அன்புமிக்க அரசன்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 10, 2026
பார்வையிட்டோர்: 74 
வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்

(பழைய கதை புதிய பாடல்)

தனது நாட்டு மக்களை
தண்மை யோடு ஆள்கிற
மனது முழுதும் அன்புள்ள
மன்னன் ஒருவன் இருந்தனன்!

அரசன் தனது அரண்மனை
அழகு வாசல் முன்புறம்
அடிக்குமொரு மணியினை
அங்கு கட்டி வைத்தனன்.

உதவி வேண்டு வோர்களோ
உரிமை இழந்த பேர்களோ
தொங்கும் மணி கயிறினை
துணிந்து ஆட்டி ஒலிக்கலாம்!

ஆலயமாம் அரண்மனை
ஆராய்ச்சி மணி போன்றது
அடிக்கவில்லை நீண்டநாள்
அரசன் அன்பன் என்பதால்..!

உதிக்கும் காலை வேளையில்
உயரக் கட்டிய அம்மணி
ஒலித்து ஊரைக் கூட்டிட
ஓடி வந்தான் மன்னனும்!

அந்த மணிக் கயிற்றினை
அடித்துக் கொண்டு இருந்தது
நொந்து வாடி நின்றவோர்
நோய்மி குந்த குதிரையாம்!

வேந்தன் விவரம் கேட்டதும்
விளக்கினார்கள் வீரர்கள்
அந்தக் குதிரை வளர்த்தவன்
அண்டை நாட்டான் என்பதும்!

நீண்ட நாட்கள் போரிலே
நிலைத்த வெற்றி தந்துபின்
மாண்டு போகும் வயதினால்
மதிப்பிழந்த செய்தியை!

இதனைக் கேட்ட மன்னனும்
இரக்கம் கொண்டான் குதிரைமேல்
அதனை வைத்து இருந்த
அண்டை நாட்டுக் காரனை
தனது படையை அனுப்பியே
தன்னைக் காணச் செய்தனன்!

“வாழ்ந்த இந்த நாள்வரை
வாழ்வில் வெற்றி தந்துவுன்
தோள்கள் நிமிர்த்து வைத்தது
தோழன் இந்தக் குதிரையே

சேவை செய்த குதிரையின்
செம்மையான தன்மையால்
வாகை சூடி வையத்தில்
வலம்வந்தாய் இதுவரை

உதவி செய்த ஒருவரை
ஒதுக்கி வாட விடுவது
பதவிக்கழகு அல்லவே
பண்பும் அல்ல என்பதால்

சாகும் வரையில் குதிரைக்கு
சர்வ உதவி செய்துநீ
ஆக வேண்டும் என்பதென்
ஆணை என்று அனுப்பினன்!

வளர்கவி இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *