கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: தேவி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 25, 2026
பார்வையிட்டோர்: 101 

அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9

அத்தியாயம் – 4

சிணுங்கல் எப்போது வரும் எப்போது வரும் என்று ஆவலோடு எதிர் பார்த்து கைப்பேசியைப் பார்த்துக் கொண்டு காத்திருந்தாள் மயூரி.

கைப்பேசிச் சிணுங்கலுக்கு பதிலாக, வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது. புருவம் உயர்த்தினாள் மயூரி.

‘‘போன் செய்யறேன் என்று சொன்ன சங்கு நேரில் சந்திக்க வந்து விட்டாரோ?’ பரவசமாய் இருந்தது அவளுக்கு.

ஆளுயர நிலைக் கண்ணாடியின் முன் போய் நின்றாள். அவசரமாய், அணு அணுவாய்த் தன்னை முழுவதுமாய்த் பார்த்துக் கொண்டாள்.

இரு கைகளையும் உரசி வெதுவெதுப்பை உண்டாக்கி, தூங்கி முழித்ததும் செய்வதைப் போல, நெற்றி, புருவம் எனத் தாடை வரை மசாஜ் செய்து சூடேற்றிச் சுருசுருப்பானாள்.

அலங்கார மேசையிலிருந்த பவுடர் எடுத்து, ‘டச்சப்’ செய்து கொண்டாள்.

ஆங்காங்கே யுடிகோலன் தீற்றிக் கொண்டாள்.

தொலைப் பேசியில் பேசத் தன்னைத் தயார் செய்து வைத்திருந்த மயூரி, சங்கமேஸ்வரனோடு வீட்டில் தனிமையில் இருக்கப் போகிறோம் என்கிற சந்தோஷத்தில் மிதந்தாள். அதே நேரத்தில் நெர்வஸாகவும் உணர்ந்தாள்.

இன்பப் படபடப்பு சடுதியில், உருமாற்றம் பெற்றது.

‘முதல் முதலாய் வீட்டுக்கு வரும் சங்குவிடம் விளையாடிப் பார்க்க வேண்டும் என்ற வேட்கை மலர்ந்தது.

‘சங்கு… நேர்ல வந்து சர்ப்ரைஸ் தரவாப் பாக்கறீங்க…! உங்களை என்ன பாடு படுத்தறேன் பாருங்க இப்போ…’ – தனக்குள் சந்தோஷமாய்ப் பேசிக்கொண்டாள்.

தான் செய்யப் போவதை நினைத்தபோது அவளுக்கேச் சந்தோஷச் சிரிப்புப் பொத்துக் கொண்டு வந்தது.

‘வீட்ல நான் மட்டுந்தானிருப்பேன், ஃபோன்ல மணிக்கணக்கா பேசலாம்’னு சொன்னதை வெச்சித்.., தனியா இருக்கற என்கிட்டே ஜொள்ளு விட நேரே வந்துருக்கீங்களா…? உங்களை…!’

சந்தோஷக் கோபத்தைப் புன் சிரிப்பாய் மாற்றிக் கொண்டு பெட்ரூம் கதவை ஒருக்களித்தாற் போல் மூடினாள்.

இந்த ஒரு வாரத்தில் சங்கமேஸ்வரனிடம் எவ்வளவெல்லாம் பேசியிருக்கிறாள் மயூரி. அவளுக்கே பிரமிப்பாக இருந்தது.

ஆறு மாதங்களாக விட்டதை ஆறே நாட்களில் பேசித் தீர்க்கவேண்டும் என்று வெறி பிடித்தாற் போலப் பேசியதாகத் தோன்றியது இப்போது நினைத்த போதும்.

‘சங்கமேஸ்வரன் திருமணமானவர். ஒரு குழந்தைக்குத் தகப்பன். அவர் மேல் காதல் கொள்வது சரிதானா?’

உள் மனம் கேள்வி கேட்கும் போதெல்லாம் ‘தான் செய்வது சரிதான்” என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டாள்.

“அதில் என்ன தப்பு” என தனக்குத் தானேச் சமாதானம் செய்து கொண்டாள்.

‘ஆன்ரோ மார்வெல்’ என்ற கவிஞர் எழுதிய To his coy mistress என்ற கவிதையின் கருத்தைத் தனக்குச் சாதகமாகப் பார்த்தாள்.

ஏன்? நம் தமிழ்க் கடவுள் முருகனுக்கு இரண்டு மனைவியர்தானே என்று தன் செயலை ஞாயப்படுத்திக் கொண்டாள்.

முதல் மரியாதைப் படத்தின் கதாநாயகி ராதாவுடன் தன்னை இணைத்துக் கொண்டாள்.

“திருமணமானவனைக் காதலிக்கவே கூடாது என்று ஏதாவது விதி இருக்கிறதா?” தனக்கத்தானேக் கேட்டுக் கொண்டாள்.

இன்று போல் தனினை எப்போதும் கிடைக்காது. எப்படியும் அவனிடம் தன் காதலை வெளிப்படுத்தியேத் தீர வேண்டும் என்று உறுதிப்படுத்திக் கொண்டாள் மயூரி.

தன்னையும் தன் காதலையும், தன் தற்போதைய சிறுபிள்ளைத்தனமான விளையாட்டான எண்ணங்களையும் செயல்களையும், நினைத்து அவளுக்குள் ஒரு இனம் தெரியாத கிளுகிளுப்பு ஏற்பட்டாலும் யதார்த்தமும் அவள் முன் வந்து விரிந்தது.

‘ஸ்டேடஸ் பார்க்கும் தன் அப்பாவுக்குத் தன் காதல் தெரிந்தால் என்ன ஆகும்?;

சங்கமேஸ்வரன் ஒரு சாதாரண நூலக உதவியாளர். காண்ட்ராக்ட் லேபர் நிலையில் இருப்பவன். அவனை வேலையிலிருந்து தூக்கி, அவனை மூளியாக்குவாரே அப்பா..?’ – நினைத்த போதே ஒரு விதமான சோகம் மனதில் நிரம்பியது.

சிக்கல் வரும்போது பார்த்துக் கொள்ளலாம். சமாளித்துக் கொள்ளலாம்..’ – என்ற அசட்டு தைரியமும் அவளுக்கு வராமலில்லை.

‘அது சரீ… ஒருத்தரை விரும்பினாலோ, அவர் மேலே மையல் கொண்டாலோ, அது கல்யாணத்துல முடியணும்னு ஏதாவது சட்டம் இருக்கா என்ன?; – கேள்வி எழுந்தது.

‘கல்யாணத்தின் முதல் படி காதல்’னு சொல்றது எப்படி உண்மையாகும்?; – ஐயம் வந்தது

கல்யாணம்’ங்கற ஏற்பாட்டை முன்னிறுத்தி, இந்தச் சமூகம் காதல்ங்கிற புனிதத்தைக் கொச்சைப் படுத்துதோ?’ – சமூகக் கோபம் கொப்பளித்தது

இப்படி ஏதேதோத் தோன்றியது மயூரிக்கு.

ஏகாந்தமாக இருந்த ஹால் ‘ஷோபா’வில், கூச்சமற்றுக் கிடந்தன மயூரியின் உள்ளாடைகள்.

‘சங்கு நம்ம ஆள் தானே… இருக்கட்டுமே…’ என்ற குறும்புத்தனமான எண்ணம் உருவானது அவளுக்கு. லஜ்ஜையும் வராமல் இல்லை.

அனிச்சையாய் கையிலெடுத்து அனைத்தையும் பந்தாய்ச் சுருட்டினாள். படுக்கையறைக்குள் வீசினாள்.

படுக்கையில் விரிந்த நிலையில் கவிழ்ந்துக் கிடந்தது, ‘தி இம்மாரல் லவ்’ என்கிற புத்தகம்.

அவள் வீசிய துணிப்பந்து அதன் மேல் விழுந்தது.

அர்த்த புஷ்டியுடன் சிரித்துக் கொண்டாள் மயூரி.

‘சங்கு என்று, ஆசையாய் விளிக்கும் அந்தச் சங்கமேஸ்வரனை, இன்னும் ஒரு சில கணங்களில் நேருக்கு நேர், தன்னந்தனியாக முகத்துக்கு முகம் சந்திக்கப் போகிறோம் என்கிற நினைவு தந்த நாணத்தால், உடல் பூராவும் பசலை படர்ந்தது.

முகம் குப்’பெனச் சிவந்து, அவள் அழகுக்கு மேலும் அழகு சேர்த்தது.

‘எப்படி இந்தச் சங்குவின் வலையில் விழுந்தோம்? ;

பழகத் துவங்கிய ஒரே வாரத்தில், மீண்டு எழவே முடியாத வகையில் அவனிடம் சிக்கிக்கொண்டது எப்படி?’

அனைத்தையும் அணு அணுவாக அசை போட்டது அவள் மனம்.

அத்தியாயம் – 5

அன்று ‘டிபார்ட்மெண்ட்’டில், மயூரி மட்டும் ஏகாந்தமாக உட்கார்ந்திருந்தாள். அவள் முன்னே விரிந்திருந்தது ஒரு கனமானப் பார்வை நூல்.

குறிப்பேட்டில் கவனமாக ஏதோ குறிப்புகளை எழுதிக் கொண்டிருப்பதும், பார்வைப் புத்தகங்களைப் புரட்டுவதும் சிந்திப்பதுமாக பிஸியாக இருந்தாள் மயூரி.

கொண்டு வந்த மதிய உணவை எடுத்துச் சாப்பிடக் கூட மறந்து பாடப் புத்தகத்தோடு ஒன்றியிருந்தாள் அவள்.

தற்காலிகமாகச் சற்றே ஓய்வெடுக்க கவனத்தை மாற்றுவது அவள் வழக்கம். அப்படி அவள் கவனம் மாறி பேனாவை மேஜைமேல் கிடத்தினாள்.

கட்டை விரலால், ஒவ்வொரு விரலின் மேல் பாகத்தையும் அழுத்தி ‘டொட்…! டொட்…!’- என நெட்டி முறித்தாள்.

சற்றே நாற்காலியில் முதுகைச் சாய்த்துக் கொண்டாள்.

தலையைப் பின்புறம் சரித்தாள். சுற்றும் சீலிங் ஃபேனை’ப் இலக்கின்றிப் பார்த்தன கண்கள். விரல்களைப் பாவும் ஊடையுமாய்க் கோர்த்து இறுக்கினாள். இணைந்த கைகளை முன்னால் நீட்டி பின்னிய உள்ளங்கைகளை வெளிப்புறம் திருப்பி, முகத்தில் அலுப்பு ரேகைகள் தெரிய கைகளையும் தலைக்கு மேல் தூக்கி முதுகுக் தண்டுவடத்துக்கு இதமளித்தாள். ‘டக், டக்..’ கென , இப்போதும் ஓரிரு நெட்டிகள் முறித்தன.

கல்லூரியின் ஆங்கிலத் துறை அறையில், இப்படிப் பட்டக் கோலத்தில், மயூரி ஓய்வாய் ஒய்யாரமாய் அமர்ந்திருந்த நேரத்தில், சட்டென உள்ளே வந்து, மயூரியின் எதிரில் நின்றான் சங்கமேஸ்வரன்.

திடுக்கிட்டுப் பார்த்த மயூரி, ‘சீனியர் பேராசிரியர்கள் யாரையாவது தேடி வந்திருப்பாரோ?’ – என்று ஊகிப்பு அவள் கண்களில் வெளிப்பட்டது.

“எல்லாரும் ‘லஞ்ச்’ க்குப் போயிருக்காங்க சார். நான் மட்டும்தான் இருக்கேன்.” – தானாக முந்திக் கொண்டு சங்குவிடம் சொன்னாள் மயூரி.

“………………………………….” – சங்கமேஸ்வரன் அமைதியாக நின்றார்.

மயூரியேத் தொடர்ந்தாள்.

“சார், நீங்க கதை கவிதையெல்லாம் எழுதுவீங்களாமே? ஸ்டூடண்ட்ஸ் உங்களைப் பத்திச் சொல்லுவாங்க.!” – ஒரு எழுத்தாளனை நேரில் சந்தித்துப் பேசும் பெருமையுடனும், பெருந்தன்மையுடனும் இருந்தது அவள் சொன்ன விதம்.

“.அப்படியா..? ரொம்ப சந்தோஷம். ” – என்றார் சங்கு இயல்பாக

“ம்…! நானும் நூலகத்துல வந்து உங்களைப் பார்க்கணும், உங்க கூட சில பல விஷயங்களைப் பத்திப் பேசணும்னு நினைக்கறதுதான். ஆனாப் பாருங்க வேலை பிஸில…!” – என்று தொடர்ந்த மயூரியை அதற்கு மேல் பேச விடவில்லை சங்கமேஸ்வரன்.

“நான் வேற யாரையும் பார்க்க இங்கே வரல்லே. சாட்சாத் உன்னைப் பாக்கத்தான் பர்ப்பஸா வந்தேன்.” – என்று சங்கமேஸ்வரன் சொன்னபோது, மயூரியின் மனதில் ஏற்பட்ட ரசாயன மாற்றங்களை அவள் முகம் பிரதிபலித்தது.

சங்குவே தொடர்ந்து பேசினார்.

“மயூரி இந்தா இதை வாங்கிக்கோ என்று ஒரு புத்தகத்தை அவள் முன் நீட்டினார். இந்தச் சிற்றிதழ்லதான் என்னோட கதை பிரசுரமாயிருக்கு. படி . உன்னைப் பத்தியும், ஸ்டண்ட்ஸ் என்கிட்டே வந்து நிறையச் சொல்லியிருக்காங்க. நீ ஒரு ஒரேஷியஸ் ரீடராமே, புத்தகப் புழுவாமே.. ஸ்டூடன்ஸ் உன்னைப் பத்தி மாஞ்சு மாஞ்சுப் பேசறாங்க. என்னதான் சொக்குப் பொடிப் போட்டியோ அவாளுக்கு.” என்று சொல்லி மலரச் சிரித்தார்.

“கதையைப் படிச்சிப் பார்த்துட்டுச் சொல்லு ! ”

சொல்லிக்கொண்டே, ஒரு சிற்றிதழை மேசை மேல் வைத்தார் சங்கமேஸ்வரன்.

‘இதென்ன, இதுவரை இவரைப் பார்த்ததோ, பேசியதோ கிடையாது. இருந்தாலும் , மொதல் சந்திப்பிலேயே வெகு நாளாகப் பழகியதைப் போல, ரொம்ப நெருக்கமானவங்க கிட்டே, உரிமைப்பட்டவங்க கிட்டேப் பேசுவதைப் போல வா… போ’ ன்னு சகஜமாப் பேசுறாரே…?’

இப்படித் தோன்றியதேத் தவிர, அப்படிப் பேசியதற்காகச் சங்குவின்மீது மயூரிக்குச் சிறிதும் கோபமோ வருத்தமோ வரவில்லை. மாறாக, சங்கு அவளை அப்படி உரிமையோடு பேசியது பிடித்திருந்தது அவளுக்கு.

மேலும் ‘வாடீ போடீ’ என்று சங்கமேஸ்வரன் விளித்திருந்தால் கூட ஏற்றுக் கொள்ளும் மனநிலையில்தான் இருந்தாள் மயூரி.

விவரம் தெரிந்த நாள் முதல், பெற்றோர்கள் கூட அவளை ‘வா – போ’ என்று கூட ஒருமையில் அழைத்ததில்லை. ‘வாம்மா – போம்மா’தான்.

‘வாடீ-போடீ’யென விளிக்கும் பெண் நண்பர்கள் கூட அவளுக்கு இன்று வரை இல்லை.

இந்த நிமிடம் வரை, மயூரியின் நட்பு வட்டம், குடும்ப ஸ்டேடஸ்க்குத் தகுந்தாற்போல பெரிய இடங்கள்தான்.

அவர்கள் குடும்பத்தை சுற்றிலும் ஒட்டிக் கொண்டிருப்பவர்களில் பெரும்பாலும் நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் உயர் தட்டு வர்க்கத்தினர்தான்.

இதுவரைத் யாரும் தன்னை ஒருமையில் அழைக்காமல் பழக்கப்பட்டுவிட்ட மனது, சங்கமேஸ்வரன், இப்படி விளித்ததும், புதுமையை விரும்பி ஏற்றுக் கொண்டு விட்டதோ?

‘இந்த எழுத்தாளர்களே எக்ஸன்ட்ரிக்குகளா?’

எப்போதோ எழுத்தாளர் ஒருவரைப் பற்றிப் படித்தது மயூரியின் நினைவுக்கு வந்தது.

ஒரு பத்திரிகையாளர், எழுத்தாளரிடம் கேட்டாராம்.

‘உங்கள் கதைகளில் வரும் ஆண் கேரக்டர்கள் பெண் கேரக்டர்களின் கைகளைப் பற்றிக் கொண்டு பேசுவது போலவே எழுதுகிறீர்களே?” – என்று.

அந்த எழுத்தாளர் பதில் சொல்லத் துவங்கும் முன் அவர் கைகள், அந்தப் பெண் பேட்டியாளரின் கைகளைப் பிடித்துக் கொண்டிருந்ததாம்.

“அடுத்தக் கேள்விக் கேளுங்க!” – என்றாராம் பேட்டியை ஷூட் எடுத்த கேமரா-மேன்.

அதை நினைத்தபோது, அவளையும் அறியாமல் சிரிப்பு வந்து விட்டது மயூரிக்கு.

மேஜையின் மேல் வைத்தப் புத்தகத்தைக் கையில் வைத்துக் கொண்டு, எப்போதோ படித்ததைச் மனதில் நினைத்துப் புன்னகை சிந்திய மயூரியை, நிகழ்காலத்திற்குக் கொண்டு வந்தான் சங்கமேஸ்வரன்.

“மயூ!’ என்ன பலமான யோசனை? வா… போ… ன்னு உரிமையோட அழைக்கலாம்ல்ல?”

“………………………………….” – அமைதியாக நின்றாள் மயூரி.

“கூடாதுன்னு நீ சொன்னாலும் அந்த உரிமையை நான் எடுத்துப்பேன் மயூ.”

“………………………………….” – இப்போது குழப்பமாய் அவரைப் பார்த்தாள் மயூரி.

“கூடாது’ ன்னு சொல்றதைச் செஞ்சா ஒரு தனி சந்தோஷம் உண்டு தெரியுமோ? – என்றபோது , குழந்தையைப் போன்ற உள்ளம் கொண்ட சங்கமேஸ்வரன் மீது மேலும் பாசமும் நேசமும் பல்கிக் பெருகின.

“ஓ கே மயூ, நான் புறப்படறேன் . கதையைப் படிச்சிட்டுக் , கருத்தைச் சொல்லு.” சொல்லிவிட்டுப் திரும்பிப் போனார் சங்கு.

“ ம்…”- என்று ஒற்றை மெய்யெழுத்தில் பதில் சொல்லிய மயூரி ; கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கித் தீர்த்தம் சாதித்து விட்டு , மீண்டும் கோவிலுக்குச் திரும்பும் சமயத்தில், பக்தர்கள் ஆர்வமாய்த் திரும்பி, கள்ளழகரின் பின்னழகைக் கண்டு தரிசிப்பார்களல்லவா, அது போல சங்கமேஸ்வரனின் பின்னழகை ரசித்தபடி நின்றாள் மயூரி.

டிபார்ட்மெண்ட் அறையின் வாசற்படி வரைச் சென்ற சங்கு, எதையோ மறந்ததை எடுக்க வந்தவன் போல் மீண்டும் உள்ளேத் திரும்பி வந்தான்.

‘என்னாச்சு, ஏன் திரும்பி வர்றீங்க சங்கு ?” – என்று கேட்டன, வியப்புச் சுருக்கங்கள் படிந்த மயூரியின் கண்கள்.

“மயூ…!”

“ம்…”

“நல்லா இருக்குன்னு, ஒரே வரீல விமரிசனம் செய்யறதுக்காக இதை உன்கிட்டே தரலை.”

“ம்…!”

குறை என்ன ? ; நிறை என்ன? ; ன்னு பொட்டுல அடிச்சாப்ல சொல்லணும் ;

வேற எப்படிச் சொல்லியிருக்கலாம் ? ; லாஜிக் சரியா இருக்கா ? ; ன்னு விவாதம் பண்ணணும் ;

ஆங்கில இலக்கியத்துல இருக்கற இது போல கான்சப்ட்டக்களை எடுத்த இதோட இணைச்சி விவாதிக்கணும்.

சரின்னு தோணித்துன்னா, எந்த வகையில் சரி; சரியில்லேன்னா எந்த வகையில் சரியில்லை ..; இப்படி விரிவா இருக்கணும் விமர்சனம். நான் உன்கிட்டே எதிர்பார்க்கறது ஒரு திறனாய்வு. சரியா..”

உன்னால முடியும். ‘ஸீ ய்யூ லேட்டர்..’” – சந்நதம் வந்தாற்போல் , குறி சொல்கிறார்போல், சொல்லிவிட்டு பளிச்’சென்று வேகமாக வெளியேறினார் சங்கமேஸ்வரன்.

புயல் மையம் கொண்டு ; மையம் கொண்ட கனமேத் தீவிரமாகி ; தன் முழு பலத்துடன் வீரியமாக வீசி அனைத்தையும் தகர்த்ததைப் போல உணர்ந்தாள் மயூரி;

Ode to the West Wind என்ற கவிதையில் ஜான் கீட்ஸ் Oh ! Wild West Wind என்று தொடங்கித் தொடரும் கவிதையை மனதில் அசை போட்டாள். அந்தக் கவிதையில் உள்ள முரண் தொடைகளை ரசனையோடு மாணவர்களுக்கு விளக்கமாய் சொல்ல வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டாள்.

புயலானது, கிராமம், நகரம், காடு, கழனி, தோப்பு, தோட்டம், வீடு, வாசல், சாலை…….. என, எங்கெங்கும் இண்டு இடுக்கு விடாமல் புகுந்து புறப்பட்டுத் தன் வலிமையைக் காட்டிக் குலைத்து, உலுக்கி, இயல்பை முடிந்த வரை சிதிலப்படுத்திய பின் , முற்றிலும் புதிய காட்சிகளைச் சாட்சிகளாய் விட்டுவிட்டு ஜான் கீட்ஸ் செய்த வர்ணணையை ஒத்து கரையைக் கடந்ததைப் போல ஒரு உன்னதமான உணர்வை ஏற்படுத்தியது சங்கமேஸ்வரனின் வருகையும் விடுகையும்.

‘மயூ..,’ என்று சங்கு விளித்தது மட்டுமே மீண்டும் மீண்டும் அவள் காதுகளில் எதிரொலித்துக் கொண்டே இருந்தது. இதுவரை அவள் பெயரை இப்படி யாரும் சுருக்கியதில்லை.

தன் பெயரின் மூன்றே எழுத்துக்களில் ஒன்றை நீக்கிய பின் அவள் பெயரே அவளுக்குத் தேனாய் இனித்தது.

அத்தியாயம் – 6

“ஸ்ரீ”

பத்திரிகையின் பெயரேப் புதுமையாக இருந்தது.

மேலட்டையைப் புரட்டினாள்.

முதல் பக்கத்தில், நவீன ஓவியத்தின் பின்னணியில் கட்டமிடப்பட்ட பொருளடக்கம் பொதிந்திருந்தது.

பார்த்தாலே படிக்கத் தூண்டும் ‘ஃபாண்ட்’ எழுத்து வகை.

கண்களுக்கு இதமான உட் கட்டமைப்பு ‘லே அவுட்’.

‘கருப்பக் கிரகம்’

பொருளடக்கத்தில் இந்தத் தலைப்பும் அதன் கீழ் ‘சங்கு’ எனப் பெயரும் பார்த்தாள்.

ஆவலோடு, பக்கம் எண் பார்த்துப் புரட்டினாள்.

தமிழில் சிறுகதைகளோ, நாவல்களோ அதிகம் படித்தவளில்லை அவள். விவேகானந்தர் கட்டுரைகள் சில பல படித்திருக்கிறாள்.

சிறு வயது முதலே விவேகானந்தர் மீது ஈர்ப்பு ஏற்பட்டதனால் இருக்கலாம்.

விவேகானந்தர் படித்திருக்கிறாள், அவ்வளவுதான். தீவிரமான ‘கிரேஸ்’ என்றெல்லாம் கிடையாது.

பள்ளிப் பருவத்தில், தமிழாசியர் பூங்குன்றன் அவ்வப்போதுக் காட்டிய விவேகானந்தரின் மேற்கோள்கள், மனதில் ஆழப் பதிந்து அதில் மயூரிக்கு ஈடுபாடு ஏற்பட்டிருக்கலாம்.

மாதா பிதா குரு தெய்வம் என்கிறோமே, அதில் ஆசிரியரின் பங்குதான் அதிகம். நூற்றுக்குத் தொண்ணுற்று ஒன்பது சதவிகிதம் மக்களுக்கு, கற்பித்த ஆசிரியர்கள்தான் ரோல் மாடலாக இருப்பார்கள். நல்ல ஆசிரியர் கிடைப்பது நாம் பூர்வ ஜென்மத்தில் செய்த புண்ணியம் என்பார்கள்.

அந்த வகையில் மயூரிக்குக் கிடைத்த ஆசிரியர் அவளின் வரப் பிரசாதம்.

விவேகானந்தர் பாறைக்குப் பள்ளிப் பருவத்தில் இன்பச் சுற்றுலா சென்றபோது, ஆர்வ மிகுதியால், விவேகானந்தர் எழுதிய புத்தகங்கள் சில வாங்கினாள் மயூரி.

விவேகானந்தரின் கம்பீரமானத் தோற்றம்; தோற்றத்தின் பின்னணியான காவி அங்கி; தீர்க்கமான ஒளிபடைத்த விழிகள்;

புருவங்களுக்குக் குடைப் பிடித்தாற்போலத் தலையில் சுற்றி பட்டுப் புடைத்துத் தெரியும் தலைப் பாகை;

புறத் தோற்றத்தின் கம்பீரத்திற்கு சற்றிலும் குறைவில்லாது, மேலும் பன்மடங்கு உயர்ந்து ஒளி வீசும் அவர் உள்ளழகு. கம்பீரமான ஆணித்தரமானக் கருத்துக்களை உள்ளடக்கியச் உலகம் போற்றும் சொற்பொழிவுகள். வீரியமான அவர் எழுத்துக்கள் என்று எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்துப் பிரமித்தாள்.

விவேகானந்தரைப் படிக்கும்போது தன்னை இழந்து படிக்கும் பழக்கம் அவளுக்கு இருந்தது.

விரும்பியப் புத்தகங்களை அடிக்கடிப் படிக்க வேண்டும் என்ற ஆவலோ;

பிடித்தப் பணியில் அமர வாய்ப்பில்லையே என்கிற தன்னிரக்கமோ;

பெற்றோர்கள் இன்று வரைப் பூரண சுதந்திரம் தராமல், சின்னக் குழந்தையைப் போல நடத்துகிறார்களே என்கிற மன வருத்தமோ, ஆற்றாமையோ;

இப்படி எதுவுமின்றித் தாமரை இலைத் தண்ணீராய், ஒட்டியும் ஒட்டாத வாழ்வு மயூரியுடையது.

நடப்பதெல்லாம் நன்றாகவே நடக்கிறது’ என்கிற கீதா சாரத்தின் போக்கில் ஓடிக்கொண்டிருந்த மயூரியின் வாழ்வில் சங்குவின் சந்திப்பு சலனத்தை ஏற்படுத்திவிட்டதோ?

‘கருப்பக் கிருஹம்’ என்ற சிறுகதைக்கு நவீன ஓவியர் தன் உள்ளத்தை ஓவியமாய்க் கொட்டியிருந்தார்.

கருப்பு-வெள்ளைப் படம்தான்.

ஓவியத்தில், கருப்பின் ஆதிக்கம் அதிகமாய் இருந்தது.

மற்றபடி, ஓவியத்தில் ஒளிந்திருக்கும் ‘மேசேஜ்’ புரிந்தும் புரியாமலும் குழப்பியது அவளை.

கருப்ப – கிருஹம்’ என்றாலே இருட்டுதானே? ;

இருட்டின் குறியீடு கறுப்பு ;

தெளிவாய்ப் பார்க்க முடியாத, கூர்ந்து பார்க்கக் கூடாத, அதே சமயம், வாழ்வின் அடிப்படைத் தேவையான, ஜனன ரகசியத்தின் கோட்பாட்டை ஓவியத்தில் மிளிரச் செய்திருந்தார் ஓவியர்.

நேர்-கோடுகளும், பல-வடிவக்-கோடுகளும், மிதவைக்குத் தேவையான திரவத் தன்மையைக் காட்டும் குழப்பமான வண்ணங்களும், வடிவங்களும், ஒளி நிழல்களும் ஓவியத்தின் உன்னதத்தைப் பறைசாற்றின.

முழுமையாகப் புரியவில்லையென்றாலும், புரியாமலும் இல்லை மயூரிக்கு. ஒரே மூச்சில் அவசரமாகப் படிக்கும் கதையல்ல அது.

மனித உணர்வுகளை குறியூடுகளின் மூலமாக உணர்த்தி உள்ளார்ந்த பொருட்செறிவு நிறைந்த கருப்ப – கிருஹம்’ படைப்பை நிதானமாக மனதில் ஊன்றிப் படித்தாள்.

‘ஜான்-ரஸ்கின்’ என்கிற ஆங்கில எழுத்தாளர் ஒரு நூலை எப்படிப் படிக்க வேண்டும் என்று சொல்லும் நுணுக்கத்தை அடிக்கடி நினைவு கூர்வாள் மயூரி. மாணவர்களுக்கும் அதை அடிக்கடி சொல்லி அவர்களின் படிக்கும் பழக்கத்தை மேம்படுத்துவாள்.

கதையோட்டத்தில் தன்னை இழந்து, வேக வேகமாய் படித்துக் கொண்டு போகும் போது, சற்றே நிறுத்தி ஜான் ரஸ்கின் சொன்னதை நினைவு கூர்வாள்.

வார்த்தைகளுக்கு நடு நடுவே இருக்கும் வெற்றிடங்களில் கொட்டிக் கிடக்கிற, மொழி வழிச் சொல்லாமல் சொல்லப்பட்டக் கருத்துக்களை உள்வாங்கும் வகையில் ‘சிலபிள் – சிலபிளாகப் படித்தாள்.

க்ரைம் சப்ஜெக்ட் பற்றிக் கூறும்போது ‘ஒரு வார்த்தையை வெட்டினால் வெட்டுவாயிலிருந்து ரத்தம் கசிய வேண்டும் என்பார் திறனாய்வாளர் அலெக்ஸி டால்ஸ்டாய்.’ – இந்தக் கருத்துருவை தன்னிடம் படிக்கும் மாணவர் சமுதாயத்திற்கு அடிக்கடிச் சொல்வாள் மயூரி. வார்த்தைகளின் முக்கியத்துவத்தையும், மேன்மையும் நன்கு அறிந்தவள் அவள். அப்படி ஒரு தெளிவு அவளுக்கு.

சங்குவின் கர்பக்ரஹம் கதையை நன்கு உள் வாங்கி அணு அணுவாக ரசித்து ருசித்துப் படித்தாள்.

வார்த்தைகளுக்கு இடையேப் பொதிந்துள்ள, சொல்லாமல் சொல்லப்பட்டுள்ள, விழுமியங்களைப் ஊகித்துப் புரிந்து கொண்டாள், எழுதியவரின் சிந்தனைக்குள் புகுந்தாள்.

எழுத்தாளரின் சிந்தனை வசப்பட்டதும், மேலும் சில-பல முறைகள் படித்து ஸ்டடி செய்தாள். எழுத்தாளரின் சிந்தனையின் எல்லைக் கடந்து, ‘இதயத்திற்குள்’ இறங்கி விட ஆசைப்பட்டாள்.

ரஸ்கின் சொன்ன முறையில், பற்பல சூழலில், பற்பல மனநிலையில் அந்த கர்பக் கிரகம் என்ற கதையைப் வாசித்தாள்.

வாசித்தாள் என்பதை விட, எழுதியவரின் எண்ணங்களையும், உணர்வுகளையும் உள் வாங்கும் வகையில் பாராயணம் செய்தாள் என்பதே சரியான விளக்கமாக இருக்க முடியும்.

கதையின் ஓட்டம், உருவம், உள்ளடக்கம் அனைத்தும் உயர் தளத்தில் இருந்ததால், உள்வாங்க சற்றேக் கடினமாகத்தான் இருந்தது.

மீண்டும் மீண்டும் வாசித்து வாசித்து, பொருண்மையை உள்வாங்கினாள். இப்போது ஓரளவு கதையின் ஓட்டம் பிடிபட்டது.

கணவன், மனைவி, குழந்தைகள் எனக் கலகலப்பாக இருந்த குடும்பத்தை மிக மிக அழகாகவும், ஆழமான சொல்லாடல்களை வைத்துப் புனைந்து, பூடகமாய் விவரித்திருந்த விதம் மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது.

என்னதான் ஆசீர்வதிக்கப்பட்டக் குடும்பமாக இருந்தாலும், செல்வச் செழிப்புள்ள குடும்பமாக இருந்தாலும், குடும்பத்தில் எங்கோ எவருக்கோ ஏதோ ஒரு ரூபத்தில் வறுமை வந்து வாட்டுவதைத் தவிர்க்க முடியாது..’ என்கிற யதார்த்தத்தைப் பூடகமாக வெளிப்படுத்தும் வகையில் குடும்பத் தலைவனாக இருந்து வழி நடத்தவேண்டிய கணவன் நிலை தடுமாறி, கள்ளக் காதலில் விழுந்ததில் பொதிந்துள்ள ஞாயக் கூறுகளையும் சிறப்பாகக் கையாண்டிருப்பதைக் கண்டு வியந்தாள் மயூரி ;

சமூகம் முற்றிலும் அங்கீகரிக்காத, கள்ளக் காதல் எனும் செயல்பாட்டில் மிக அசாதாரணமாகக் காணப்படும் நியாயக் கூறுகளை, சமூகம் ஏற்கும் விதமாய்ச் சொல்லப்பட்ட நுட்பமான சிறுகதைதான் ‘கருப்ப – கிருஹம்’.

வாழ்வில் முதன் முறையாக இப்படிப்பட்டக் கனமான, ஆழமான, சமூகக் கேடாக ஸ்தாபிதப்படுத்தப் பட்ட ஒரு இசத்தைத் தகர்த்து, தவிடு பொடியாக்கி, யதார்த்த நோக்கை ஸ்தாபிதம் செய்வதற்காகப், புனையப்பட்ட சிறுகதை அது ;

சிறுகதை ஏற்படுத்திய அதிர்வுகளில் இன்று புதிதாய்ப் பிறந்தவள் ஆனாள் மயூரி ;

கதைக் கோர்வையைக் கண் மூடி அசைப் போட்டாள் ;

எழுதிய ‘சங்கு’வின் நினைவும் கலந்து மெல்வது தவிர்க்க இயலாததானது ;

அந்தச் சிறுகதையின் முக்கியக் கதாபாத்திரமாக சங்கு’ தன்னையேக் காட்டியிருப்பதாகப் பட்டது மயூரிக்கு.

‘கதாநாயகி’ யாராக இருக்கும்?’

“யாருகிட்டயாவது கொடுத்தனுப்பி, உன் கைல ‘ஸ்ரீ’ யைச் சேர்த்திருக்கலாம். அப்படிச் செய்ய எனக்கு இஷ்டமில்லே மயூ ;

‘எப்போ நீ தனியா மாட்டுவேன்னு காத்திருந்தேன் மயூ ; இன்னிக்கு மாட்டினே; கப்’னு பிடிச்சிட்டேன் மயூ .” என்று வாக்கியத்துக்கு வாக்கியம் ‘மயூ.. மயூ’ என்றாரே சங்கு ! ;

‘வாட் அன் இண்டரஸ்டிங் கேரக்டர்?’ – மதி – மயங்கினாள் மயூரி.

உடனடியாகச் சென்று சங்குவை நேருக்கு நேர் பார்க்க வேண்டும். அவருடன் நிறைய நிறையப் பேசிக் கொண்டே இருக்க வேண்டும். என்றெல்லாம் ஆவல் எழுந்தது மயூரிக்கு.

‘உண்மையான எண்ணங்கள் உறுதியாகப் பூர்த்தியாகும்’ என்ற விவேகானந்தரின் சிந்தனை மயூரியின் கண் முன் வந்து போனது.

– தொடரும்…

ஜூனியர்-தேஜ் இயற்பெயர்: வரதராஜன் அ புனைப்பெயர்: ஜூனியர் தேஜ் ரத்த வகை: O Positive பிறந்த தேதி: 04.06.1962 குடும்பம்: மனைவி, மகன், மருமகள் பணி: உதவித் தலைமை ஆசிரியர் (பணி ஓய்வு ஓய்வு பெற்று இப்போது பணி நீட்டிப்பில். 31 மே 2023 ல் ஓய்வு) கல்வித் தகுதி: MA(English).,M.Sc (Counseling Psychology)., B.Ed., CLIS., முதல் ஜோக்: ஜூனியர் விகடன் 1980 களில், சரியான தேதி இல்லை முதல்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *