தர்மன்
கதையாசிரியர்: பே.செல்வ கணேஷ்
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு:
கிரைம்
கதைப்பதிவு: May 13, 2026
பார்வையிட்டோர்: 133

அந்த ஆளுங்கட்சியின் அமைச்சரின் முன் அமர்ந்திருந்தான் தர்மன்.
“இந்தப் பாருய்யா!உன்னைப் பத்தி நான் எல்லாம் கேள்விப்பட்டேன்,குணப்படுத்த முடியாத வியாதியோட இருக்குற வயசான அம்மா,அன்றாட வேலைகளைக்கூட அடுத்தவங்க உதவியின் மூலமா செய்யுற மனநலம் குன்றிய பத்து வயது மகன்.இப்படி இவ்ளோ கஷ்டங்கள் இருந்தும் கஷ்ட்டப்படுறவங்களுக்கு குறைந்த ஃபீஸ் வாங்கிக்கிட்டும்,ஒரு சிலருக்கு காசே வாங்காமலும் அவங்களுக்கு வாதாடி அதில் வெற்றி பெருகிற ஒரு புத்திசாலியான வக்கீல்!ம்ஹூம்!எனக்கு உன்னை நினைச்சா சிரிப்பாத்தான் இருக்கு,ஒன்னும் தெரியாத டுபாக்கூர் வக்கீலுங்களின் கையிலே பல லட்சம் கையில் புரளுது,நீ என்னடான்னா?ஃபீரியா எல்லாத்துக்கும் கேஸ் நடத்திக்கிட்டு கிடக்கே!”
“சார்!நீங்க நேரா விஷயத்துக்கு வந்தா நல்லாருக்கும்!”
என்று பொறுமையிழந்து இவன் சொல்லப்போக,அந்த அமைச்சர் தனது தொண்டையை கணைத்தபடி விஷயத்திற்கு வந்தார்.
“அது வேறு ஒன்னும் இல்லை!அந்த வினோத் கேஸிலிருந்து நீ வெளியேறிடனும்”
என்றதும்,தனது புருவத்தை தூக்கியபடி
“நான் இந்த கேஸிலிருந்து வெளியேறுவதுனாலே உங்களுக்கு என்ன லாபம்?”
“லாபமும் கிடையாது!ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது!அந்த வினோத்தை லாக்கப்புக்குள்ளேயே சாகடிச்ச அந்த இன்ஸ்பெக்டர் என் மருமகன் தான்!அந்த வினோத் பயலுக்கும்,என் மருமகனுக்கும் ஏற்கெனவே ஒரு மோதல்”
என்று அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே,
அவரை இடைமறித்து,
“அந்த மோதலுக்கப்புறம் இவனை எப்படியாவது பழித்தீர்த்துடனும்னு கங்கணம் கட்டி அலைஞ்சுக்கிட்டிருந்த உங்க மருமகனுக்கு ஒரு நகை திருட்டுக் கேஸ் வர,அதில் எந்தக் குற்றமும் செய்யாத வினோத்தைப் பிடிச்சு ஒரு நாள் பூரா லாக்கப்புக்குள்ளேயே சித்திரவதை செஞ்சு சாவடிச்சிருக்காரு,அப்படித்தானே?”
“சரி விடுய்யா!நடந்து முடிஞ்சதைப் பத்தி பேசி என்ன பிரயோஜனம்?இனி நடக்கப்போறதை பத்தி பேசுவோம்!”
என்றதும்,நிமிர்ந்து உட்கார்ந்தான் தர்மன்.
“இதுக்கு முன்னாடி உன்னை பல பேர் இப்படி உக்கார வெச்சு டீல் பேசியிருப்பாங்க!அதுக்கெல்லாம் நீ மசிஞ்சதில்லைன்னும் எனக்கு தெரியும்!ஆனா அவங்க உனக்கு எவ்ளோ லட்சத்துக்கு டீல் பேசுனாங்கன்னு தெரியாது,பட் என் சைடில் இருந்து உனக்கு அஞ்சுக் கோடி தரேன்”
என்று சொன்னதும் ஆச்சரியத்தில் வாய் பிளந்தபடி இவரையே பார்த்துக்கொண்டிருந்தான் தர்மன்.
“நீ இந்த கேஸை விட்டுப் போனா மட்டும் போதும்!அதோடு அந்த வினோத்தை கொலை செய்ற வீடியோவும் உன்கிட்ட ஆதாரமாக இருக்காமே?அதையும் கொடுத்துடனும்!”
என்று சொல்லிவிட்டு தனது பணியாள் ஒருவனைப் பார்க்க,அவன் அருகிலிருந்த அறைக்குச் சென்று ஒரு பேக்கை எடுத்துக்கொண்டு அவன் முன்னிருந்த டேபிளின் மேல் வைத்தான்.
பேக்கின் ஜிப்பை திறந்து பார்த்தவனின் கண்ணில் பல காந்திகள் சிரிப்பது தெரிந்தது.
“தப்பு செய்றோம்னுதான் தோனும்!அப்படி தோனுச்சுனா உன் குடும்பத்தை நினைச்சுக்கோ!தப்பு செய்வதில் தப்பே இல்லன்னு தோனும்”
என்றதும் எந்தவித யோசனையுமில்லாமல்,வாய் முழுவதும் பல்லைக் காட்டியபடி
“ரொம்ப நன்றி சார்!”
என்று சொன்னவனை நோக்கி,சிரித்துக்கொண்டே
“பரவால்லயே!சீக்கிரத்துல மசிஞ்சுட்ட,பணத்தை கண்டா பிணமும் சிரிக்கும்னு சும்மாவா சொன்னாங்க,உன் நன்றிக் கடனை செயலில் காட்டு அதுப்போதும்!”
என்று மகிழ்ச்சியுடன் கூறிய அமைச்சரை நோக்கியவன்
“ஐயோ!நான் அதுக்கு நன்றி சொல்லலை!இவ்ளோ உண்மைகளையும் சொல்லி,அதுக்கு லஞ்சமும் கொடுத்து என் பாதி வேலையை என் பட்டன் கேமரா மூலமாவே முடிச்சிட்டீங்க பாருங்க!அதுக்கு நன்றி சொன்னேன்!”
என்று சொல்லி தனது சட்டையில் மாட்டியிருந்த பட்டன் கேமராவை கழட்டினான்.
அதிர்ச்சியிலும்,படபடப்பிலும் வியர்த்து வழிந்திருந்த அவரது முகத்தை நோக்கி,
“உங்க மருமகனை காப்பாத்தப்போய்,இப்படி நீங்க மாட்டிக்கிட்டீங்களே!”
என்று சொல்லி நக்கலுடன் சிரித்துக்கொண்டிருந்தான் தனது பெயரிலேயே நீதியைச் சுமந்திருந்த தர்மன்.
தொடர்புள்ள சிறுகதைகள்
Zomoto வில் வேலை செய்யும் பேய்
தேவதர்ஷினி செல்வராஜ்
May 13, 2026
தன் வினை தன்னைச் சுடும்
கே.என்.சுவாமிநாதன்
May 10, 2026
அலெக்ஸா, மணி என்ன?
கே.என்.சுவாமிநாதன்
May 7, 2026