன். அதற்குள் முழுச் செய்திகளும் தெரிந்து கொள்ள விரும்பினேன்.

தோட்டத்தை நோக்கிச் சென்றேன். அங்கே பாக்கியம் பருப்பில் கல் பொறுக்கிக் கொண்டிருந்தார். கற்பகம் பக்கத்தில் உட்கார்ந்து தொலைவில் உள்ள எதையோ பார்ப்பதுபோல் ஒரே பார்வையாக இருந்தாள்.

பாக்கியம், என்னைப் பார்த்து “நீ ஏதாவது கேட்டாயா, தம்பி?” என்றார்.

“ஆமாம் அக்கா. எனக்கு உண்மை தெரிந்தால்தானே நான் அவரைக் கேட்க முடியும்?” என்றேன்.

“இதைவிட உங்களுக்கு என்ன உண்மை வேண்டும்? நிறையச் செல்வத்தோடு வந்தால்தான் வாழலாம் என்கிறார். இல்லையானால் வரவேண்டா என்று சொல்கிறார்” என்று கற்பகம் சட்டென்று சொன்னாள்.

இதுதான் நல்ல வாய்ப்பு. இப்போதே அவளுடைய வாயிலிருந்து செய்திகளை வருவிக்க வேண்டும் என்று எண்ணினேன். “எவ்வளவு செல்வம் வேண்டுமாம்? எதற்காகவாம்?” என்றேன்.

“எவ்வளவு கொடுத்தாலும் போதாது என்று கேட்டார். அப்பா அதற்கு இசையவில்லை. ஐந்து காணி நன்செய் நிலம் எழுதி வைத்திருக்கிறார். அதையும் அவரோ நானோ விற்க உரிமை இல்லாமல் எழுதி வைத்திருக்கிறார். அதற்கு மேல் பணமாகக் கேட்டால் இல்லை என்கிறார்.”

“நிலம் எழுதி வைத்தது அவருக்குத் தெரியுமா?”

“தெரியும். கடிதம் எழுதியாயிற்று. ஆள் வாயிலாகச் சொல்லியும் ஆயிற்று. அங்கிருந்து அவரும் சொல்லி அனுப்பினார் பணம்தான் வேண்டும் என்று.”

“இந்தப் பணப் பைத்தியம் அவருக்கு எப்படி வந்தது?”

“அது உங்களுக்கு முன்னமே தெரிந்திருக்க வேண்டும்.”

பழைய அம்பே முன்போல் என்னைப் புண்படுத்தியது.

“நீ நான்கு ஆண்டுகள் பழகியிருக்கிறாயாமே அப்போது இப்படிக் கெட்டவராகத் தெரியவில்லையா” என்று பாக்கியம் கேட்டார்.

“இல்லையே அக்கா. பிறகுதான் அவர் எப்படியோ மாறிவிட்டார்.”

“அப்புறமும் மாறியிருக்க மாட்டார். இவர் முந்நூறு, நானூறு, சம்பளம் வாங்குகிறார். இவரைப்போல் அவரும் ஆகியிருந்தால் ஒருவேளை நல்லவராகவே இருந்திருப்பார். அல்லது இவராவது பெரிய வேலைக்குப் போகாமல் அவரைப் போலவே நூறு ரூபாய்ச் சம்பளத்திலேயே இருந்தால் அவருடைய மனம் கெட்டிருக்காது.”

இப்படிக் கற்பகம் பச்சையாகச் சொன்னபோது, என்னால் நம்ப முடியவில்லை. என்மேல் மாலன் பொறாமை கொண்டிருந்தது.

“உங்களுக்குள் குடும்பத்தில் வேறு எந்தக் காரணத்தாலும் மனக் கசப்பு இல்லையே” என்று கேட்டேன்.

“உண்டு. எல்லாம் பணத்தின் காரணமாக வந்தது தான்.”

“எப்படி?”

“நகைகளை ஒவ்வொன்றாய்க் கேட்டார். மறுத்து வந்தேன். அதனால், முதலில் என்மேல் வெறுப்பு ஏற்பட்டது. பிறகு ஒவ்வொன்றாய்க் கொடுக்கத் தொடங்கினேன். பிறகும் அவருடைய மனம் அமைதியடையவில்லை என்மேல் வெறுப்பு வளர்ந்தது.”

“பணத்தைக் கொண்டு என்ன செய்தார்?”

“அதை ஒருநாள் பிடிவாதமாய்க் கேட்டேன். அன்று என்னை – வேண்டா. அதை எல்லாம் கேட்காதீர்கள்” இவ்வாறு சொல்லிக் கற்பகம் கண்ணீர் விட்டாள்.

“எடுத்ததற்கெல்லாம் அழுது கண்ணீர் விடுவதால் பயன் இல்லை. அஞ்சாமல் போரிடவேண்டும். அல்லது அடியோடு பணிந்து அடங்கிப்போகவேண்டும். இரண்டும் இல்லாமல் இப்படி அழக்கூடாது” என்றேன்.

“நீ கேள் தம்பி. நான் சொல்கிறேன்” என்றார் பாக்கியம்.

“பணம் நகை எல்லாம் என்ன செய்தார்?”

“குறுக்கெழுத்துப்போட்டி முதல் குதிரைப் பந்தயம் வரையில் வழிகள் இல்லையா?”

“குதிரைப் பந்தயமா?” என்று திடுக்கிட்டுக் கேட்டேன்.

“அது அவ்வளவாக இருக்காது. இவளுக்கு எப்படித் தெரியபோகிறது? அதுபோன்ற தீமைகள் உண்டு என்று சொல்லலாம். இவள் கண்ணாரப் பார்த்தது ஒன்று. யாரோ சாமியார் ஒருவரை அழைத்துவந்து அவருக்கு வேண்டிய உதவி எல்லாம் செய்திருக்கிறார். பித்தளையைப் பொன் ஆக்குவதற்கு, இரும்பைப் பொன் ஆக்குவதற்கு என்று சொல்லி அந்தச் சாமியார் காசைக் கரி ஆக்கியிருக்கிறார். அதை இவளே பார்த்திருக்கிறாள். இவள் பார்த்து இரண்டு நாள் நடந்தது. பார்க்காமல் இருபது நாள் நடந்திருக்கும். அது ஒரு காரணம். இவளை அடித்துத் துரத்தியதற்கு, இவள் இல்லாவிட்டால் எங்காவது இருந்துகொண்டு எந்த வித்தையாவது செய்துகொண்டிருக்கலாம் அல்லவா?

“அடித்தா துரத்தினார்? உண்மையாகவா?” என்று துன்புற்றுக் கேட்டேன்.

“இல்லை” என்றாள் கற்பகம்.

என் மனம் ஒரு சிறிது ஆறுதல் அடைந்தது.

“அடித்திருந்தாலும் இவள் சொல்லமாட்டாள். குடும்பத்துக்குச் செய்த தீங்கைச் சொல்வாளே தவிர, தனக்குச் செய்த தீங்கைச் சொல்லமாட்டாள். கண்ணகியும் அப்படித்தானே பொறுத்து நடந்தாள்?” என்றார் பாக்கியம். மறுபடியும் அவரே, “அதோடு உனக்குப் பிறகு அவருக்கு வேறொரு நண்பர் கிடைத்திருக்கிறார். அவர் ஆவியுலகத்தில் எல்லாரோடும் பேச வல்லவராம். இறந்துபோன திலகர், கோகலே, பாரதியார், திருவள்ளுவர், அவ்வையார், ஐந்தாம் ஜார்ஜ், விக்டோரியா எல்லாரும் அந்த நண்பரோடு வந்து பேசுகிறார்களாம். உலகம் இப்படி இப்படி ஆகப்போகிறது என்று அவரிடம் மறைக்காமல் வந்து சொல்கிறார்களாம்” என்றார்.

“இவர்கள் எல்லாம் இன்னுமா தனித்தனியாக அப்படியே இருக்கிறார்களாம்?” என்றேன்.

“என்னவோ? அப்படி ஒரு நண்பர் கிடைத்து அவருக்கு ஆசையூட்டுகிறாராம்” என்றார் பாக்கியம்.

“இருக்கும். இதை நம்புகிறேன்” என்றேன்.

“எதை? ஆவியுலகத்தையா நீ நம்புகிறாய்?” என்று பாக்கியம் கேட்டார்.

“இல்லை அக்கா, கற்பகத்தின் வீட்டுக்காரர் இதை எல்லாம் நம்பக்கூடியவர். இப்படி ஏமாறக்கூடியவர் என்று நம்புகின்றேன். ஏன் என்றால், படிக்கும்போதே அவருக்கு ஆயிரத்தெட்டு மூடநம்பிக்கைகள் இருந்தன” என்றேன்.

“எல்லாவற்றிற்கும் சேர்த்து இப்போது பயன் விளைகிறது” என்று மின்வெட்டு போல் பேசினாள் கற்பகம்.

“அந்தத் தொழிலிலேயே இருந்து கிடைப்பது போதும் என்று எளிய வாழ்க்கை வாழலாமே! அதையும் விட்டு விட்டாரே!” என்றேன்.

“நீங்களும் பக்கத்திலேயே இருந்து அதே தொழிலில் நீங்களும் இருந்திருந்தால் ஒருவேளை விடாமல் ஒட்டி இருந்திருப்பார். முதலிலேயே அரை மனத்தோடு சேர்ந்தார். எந்த ஆவி வந்து என்ன சொல்லியதோ அந்த வேலையை விட்டு விட்டார். அதைப்பற்றி என்னிடம் சொல்லவே இல்லை. தாய் வீட்டுக்கு வந்த பிறகுதான் எனக்கு அந்தச் செய்தி தெரிந்தது” என்றாள்.

“ஊரில் நெல் ஆலை வைக்கிறாராம். அதற்காகக் கொஞ்சம் பணமாவது கொடுத்து உதவியிருக்கலாம்” என்றேன்.

பாக்கிய அம்மையார் மறுமொழி சொன்னார். “அப்படிச் செய்திருக்கலாம் என்று நானும் எண்ணினேன். கற்பகத்தின் அப்பா அதற்கு ஒப்புக்கொள்ளவே இல்லை. இப்படிப்பட்டவர் நாளைக்கு எல்லாவற்றையும் அடகு வைத்து விற்றுக் குடும்பத்தை நடுத்தெருவில் விட்டுவிட்டுப் போய் விடுவார். நம்ப முடியாது. மகன் தன்னால் கெட்டான். மகள் நல்லவள். அவளும் நடுதெருவில் நின்று கலங்க வேண்டுமா? ஒருக்காலும் நிலத்தை விற்றுப் பணமாகக் கொடுக்கமாட்டேன் என்கிறார். மகளை வைத்துக் கொண்டு வாழாவிட்டாலும் சரி நிலம் விற்பதற்கு இடம் கொடுக்கமாட்டேன் என்கிறார். அவர் சொல்வதும் ஒரு வகையில் நல்லதாகத் தெரிகிறது. நாளைக்கு என்ன துன்பம் வந்தாலும், பேரப் பிள்ளைகளுக்கு விற்க உரிமை வைத்து எழுதியிருப்பதால், அந்த ஐந்து காணி நன்செய் நிலமாவது கற்பகத்தைக் காப்பாற்றும், அவளுடைய குழந்தைகளைக் காப்பாற்றும், மனம் திருந்தி வந்தால் அவளுடைய கணவரையும் காப்பாற்றும்” என்றார்.

நான் அங்கிருந்து திரும்ப இருந்த நேரத்தில், “அந்தக் காலத்தில் பெண் கேட்க வந்தபோது, அப்பா இவருக்குக் கடிதம் எழுதினார். பொய்யாகவாவது கெட்ட பிள்ளை என்று ஒரு வரி எழுதமாட்டாரா என்று கடவுளை வேண்டிக் கொண்டேன். அப்போது என் எதிர்காலத்தைப் பற்றி அண்ணனும் கவலைப்படவில்லை. இவரும் கவலைப்படவில்லை” என்றாள் கற்பகம் கண்களைத் துடைத்தபடியே.

பழைய நிகழ்ச்சியை இவள் மறக்கமாட்டாள் போல் இருக்கிறதே என்று தலைகுனிந்துபடியே திரும்பினேன். தெருத் திண்ணை மேல் வந்து உட்கார்ந்தேன். சந்திரனோடு விளையாடியும் படித்தும் காலம் போக்கியது நினைவுக்கு வந்தது. கற்பகம் அவனைப் பற்றிக் கவலைப்படவில்லையே, அவனுடைய குற்றம் குறைகளைப் பற்றிப் பேசவில்லையே. ஒருகால், அவனுடைய கதை பழங்கதையாய்ப் போயிருக்கலாம். திருத்த முடியாதவன் என்று நம்பிக்கை இழந்து விட்டிருக்கலாம் என எண்ணிக் கொண்டிருந்தேன்.

உடனே கற்பகத்தின் தந்தையைப் பார்க்கவேண்டுமே என எண்ணி, நேரே அந்த வீட்டை நாடிச் சென்றேன்.

அங்கே அவருடைய பேரன் திருவாய்மொழி சில குச்சிகளையும் நெருப்புப் பெட்டிகளையும் வைத்து விளையாடிக் கொண்டிருந்தான். அவர் ஒரு மூலையில் எதையோ ஆழ்ந்து சிந்தனை செய்தபடி உட்கார்ந்தவாறே சாய்ந்திருந்தார். என்னைப் பார்த்ததும், “வாப்’பா, கற்பகம் சொன்னாள். நான் வந்து பார்க்கலாம் என்று இருந்தேன். அதற்குள் இவனை என்னிடம் விட்டுவிட்டு அவளே அங்கே போனாள்” என்றார்.

“இங்கே வந்திருக்கிறீர்கள்” என்றேன்.

“என்ன செய்வது? பிள்ளையையும் பெண்ணையும் பெற்று வளர்த்து விட்டுவிட்டு, அவள் சுகமாகப் போய்விட்டாள். கவலை எல்லாம் எனக்கு வந்து சேர்ந்தது. பிள்ளையால் துன்பப்பட்டால் பெண்ணால் சுகப்படலாம் என்று சொல்வார்கள். எனக்கு இரண்டு வகையிலும் துன்பமே. ஊரில் இருக்க முடியவில்லை. பையனுடைய நடத்தை குடும்பத்திற்கே பழியாகிவிட்டது. உனக்குத் தெரிந்திருக்கும். அவனுடைய உடம்பும் கெட்டுவிட்டது; அது தெரியுமா?” என்றார்.

“தெரியாதே” என்றேன்.

“தொழுநோய் போல வந்துவிட்டது. உடம்பெல்லாம் பரவிவிட்டது. நாட்டு மருந்து சாப்பிட்டுப் பயன் இல்லை. இப்போது அடிக்கடி ராணிப்பேட்டைக்குப் போய் ஊசி போட்டுக்கொள்கிறானாம். அது எப்படியாவது போகட்டும் என்றால், அவனுடைய மனைவி – நல்ல பெண் – அவனிடத்தில் அகப்பட்டுக்கொண்டு சிறுமைப்படுகிறாள். அவளை மிருகம் போல் நடத்துகிறான், அடிக்கிறான், உதைக்கிறான். அதை எல்லாம் கண்ணால் பார்த்துக்கொண்டு அங்கே இருக்க முடியவில்லை. சாப்பிடவும் மனம் வரவில்லை. நாங்கள் வந்துவிட்டால், கணவனும் மனைவியும் தனியே வாழும்போதாவது அன்பாக இருக்கட்டும் என்றுதான் வந்துவிட்டேன். அந்தப் பெண்ணோ, நாங்கள் புறப்பட்ட போது கதறிக் கதறி அழுதாள். தானும் எங்களோடு வருவதாகச் சொல்லி அழுதாள். எங்கள் குடும்பம் இப்படி இந்த நிலைக்கு வரும் என்று நான் கனவிலும் நினைக்க வில்லையே” என்று அவர் கண்ணீரோடு கூறினார். பிறகு “மருமகன் செய்தி எல்லாம் சொல்லியிருப்பார்கள். நான் வேறு சொல்ல வேண்டியதில்லை. நல்ல பிள்ளை என்று எல்லாரும் சொன்னார்கள். நீயும் எழுதியிருந்தாய். அவன் இப்படி மாறிவிட்டான். எல்லாம் நான் வந்தவழி” என்று தலையில் அடித்துக் கொண்டு வருந்தினார்.

சிறிது நேரம் பேசியிருந்து ஆறுதல் சொல்லிவிட்டுத் திரும்பினேன். அவருடைய மனத்தில் மகளைப் பற்றிய கவலையைவிட மகனைப் பற்றிய கவலையே மிகுதியாக இருந்ததை அறிந்தேன். கற்பகம் முதலானவர்களுக்குச் சந்திரனுடைய வாழ்க்கை இயற்கையாகிப் பழங்கதை ஆகிவிட்டது. ஆனால் சாமண்ணாவின் மனத்தில் அது இன்னும் ஆறாப் புண்ணாகவே இருந்து வருத்தி வந்தது.

மறுநாள் சோழசிங்கபுரத்துக்குப் போய் வருவதாகச் சொல்லிப் புறப்பட்டேன். புறப்பட்டபோது அம்மா என்னைப் பார்த்து, அப்படியே தங்கை வீட்டுக்குப் போய் வா. அங்கிருந்து ஏழெட்டு மைல்தான் இருக்கும்” என்றார். சில அடி நடந்தபிறகு “அப்பா! அவள் வருவதாக இருந்தால் நீயே அழைத்துக் கொண்டு வா” என்றார்.

சோழசிங்கபுரத்தில் இறங்கி மாலனுடைய பெயரைச் சொல்லிக் கேட்டேன். நெல் ஆலை பற்றிச் சொன்னவுடனே வழி காட்டினார்கள். அங்கே சென்று கேட்டபோது அவன் ஊரில் இல்லை என்று அறிந்தேன். யாரோ ஒரு சாமியாருடன் காலையில்தான் திருத்தணிக்குப் புறப்பட்டுச் சென்றதாகவும், இன்னும் இரண்டு மூன்று நாள் கழித்துத் திரும்பக்கூடும் என்பதாகவும் சொன்னார்கள். காணமுடியாமல் போய்விட்டதே என்று வருத்தம் தோன்றியது. “அவருடைய நண்பர் ஒருவர் இங்கே லாரி வைத்திருக்கிறாராமே. அவர் யார்? எங்கே இருக்கிறார்?” என்று கேட்டேன். சொன்னார்கள். அவரைத் தேடிச் சென்றேன்.

அவரிடம் சென்று மாலனுடைய நண்பன் என்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். “ஆமாம், ஆமாம் நினைவு வருகிறது. சொல்லியிருக்கிறார். எங்கேயோ பெரிய வேலையில் சேர்ந்து பெரிய அதிகாரியாக இருக்கிறீர்களாமே, உட்காருங்கள்” என்றார்.

“அவரைப் பார்த்துவிட்டு போகலாம் என்றுதான் வந்தேன். ஊரில் இல்லையாம்” என்றேன்.

“அப்படியா? மறுபடியும் வெளியூர்க்குப் போய்விட்டாரா? எனக்குச் சொல்லவில்லையே. அவர் ஊரில் இருப்பதும் தெரிவதில்லை, போவதும் தெரிவதில்லை. பார்த்தீர்களா? நெல் ஆலை நடத்துகிற முதலாளி இப்படி அடிக்கடி வெளியூர்க்குப் போனால் தொழில் எப்படி நடக்கும்?”

“உண்மைதான்.”

“உங்கள் வேலை போல் ஒரு பெரிய வேலையாக அவருக்கும் வாங்கி கொடுத்திருக்கக் கூடாதா? பேசாமல் வேலையைச் செய்து சம்பளத்தை வாங்கிக் கொண்டு கவலை இல்லாமல் இருக்கலாமே. ஏன் இந்த வம்பு?”

“பெரிய வேலை கிடைப்பது அவ்வளவு எளிதாக இல்லையே.”

“உங்களுக்கு எப்படிக் கிடைத்தது?”

“முதல் வகுப்பில் தேறியிருந்தேன். முதல் முறையிலேயே தேறியிருந்தேன். அப்போது சில வேலைகளும் காலியாகியிருந்தன. எனக்குக் கிடைத்தது ஒரு குருட்டு வாய்ப்பு என்றுதான் சொல்ல வேண்டும். நானே இப்போது முயற்சி செய்வதாக இருந்தால் கிடைக்காது.”

“போகட்டும் என் லாரி கம்பெனியில் நூறு நூற்றைம்பது சம்பளம் தருகிறேன் என்று அழைத்தேன். அதையும் மறுத்துவிட்டார்.”

“இப்போது என்ன? இந்த நெல் ஆலையை நன்றாக நடத்தலாமே.”

“நடத்தலாம், நடத்தினால்தானே? அந்த நூறு நூற்றைம்பது ரூபாய் இதில் ஒழுங்காய் கிடைக்காதுபோல் இருக்கிறதே.”

“அய்யோ! ஏன் அப்படி? நல்ல வரும்படி கிடைக்கும் என்று சொன்னாரே!”

“இவர் அந்தப் புது ஆலை தொடங்கியவுடன், பழைய நெல் ஆலைக்காரர் இருவரும் போட்டிக்காகக் கூலியைக் குறைத்து விட்டார்கள். அவர்கள் முன்னமே லாபம் தேடிக் கொண்டவர்கள். கையில் பணம் இருக்கிறது. ஆகவே புது ஆலை வளராதபடி கெடுப்பதற்காக இப்போது லாபம் இல்லாமல் வேலை செய்யத் துணிந்துவிட்டார்கள். வேண்டும் என்றே கூலியைக் குறைத்து நெல் ஆடித் தருகிறார்கள். இன்னும் போனால், கூலி இல்லாமலே இலவசமாகவே நெல் ஆடித் தந்தாலும் தருவார்கள். முன்னமே பணம் சேர்த்திருக்கிறார்கள். அதில் கொஞ்சம் போனால் போகட்டும் என்று, துணிந்து செய்வார்கள். நம் நண்பர் என்ன செய்ய முடியும்? ஆலையை மூடவேண்டியதுதான்.”

“மூடினால், கடன்காரருக்கு வட்டி கொடுக்கவேண்டுமே அதற்கு எங்கே போவது” என்றார் பக்கத்தில் இருந்து எங்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த ஒருவர்.

“மாமனாரிடத்தில் கொஞ்சம் பணம் எதிர்பார்த்திருக்கிறார். மாமனாரோ பணத்தில் அழுத்தமானவர் போல் தெரிகிறது. ஒரு பைசாவும் கொடுக்கவில்லை” என்றார் லாரிக்காரர்.

“சே! அப்படிச் சொல்லக்கூடாது. நல்ல நன்செய் நிலமாக ஐந்து காணி மகள் பேரில் எழுதி வைத்திருக்கிறாராம்” என்றார் பக்கத்தில் இருந்தவர்.

“அதுசரி. நாளைக்கு வரும் பலாக்கனி இருக்கட்டும். இன்றைக்கு வேண்டிய களாக்கனி எங்கே?” என்றார் லாரிக்காரர். மறுபடியும் அவரே, “வந்த பெண்டாட்டியாவது இவருடைய மனம் தெரிந்து நடப்பவராகத் தெரியவில்லை. நான் ஒன்று சொல்கிறேன். மனைவி சரியாக இருந்தால் யாருக்குமே சாமியார் பைத்தியம் பிடிக்காது. இந்த ஆள் சாமியார் சாமியார் என்று யார் யார் பின்னாலோ சுற்றுகிறார். இந்த அளவுக்கு அந்த அம்மா இவரை விட்டிருக்கக் கூடாது. அந்த அம்மாவே வீட்டிலே பூசை பண்டிகை சடங்கு மந்திரம் தந்திரம் என்று பலவகையான அமர்க்களங்கள் செய்து கொண்டிருந்தால், இவருக்கு அதிலே சலிப்பு ஏற்பட்டுப் போயிருக்கும். இப்போது இவரே அல்லவா அவற்றை எடுத்துக்கொண்டு அலைகிறார்.”

“அந்த அம்மா விட்டுக்கொடுத்து நயமாகப் பழகத் தெரியாத பேர்வழிபோல் இருக்கிறது” என்றார் பக்கத்தில் இருந்தவர்.

“ஆமாம் ஆமாம். எதற்கு எடுத்தாலும் சட்டம் பேசுகிற மனைவியாம். அதனால் ஒத்துப்போக முடியவில்லையாம். வாழ்க்கை ஏறுமாறாகப் போயிற்று. இவருக்குத் தெரியாதிருக்குமா? நாம் சொல்ல வேண்டுமா?” என்று சிகரெட் பெட்டியை எடுத்து என்னிடத்தில் நீட்டினார். நான் அன்போடு மறுக்கவே பக்கத்திலிருந்தவரிடம் நீட்டினார், இருவரும் புகைத்தார்கள்.

நான் பேசாமலே இருப்பது நன்றாக இருக்காது என்று எண்ணி, “ஆனாலும் கடன்பட்டு இந்த ஆலை தொடங்கியிருக்கக் கூடாது” என்றேன்.

“தொடங்கின பிறகு அக்கறையாகக் கவனிக்கவேண்டும். இது என்ன ஆபீஸ் வேலையா? ஐந்து மணி நேரம் வேலை செய்துவிட்டு பிறகு துண்டை உதறித் தோள் மேல் போட்டுக் கொண்டு போகக்கூடிய வேலையா இது? அங்கே வேலைக்கு ஒரு நேரம், பொழுதுபோக்குக்கு ஓர் இடம், சாப்பாட்டுக்கு ஓர் இடம் ஒரு நேரம் என்று எல்லாம் ஒழுங்காக இருக்கும். இங்கே வியாபாரத்தில் இந்தத் தொழிலில் நடக்குமா? காலையில் எழுந்து பல்லைத் துலக்கிக் கொண்டு வந்து விட்டால், தொழில் பொழுது போக்கு சாப்பாடு வேடிக்கை வம்பு தூக்கம் எல்லாம் இங்கேயே வைத்துக் கொண்டு பன்னிரண்டு மணி நேரமோ இருபது மணி நேரமோ இருந்தே ஆகவேண்டும். அப்படி இருந்தால் வேலையாட்களை வேலை வாங்க முடியும். சில நாட்களில் நெருக்கடியாக இருக்கும்போது மனைவி மக்கள் நினைவும் எங்களுக்கு வருவதில்லை. உங்கள் நண்பர் ஒரு நாளாவது அப்படி ஆலையில் உட்கார்ந்து வேலை செய்திருப்பாரா? கேட்டுப் பாருங்கள். ஒரு தொழிலில் இறங்கினோமா, ஒரே உறுதியாக இறங்கிவிடவேண்டும். அப்புறம் வேறு எதைப் பற்றியும் கவலைப்படக்கூடாது. வேறு எதிலும் ஈடுபடக்கூடாது” என்றார்.

“நீங்கள் சொல்லக்கூடாதா?”

“இந்தக் கல்வி எல்லாம் சொல்லி வரக்கூடாது. சொல்லாமலே பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டும். எங்களுக்கு யார் சொல்லிக் கொடுத்தார்கள்?” என்றார்.

“அப்படியும் சொன்னோம். பயன் இல்லை” என்றார் பக்கத்தில் இருந்தவர்.

அப்படியே சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்து அவர்களோடு தேநீர் அருந்திவிட்டு விடைபெற்றேன்.

வள்ளிமலைப் பக்கமாகப் போகும் பஸ் பற்றிக் கேட்டு நடந்தேன். பஸ் ஏறி உட்கார்ந்தவுடனே மாலனுடைய நண்பர்கள் சொன்னவற்றை எல்லாம் எண்ணி எண்ணி அவனுக்காக வருந்தினேன். கற்பகத்தைப் பற்றி அவர்கள் சொன்னதை என்னால் நம்ப முடியவில்லை. சாமண்ணாவைப் பணத்தில் அழுத்தக்காரர் என்று சொன்னதுபோல், அதுவும் பொய்யோ; எல்லாம் மாலன் வேண்டுமென்றே அவர்களிடம் சொல்லி வைத்த பொய்கள் என்று உணர்ந்தேன்.

வள்ளிமலையில் இறங்கித் தங்கையின் கணவருடைய பேரைச் சொல்லி, ஆசிரியர் வீடு எங்கே என்று கேட்டுச் சென்றேன். வீட்டின் வாயிலில் நின்றதும் தங்கை ஏதோ புத்தகம் படிப்பது கேட்டது. மைத்துனர் பாயில் படுத்தவாறே கேட்டுக்கொண்டிருந்ததைக் கண்டேன். என்ன புத்தகம் என்று அறிவதற்காக அமைதியாக நின்றேன். சாரதாமணி அம்மையார் என்று பெயர் கேட்டதால் அவருடைய வரலாறாக இருக்கலாம் என்றும் எண்ணினேன். அதற்குள் யாரோ ஒரு பையன் என் பக்கத்தில் வந்து நின்று, “அய்யா! யாரோ ஒருத்தர் உங்களைப் பார்க்க வந்திருக்கிறார்” என்று சொன்னான். அவனுடன் வேறுயாராவது வந்திருக்கிறாரா என்று திரும்பிப் பார்த்தேன். ஒருவரும் இல்லை, என்னைத்தான் சொல்கிறான் என்று உணர்ந்தேன்.

மைத்துனரும் தங்கையும் எழுந்து வந்து அன்போடு வரவேற்றார்கள். ஊரில் அம்மா அப்பா பொய்யாமொழி எல்லோரைப் பற்றியும் கேட்டார்கள், பாக்கியத்தைப் பற்றியும் கேட்டார்கள், என் மனைவியைப் பற்றியும் குழந்தை மாதவியைப் பற்றியும் கேட்டார்கள்.

அந்தப் பையன் வந்து, அய்யா என்று விளித்தது என் காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது. “யார் அந்தப் பையன்?”

“எங்கள் பள்ளிக்கூடத்தில் ஆறாம் வகுப்பில் படிக்கிற மாணவன்” என்றார் மைத்துனர்.

“சார் என்று அழைக்காமல் அய்யா! என்று விளிக்கிறானே” என்றேன்.

“சார் சார் என்று தான் சொல்லிக்கொண்டிருந்தார்கள். இந்த ஊருக்கு வட நாட்டார் ஒருவர் வந்தார். சார் சார் என்று மாணவர்கள் சொன்னது அவருக்கு வெறுப்பாக இருந்தது. ‘உங்கள் நாட்டில் சிதம்பரம் பிள்ளை, பாரதியார், போன்ற பெரிய பெரிய தேசபக்தர்கள் பிறந்திருக்கிறார்கள். ஆனாலும், அந்நியமோகம் இப்படி இருக்கிறதே. உங்களுக்குள் ஒருவரை ஒருவர் சார் என்று ஆங்கிலத்தில் அழைக்கிறீர்களே. நம்முடைய தாயாரை டியர் மதர் என்று அழைத்தால் நன்றாக இருக்குமா? நாங்கள் எங்களை மறந்திருக்கும்போதும் சார் என்று சொல்லமாட்டோம். எங்கள் தாய்மொழியில் ‘ஜீ’ என்றுதான் சொல்வோம். வேண்டுமானால் எங்கள் நாட்டுக்கு வந்து பாருங்கள் பள்ளிக்கூடம், கடைத்தெரு, ஆபீஸ், விளையாடும் இடம், உணவுக்கடை எங்கே வேண்டுமானாலும் வந்து பாருங்கள். எங்கள் நாட்டார் ஜீ ஜீ என்று தான் ஒருவரை ஒருவர் அழைப்பார்கள். இங்கே கிராமங்களில் பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளையே இப்படி கெடுக்கிறீர்களே’ என்று மிக மிக வருத்தப்பட்டார். அவருடைய உருக்கமான பேச்சைக் கேட்ட பிறகுதான், நாம் செய்யும் தவறு எனக்குப் புலப்பட்டது. அன்று முதல் மாணவர்களுக்குச் சொல்லி மாற்றிவிட்டோம்” என்றார் மைத்துனர்.

பிறகு தங்கையின் எளிய குடும்ப வாழ்க்கையைக் கண்டேன். ஒரு கட்டிலும் இல்லை. மெத்தையும் இல்லை. தங்கையின் உடம்பு முன்னைவிட மெலிந்திருந்ததையும் கண்டேன். உண்ண உட்கார்ந்த போது உணவின் எளிமையும் கண்டேன். தாய்வீட்டில் இது நன்றாக இல்லை, அது நன்றாக இல்லை என்று உணவில் குறைசொல்லிக் கொண்டிருந்தவள் இங்கே மிளகு நீரும் சோறும் இருந்தால் போதும் என்று வாழ்கின்றாளே என வருந்தினேன். குடும்பம் நடத்தும் முறை பற்றிச் சில கேட்டேன். வாரத்திற்கு இரண்டு நாள் மட்டுமே இட்டளியும் தோசையும் செய்வதாகவும் மற்ற நாட்களில் சிற்றுண்டியோ காப்பியோ இல்லை என்றும் அறிந்தேன். வரும் சம்பளத்திலேயே பத்து ரூபாய் மைத்துனருடைய பெற்றோர்க்கு அனுப்பப் படுவதாகவும் அறிந்தேன். விருந்தினர் வருகையாலோ நோய் காரணமாகவோ செலவு மிகுதியாகிவிட்டால், அதற்கு ஈடு செய்யும் வகையில் நெய் முதலிய சில பொருள்களை வாங்குவதில்லை என்றும், எதற்கும் வேலையாட்களே இல்லாமல் எல்லாக் கடமைகளையும் தானே செய்து வருகிறாள் என்றும், அடுத்த ஆண்டில் ஒரு தையல் பொறி வாங்கிக் கணவருடைய சொக்காய்களையும் தானே தைக்கக் கற்றுக்கொள்ள எண்ணம் உண்டு என்றும் அறிந்தேன். உடனே நான் அந்தத் தையல் பொறியின் விலையைத் தருவதாகச் சொல்லி மகிழ்வித்தேன். “வேண்டாம் அண்ணா! நகரத்தில் வாழ்க்கை நடத்தும் உங்களுக்கு எவ்வளவோ செலவுகள் ஏற்படும். இந்தத் துன்பம் வேண்டா” என்றாள். அதனால் ஒரு துன்பமும் இல்லை என்று சொல்லிவிட்டு வந்தேன். “இப்போது ஊருக்கு வரவில்லை. அடுத்த விடுமுறையின் போது இருவரும் வருவோம்” என்று கூறி எனக்கு விடை கொடுத்தாள்.

ஊருக்கு வந்ததும், தங்கையை ஏன் அழைத்து வரவில்லை என்ற கேள்வியைத்தான் முதலில் அம்மா கேட்டார். பிறகு தங்கையின் குடும்ப வாழ்க்கையைப் பற்றிக் கேட்டார். தையல் பொறி வாங்கும் முயற்சிக்கு நான் பண உதவி செய்யப்போவதைக் கூறியவுடன் அம்மாவின் முகத்தில் ஒரு தனி மகிழ்ச்சி ஏற்பட்டது.

பிறகு சோழசிங்கபுரம் பற்றிப் பேச்சு வந்தது. மாலன் ஊரில் இல்லாததைச் சொன்னபோது, எல்லோர்க்கும் பெரிய ஏமாற்றம் ஆயிற்று.

– தொடரும்…

– மு.வரதராசன் இந்நாவலை 1958-ல் எழுதினார். அவருடைய ‘தாயகம்’ பதிப்பகம் வெளியிட்டது. இந்நாவலுக்கு 1961-ல் சாகித்ய அகாதமி விருது அளிக்கப்பட்டது.

– நன்றி: https://www.projectmadurai.org/

மு.வரதராசன் மு.வரதராசன் (மு.வ. என்று சுருக்கமாக அழைக்கப்படும் மு. வரதராசனார்) இருபதாம் நூற்றாண்டின் மிகவும் புகழ்பெற்ற தமிழ் அறிஞர், எழுத்தாளர், நாவலாசிரியர் மற்றும் கல்வியாளர் ஆவார். இவர் ஏப்ரல் 25, 1912 இல் பிறந்து அக்டோபர் 10, 1974 இல் இயற்கை எய்தினார். எளிய தமிழ் நடையில் திருக்குறளுக்கு இவர் எழுதிய தெளிவுரை தமிழக மக்களிடையே இன்று வரை மிகவும் பிரபலமாக உள்ளது. டாக்டர் மு.வ. பற்றிய முக்கியத் தகவல்கள் பின்வருமாறு:…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *