போலீஸ்காரன் மகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 28, 2026
பார்வையிட்டோர்: 227 
வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்

“பிடிக்கல்ல, ஒண்ணுமே பிடிக்கல்ல அசுதோஷ், எனக்கு நான் இருக்கறது எங்க வீட்டுல யாருக்கும் பிடிக்கல. நா ஏன் உயிரோட இருக்கணும். ஒன்னோட நான் போன்ல பேசறது இது தான் கடைசின்னு நெனச்சிக்கோ, அசு. நான் எப்பவோ மனசளவுல ரெடியாயிட்டேன். உன்னத் தவிர யாருக்கும் தெரியாது. இந்தப் பிடுங்கல் படறதுக்குப் போய்ச் சேர்ந்துடலாம். நாளைக்கு உனக்கு நியூஸ் வரும். இனிமேல் மெயில் சாட் போன்னு எந்தத் தொந்தரவும் ஒனக்கு இருக்காது. ஓகே பை, தாங்க்ஸ் ஃபார் யுவர் நைஸ் ஃபிரெண்ட்ஷிப் பைலா பை,” என்னை மேலே பேசவிடாமல் டொக்கென்று போன் துண்டிக்கப்பட்டது. எனக்குக் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை.

அந்த மாதத்தின் டெலிபோன் பில் பழுத்துவிடும் என்ற ஜாக்கிரதையுணர்வு முற்றிலும் என்னிடமிருந்து விடைபெற்றிருக்க, மறுபடியும் அவளது மலேசிய நம்பருக்கு முயற்சித்தேன். ஹும்ஹும், இணைப்பு கிடைக்கவில்லை. எங்கேஜ்ட் டோன் வந்தபடியே இருந்தது. போனை எடுத்து வைத்து விட்டாளா என்ன? மதுரையிலிருந்து சென்னையா, உடனே கிளம்பிப் போயே ஆறுதல் சொல்லலாம். முடிந்தால் ஓர் உயிரைக் காப்பாற்றவே செய்யலாம். கொரியா எங்க? மலேசியா எங்க? போன் பேசறதே அதிகம். இதில் நேரிலாவது போகவாவது, இவளுடன் பேசிப்பேசி கடந்த சில மாதங்களாக என்னுடைய டெலிப்போன் பில் நாளொரு மாதமும், பிறந்த குழந்தையைப் போலப் பருத்துக் கொண்டேயிருந்தது. சட், உயிர் ஒன்று போகும் நிலையில் டெலிபோன் பில்லா பெரிய விஷயம்?… என்ன செய்வது என்று ஒன்றும் புரியவில்லை.

மதியம் எனக்குக் கிடைத்த மெயிலில் எழுதியிருந்தாள். ஒரு மாதமாய் சிறுகச் சிறுகத் தூக்க் மாத்திரைகளைச் சேர்த்து விட்டாளாம். தன் பிரச்சனைக்கு தீர்வு கிடைத்தால் குப்பைத் தொட்டியிலும் கிடைக்கா விட்டால் தன் தொண்டைக் குழிக்குள்ளும் அவற்றைப் போடவே எண்ணமிருந்ததாம். ஒரு வாரமாய் பணத்திற்குப் பல இடங்களில் முயன்று தோற்றதும் தொண்டைக்குழி தான் மாத்திரைகளுக்கு வாய்த்த சரியான இட்மென்று முடிவெடுத்திருந்தாள். எதுகை மோனையோடும் கவிதை நடையில் திஸ்கியில் தட்டியிருந்தாள். தற்கொலையைக் கூட மிக அழகாகச் செய்து கொள்ள நினைத்தாளோ? பார்க்க சுமாராய் இருந்தாலும் அழகு படுத்திக் கொள்வதில் கில்லாடி என்று அவள் முன்னாடி அனுப்பிய போட்டோ சொன்னது. அழகுணர்ச்சி அவளுடன் கூடப் பிறந்ததா இல்லை வளர்த்துக் கொண்டாளா தெரியவில்லை. பல முறை கேட்டிருக்கிறேன். அவளிடம் இருந்த கவிநடையும் அழகுணர்ச்சியும் தான் என்னை அவள் பால் அதிகம் ஈர்த்திருந்தன.

என்னிடம் அவளது சினேகிதர்களது மின் முகவரிகள் மட்டுமே இருந்தன. எதற்கும் இருக்கட்டுமென்று சிவா, ராம் மற்றும் ரம்யா எல்லோருக்குமே ஒரு மெயில் சுருக்கமாக எழுதிவிட்டு, மறுபடியும் அவளது போன் நம்பருக்கு முயற்சித்தேன். ஹூம்ஹூம் இல்லை, கிடைக்கவில்லை. போனை எடுத்துத் தான் கீழே வைத்துவிட்டிருந்தாள்.

மறுபடியும் மெஸஞ்சரையும் மெயில் பாக்சையும் பார்த்துவிட்டு செய்வதறியாது அப்படியே சோபாவில் சாய்ந்தேன். ஸ்ருதியை முதலில் யாஹூ க்ளப் ஒன்றில் சாட்டின் மூலம் தான் கடந்த ஆகஸ்டில் அறிந்தேன். நானும் மலையாளியென்பதாலோ என்னவோ, அவளது மலையாளப் பின்புலம் எனக்குப் பிடித்திருந்தது. அவளுக்கு மலையாளம் பேச மட்டும் தான் தெரியும், மற்றபடி தமிழ்தான் நன்றாகப் பேச, எழுதப் படிக்கத் தெரியும் என்றாள். பெயரளவில் தான் தான் மலையாளி என்றாள். அவளின் அப்பாவுக்கு போலீஸ்கார வேலை. தன் குடிப்பழக்கத்துக்கான பணம் கொடுத்ததாலேயே அவர் அவ்வேலையை பிடிக்காவிட்டாலும் பார்த்தாராம். தம்பி படிக்கிறான். தான் வேலை தேடுவதையும் அண்ணன் லண்டனில் இருப்பதாயும் சொன்னாள்.

தொடர்ந்து தினமும் சாட் செய்தோம். நாங்கள் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு என் போன் நம்பரை வாங்கிப் பேசினாள். குரலே இளமையாய் ஒரு துள்ளலுடன் இருந்தது. ‘அசு, அசு’ என்று அவள் என் பேரைச் சுருக்கியது எனக்குப் பிடித்திருந்தது. கொரியர்கள் உச்சரிக்க முடியாமல் என் பெயரைக் கொலை செய்யும் போது வரும் என் எரிச்சல் அங்கே போனதென்று என்னைச் சாடிய என் மனசாட்சியை நான் முற்றிலும் அலட்சியப்படுத்தித் தள்ளினேன். அடுத்து வந்த வாரங்களில் நானே போன் செய்தேன். சாட் எப்போது போல தினமும் தொடர்ந்தது.

அடுத்து வந்த மாதங்களில் மற்ற இணைய நண்பர்கள் பலரைத் தொடர்பு கொள்ள முடியாமல் ஸ்ருதியே என் நேரத்தை முழுவதும் அவளுடன் சாட், மெயில், போன் என்று சுருங்கியது. ஆபீஸ் வேளையில் கூட மனம் லயிக்க் மறுத்தது. இருபத்தைந்து வயது இளைஞனுக்கு ஏற்படக்கூடிய சஞ்சலமோ என்று அவ்வப்போது யோசித்து உடனே மறந்தேன். சஞ்சலமே மெதுவாகக் காதலாகக் கூட மலரலாம் என்று பூரிப்புடன் சொல்லிக் கொண்டேன். வேலையும் சரியில்லை. சரியான இந்தியச் சிநேகிதமும் அமைய வழியில்லை. இந்தக் கேடுகெட்ட ஊரை விட்டுவிட்டு மலேசியாவில் ஒரு வேலை தேடிக் கொண்டு செட்டில் ஆகி விடலாம் என்று கனவு வேறு கண்டேன். ஒருமுறை கூட அத்தகைய எண்ணங்களை அவள் வெளிப்படுத்தவில்லை. நானும் சர்வ ஜாக்கிரதையாகத் தவிர்த்தேன்.

இப்போது தற்கொலை செய்து கொள்ளப் போகிறாளாம். எப்படியிருக்கிறது கதை? இதற்காகவா என்னிடம் நட்பை நீருற்றி வளர்த்தாள்? அப்படி என்ன தான் பணமுடை இருக்க முடியும். யோசிக்க யோசிக்கக் குழப்பமே மிஞ்சியது. ஸ்ருதிக்குப் போன வருடம் அப்பெண்டிசைடிஸ் ஆபரேஷன் நடந்ததாம் லண்டனில். அவள் வேலை தேட அங்கு சென்றபோது, செலவு முழுவதும் அண்ணன் செய்தானாம். இப்போது அவன் அந்தப் பணத்தையெல்லாம் திரும்பக் கேட்கிறானாம். இதற்கு அவளுடைய பெற்றோரும் உடந்தையாம். சொந்த அம்மா அப்பாவே இருப்பத்திரண்டு பெண்ணிடம் செலவழித்ததைக் வயது கொடு என்பார்களா என்று தோன்றியது எனக்கு. ஆனால், குடும்பங்களில் தான் பலவிதம் இருக்கின்றனவே, அதனாலும் ஸ்ருதியின் டெலிபோன் பேச்சில் இருந்த உண்மையும் என்னை அவள் மேல் இரக்கம் கொள்ள வைத்தன.

மறுபடியும் யாஹுமெயிலைப் பார்த்தேன். சிவா மடலிட்டிருந்தான். ஸ்ருதி வீட்டுக்குப் போகப் போகிறேன். ஏதும் சொல்லணுமா என்று. நான், “உடனே ஓடிச் சென்று தற்கொலை செய்து கொள்ளவிருக்கும் அவளைக் காப்பாற்று,” என்று தட்டியனுப்பினேன். அவனும் உடனே, “இதோ கிளம்பிட்டேன். ஒண்ணும் ஆகாது, கவலை வேண்டாம்,” என்று எழுதியிருந்தான். சிவாவது சரியான நேரத்தில் அகப்பட்டானே.

இதற்குப் பிறகுதான் நான் போட்டு வைத்திருந்த காபியின் நினைவே எனக்கு வந்தது. அது சூட்டின் சுவடை இழந்திருந்தது. அப்படியே சிங்க்கில் கொட்டிவிட்டுக் குளிக்க போனேன், முக்கியமான மீட்டிங் இருந்தது. நேரத்தோட ஆபீஸுக்குப் போக வேண்டும் என்று அரக்கப் பறக்கக் கிளம்பினேன்.

மதிய உணவு இடைவேளை இடைவேளை வரை வேறு வரை வேறு சிந்தனைக்கே வழியில்லாமல், ஆங்கிலத்தைக் கடித்துத் துப்பிய கொரியர்களுடன், ‘கிளையண்ட் மீட்டிங்’ என்ற பெயரில் நேரம் போனது. வயிற்றில் பசியோடு ஸ்ருதியின் நினைவும் வந்தது. கிடுகிடுவென்று மெயில் பாக்ஸைப் பார்த்தால் சிவா, ராம் மற்றும் ரம்யா மூவருமே எழுதியிருந்தனர். ஸ்ருதியைச் சரியான நேரத்துக்கு மருத்துவமனைக்குக் கூட்டிக் கொண்டு போய்ப் பிழைக்க வைத்து விட்டனர். இனிமேல், அவளுக்கு மறுபடியும் இந்த எண்ணம் வரதிருக்க வேண்டுமென்றால், அவளுடைய பணக் கஷ்டம் தீரவேண்டும். அதற்கு அவரவர் செலவுகள் கடன்களைக் குறிப்பிட்டு தங்களால் உதவ முடியாத நிலையை விவரித்திருந்தனர். சொந்த தங்கையை ஒருவன் இவ்வளவு தூரத்துக்கு நெருக்குவானா என்ன என்று தோன்றியது. இருந்தாலும் அவள் மேல் ஏற்பட்ட இரக்கம் சந்தேகத்தை விஞ்சி நின்றது.

எத்தனையோ பேருக்கு உதவியிருக்கிறேன் நான் இதுவரை. என்னையும் அக்காவையும் படிக்க வைக்க அம்மா பட்ட கஷ்டத்தை நினைத்து நான் படிப்பு விஷயமாகப் பலருக்கும் கடனாய் நினைக்காமல் கொடுத்து வந்திருக்கிறேன். திரும்பக் கொடுத்தால் வேண்டாமென்று சொல்லாமல் வாங்கிக் கொண்டதுமுண்டு. பண்டிகைகளைக் கொண்டாடத் தெரியாமலே போனது எனக்கு.

ஒவ்வொரு தீபாவளி, பொங்கலின் போது எங்களை அம்மா தான் பாவம் பண்டிகையெல்லாம் ஏன் தான் வருகிறதோவென்று உள்ளுக்குள் புழுங்குவார். உடுத்த புதிய உடையோ, சாப்பிடப் பலகாரமோ இல்லாமல் எங்களிருவரையும் பார்க்கும் அம்மாவுக்கு வருத்தம் மிகும். ஒரு வேளைக்கு மேல் உணவே தகராறெனும் போது பண்டிகையெல்லாம் பணக்காரர்களுக்கு என்று அன்று அம்மா புரிய வைத்திருந்தார். முக்கித் தக்கிப் படித்து கைநிறைய சம்பாதித்து அம்மாவிற்குச் செய்யும் இந்த வருடங்களில் தான் என் மனமே நிறைகிறது. அம்மாவுக்கும் அக்காவுக்கும் பொன்வளை வாங்க வைத்திருந்த பணத்தை வேறு எதற்கும் எடுக்கக் கூடாதென்று இருந்தேன். ஆனால், இன்று ஸ்ருதிக்கு…

ஆனால் ஸ்ருதிக்கு ஐம்பதாயிரம் மலேசிய ரிங்கிட் வேண்டியிருக்கிறதாம். என்னுடைய மொத்தச் சேமிப்பையும் துடைத்து எடுத்தாலும் இருபத்தெட்டாயிரம் தான் தேரும். அதை அவளுக்கு கொடுத்துவிட்டால், கடும் குளிரிலிருந்து தப்பவேணும் ஊருக்குப் போகும் போது என்ன செய்வது என்று பெரும் குழப்பமாக இருந்தது. அந்தப் பணத்தை விட்டால் வேறு வழியும் இருக்கவில்லை.

மாலையில் நான் வீட்டில் கால் வைக்கவே காத்திருந்தது போல போன் கிணுகிணுத்தது. எடுத்தால், ஸ்ருதி! “என்ன ஸ்ருதி இப்படியெல்லாம் பண்ற? எங்க இருக்க? இப்ப எப்பிடி இருக்கு?” என்று கேட்டேன் பரபரப்பாய். “ஒரே தூக்கத் தூக்கமா வருது. ஆஸ்பத்திரியிலிருந்து தான் பேசறேன் அசு. சிவா வந்து காரியத்தக் கெடுத்துட்டான்,” என்றாள் மிகவும் சிரமத்துடன். “பேத்தாத ஸ்ருதி. பணம் தானே பிரச்சனை. நான் உனக்கு அனுப்பறேன். உங்க வீட்டு அட்ரஸ் குடு. இருபத்தெட்டாயிரம் தான் இருக்கு. அத முதல்ல அவங்ககிட்டக் குடு. அப்பறம் மீதியத் தரேன்னு சொல்லு. எனக்கு நீ ரெண்டு மாசத்துல கொடுத்துடுவியா ஸ்ருதி”

என்று நான் கேட்டதுமே, “இங்க வந்து கூடப் பாக்கல்ல அண்ணனும் அம்மாவும் அப்பாவும். இனிமே நான் அந்த வீட்டுல கூட இருக்கப் போறதில்ல. எனக்கு வேற எடத்துலருந்து பணம் வரும் அசுத்தோஷ். முன்னாடி வேலையிலயிருந்த போது ஒருத்திக்குக் க்டன் கொடுத்திருக்கேன். உம்… உன்னோட முழுப் பணத்தைக் கொடுக்க எனக்கு ரெண்டு மாசமா, ஹே கமான்…. ரெண்டே வாரம் போதும்பா,” என்றாள். “மீதிப் பணத்துக்கு என்ன செய்வம்மா?” என்றதற்கும், “உம்…பாப்போம்… எனக்குப் பேச முடியல்ல. அப்புறம் போன் அடிக்கிறேன்,” என்று வைத்து விட்டாள். அடுத்த நாள் காலையில் மெயிலில் ஸ்ருதி அனுப்பிய முகவரியோடு கிளம்பி வங்கியை அடைந்தேன். காலை வேளையாதலால், மலைப்பாம்பாய் வரிசை நீண்டு வளைத்திருந்தது. LOLO எடுத்து அனுப்பிவிட்டு ஆபீஸை அடையும் போது தாமதாகிவிட்டது.

பணம் கிடைத்தது, அண்ணனிடம் கொடுத்தது, ஹாஸ்பிடலுக்கு மாறியது என்று அடுத்து வந்த வாரங்களில் மெயிலில் எழுதினாள். ஹாஸ்டல் முகவரி மட்டும் ஏனோ கொடுக்கவேயில்லை. உன்னால் தான் நான் உயிரோடு இருக்கிறேன் என்று அடிக்கடி கூறினாள். சமயத்திற்கு உதவியதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. ஊருக்குப் போக ஏர்டிக்கெட் ‘ப்ளாக்’ செய்துவிட்டு ஸ்ருதியிடமும் சொன்னேன். இரண்டு வாரங்களில் கிடைக்க வேண்டிய பணம் கிடைக்கவில்லை, கிடைத்ததும் கொடுக்கிறேன் என்று போனில் சொன்னாள். இரண்டு வாரங்கள் இரண்டு மாதங்களாகிவிட்டன. ஊருக்குக் கிளம்பும் முன் ஷாப்பிங் போகக் கையில் அதிக பணமில்லாமல் போய் விட்டது. என் நிலை புரியாமல், ‘பணம் கிடைக்கவில்லை,’ ‘பணம் கிடைக்கவில்லை,’ என்ற பல்லவியையே பாடினாள். மெயில் செய்வதும் அரிதாகியிருந்தது. டிக்கெட் போடும் போதே மலேசியாவிற்குப் போய் இரண்டு நாட்கள் இருந்து விட்டு இந்தியா போக எண்ணினேன். அதற்கேற்றாற் போல் டிக்கெட்டும், மலேசிய விசாவும் எடுத்தேன். ஸ்ருதிக்கு நான் வருவதைச் சொல்லவில்லை. ஒரு சர்ப்ரைஸாக இருக்கட்டுமென்று கிளம்பி விட்டேன். என்னைப் பார்த்ததும் குதிக்கப் போகிறாள் என்று நினைத்து என் மனம் குதித்தது. பாதிப் பணத்தைக் கொடுத்தால் கூடப் பரவாயில்லை என்று குதித்த மனம் ஓய்ந்தது.

கோலாலம்பூரில் ஸ்ருதி வீட்டிற்குப் போனேன். நான் போன போது நடுத்தரவயதுப் பெண்மணி ஒருவர் இருந்தார். அவர் தாந்தான் ஸ்ருதியுடைய அம்மா என்றார். அவரைப் பார்த்தால் மிகவும் கனிவான பெண்மணியாக இருந்தார். என் சித்தியின் நினைவு வந்தது எனக்கு. ஸ்ருதி சொன்ன எந்தவிதமான அடையாளங்களும் அவரிடம் இல்லை. உள்ளே கூப்பிட்டு உபசரித்தார். ஸ்ருதி படிப்பிற்காக ஒரு மாத முன்பு தான் லண்டனில் அவளுடைய அண்ணா வீட்டிற்குப் போனதாகச் சொன்னார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. என் வருகையின் நோக்கத்தைச் சொன்னேன்.

நான் சொல்லச் சொல்ல அவர் முகம் இருண்டது. “ஐயோ இவ்வளவெல்லாம் செஞ்சிருக்காளா இவ. இவளத் திருத்திப் படிக்க வைக்க நாங்க படறபாடு இந்த ஊருக்கே தெரியும். நீங்க ஏந்தம்பி அவ்வளவு பெரிய தொகையக் கொடுத்தீங்க?” எனக்கு விஷயத்தை உள்வாங்கவே சிரமமாயிருந்தது. பொய்யா? அத்தனையுமா? “தற்கொலையா? முயற்சி செஞ்சப்போ நீங்க வரலைன்னு வேற சொல்லி வருத்தப் பட்டா.”

“தற்கொலையா? யாரு? அவளா? நீ வேற சுத்தி உள்ளவங்களையெல்லாம் சாவடிப்பாளே தவிர, அவளாவது தற்கொலையாவது? நீங்க வேற… மகாக் கள்ளி. ஆரம்பத்துல அவங்கப்பா கொடுத்த செல்லம் அவளக் குட்டிச் செவராக்கிடிச்சி.”

“அப்ப எம்பணம்? நான் ஓடாத் தேய்ஞ்சு ஒழைச்ச காசும்மா. கிட்டத்தட்ட நாலு வருஷமா குருவி சேக்கர மாதிரி சேத்தேன். உங்க பொண்ண ரொம்ப நம்பினேன். இப்படி செஞ்சிட்டாளே,” கண்களில் தளும்பியிருந்த கண்ணீர் வெளியாகிவிடுவேன் என்று பயமுறுத்தியது. பணம் அனுப்பியதற்கான வங்கிச் சான்றிதழை வைத்துக் கொண்டு, நாலாயிரம் மைலுக்கப்பால் இருந்து கொண்டு நான் செய்யக் கூடியது என்னவென்று யோசித்தேன். எதுவும் செய்ய முடியுமென்று அப்போது தோன்றவில்லை.

“எங்களால் எல்லாம் கொடுக்க முடியுமா? சொல்லுங்க தம்பி. அவ்வளவு வசதி எங்க எங்களுக்கு, அவங்கப்பா நெனச்சா வருவாரு. சம்பளமெல்லாம் வீட்டுக்கு வராது. மனசிருந்தா கொஞ்சம் சாமான் வாங்கிப் போடுவாரு. ஏதோ எம்பெரிய பையன் கொஞ்சம் கொஞ்சம் அனுப்புவான். செலவுக்கு அதான். ஒண்ணு வேணாச் செய்யலாம். போன் போட்டு, செலவானது போக, மீதியிருக்கற பணத்தையாவது உங்களுக்கு அனுப்பச் சொல்லிக் கண்டிக்கிறேன், என்ன சொல்றீங்க? அதுகூட எம்பையனுக்குத் தெரியாமத் தான் சொல்லணும். அவளக் கொன்னே போடுவான் தெரிஞ்சா,” இதை கேட்டதும் அப்படியே ஆயாசத்துடன் இருக்கையைவிட்டு எழுந்தேன். இந்த மனநிலையில் அம்மாவுக்கும் அக்காவுக்கும் ஒன்றுமே வாங்காமல், இந்தியாவிற்குப் போகத் தான் வேண்டுமா என்று தோன்றியது.

“சிவா, ராம், ரம்யா அவங்க வீடெல்லாம் கிட்டத்தானா? அவங்களுக்குப் புரியும் என்னோட நிலைமை, அவங்களயாவது நான் பார்க்கணுமா?”

“அப்பிடி யாரும் சிநேகிதம் கிடையாதே அந்த தடிச்சிக்கு. ஹாங்க்…! அப்படித்தானிருக்கும். முன்ன ஒருதடவ ஒரு மலாய்ப் பையன் இங்க வந்து சொன்னான். யாஹூ ஹாட்மெயில் எல்லாத்துலயும் நாலஞ்சு அக்கவுண்ட் வச்சிருக்காளாம். எல்லாரும் ஒரு முகமூடி போட்டுகிட்டு, ‘நா முகமூடி’ன்னு சந்தேகமே வராத மாதிரி மாத்தி மாத்தி முகமூடி போட்டுக்குவான்னு கிண்டல் செஞ்சான். அத வச்சித் தான் வெளாண்டிருக்கா, நாயி நம்பறாப் போல நல்ல நல்ல பேரா வச்சிக்குவாளாம், அவஞ்சொன்னான். ஒரு தடவ, ‘ரோஹித் இருக்காங்களா’ன்னு போன் வந்திச்சு தெரியுமா இந்தியாவுலயிருந்து, வாத்தியார் பிள்ள மக்குன்னா, எங்க வீட்டுல போலீஸ்காரன் பொண்ணு திருடின்னு ஆயிப் போச்சு. எனக்கே எனக்கே உங்களப் பார்க்கச் சங்கடமாயிருக்கு. ஆனா, நான் என்ன செய்ய? ஒலகம் ரொம்பக் கெட்டுடுச்சு தம்பி. ஜாக்கிரதையா இருக்கணும். இப்படி ஏமாந்திட்டீங்களே…” அவர் விடாமல் பேசிக் கொண்டே போனார். நான் இருக்கும் இடமே தெரியவில்லை எனக்கிருந்த குழப்பத்தில், எனக்கு என்ன செய்வது என்றும் புரியவில்லை. நான்கு வருட சேமிப்பு, உம்… போச்சு எல்லாமே போச்சு… இனிமேல் மறுபடியும் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிக்க வேண்டும்… நினைத்தாலே மலைப்பாக இருந்தது. ஆனால், இரக்கப் பட்டதற்கு நான் கொடுத்த விலை அதிகமென்று ஆண்டவனுக்கே ஒருநாள் தோன்றும்.

– 15-04-2004, சமாசார் டாட் காம், தமிழோவியம் டாட் காம்.

jeyathisankar சூழலையும் சமூகத்தையும் துருவி ஆராய்ந்து எளிய நிகழ்வுகளை வாழ்வனுபவமாக சிருஷ்டிக்கும் இவரது ஆற்றலானது உலகளாவிய தமிழிலக்கியப் பெருந்திரையில் இவருக்கென்றொரு நிரந்தர இடத்தைப் பொறித்து வருகிறது. தனது வாழ்விடத்தின் நிகழ்வுகள், நிலப்பரப்பு, பண்பாடு, சமூகம் ஆகியவற்றை சிறுகதைகளாகவும் நெடும் புனைவுகளாகவும் எழுதி அவற்றை உலக அனுபவங்களாக்குவதே இவரது எழுத்தின் வெற்றி. சிங்கப்பூரைக் களமாகக் கொண்ட எளிய எதார்த்த நடைக்காக நன்கு அறியப் பெறும் இவரது சிறுகதைகள் பல்வேறு தொகுப்புகளிலும் இடம் பெற்றுள்ளன.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *