சூடா இருக்க வேண்டிய மனசு

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 29, 2026
பார்வையிட்டோர்: 181 
வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்

“என்னங்க… சூடா போடச் சொல்லி வாங்கிட்டு வாங்கன்னு சொன்னேன்ல!”

கோமதி குரலில் எரிச்சல்.

“சரிம்மா… சரி. எத்தனை தடவை சொல்றது?” என்று நடராஜ் போனை வைத்தார்.

நடராஜனின் அம்மா பொன்னிக்கு, அவர்கள் குடியிருக்கும் வீதி முக்கிலுள்ள ராசப்பன் கடையின் இனிப்பு போண்டாவும் ராகித் தட்டையும் உயிர். பல நாட்கள் காலையில் அதுவே உணவு; மதிய உணவை நேராகச் சாப்பிடுவாள். தூய்மை பணியாளராக இருந்த காலத்திலேயே கணவனை இழந்தவள். கஷ்டத்தைத் தோளில் சுமந்து, ஒரே மகனை நன்கு படிக்க வைத்து அரசு கிளார்க் வேலை வாங்கித் தந்தாள்.

தன் வேலை நேரம் தவிர, பக்கத்து தெருவிலிருந்த ஜட்ஜ் ஐயா வீட்டிலும் வேலை பார்த்தாள். கைசுத்தம், வாய் சுத்தம், நேர்மை—எல்லாம் சேர்ந்து, அந்த வீட்டில் பொன்னி இல்லாமல் வேலை நடக்காத நிலை. அங்கு அவளுக்குக் கிடைத்த மரியாதை தான் அவளின் பெரும் செல்வம்.

நடராஜனுக்கு பக்கத்து ஊரில் உள்ள சொந்த அண்ணன் மகளையே திருமணம் செய்து வைத்தனர். அவர்களின் ஒரே மகள் செல்வி. அவளுக்கு ஆயாதான் உலகம். மருமகள் கோமதி நல்லவள்தான்; ஆனால் கொஞ்சம் செலவாளி. அதனால் பொன்னி தன் சம்பாத்தியத்தை முழுதும் ஜட்ஜ் ஐயாவிடம் கொடுத்து, செல்வி பெயரில் சேமிப்பு வைத்து விட்டாள். சொற்பக் காசை மட்டும் தன் தேவைக்கென வைத்துக் கொண்டாள். எல்லாவற்றையும் செல்விக்குத் தெளிவாகச் சொல்லியிருந்தாள்.

பொன்னி ரோசக்காரி. யாரிடமும் எதையும் வாங்கிக் கொள்ள மாட்டாள். ஆனால் ஜட்ஜ் அம்மாவிடம் மட்டும் விதிவிலக்கு. அவர் தன் மகளுக்குத் துணி எடுத்தால், செல்விக்கும் எடுத்துத் தருவாள். அவரது மகளின் ஆடைகளைப் போட்டு அவளை அழகு பார்ப்பது அவளுக்குச் சந்தோஷம்.

அந்த அன்பின் பலனாக, செல்வியின் படிப்புச் செலவும், ஆசிரியர் வேலையும் ஜட்ஜ் ஐயாவே பார்த்துக் கொண்டார். நல்ல மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைப்பதாகவும் உறுதி அளித்தார்.

“போதும் ஆயா… இனி வேலைக்குப் போக வேண்டாம்” என்று செல்வி பிடிவாதம் பிடித்தாள். ஆனாலும் ஜட்ஜ் வீட்டிற்கு மட்டும் பொன்னி போய் வந்தாள்.

அந்த நாள், வேலை முடிந்து வரும் வழியில், பிடித்த இனிப்பு போண்டா வாங்கியது பெரிய வாக்குவாதமாக மாறியது.

“வயசான காலத்துல வாயைக் கட்டாம கண்டதையும் தின்னா உயிர வாங்கனுமா?”

கோமதியின் வார்த்தை, பொன்னியின் நெஞ்சை உறைய வைத்தது. முகம் சிவந்து, கண்ணீரை அடக்கிக் கொண்டு அமைதியாகப் படுத்துக் கொண்டாள்.

மறுநாள் காலை, செல்வியின் கைகளைத் தன் நெஞ்சில் வைத்துக் கொண்டு, ஒரே பார்வை… சொல்லாத ஆயிரம் செய்திகளுடன்… ரோசக்காரி பொன்னி உயிர் விட்டாள்.

பதினாறு நாட்கள் கழித்து, சூடான போண்டாக்கள் பொன்னியின் படத்தடியில்.

“உசுரோட இருக்கும்போது சாப்பிட விடல… இப்ப எதுக்கு இந்தப் படையல்?”

செல்வியின் கேள்விக்கு, கோமதியிடம் பதில் இல்லை.

சூடு ஆறிவிட்டது.

ஆனால் குளிராதது – மனசின் குற்ற உணர்வு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *