குப்பைமேடு
கதையாசிரியர்: இயக்குநர் ஏ.காசிலிங்கம்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி நாடகம் முத்தாரம்
கதைப்பதிவு: July 2, 2026
பார்வையிட்டோர்: 94
(1956ல் வெளியான நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஓரங்க நாடகம்
கதாபாத்திரங்கள்:
மாடசாமி- ஏழை ஆதி திராவிடன். விவசாயி.
முத்தாயி – அவன் மனைவி.
பேச்சி – அவள் ஒன்றுவிட்ட சகோதரி.
நல்ல கண்ணுப்பிள்ளை – பண்ணையார்.
ஏழுமலை, சுடலையாண்டி – பண்ணை அடியாட்கள்.
இசக்கி மாடன், காத்தான் – சேரி வாழ்வோர்
மற்றும் போலீஸார் – சேரி மக்கள்.
இடம்: சேரி வீதி
காலம்: உச்சிவேளை
(பூதப்பாண்டி என்ற ஊரை அடுத்த சேரி ஒன்றின் ஓர் குடிசையின் வெளிப்புறம். ஒட்டுத் திண்ணையின் ஓரமாக முற்றத்தில் கயிற்றுக் கட்டில் ஒன்று கிடக்கிறது. திண்ணையின் ஓர் பக்கத்து மூலையில் ஏர்க்கால்கள் சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருக்கின்றன. குடிசையின் இடப்புறமாக பின்புறம் செல்லும் பாதையொன்று தெரிகிறது. கரடு முரடான முற்றத்தின் தோற்றம் சமுதாயத்தின் மேடு பள்ளத்தை வெளிப்படுத்துவது போல் ஒழுங்கற்று அவலட்சணமாகக் காட்சியளிக்கிறது. குடிசையின் வலப்புறத்தில் சிறிது தொலைவில் ஓர் கிணறு. அதைச் சுற்றி அரையடி உயரத்தில் மண்சுவர் எழுப்பப்பட்டிருக்கிறது. அருகில் தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டிருக்கும் மண் தோண்டி யொன்றும், பாளை மட்டையாலாகிய தண்ணீர் இறைக்கும் பட்டையொன்றும் கிடக்க, சேறும் சகதியும் நிறைந்த அந்த இடம் பார்ப்பதற்கு அருவருப்பைக் கொடுக்கும் வண்ணம் அமைந்திருக்கிறது. அதை அதிகப் படுத்துவதற்காகத் தானோ என்னவோ, பன்றியொன்று தனது குட்டிகளுடன் சேர்ந்து சகதியைக் கிளறிக்கொண்டு நிற்கிறது.
மாடசாமி அந்தச் சேரிவாழ் ஏழை வயது சுமார் இருபத்தாறு அல்லது இருபத்தேழு இருக்கும், கட்டுமஸ்தான உடம்பு. உருவம் கறுப்புத்தான். அழகனுமல்ல. இருந்தும் பார்க்கும் போது வெறுப்புத் தோன்றுவதில்லை. கிணற்றிலிருந்து தண்ணீர் மொண்டு தனது முகம் கை கால்களைக் கழுவுகிறான். தலையில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்து உடம்பைத் துடைத்தவாறு கயிற்றுக் கட்டிலின் மேல் போய் உட்காருகிறான். வேலை செய்து விட்டு வந்த களைப்பு அவனது முகத்தில் தெரிகிறது.)
மாட: (சிறிது கடு கடுப்புடன்) ஏ பிள்ளே முத்தாயி! இன்னும் அங்கே என்ன பண்ணிட்டிருக்கே? சீக்கிரம் வா.
முத்தாயி: (குரல் மட்டும் உள்ளேயிருந்து கேட்கிறது.) என்ன மச்சான்! அங்கே வெளியிலே திண்ணையிலே உட்கார்ந்துகிட்டு… உள்ளே வாயேன்.
மாட: இல்லே இல்லே. இங்கேயே கொண்டுவா.
(முத்தாயி கஞ்சிக்கலயத்தை தூக்கிக்கொண்டு வருகிறாள். அவளுக்கு வயது சுமார் இருபது, இருபத்தொன்றிருக்கும். சுமாரான உயரம். அவளது அங்கங்கள் ஒவ்வொன்றும் உருண்டு திரண்டு வளர்ச்சியின் முழுமை பெற்று தோற்றமளிக்கின்றன. அதிகமாகவோ குறைவாகவோ இருந்தால் எங்கே தங்களின் இயற்கை கெட்டு விடுமோ என்ற பயம் போலிருக்கிறது அவைகளுக்கு. நடையின் துள்ளல், பார்வையின் மிரட்சி, அசைவின் மிடுக்கு – ஒவ்வொன்றும் அவைகளது இலக்கணத்துக்கு வரம்பு கட்டிவிட்டன போலிருக்கின்றன. முத்தாயி ஒரு சிறிய கலயத்தில் கஞ்சியை ஊற்றி மாடசாமியின் கையில் கொடுக்கிறாள். அவன் அவளையே உற்று நோக்குகிறான்.)
முத்: (கிண்டலுடன்) என்னா மச்சான்! பசியாலே துடிச்சுப் போயிட்டியா?
மாட: போடி- மாடுமாதிரி வெயில்லே நிண்ணு உழைச்சா, அப்போ தெரியும் உனக்கு.
முத்: ஆமா – நான். மாடி வீட்டு மெத்தையிலே உட்காந்திட்டு பாலும் பழமும் சாப்பிட்டுகிட்டு கொலு வச்சு விளையாடிகிட்டிருக்கேன் பாரு, எனக்கு தெரியாது – சரி – சரி- நீ கஞ்சியைக் குடி.
(அவனருகில் உட்கார்ந்து கொள்ளுகிறாள். மாடசாமி சாப்பிட்டுக்கொண்டே ஆசையோடு அவளது முகத்தைப் பார்க்கிறான். சிறிது வெட்கமுடன் தலை குனிந்துகொள்கிறாள் முத்தாயி.)
முத்: அது ஏன் மச்சான் அப்படிப் பாக்கிறே?
மாட: இல்லே. இந்த என் முத்தாயி கண்ணுக் குட்டி இப்படியெல்லாம் எங்கே பேச கத்துக்கிட்டுதுண்ணுதான். நீ பேசும்போது உன் கண்ணு அடிக்கிற அடியே ஒரு தனி ஜோர்தான்.
முத்: (வெட்கமுடன்) சும்மா இரு மச்சான். பட்டப்பகல்லே கொஞ்ச ஆரம்பிச்சுட்டே! (சட்டியிலிருந்து இரண்டு மிளகாய்த் துண்டுகளை எடுத்து நீட்டியவாறு) இந்தா. இந்த மிளகாத்துண்டை கடிச்சுக்கோ.
மாட: வேண்டாம். வேண்டாம். நீ அடிக்கடி சிடு சிடுன்னு பேசினாப் போதுமே, அதே மிளகா கடிச்சு கிட்ட மாதிரிதான் இருக்கும். சரி – இன்னும் கொஞ்சம் கஞ்சி ஊத்து.
(கஞ்சி ஊற்றுகிறாள். அதை வாங்கி சாப்பிட்டுக்கொண்டே முத்தாயியைக் கடைக் கண்ணால் கவனிக்கிறான் மாடசாமி)
மாட: (மெதுவாக புன்முறுவலுடன்) ஏய், முத்தி.
முத்: ம்…ம்…
மாட: இப்போ நம்மைப் பாத்தா யாருமாதிரி இருக்கு?
முத்: (சிரிப்பை அடக்கிக் கொண்டு) ஏ மச்சான், நீ பேசாமே சாப்பிட மாட்டே!
மாட: சொல்லு பிள்ளே!
முத்: ம்…ம்… சொல்ல மாட்டேன்.
மாட: அட சொல்லுன்னா!
முத்: பார்வதி பரமசிவம் மாதிரி யிருக்கு. (வெட்கத்தால் தலையைக் கவிழ்த்துக் கொள்கிறாள்.)
மாட: அப்படிச் சொல்லு. எம் முத்தாயிக் குட்டிக்கு எப்பவும் சாமிங்க மாதிரி இருக்கணும் ணுதான் ஆசை. ஆமா முத்தி, உனக்குத் தெரியுமா, பெரிய பெரிய சாமிங்களெல்லாம் என்ன பண்ணிச்சுதுன்னா?…
முத்: என்ன பண்ணிச்சுதாம்?
மாட: நீ கேட்டிருக்கயில்லே கதை, யாரோ கிட்டுணசாமி யாமே – அவரு மாடு மேய்க்கறப்போ. அந்தப் பக்கமா போற சின்ன இடக்குட்டிகளா பாத்து…
முத் மச்சான். மச்சான். இந்த பாரு. உங்கிட்ட எத்தனை தடவை சொல்றது – பெரிய பெரிய சாமிங்களை யெல்லாம் கிண்டல் செய்யாதேன்னு!
மாட: போ பிள்ளே – கிண்ட லுமில்லே – ஒண்ணுமில்லே. நிசமாத்தான். ஒரு நாளு அந்தச் சாமிக்கு ஏதோ ஆசை தோணிச்சாம். அப்போ பக்கத்து ஆத்துலே இடப் பொம்பளைங்க ளெல்லாம் குளிச்சிகிட்டிருந்தாங்களாம். அப்போ இந்த சாமி என்ன செஞ்சுதாம் தெரியுமா?
முத்: என்ன செஞ்சுதாம்?
மாட: ஓடியே போயி. அவுங்க சேலைங்களை யெல்லாம் தூக்கி கிட்டு ஒரு மரத்துமேலே ஏறி உட்கார்ந்துகிட்டுதாம்.
முத்: ஐயய்யே – அப்புறம்? மாட: இந்த பொம்பளைங்களெல்லாம் ஒண்ணா போயி ‘கிட்ணா! சேலையைத் தந்திடு’ ண்ணு கெஞ்சிக் கூத்தாடினாங்களாம்.
முத்: பிறந்த மேனியோடா?
மாட: அதெப்படியோ, அதாருக்குத் தெரியும். இந்த சாமி சொல்லிச்சாம் – கையெடுத்துக் கும்பிட்டாத்தான் தருவேன்னு!
முத்: ஐயே! கர்மம் கர்மம் – சாமியா இப்படிச் சொல்லிச்சு? நீ சும்மா சொல்றே மச்சான்; உனக்குப் பிடிக்காம.
மாட: இல்லே முத்தி! நிசமாத்தான் சொல்றேன். ஏதோ கிருஷ்ணலீலாவாமே. அது சினிமா படமாக்கூட வந்துதே – நான் கூட போய்ப் பார்த்தேன். நிசமாத்தான்.
முத்: போ மச்சான். கிட்ண சாமி ஐயமாரு சாமி! அதெல்லாம் பத்தி நம்ம ஒண்ணும் சொல்லக் கூடாது. நாக்கு அழுகிப் போகும்.
மாட: பாத்தியா புள்ளே. ஐயமாரு சாமின்னாலே ஒரு தனி மதிப்பு – அவா காரியமே நமக்குப் புரியாது. ஏன் நம்ம சாமிகளெத்தான் பாரேன்.
முத்: ஏன், நம்ம சாமிகளுக் கென்னவாம்?
மாட: நம்ம சாமிகளுக் கென்ன? எப்பவும் சுடுகாட்டிலே சுத்திகிட்டிருப்பாங்க. பாரேன், சுடலைமாடன், காட்டேரி, பூதத்தான். இசக்கி. எல்லாம் குடலைப் பிடுங்கி மாலையாப் போட்டிருப்பாங்க – மண்டையோட்டை கட்டி தொங்க விட்டிருப்பாங்க.
முத்: சாமின்னா அவ்வளவு பொல்லாதவங்களாத்தான் இருப்பாங்க. அப்பதான் உன்னைப் போலொத்த வங்களெல்லாம் பயப்படுவாங்க, வேண்டாதது செய்ய.
மாட: ஏன். நம்ம சாமி கொண்டாடி கருப்பண்ணன் இல்லே, அவன் எப்பவும் சாராயக் கடைதானே கிடைன்னு கிடக்கிறான்.
முத்: நீ மாத்திரம் என்னவாம். கள்ளுக்கடைதானே பழின்னு கிடந்தே – முத்தாயின்னு ஒருத்தி இருக்கான்னு கூட கவலையில்லாமே.
மாட: பிள்ளே – நான்தான் உனக்கு சத்தியம் செய்து கொடுத்திருக்கேனே. பண்ணையாரு கடன் தீருவதுவரை கள்ளுக்கடைப் பக்கமே எட்டிப் பார்க்க மாட்டேன்னு.
முத் (சிறிது கோபத்துடன்) பாத்தியா பாத்தியா… கடனை திருப்பிக் கொடுத்துட்டு பழயபடி போவேன்னு தானே சொல்றே!
மாட: போ பிள்ளை! எதுக்கெடுத்தாலும் சந்தேகப்பட்டுக்கிட்டு.
(அப்போது இறைக்க இறைக்க ஓடிவந்து நிற்கிறான் இசக்கி மாடன்.)
இசக்கி: (பதறியவாறு) அண்ணேன். ஓடியாண்ணேன். அங்கே வந்து பாரண்ணேன்!
(மாடசாமியும் முத்தாயியும் ஒன்றும் புரியாது திகைக்கின்றனர். அவனைப் பார்த்தபடியே.)
இசக்கி: அங்கே வந்து பாரு – பண்ணையார் வீட்டு மாட்டு மந்தை உன் வயலை என்ன பண்ணுதுண்ணு.
மாட: (திடுக்கிட்டு எழுந்து) ஆ! என்ன?
இசக்கி: உன் வயலு முழுக்கவும் மேஞ்சுட்டுது.
மாட, முத்: ஐயோ! அப்படியா!
(மாடசாமி அலறியபடி ஓடுகிறான் கையை அலம்பவும் மறந்தவாறு. இசக்கிமாடனும் பின்தொடருகிறான். முத்தாயியும் எழுந்து சென்று தெருக்கோடியில் நின்று கவனிக்கிறாள். தொலைவில் மாடுகளை அடித்து விரட்டும் கூக்குரல் கேட்கிறது. இதுதான் தருணம் என்று கண்டு கொண்ட அங்கு வந்த நாயொன்று. கலயத்திலிருந்த கஞ்சியைக் குடிக்க ஆரம்பிக்கவே அதைக் கல்லெடுத்தடித்து விரட்டியவாறு பேச்சி வருகிறாள். நாய் குரைத்துக் கொண்டே வெளியே ஓடுகிறது. பேச்சிக்கு முத்தாயியின் வயது தான் இருக்கும். சிறிது நன்றாக உடை உடுத்தியிருக்கிறாள். ஏதோ கையிலும் கழுத்திலும் ஒன்றிரண்டு நகைகள் கிடப்பதாலோ என்னவோ முத்தாயியைவிட சிறிது அழகாகவே காணப்படுகிறாள்.)
பேச்சி: என்னக்கா இது! நாய் கஞ்சியைக் குடிப்பதைக் கூட கவனிக்காமே அங்கென்ன பார்த்துக்கிட்டிருக்கே?
(சப்தம் கேட்டு திரும்பிய முத்தாயி உருண்டு கிடக்கும் கஞ்சிக் கலயத்தைப் பார்த்ததும் திடுக்கிட்டு அதை எடுத்து சரியாக வைத்து விட்டு.)
முத்: அட கட்டயிலே போற் சவமே! கஞ்சி ஒண்ணுமில்லாமே குடிச்சிட்டுதே! (பேச்சியைப் பார்த்து) வா பேச்சி – எப்ப வந்தே?
பேச்சி: அப்படி அங்கே என்னக்கா ஒரேயடியா எல்லாத்தையும் மறந்துட்டு…?
முத்: இல்லே பேச்சி – எங்க வயல் மேலே பண்ணையார் வீட்டு மாட்டு மந்தை வந்து விழுந்துட்டுதாம். மச்சான் ஓடியிருக்கார் விழுந்தடிச்சு, பயிரெல்லாம் ரொம்ப நல்லாயிருந்தது. என்ன ஆச்சோன்னு தெரியல்லே!
பேச்சி: சரி சரி! அவ்வளவு தூரத்துக்கு வந்துட்டானுகளா!
முத்: என்ன பேச்சி?
பேச்சி: என் பள்ளன் சொன்னது சரியாத்தான் போச்சுது.
இந்த வருஷம் மாடசாமி வயலு நல்லா விளைஞ்சு கிடக்குது – பய கடனையெல்லாம் திருப்பிக் கொடுத்திடுவான் போலிருக்கு – பிறகு அவன் பண்ணைக்கு அடங்கி ஒடுங்கி கிடக்கமாட்டான் – இப்படி பேசிக்கிட்டிருந்தாங்களாம் பண்ணை ஆட்கள். பண்ணையாரே தான் ஏவி விட்டிருப்பாரு.
முத்: போ பேச்சி, நம்ம பண்ணை எஜமான் அப்படிப் பட்டவரில்லே. தங்கமானவரு. நான் கூட அவுங்க தோட்டத்திலே போயி வேலை செஞ்சுகிட்டுத்தான் வந்தேன்.
பேச்சி: போக்கா! உனக்கு ஒண்ணுமே தெரியாது; வேலை ஆகணும்ணா நல்லா பேசுவாங்க. இது பண்ணை வளமை.
முத்: உனக்கு எப்பவும் மேல் ஜாதி ஆளுங்களை திட்டுறது தான் வளக்கமாப் போச்சு. உன் பள்ளனுக்கு கொஞ்சம் நிலமிருக்குதுங்கிற தைர்யம் உன்னை அப்படிப் பேச வைக்குது. என்ன இருந்தாலும் இந்த வருஷம் நாங்க பண்ணையாரு கடனை அடைச்சிடுவோம்.
பேச்சி: அதுதான் தெரியுதே! அதோ, அந்தக் காளைகளை பாத்தாலே தெரியல்லே, சொர்க்க லோகத்துக்கு எவ்வளவு சீக்கிரம் போகலாம்ணு காத்துக்கிட்டிருப்பது.
முத்: ஏதோ எஜமான் மட்டும் கடன் கொடுக்கலேன்னா அந்த மாடுங்களைக்கூட வாங்கியிருக்க முடியாது. பட்டினி கிடந்து செத்திருக்கத்தான் வேணும். இப்போ ஏரடிக்கிற பணமாவது மிஞ்சுது.
பேச்சி: ஆமாமா! இல்லேன்னா கள்ளுத் தண்ணி கிடைச்சிருக்காதில்லே.
முத்: போடி, என் பள்ளனைப்பத்தி ஏதாவது சொல்லல் லென்னா உனக்கு தலை வெடிச்சுப் போகும். நான்தான் சொல்லியிருக்கேனே அதெல்லாம் விட்டு ரொம்ப நாளாச்சுன்னு.
பேச்சி: உங்களுக்காகத் தானே உங்க வீட்டுப் பக்கத்திலேயே கள்ளுக் கடையை வச்சிருக்கான். மாடன் குடிக்கறதை விடலேன்னாலும் இனி நம்ம சர்க்கார் ஒண்ணும் கள்ளுக் கடையை விட்டு வைக்கப் போறதில்லே.
முத்: ஆமா. சர்க்காரு ரொம்ப கிளிச்சிடும்.
பேச்: பாரேன். இனி கள்ளுக் குடிக்கக் கூடாதுன்னு சட்டம் வரப்போகுதாம். கள்ளுக்கடை யெல்லாம் எடுக்கப் போறாங்க.
முத்: ஆமா, எடுத்து கிளிச்சாங்க. எடுத்துட்டு வேணும்ணா வீட்டுக்கு வீடு சாராயம் காய்ச்ச சொல்லிக் கொடுப்பாங்க.
பேச்: அப்போ கள்ளு போயி உனக்கு சாராயம் கிடைக்கும்ணு சொல்லு.
முத்: (முறைத்து) ஏ பேச்சி! என்னையும் குடிகாரின்னு சொல்றியா?
பேச்: ஐயய்யே! அப்படி யாரு சொல்லுவாங்க. புருஷனும் பெஞ்சாதியும் கள்ளு குடிக்க மாட்டாங்க. தண்ணியிலே நீஞ்சுவாங்கண்ணு சொல்றேன். அதோ இசக்கி மாடன் வர்ராப் போல இருக்கு.
(முத்தாயி ஆவலோடு திரும்பிப் பார்க்கிறாள். இசக்கி மாடன் சோர்வுடன் வருகிறான். முத்தாயி முகத்தில் பயமும் ஏக்கமும் குடிகொள்ளுகிறது.)
முத்: என்ன இசக்கி! என்ன ஆச்சுது?
இசக்கி: அக்கா! வயலையெல்லாம் குட்டிச் சுவராக்கிப் போட்டுது மாடுங்க. எனக்கே அந்த வயத்தெரிச்சலைப் பாக்க சகிக்கலை. பின்னே அண்ணனைக் கேட்கணுமா! கண்ணு மூக்கு தெரியாமெ மாடுகளை நொறுக்கி எறிஞ்சுட்டான். அங்கு நிண்ணுகிட்டிருந்த பண்ணையாட்கள் தடுத்தாங்க. ஒரே கலாட்டவாப் போச்சு. திடீர்ணு பண்ணை எஜமானே ஆட்களோடு வந்துட்டாரு. நான் அண்ணனை எவ்வளவோ சமாதானப் படுத்திப் பார்த்தேன். கேட்டாத்தானே அண்ணன் – எஜமான்னுகூட பார்க்காமே தாறுமாறா பேச ஆரம்பிச்சுட்டான். உடனே சுத்தியிருந்த கூலிக்காரப் பசங்களெல்லாம் சேர்ந்து அண்ணனை மொத்து மொத்துன்னு மொத்த ஆரம்பிச்சுட்டாங்க.
முத்: ஹா! நீ என்ன, பாத்துக்கிட்டா இருந்தே?
இசக்கி: நான் என்னக்கா செய்ய முடியும்? ஆனால் அண்ணன் ஒண்ணும் விடல்லே. அப்போ அவனுக்கு எங்கிருந்து தான் அவ்வளவு பலம் வந்ததோ தெரியல்லே. எல்லாரையும் அடிச்சு தூர தள்ளிக்கிட்டு ஓடிட்டான், ஆனால் ஓடும் போது ஏதோ சொல்லி கருவிக் கிட்டேபோனான். எஜமான் கூட சப்தம் போட்டாரு. உட னே ரூபாயை திருப்பிக் கொடுக்கல்லேன்னா ஜெயில்லே புடிச்சு வச்சுடுவேன்னு.
முத்: பேச்சி! என்ன நடக்குமோ, தெரியலியே?
பேச்: நீ ஒண்ணும் பயப்படாதே அக்கா. பணக்காரங்களுக்கு என்ன. ஏதாவது சொல்லி பயமுறுத்துவாங்க. அவ்வளவுதான்.
முத்: மச்சான் வேறு எங்கு போனாரோ தெரியல்லியே.
பேச்: எங்கே போயிருப்பான் ? நேரே கள்ளுக்கடைக்குத்தான் போயிருப்பான்.
முத்: அதுதானே பேச்சி பயமாயிருக்கு. குடி வெறியிலே போயி ஏதாவது ஒண்ணுக்கு ரெண்டா செஞ்சு வச்சுட்டார்னா? இசக்கி, நீ போ இசக்கி – மச்சான் எங்கேயிருக்கார்னு பாத்துட்டு வா. ஆத்திரத்திலே ஏதாவது நடந்துடப் போவுது.
பேச்: சரி அக்கா – அது வேற அவுங்களுக்குள்ளே பேசிக்கிட்டாங்க, மாடுங்க கால்களை ஒடிச்சதுக்கு இந்தப்பயலை போலீஸ் லாக்கப்பிலே தள்ளி உதைச்சாத்தான் புத்தி வரும்ணு . போலீஸைக் கூட கூப்பிட ஆள் போயிருப்பாங்க போலிருக்கு.
முத்: (பயந்தவாறு) மச்சான் எங்கிருந்தாலும் மெதுவா இங்கே வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடு இசக்கி.
(இசக்கிமாடன் போகிறான். அவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறாள் முத்தாயி.)
பேச்: அக்கா! பண்ணை எஜ மான் நல்லவங்க நல்லவங்கன்னு அளந்து கிட்டிருந்தியே இப்ப என்ன ஆச்சு! விளைஞ்சு கிடந்த வயலையும் நாசம் பண்ணிட்டாங்க. கடனை வேற உடனே திருப்பிக் கொடுக்கணுமாம் – போதாதுன்னு போலீஸிலே வேறே புடிச்சு கொடுப்பாங்களாம். எப்படி யிருக்கு நியாயம்?
முத்: (சோகமாக) எப்ப தான் இந்த பெரியவங்களுக்கு இரக்கம் வருமோன்னு தெரியல்லே – எம்புட்டோ லட்ச லட்சமா நம்ம பண்ணையாரு கிட்ட பணம் இருக்குதாம். இந்த இரு நூறு ரூபா காசிலே தானா குடி முழுகபோகுது?
பேச்: போடி பைத்தியக்காரி – பெரியவங்களுக்கு சின்னவங்களை கஷ்டப்படுத்துறதிலே ஒரு தனி ஆசை. புலி ஆட்டை விளையாட்டு காண்பிச்சு கடிக்கிறதில்லே! அண்ணைக்கு நம்ம பண்ணையாரு தோட்டத்திலே மகாபாரதக் கதை படிச்சாங்களே நீ கேட்கல்லே.அர்ச்சுன மவராசாவுக்கு வில்வித்தை கத்துக் கொடுத்தாரே யாரோ ஒரு சாமியாரு. அவருகூட அந்த வேடன் ஏகலைவன் பெருவிரலைத் தானே கேட்டாரு? எவ்லாந் துறந்த ரிஷிங்க கதையே இப்படின்னா நம்ம பண்ணையாரு எம்மாத்திரம்.
முத்: நம்ம பண்ணையாரு அந்த மாதிரி ஆளா தெரியலியே – எவ்வளவு நல்லா பேசறாரு. அண்ணைக்கு ஒரு நாளு அவுரு தோட்டத்திலே வேலை செஞ்சு கிட்டிருந்தேன். அப்போ வந்து ‘ஏட்டி முத்தாயி! உம் புருஷனை புத்தியா புளைக்கச் சொல்லு. சும்மா கள்ளுக் கடையே காவல்ணு கிடக்காமெ. ஏதோ ரெண்டு காசு கொஞ்சம் கொஞ்சமா சேத்தாத்தாம் புள்ளே மரியாதையா யிருக்கும். வீட்டிலே கஞ்சியெல்லாம் நிறையக் கிடக்குன்னு அம்மா சொல்லிச்சு. போம்போது வாங்கிட்டுப் போடி’ன்னு எவ்வளவு இணக்கமா பேசினாரு.
பேச்: அப்படி பேசினவர் தானே இப்ப இப்படி செஞ்சிருக்காரு: போடி பைத்யமே! ஆம்பளைங்க பொம்பளைங்க கிட்டே அப்படித்தான் பேசுவாங்க. அதிலே மாத்திரம் மேல் ஜாதி கீழ் ஜாதி யெல்லாம் பாக்க மாட்டாங்க. அதுவும் நம்ம மாதிரி சின்ன பொண்ணா, கொஞ்சம் அழகாகவும் இருந்துட்டா, என்ன கிழவனாகத் தான் இருக்கட்டுமே. பல்லிளிச்சு இணக்கமாத்தான் பேசுவாங்க. அதுலே யெல்லாம் போயி ஏமாந்துகிட்டு.
முத்: போ பேச்சி – நம்ம எஜமான் ஒண்ணும் அப்படியில்லே.
பேச்: அட உலகம் தெரியாத பொம்பளை. உடனே நம்ம பண்ணையாரு அப்படின்னா சொல்றேன்! பொதுவா ஆம்பளைங்களே அப்படித்தான்னு சொல்ல வந்தேன். இவரு மாத்திரம் என்ன? பிள்ளையா குட்டியா? பெண்டாட்டி மாத்திரம் குட்டியானை மாதிரி மொழு மொழுன்னு உட்கார்ந்து கிட்டிருக்கா.
முத்: ஏ. ஏ. பேச்சி – அப்படியெல்லாம் சொல்லாதேடி அவுங்க விதி – அவுங்களுக்கு புள்ளை யில்லே.
பேச்: நல்ல வீதிடி. எப்படி யக்கா இவுங்களுக்கெல்லாம் புள்ளே குட்டி தங்கும். பணமிருக்கிற ஜோர்ல கூத்தடிப்பாங்க. பிறகு எல்லாம் இழந்துட்டு நிப்பாங்க. ஆனா பணம் மாத்திரம் அவுங்களை விட்டுப் போகாது. மிஞ்சியிருப்பது அந்த ஒண்ணுதான்.
முத்: பேச்சி – நமக்கென்னத்துக்குடி பெரியவங்க பேச்சு. நம்ம வயத்துப் பாட்டுக்கே நேரத்தைக் காணோம்; இந்த வம்பளப்பெல்லாம் என்னத்துக்கு?
(தூரத்தே யாரோ பாடிக் கொண்டு வரும் குரல் கேட்கிறது. இருவரும் திரும்பிப் பார்க்கின்றனர்.)
முத்: அதோ. மச்சான் குரல் மாதிரிதான் கேட்குது.
பேச்: ஆமாமா. மச்சான் குரல்தான். (கூர்ந்து கவனித்து) மச்சான்தான் வர்ரான். ஆனா ஒரே ஜோர்ல வர்ராப்போல இருக்கே.
(மாடன் குடி வெறியில் தள்ளாடியபடி வருகிறான். ஏதோ உளறியவாறு பாடிக்கொண்டு. பாட்டுக்கள் ஒரே கதம்ப மயம். கால்கள் கிணற்றுச் சுவர்மீது இடறவே, தள்ளாடியவன் தன்னை சுதாரித்துக் கொள்கிறான்.)
மாட்: டேய், யார்டா என்னைத் தடுக்கிறது? மவராசா வர்ரது தெரியல்லே உனக்கு? அந்தப் பண்ணையாரை சும்மா விட்டுட்டேன்னு நினைச்சயா? உதைச்சேன்னா…?
(ஓங்கி உதைக்கிறான். கால் எதன்மீதும் படாது போகவே. சுழன்று கிணற்றினுள்ளே விழுந்து விடுவானோ என்றிருக்கும்போது, முத்தாயி ஓடிவந்து பிடித்துக்கொள்கிறாள். பேச்சியும் அவளுமாக சேர்ந்து மாடனை கட்டிலினருகே அழைத்துச் செல்லுகின்றனர்.)
முத்: (சோகமாக) என்ன மச்சான் இது, பழையபடி குடிக்க ஆரம்பிச்சுட்டே?
மாட: யார்டி சொன்னது நான் குடிச்சிருக்கேன்னு?
பேச்: (கிண்டலாக) யாரு மச்சான் சொன்னா நீ குடிச்சிருக்கேன்னு. இப்போ அக்கா புடிக்கல்லேன்னா கிணற்றுக்குள்ளேயிருந்தில்ல கேட்டிருக்கும் உன் உளறலெல்லாம்.
மாட: நான் உளர்ரேனாம். (சிரிக்கிறான்) பெரியவரு சொல்றாரு நான் உளர்ரேனாம், நான் குடிச்சுகிட்டு உளர்ரேன். அப்படித்தானே! ஏய். நானாடி சொன்னேன். நம்ம லோகத்தை பாம்பு சுமந்து கிட்டிருக்கின்னு; நானாடி சொன்னேன்? அவன் உளர்ரானா, நான் உளர்ரேனா? எல்லாப் பசங்களுமே இப்ப குடிகாரனாயிட்டானுக. இல்லென்னா, எப்படிடீ சாமிக்கு ஆனைத் தலையிருக்கு, சிங்கத் தலையிருக்கு. ஆறு தலையிருக்குன்னு சொல்லுவான்? ஏய். யாரோ ஒருத்தி அஞ்சு பேருக்கும் பெண்டாட்டியாமே. ஆனா அழியாத பத்தினியாமே. தெரியுமா? என் முத்தி மாத்திரம் அப்படி அஞ்சு பேருகூடப் போனா வெட்டி கொண்ணு போட மாட்டேன். எல்லாம் பேமானிப் பசங்க.
பேச்: மச்சான் மச்சான் – இன்னைக்கு நல்லாத்தான் ஏறியிருக்கு. (முத்தாயியைப் பார்த்து) அக்கா. மச்சான் இப்படிக் குடிச்சுதுன்னா உடம்பு தாங்காது.
மாட: போடி போ – அறுபதினாயிரம் பொண்டாட்டி கட்டினவனுக்கே உடம்பு தாங்கிடுச்சாம். இந்த கள்ளுத் தண்ணியைத்தானா உடம்பு தாங்காது.
பேச்: அதுதான் தெரியுதே நீ டான்ஸ் ஆடுறதிலிருந்தே!
மாட: ம்…டான்ஸ் ஆடுறனா! நானா? அட் குடிகாரிங்களா! இந்தக் காலத்து குட்டிகளெல்லாம் சாமியைப் போயி மாப்பிள்ளையா யிருன்னு சொல்லி ஆடுதுங்களே அது மாதிரியா? இல்லே, சுடுகாட்டிலே போய் கூத்தாடுறேனா? அதுக்குகூட இடம் பார்த்து தானே ஆடுறேன்.
பேச்: ஆமாமா! இடம் பாத்து தான் ஆடுறே.இப்போ நாங்க இல்லேன்னா உன் டான்ஸ் தண்ணிக்குள்ளே யில்ல நடந்திருக்கும்!
மாட : ஏன் நடக்காது? ஏதோ ஒரு சாமி தண்ணிக்குள்ளே பாம்பையே படுக்கையாப் போட்டு படுத்திருக்காராமே. அப்போ நான் மாத்திரம் தண்ணிக்குள்ளே டான்ஸ் ஆடமாட்டேனா!
முத்: ஐயோ! அது சாமி மச்சான் சாமி! (தலையிலடித்துக் கொள்கிறாள்.)
மாட: ஏ புள்ளே! இப்போ நானும் சாமிதான். அண்ணைக்கு நம்ப கருப்பண்ணன் மேலே சாமியாடல்ல: அவனும் குடிச்சிட்டுதான் ஆடினான். நானும் குடிச்சுகிட்டுதான் ஆடுறேன். அவன் கோயில்லே ஆடினான்; நான் இங்கே ஆடுறேன்.
முத்: பாரு பேச்சி-நீ சொன்னது சரியாய் போச்சு. இந்த படுபாவி குடிச்சு குடிச்சு என்னை உயிரோடு புதைச்சு கிட்டுதான் போவார் போலிருக்கு.
மாட: (அப்போது தான் பேச்சியைத் திரும்பிப் பார்த்த பாவனையில்) ஏய். அதாரடி பேச்சி – ஹை! – பொம்பளை- – அம்மா பரதேவதே! நீ எந்த ஊர்ச் சரக்கம்மா?
பேச்: இதோ பாரு மச்சான், அதெல்லாம் எங்கிட்டே வச்சுக்காதே. குடிச்சா என்ன வேணும்ணாலும் உளறலாம்ணு நெனைச்சுக்கிட்டியா?
மாட: ஹை! குட்டி துள்ளுது டோய்! (ஏதோ பாட ஆரம்பிக்கிறான்.)
பேச்: சரி – சரி – போதை சரியா தலைக்கேறிடுச்சு. நான் வர்ரேன்கா. உன் பாடு. உன் புருஷன் பாடு. இப்பவாவது தெரிஞ்சுக்க. இந்தக் கள்ளுத் தண்ணி ஒழிஞ்சாத்தான் நம்ம ஜாதி உருப்படுங்கிறதை.
மாட: அடி சக்கை. கள்ளுத் தண்ணி ஒழியணுமாமே! நம்ம சாமியே கள்ளுத்தண்ணி குடிக்குது தெரியுமா? இல்லென்னா சுடுகாட்டிலே போயி ஆடுமா? பெரிய ஐயாமாரே சுடுகாட்டு டான்ஸ் பிரமாதம்ணு பேப்பர்லே எழுதறாங்களாமே! அவுங்க பிள்ளைங்களுக்கெல்லாம் அந்த டான்ஸை சொல்லிக் கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்களாம். அதனாலே தான் சீமைச் சாராயம் ரொம்ப ரொம்ப செலவாகுதாம் – சீ சவமே! நீ என்னடி கதை கேட்கிறே. ஊத்துடி கஞ்சி.
(கீழே உட்கார்ந்து கையை நீட்டுகிறான்.)
முத்: நீதான் நல்லா குடிச்சி கிட்டு வந்திருக்கியே – உனக்கு என்னத்துக்கு கஞ்சி?
மாட: இப்ப நீ கஞ்சி ஊத்தறியா இல்லியா?
முத்: (வெறும் பானையை எடுத்து முன்னால் வைத்து) இது தான் இருக்கு, திண்ணுபோ.
மாட: (பானை காலியாயிருப்பதைக் கண்டு) எனக்கு இல்லாமே நீயே துண்ணுட்டியா? ஏண்டி கழுதை, உனக்கு அவ்வளவு திமிரா!
(பானையை அவள்மீது விட்டெறிகிறான். அவள் சிறிது விலகவே. பானை தூரப் போய் விழுந்து நொறுங்குகிறது. முத்தாயி ஒரு மூலையில் சென்று உட்கார்ந்து அழுகிறாள் – மாடன் தள்ளாடியபடி அவளருகில் செல்லுகிறான்.)
மாட: நீலி வேஷம் வேறு போடுறியா? ஏண்டி எல்லாக் கஞ்சியையும் குடிச்சே எனக்கில்லாமே? ஏண்டி குடிச்சே?
(அடிக்கிறான். அவள் தடுக்கிறாள். அவளது தலை மயிரைப் பிடித்திழுத்து முதுகில் குத்துகிறான். திடுக்கிட்ட பேச்சி – புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தவள் – அருகில் ஓடிவருகிறாள். முத்தாயி குய்யோ முறையோவெனக் கதறுகிறாள். வெறி கொண்ட மாடன் முத்தாயியைப் பிடித்து தூரத் தள்ளுகிறான். திண்ணையில் ஒதுக்குப் புறமாகக் கிடந்த ஏர்க்காலில் அவளது தலை மோதி சுருண்டு விழுகிறாள். பன்றிக் குட்டிகள் ‘கீச் மூச்’ சென்று சப்தமிட்டவாறு அங்கு மிங்கும் ஓடுகின்றன. பேச்சி முத்தாயியை வாரியெடுத் தணைக்கிறாள். இதைச் சிறிதும் பொருட்படுத்தாது, மாடன் தள்ளாடியடி கட்டிலின் மேல் விழுகிறான். பொத்தென்று.)
பேச்: படுபாவி – குடிச்சாலும் இப்படியா மாடு மாதிரி!
(முத்தாயி, நெற்றியிலும் வாயிலும் ஒழுகும் இரத்தத்தைத் துடைத்தவாறு மெதுவாக எழுந்திருக்கிறாள். அவளது கண்களின் எதிரே, தொங்கியவாறு கட்டலின்மீது சாய்ந்து கிடக்கும் மாடசாமியின் நிலைதான் தென்பட்டது.)
முத்: (வலியை அடக்கியவாறு) எனக்கு ஒண்ணுமில்லே பேச்சி. பண்ணை எஜமான் கோவிச்சுகிட்ட ஆத்திரத்திலே போய் குடிச்சிருக்கார். அதனாலதான்.
(மாடசாமியின் அருகில் சென்று அவனை தூக்கிவைத்து ஒழுங்காக கட்டிலின் கிடத்துகிறாள். அருகில் கிடந்த கட்டை யொன்றை யெடுத்து தலையணையாக வைக்கிறாள். பேச்சி மூக்கின் மேல் விரலை வைத்து ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டு நிற்கிறாள்.)
பேச்: சரிதான்: அதுக்குள்ளே உனக்கு பட்ட உதை மறந்து போச்சா!
முத்: பேச்சி – மச்சான் சுயபுத்தியிலே யிருந்தா இப்படிச் செய்யுமா பேச்சி? போன ஜன்மத்திலே நான் செஞ்ச புண்ணியம் தான் மச்சான் மாதிரி எனக்கு புருஷன் கிடைச்சது.
பேச்: அக்கா! அக்கா! அதோ பண்ணையாட்கள் வராப்ல இருக்கு.
(பண்ணையாட்கள் ஏழுமலையும். சுடலையாண்டியும் வருகிறார்கள். இருவரும் மத்திய வயதுடையவர்கள்.)
ஏழுமலை: ஏய் முத்தாயி – எங்கே உன் பறயன்?
முத்: (பயந்தவாறு) என்னங்க? என்ன நடந்தது?
சுடலையாண்டி: என்ன நடந்ததா? இன்னும் கொஞ்ச நேரத்திலே தெரியும் பாரு. ஏய் ஏழுமலை, நீ ஏன் அங்கே நிண்ணுகிட்டிருக்கே? அதோ மாடுகளை கட்டிப் போட்டிருக்கான் பாரு. போய் அவுத்துகிட்டுவா.
முத்: ஐயோ. வேண்டாங்க! ஐயா. ஐயா! எங்க புளைப்பிலே மண்ணைப் போடாதீங்க. நல்லாயிருப்பீங்க.
(தோட்டப் பக்கமாகச் செல்லும் ஏழுமலையின் குறுக்கே போய் நிற்கிறாள் – அவளைப் பிடித்துத் தள்ளிவிட்டு உள்ளே செல்லுகிறான். முத்தாயி ஓடிச் சென்று மாடசாமியை எழுப்புகிறாள். அவன் புரண்டு கொடுக்கிறானே தவிர எழுந்திருப்பதாகக் காணோம். பார்த்துக் கொண்டிருந்த பேச்சி கிணற்றருகே யிருந்த தோண்டியைத் தூக்கி வந்து. தண்ணீரை அவனது தலையில் கொட்டுகிறாள். குளறியபடி எழுந்து உட்காருகிறான் மாடசாமி.)
முத்: ஐயோ! அதோ பாரு மச்சான் – பண்ணையாளுக நம்ம மாடுங்களை அவுத்துகிட்டுப் போறாங்க.
மாட: ஹா! நம்ம மாடு களையா?
(அவனது குடி வெறி மறைந்து விடுகிறது. வெறி பிடித்தவன் போல் தோட்டப் பக்கம் ஓடுகிறான் – உள்ளேயிருந்து கூக்குரல் கேட்கிறது. “விடுடா மாட்டை- விடுறியா. இல்லியா?” “முடியாதுங்க” சுடலையாண்டியும் உள்ளே ஓடுகிறான் – இருவருமாக மாடசாமியை வெளியே இழுத்து வருகின்றனர்.)
மாட: என்னங்க இது? பணக்காரங்கன்னா என்ன வேணும்ணாலும் செய்யலாங்களா?
ஏழு: செய்தா என்னடா செய்வீங்க? ஏண்டா கழுதை – வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்கக் கூடாது?
மாட: எப்படியும் கொடுத்திடத்தானுங்க போரேன். நான் என்ன பெரியவங்க மாதிரி ஏப்பமா விட்டுடப் போறேன். ஒன்றிரண்டு மாசம் தவணை தானே கேட்கிறேன்.
சுடலை: நீ என்ன ஏழுமலை. அவங்கிட்ட பேச்சு கொடுத்துகிட்டு. மாட்டை இழுத்து கிட்டு நீ வா.
(உள்ளே போக ஆரம்பித்த ஏழுமலையை தடுத்து நிறுத்துகிறான் மாடசாமி. உழைத்து உரமேறிய அந்த ஏழையின் உடல் பலத்தின் முன்னே பண்ணையாட்கள் நிற்க முடியவில்லை ஆத்திரத்தால் கத்துகிறான் ஏழுமலை. சேரிச் சனங்கள் கூடுகிறார்கள்.)
ஏழுமலை: டெய் மாடசாமி! எஜமானுக்கு விரோதமா போனே. என்ன நடக்கும் தெரியுமில்லே?
மாட: என்ன வேணும் ணாலும் நடக்கட்டும்; என் காளைங்களை மட்டும் விடமாட்டேன்.
ஏழுமலை: (உறுமியவாறு) ம். மயிலே மயிலேன்னா இறகு போடுமா? இன்னுங் கொஞ்ச நேரத்திலே உன் கதி என்ன ஆகப்போகிறதுன்னு பாரு! நீங்ககள்லாம் செவத்த தொப்பியைப் பார்த்தாதாண்டா பயப்படுவீங்க. சுடலையாண்டி! நீ இங்கேயே நிண்ணுக்கோ.
(வெளியே ஓடுகிறான். சேரிச் சனங்களின் பார்வையைக் கண்ட சுடலையாண்டியும் ஒரு புறமாக ஒதுங்கி நிற்கிறான். முத்தாயி அச்சத்துடன் பேச்சியினருகில் செல்லுகிறாள்.)
முத் ஐயோ. என்ன ஆகும்ணு தெரியலியே, பயமாயிருக்கே!
பேச்: நீ பயப்படாதே அக்கா. என்ன, தலையா போயிடும்?
மாட: நீ ஏம் புள்ளே பயப்படுறே? கொஞ்சம் மிரட்டுவாங்க – அவ்வளவுதான்.
ஒருவன்: (சிறிது வயதானவன்) என்ன மாடா. இப்படி பண்ணிட்டே? இதையறிஞ்சா பண்ணையாரு நம்மை சும்மா விடமாட்டாரே!
மாட: அதுக்காக எத்தனை நாளைக்கு அடியும் உதையும் பட்டுக்கிட்டு கிடக்கிறதாம்!
இன்னொருவன் : கொடுக்க வேண்டிய கடனை திருப்பிக் கொடுத்திடறதுதானே!
மாட: மாட்டேன்னு சொல்லலியே. கொஞ்சம் பொறுத்துக் குங்கங்கிறேன். அதுக்குள்ளே என் காளைங்களை புடிச்சிகிட்டு போயிடுவாங்களாம்! அங்கே என்னடான்னா நல்லா விளைஞ்சு கிடந்த வயலை அவுங்க மாடுங்க வந்து பாழ்படுத்திப்போட்டுது. அதைப்பற்றி யாரும் கேட்கக் கூடாதாம் – கேட்டா அடியும் உதையுமாம்! விளைஞ்சுகிடந்த வயல்லே மாட்டைப் பத்திட்டியேன்று நாம் கேட்கப்படாது; கடனை இப்பவே திருப்பிக் கொடுன்னு அவுங்கமட்டும் கேட்கலாம்!
முதியவன்: அதெல்லாம் பெரிய இடத்து சங்கதி – நாம கேட்கப்படாது!
மாட: அப்படிச் சொல்லிச் சொல்லிதான் நாம் நாசமாப் போறோம். தண்ணிப் பாம்பு கூட வேறு வழியில்லேன்னா வாயத்திறக்குது, கடிக்கறதுக்கு அதை விடவா கேவலமாகப் போயிட்டோம் நாம்?
ஒருவன்: இதைச் சொன்னா இருக்கிற புளைப்பிலே மண் விழுந்துடும்.
மாட: நீ போ காத்தான். நாம வேலை செய்யலேன்னா அவுங்க புளைப்பு மட்டும் நடந்துடுமா? நாமதானே ஏர்க் கட்டணும்; உச்சி வெயில்லே உழுது தொலைக்கணும்; களை பறிக்கணும்; கதிரடிக்கணும் – இதெல்லாம் ஐயாமாரா வந்து செய்யறாங்க? எல்லாம் நாம்தான் உழைக்கணும். உழைச்சுபுட்டு செஞ்சதுக்கு கூலி கேட்கிறோம். நாம் என்ன தேவையானதையா கேட்கிறோம்? தேவைக் கதிமானதைத்தான் அவாளே வச்சுக்கறாங்களே. வச்சுக்கட்டும்; வச்சுக்கட்டும்; எவ்வளவு நாட்கள் வச்சுக்கப் போறாங்கண்ணு பார்ப்போம். நாமோ தலைவிதி தலைவிதின்னு நினைச்சுக்கிட்டிருக்க, அவாளது ஆட்டபாட்டமும் நீண்டு கிட்டே போவுது. அதுக்கு ஒரு முடிவு கட்டிட்டா சரியாப்போயிடும்.
ஒருவன்: ஆமாண்ணேன்! மாடன் சொல்லுவதும் சரியாத்தான் இருக்கு. பண்ணையாட்கள் இஷ்டத்துக் கெல்லாம் இனி நாம வளைஞ்சு கொடுக்கக் கூடாது.
காத்தான்: ஆமாங்க. மாடசாமியின் காளைங்களை இழுத்துக் கிட்டுப்போக விடக்கூடாது இண்ணைக்கு. மாடசாமி அண்ணேன். பாத்துக்கலாம் ஒரு கை! இருபத்துநாலு மணி நேரம் உழைச்சாலும் ஒரு நேரத்து கஞ்சி சரியாக்கிடைக்க மாட்டேங்குது.
மாட: நம்ம வயறு காய காயக் இங்கேயிருந்து புகை மட்டுமா கிளம்பும் – பூகம்பம் எரிமலை எல்லாம்தான் கிளம்பப் போகுது!
முத்தாயி: (முன்னால் ஓடி வந்து பண்ணையார் கால்களில் விழுந்து) எஜமான்! பெரிய மனசு பண்ணுங்க எஜமான், இந்த ஒரு தடவை மாத்திரம்…
நல்ல: சீ. பறக்கழுதை! போடி அந்தப் பக்கம்! (ஆட்களைப் பார்த்து) இன்னும் ஏண்டா நிக்கிறீங்க?
(பண்ணையாட்கள் தோட்டப் பக்கம் செல்வதைப் பார்த்த மாடசாமியும் மற்றவர்களும் குறுக்கே சென்று வழியை மறித்துக்கொள்கின்றனர்.)
மாட: யாராவது பக்கத்திலே வந்தீங்க அப்புறம் நாங்க மனுச சாதியாயிருக்க மாட்டோம். (பண்ணையாரைப் பார்த்து) எஜமான்! இது உங்களுக்கே நல்லாயிருக்கா? வாழ் நாள் முழுதும் உங்களுக்காகத் தானே எஜமான் உழைச்சேன். சில்லரைக் காசுக்காக என் புளைப்பையே கெடுக்கப் பாக்கிறீங்களே!
(அப்போது பண்ணையார் நல்ல கண்ணுப்பிள்ளை ஆட்களுடன் வருகிறார். சேரி மக்கள் நிற்கும் நிலையைப் பார்த்ததும், பண்ணையாட்களும் தயங்கியவாறு அப்படி அப்படியே நின்று விடுகின்றனர். நல்லகண்ணுப் பிள்ளைக்கு சுமார் நாற்பது நாற்பத்தைந்து வயதிருக்கும் – நோஞ்சான் உடம்பு-பார்த்தால் க்ஷய ரோகம் பிடித்த ஆள்மாதிரி தெரிகிறது – வெள்ளிப் பூண் போட்ட கைத்தடி – வெத்திலை முறுக்கேறிய சிவந்த வாய் – உதட்டைக் கிழித்துக்கொண்டு நிமிர்ந்து நிற்கும் இரண்டு முன் பற்கள்!)
நல்ல கண்ணுப்பிள்ளை: டேய் கழுதை. என்னடா அது! எரிமலை, பூகம்பம் எப்படி கிளம்பப் போறதுன்னு பார்த்துடறேன்! (இருமுகிறார்) ஏண்டா நிக்கிறீங்க? மாட்டை அவுத்து கிட்டு வாங்கடா!
(பண்ணையார் ஆத்திரமுடன் அவன் அருகே செல்கிறார். முத்தாயி அவரது கால்களைப் பிடித்துக் கொள்கிறாள். பண்ணையார் அவளை உதறி எறிந்து விட்டுச் செல்கிறார். பண்ணையாட்கள் சேரி மக்களின் அருகில் செல்ல பயந்து சிறிது விலகியே நிற்கின்றனர்.)
நல்ல: ஏண்டா தடிப் பசங்களா! இந்தப் பறப்பசங்களுக்கு இவ்வளவு திமிர் பார்த்துக் கிட்டிருக்கீங்களே! டேய் மாடசாமி, விலகிறியா, என்ன? … (அசையாது நிற்கவே) எனது அடிமையாக் கிடந்த பய – உனக்கு அவ்வளவு கொழுப்பா?
(கைத்தடியைக் கொண்டு அவனை அடிக்கிறார். சிறிது நேரம் பேசாது நிற்கிறான். வெறிகொண்டு மேலும் மேலும் ஆத்திரமடைந்த அடிக்கவே, மாடசாமி, கைத்தடியைப் பிடுங்கி ஒடித்து எறிந்துவிட்டு, அவரையும் அப்படியே தூக்கி தூர எறிந்து விடுகிறான். கிணற்றுச் சுவரின் மேல் போய் விழுகிறார் நல்ல கண்ணுப்பிள்ளை! கதறிக்கொண்டு தள்ளாடி எழுந்திருப்பதற்குள் இருமல் வரவே, பலமாக இருமிக் கொண்டு அப்படியே உட்கார்ந்தவர், மயங்கி விழுந்து விடுகிறார். பண்ணையாட்கள் ஓடிச் சென்று தூக்கி நிறுத்துகின்றனர். தலை தொங்கி விடுகிறது.)
ஆட்கள்: டேய். எஜமானைக் கொண்ணுட்டாண்டா.
முத்தாயி: ஐயய்யோ! எஐமான்! (அலறுகிறாள்.)
பண்ணை ஆட்கள்: டேய் விடாதீங்கடா, இந்தப் பறக்கழுதைங்களை!
(பண்ணை ஆட்கள் சேரி மக்கள் மேல் பாய ஒருவருக்கொருவர் அடித்துக்கொள்கின்றனர். பெண்கள் ‘குய்யோ, முறையோ’வெனக் கத்துகின்றனர், அப்போது ஏழுமலை போலீஸார் சிலரை அழைத்துக் கொண்டு வருகிறான். போலீஸாரைக் கண்டதும் சேரிமக்கள் ஓடிவிடுகின்றனர். மாடசாமி கைது செய்யப்படுகிறான். மயங்கி விழும் முத்தாயியை தாங்கிக் கொள்கிறாள் பேச்சி!)
– ஆகஸ்ட் 1956, முத்தாரம்.
![]() |
ஏ.காசிலிங்கம் (A.Kasilingam) என்பவர் தமிழ் திரையுலகின் ஆரம்பகால முன்னணித் திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் 1940-கள் முதல் 1960-கள் வரை பல முக்கியத் திரைப்படங்களை இயக்கியுள்ளார். முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியுடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்த இவர், அவருடன் இணைந்து "மேகலா பிக்சர்ஸ்" என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி படங்களை தயாரித்தார். தமிழ் சினிமாவின் முதல் ஏலியன் மற்றும் விண்வெளி சார்ந்த அறிவியல் புனைகதை படமான 'கலை அரசி' திரைப்படத்தை…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
சின்னச்சாமியைத் தேடி
நாகரத்தினம் கிருஷ்ணா
July 2, 2026
கழுதையும் நானும்…
இளையவேணி கிருஷ்ணா
July 2, 2026
அவசரம்
மணிராம் கார்த்திக்
July 2, 2026
