உறுப்புகளைத் தேடி…
கதையாசிரியர்: காரை ஆடலரசன்
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: June 6, 2026
பார்வையிட்டோர்: 108
(2022ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6
அத்தியாயம் – 1

ராமேஸ்வரம், அந்தமான், நிக்கோபார்கள் எல்லாம் கடலின் தீவுகள். அணைக்கரை நதியின் தீவு! கொள்ளிடம் ஆற்றின் கொடை.!
திருச்சி முக்கொம்பிலிருந்து பிரியும் பிரமாண்ட கொள்ளிடம் இங்கு கொஞ்சம் பிரிந்து பூமியைக் குழந்தையாக்கிக் கொஞ்சிவிட்டு பின் சேர்ந்து பயணித்து செல்லும் அருமையான இடம். இந்த நூறு இரு நூறு மீட்டர் கரையின் தெற்கும் வடக்கும் ஒரு கிலோமீட்டர் அளவிற்கு சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேய அரசு தன் நீர் வள கட்டிடப் பொறியாளர் சர் ஆர்தர் காட்டன் கட்டிய நீர்த்தேக்க மதகுகள். இந்த மதகுகள்தான் கொள்ளிடத்தின் கடைசி தடுப்பணை நீர்த்தேக்கம்.
வடக்கு தடுப்பணையிலிருந்து பிரிந்து செல்லும் ராஜன் வாய்க்கால்தான் வீராணம் ஏரியை நிரப்பும். இந்த வீராணம்தான் சென்னை மக்களின் தாகம் தீர்க்கும் உயிர்நாடி.
இந்த தீவின் இருபுறமும் கொள்ளிட ஆற்றில் அணைக்கட்டியதால்… தீவு…
அணை + கரை = அணைக்கரை ஆகிவிட்டது. இந்த பாலங்களும் கரையும் எண் 36 கும்பகோணம் – சென்னை தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதி.
அணைக்கரை சாலையின் கிழக்கும் மேற்கும் 5000 குடியிருப்புகள்.
100 – 150 மீட்டர் நீளமுள்ள கரை சாலையில் ஒரு சிறு பேருந்து நிலையம், பெட்ரோல் வங்கி, ஒரு ஹோட்டல், ஒரு விடுதி, துணிக்கடை, மளிகைக்கடை காய்கறி என்று மக்களுக்குத் தேவையான கடைகள்.
காலை மணி 10.00
விநாயகர் வீதியில் உள்ள பெரிய இரண்டடுக்கு மாளிகையிலிருந்து கிளம்பினான் ஹரிஸ்.
வயது 28. இளைஞன். இன்றைய நாகரீகத்தின் தாடி இல்லாத களையான சிரித்த முகம். மாநிறம். 5.6 அடி உயரம். வயதுக்குரிய வாலிப உடல்வாகு. படித்து வேலைக்குச் செல்லத் தேவை இல்லாத M .B. A. பட்டதாரி. கடைவீதியில் இருக்கும் ஒரு உயர்தர உணவு விடுதி, 40 அறைகள் கொண்ட லாட்ஜ், ஒரு ஜவுளி கடை, ஒரு பெட்ரோல் வங்கி இவைகளின் ஒரே வாரிசு.
60 வயது அம்மா – அஷ்டலட்சுமி ஓய்வு பெற்ற அரசு தலைமை ஆசிரியை. நாலும் தெரிந்தவள். விபரம் புரிந்தவள். எதை எப்படி செய்ய வேண்டுமென்பது தெரிந்தவள்.
கணவர் காத்தவராயன் இவளின் 50தாவது வயதில் காலமாகிப் போக… விதவை.
ஹரிசும் விபரம் தெரியாதவன் இல்லை. அம்மா கையில் வரவு செலவுகள் இருந்தாலும் எல்லா மேற்பார்வைகளும் இவன்தான். எதை எப்படிச் செய்ய வேண்டுமோ சரியாய்ச் செய்வான்.
ஆள் வீட்டை வீட்டுக் கிளம்பும்போதே பஞ்சாயத்து. அவன் வரும் வழியில் ஒரு அம்பாசிட்டர் காரில் வந்த நான்கு டிப் டாப் ஆசாமிகள் வழியில் வந்த 40வயது ஆளை நிறுத்தி அசிங்க அசிங்கமாய்ப் பேசித் திட்டிக்கொண்டிருந்தனர்.
இவன் தான் வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி….
என்ன ? ஏதென்று கேட்பதற்குள்ளேயே…திட்டு வாங்கிய தீத்தான்…
“கூப்பிட்டு கொடுத்தாங்களேன்னு வங்கியில் தெரியாத்தனமாய் வீடு கட்ட 10 லட்ச ரூபாய் கடன் வாங்கிட்டேன் ஹரிஸ். பாதி திருப்பிட்டேன். மீதி திருப்ப திணறல். நாலு மாச பாக்கி. நாக்கைப் பிடுங்கிறாப்போல பேசுறாங்க. நாண்டுக்கிட்டு சாகலாம் போல இருக்கு…” அழுதார்.
சாதாரண மீன் பிடி தொழிலாளி. இவருக்கு வலிய கடனைத் தந்துவிட்டு இதென்ன அராஜகம்..?
எவரும் எந்த கைப்பேசியையும் திறக்க முடியவில்லை.! திறந்தால்….
‘அந்தக் கடன் வேண்டுமா, இந்தக் கடன் வேண்டுமா…?’ என்று நொடிக்கு நூறு வங்கிகளின் குறுஞ்செய்தி அழைப்புகள். இப்படி சாதாரண மக்களையும்…’ கடன் வாங்கு! கடன் வாங்கு!’ என்று வற்புறுத்தி ஆசையைத் தூண்டி கடனை அவர்கள் தலையில் கட்டிவிட்டு… தவறும் பட்சத்தில் இப்படி அடாவடி…! நினைக்க இவனுக்குள் நிமிசத்தில் கோபம் வந்தது.
“ஏன் சார்..! இவர் உங்களிடம் வந்து கடன் வேணும்ன்னு கேட்டாரா..? வாங்கு வாங்குன்னு வலிய சொல்லி ஆசையைத் தூண்டி வாங்க வைச்சுட்டு இப்ப என்ன அடாவடி. போங்க. போய் கோடி கோடியாய்க் கடன் வாங்கி கொள்ளையடித்து நாட்டை விட்டு ஓடிப்போனவங்ககிட்டேயெல்லாம் வசூல் பண்ணுங்க.
இப்போதான் உங்க தொந்தரவால் ஏழு லட்ச ரூபாய்க்கு ஒருத்தர் தீக்குளித்தார். இவரையும் தீக்குளிக்க வச்சுடாதீங்க. இதையும் மீறி நீங்க அராஜகம் பண்ணினால்.. டிராக்டர் லோனுக்கு ஒருத்தர் அரிவாளைத் தூக்கின மாதிரி இவரைத் தூக்க வைப்பேன். இல்லே… இந்த தெரு ஆட்களை விட்டு உங்களை உதைக்க வைப்பேன்.
இப்படியெல்லாம் பேசி கடன் வசூலிக்க உங்களுக்குச் சட்டத்துல இடம் கிடையாது. சட்டப்படி கோர்ட்டுல வழக்கு தொடுத்து வசூல் செய்துக்கோங்க.. இதுக்கு மேல் இங்கே நின்றால் உங்களைப் பத்தி போலீஸ்ல புகார் கொடுப்பேன்!” கூவினான்.
அவ்வளவுதான்! அவர்கள் அரண்டு சென்றார்கள்.
ஹரிஸ் கூன் குறுகி நின்ற தீத்தானை வீட்டுக்கு அனுப்பிவிட்டு கடைத் தெருவிற்கு வந்தான். நெடுஞ்சாலை அருகே உள்ள பெட்ரோல் வங்கிக்கு வந்து கண்ணாடி அறைக்குள் நுழைந்து தன் இருக்கையில் அமர்ந்தான்.
லாரி ஒன்று டீசல் பிடித்துக் கொண்டிருந்தது. ஒருவர் இரு சக்கர வாகனத்திற்குப் பெட்ரோல் பிடித்துக்கொண்டிருந்தார். மூவர் அவருக்குப் பின்னால் வண்டியை விட்டு இறங்காமல் வரிசையில் நின்றார்கள்.
சிறிது நேரத்தில் அருகிலுள்ள காவல் நிலையத்தில் இருந்த காவலர்கள் அவசர அவசரமாக வந்து போக்குவரத்தை தடை செய்தார்கள். வாகனம், மக்களை ஓரம் கட்டி ஒழுங்கு படுத்தினார்கள். தேசிய நெடுஞ்சாலைக்கு.. ஊர் வாகனம், மக்கள் வராமல் கிழக்கு மேற்கிலுள்ள தெரு வீதிகளுக்கு தடுப்பு வேலிகள் அமைத்து அடைத்தார்கள்.
பத்து நிமிடங்களில் நெடுஞ்சாலை வெறிச்!
கண்ணாடி அறையில் தன் இருக்கையில் அமர்ந்து கவனித்த ஹரிசுக்கு…
‘எதற்கு இந்த அமளி துமளி..? போக்குவரத்து ஒழுங்கு கட்டுப்பாடு..?’
‘எந்த முக்கியஸ்தர் வருகை..?’
‘அதிகாரியா..? அரசியல்வாதியா..? அமைச்சர் மத்தியமா, மாநிலமா..?’ மனசுக்குள் ஓடியது.
ஆனால் அவன் நினைப்பிற்கு மாறாக…
அடுத்த சில நிமிடங்களில்….
“உய்ங்க…! உய்ங்க…!” அலறல் சத்தத்துடன்’ டெம்போ ட்ராவலர் அவசர கால மருத்துவ ஊர்தி கண்ணிமைக்கும் நேரத்தில் கடந்து காணாமல் போனது!
அத்தியாயம் – 2
மருத்துவ ஊர்தி காணாமல் போன அடுத்த வினாடி…
வீதிக்கு வீதி போக்குவரத்திற்குக் காவல் நின்ற காவலர்கள் பாதுகாப்பு தளர்த்தப் பட்டதன் பாணியில் இருந்த இடம் இடம் விட்டு அகன்றார்கள். அதுவரை அடைந்திருந்த மக்களும், நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்களும் நகர்ந்தன…
சிறிது நேரத்தில் அந்த சின்ன கடைவீதி அசாதாரண சூழ்நிலையிலிருந்து மீண்டு சாதாரண நிலைக்கு மாறியது.
கண்ணாடி அறைக்குள் இருந்து கவனித்த ஹரிசுக்குள்…
‘நெடுஞ்சாலை போக்குவரத்தை நிறுத்தி… ஆபத்திற்கு உதவும் உயிர் காக்கும் வாகனம் தங்கு தடை இல்லாமல் செல்லும் அளவிற்கு வாகனத்தில் யார்…? எந்த பிரபலம், மந்திரி, முக்கிய மனிதருக்கு ஆபத்து?! எவர் அவர்….? ஆபத்தா..? விபத்தா..? . யாரைக் கேட்டால் விபரம் தெரியும்…?’ – யோசனைகள் ஓடியது.
தன் இருக்கையை விட்டு எழுந்து வெளியே வந்து கண்களை ஓடவிட்டான்.
சற்று நேரத்தில்….
காவலுக்கு நின்று அகன்ற காவலர் கண்ணபிரான் இரு சக்கர வாகனத்தில் ஏறி பெட்ரோல் வங்கிக்குள் நுழைந்தார். வாகனத்தை வங்கியில் ஓரம் கட்டி நிறுத்திவிட்டு அவசர அவசரமாக கழிவறை நோக்கி சென்றார்.
ஹரிஸ் அவர் வரும்வரை காத்திருந்தான்.
சில நிமிடங்களில் கண்ணபிரான் இடுப்பு பெல்ட்டை சரி செய்து கொண்டு தன் இருசக்கர வாகனம் அருகில் வந்தார்.
“யார் சார் ஆம்புலன்சில்…?” – கேட்டான்.
“யாருமில்ல…”
“பின் எதுக்கு போக்குவரத்து நிறுத்தம்….?”
“இதயம் ஒன்னு பறக்குது. அது அஞ்சு மணி நேரத்தில் சென்னைக்குப் போகனும். அதுக்காகத்தான் நிறுத்தம்!” என்றார்.
“எங்கிருந்து..?”
“தஞ்சை மருத்துவமனையிலிருந்து.”
“அங்கே யாருக்கு..?”
“தெரியல..?! நிறுத்தச் சொல்லி மேலிடத்து உத்தரவு. ஆடியாச்சு, கிளம்பியாச்சு. அவ்வளவுதான்!” அடுத்து நின்று அவர் அனாவசிய பேச்சு பேசாமல் வாகனத்தில் ஏறி சென்றார்.
கண்ணபிரான் எப்போதுமே இப்படித்தான். எவரிடமும் வீண் பேச்சு பேச மாட்டார். யாருக்கும் எந்தவித தொந்தரவும் கொடுக்க மாட்டார். தன் வேலையுண்டு அவர் உண்டென்று இருப்பார். அவர் அனாவசிய விசயம், செய்திகளில் அக்கறை கொள்வதில்லை. மக்களிடம் அன்பாகப் பழகுவார்.
ஹரிஸ் மீண்டும் தன் இருக்கையில் வந்து அமர்ந்தான்.
இதயம்…. அகற்றப்பட்ட ஆறு மணி நேரத்திற்குள் தேவைப்பட்டவருக்குப் பொருத்திவிட வேண்டும். அதற்குத்தான் இந்த நிறுத்தம், பறப்பு. புரிந்தது.
அப்படியே…… தன் அண்ணனின் இதயமும் இப்படித்தானே பறந்திருக்கும்!? அனிச்சையாக நினைவு வர….
அவனுக்குள் மனம் கனத்து மெளனம் வந்தது.
மெல்ல அண்ணன் – வினயன் இவன் கண் முன் வந்தான்.
பளிச்சென்று சிரித்த முகம். அவன் முகக்களையே அப்படித்தான். எப்போதும் துறுதுறுப்பு, சுறுசுறுப்பு. ஆள் இயல்பே அப்படி. தம்பி மீது அவனுக்குப் பாசம் அதிகம்.
அவன் கும்பகோணம் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு படிப்பு. இவன் திருப்பனந்தாள் அரசு உயர் நிலைப் பள்ளியில் அம்மா வேலை செய்யும்
இடத்திலேயே +2 படிப்பு. அம்மா இவனை இருசக்கர வாகனத்தில் அழைத்து செல்வாள்.
வினயன் திருப்பனந்தாள் பள்ளியில் படித்தவரை சைக்கிளில் சென்று வந்தான். கல்லூரி சென்ற பிறகுதான் இரு சக்கர வாகனம். அப்பா இவனுக்காகப் புதிதாக வாங்கிக் கொடுத்தார்.
‘சிட்டாகப் பறக்காதே மெதுவாகப் போ!’ என்று சொல்லிக் கொடுத்தார். ஆனாலும் அவன் தினம் 20 கிலோமீட்டர் தூரத்தைப் புகையாக சென்று வருவான்.
இந்த வேகமே எமனாக மாறியதுதான் துரதிஷ்டம்.
கல்லூரிக்குக் கிளம்பி சென்ற பத்து நிமிடத்திலேயே நான்கு சக்கர வாகனம் மோதி உயிருக்கு ஊசல்.
செய்தி வந்த அடுத்த வினாடியே அம்மா,அப்பா இவனெல்லாம் அடித்துப் பிடித்துக் கொண்டு விபத்து நடந்த இடத்திற்கே ஓடினார்கள்.
திருப்பனந்தாளைத் தாண்டி இரண்டு கிலோமீட்டரில் கும்பல். வாகனம் ஒரு பக்கம் இவன் ஒரு பக்கம் உயிர் காக்கும் தலைக்கவசம் அணியாததின் விளைவு…இரு காதுகளில் இரத்தம் வழிய ஆள் மல்லாந்து கிடந்தான்.
“எங்கேயும் கொண்டு போக வேணாம். உடன் தஞ்சை தனஞ்செயன் மருத்துவமனைக்குத் தூக்கிப் போங்க. அங்கேதான் இந்த விபத்துக்கெல்லாம் உடனடியாய் சீக்கிரம் சிறப்பாய் சிகிச்சை அளிப்பாங்க. மற்ற மருத்துவமனை எல்லாம் அலட்சியம், அலைக்கழிப்பாங்க.” ஆளாளுக்குச் சொல்ல…
108 வர… விரைவு.
அங்கும் சக்கர நாற்காலியில் கிடத்தி விரைவாகத்தான் உள்ளே கொண்டு சென்றார்கள். ஐந்தாறு டாக்டர்கள் சூழ்ந்து சிகிச்சை அளித்தார்கள்.
ஆனாலும் பலன்….?
மூத்த டாக்டர் முருகேசன் முகம் தொங்கி வெளியே வந்தார்.
“என்ன சார் ஆச்சு..?” அம்மாவும், அப்பாவும் பதறித் துடித்துக் கேட்டார்கள்.
“ப்ச்! பையன் உயிர் பிழைக்க மாட்டான்.”
“ஏன்…?”
“மண்டையில் அடி பலம். மூளைச் சாவு ஏற்பட்டிருக்கு!”
“டாக்டர்!” – தம்பதிகள் இருவருமே அதிர்ந்தாள், அலறினார்கள். அஷ்டலட்சுமி அதற்கும் அடுத்தக் கட்டம் போய் உறைந்தாள்.
“நீங்க விருப்பப்பட்டால் அவனால் பல உயிர்கள் பிழைக்க வாய்ப்பிருக்கு. உறுப்புகளினால் அவன் உயிர் வாழ்வான். அது அவனுக்கு மறுவாழ்வு. நாம கொடுக்கும் உயிர் பிச்சை. வீணா உடலை எரித்து அந்த வாய்ப்பை இழப்பது சரில்லேன்னு என் மனசுக்குப் படுது.” தம்பதிகள் மனதில் படுமாறு மெல்ல சொன்னார்.
அப்பா பேசவில்லை.
உறைந்து போயிருந்த அம்மா முகத்தில் கொஞ்சமாக சலனம்.
கவனித்த டாக்டர் முருகேசன்..
“சொல்லுங்கம்மா…?” என்றார்.
“டாக்டர்! உறுப்பு தானம் செய்ய சம்மதம். ஆனா… அவன் எங்கே, எவர் உடம்பில் எப்படி உயிராய் இருக்கிறான்னு எங்களுக்கு எப்படி தெரியும்…?”
“தெரியாது!”
“பலன்..?”
“பணம்..!”
“டாக்டர். தானம்ன்னா கொடை. கொடைக்குப் பணம் கொடுத்தல், வாங்கல் எப்படி சரி..?,..”
“நீங்க சொல்றது புரியல…?!”
“எனக்குப் பணம் தேவை இல்லே டாக்டர். ஆனால்… அவன் இன்னார் உடலில் இந்த உறுப்பாய் இருக்கிறான்னு தெரியனும்..”
“அதுக்கு வாய்ப்பில்லை மேடம். மருத்துவ சட்டதிட்டத்தில் வழி இல்லை.”
“டாக்டர்! கொடையாகவே பணம் கொடுத்தோ இறந்தவர்கள் உடலிருந்து இதயம், சிறுநீரகங்கள்… போன்ற உறுப்புகள் வெட்டி எடுத்து அதை நீங்க தேவைப்படும் மனிதர்கள் உடல்களில் வைத்து பல உயிர்களை வாழ வைத்து மருத்துவ சாதனை செய்யுறீங்க. ஆனா… இன்னின்னவர்களுக்குப் பொறுத்தப்பட்டிருக்கு என்கிற விபரம் கொடுத்த பெற்றோர்களுக்கோ, உறவினர்களுக்கோ தெரிவிக்கப்பட்டதான செய்தி நான் இதுவரை கேள்வி படாத விசயம். சரியா…?!..”
“ஆமாம். ஆனா…. வந்து…”
“அதில் நிறைய நடைமுறை சிக்கல், மருத்துவ சிக்கல்கள் இருப்பது வேறு விசயம். ஆனா… எனக்குத் தெரியப்படுத்தனும்!”
“மேடம்..!” சங்கடமாகப் பார்த்தார்.
“டாக்டர்! நான் ஒரு தாய். என் மகன் உறுப்புகளினால் மறுவாழ்வு வாழ்வான் என்கிற சந்தோசம் திருப்தியில்தான் உறுப்புதானத்துக்குச் சம்மதிக்கிறேன். அது உபயோகப்படுத்தப் பட்டிருக்கா, வீணடிக்கப்பட்டிருக்கா, அவனால் பலபேர்கள் உயிர் வாழறாங்களா இல்லையா என்கிற விபரம் தெரியாத போது என் ஆசை எப்படி நிறைவேறும்..? அது தெரியாத போது எனக்கு அது வீண் தானே..?!”
“அ… ஆமாம்..!” டாக்டர் அதற்குமேல் பேச முடியாமல் திணறினார், விழித்தார்.
“உடல் வீணாய் மண்ணுக்கோ, தீக்கோ கொடுப்பதில் பிரயோஜனமில்லை மேடம்.” மெல்ல சொன்னார்.
“உண்மை! முகம் தெரியாதவர்கள் மூலம் என் மகன் உயிரோடு இருக்கான் என்பது மட்டும் பிரயோஜனமா..? இதுல திருப்தி இல்லே என் ஆசை நிறைவேற்றம் இல்லை.”
“அ.. அதுக்கு என்ன செய்யனும்…?” தடுமாற்றத்துடன் பார்த்தார்.
“டாக்டர். என் மகன் எந்தெந்த உறுப்புகளில் யாரிடம் இருக்கான்னு எனக்குத் தெரியனும். மருத்துவ சட்டதிட்டத்தில் அது சாத்தியமோ சாத்தியமில்லையோ எனக்குத் தெரியாது. முகம் தெரியாதவர்களுக்கு என் மகன் உறுப்புகளைத் தானமாய்க் கொடுக்க மாட்டேன்!
இதில் எந்த உள் நோக்கமுமில்லை. பிற்காலத்தில் அவர்களோடு பேச்சு, உறவு, வரவிற்கு இடம் கிடையாது. என்பதை வேணுமின்னாலும் தெளிவாய் எழுதி தர்றேன்.. ஆனா… பெறப்பட்டவர்கள் விபரம் தெரியாமல் தரமாட்டேன். இந்த விபரம் எனக்கு ஒரு திருப்தி, நிம்மதி அவ்வளவுதான்!” தெள்ளத்தெளிவாகச் சொன்னாள்.
டாக்டர் வெகு நேரம் பேசவில்லை. முகம் முழுக்க சிந்தனை ரேகைகள். இறுதியில்…அவருக்கு என்ன அவசரம், நெருக்கடியோ தெரியவில்லை.
“சரி மேடம்!” தலையசைத்தார்.
நான்கு நாட்களில் எல்லாம் எடுக்கப்பட்டு உடல் வந்தது . தகனம்!
தாய்க்குத் தலைப்பிள்ளை. செல்ல மகனை இழந்த துக்கம். அப்பா ஒரு மாதம் உயிரோடில்லை.
ஹரிஸ் கண்கள் கலங்கியது.
பெருமூச்சு விட்டு எழுந்தான்.
அதே சமயம்….அவனுக்குள் மின்னலாக அந்த எண்ணம் தோன்றியது. அப்படியே…. அது சாத்தியமா… சாத்தியமில்லையா…? என்பதையும் அலசினான்.
அப்படியே…கண்ணாடி அறையை விட்டு வெளியே வந்தான்.
ஒரு தெளிவுடன் தன் இரு சக்கர வாகனத்தில் ஏறினான்..!
அத்தியாயம் – 3
வீட்டின் நடுவில் இருக்கும் பெரிய ஹாலில் உள்ள சோபாவில் தன்னந்தனியாக அமர்ந்து… எதிர் சுவற்றில் தொங்கிக் கொண்டிருக்கும் மகன் வினயன் படத்தை யே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள் தாய் அஷ்டலட்சுமி.
அவளுக்கு மகன் நினைவு வரும்போதெல்லாம் இப்படிப் பார்ப்பாள்.
தாய்க்குத் தலைமகன். திருமணமாகி ஐந்து வருடங்கள் குழந்தை இல்லாமலிருந்து… வேண்டல், விரதத்தில் புண்ணியமில்லாமல் தவித்து… இறுதியில் மருத்துவ உதவியால் பிறந்த பிள்ளை.
ஏங்கிக் கிடந்த தாய் வழி, தந்தை வழி பாட்டன் பாட்டிகள் இவன் பிறந்த தினத்தை வெகு விமர்சையாகக் கொண்டாடினார்கள். குலதெய்வத்திற்குக் கிடாவெட்டி பூசை போட்டார்கள். முதல் பிறந்த நாளை பத்திரிகை அடித்து ஊர் கூட்டி, உறவுகள் அழைத்து வெகு சிறப்பாகக் கொண்டாடினார்கள்.
இவனுக்கு அம்மா மீது பாசம். தாய்க்கும் மகன் மீது பாசம்.
பெற்ற தகப்பனுக்கு பிள்ளை மீது அதீத பாசம். அதனால்தான் அவன் இழப்பு தாங்க முடியாமல்….! – அஷ்டலட்சுமி பெரு மூச்சு விட்டாள்.
‘எப்படி விழுந்து புரண்டாலும் யாருக்கு எது எது, எப்படி ஒட்ட வேண்டுமோ அப்படித்தானே ஒட்டும் ?!’ எப்போதும் வரும் அதே விரக்தி மனம் இப்போதும் வந்தது.
வினயன் ‘அம்மா!’ என்றுதான் ஓடி வருவான். தந்தையைக் கட்டிப் பிடித்துக் கொண்டு உறங்குவான்.
மூன்று வருடத்தில் அடுத்தவன் பிறந்தும்கூட இவன் குணம் மாறவில்லை.
இந்த தாய் தந்தை பாசம், ஒட்டு, உறவில் அண்ணன், தம்பிகளுக்குள் அடிக்கடி மோதல் வரும். ஆனாலும் பெரிதும் பாதிப்பில்லாமல் வந்த ஒரு சில மணித்துளிகளிலேயே மறைந்து போகும்.
ஹரீசுக்கு இருவரையும் பிடிக்கும்.
ஹரிஸ் போர்டிகோவில் நிற்கும் புத்தம் புது ஹூண்டாய் கிரீட்டா காருக்கு அருகில் தன் இருசக்கர வாகனத்தை நிறுத்தி இறங்கினான்.
அஷ்டலட்சுமி இவன் வருவது தெரியாமல் இன்னும் மகன் படத்தின் மேல் வைத்தக் கண் எடுக்காமலிருந்தாள்.
ஹரீசுக்கு அம்மாவின்…. ஏக்கம், துக்கம் புரிந்தது.
மெல்ல அருகில் அமர்ந்தான்.
“அம்மா!” அழைத்தான்.
“என்ன..?” திரும்பினாள்.
“என்ன பார்த்துக்கிருக்கே…?”
“மகனைப் பார்த்துக்கிட்டிருக்கேன்!”
“எத்தனை வருசத்துக்கு இப்படி பார்த்துக்கிருப்பே..?”
“எத்தனை வருசமானாலும் பார்ப்பேன்!”
“சலிக்கலையா..?”
“எப்படி சலிக்கும்..?”
“எனக்கும் அவனைப் பார்க்கனும் போலிருக்கு..” – இப்போதுதான் இவன் தான் நினைத்து வந்திருக்கும் விசயத்திற்கு அருகில் வந்து முதல் அடி எடுத்து வைத்தான்.
“பாரேன்!”
“இப்படி இல்லே நிஜமா, நேரடியா….” – உடைத்தான்
“புரியலை…?!” – குழம்பிப் பார்த்தாள். அவளுக்கு எப்படி புரியும்…?
“புரியல..?!…”
“இல்லே..”
“வினயன் எத்தனைப் பேர்களிடம் இருக்கானோ அத்தனைப் பேர்களையும் பார்க்க ஆசை!”
இப்போதுதான் அவளுக்குப் புரிந்தது.
“ஹரிஸ்!” அஷ்டலட்சுமி துணுக்குற்றாள்.
“கொஞ்ச நேரத்துக்கு முன்தான்ம்மா நம்ம அணைக்கரை வழியே என் கண் முன்னே இதயம் ஒன்னு பறந்து போனது. அதைப் பார்த்ததும்தான் வினயன் இதயமும் ஆறு மணி நேரத்தில் பறந்து அடுத்தவர் உடலில் ஐக்கியமாகி இருக்கும் தோணிச்சு. அப்படியே அவர்களைப் பார்த்தால் என்ன என்கிற ஆசையும் வந்துது..!” தெளிவாகச் சொன்னான்.
இப்போதுதான் அதிர்ந்தாள்.
அப்படிப் பார்க்க வேண்டும்! என்கிற நினைப்பே அவளுக்குள் சிலிர்ப்பை ஏற்படுத்தி உணர்ச்சிப்பிராவாக கலவையை உண்டாக்கி உடலினை லேசாக நடுங்கச் செய்தது.
இதயம், கண்கள், கல்லீரல்… என்று எந்தெந்த உறுப்பு, எங்கு, யார் யாரிடம் இருக்கோ..? அவர்களைக் கண்டு பிடித்து பார்த்தால்….
‘கண்ணே..! மணியே..! காணாமல் கண்டெடுத்த முத்தே !’ கொஞ்ச முடியுமா…?’
‘மகனே ! அழைக்க முடியுமா..? மகளே அணைக்க முடியுமா..?’-
‘பார்க்க அனுமதிப்பார்களா..? இல்லை..! ஆளைப் பார்க்கத்தான் விடுவார்களா..?’ – இப்படி நினைவுகள் பலவாறாக ஓடியது.
“வேணாம் ஹரீஸ்….” என்றாள் நடுங்கும் குரலில்.
“ஏன்ம்மா..?”
“நிறைய கஷ்டம், சிக்கல்கள் சிக்கல் இருக்கு..”
“கண்டு பிடிக்க முடியாதா..?”
“சிரமம். யார் யார் எங்கே இருக்காங்கன்னு தெரியாது.”
“அவர்கள் முகவரிகள் எல்லாம்தான் உன்னிடம் இருக்கே….”
“அது பார்க்கிறதுக்காக வாங்கி வைக்கலை. என் மகன் இன்னாரிடம் இப்படி இப்படி இருக்கிறான் என்கிற திருப்தி மன சாந்திக்காக வாங்கி வைச்சிருக்கேன்.”
“அந்த முகவரி வைத்து அவர்களைச் சந்திக்க முடியாதா..?”
“முடியும். எல்லாரும் கொடுத்த முகவரியில் இருப்பாங்கன்னு சொல்ல முடியாது. இடம் மாறி இருக்கலாம். வெளிநாடு சென்றிருக்கலாம்…”
“இருப்பவர்களைப் பார்க்கலாமே. கிடைத்தவர்களைச் சந்திக்கலாமே..?”
“கஷ்டம்! வீண் முயற்சி!”
“முயன்று பார்த்தால்தானேம்மா முடிவு தெரியும்..?”
‘ஹரிஸ் ஒன்று நினைத்தால் சாதிக்காமல் விடமாட்டான்!’ குணம் தாய்க்குத் தெரிந்தது.
“அம்மா! இதுக்காக நீங்க பணம் வாங்கி இருக்கீங்களா..?” தன் சந்தேகத்தைக் கேட்டான்.
“புரியல..?”
“அண்ணன் உறுப்புகளுக்குத் தொகை வாங்குனீங்களா…கேட்டேன்!”
“டொனேசனுக்கு தமிழ்ல என்ன அர்த்தம்.?”
“தானம்”
“அது வடசொல். தமிழ்ல சொல்லு?”
“கொடை! நன்கொடை!”
“பணம் வாங்கினால் விற்பது. நான் கொடையாய்க் கொடுத்தேன். அதனால்தான் என் மகன் இன்னாரிடம் இப்படி இப்படி இருக்கிறான்னு தெரியனும் என்று பிடிவாதம் பிடித்து, வேறு பின்னால் பணம் பறிக்கும் நோக்கம். உறவு வைத்துக் கொள்ளும் எண்ணம் கிடையாது எழுதி கொடுத்து அவர்கள் முகவரி வாங்கினேன்”.
“அருமையாய் செய்திருக்கே. நான் அவர்களைக் கண்டு பிடிக்கிறேன். அண்ணன் யார் யாரிடம் எப்படி இருக்கிறான். பார்க்கிறேன்!”
அஷ்டலட்சுமி அதற்கு மேல் அவனிடம் வாதிடவில்லை.
‘அன்றைக்கு வைத்தது. அப்புறம் தொட்டுப் பார்க்கவில்லை. இருக்கிறதா…இல்லையா..? தெரியவில்லை.’
மவுனமாக எழுந்தாள்.
அறைக்குள் சென்று அலமாரியைத் திறந்தாள்.
– தொடரும்…
![]() |
என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
மௌனத்தின் மரணம்
இரா.கலைச்செல்வி
June 6, 2026
பால்ய காலத்துச் சிநேகிதி!
வ.ந.கிரிதரன்
June 6, 2026
சொந்தம்
ஜெயந்தி சங்கர்
June 6, 2026
