இன்னும் ஒருமுறை படிங்களேன்…
கதையாசிரியர்: அபிநந்தினி மோகன்
கதைத்தொகுப்பு:
நகைச்சுவை
கதைப்பதிவு: May 25, 2026
பார்வையிட்டோர்: 151

பகலவன் என்பது காரணப்பெயரா?? இடுகுறிப்பெயரா? கண்டிப்பாய் காரணப்பெயராய் தான் இருக்கும். பகல் அவன் தானே? என்னே!! தமிழின் அழகு என்று தன்னைக் கொஞ்சியவாறே எழுந்தாள் தமிழ் பாவை.
பாதி தூக்கத்தில் படுக்கையில் இருந்து எழுந்தவள் பின் பக்க கதவைத் திறக்க, பாவைக்காக காத்திருந்த பகலவனும் பளிச்சென சிரித்தான்.
அவனுக்கு போக்கு காட்டியவாறே சென்று முன் பக்க கதவைத் திறக்க அங்கும் அவனே முன் நிற்க, எண்ணங்களால் கோலமிடுபவள் வண்ணங்களால் கோலமிட்டு வாசலை நிறைத்துவிட்டு திரும்ப, திமு திமு வென்று சத்தம் கேட்டு திடுக்கிட்டாள்.
அங்கு ஓர் ஒற்றை அருவி அழகாய் விழுந்து கொண்டிருந்ததை வியப்பு மேலிட பார்த்தவள், விழுவதும் எத்துணை அழகு.. ” விசும்பின் துளி வீழின் அல்லால் மற்றாங்கே.. பசும்புல் தலைகாண்பது அரிது.” அல்லவா! என விளம்பிக் கொண்டே எங்கே சென்று விழுகிறது என எட்டிப் பார்க்க, அங்கே ஒரு குழி, வட்டமாய் அல்ல கட்டமாய்… கருப்பாய்…
அங்கிருந்த பல பேரும் அவளைப் பார்க்க பயந்தே விட்டாள் பாவை. அதில் ஒருவன் அண்டாவாயன் பெரிய காதுகளுடன் பெரிதாய் சிரித்தான்.. அவனிலும் சற்று குறைவாய் வாயுடைய மற்றொருவன் தன் கரை படிந்த வாயைக் காட்ட, கடவுளே! காப்பாற்று என கலங்கியே விட்டிருந்தாள்.
அதற்குள் மேலும் ஒற்றைக் காலுடைய இருவர், இரட்டையர்கள் என சொல்வதற்கில்லை, ஒரே ஒரு ஒற்றுமை ” மூக்கும் முழியுமா என்பார்களே” அது இருவருக்குமே இல்லை. வேற்றுமை, வழவழப்பாய் ஒருவன்., வடுக்களோடு ஒருவன். வேற்றுமையிலும் ஒற்றுமை, வேறு என்ன அந்த ஒற்றைக் கால் தான். “ஓவென்று அழவேண்டும் போல் கூட இருந்தது அவளுக்கு. அவ்வளவுதானா? அப்பாடா என ஆறுதல் அடைவதற்குள் இல்லை இல்லை நாங்களும் இருக்கிறோம் என்று இன்னும் நால்வர் எட்டிப் பார்த்தனர், வடிவமே இல்லாத ஒரே வடிவத்தில், குதிர் போல எனச் சொல்வார்களே அப்படி. இடையிடையே இன்னும் பலரும் எட்டிப் பார்க்க, தப்பிச் செல்ல வழியே இல்லை என்று தெரிந்தேவிட்டது தமிழ் பாவைக்கு.
பயந்தால் வேலைக்கு ஆகாது, ஒரு கை பார்த்து விடுவோம் என அவள் கிளம்பியவுடன் பத்து பேர் துணையாய் வந்தனர். ஒத்தையாய் செல்ல எத்தணித்த அவளுக்கு பத்து பேர் துணை கொண்டதும் பயம் சற்றே விலகியது. ஆட்கள் மட்டும் போதுமா என்ன? ஆயுதமும் வேண்டுமல்லவா? அங்கிருந்த கம்பிச்சுருளை கையில் எடுத்துக் கொண்டு களம் புக, புன்னகை இளவரசி சினேகா ” மாட்டேன் நான் இந்த ஆட் சூட்ல நடிக்க மாட்டேன் ஒரு ஸ்க்ரப்பர் ஒரு மாசத்துக்கு வருமா? பொய் எனக் கூற, ஆமா! ஆமா! கம்பிச்சுருள்தான் சரியா இருக்கும் ஸ்க்ரப்பர் லாம் இம்பாஸிபில் என தமிழ், ஆங்கிலம் பேச , பதிலுக்கு சினேகா ‘விம்’ இருந்தா பாஸிபில் ‘விம்பாஸிபில்’ என விளம்ப, விளம்பர காட்சி முடிந்தது புன்னகையுடன்.
அத்தனை பேரையும் ஒரு வழியாய் சமாளித்து பாத்திர அலமாரியில் பக்குவமாய் கவிழ்த்து வைத்தாள். ஒற்றைக்கால் கொண்ட இருவரையும் அதற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இடத்தில் தொங்கவிட்டு கொண்டே,
“பா” திறம் கலை என்போம். பாத்திரம் கழுவுதலும் ஒரு கலை என்போம். பாரினில் பெண்களுக்கு பன்முகம் என்றிடுவோம். பாருங்கள்! இன்முகம் கொண்டே பாரினையும் வென்றிடுவோம். என பாடிக் கொண்டே பறந்தாள் தமிழ் பாவை.
குறிப்பு:
அழகாய் விழுந்த அருவி நம் பாவை வீட்டு தண்ணீர் குழாய். குழியோ, பாத்திரம் துலக்கும் தொட்டி. பெரிய காதுடைய அண்டா வாரன் வாணலி, கரைபடிந்தவன் தேநீர் காய்ச்ச உதவியவன், குதிர் வடிவம் குவளைகள். ஒற்றைக்கால் கொண்ட இருவர் , வேறு யார்? தோசை திருப்பியும்,ஜார்ணியும் தான்.
என்ன பாக்குறீங்க?? இன்னும் ஒரு முறை படிங்களேன். அத்தனை கலையும் அவளுக்கு வாய்க்கட்டும் என நீங்களும் வாழ்த்துங்களேன்.
தொடர்புள்ள சிறுகதைகள்
பேஜர்
ஜெயந்தி சங்கர்
May 25, 2026
அமெரிக்காவில் கிச்சா
கிரேஸி மோகன்
May 25, 2026
அமெரிக்காவில் கிச்சா
கிரேஸி மோகன்
May 22, 2026