உன் கண்ணில் நீர் வழிந்தால்….
கதையாசிரியர்: காரை ஆடலரசன்
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
காதல்
கதைப்பதிவு: April 18, 2026
பார்வையிட்டோர்: 97
(2004ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12
அத்தியாயம் – 7

இன்றைக்கு குமார் இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்தான். பல நாட்கள் யோசித்து ஒரு முடிவிற்கும் வந்திருந்தான். அதன்படி….அருகில் படித்திருக்கும் சுமதி மேல் கையைப் போட்டான்.
சேகர் விருட்டென்று போதனத்தில் மனா வருத்தம். மேலும் இந்த தொடுதல்… இவளுக்கு விருப்பம் இல்லை.
வழக்கம்போல் அவன் கையை விலக்கினாள்.
இந்த மறுப்பு குமாருக்குள் ஒரு வேகத்தை ஏற்படுத்தியது.
“ஹரி ஒருத்தன் போதும் அப்படித்தானே…? ! ” வெடித்தான்.
“நான் அவனுக்குத் துணை வேணும்ன்னு துடிக்கிறது உனக்குப் புரியல…” காய்ந்தான்.
சுமதி இதற்கும் பதில் சொல்லவில்லை.
“நான் ஒரு முடிவிற்கு வந்திருக்கேன் சுமதி..”
“….”
“இன்னொரு திருமணம் செய்து..”
சுமதி திடுக்கிட்டுத் திரும்பினாள்.
“இதைத் தவிர எனக்கு வேற வழி தெரியல…”
“இது ஹரி தேவைக்காக தெரியல. உங்க தேவைக்காய் தெரியுது…”
“சுமதி!” துணுக்குற்றான்.
“ஆமாங்க அப்படித்தான் தோணுது. பல தடவை முயற்சி செய்து தோத்துட்டீங்க…? அதனால் வழி இல்லமா பாதை மாறுறீங்க…”
“இல்லை சுமதி நான் சொன்னதுதான் நிஜம்…!”
“குமார்! நானும் படிச்சவள், உலகம் தெரிந்தவள். ஆணைப் பத்தி எனக்கும் நல்லாத் தெரியும். பொண்டாட்டி தனக்கு ஒழுங்கா ஒத்துழைச்சாலே அடுத்த இடம் பார்க்கிற குணம் ஆண்களுக்கு. இதுல நீங்களும் விதிவிலக்கல்ல. அப்படித்தானே? ஆனா… பெண் அப்படி இல்லே. புருசனை விட அவளுக்கு புள்ளை மேல பாசம் அதிகம்.”
“எனக்கும் பாசம் அக்கறை இருக்கு சுமதி. அதனால்தான் இந்த யோசனை.”
“இது தவறான யோசனை. குடும்பத்துல குழப்பம் வரும். நிம்மதி இருக்காது. மாறி யோசிங்க…”
“நீயே சொல்லேன்…?”
“ஒரு அனாதை ஆசிரமத்து ஒரு ஆணோ, பெண்ணோ தத்தெடுக்கலாம். ஒருத்தருக்கொருத்தர் துணையாய் ஒண்ணா வளர்க்கலாம்…”
“மன்னிக்கணும். இது நாம அடிக்கடி பேசினது. சரி படாது. என் யோசனையை நீ பரிசீலனை செய்” திரும்பி படுத்தான்.
“ஏம்மா..! நீ பாட்டுக்குப் புள்ள மேல கரிசனப்பட்டு கொண்டவனைத் தள்ளிப் படுக்கச்சொன்னா… அவன் எத்தினி காலத்துக்குத் தள்ளி படுப்பான்..?”
“புள்ள மேல சரியா அக்கறை, கரிசனம்ன்னா தள்ளித்தான் படுக்கணும்.”
“சரிதான் போ. இக்கரை பச்சை இல்லே தெரிஞ்சதும் அக்கரை பார்க்கிறான்..!”
“அப்படின்னா…?”
“உனக்கொன்னு தெரியுமா..? மனசுல உள்ளதுதான் வாக்குல வரும்.”
“அப்படியா..?!…”
“பின்னே! இன்னைக்குப் பேசுறான்னா… ஒண்ணு அவன் முடிவு அதுவா இருக்கணும். இல்லே… அவன் ஏற்கனவே எக்குத் தப்பாய் இடறி விழுந்து… அதை அழைச்சு வர உன் ஒப்புதலுக்கு அடி போடலாம்…”
சுமதி இப்படி மாறி மாறி நினைக்க அரண்டு போனாள்.
“உண்மையாய் இருந்தால்..?” நினைக்க உடல் வெடவெடத்தது.
“எப்படி கண்டுபிடிக்க..?” யோசனை அடுத்தக் கட்டத்திற்குத் தாவியது.
பங்கஜம் மாமியை யோசனை கேட்கலாமா..? – நினைத்தாள்.
கேட்டால்… அவள் யோசனை சொல்வதற்கு முன்…
“அடிப் பாவிப் பொண்ணே..! ஆயிரம்தான் சோகங்கள் இருந்தாலும் தாம்பத்தியத்தைத் தள்ளிப் போடலாமா..? ஆண் சுற்றிச் சுற்றி வருவதற்கு அதுதானே ஆதாரம்…!”
“சிற்றின்பம் என்று சொல்கின்றோமே அது சிற்றின்பம் இல்லையடி. அது தான் குடும்பத்தில் ஆணையும் பெண்ணையும் பின்னிப் பிணைத்து கட்டுக்குள் வைக்கின்ற முதுகெலும்பு. அது சரி இல்லை என்றால்… ஆணாய் இருந்தாலும் பெண்ணாய் இருந்தாலும் பாதை மாறிவிடுவார்கள்.” என்று சொல்வதோடு விடாமல்….விசயத்தை அக்கம் பக்கமெல்லாம் பரப்பி விடுவாள்.
பின் சரியான ஆள்…?
மனக்கண்ணில் சேகர் சிரித்தான்.
அத்தியாயம் – 8
கண் மூடி படுத்திருந்த குமாருக்கு மனைவி சுமதி மேல் கோபமும் வெறுப்பும் வந்தது.
இவள் அதற்கும் ஒத்துவரமாட்டேன்கிறாள்.
அதற்குக் காரணம் பயம். இன்னொன்றும் குறையாய் போய்விடுமே என்கிற பயம்.
இதற்குக் காரணம்…? கணவனை பங்கு போட்டுக்கொள்ள தயக்கம்.
பெண்கள் ஏன் கணவனை பங்கு போட்டுக்கொள்ள பயப்படுகிறார்கள்…?
என் புருசன் எனக்கு மட்டும்தான்! என்று சொந்தம் கொண்டாடுகின்றார்கள்…?
ஒருத்திக்கு ஒருவன் என்றாகிவிட்டபிறகு… ஒருவனுக்கு ஒருத்திதான் நியாயம்…? – அப்படியா…?
கற்பு நிலை என்று சொல்ல வந்தால் அதை இரு கட்சிக்கும் பொதுவில் வைப்போம்! என்று பாரதி சொன்னானே..! அதுவா..? இல்லை… கணவன் தன்னை மறந்து புதுசு தொடர்ந்து விடுவான் பயமா…? எதற்காக மனைவி கணவனை இன்னொருத்திற்கு கொடுக்கத் தயங்குகிறாள்..?
சுமதிக்கு நியாயமான பயம். கட்டாயப்படுத்தி உறவு கொண்டால்… அந்த பய உணர்விலேயே கருவில் குறை வர வாய்ப்பு அதிகம். சரி வேண்டாம்! தள்ளி படு.
இன்னொருத்தியை மணம் முடித்து அவள் மூலம் ஹரிக்குத் துணை தேடுவதில் என்ன குறை. ஒரு சராசரி பெண்ணைப் போல் மறுக்கிறாள்..! எந்த குட்டையில் ஊறிய மட்டையோ… அனாதை பெண்ணோ, பையனோ தத்தெடுக்க மனம் வருகிறது. இன்னொரு பெண்ணை தன்னோடு ஒருத்தியாக்கி அவள் மூலம் ஹரிக்குத் துணை வேணாம்! என்ன கணக்கு…? – தூங்கிப்போனான்.
காலையில் எழுந்தும் சுமதியோடு பேசப்பிடிக்காமல் காரியங்கள் செய்தான். சுமதி மட்டும் ஒன்றும் தெரியாதவளா..? தன்மானம்! மேலும் அவன் மனதில் வேறொருத்தி இருக்கிறாள் நினைப்பு. பேசாமல் காலை காபி கொடுத்தாள். சிற்றுண்டிகள் செய்து கொடுத்தாள்.
விழித்ததிலிருந்து அவன் அலுவலகம் செல்லும்வரை மௌன நாடகம். அவன் வீட்டை விட்டு அகன்ற சில வினாடிகளில் நெருடியது.
இத்தனை வருட வாழ்க்கையில் இது போல் கருத்து வேறுபாடுகள் இருந்ததில்லை. கணவன் மனைவி இப்படி பேசாமல் இருந்ததில்லை. இதுதான் முதல் முறை என்கிறபோது அவளுக்குள் வலித்தது.
தன்னுடைய எண்ணத்திற்கு ஒத்துப்போகவில்லை என்று கோபம். எவள் ஒத்துப்போவாள், உடன்படுவாள்..? கோபம் காட்டினால், மசிவேன், பயப்படுவேன் என்கிற நினைப்பு.
அம்மாவும் அப்பாவும் சண்டை போட்டுக்கொண்டால் இப்படித்தான் அப்பா பேசாமலிருப்பார் அம்மாவும் வீராப்பாய் இரண்டு நாட்களிருப்பாள். அப்புறம் போனாப்போவுது என்று போய் பேசுவாள். அப்பாவிற்கு ஆசை இருந்தாலும் பிகு செய்வார். பார்க்க ரொம்ப ரசனை, ருசிகரமாக இருக்கும்.
இந்த ஆண்கள் சுத்த மோசம். தன் சொல்படி, விருப்பப்படி மனைவி கேட்கவில்லை, நடக்கவில்லை என்றால் அவர்களுக்கு கோபம், ரோசம்தான் முதலில் வரும்.
பெண்களுக்கு சட்டென்று கண்களில் பொசுக்கென்று நீர். கண்ணீர் ஒரு ஆயுதம். ஆண்களுக்குத்தான் கோபம் வரும். பெண்களுக்கு வராதா..? இன்னொருத்தி வாழ்க்கையில் இடையில் வருகிறாள்லென்றால் எவளுக்குக் கோபம் வராது..? மகன் என்பது மேல் பூச்சு. குமாருக்குத் தாம்பத்தியம் தான் குறிக்கோள்.
செக்ஸ்தான் குறிக்கோளென்றால் கு.க. செய்து கொள்வதற்கு ஏன் சம்மதிக்கவில்லை..? உண்மையிலேயே ஹரியின் நிலைமை, எதிர்காலம் உத்தேசித்து ஒரு நல்ல சகோதர, சகோதரி துணையை உருவாக்கித் தருவதுதான் திட்டமா…?
சேகரும் இரண்டு நாட்களாக காணோம்..? கோபம்!
வேலைக்கே வரவில்லையா..? விடுப்பா..? ஊரில் இல்லையா..? பள்ளிக்கு இதைத் தாண்டித்தான் செல்ல வேண்டும். பணிக்கு வந்திருந்தால்… ஹரியைப் பார்க்காமல் இருக்க முடியாது. உடல் நிலை சரி இல்லையோ..? பள்ளிக்குச் சென்று விசாரிக்கலாமா..?
வேண்டாம் வழியிலேயே மடக்கலாம். நினைத்தாள்.
மறுநாள்….குமார் வழக்கம்போல் அலுவலகம் சென்றுவிட… ஹரி உள்ளிருக்க… சேகர் வரும் நேரத்தை உத்தேசித்து வீட்டினுள் வெளிக்கும் வாசலுக்குமாய் நடையாய் நடந்தாள்.
சிவா பூசையில் கரடியாய்…
“ஹரி இருக்கானா. சுமதி..?” கேட்டு மாமி படியேறினாள்.
“இருக்கான்…”
“அவனைக் கடை வரைக்கும் அழைச்சிப் போய் வர்றேனே…”
“அவன் எதுக்கு…?”
“வெயில் கிறுகிறுன்னு ஏறுது. மயக்கம் வந்துடும். இவன் வந்தான்னா கையைப் புடிச்சுக்கிட்டு தெம்பா நடப்பேன்.”
இவள் குரலைக் கேட்டதுமே வெளியில் வந்த ஹரி…
“வர்றேன் பாட்டி!” சொல்லி தாய்க்கு அருகில் வந்தான்.
“வாடா ராசா!” பங்கஜம் மகிழ்ச்சியாய் அவன் கையைப் பிடித்துக் கொண்டு நடந்தாள்.
‘யாருக்கு யார் துணை!’ சுமதிக்கு அழுவதா சிரிப்பதா தெரியவில்லை.
கடை என்பது தெரு முனை. பிரதான சாலை. அரை கிலோ மீட்டருக்கும் குறைவான தூரம். வீட்டிலிருந்து பார்த்தாலே அந்த சாலை தெரியும். தெற்கு வடக்கான சாலை. இது கிழக்கு மேற்கான சாலை. அவர்கள் செல்வதை பார்த்துக் கொண்டே நின்றாள் சுமதி.
அவர்கள் பாதி தூரம் செல்லும்போதே… எதிரில் சேகர் தன் இரு சக்கர வாகனத்தில் வந்தான்.
ஹரியை எதிரில் கண்ட தும் வண்டியை நிறுத்தி வழக்கம் போல் விசாரித்துவிட்டும் வந்தான்.
ஆளிருக்கிறான். ஹரியை மறக்கவில்லை. கோபமில்லை. தெம்பு வந்தது சுமதிக்கு.
ஹரியை விசாரித்து விட்டு வந்தவன் இவளை பார்த்ததும் நின்றான்.
“என்ன சுமதி..?” கேட்டான்.
“கொஞ்சம் பேசனும்…”
“நான் பள்ளிக்குப் போகணுமே…”
“முக்கியமான விசயம்…”
“சரி. நான் பள்ளிக்கூடத்துக்குப் போய் ஒரு மணி நேர அனுமதியில் உடனே வர்றேன்…” கிளம்பினான்.
‘வருவானா…? நழுவலா…?!’ – நின்றாள்.
அத்தியாயம் – 9
நல்ல வேளையாக சேகர் உடனே வந்தான்.
“என்ன சேதி சுமதி…” கேட்டு படியேறினான்.
“உள்ளே வா சொல்றேன்…” சென்றார்கள்.
எதிரும் புதிருமாக அமர்ந்தார்கள்.
“சொல்லு…?”
“ஏன் ரெண்டு நாளா வரல…?”
“இதுதான் முக்கிய செய்தியா…?”
“இல்லே. வேற இருக்கு…”
“சொல்லு…?”
“நான் கேட்டதுக்குப் பதில் இல்லே…”
“பள்ளி வேலை விஷயமா வெளியில போயிருந்தேன். சேதி சொல்லு…?”
“ஒண்ணுமில்லே. ஹரி நிலைமை தெரிந்த பிறகு நாங்க ரெண்டு பேரும்….” என்று ஆரம்பித்து கடைசி வரை சொல்லி முடித்தாள்.
எல்லாவற்றையும் அமைதியாக கேட்ட சேகர்…
“இப்போ நான் உனக்கு எந்த வகையில் உதவனும்….?” – கேட்டான்.
“குமாருக்கு அலுவலகம், வெளியில பொண்ணுக தொடுப்பு இருக்கான்னு தெரியனும்…”
“அதாவது உளவு பார்க்கனும்…”
“ஆமாம்…”
‘நல்ல வாழ்க்கை அமையுமென்று விலகினால்…பிள்ளை கோணல், இப்போது புருசன் கோணல்…! ச்சே..!’ – அவனுக்கே மனசு வெறுத்தது.
“என்ன சேகர் பதிலே இல்லே…?”
“சரி பார்க்கிறேன்” – தலையாட்டினான்.
“எப்படி பார்ப்பீங்க…?”
“நான் தங்கி இருக்கும் இடத்துல குமார் அலுவலகத்துல வேலை செய்யிற ஆட்களும் இருக்காங்க. விசாரிச்சா தெரிஞ்சிடும்.”
“வெளியில எப்படி விசாரிப்பே….?”
“நானே போறேன்…”
“சரி எச்சரிக்கை. அவருக்குத் தெரியக்கூடாது. தெரிந்தால் வம்பு. ஜாக்கிரதை!”
“சரி” வெளியே வந்தான்.
கூடவே சுமதியும் வந்தாள்.
வாசலில் பங்கஜம், ஹரி ஆளுக்கொரு பக்கம் அமர்ந்திருந்தார்கள்.
சேகரை அனுப்பிவிட்டு….
“எப்போ வந்தீங்க மாமி…?”
“இப்போத்தான்டியம்மா…”
“வந்த நீங்க ஏன் வாசல்ல இருக்கனும். நேரா உள்ளே வரவேண்டியதுதானே..??…”
“உங்க பேச்சுக்கு இடையூறு வேணாம்ன்னுதான் இங்கேயே இருந்துட்டோம்..! வர்றேன். ஹரி வர்றேன்டா…” சொல்லி சென்றாள்.
பேச்சு காதில் விழுந்திருக்குமா…?! மகனுடன் உள்ளே சென்ற சுமதிக்கு யோசனை.
“எப்போ வந்தீங்க ஹரி….?”
“இப்போதான்ம்மா..”
“இப்போன்னா…?”
“சித்த முந்தி”
இதற்கு மேல் இவனிடம்…”நாங்க பேசினது காதில் விழுந்ததா…?” என்று கேட்பது அநாகரீகம், தவறு. அது மகனின் மனதில் விஷ வித்து ஊன்றுவதற்குச் சமம். வீணாக நல்ல பாலில் நஞ்சை தெளிக்கக் கூடாது! – நினைத்து அடுத்த வேலைகளைக் கவனித்தாள்.
தனித்து அமர்ந்த ஹரியின் மனதில்….
“பாட்டி சொன்னது உண்மையா…?” -பூதம் புகுந்தது.
செல்லும் வழியில் சேகர் இவனை விசாரித்துச் சென்றதுமே…
“சேகர் மாமா எதுக்கு உங்க வீட்டுக்கு அடிக்கடி வர்றார்..?” பங்கஜம் இவனிடம் விசயம் கறக்க பேச்சை ஆரம்பித்து விட்டாள்.
“என்னைப் பார்க்க…”
“அவர் உறவா..?”
“தெரியல…?”
“அம்மாக்கிட்ட கேட்டியா..?”
“கேட்கல…”
“வாத்தியார் உன்கிட்ட அதிகம் பேசுவாரா அம்மாகிட்ட அதிகம் பேசுவாரா..?”
“இரண்டு பேர்கிட்டேயும் பேசுவார்”
“அவங்க ரெண்டு பேரும் தனியே பேசி இருக்காங்களா…?”
“இதெல்லாம் என்கிட்டே ஏன் பாட்டி கேட்குறீங்க…?”
“அவர் உன்னைப் பார்க்க வர்றதா தெரியல ஹரி.”
“பின்னே..?”
“அம்மாவைப் பார்க்க வர்றார்…”
“ஏன்…?”
“தெரியல….”
“புரியல…”
“அது ஆம்பள பொம்பள சமாச்சாரம்!”
“பாட்டி!”
“இது நிசம். நான் வேணும்னா இதை இப்போ நிரூபிக்கிறேன்!”
“எப்படி பாட்டி..?”
“வாத்தியார் தினம் உன்னைப் பார்க்க வர்றதா இருந்தா அதான் இப்போ உன்னை பார்த்து விசாரிச்சுட்டாரே! உன் வீட்டுக்குப் போகாம நேரா பள்ளிக்கூடம் போகணும். போகமாட்டார். வீட்டுல உன் அம்மாவோட இருப்பார்.” சொன்னாள்.
‘சொன்னபடி சார் உள்ளே அம்மாவோடு…! ஏன்…?’ குழம்பினான்.
– தொடரும்…
![]() |
என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க... |
