உன் கண்ணில் நீர் வழிந்தால்….

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: April 12, 2026
பார்வையிட்டோர்: 299 
 
 

(2004ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6

அத்தியாயம் – 1

‘ஜெயக்குமார் வில்லா’ பல துறைகளில் பணி புரியும் பிம்மச்சாரிகளின் சொர்க்க பூமி. இதில் கலியாணமாகி வேலை நிமித்தம் குடும்பம் விட்டுவந்தவர்கள் அடக்கம். திருமணம் ஆகாமலே காலத்தைக் கடத்தும் கட்டைகளும் அடக்கம்.

40 அறைகளில் அறைகளில் அறைக்கு மூன்று பேர்கள் கணக்கு. ஆனால்…’ விருந்தாளிகள்’ என்று சொல்லி குப்பைக்கொட்டுபவர்களையும் சேர்த்தால் 150 பேர்கள். அறைகள் ஒவ்வொன்றும் 18 × 8 நீள அகலம். வாடகை 5000.

திங்கள் – வெள்ளி வேலை நாட்களில் மொத்த இடமுமே காலையில் களைகட்டிவிடும். எல்லா அறைக் கதவுகளும் திறந்து… முகம் கழுவார்கள், பல் துலக்குவார்கள், குளிப்பார்கள், குளியலறை, கழிவறைகளை யெல்லாம் வரிசை கட்டி நிற்பார்கள். இன்றும் அப்படித்தான் மொத்த இடமும் காலையிலேயே களை கட்டிவிட்டது.

அதிகாலையிலேயே முழிப்பு வந்து விட்ட சேகருக்கு மனசு காரண காரியமில்லாமல் அலைமோதிக் கொண்டிருந்தது.

ஒரு வழியாக 6.00 மணிக்குப் படுக்கையை விட்டு எழுந்தான்.

அறை நண்பர்கள் ஜெயபால். குணசேகரன் இருவரும் இன்னும் குறட்டை விட்டுத் தூங்கிக்கொண்டிருந்தார்கள். அலுவலகம் ஒன்பது மணிக்கென்றாலும் அவர்கள் விழிப்பு 7.30.

சேகர் பிரஷ்ஷில் பற்பசையைத் தடவி துலக்கிக்கொண்டு அறைக்கு எதிரே இருக்கும் மாடி வராண்டாவிற்கு வந்தான். கீழே இருக்கும் சாலை கிழக்கும் மேற்குமாக நீண்டிருந்தது.

வெள்ளிக்கிழமை காலை அருகிலிருக்கும் மாதாக்கோயில் பூசைக்காக வண்ண வண்ண உடைகளில் மக்கள் ஜோடி ஜோடிகளாக சென்றுகொண்டிருந்தார்கள்.

‘வேலை கிடைத்து விட்டது. சொந்தக்காலில் நிற்கும் தைரியம் வந்துவிட்டது. இனிமேலாவது வாழ்க்கையை அமைத்துக் கொண்டாலென்ன..’ – அன்றலர்ந்த மலர்களாக கணவன் மனைவியாகச் செல்லும் ஜோடிகளைப் பார்த்ததும் மனம் சுழித்தது.

அதே சிந்தனை..குளிக்கும் போதும், அறையை விட்டு கீழே இறங்கி சரவணா உணவகத்தில் சாப்பிடும் போதும் தொற்றியது, தொடர்ந்தது.

‘வாழ்க்கையைத்தான் என்றோ தாரை வார்த்துக் கொடுத்தாகி விட்டதே. இனிமேல் எதை அமைப்பது..? இந்த வேலை மட்டும் அன்றைக்கே கிடைத்திருந்தால்? இந்நேரம் திருமணம் முடித்து, குழந்தை, குட்டிகளாகி….’ அதற்கு மேல் நினைக்க முடியாமல் ஒரு சின்ன பெருமூச்சு விட்டு அதை அணைத்து, எழுந்து, கை கழுவி, கல்லாவில் நோட்டெடுத்து கணக்கு எழுதிவிட்டு வெளியே வந்தான்.

‘பீக் ஹவர்ஸ் ‘ சாலையில் மக்கள், வாகன நடமாட்டங்கள் அதிகமிருந்தது. இயந்திரத்தனமாக தன் இரு சக்கர வாகனம் ஹோண்டாவில் ஏறினான் சேகர்.

‘அப்போ… படிப்பு. வேலை இல்லை. பெண்ணை எப்படி வைச்சி காப்பாத்தப் போறேன்னு கேட்டீல்லே. இப்போ வேலை கிடைச்சிடுச்சு. உன் பெண்ணைத் தரமுடியுமா..?’ – வெங்கடசும்பரமணியத்தைப் பார்த்து சூடாகக் கேட்க வேண்டும்! – தோன்றியது.

‘கேட்டால்…? அவரென்ன ரோசப்பட்டு கொடுத்துவிடவா முடியும்..?’ – நினைக்க வேதனை நெஞ்சைப் பிசைந்தது..

‘அது முடிந்து போன கதை!’ -முற்றுப் புள்ளி வைத்துவிட்டு வலது பக்கம் கை காட்டி திரும்பினான்.

வரிசையாக வீடுகள். எதிர்பக்கம் வ.உ.சி. உயர்நிலைப் பள்ளியின் சுற்றுச்சுவர். நேர்க்கோடாய் சாலை குறுகலாக இருந்தது.

‘வாழ்க்கை யாருக்கும் நினைத்தது நினைத்தபடி அமைவதில்லை. அது விதி. நாமொன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும்! இல்லையென்றால்…!’ என்று மனம் சஞ்சரிக்கும்போதுதான் செக்கப் செவேல் நிறத்தில் பத்து வயது பையன் தன் வாகனத்திற்கருகில் வந்துவிட்டதைக் கண்டு திடுக்கிட்டான்.

இவன் சுதாரிப்பதற்குள் காரியம் கை மீறி விட்டது. அவன் இவன் வாகனத்தில் கொஞ்சமாய் மோதி விழுந்து விட்டான்.

உடன் அடித்த பிரேக்கில் சேகர் சறுக்கி வாகனம் வேறு, இவன் வேறாக சுற்றுச் சுவர் ஓரம் கிடந்தான்.

பையன்…

‘ஐயோ..! அம்மா..!’ அலற…

சேகர் விழுந்த உணர்வு கூட இல்லாமல் பதறி துடித்து எழுந்தான். அதே சமயம்…

“டீ… சுமதி! ஹரியை எவனோ மோட்டார் சைக்கிளை விட்டு மோதி கொன்னுட்டாண்டி!….” இரண்டு வீடுகள் தள்ளி வாசலில் அமர்ந்து வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த கிழவி கூக்குரலிட்டபடி ஓடி வந்தாள்.

அவள் வருவதற்குள் சேகர் பையனை வாரி அணைத்துத் தூக்கிவிட்டான்.

பையன் அடிபட்டு விழுந்த நேர் வீட்டிலிருந்து சுமதி பதற்றத்துடன் ஓடி வந்தாள். பையனுக்கு முட்டியில் சிராய்ப்பு ஏற்பட்டு ரத்தம் ஒழுகியதைக் கண்டவளுக்கு அதிர்ச்சி.

“ஐயோ.. மவனே..!” அடிவயிற்றிலிருந்து வேதனை வார்த்தைகள் வீச… பையனை இவனிடமிருந்து பதற்றத்துடன் வாங்கினாள்.

அதற்குள்….

“என்ன..? என்ன…?” ஒரு கூட்டம் கூடிவிட்டது.

சேகருக்குள் சட்டென்று மனதுக்குள் ஒரு பயம் கவ்வி உடல் வியர்த்தது.

“பையனுக்கு அடி ஒன்னும் பலம் இல்லே. மருத்துவமனைக்குத் தூக்கிப் போங்க…” கூடியவர்கள் விரட்டினார்கள்.

இதற்குள் யாரோ ஒருவர் சுமதி வீட்டு வாசலில் இருந்த அவளது ஸ்கூட்டி வாகனத்தை எடுத்து வந்து அவளருகில் நிறுத்தினார்கள்.

சேகருக்கு உதவக்கூட அவகாசம் கொடுக்காமல் சுமதி அதில் பையனை அமர்த்திக் கொண்டு பறந்தாள்.

“சார் ! பார்த்து வரக்கூடாதா..?”

“கண்ணை மூடிக்கிட்டு வந்தீங்களா..?”

செய்வதறியாது நின்ற சேகரை ஆளாளுக்குப் பேச, முறைக்க…. இப்போதுதான் இவனுக்கு சிராய்ப்பு பட்ட இடங்கள் ரத்தம் கசிய எரிந்தது.

“நீங்களும் மருத்துவமனைக்குப் போங்க. பையனுக்கும் என்ன ஆச்சுன்னு பாருங்க..” ஒருத்தர் சொல்ல…தன் இரு சக்கர வாகனத்தை நிமிர்த்திக் கொண்டு விரைந்தான்.

அவசர சிகிச்சைப் பிரிவில்…டாக்டர் ஊசி போட்டு… காயம் பட்ட இடத்தில் ‘டிஞ்சர்’ வைக்க…

“ஐயோ.. அம்மா! எரியுதே ! எரியுதே..!” ஹரி துடித்தான்.

பார்த்த சேகருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. வெளியே நிற்கவும் மனமில்லாமல், உள்ளே செல்லவும் பயந்து.. தவித்தான்.

ஹரியின் துடிப்பும், வெடிப்பும் அவனுக்கு மனசைப் பிசைந்தது.

ஒரு வழியாக பையனை ஆசுவாசப் படுத்தி வெளியே அழைத்துக் கொண்டு வந்த சுமதியிடம் நெருங்கி…

“சாரிங்க. நான்தான் கொஞ்சம் அஜாக்கிரதையாய்…” மென்று விழுங்க…

கோபத்தோடு ஏறிட்ட அவள் இவனைப் பார்த்ததும்… திடுக்கிட்டாள், துணுக்குற்றாள்.

“நீ… நீ… நீங்க…” அதற்கு மேல் வார்த்தைகள் வராமல் தடுமாறினாள்.

“ஆமாம் சுமதி. நான்தான் தெரியாம…” – கெஞ்சும் பாவனையில் இவன் கெஞ்ச… இவர்களுக்கு இடையில் ஒரு இரு சக்கரவாகனம் வந்து சரக்கென்று நின்றது.

“சுமதி! ஹரிக்கு விபத்துன்னு போன் பண்ணினாங்க…” என்றவாறே அவள் கணவன் குமார் அவளிமிருந்து பையனைத் தூக்கினான்.

“ஒண்ணுமில்லீங்க. நம்ம பையன்தான் இவர் மோட்டார் சைக்கிள்ல மோதி…” இழுத்தாள்.

அவன் இவனைப் பார்த்து முறைக்க…

“சாரி சார்..!” இவன் அவனைப் பாவமாகப் பார்த்து தடுமாறினான்.

“என்ன சார். சாரி. ஏதோ நல்ல காலம் பையனுக்கு இதோட போச்சு. இன்னும் பலமா அடிபட்டிருந்தால்..” எகிறிய கணவனின் கையைப் பிடித்து அமர்த்திய சுமதி…

“விடுங்க. அவருக்கும் அடி.. நம்ம ஹரி மேல தப்பு அவரென்ன செய்வார்…” சொன்னாள்.

“நீ ஏன்ப்பா வெளியில வந்தே..?” வாஞ்சையாக சொல்லி மகனின் கண்களைத் துடைத்து விட்டு அழைத்துச் செல்ல… சுமதி அவர்களை பின் தொடர்ந்தாள்.

சேகர் அவர்கள் சென்று மறையும் வரை பார்த்துக் கொண்டே நின்றான்..!

அத்தியாயம் – 2

சேகர் பள்ளிக்கூடத்தில் நுழைந்தபோது வகுப்புகளில் பாடம் நடந்து கொண்டிருந்தது.

பணிக்கு ஒரு மணி நேரம் தாமதம்…!

‘பணியாளர்களின் வருகைப் பதிவேடு தலைமையாசிரியர் அறைக்குள் இருக்கும்! ‘ – பயத்துடன் அவர் அறைக்குள் நுழைந்தான்.

குனிந்து எழுதிக்கொண்டிருந்த அவர்…

“ஏன் சார் ! விடுப்பா..?” – கேட்டார்.

“இ… இல்ல சார்…”

“ஏன் லேட்டு..?”

“பக்கத்து தெரு பையன் ஒருத்தன் என் வாகனத்தில் மோதி கீழே விழுந்துட்டான்.”

கேட்ட அவர் துணுக்குற்று…

“அடடே.! யாரு..?” பரபரப்பாகக் கேட்டார்.

“ஹ…ஹரி!”

“அட அவனா..?! நீங்க பார்த்து வரக்கூடாது..!”

“ஏன் சார்..?” திடுக்கிட்டு விழித்தான்.

“ஓகோ..! நீங்க இங்கே புதுசு விசயம் தெரியாது. பாவம் சார். அந்தப் பையனுக்கு ரெண்டு கண்ணும் தெரியாது!” வருத்தத்துடன் சொன்னார்.

சேகர் அதிர்ச்சியாய் அவரைப் பார்த்தான்.

“ப்ச்! அது ரொம்ப வேதனை. குழந்தை பொறந்து ஒரே வருசம்தான் பார்வை இருந்துச்சி. அதுக்கப்புறம் கொஞ்சம் கொஞ்சமாய் மறைஞ்சி இப்போ ரொம்ப குறைவு. சுத்தமா போச்சு!”

“எ… எனக்குத் தெரியாது சார்…!” மென்று விழுங்கினான்.

“அவனுக்கு ரொம்ப அடியா..?”

“இல்லே சார். சின்னதா சிராய்ப்பு…”

“அவனே வேதனை. அதுல இது வேறயா..? சரி.. சரி.. கையெழுத்துப் போட்டுட்டு சீக்கிரம் வகுப்புக்குப் போங்க…” சொன்னார்.

‘பார்வை பறிபோன பையனா..?!!…’ – சேகர் அதிர்ச்சியின் பிடியில் சிக்கி நடைப்பிணமாக வகுப்பில் நுழைந்தான்.

பாடம் நடத்த முடியவில்லை. பேருக்கு ஒப்பேற்றிவிட்டு அடுத்த ஒருமணி நேரம் தனக்கு ஓய்வு என்பதால் பணியாளர்கள் ஓய்வு அறைக்குள் நுழைந்தான்.

மனம் அடித்துப் போட்டாற்போல் கனத்தது.

“என்ன சார். ஹரி மேல மோதிட்டீங்களாமே…! தலைமையாசிரியர் சொன்னார்.” என்று தமிழாசிரியர் ஜானகிராமன் வந்து விசாரித்தார்.

அடுத்து இரண்டு ஆசிரியர்கள் ஏதோ துக்க செய்தியைப் போல் தொடர்ந்து வந்து விசாரித்தார்கள்.

ஏற்கனவே வேதனையிலிருக்கும் சேகருக்கு அவர்கள் விசாரிக்க விசாரிக்க மனசு வெறுத்துப் போனது.

‘அடுத்த தெரு என்பதால் ஹரியைப் பற்றி இங்கு எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. இன்றைக்கு இங்கிருந்தால் நமக்கிருக்கும் மனநிலையில் எல்லோரும் துக்கம் விசாரிப்பது போல விசாரித்து நம்மைச் சாகடித்து விடுவார்கள். மிகவும் வேதனை, சங்கடமாக இருக்கும்!’ என்று நினைத்த சேகர் அரை நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு ஜெயக்குமார் வில்லாவிலிருக்கும் தன் அறைக்கு வந்தான்.

சாப்பிடப் பிடிக்கவில்லை.. பாரம்! வெற்றுத் தரையில் மல்லாந்து படுத்தான்.

சுமதி எத்தனையோ ஆண்டுகளுக்குப் பிறகு நமக்குள் அறிமுகம். அது இப்படியா இருக்க வேண்டும்..? போயும் போயும் உன் மகன்தானா என் மோட்டார் சைக்கிளில் வந்து விழவேண்டும்..! உனக்கா இப்படி ஒரு பிள்ளை வாய்க்க வேண்டும்..?! நீ யாருக்குத் துரோகம் செய்தாய்..? உனக்கா, எனக்கா..யாருக்குமில்லையே..! அப்புறம் ஏன் உன் வாழ்க்கையில் இப்படியொரு சோதனை, வேதனை..?’ – மனசு பிதற்ற சுமதியின் உருவம் இவன் கண்ணுக்குள் வந்து நின்றது.

‘சுமதி! நீ ரொம்ப உருமாறிப்போய்ட்டே. வாழைத்தண்டு போல பளபளன்னு இருந்த … வாடி வதங்கிய அல்லித்தண்டாய் இருக்கே…! வயிற்றில் பிறந்த குழந்தை இப்படியாகிவிட்ட வேதனை, கவலையா..?’ – நினைக்க நினைக்க மனம் துடியாய்த் துடித்தது.

அந்த தாக்கத்தின் வேகம் அது பின்னோக்கிச் சென்றது.

அத்தியாயம் – 3

அது வசந்த காலம். அண்ணா அரசினர் கலைக்கல்லூரி நிறை மாத கர்ப்பிணியாய் எல்லா பாடப் பிரிவுகளிலும் மாணவ மாணவியர்கள் நிறைந்திருந்தார்கள்.

சேகரும் – சுமதியும் பி.எஸ்.சி. கணிதம் இரண்டாமாண்டில் இருந்தார்கள்.

சேகர் அழகன். படிப்பில் சூட்டிகை. விளையாட்டுகளில் வல்லவன். தேசிய மாணவர் படைப் பிரிவில் கேப்டன், கம்பீரமானவன்…. இன்னும் பிற இத்யாதி தகுதிகள். மேலும்… ஆசிரியர்களிலிருந்து மாணவர்கள் வரை அவனுக்கு செல்வாக்கு.

அதனால் பெண்கள் இவனிடம் மயங்கி இருந்தார்கள். பார்க்க மாட்டானா, பேசமாட்டானா என்று ஏங்கி இருந்தார்கள். இன்னும் சில மாணவிகள் அவனை அடிக்கடி வம்புக்கிழுத்து வீழ்த்தப் பார்த்தார்கள். ஆனால் அவன் அவர்கள் எவரிடமும் மயங்கவில்லை.

சுமதியிடம் மயங்கினான். அவளின் ஆர்ப்பாட்டமில்லாத அழகு, அடக்கம், ஒடுக்கம், புத்திசாலித்தனம்… மயக்கியது. இவளும் மயங்கினாள். இருவரும் ஒரே வகுப்பு என்பதால் புத்தகங்கள் மாற்றி, குறிப்புகள் மாற்றி.. இப்படி மாற்றி மாற்றி காதலை வளர்த்துக் கொண்டார்கள்.

இந்தக் காதல் மலர்ந்து மணம் வீசிக்கொண்டிருக்கும்போதுதான் சுமதி ஒரு நாள் முகத்தில் சோகம் தாங்கி வந்தாள்.

இவனைப் பார்த்ததும் கலங்கினாள்.

“ஏன்… என்னாச்சு..?” சேகர் பதறினான்.

“எனக்கு திருமண ஏற்பாடு நடந்துக்கிட்டிருக்கு…”

“அப்படியா..?!”

“ஆமாம். தாய் மாமன் மாப்பிள்ளை.”

இடிந்தான். மனதில் நிறைய யோசனை, சிந்தனைகள்.

“ஓடிப்போயிடலாமா…?” கேட்டான்.

“வேணாம்..”

“அப்போ என்ன செய்யலாம்..?”

“நீ தைரியமா வந்து பொண்ணு கேளு”

“உங்கப்பா மறுப்பார்”

“அதை பத்தி அப்புறம் யோசிக்கலாம்..!”

“அப்பா, அம்மாவை அழைச்சி வரணுமா..?”

“கண்டிப்பா..”

“ம்ம்ம்….”

“உங்க அப்பா அம்மாகிட்ட நம்ம காதலைச் சொல்லிட்டியா..?”

“இல்ல..”

“இப்போ விபரம் சொல்லி அழைச்சா வருவார்களா..?”

“சந்தேகம்தான். எந்த அம்மா, அப்பா காதலுக்குப் பச்சைக் கொடி காட்டி இருக்காங்க..?”

சுமதி நெற்றிச் சுருக்கி தூரம் வெறித்தாள்.

“சுமதி ! நான் மட்டும் வரவா..?”

“தைரியமிருக்கா..?”

“இருக்கு. இருந்தாலும் கொஞ்சம் பயமும் இருக்கு. உன் அம்மா, அப்பாகிட்ட நம்ம விசயத்தை சொல்லி இருக்கிறீயா..?”

“இல்லே..”

சேகர் மவுனமாக இருந்தான். கொஞ்சம் யோசித்தான்.

“சரி. நான் நாளைக்கு காலையில உன் வீட்டுக்கு வர்றேன். நீ தைரியமா இரு”

சொன்னான்.

இளங்கன்று துடிப்பு.. ‘நிறைய’ எதிர்பார்த்து சொன்னபடி சென்றான்.

சுமதி மகிழ்ச்சிக் காட்டாமல் வாசல் வந்து…

“வா சேகர்!” வரவேற்றாள்.

கையோடு உள்ளே அழைத்துச் சென்றாள்.

அவள் அப்பா சிவபுண்ணியம் கூடத்தில் சோபாவில் அமர்ந்திருந்தார்.

“அப்பா! என்னோட படிக்கிறவன்…” அறிமுகப்படுத்தினாள்.

மனதில் பொறி தட்ட… இவனை ஏற இரங்கப் பார்த்த அவர் உட்காரச்சொன்னார்.

இதயம் டொம் டொம்மென்று அடித்தது. வெளிக்காட்டிக்கொள்ளாமல் அவர் எதிரில் அமர்ந்தான்.

சுமதி உள்ளே சென்று இவனுக்கு குடிக்க தண்ணீர் கொண்டு வந்து கொடுத்துவிட்டு அவருக்குப் பின் உள்ள அறைவாசலில் போய் இவன் கண்ணுக்குப் படுகிறாற்போல் நின்றாள்.

தண்ணீர் குடித்து நிமிர்ந்தவனிடம்….

“சுமதியைப் பார்க்க வந்தீங்களா தம்பி..?” இயல்பாய் விசாரிப்பது போல் கேட்டார் சிவபுண்ணியம்.

“ஆ…ஆமாம். இ…இல்லே…”

“ஆமானா இல்லேயா..?”

“வந்து… வந்து…”

பார்த்தார்.

“சார் ! நானும் சுமதியும்…”

“ஒன்னா படிக்கிறீங்க… சரிதானே…?”

“அது இல்லே சார். உயிருக்குயிராய்…”

“காதலிக்கிறீங்க… சரியா…?”

“ச.. சரி சார்.”

“சுமதி..!” அழைத்தார்.

வந்தாள்.

“தம்பி சொல்றது உண்மையாம்மா…?”

“….”

“பதில் சொல்லும்மா..?”

“உ… உண்மைப்பா…”

“சந்தோசம்!” சிவபுண்ணியம் இப்போது நிமிர்ந்து உட்கார்ந்தார்.

“தம்பி ! உங்க பேர் என்ன..?”

“சேகர்!”

“சேகர்! எல்லாருக்கும் இந்த வயசுல வர்ற காதல்தான் உங்களுக்கும் வந்திருக்கு. இது தப்பில்லே சரி. ஆனா.. இது பேர் காதலில்லே. ஆண் – பெண் கவர்ச்சி. ஈர்ப்பு.”

“இல்லே சார் காதலிக்கிறோம்..!”

“அப்படியா..? உங்க வழிக்கே வர்றேன். காதலிக்கிறதுக்கு முன்னாடி இது நிறைவேறுமா, நிறைவேறாதான்னு ரெண்டு பேரும் கொஞ்சம் யோசனைப் பண்ணிப் பார்த்தீங்களா..?” பார்த்தார்.

பதிலில்லை.

“யோசனைப் பண்ணி இருக்கனும். இப்போ நீங்க ரெண்டு பெரும் பெத்தவங்க தயவால படிச்சிக்கிட்டிருக்கீங்க. இன்னும் படிப்பையும் முடிக்கலை. இந்த நிலையில நீங்க கலியாணம் பண்ணிக்கிட்டா எப்படி குடும்பம் நடத்துவீங்க…?”

“வீட்டுல கொஞ்சம் நிலம் இருக்கு சார்.”

“விவசாய வேலை தெரியுமா..?”

“விடுப்பு நாட்கள்ல போய் செய்வேன் சார்.”

“சரி தெரியும்!”

“ஆமாம் சார்!”

“நீங்க வீட்டுக்கு ஒரே புள்ளையா..?”

“ஆமாம் சார்”

“சந்தோசம். உங்க காதல் அப்பா அம்மாவுக்குத் தெரியுமா..?”

“சொல்லல…”

“ஏன்..?”

“உங்க சம்மதம் தெரிஞ்ச பிறகு சொல்லலாம்ன்னு இருக்கேன்.”

“சரி. நான் சம்மதிக்கிறேன். உங்க அம்மா, அப்பா சம்மதிப்பார்களா..?”

“சம்மதிப்பாங்க சார்.. !”

“அவுங்க முடிவை நீ எப்படி சொல்றே..? ஒரு பேச்சுக்கு அவுங்க சம்மத்திக்கலேன்னா..?”

“படிச்ச படிப்பு இருக்கு சார்.”

“அதைத்தான் இன்னும் நீங்க ரெண்டு பேரும் முடிக்கவே இல்லையே…?”

“பன்னிரண்டாம் வகுப்பு தகுதி இருக்கு சார்.”

“அந்த தகுதிக்கு இப்போ உங்களுக்கு என்ன வேலை கிடைக்கும்..?”

“சார்… மூட்டை தூக்கியாவது….”

“ஓஓ… அப்படியாவது உழைச்சு சம்பாத்திச்சு சுமதியை காப்பாத்துவேன்னு சொல்றீங்க.??!!..”

“ஆமாம் சார்.”

“பாராட்டுறேன். சொல்ல முடியும் ஆனா.. செய்ய முடியாது.! ஏன்… ஒரு நாளைக்கு ரெண்டு நாளைக்கு உடம்பு வளையும். அதுக்கு மேல் வளையாது. உழைக்கும் போதுதான் அதன் கஷ்டம் தெரியும். அந்த கஷ்டம் வாழ வேண்டிய வாழ்க்கையை வீணாக்கிடும், வெறுக்கடிச்சுடும். சொகுசா வாழ வேண்டிய நாம இப்போ சோத்துக்கே லாட்டரி அடிக்கிற நிலைக்கு ஆளாக்கிட்டோமேன்னு வருத்தப்படுவீங்க.

நீங்க வருத்தப் போடுறது இருக்கட்டும். உங்களை பெத்து வளர்த்து ஆளாக்கிய எங்களையும் கொஞ்சம் நினைச்சுப் பார்க்கனும். எல்லா பெத்தவங்களுக்குமே புள்ளைங்க நல்லா வாழனும் என்கிறதுதான் கனவு. அதை சிதைச்சி நீங்க கஷ்டப்பட்டா… நாங்க எப்படி நிம்மதியா வாழ முடியும்…? வசதி இருந்தா கொடுத்து உதவலாம். எதுவும் இல்லேன்னா… என்ன செய்ய..?

சேகர்! நாமெல்லாம் படிச்சவங்க. நல்லது கேட்டது யோசனைப் பண்ணிப் பார்க்கணும். பருவ வயதில் கருப்பு, சிகப்பு எல்லா ஆண் பெண்களும் அழகுதான். ஒருத்தன் – ஒருத்தி நாலு தடவை பேசி சிரிச்சி, பழகினா… காதலாகிடும். காதல் இப்போ அப்படித்தான் ஆகிப் போச்சு. ரொம்ப சுலபமா போச்சு. ஆனால் வாழ்க்கை..? அது ரொம்ப கஷ்டம். இன்னைக்குக் கால் காசு சம்பாதிக்க கால் கடுக்க நிற்கனும். அதனால் காதலெல்லாம் கஷ்டத்தில்தான் உழலுதுன்னு சொல்ல வரலே. சொற்பமா சிலரை வாழ வச்சிருக்கு.

தம்பி! காதலை நான் பெரிய சக்தியாய் நினைக்கிறேன். தெய்வீகமாய் மதிக்கிறேன். அது ஒன்னாலதான்.. இந்த நாட்டுல, உலகத்துல வரதட்சணை, சீர் செனத்தி, சாதி, மதமெல்லாம் அடிச்சி நொறுக்க முடியும் என்கிறது என் அசைக்க முடியாத நம்பிக்கை. இப்போ உங்க ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தர் சம்பாதிச்சா போதும். உங்க வாழ்க்கை வண்டி சரியாய் ஓடும் என்கிற எண்ணத்தில் திருமணம் முடிக்கலாம். இல்லேயே…எப்படி முடிக்க..?”

சேகருக்கு விஷயம் விளங்கி விட்டது.

“சார் ! அப்போ…?” இழுத்தான்.

“நான் நிலைமையை உங்களுக்குச் சொல்லிட்டேன். இதுக்கு மேல் உங்க விருப்பம். நான் முடியாதுன்னு மறுத்து… நீங்க ரெண்டு பேரும் வீட்டை விட்டு ஓடிட்டீங்கன்னா… அது பெத்தவங்களுக்குப் பெருத்த அவமானம். இதுக்கு மேலும் எங்களுக்குக் காதல்தான் பெரிசு. கலியாணம் பண்ணி வைய்யுங்கன்னா… தாராளமாய் நான் முடிக்க தயார். ஆனா… அதுக்குப் பிறகு உங்களுக்கும் எங்களுக்கும் எந்தவித உறவு. ஒத்தாசை இருக்காது. இருக்கக்கூடாது!” அழுத்தம் திருத்தமாகச் சொன்னார்.

இவருக்குச் சம்மதமில்லை! முடிவு திட்டவட்டமாகத் தெரிந்து விட்டது சேகருக்கு.

சிவபுண்ணியம் மேலும் தொடர்ந்தார்.

“சேகர்! சுமதிக்கு என் மனைவி தம்பி தாய் மாமனை முடிவு செய்திருக்கேன். அவனுக்கு அரசாங்க உத்தியோகம். கை நிறைய சம்பளம். கொஞ்சம் வசதி நெருங்கிய உறவு. சுமதியை கண் கலங்காமல் பார்த்துக்குவான். நீங்க முரண்டு பிடிக்காம இருந்தீங்கன்னா…அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையும்!” முடித்தார்.

‘மனிதர் சொல்வதெல்லாம் சரி. கிளிப்பிள்ளைக்குப் பாடம் சொல்லி கொடுப்பதைப் போல் சொல்லுகிறார். கைப் புண்ணிற்குக் கண்ணாடி தேவை இல்லை என்பதை உணர்த்துகிறார். நிலைமை நமக்கும் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. என்ன செய்ய?’ சிறு மனக் குழப்பத்தில் அமைதியாக இருந்த சேகர்…ஒருவாறு தெளிந்து…

இருவரிடமும் விடை பெற்று கிளம்பினான்.

மறுநாள் கல்லூரியில்…

“என்ன முடிவு சுமதி…?”

“நீங்க..?”

“உன் அப்பா சொல்லறதுல நியாயமிருக்கு.”

கேட்ட சுமதிக்கு சட்டென்று கண்கள் கலங்கியது.

“சுமதி! நம்ம வாழ்க்கையை நாமே கெடுத்துக்க வேணாம். வீண் பிடிவாதம் பிடிச்சி நாம திருமணம் முடிச்சி வீணா கஷ்டப்படவேணாம். என்னை விடு…என்னைவிட உன் எதிர்காலம் சிறப்பாய் கண்ணில் தெரிந்து கையில் கிடைக்கும்போது அதை ஏன் வீணா உதறித்தள்ளி உதாசீனப்படுத்தனும்..? உன் வளமான எதிர்கால வாழ்க்கை குறுக்கே நின்னு கெடுக்க விரும்பல. நாம நட்பாய்ப் பிரிவோம். இதுதான் உனக்கும் நல்லது. எனக்கும் நல்லது!” சொல்லி திரும்பிப் பார்க்காமல் நடந்தான்!

அதன் பிறகு இதோ சந்திப்பு…?

– தொடரும்…

Karai adalarasan என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *