ஸதாநந்த போதக சாமியார்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 15, 2026
பார்வையிட்டோர்: 100 
 
 

(1933ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம்-6.1 | அத்தியாயம்-6.2 | அத்தியாயம்-6.3

(289-304 பக்கம் கிடைக்கவில்லை, உங்களிடம் இருந்தால் அனுப்பவும்.)

உயிரென்றும், பிரம்மாவை அதன் உடல், அல்லது, ஸ்வரூப மென்றும் கருதுவதுண்டு. பிரம்மாவென்பது பரம், நாராயணனென்பது அபரம். நாராயணன் திருப்பாற்கடலில் ஆதிசேஷனாகிய படுக்கையின்மீது ஆநந்தமாய் சயனித்திருப்பது போலவும், அவருடைய நாபியிலிருந்து ஒரு தாமரைக்கொடி வருவதுபோலவும், அதன் நுனியிலுள்ள தாமரைப் புஷ்பத்தில் சதுர்முகப் பிரம்மா வீற்றிருப்பது போலவும் வைஷ்ணவர்கள் கருதி, கடவுளையும் இந்தப் பிர பஞ்சத்தையும், இதிலடங்கிய ஜீவன்களையும் ஒரே வடிவத் தில் காட்டி அதையே தெய்வமாக வைத்துப் பூஜிக்கின் றனர். திருப்பாற்கடல் என்பதை சிலர் வெறும் பாலே நிறைந்த கடல் என்று அர்த்தம் செய்வதுண்டு. அது வெள்ளைக்காரர்கள் இந்த பூலோகம் முழுதையும் சுற்றிப் பார்த்து விட்டவர்களாதலாலும், எங்கும் உப்புத் தண்ணீரும் பனிக்கட்டியுமே இருப்பதைக் கண்டவர்களாதலாலும், நாராயணன் திருப்பாற் கடலில் பள்ளி கொண்டிருக்கிறாரென்ற விஷயத்தைப்பற்றிப் புரளி செய்து, நம் முன்னோரை முட்டாள்க ளாக்குவதுண்டு. நம்மவர்களே அதன் கருத்தை அறிய மாட்டாமல் தாறுமாறாய்ப் பிதற்றுவதுண்டு. நன்றாய்ப் படித்துப் பட்டங்கள் பெற்ற மேதாவிகளும், புராணீகர்களும்கூட இதன் கருத்தை நன் றாய் விளக்கமாட்டாமல் வாயில் வந்ததை உளறி வைப்பது வழக்கம். ஒரு கடல் முழுதும் பாலாகவே இருக்கவேண்டு மானால், அதற்கு எத்தனை பசுமாடுகள் வேண்டும், அத்தனை பசுமாடுகள் அகப்பட்டாலும், பால் கெடாமல் இருக்குமா, மனிதனே எவ்வளவோ ஸொகுஸான ஸயனங்களில் படுக்கையில், எல்லாவற்றையும் இச்சா மாத்திரத்தில் சிருஷ்டிக்கும் பரம்பொருளுக்கு ஒரு நல்ல படுக்கை கிடைக்கவில்லையா, பாலின் மேல் யாராவது படுப்பதுண்டா, சர்வக ஞரான பரம்பொருள் பாலின்மேல் படுப்பாரா என்பன போன்ற சந்தேகங்கள் நமக்கே உண்டாகின்றனவே; நம் மைக்காட்டிலும் சிறந்த அறிவாளிகளாயிருந்த நம்முன் னோருடைய மனத்தில் இவ்வித சந்தேகங்கள் உண்டா யிருக்காவோ? அவசியம் உண்டாயிருக்குமென்றே எண்ண வேண்டும். எனவே, பால் என்பதை நாம் பசுமாடு முதலியவற்றின் மடியிலிருந்து உண்டாகும் பால் என்று கருதுவது கூடாது. ஆண் வகுப்பாரை ஆண்பாலென்றும், பெண் வகுப்பாரைப் பெண்பாலென்றும் நாம் குறிக்கும்போது, பால் என்பது வேறு அர்த்தத்தைக் கொடுக்கவில்லையா? ஞானப்பால் என்று குறிக்குமிடத்தில், பால் என்பது வேறு வஸ்துவைக் குறிக்கிறதென்பது பிரத்தியக்ஷமாகத் தெரிகிறது. வெள்ளையர்கள் பனைமரத்தை பால் மர (Palmyra) என்று குறிக்கிறார்கள். இந்த இடத்தில், கள் பாலாகக் கருதப்படுகிறது. நம்மவர் பாரமார்த்திக ஞானத்தைக் கடவுள் நமக்குப்புகட்டும் பால் என்று நினைத்தால், வெள்ளைக்காரர்கள் கள்ளைப் பாலாகக் கருதுகிறார்கள். ஆனால், இவ்விரண்டும் பசு மூதலியவற்றின் மடிகளிலிருந் துண்டாகும் பாலல்ல வென்பது பிரத்தியக்ஷமாகத் தெரிகிறது. இந்தப்பிரபஞ்சத்தில் அடங்கிய சகலமான செல்வமும், இந்தப் பிரபஞ்சமும் பரம்பொருளின் அருளினால் உற்பத்தியாகி ஜீவித்திருக்கின் றனவல்லவா. அந்த அருள் கடல்போல் நிறைந்து பரவி இருப்பதாகவும், அந்தக் கடலிலிருந்து தாமரைப் புஷ்பம் போல் இந்தப் பிரபஞ்சம் முளைத்திருப்பதாகவும் கருதி அதைத் திருப்பாற்கடல் என்று குறிப்பிடுகிறார்கள். அந்தப் பாலாகிய திருவருள் நம் கண்ணிற்குத் தெரியாதது. குழந்தை தாயின் கர்ப்பப்பையில் இருக்கும்போது, அதன் தொப்புள் ஒரு குழாயின் மூலம் தாயின் உடம்போடு சேர்க் கப்பட்டிருக்கிறது. குழந்தைக்கு வேண்டிய ஜீவரஸம் தாயின் உடம்பிலிருந்து அந்தக் குழாயின்மூலம் குழந்தை யின் உடம்பிற்குப் போகிறதல்லவா. அதுபோல, திருப் பாற்கடலின் நடுவில் பரமாத்மாவாகிய நாராயணன் சயனித் திருப்பதாகவும், அவருடைய தொப்புளிலிருந்து கிளம்பும் தாமரைக் கொடியின் வழியாக திருப்பால் வந்து இந்தப்பிர பஞ்சமாகிய தாமரைப் புஷ்பத்தையும், அதன் உள்ளீடாகிய பிரம்மாவையும் சவரக்ஷிப்பதாகவும் வைஷ்ணவர்கள் மிக அழகாய் உருவகப்படுத்தி இருக்கிறார்கள். நாராயணன் ஆதிசேஷனாகிய படுக்கையின் மீது சயனித்திருக்கிறார் என்பதற்கும் சிலர் விகாரமாக அர்த்தம் செய்கிறார்கள். பாலின்மீது படுப் பதைவிட பாம்பின்மீது படுப்பது, பதின்மடங்கு அதிக அசங்கியமான தென்பதை நான் சொல்ல வேண்டியதில்லை யாதலால், ஆதிசேஷன் என்பதற்கும், நாம் சரியான அர்த்தம் செய்துகொள்ள வேண்டும். நாம் இவ்வுலகில் எதைப் பாம்பென்று கருதுகிறோமோ அதுவல்ல ஆதிசேஷன். சேஷன் என்றால் அடிமை; சேஷி என்றால் எஜமான். ஜீவாத்மாக்கள் எல்லோரும் பரமாத்மாவாகிய கடவுளுக்கு நிரந்தரமான அடிமைகள் என்று கருதுவது வைஷ்ணவர்களின் விசிஷ்டாத்வைதம். அதுவுமன்றி ஒவ்வொரு ஜீவாத்மாவும் மோக்ஷமடைந்த பிறகும் பிரத்யேகமான வடிவத்தோடிருப் பது என்பதும் அவர்களுடைய கொள்கை. அத்வைதிகளான ஸ்மார்த்தர்கள் அப்படிக் கருதுவதில்லை. நம்முடைய ஜீவாத்மாக்களெல்லாம் கடவுளின் ஒரு பாகமாதலால், பொய்த்தோற்றமாகிய இந்த பூதவுடம்பைக் கடவுள் எரித்து பஸ்மமாக்கியவுடன், நம் ஜீவாத்மாபரம்பொருளோடு இரண் டறக் கலந்து விடுகிறது என்று ஸ்மார்த்தர்கள் கருதுகிறார்கள். ஆகையால், அவர்களுக்கு சேஷன், சேஷி என்ற வித்யாசம் கிடையாது. அவர்களுடைய கடவுள் எப்போதும் பஸ்மத்தோடு கூடிய ஏகாங்கி. இவ்விடத்தில் சிலர் இன்னொரு கேள்வி கேட்கலாம். இந்தப் பிரபஞ்சமே பொய்த் தோற்றமென்றால், பொய்த்தோற்றம் எரிந்து பஸ்ம மாகிறதென்பதற்கு அர்த்தமென்னவென்று சிலர் கேட்கலாம். அதை அவர்கள் அத்வைதிகளிடத்தில்தான் கேட்க வேண்டும். அவர்களுடைய மோக்ஷ லோகத்தில், தனிப் பட்ட ஜீவாத்மாக்களே இல்லை. ஆனால், ஜீவாத்மாக்களுக்கு பதில் பஸ்மம் என்ற வஸ்துவொன்று கடவுளுக்குத் துணையாக நிற்கிறது. அப்போதும் இரண்டு உருப்படிகள் மிஞ்சுகின்றன. ஆனால் அவர்கள் பஸ்மத்தையும், பொய்த்தோற்றமாகிய பிரபஞ்சத்தையும் கணக்கில் சேர்ப்பதில்லை. இங்கிலீஷ்காரர்கள்கூட Body, Life and Soul என்று பிரிக்கிறார்கள்; அதாவது, உடல், ஜீவன், ஜீவாத்மா என்று மூன்று பாகங்களாக்குகிறார்கள். அத்வைதிகளுக்கு தனிப் பட்ட ஜீவாத்மா (Soul) கிடையாது. உடல், ஜீவன் என்று இரண்டாகவே அவர்கள் கருதுகிறார்கள். உடல் பொய்த் தோற்றம். நம்முடைய உயிராகிய ஜீவன் அகண்டாகார மாகிய பெரிய உயிராகிய சிவனில் இரண்டறக் கலந்து போகிறதென்பதே அவர்களுடைய மோக்ஷம். வைஷ்ணவர்கள் அப்படி நினைப்பதில்லை. உடம்பு, ஜீவன் (உயிர்), ஜீவாத்மா, பரமாத்மா என்று பிரிக்கிறார்கள். ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒவ்வொரு தனிப்பட்ட ஜீவாத்மா இருந்தாலன்றி அதனதன் கர்மபலன்களையும், பாப புண்ணியங்களையும் அதது அநுபவிக்கின்றதென்பதற்கு அர்த்தமில்லாமல் போகும். பூத உடம்போடு சேர்ந்து இறப்பு பிறப்பாகிய சாகரத்தில் சுழன்று கர்மபலன்களை அநுபவித்துக் கொண்டிருக்கும் ஜீவாத்மாக்கள் பிரம்மாவிற்குள் இருப் யவை ; இதிலிருந்து விடுபட்டு மோக்ஷத்தை யடைந்தவை ஆதிசேஷ கோஷ்டியில் கலந்து பரமாத்மாவாகிய நாரா யணனுக்கு சதாகாலமும் தொண்டு செய்பவை. எனவே, ஆதிசேஷனென்பது இன்னதென்பது நமக்கு இப்போது சுலபத்தில் விளங்கும். ஆதிகாலம் முதல் இந்த பூலோகத் தில் ஜனித்த ராஜ ரிஷிகளும், யதீந்திரர்களும், இன்னும் பலவகைப்பட்ட புண்ணியாத்மாக்களும் கணக்கிலடங்காமல் பரமபதத்திற்குப் போய்ச் சேர்ந்து கொண்டே இருக்கிறார்கள். அப்படிப் போகும் சத்பாத்திரக் கோஷ்டியார் பாம்பு செல்வதுபோல நீளமாய்ப் போய்ச் சேர்ந்துகொண்டே இருப்பதால், அப்படி ஆதிகாலம் முதல் பரமபதம் போய்ச் சேர்ந்துகொண்டிருப்போர் ஆதிசேஷன் என்று குறிக்கப்படுகிறார்கள். அவர்களுள் ஒருவர்கூட அழியாமல் எல்லோரும் நிரந்தரமாயிருந்து பரம்பொருளுக்கு சதாகாலமும் தொண்டு செய்கிறார்கள் என்பதே வைஷ்ணவர்களின் கொள்கை. 

“சென்றால் குடையாம், இருந்தால் சிங்காசனமாம், 
நின்றால் மரவடியாம், நீள்கடலுள்- என்றும்
புணையாம் மணிவிளக்காம் பூம்பட்டாம் புல்கும்
அணையாம் திருமாற் கரவு” 

என்று ஆழ்வாரொருவர் ஆதிசேஷன் பரம்பொருளுக்குச் செய்யும் தொண்டுகளை யூகத்தினால் ஒருவிதமாக விளக்கி யிருக்கிறார். ‘அகம் ப்ரம்மாஸ்மி’ என்பது வேத வாக்கியம். அதாவது நான் ப்ரம்மா என்பது அதன் பொருள். இதை வைத்துக்கொண்டு அத்வைதிகள் ‘நான்’ என்பதும் பரமாத்மாவும் ஒன்றென்றும், கடைசியில் இந்த ‘நான்’ பரமாத்மாவோடு இரண்டறக் கலந்து போகிறதென்றும் சொல்லி வாதாடுகிறார்கள். பிரம்மாவென்பது ஸத்யம், ஞானம், அநந்தம் என்று விளக்கப்பட்டதும், பரமாத்மாவின் சரீரமெனக் கருதப்படுவதுமான பாகமாதலால், ‘நான்’ என்பது நிரந்தரமான சரீர பாகமேயன்றி, பரமாத்மாவோடு ஒருநாளும் இரண்டறக் கலந்து போவதல்ல. ‘நான்’ என்பது இந்த பிரம்மாண்டமாகிய தாமரைப்பூவி லிருந்து விடுபட்டு மோக்ஷத்தை யடைந்தால், ஆதிசேஷ னாகிய பக்த கோஷ்டிகளோடு சேர்ந்து பரமாத்மாவாகிய நாராயணனுக்கு நிரந்தரமாகத் தொண்டுகள் செய்து, அவன் அநுபவிக்கும் நிரதிசயாநந்தத்தைத் தானும் அநுபவிக்கிறது. ஆதிசேஷன் ஆயிரம் பணாமுடிகளையுடையவன் என்பது, ஜீவாத்மாக்கள் தமது தனித்தன்மையை இழக்காமல் ஏராளமாக இருந்துகொண்டு பரமாத்மாவுக்கு நித்ய ஸேவை செய்கிறார்கள் என்பதைக் காட்டும் குறிப்பு. இவற்றிலிருந்து அத்வைதிகளாகிய ஸ்மார்த்தர்களுக்கு சேஷன், சேஷி என்னும் பாகுபாடு இல்லையென்பது ஸ்பஷ்டமாக விளங்குகிறது. ஆதாவது,பரமாத்மா ஆண்டான் (ஆண்டவன்), ஜீவாத்மாவாகிய நாம் அடிமை என்பதை அவர்கள் ஒப்புக்கொள்ளுகிறதில்லை. பானை உடைந்தவுடன், அதற்குள்ளிருக்கும் காற்று, எங்கும் நிறைந்துள்ள காற்றோடு கலந்து போகிறது போல, நம் உடம்பு அழிந்தால், இதிலிருந்த உயிர், அகண்டாகாரமான சிவனாகிய பெரிய உயிரோடு அடையாளம் தெரியாதபடி கலந்து போகிறது. சிவனாகிய மொத்த உயிர் எல்லாவற்றையும் எரித்த சாம்பலைப் பூசிக்கொண்டு ஏகாங்கியாய் ஆண்டியாயிருக்கிறது. ஆகையால், ஆண்டான் அடிமை என்ற வியவகாரத்திற்கே இடமில்லை. எனவே அவர்களுக்கு சேஷன், சேஷி பாவம் கிடையாது. ஸ்மார்த்தர்களில் சிலர் சேஷ ஐயர் என்றும், அவர்களுடைய ஸ்திரீகள் சேஷி என்றும் பெயர் வைத்துக் கொண்டிருக்கிறார்களே, அதற்கு அர்த்தமென்னவென்று நீங்கள் கேட்கலாம். வைஷ்ணவர்கள் பரமாத்மா சேஷி யென்றும், தாம் சேஷரென்றும் கருதுகிறார்கள். ஸ்மார்த்தர்களுக்கு பரமாத்மா சேஷியல்ல. சேஷி என்பது அவர்களுடைய மனைவிகளோடு நின்று போகிறது. கிறிஸ்தவர்கள், இஸ்லாமானவர்கள் ஆகியோர்கூட Soul is immortal என்ற கொள்கையை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதாவது, ஜீவாத்மா நிரந்தரமாயிருப்பது என்பது அதன் பொருள். ஒவ்வொருவருடைய ஜீவாத்மாவும் எப்போதும் தனி உருப்படியான ஜீவாத்மாவாகவே நிலைத்திருக்குமென்பதை எல்லோரும் ஒப்புக் கொள்ளுகிறார்கள். ஆனால் நம் ஆதிசங்கரர் சிஷ்யர்களான ஸ்மார்த்தர்கள் மாத்திரம் அதை மறுத்து, ஜீவாத்மாவின் தனிவடிவம் சிரஞ்சீவியானதல்ல வென்றும், அது முடிவில் பரம்பொருளோடு ஒன்றாகி விடுகிறதென்றும் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்கள், ‘நான்’ என்பதை உயிரோடு நிறுத்திக் கொள்ளுகிறார்கள். சின்ன உயிர் பெரிய உயிரோடு சேர்ந்து விடுகிறது என்பது அவர்களுடைய எண்ணம். உயிர் உடம்பைப் பொருத்ததென்பதையும், அவ்விரண்டிற்கும் வேறான ஆன்மா ஒன்று நம்முடம்பிற்குள் நிரந்தரமாயிருக்கிற தென்பதையும், அவ்வாறு இப்பிரபஞ்சத்தில் எண்ணிக்கையற்ற வெவ்வேறு ஆன்மாக்கள் இருக்கின்றன வென்பதையும், அவைகளுக்கெல்லாம் நாயகனாய்ப் பரமாத்மா இருக்கிற தென்பதையும் அத்வைதிகள் ஒப்புக்கொள்வதில்லை. அவர்கள் உயிர் என்றும், ஆவி என்றும், சீவன் என்றும் குறிப்பார்களேயன்றி, ஆன்மா என்றோ ஜீவாத்மா என்றோ, குறிப்பதில்லை. சாதாரணமாய் அத்வைதிகள், உடல், பொருள், ஆவி என்பதோடு நிறுத்திக்கொள்ளுகின்றனரேயன்றி, ஆன்மாவைக் கணக்கில் சேர்ப்பதில்லை. 

”குடம்பை தனித்தொழியப் புட் பறந்தற்றே 
உடம்பொடுயிரிடை நட்பு” 

என்கிறார் திருவள்ளுவ நாயனார். 

“எவ்வுயிரும் என்னுயிர்போல் இரங்கவும்நின் 
தெய்வ அருள்கருணை வையாய் பராபரமே 

என்கிறார் தாயுமானவர். 

”பாடுப்பட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் – கூடுவிட்டுங்
காவி தான் போயினபின் பாரே அநுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம்” 

என்கிறார் இன்னொரு புலவர். 

இம்மாதிரி உயிர் என்றும், ஆவியென்றும் குறிக்கப் படுவது பிராண வாயுவேயாகையால், அது இந்த உடம்பை விட்டால், இப்பிரபஞ்சத்தில் அகண்டாகாரமாக நிறைந் திருக்கும் வாயுவில் இரண்டறக் கலந்து போகிறது என்று கருதுகிறார்கள் என நாம் எண்ண இடந்தருகிறது. ஆத்மன் என்ற சொல்லின் அர்த்தத்தை நாம் கவனித்தால் அதன் வேறுபாடு நன்றாக விளங்கிவிடும். ஆத்து என்றால் வீட்டு என்றர்த்தம்; மன் என்றால் தலைவன் என்றர்த்தம். அதாவது, நம் உடம்பாகிய வீட்டின் எஜமானே ஆத்மன் அல்லது ஆத்மா என்ற கருத்து த்வனிக்கிறது. ஆவி, அல்லது உயிர் என்பதும், உடம்பிற்குடையவன் என்பதும் அடியோடு வேறுபடுகின்றனவல்லவா. வைஷ்ணவர்களுக்கும்மற்ற வர்களுக்கும் இந்த முக்கியமான விஷயத்தில் வித்தியாசம் இருப்பதனாலேயே அத்வைதம் முதலிய அடிப்படையான பேதங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இன்னம், நாம் ‘சிவா’ என்ற சொல்லின் சரியான அர்த்தத்தைக் கண்டுபிடித்தால், நம் சிக்கல்களில் பெரும்பாகமும் அற்றுப் போய்விடும். விஷயமும் தெளிவுபட்டுப் போகும். ‘சிவா’ என்றால் மங் களகரமானது என்று ஒரு மடாதிபதி சமீப காலத்தில் வியாக்கியானம் செய்தார். சிவன் சங்காரக் கடவுளென்றும், அவருக்கு மகா பஸ்மம் என்று பெயர் என்றும் அதே மடாதிபதி தெரிவித்தார். சிவன் கோவில் ஸ்மசானத் திற்கு சமானமென்று ஸ்மார்த்தர்களே சொல்லுகின்றனர்; சிவன் கோவில் பிரஸாதங்களை அநேக ஸ்மார்த்தர்கள் கையால்கூடத் தொடுவதில்லை. மனிதர் இறந்து போனால் அதை அமங்கலமென்றே எல்லோரும் கருதி அடித்துக் கொண்டு அழுது புரளுகின்றனர். பூண் நூலை வலது பக்கம் போட்டுக்கொள்ளுகின்றனர்; தலைமயிரை ஈரத்தோடு தொங்கவிட்டபடியே அழுதுகொண்டு போகின்றனர்; நெற்றியில் சுபகரமான குறிகளை வைக்கிறதில்லை. புருஷனை இழந்த ஸ்திரீ அவளுடைய ஆயுள்காலம் முடிய அமங்கலி என்று குறிக்கப்படுகிறாள். அவள் எதிரில் வருவதே அபசகுனமாய்க் கருதப்படுகிறது. அப்படி இருக்க, இத்தனை அலங்கோலங்களையும் செய்து வைக்கும் சங்காரக் கடவுளின் பெயராகிய ‘சிவா’ என்ற சொல்லுக்கு மங்களகரமானது என்ற அர்த்தம் எங்கிருந்து வந்ததோ தெரியவில்லை. இந்தச் சொல்லின் உண்மையான வடிவம் மறைந்து போய் விட்டதாகையால் இதன் கருத்து எவருக்கும் சரியாகப் படாமல் மறைந்து போயிருக்கிறது. இதன் சரியான வடிவம் என்னவென்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டுமானால், தெலுங்கு பாஷையின் அரிச்சுவடியைப் பார்க்கவேண்டும். அது ‘ஓம் நா மஹா சீவாயஹா,’ என்று ஆரம்பமாகிறது. ஓம் என்றால் சகலமும், நா என்றால் நாராயணன் மஅஹா என்றால் நம் மனத்தில், சீவாயஹா என்றால் சிவன் நம்மனத்தில் என்ற பொருள் ஏற்படுகிறது. அதாவது, ‘சகலத்திற்கும் அந்தராத்மாவான நாராயணன் நம்மனத்தில் இருப்பதாக, சிவன் நம்மனத்தில் இருப்பதாக’ என்பது இதன் கருத்து. இவ்விடத்தில் நாம் எதை முக்கியமாய்க் கவனிக்க வேண்டியதென்றால், ‘சிவா’ என்பது ‘சீவாய்’ என்பதன் குறுக்கம் என்பதையே நாம் தெரிந்து கொள்ள வேண்டும். ‘சீவாய்’ என்பதைத் திருவாய் என்று மாற்றலாம். ‘சீ’ என்ற சொல்லிற்குப் பல அர்த்தங்கள் இருக்கின்றன. அது லக்ஷ்மி, சரஸ்வதி, பார்வதி முதலியவற்றைக் குறிக்கும். சாதாரணமாய்ப் பெண் என்ற அர்த்தத்தையே கொடுக்கும். சீ என்பது சம்பத்து அல்லது பிரகாசம் என்பதையும் குறிக்கும். ஸ்ரீ வில்லிபுத்தூர் என்பதை சீ வில்லிபுத்தூர் என்று குறிக்கின்றனர். ஸ்ரீநிவாச தாதாசாரி என்பதை சீமாதாதம் என்கிறார்கள். ஸ்ரீமான் என்பது சீமான் ஆகிறது. அண்ணாச்சீ என்றும் அண்ணத்தே என்றும் சிலர் தம் அண்ணனைக் குறிக்கிறார்கள். ‘சீ’ என்பதும், ‘தே’ என்பதும், இவ்விடத்தில் தெய்வம் என்ற அர்த்தத்தைக் கொடுக்கிறது. ‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’ என்பதுபோல, அண்ணனையும் தம்பி தெய்வமாய்க் கருதுவதை இந்தப் பிரயோகம் காட்டுகிறது. வைஷ்ணவ மடாதிபதிகள் சீயர் என்றும், ஜீயர் என்றும் குறிக்கப்படுகின்றனர். அவை ‘சீ’ ‘ஜீ’ என்பனவற்றின் மரியாதைப் பன்மை. சீ என்பதே ஷி என்றும் ஜீ என்றும் மாறிப்போயிருக்கின்றது. வடதேசத்தார் ஸ்ரீராம் என்பதை ஷிரீராம் என்று சொல்லுகிறார்கள். கிருஷ்ணாஜீ, காஜீ, ஹாஜீ, பாபாஜீ முதலியவற்றிலுள்ள ஜீ, நம் சீ என்ப தன் திரிபே. இங்கிலீஷில் ஜீ+அரஜ் என்பது ஜியார்ஜ் என்று மாறியிருக்கிறது. சீ அரசு என்பது அதன் கருத்து. அவர்கள் பெண்ணைக் குறிக்க உபயோகிக்கும் ‘ஷி’ என்ற சொல்லும் ‘சீ என்பதன் திரிபே. இருஷி என்பது ‘இருசீ’ என்ற சொல்லின் திரிபு. இரு= பெரிய, சீ = திருவருளாளர் என்பது கருத்து. வெள்ளைக்காரிகள் சுசீ (Su Si) என்று பெயர் வைத்துக்கொள்ளுகின்றனர். அது சுபலக்ஷ்மீ அல்லது சுக்கிரனாகிய சரஸ்வதி என்ற அர்த்தத்தைத் தருகிறது. சீதா என்பதற்கு லக்ஷ்மியாகிய தாய் என்றர்த்தம். எனவே ‘சீ’ என்பதற்கு லக்ஷ்மீகரம் பொருந்திய, சகல சம்பத்தும் உடைய, தெய்வாம்சம் வாய்ந்த என்ற கருத்துகளைக் கொள்ளவேண்டும். வாய் என்ற சொல் ஆதிகாலத்தில் ‘வா’ என்று சுருக்கமாய்ப் பிரயோகப் பட்டிருக்கிறது. நாக்கு என்பதற்கு, சிகுவா என்று சொல்வ துண்டு. சிகு அல்லது செகு என்றால், வெட்டி நாசமாக்குவது என்பது பொருள். ஆகாரத்தை உள்ளே போட்டால், அதை அதக்கி உள்ளே தள்ளுவது நாக்காதலால் அதை சிகுவாய் என்று குறித்தார்கள் போலும். அதுவே சம்ஸ்கிருதத்தில் ஜிஹ்வா என்று மாறியிருக்கிறது. கிறிஸ்தவர்களின் தெய்வம் ஜிஹோவா என்று குறிக்கப்படுகிறது; அதன் கருத்து நாக்கு என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. சீவாய் என்பது காலக்கிரமத்தில் ‘சிவா’ என்று சுருங்கி யிருக்கிறது. ‘சீவாய்’ என்றால் தெய்வம் நம்மோடு பேசும் வாய், அல்லது, தெய்வத்தின் சம்பத்து, அல்லது, அருள் நமக்கு எந்த வழியாக வருகிறதோ அந்த இடம் என்று நாம் பொருள் கொள்வது பொருத்தமாகும். இவ்விதமான அர்த்தம் ஏற்படும்போது, சிவன் அழிக்கும் தெய்வம் என்றும், அது நம் சீவனுக்கு ஆதாரமானது என்றும் அதற்கு எப்படி அர்த்தங்கள் ஏற்பட்டன என்பதை நாம் ஆராய வேண்டும். அதற்கு வானசாஸ்திரத்தின் உதவியையே நாம் நாடவேண்டும். அந்தசாஸ்திரம் இன்னின்ன தொழிலை இன்னின்ன கிரகங்கள் செய்கின்றனவென்பதை நன்றாகத் தெரிவிக்கிறது. நான் ஏற்கனவோ ஒரு விஷயத்தைத் தெரிவித்தேன். அதாவது, நம் வயல் ஒன்றேயானாலும், ஒவ்வொருவிதமான விதையையும் ஒவ்வொருவித குண முடைய வஸ்துவையும் உற்பத்திசெய்து நமக்கு உதவுகிறது. இதேபோல, ஆகாயத்திலுள்ள ஒவ்வொரு கிரகமும் ஒவ் வோர் இலாகாவோடு சம்பந்தப்பட்டிருக்கிறது; ஒவ்வொன் றின் குணாதிசயங்களும் பலவாறாய்ப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. கடிகாரம் எப்படிப் பன்னிரண்டு பாகங்களாய்ப் பிரிக்கப்பட்டிருக்கின்றனவோ, அப்படியே, நமக்கு நாலாபக்கங் களிலும் அநந்தமாகப் பரவிக்கிடக்கும் ஆகாய வெளியும் பன்னிரண்டு பாகங்களாய்ப் பிரிக்கப்பட்டிருக்கின்றது. அவை ஒவ்வொன்றும் ராசி என்று குறிக்கப்படுகிறது. ஆகாயம் ஒரே வெறு வெளியாயிருப்பதனால், ராசிகளின் பகுதியையும் அடையாளத்தையும் கண்டுகொள்வதற்கு, 27 நக்ஷத்திரங்களை மயில் கற்கள்போல் அடையாளங்களாய் வைத்துக்கொண்டிருக்கின்றனர். இந்தப் பிரம்மாண்டமா கிய பிரபஞ்சத்தையே இப்படி ஒரு கடிகாரம்போல் வகுத்து, சூரியன், சந்திரன் முதலிய கிரகங்களை அதன் முள்களாக வைத்துக்கொண்டு நம்முன்னோர் அற்புதமான எத்தனையோ கணக்குகளைக் கண்டு பிடித்திருக்கின்றனர். எல்லாம் பிரம்மாவென்று நாம் முன்னரே குறித்தோமல்லவா. அந்த பிரம்மாவே, விராட் புருஷன் என்றும், கால புருஷன் என்றும், கிருஷ்ணன் என்றும் குறிக்கப்படுகிறது. அதன் தேகம் ஆகாய வெளியாய் எங்கும் பரவியிருக்கிறது. சூரியன், சந்திரன், நக்ஷத்திரங்கள் தோன்றினால், நமக்கு வெளிச்சமுண்டாகிறது. அவைகள் யாவும் மறைந்திருந்தால், எங்கும் ஒரே இருள்மயமாய் நிறைந்து போகிறது. ஆகவே, இந்தப் பிரபஞ்சம் முழுமைக்கும் இயற்கையான நிறம் எது? அது கருப்பு என்பது பிரத்தியக்ஷமாகத் தெரி கிறது. இந்தப் பிரபஞ்சம் முழுதும், விராட் புருஷன், கிருஷ்ணன்,அல்லது, கால புருஷன் என்று சங்கேதமாய்க் குறிக்கப்படும் தெய்வத்தின் சரீரம் என்றும், அது கருப்பு நிறமானதென்றும் வைஷ்ணவர்கள் குறிக்கிறார்கள். பிறைக்காலமாகிய பதினைந்து தினங்களிலும் சந்திரனுடைய ஒரு பாகமோ, அல்லது, முழுப்பாகமோ இருளால் மறைந்து போகிறது. அதைக் கிருஷ்ண பக்ஷமென்று நாம் குறிக்கிறோம். ஏனென்றால், அந்தக் கருமை நிறந்தான் இந்தப் பிரபஞ்சம் முழுதிற்கும் இயற்கையாக ஏற்பட்ட நிறம். இப்படிக் கருப்பாயிருக்கும் கால புருஷனாகிய கிருஷ்ண னுடைய உடம்பு நான் மேலே சொன்னபடி 12 பாகங்க ளாய்ப் பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு பாகமும் லக் னம் அல்லது ராசி என்று குறிக்கப்படுகிறது. ஒவ்வொரு பகுதியாகிய ராசியிலும் சூரியன் ஒவ்வொரு மாதகாலம் சஞ்சரிக்கிக்கிறானாகையால், பன்னிரண்டு மாதங்கள் ஏற்படுகின்றன. ஆகாயப் பரப்பின் பன்னிரண்டு பாகங்களான களையும் அடியில் வருகிற மாதிரி கால புருஷனுடைய உடம்பின் பாகங்களாய்ப் பிரித்திருக்கிறார்கள்: 

இப்படி ஆகாய வெளியின் பன்னிரண்டு பாகங்களும் கால புருஷனுடைய உடம்பின் பல பாகங்களாய்க் கருதப்படுகின்றன. இதுபோலவே கிரகங்களும் கால புருஷனுடைய அங்கங்களாகக் கருதப்படுகின்றன. அதுவன்றி, கிரகங்களின் நிறம், அவை செய்யும் தொழில், அவற்றின் திக்கு, அவற்றின் அதிகாரம் முதலிய தகவல்கள் நம் சோதிட சாஸ்திரங்களில் விரிவாகக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவைகளில் சிலவற்றை மாத்திரம் இங்கு நான் குறிப்பிடுகிறேன்: 

இவ்விவரங்கள் எல்லாப் புஸ்தகங்களிலும் ஒரேமாதிரி காணப்படவில்லை. இந்த அட்டவணையில் சிவனுடைய தொழில் சூரியன் மூலமாய் நடக்கிறதென்பது தெரிகிறது. சிவனை முக்கண்ணன் என்று குறிப்பதுண்டு. சூரியன், சந்திரன், அக்னி ஆகிய மூன்றும் சிவனுடைய கண்களென்று கந்தபுராண உரை சொல்லுகிறது. பகவான் சூரியனிலும், அக்னியிலும், காயத்திரியிலும் இருப்பதாக நினைத்து ஆராதிக்கும்படி ஆதிசங்கரர் சொல்லியிருக்கிறார். ஜாதகாலங்காரம் என்ற நூல், 

“ஆன வெள்ளி குரு அயனாகுமே, 
வான இந்தும் புதனும் மாயனாகும். 
பானும் சேயும் சிவனெனப் பன்னுவர் 
மான வன்னிய தேவதை மந்தனே” 

என்று சொல்லுகிறது; அதாவது, சூரியனும், சேயனாகிய செவ்வாயும் சிவன் என்பது இதன் கருத்து; இரண்டும் நெருப்பிற்கு அதிபதிகள்; இரண்டும் குரூர கிரகங்கள். செவ்வாய் தென்திசைக் கடவுளாதலால், அதுவே எமன் எனப்படுவது. சுப்ரமணியமென்பதும் அதுவே. அதன் அடையாளம் உடுக்கு. சிதம்பரம் நடராஜருடைய கைகள் ஒன்றில் உடு க்கு வடிவம் காட்டப்பட்டிருக்கிறது. அது செவ்வாய் தெய் வம் என்பதைக் காட்டுவதற்காக அந்த உடுக்கடையாளம் வைக்கப்பட்டிருக்கிறது. ஒரு மடாதிபதி சமீபகாலத்தில் பிரசங்கம் செய்த சமயத்தில், விநோதமான ஒரு விஷயத்தைத் தெரிவித்தார். நடராஜர் உடுக்கை ஆட்டினாராம், நம்முடைய வேதசாஸ்திர புராணங்களெல்லாம் அதிலிருந்து கொட்டியதாம் என்று அந்த மடாதிபதி மிக பய பக்தி விநயத்தோடு தெரிவித்தார். இவருக்கு ஜோதிட சாஸ்திரம் எவ்வளவு தூரம் தெரிந்திருக்கிறது என்பதை இது நன்றாகக் காட்டுகிறது. நம் வேதங்களுக்கு சோதிட சாஸ்திரம் ஒரு முக்கிய ஆதாரம். அது தெரியாவிட்டால், வேதங்களுக்குச் சரியானபடி அர்த்தம். செய்வதே முடியாத காரியம். சகல சக்தியும் வாய்ந்த நடராஜர் உடுக்கில் அடைக்கவேண்டிய அவசியமுமில்லை; அதை அசைத்துக் கொட்டவேண்டிய உபத்திரவமுமில்லை. நம் பெண் பிள்ளைகள் கடுகு முதலிய சாமான்களைக் குடுக்கையில் அடைத்து வைத்திருந்து, வேண்டியபோது கொட்டிக் கொள்வதுபோல் நடராஜரும் செய்கிறார் போலிருக்கிறது. தீய்க்கு அதிகாரியான செவ்வாய்க்கும் வேதசாஸ்திர புராணங்களுக்கும் என்ன சம்பந்தமென்பது தெரியவில்லை. அதுவன்றி ஸ்மார்த் தர்கள் அதை நடராஜன் என்று கருதுகிறார்கள். அதாவது கிரகங்களும், நக்ஷத்திரங்களும் எப்போதும் ஓடி நடனமாடிக் கொண்டே இருப்பதான இந்தப் பிரபஞ்சமாகிய நடன சபைக்கு செவ்வாயே ராஜன் என்று அவர்கள் கருதுகிறார்கள். அது தவறு. செவ்வாய் சேனாதிபதியேயன்றி ராஜனல்ல. வியாழ பகவானாகிய பிரகஸ்பதியே இந்திரனாதலால், அவரே தேவராஜன், அல்லது, தேவனாதன்; அதாவது சகல மான கிரகங்களுக்கும் அதிராஜன். நவக்கிரக ஸ்தோத்திரத் தில் ‘ஸ்வர்க்கத் துவாராய நமஹா’ ‘மோக்ஷத் துவாராய நமஹா’ என்ற அர்ச்சனைகள் சூரியனுக்கு உபயோகிக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே, பரமபதத்திற்குப் போக சூரியனே வழி அல்லது வாயில் என்பது அதன் கருத்து. அதாவது, அதுவே சீவாய் அல்லது சிவா. ஸ்மார்த்தப் பிராம்மணர்கள் ஒவ்வொரு தினமும் மூன்று வேளைகளில் சந்தியாவந்தனம் செய்கையில் எமனைப்பற்றி அடியில் வருகிறபடி ஸ்தோத்திரம் செய்கிறார்கள்: 

எமாய தர்மராஜாய ம்ருத்யவே சாந்த காயசா
வைவஸ்வதாய காலாய ஸர்வ பூத யாயச
ஒளதும்பராய தத்னாய நீலாய பரமாத் மனே 
கோதராய சித்ராய சித்ர குப்தாய வை நமஹா. 

இதன்படி அவர்களுடைய எமனாகிய செவ்வாயையே அவர்கள் பரமாத்மாவாகக் கருதுகிறார்கள். ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு திரவியம் உரியதென்றும் சோதிட சாஸ்திரம் சொல்லுகிறது. அதன்படி செவ்வாயின் திர வியம் பொன். செவ்வாய் கிரகம் பொன்னம்பலம் என்றும் குறிக்கப்படுகிறது. “யாருக்குப் பொன்னம்பலம் கிருபை இருக்குதோ-அவனே பெரியவனாம் ” என்று நந்தனார் சரித் திரத்தில் ஒரு பாடல் இருப்பதை நீங்கள் கேள்வியுற்றிருக்கலாம். செவ்வாய் கிரகம் கால புருஷனுடைய தலையாத லால், கபாலீசுவரன் என்பதும் செவ்வாயையே குறிக்கிறது. சிவன் கையில் கபாலத்தை ஏந்தி மயானச் சாம்பலைப் பூசிக் கொண்டு பிச்சை எடுப்பதாக சைவர்களுடைய ஐதிகம் சொல்வதுண்டு. சித்திரை மாதமாகிய, வருஷத்தின் முதல் மாதம் கால புருஷனுடைய தலையிலிருந்து ஆரம்பமா கிறது. அதனால், செவ்வாய் கபாலன் என்று குறிக்கப்படு கிறது. சித்திரை மாத வெயிலில் பயிர் பச்சைகள் யாவும் காய்ந்து சாம்பலாய்ப் போயிருக்கின்றன. சூரிய வெப்பம் சகிக்க முடியாததா யிருக்கிறது. அப்போது செவ்வாயின் ஆக்ஷி காலம். ஆகையால் அப்போது பூமியில் ஈசுவரர் கபாலத்தை வைத்துக்கொண்டு ஸ்மசானத்தில் ஆடுவதாகச் சொல்லுகிறார்கள். சிவன் உடம்பு முழுதும் எலும்பு மாலை யைத் தரித்திருப்பதாகவும் சைவர்கள் சொல்லுகிறார்கள். ஆனால் அவர்கள் அதன் கருத்தை சரியானபடி விளக்குவ தில்லை. மேலே காட்டிய அட்டவணையில் சூரியன் கால புருஷனுடைய எலும்பு என்று காட்டப்பட்டிருக்கிறது. நம்முடைய உடம்பு நிலைத்து நிற்பதற்கு எலும்புக்கூண்டே அடிப்படையான ஆதாரம். அதுவே உடம்பின் பளுவாகிய பொறுப்பு முழுதையும் தாங்குகிறது. அதுபோல சூரியன் இந்தப் பிரபஞ்சம் முழுதையும் இழுத்துப் பிடித்துக் கொண்டிருப்பதால், எல்லாவற்றிற்கும் அதுவே ஜீவாதாரமாய் அமைந்திருக்கிறது. ஆகவே, அதைக் கால புருஷ னுடைய எலும்பு என்றனர். எலும்பை அக்கு என்றும் சொல்வதுண்டு. மூத்த சகோதரியை அக்காள் என்று குறிப்பதுண்டு. மூத்த பெண்ணே வீட்டின் பொறுப்பை கவனிப்பவளாதலால் அவள் அக்காள் என்று குறிக்கப்படு கிறாள். அதாவது எலும்புபோன்ற பொறுப்பாளி என்பது அதன் கருத்து. எலும்பு என்ற கருத்துடைய அக்கு என்ற சொல்லே ஹக்கு அல்லது பொறுப்பு என்ற சொல் லாய் மாறியிருக்கிறது. எலும்பை அத்தி என்றும் ஹஸ்தி என்றும் சொல்வதுண்டு. சிவனை ‘அத்தனே’ ‘ஐயனே’ என்று சிவபக்தர் குறிப்பதுண்டு. சிவனை ஆத்திமர நிழலில் அமர் ந்த தேவன் என்றும் குறிப்பதுண்டு. காளஹஸ்தி என்பது ஒரு முக்கியமான சிவஸ்தலம். காளஹஸ்தீசர் என்பது ஸ்வாமியின் பெயர். அதன் சரியான பெயர் காலஹஸ்தீசர் என்பது. அதாவது, காலபுருஷனுடைய ஹஸ்தியாகிய சூரியன் என்பது அதன் கருத்து. ஆகவே, சிவன் என்று சூரி யனும் செவ்வாயும் குறிக்கப்படுகின்றன; இரண்டும் அக்னிக் கடவுளாதலால், அழிக்கும் குணமுடையன; செவ்வாய் சேனாதிபதியாகையால், அதுவே சிவனுடைய வாயில்காக்கும் அதிகாரநந்தி என்றும் குறிக்கப்படுகிறது.நந்தீ என்றால் நம் முடைய நெருப்பு என்பது பொருள். ஜந்துக்களுக்கு உயிர் இருக்கும்வரையில் உடம்பில் உஷ்ணம் இருக்கிறது. உயிர் போனால் உஷ்ணமும் போய்விடுகிறது. ஆகவே, அக்னிதான் நம் உயிர் என்பது சைவர்களது கொள்கை. இப்படி சகல மான ஜீவஜெந்துக்களுக்கும் ஜீவாக்னியைத் தருவதால்சூரிய னும் செவ்வாயும் சிவன் என்று குறிக்கப்படுகின்றன. செவ் வாயை சிவனுடைய புத்திரனான சுப்ரமணியரென்றும் கரு துவதுண்டு. ஆனால் சிவனுடைய அவதாரமே சுப்ரமணியரெ ன்று கருதுகின்றனராதலாலும், இரண்டுகிரகங்களும் அக்னி மயமான தன்மையுடயவையே ஆதலாலும், இரண்டும்சிவன் எனப்படுகின்றன. செவ்வாய்க்கு சேயன் என்பதே ஒருபெயர். அது சிவப்பு நிறமுடையது. ஆதித்தமிழர் குன்று என்பதை குந்து என்றும், குன்னு என்றும் குறித்தனரென்பதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன. ஆகவே, செவ்வாய் ‘செங்குந் தர்’ என்று குறிக்கப்படுகிறது. அதுவே செந்தில் ஆண்டவர். சிவன் கைலாச பர்வதத்தில் இருப்பதாகக் கருதுகின்றனர். ஹிமய மலையின் மேல் இருக்கும் ஒரு சிகரமும் கைலாசம் என்று குறிக்கப் படுகிறது. அது சாதாரண ஸ்தலங்களுள் ஒன்று. அங்கு பனியும் குளிருமே இருக்கின்றன. யனுடைய ஆக்ஷி சிம்மராசியில் என்பதை நாம் மேலே த்த அட்டவணையில் பார்க்கிறோம். சிம்மம் கால புருஷனு டைய வலதுமுழங்கை யாகிறதென்பதையும் நாம் அதற்கு முன்பக்கத்தில் தெரிந்துகொண்டோம். கையிலாஸ் என்பது கை + இல் + ஆசு என்பதன் சுருக்கம்; அதாவது, கால புருஷனுடைய கையாகிய இல்லத்தில் உள்ள ஸ்தானம் என்று அர்த்தமாகிறது. அதாவது ஐந்தாவது ராசியாகிய சிம்மராசியே சூரியனுடைய ஆக்ஷிஸ்தானம். அதுவே கைலாசம் என்று கருதப்படுகிறது. அது ஆவணி மாதத்தில் சூரியன் சஞ்சரிக்குமிடம். சுப்ரமணியர் சரவணப்பொய்கையில் வளர்ந்ததாகப் புராணங்கள் சொல்லுகின்றன. ஆவணி மாதத்திற்கு ச்ராவணம் என்று பெயர். சரவணம் என்பதும் ச்ராவணம் என்பதும் ஒன்றே. சூரியன் என்பதைக் குறிக்க உபயோகிக்கும் எழுத்து ‘சூ’. “சூர்யாயதன் னமமா, ஓம் சூஸ் சுவாஹா” என்பது ஹோமமந்த்ரம். சூத்தரர் என்ற சொல்லின் அர்த்தம் இன்னதென்பதை அறிய மாட்டாமல் பெரிய பெரிய மேதாவிகளெல்லாம் மண்டையை உடைத்துக் கொள்ளுகிறார்கள்; ‘சூத்தரர்’ என்றால் ‘சூரியனை’யே முடிவான தெய்வமாகக் கருதும் வகுப்பார் என்பது பொருள். சூர்ய நமஸ்காரம் செய்வதென்பது வைஷ்ணவர்களுக்குள் கிடையாது. ஸ்மார்த்தர்களே அதை மும்முரமாக அநுஷ்டிக்கிறார்கள். கிறிஸ்தவர்கள் கூட ‘சூசேய்’ என்று பெயர் வைத்துக் கொள்ளுகிறார்கள். அதன் கருத்து சூரியனுடைய குமாரன் என்பது. இப் போது நாம், ‘சீவாய்’ அல்லது சிவா என்பதன் கருத்தை ஒருவிதமாகத் தெரிந்துகொண்டோம். அதாவது, பரம் பொருளை அடையும் துவாரம் அக்னிக் கோள்களாகிய செவ் வாயும் சூரியனுமே என்பது சைவர்களுடைய அபிப்பிராயம் என்று நாம் தெரிந்து கொள்ளுகிறோம். வைஷ்ணவர்களு டைய கொள்கை இதுவல்ல. கால புருஷனுடைய மூளையா கிய பாகம் வியாழ பகவானாதலால், அது பிரகஸ்பதி என்று குறிக்கப்படுகிறது. பிரகஸ்பதி என்றால், மகா புத்திமான் என்றார்த்தம். இந்தப் பிரபஞ்சமாகிய பெரிய யந்திரத்தின் திறவுகோலாகிய விவேகம் பிரகஸ்பதியி னிடத்திலேயே அடங்கி யிருக்கிறதென்றும், ஆகையால் அதுதான் சீவாய் அல்லது பரம்பொருளை யடையும் துவாரம் என்றும் வைஷ் ணவர்கள் கருதி, அதற்கு வாசுதேவன் என்று பெயர்கொடு த்திருக்கிறார்கள். வாசுதேவன் என்பது வா + ஆசு + தேவன் என்று பிரிகிறது. அதாவது, வாக்கு ஸ்தானத்தின் தெய்வம். கடவுளின் வாக்கு ஏற்படும் ஸ்தானத் தின் அதிபதி. பிரகஸ்பதியை வாக்பதி, வாசஸ்பதி, திரு நாவிற்கரசு என்று பலவாறாய்க் குறிக்கின்றனர். வான சாஸ்திரங்களில் பிரகஸ்பதி மாத்திரம் கடவுள் என்ற பெயரால் குறிக்கப்பட்டிருக்கிறது. கடவுள் என்றால் வாக்கிற்கும், மனதிற்கும் எட்டாமல் நிற்பது என்று சாதாரணமாக அர்த்தம் செய்கிறார்கள். அதைக் ‘கடல் + உள்’ அல்லது கடை+உள் என்று பிரித்து அர்த்தம் கொள்ளவேண்டும். வியாழ பகவானுடைய ஆக்ஷி ஸ்தானம் கடைசியான பன்னிரண்டாவது ராசியாகிய மீனம். அந்த ராசி முழு தும் ஜலம் நிறைந்த கடல்பாகம் என்பது ஜோதிட சாஸ்தி ரத் துணிபு. அப்படி ஜலம் கடல்போல் நிறைந்துள்ள ராசி யான மீன ராசியில் இருப்பவரே கடவுள் என்று குறிக்கப் பட்டிருக்கிறார். இந்த ஆகாய வட்டம் 12-வது ராசியோடு முடிந்து போகிறது. பிறகு முதலாவது ராசி ஆரம்பமாகி றது. ஆகவே இந்தப் பன்னிரண்டு ராசிகளுக்கும் அப்பால் இருக்கும் அவ்வியக்த தெய்வமாகிய அபரத்தை யடைவ தற்கு வழி 12-வது ராசிக்குள்ளேதான் அடங்கி இருக்கிற தென்றும், அங்கு ஆக்ஷி புரிவது பிரகஸ்பதி யாதலாலும், அது கால புருஷனுடைய மூளையாகிய ஞானபாக மாதலா லும், அதுவே மோக்ஷத்துவாரம் என்பது வைஷ்ணவர்களுடைய கொள்கை. ஆகையால், அதை வாசுதேவன் என்று குறிக்கிறார்கள். அதுவே தேவர்களுக் கெல்லாம் ராஜனான இந்திரன். அதை தேவராஜன் என்றும், தேவனாதன் என் றும், லோக குரு வென்றும், அயனென்றும், ஐயன் என் றும் குறிக்கிறார்கள். இந்திரன் கிழக்கு திக்கின் அதிபதி யல்லவா. வைஷ்ணவர் என்பதை வைணவர் என்று குறிப்பதும் உண்டு. வைண தேவன் என்பது கருடனைக் குறிக்கும் சொல். கருடன் பக்ஷி ராஜன் என்று குறிக்கப்படு கிறது. ஏழு கிரகங்களையும் ஐந்து பக்ஷிகளாகப் பிரித்து, பக்ஷி சாஸ்திரம் என்று ஒரு சாஸ்திரம் தயாரித்திருக்கிறார். கள். பக்ஷிகளுக்கெல்லாம் ராஜன் கருடனாதலால், தேவேந் திரனாகிய வியாழன் பக்ஷிராஜன் என்றும் கருடன் என்றும் குறிக்கப்படுகிறது. கருடதிக்கு என்பது கிழக்கு திக்கு. மகாவிஷ்ணு கருடன்மேல் ஏறிவருகிறார் என்றால், பரமாத்மாவாகிய நாராயணன் வியாழபகவான் மீது ஆவிர் பவித்து, அவர்மூலமாய் சகல காரியங்களையும் நடத்துகிறார் என்று அர்த்தம் செய்து கொள்ள வேண்டும். நம்நாட்டிலுள்ள சகலமான தேவாலயங்களிலும் பங்குனி மாதத்தில் பிரம் மோத்சவம் நடத்தப்படுவது நமக்குத் தெரியும். அப்போது கருட சேவை மிக விமரிசையாக நடத்தப்படுகிறது. ஏனெ னில், அந்த ராசி வியாழ பகவானுடைய ஆக்ஷிஸ்தானமாதலா லும், அவரே பக்ஷி ராஜனான கருடபகவானாதலாலும், கருட சேவை மிக விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. சைவர் கள், ஸ்மார்த்தர்கள் ஆகியோருடைய கோவில்களில் திரு விழா நடக்கும்போது ரிஷபவாகன உத்சவமே மிக விமரி சையாக நடத்தப்படுகிறது. ஈசுவரன் வெள்ளியங்கிரியிலி ருந்து ரிஷபவாகனத்தில் ஏறி வருகிறார் என்றும் சிலர் சொல்வதுண்டு. ஈசுவரன் என்பது சுக்கிரனையே குறிப்பதாக நான் முன்னர் குறிப்பிட்டேன். அது வெள்ளிக்கிழமை யின் தெய்வம். அந்த கிரத்தின் நிறமும் வெண்மையே. வைகாசி மாதத்தின் ராசியான ரிஷபராசி சுக்கிரனுடைய ஆக்ஷி ஸ்தானங்களில் ஒன்றாதலால், ரிஷபவாகன சேவை அந்த ஆக்ஷியைக் குறிக்கிறது. இதில், ராசியே வாகனமாக வும், கிரகம் தெய்வமாகவும் கருதப்படுகின்றன. கருட சேவையில், வியாழனாகிய கிரகம் கருடவாகனமாகவும், முடிவான பரம்பொருள் அதற்குமேல் இருக்கும் தெய்வமாக வும் கருதப்படுகின்றன வென்பது பிரத்தியக்ஷமாகத் தெரிகிறது. வியாழனை இந்தப் பிரபஞ்சத்திற்கு முடிவான ஞான ஸ்தானமாகக் கருதுவதற்கு இன்னொரு முக்கியமான காரணமு மிருக்கிறது. இந்தப் பிரபஞ்சம் எப்படித் தோன்றி,எப்படி மறைகிறது என்பது வேதாகமங்களில் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறது. அதை நான் இரண் டொரு வாக்கியங்களில் உங்களுக்குத் தெரிவிக்கிறேன். முதலில் ‘வாம்’ என்ற நிவர்த்தி பீஜத்திலிருந்து, அமிர்த் மயமான சமுத்திரமும், அதில் தாமரைமலரும், பிரம்மாவும் தோன்றுவதாகவும், பிரம்மாவில் இந்தப் பிரபஞ்சத்தின் ஜீவன் இருப்பதாகவும் நாம் பாவிக்க வேண்டும். ‘பீம்’ (Bheem) என்னும் பிரம்ம ஜீவனிலிருந்து புத்தியும், அதி லிருந்து ‘வீம்’ என்னும் அகங்காரமும், அதிலிருந்து மனஸும் தோன்றுகின்றன. மனஸிலிருந்து ஆகாயவெளி தோன்றுகிறது. ஆகாய வெளிக்கு சப்தம், காது, நாக்கு ஆகிய இந்திரியங்கள் இருக்கின்றன. ஆகாயத்திலிருந்து வாயு உற்பத்தியாகிறது. அதில் சப்தம், ஸ்பரிசம், தோல், கைகள் முதலிய இந்திரியங்கள் இருக்கின்றன. வாயுவி லிருந்து அக்னி உற்பத்தியாகிறது. அதில் சப்தம், ஸ்பரி சம், ரூபம், கண்கள், கால்கள் முதலிய இந்திரியங்கள் இருக்கின்றன. அக்னியிலிருந்து ஜலம் உற்பத்தியாகிறது. அதில் சப்தம், ஸ்பரிசம், ரூபம், ரஸம், நாக்கு, பாயு முத லிய இந்திரியங்கள் இருக்கின்றன. ஜலத்திலிருந்து பூமி உண்டாகிறது. அதில் சப்தம், ஸ்பரிசம், ரூபம், ரஸம், கந்தம், கிராணம், உபஸ்தம் முதலிய இந்திரியங்கள் இருக்கின்றன. இவ்விதம் பிரம்மாவிலிருந்து பிரபஞ்சம் உண் டாவதாக நம் முன்னோர் வகுத்திருக்கின்றனர். அவை திரும்பி ஒடுங்கும்போதும் இதே முறைமையில் அடியி லிருந்து மேலே காரியம் நடைபெறுகிறது. பூமி தண்ணீ ரில் ஒடுங்குகிறது; தண்ணீர் அக்னியில் ஒடுங்குகிறது; அக்னி வாயுவில் ஒடுங்குகிறது; வாயு ஆகாயத்தில் ஒடுங்கிப் போகிறது. அந்த ஆகாயமே பரவெளி எனப்படுகிறது. அதற்கு சப்தம், காது, நாக்கு ஆகியமூன்று இந்திரியங்கள் மாத்திரம் இருக்கின்றன. நாம் மேலே கொடுத்துள்ள அட்டவணையில், பஞ்ச பூதங்களுக்கும் இன் னின்ன கிரகங்கள் அதிகாரிகள் என்று சொல்லி இருக் கிறோம். பூமி தண்ணீரில் ஒடுங்கும்போது, பூமியின் அதி பதியான புதனும் போய்விடுகிறது. தண்ணீர் அக்னியில் ஒடுங்கும்போது தண்ணீரின் அதிபதிகளான சுக்கிரனும், சந்திரனும் போய்விடுகின்றன. அக்னி, வாயுவில் ஒடுங்கும் போது, அக்னியின் அதிபதிகளான செவ்வாயும், சூரியனும் போய் விடுகின்றனர். அதாவது, சிவனும், எமனும் (சுப்ர மணியரும்) மறைந்து போகிறார்கள். வாயு ஆகாயத்தில் ஒடுங்கும்போது, வாயுவின் அதிபதியான சனியும் போய் விடுகிறது.எல்லாம் ஆகாயமாகிய பரவெளியில் மறைந்து போகிறது. ஆனால் ஆகாயத்தின் அதிபதியான வியாழ பக் வான் மிகுந்து நிற்கிறார். அவர் மூலமாகவே நாம் திருப் பாற்கடலிலுள்ள ப்ரம்மத்தை அடையவேண்டியதாகிறது. ஆகவே, அவர் வாசுதேவன் என்று குறிக்கப்படுகிறார். அதா வது, தெய்வத்தை அடையும் வாயிற்படி வியாழபகவானே. அதுவே பரம்பொருளின் வாகனமாகிய கருடன், லோக குருவாகிய பிரகஸ்பதி. கடைஉள் ஆகிய ஐயன். இனி நாராயணன் என்ற சொல்லின் அர்த்தத்தைக் கவனிப்போம். சாதாரணமாக பண்டிதர்கள் அதன் கருத்துரையைச் சொல்வது வழக்கம். நாரன்+அயனன் 

என்று அதைப்பிரித்து கடலில் இருப்பவர் என்று அர்த்தம் சொல்லுவார்கள். அதாவது,பங்குனி மாதமாகிய மீனராசி க்கு அப்பால் இருப்பவர் என்ற கருத்தை வெளியிடுவார்கள். அதுவும் பொருத்தமானதே. நாராயணன் என்ற பெய ரின் பதங்களைப் பிரித்து நாம் அர்த்தம் பார்த்தால், அது இன்னம் நன்கு தெளிவுபடும். நா+ராயன்+அணன் என்று அதைப் பிரிக்க வேண்டும். நா + ராயன் என்பது நாக்கிற்கு ராஜனாகிய வியாழனைக் குறிக்கிறது. அணன் என் பது அணிமையிலிருப்பவன் என்ற பொருளைத் தருகிறது. அணிமை என்றால் சமீபம். எனவே,நா ராய அணன் என்பது வியாழ பகவானுக்கு சமீபத்திலிருப்பவன் என்ற பொருளைத் தருகிறது. ஆகாய வெளிக்கு காதும், நாக்கும் இருப்பதாகச் சொன்னோ மல்லவா. அந்த நாக்கு பரம் பொருளின் நாக்காகிறது. அது கடைசிக் கிரகமான வியாழ பகவான் மூலமாய் வருகிறதாகையால், அவரை வாக் பதி, அல்லது, நாராயன் என்று குறிக்கின்றனர். கடைசி முடிவான பரவெளிக்கு அப்பால் அதற்கருகில் இருப்பவன் என்பதே நா ராய அணன் என்பதன் கருத்து. இந்தக் கருத்தே வேதத்தின் கருத்து; இது சாஸ்திரோக்தமாக வும், பகுத்தறிவிற்கு ஒத்ததாகவும் இருக்கிற தென்பதை நான் சொல்ல வேண்டியதில்லை. சைவர்கள் திருநாவிற் கரசு என்று பெயர் வைத்துக் கொள்ளுகிறார்களானாலும், அதுவும் சிவனுக்கே உரிய பெயரென்கிறார்கள். திருநா என்றால் பரம்பொருளின் நாக்கு, அரசு அல்லது ராயன் என்றால் அந்த நாக்கு ஸ்தானத்திற்கு அதிபதி, திருநா விற்கரசு என்பதும் நாராயன் என்பதும் ஒரே கருத்துடைய சொற்கள்; இரண்டும் வியாழபகவானைக் குறிக்கின்றன. நாராயன் என்பதோடு அணன் (அணிமையிலிருப்பவன்) என்பதைச் சேர்த்தால், அது பரம்பொருளை மிகத் தெளி வாகக் குறிக்கிறது. பரவெளியில் பரம்பொருளின் வாக்கு இருப்பது பிரத்தியக்ஷமாகத் தெரிகிறதாகையாலும், அதன் அதிபதி வியாழனாதலாலும் அந்த வியாழனுக்குள் தான் பரம்பொருள் சான்னித்தியமா யிருக்கிறாரென்பது ஆக்ஷேபனைக் கிடமில்லாத கொள்கை யல்லவா. இதே பொருளைத் தாயுமானவர் ஒரு பாடலில் எப்படி அமைத்தி ருக்கிறாரென்பதைப் பாருங்கள் : 

நாதவடிவாகிய மகாமந்த்ர ரூபியே 
நாதாந்த வெட்டவெளியே 
நற்சமயமான பயிர் தழைய வருமேகமே 
ஞானவானந்த மயிலே 
வாதமிகும் பரசமயம் யாவுக்கும் உணர்வரிய
மகிமைபெறு பெரிய பொருளே.
வரைராஜனுக் கிருகண் மணியாயுதித்த மலை 
வளர் காதலிப் பெண் உமையே. 

இந்தப் பாடல் உமாதேவியைக் குறித்துப் பாடப்பட்டது. சப்தம், ஞானம், ஆநந்தம் மூன்றும் நிறைந்த வெட்ட வெளியே உமாதேவி என்று தாயுமானவர் குறிக்கிறார். இந்த உமை ஹிமவானுடைய புத்திரியாம்; சிவனுடைய மனைவியாம். இதிலடங்கிய கருத்துக்கள் வானசாஸ்திர விதிகளோடு பொருத்தத் தக்கனவாகத் தோன்றவில்லை. நாம் மேலே குறித்தபடி ஆகாயவெளிக்கு, சப்தம், காது, நாக்கு ஆகிய மூன்று இந்திரியங்களும் உண்டு. அந்த ஆகாயவெளிக்கு அதிபதி வியாழபகவான்; அவர் காலபுருஷ னுடைய மூளையாதலால், ஞானம் அவர் மூலமாகவே வெளிப்படுகிறது. அவருக்கு அருகிலிருப்பவரே பரமாத்மா வாகிய நாராயணன். நான் மேலே காட்டிய அட்டவணையில் வியாழ பகவானைக் குறிக்க ஏற்பட்டுள்ள குறி நீள் வட்டம். அதுவே வடகலை வைஷ்ணவர்களுடைய நாமத் தின் குறி. நாமம் என்ற சொல்லைப் பிரித்தால் நா+ ஆமம் என்று பிரிகிறது. பரமாத்மாவினுடைய நாக்கின் ஆம ரூபம் என்ற பொருளை அது தருகிறது. ஆமம் என் றால் பசுமையானது அல்லது பளிச்சென்று தெரிவது என் பது பொருள். நா+ஆமம் என்றால், பரம்பொருளின் அவ்வியக்தமான நாக்கை வியக்த ரூபத்தில் காட்டுவது என் பது பொருள். வடகலை நாமத்தின் கீழ்ப்பாகத்தை நாக் கின் நுனியாக பாவித்து, முழு வடிவத்தையும் பார்த்தால், அது ஒரு நாக்குபோலவே தோன்றும். உள் நாக்கு முத லியவை மேல்பாகத்தில் தொக்கி இருப்பதாக எண்ணிக் கொள்ளவேண்டும். நாமத்தின் நடுவிலிருக்கும் ஸ்ரீசூர்ணம் மஞ்சளாகவே இருக்க வேண்டுமென்று கருதி வைதிக வைஷ்ணவர்கள் அதையே இடுவது வழக்கம். வியாழபக் வானுடைய நிறம் மஞ்சளானதால், அதைச் சரியானபடி குறிப்பதற்கே மஞ்சளை இடுவது. அது அதிக சிவப்பாக இருந்தால், செவ்வாயைக் காட்டுமாதலால், அதை வைதி கர்கள் ஆக்ஷேபிப்பது வழக்கம். தென்கலை வைஷ்ணவர் களுடைய நாமம் அரைச் சதுர வட்டமாதலால், அது சனி பகவானுடைய குறி. சனிக்கு மகரமும் கும்பமும் ஆக்ஷி ஸ்தானங்கள். அவைகள் காலபுருஷனுடைய முழங்கால்களும் கணைக்கால்களு மாகின்றன. அவர்கள் காலபுருஷனாகிய பிரம்மாவின் கால்களை நெற்றியில் தரிக் கின்றனர். பிரம்மாவின் அடிப் பாதம் மீனராசி. அதன் ஆக்ஷி வியாழ பகவானுடையது. வடகலை நாமம் காலபுருஷ னாகிய பிரம்மாவின் அடிப்பாதங்க ளாகின்றன. இவ்வளவே நான் இப்போது வைஷ்ணவர்களைப் பற்றி உங்களுக்குச்
சொல்ல விரும்புவது. நான் பேசுவதை நிறுத்து முன் இன்னம் ஒரே ஒரு விஷயத்தைக் குறிக்க விரும்புகிறேன். நம் ஆதிசங்கரருடைய காஞ்சி காமகோடி பீடத்திற்கு இந் திர சரஸ்வதி பீடமென்றும் பெயர். இந்திர சரஸ்வதி யென்பது சுக்கிரனாகிய அசுர குரு வென்பதை மேலே காட் டிய அட்டவணையில் நீங்கள் கண்டு கொள்ளலாம். 

அது கால புருஷனுடைய இந்திரிய ஸ்தானம். அந்த தெய்வ த்தை வைத்துப் பூஜிப்பது இம்மையின் சுக போகங்களைக் கருதியே யன்றி வேறல்ல. அதன் ஆக்ஷி ஸ்தானங்கள் ரிஷபமும், துலாமும். ரிஷபவாகனத் திருவிழா மிக விம ரிசையாகக் கொண்டாடப்படுகிற தென்பதை நான் முன் னரே தெரிவித்தேன். துலா ராசியாகிய ஐப்பசி மாதத் தில் கந்த சஷ்டி உத்சவம் நடக்கிறது. கந்தன் என்றால் இந்திரியத்தின் தெய்வம் என்பது பொருள். கந்தனை சுக் கிரமணியன் என்று பாமர ஜனங்கள் குறிக்கிறார்கள். ஐப் பசி மாதம் மழை உண்டாகும் மாதம். சுக்கிரனுக்கு மழை க்கோள் என்பது ஒரு பெயர். அதுவும் சந்திரனும் தண் ணீருக்கு அதிபதிகள். துலா ராசி கால புருஷனுடைய வலது முன்கை யாகிறது. அதாவது, சகல போகங்களையும் கொடுக்கும் கை. முகம்மத்தியர்கள் தங்கள் தெய்வத்தை வெள்ளிக்கிழமை யன்று மிக முக்கியமாகத் தொழுகிறார் கள். அல்லாப் பண்டிகையில் வெள்ளியினால் ஆன கையை தெய்வமாக வைக்கிறார்கள். அப்போது ஆலி, தூலா என்ற நாமஸ்மரணைகளையே சொல்லி கோஷிக்கின்றனர். ஆலம் என்றால் தண்ணீர். ஆலி என்றால் தண்ணீர்க் கடவுள். தூலா என்றால் துலா ராசியின் ஆக்ஷிக் கடவுள். இந்த தெய்வம் இன்ன தென்பதை நீங்களே அட்டவணையில் கண்டுகொள்ளுங்கள் ஸ்மார்த்தர்களில் பெரும்பாலோர் சந்திரப் பிறைபோல சந்தனத்தால் நெற்றியில் குறி தரிக்கின் றனர்; சந்திர மௌளீசுவரர் என்பதும் அவர்கள் தெய்வம். அதற்கு மூளிச் சந்திரன் அல்லது பிறைச் சந்திரன் என்ற அர்த்தம் ஏற்படுகிறது. முகம்மதியர்களுடைய அடையா ளமும் பிறைச் சந்திரன். இவைகளின் சம்பந்தா சம்பந் தங்களை நன்றாய் விளக்க இப்போது அவகாசமில்லாமை யால், இவ்வளவோடு நான் நிறுத்துகிறேன்.- என்று கூறி மன்மத பீட மகா யோகீசுவரர் அவ்வளவோடு தமது உபந் நியாஸத்தை நிறுத்தி எல்லோருக்கும் முடிவாக விடை கொடுத்தனுப்பிவைத்தார். 

மறுநாள் விடியற்காலையில் யோகீசுவரர் அந்த ஊரை விட்டுப் புறப்பட்டுப் போகவேண்டுமென்று முடிவு செய்யப் பட்டிருந்த தாகையால், மகா ஜனங்கள் அதைப்பற்றி பெரி தும் எக்கமும் விசனமும் அடைந்து அவ்விடத்தைவிட்டுப் போகவே மனமற்றவர்களாய்த் தயங்கித் தயங்கி இருந்து தவிக்கலாயினர். சிலர் தமது விசனப் பெருக்கை சகிக்க லாற்றாமல் குழந்தைபோல் வாய்விட்டுக் கதறி யழுதனர். பலர் அந்த இரவு முழுதும் தூங்காமல் இருந்து, சாமான் களைக் கட்டும் விஷயத்தில் யோகீசுவரருடைய காரியஸ்தர் களுக்கு உதவி புரிந்தனர். 

ஸ்வாமிகளின் பரிவாரங்களில் ஒரு பாகம் அன்றைய பகலிலேயே அவ்வூரை விட்டுப் புறப்பட்டுப் போய்விட்டன. மறுநாள் விடியற் காலையில் மற்ற பரிவாரங்களோடும் பிருதுக ளோடும் யோகீசுவரரும் பிரயாணமானார். அவர் அமர்ந் திருந்த தந்தப் பல்லக்கை பிராம்மணர்களே சுமந்து, மாறு கால்போட்டு, அப்புறம் இப்புறம் திரும்பி வையாளி நடை நடந்து ஹவோ ஹம்ஹவோ, ஹவோ ஹம்ஹவோ என்று படிப் படியாக ஸ்தாயிகளை உயர்த்தி தாளகதிப்படி ஆநந்த கோஷம் செய்து, யோகீசுவரைப் பல்லக்கோடு தாலாட்டிக் கொண்டே சென்றனர். மேளம் பாண்டு முதலிய வாத் தியங்கள் பெருமுழக்கம் செய்து முண்ணனியில் சென் றன. வைதிகப் பிராம்மணர்கள் பூர்ண கும்பங்களை ஏந்தி ருத்ரம், சமகம் முதலிய மந்திரங்களைச் சொல்லிக்கொண்டு கோஷ்டி கோஷ்டியாகப் பின்னால் வந்தனர். வெள்ளிக் கட்டியம் தாங்கிய கட்டியக்காரர்கள் பல்லக்கின் நான்கு மூலைகளிலும் நடந்து “ஸ்வாமீஜீ, எச்சரிக்கை பராக்” என்று அடிக்கடி ஜனங்களை எச்சரிப்பதும், இடையிடை யில், யோகீசுவரரின் புகழைப்பற்றிய ஸ்லோகங்களைச் சொல்வதுமாய்ப் பாராக் கொடுத்துச் சென்றனர். திருச் சின்னங்கள் புரூம் புரூம் புரூம் என்று கூவி ஒலித்தன. 

பெரிய பண்ணை ஐயரவாளும், இன்னம் இதர பிர முகர்களும், பல்லாயிரக் கணக்கான விடுதி பிராம்மணர் களும், நூற்றுக்கணக்கான ஸ்திரீ ஜனங்களும் சூழ்ந்து வந்தனர். இப்படி வழியனுப்ப வந்த மகா ஜனங்கள் சுமார் இரண்டு மயில் தூரம் தொடர்ந்த பின் ரஸ்தாவிலேயே சாஷ்டாங்கமாகக் கீழே விழுந்து யோகீஸ் வரரை நமஸ்கரித்து, அவருடைய கடைசி ஆசீர்வாதத் தைப் பெற்று தயங்கித் தயங்கி நின்று விஷ்ணு புர த்தை நோக்கி நடப்பதும் அடிக்கடி திரும்பித் திரு ம்பிப் பார்ப்பதுமாய் நடந்து சகிக்கவொண்ணாத ஏக்கமும் மனவேதனையும் நிறைந்த மனத்தினராய்ச் சோர்ந்து தளர் ந்து தம் தம் வீடு போய்ச் சேர்ந்தனர். பெரிய பண்ணை ஐயரவாளும், அவருடைய மனையாளான பர்வதலக்ஷ்மி யம்மாளும் அந்தக் கடைசிப் பாட்டோடு “அப்பாடா என்று ஓய்ந்து விழுந்து போயினர். நமது பாரதப்போர் கூட பதினெட்டு தினங்களே நடந்தன. விஷ்ணுபுரத்தில் நடந்த பகாசுர போஜனப் போர் சுமார் இரண்டு மாத காலம் தொடர்ச்சியாய் நடக்கவே, ஒவ்வொரு வேளையிலும் பல்லாயிரக் கணக்கான ஜனங்களுக்குத் தவையான போஜன பதார்த்தங்களை நிமிஷக் கணக்கின்படி தருவித்து பங்கீடு செய்ததும், இராப்பகல் ஓயாமல் நடந்துகொண்டே யிருந்த யோகீஸ்வரருடைய பூஜை முதலிய சாங்கியங்களில் ஆசாரசீலமாயிருந்து கலந்து கொண்டதும், கையிலிருந்த பல்லாயிரக் கணக்கான பணத்தை எடுத்தெடுத்துச் செல விட்ட பின் பலரிடம் பெரும் பெரும் தொகைகளைக் கைமாற்று வாங்கப் பாடு பட்டதும் பெரிய பண்ணை ஐயரவாளுக்கும் பர்வத லக்ஷ்மி அம்மாளுக்கும் மலை போன்ற பிரயாசையாய் முடியவே, அவர்கள் உள்ளுக்குள் நரகவேதனையை அநுபவித்த படியே இருந்தனரானாலும், தங்கள் குரு பக்திப் பெருக்கில் எதையும் பொருட் படுத் தாமல், சிரித்த முகம் மாறாதபடியே கடைசிவரையில் இருந்து, சகலமான காரியங்களையும் அபாரமான பொறுமை யோடு நிர்வகித்து மலைபோலிருந்த அந்தப் பெரிய தேரை இழுத்து நிலையில் சேர்த்து விட்டுத் திரும்பி வந்து சேர்ந்தனர். யோகீசுவரர் போனதில், மூச்சுவிடுவதற் கும், ஓய்ந்து தலை சாய்த்துப் படுப்பதற்கும் தங்களுக்கு அவ காசம் கிடைத்ததை ஒரு விதத்தில் அவர்கள் எவருக்கும் கிட்டாத சொர்க்கபோகமாய்க் கருதினரானாலும், யோகீசுவ ருடைய தரிசனம் பூஜை முதலியவற்றின் ஆநந்தமும், புள காங்கித பரவச இன்பமும் தமக்கு நின்றுபோனதைப் பற் றிய அபாரமான ஏக்கமும் மனவேதனையும் ஒரு புறத்தில் வதைத்துக்கொண்டே இருந்தன. 

பண்ணை ஐயரவாளும், அவரது பத்நியும் அப்போதைக் கப்போது ஏகாந்தமாயிருந்து ஒருவரோ டொருவர் வேடிக்கையாக சம்பாஷித்து இன்புறுவது வழக்கம். யோகீசுவரர் வந்து முகாம் செய்த இரண்டு மாத காலத்தில் அவர்கள் ஒருவரை யொருவர் அடிக்கடி பார்ப்பதற்கோ, ஏகாந்தமா யிருந்து குதூகலமாய்ப் பேசுவதற்கோ சந்தர்ப்பம் வாய்க் காமல் போய்விட்டது. 

கிருஷ்ணமூர்த்தி ஐயரும், ஸ்வர்ணாம்பாளும், குழந்தை சுந்தரியோடு அந்த இரண்டு மாத காலமும் பண்ணையாருடைய மாளிகையிலேயே இருந்தனர். அவர்கள் முதன் முதலில் அந்த ஊருக்கு வந்த காலத்தில் குடும்ப சம்பங் தமான சில அபாயங்களை விலக்கும் பொருட்டு நெடுந்தூரத் திலிருந்து குதிரை வண்டியின் இரு புறங்களிலும் திரை கள் போட்டுத் தங்களை மறைத்துக் கொண்டு திருவை யாற்றை நோக்கிச் சென்றதையும், அங்கிருந்த தங்கள் பந்து ஒருவரின் வீட்டில் மறைந்து கொண்டிருக்க எண்ணியதை யும் கேட்ட பர்வத லக்ஷ்மி அம்மாள், தங்கள் வீட்டிலேயே அவர்கள் இருக்கும்படி செய்தாளென்று நாம் முன்னரே தெரிவித்தோம். 

அவர்களுக்கு எவ்விதமான அபாயங்கள் நேளிட்டன என் பதையும், அவர்களுடைய குடும்பவரலாற்றையும் நாம் இங்கு சுருக்கமாகத் தெரிவிப்ப தவசிய மாகிறது. சேலம் ஜில் லாவைச் சேர்ந்த நாமக்கல்லிற் கருகிலுள்ள ஒரு ஜெமீன் கிராமத்தின் சொந்தக்காரனான ஐயர் ஒருவர் தம் புத்தி ரரைப் படிப்பின் பொருட்டு சென்னையில் விட்டிருந்தார். அந்தப் புத்திரர் பி. ஏ. பி. எல். முதலிய பரீட்சைகளில் தேறி, வக்கில் உத்தியோகத்தில் அமர்ந்து சென்னையிலேயே இருந்து வந்தார். பல வருஷகாலம் வரையில் அவருக்கு வக்கீல் தொழிலில் அதிக வருமானம் கிடைக்க வில்லையாதலால், அவர் மாதா மாதம் தமது சொந்த ஊரிலிருந்து பெரும் பெரும் தொகைகளை வரவழைத்து வைத்துக் கொண்டு தம் கௌரதையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய தாயிற்று. அவர் புரசைப்பாக்கத்தில் ஒரு பெரிய பங்களாவை வாடகைக்கு எடுத்துக் கொண்டு, ஏராளமான சிப்பந்திகளை அமர்த்தி, மோட்டார் வண்டி முதலிய பெரிய மனித அங்கங்களை வைத்துக்கொண்டு, தாம் பெரிய ஜெமீன் தார் என்பதைக் காட்டிக்கொண்டு, அந்த அந்தஸ்திற்குத் தக்கபடி ஆடம்பரமாகச் செலவுகள் செய்து கொண்டித்தார். அவருடைய தந்தை அதுவரையில் சேர்த்துப் பல களில் வட்டிக்குக் கொடுத்திருந்த தொகைகளை பெல்லாம் வாங்கி வாங்கி அனுப்பி ஓய்ந்து போய், அதே ஏக்கமாயிருந்து நோயில் பட்டு இறந்துபோனார். 

புத்திரராகிய வக்கீல் ஜெமீன் கிராமத்தின் ஈ மேல் பல இடங்களில் கடன்கள் வாங்கித் தமது பழைய போக்கிலேயே வியவகாரங்களை நடத்தி வந்தார். அவருடைய புத்திரரே நம் கிருஷ்ணமூர்த்தி ஐபர். ஜெமீன் கிராமத்தின்மேல் இனி கடன் கிடைக்காதென்ற நிச்சயம் ஏற்படவே, வக்கீல் தாம் அதற்குமேல் பணத்திற்கு என்ன செய்வது என்பதைப் பற்றி இராப் பகல் சிந்தனையிலாழ்ந் திருந்து கவலையுற்று கடைசியாக ஒரு யுக்தி செய்தார். 

சென்னை திருவல்லிக்கேணியில் பிரபலமான ஒரு பாங்கியின் சொந்தக்காரர் எஸ்.ஆர். ஐயர் என்ற பெயருடை வர் ஒருவர் இருந்தார். அவர் நகைகளின்மேல் மாத்திரம் கடன் கொடுத்து வந்தார். அவருடைய கைவசத்தில் சுமார் பத்து லக்ஷம் ரூபாய் பெறத்தக்க நகைகளும் பண மும் இருந்தன. அவரும் பங்களா, மோட்டார் வண்டி முதலிய பெரிய மனித அங்கங்களோடு மிக கம்பீரமான வாழ்க்கை நடத்தி வந்தார். அவருடைய பூர்விக ஊர் எது என்பதையோ, அவருக்கு அவ்வளவு அபாரமான சொத்து க்கள் எங்கிருந்து எப்போது கிடைத்தன வென்பதையோ அறிந்தவர் எ எவருமில்லை. அவருடைய வயது சுமார் ஐம் பதிருக்கலாம். அவர் மிக ஆச்சரியமான சாமர்த்தியமும் புத்திசாலித் தனமும் வாய்ந்தவர். இதர மனிதர்களிடம் அவர்களுடைய தராதரம் நோக்கம் முதலியவற்றின்படி நடந்து, தமக்கு எப்போதும் லாபமே ஏற்படும் படியான வகையில் வியவகாரங்களை நடத்துவதில் அவரை நாம் காடகதமனகரென்றே மதிக்க வேண்டும். தமக்கு ஒருவரிடம் ஒருகாரியம் ஆகவேண்டியதாயிருந்தால், அவர் அந்த மனிதரிடம் தங்கக் கம்பி போல நடந்து, தேன் சொட்டச் சொட்டப் பேசி, அவருக்கு ஒரே நிமிஷத்தில் யட்டுக் குல்லா போட்டு விடுவார்; அவரிடம் எவரேனும் ஓர் அநுகூலத்தை எதிர்பார்த்து வந்தால், அவரைப் பல வகையில் புரளி செய்து, இடுப்பை முறித்து மட்டந்தட்டி அவர் அவமான மடைந்து ஓடிப் போம்படி செய்வார். தாம் அதிகாரம் செய்யத் தக்க இடங்களில், அவரை நாம் கையில் பிடிக்க முடியாதபடி ஒரே துள்ளலாய்த் துள்ளிக் குதித்து ஆகாயம் கூரையில் பறப்பார்; அடங்கிப் போக வேண்டிய சந்தர்ப்பங்களில், பெட்டிப் பாம்பாய் நடந்து கொள்வார். 

அவருக்கு தேவியும், பழனியாண்டவரும் பிரத்தியக்ஷ தெய்வங்கள். அவர் தம்முடைய பங்களாவில் ஒரு பெரிய ஹாலைப் பூஜைமண்டபமாகவே நிரந்தரமாய்ச் செய்து அதில் தேவி, பழனியாண்டவர் ஆகிய தெய்வங்களின் விக்கிரகங்க ளைப் பிரதிஷ்டை செய்திருந்தார். அவைகளைத் தவிர எங்கும் சுவாமிகளின் படங்களையே நிரப்பி வைத்து, அந்த ஹாலை ஓர் அரசனுடைய கொலுமண்டபம்போல் அற்புத மாக அலங்கரித்திருந்தார். விக்கிரகங்களுக்கும் படங்களு க்கும் அவர் அணிவித் திருந்த ஆபரணங்களின் கிரயமே சுமார் ஐம்பதாயிரம் ரூபாய் ஆகலாமென்றால், மற்ற அலங் காரச் சிறப்புகளை வாசகர்களே சுலபத்தில் யூகித்துக் கொள்ளலாம். 

அந்த ஹாலிலிருந்த விக்கிரகங்களுக்கு இரண்டு வேளைகளிலும் அபிஷேகம், பூஜை முதலியவைகளை நடத்தி வைக்க ஒரு சாஸ்திரியார் பிரத்தியேகமாக நியமிக்கப் பட்டிருந்தார். அந்த சாஸ்திரியாருடைய குடும்பத் தினர் வசிப்பதற்கு எஸ்.ஆர். ஐயர் தம் பங்களாவின் ஒருபக்கத்தில் ஒரு சிறிய வீடு கட்டிக்கொடுத்திருந்ததன்றி சாஸ்திரியாருக்கு இரண்டு வேளைகளிலும் இலவச போஜ மும் மாதச் சம்பளம் 20 ரூபாயும் அளித்து வந்தார். எஸ். ஆர். ஐயர் ஒவ்வொரு நாளும் இரவு ஒருமணி, இரண்டு மணி வரையில் கண் விழித்திருந்து சீமை மதுக் களை ஏராளமாகப் பருகிப் பல விதமான லீலா விநோதங் களில் ஈடுபட்டிருந்து காலை சரியாகப் பத்து மணிக்கு எழு ந்து வருவார். வந்தவுடன் ஸ்நானம் செய்து மடி வஸ்திரம் தரித்து, நெற்றியில் சந்தனம், குங்குமம், சாந்து முதலியவற் றைப் பிரமாதமாக அணிந்து கொண்டு, பூஜை மண்டபத் திற்குட்போய் மங்களாசனம் செய்து விட்டுத் தம் போஜன காரியத்தை முடித்துக் கொண்டு பாங்கிக்குப் போய் விடு வார். பகல் முழுதும் அவர் பரம வைதிக சிகாமணியாய் விளங்குவார்; அவருடைய நெற்றியில் பெரிய குங்குமப் பொட்டு இல்லாத சந்தர்ப்பமே ஏற்பட்டதில்லை. இரவில் மிக ரகஸ்யமாய் நடந்த அவருடைய திருவிளையாடல்களை அவருக்கு அந்தரங்கமாயிருந்த சிலரே அறிந்திருந்தனராகை யால் மற்ற பொதுஜனங்கள் அவரை ஒரு யோகீசுவரர் என்றே மதித்து வாய் ஓயாமல் கொண்டாடியபடி இருந்தனர். 

மடாதிபதிகள் முதலிய எதிகள் எவரேனும் சென் னைக்கு விஜயம்செய்தால், நம் எஸ்.ஆர்.ஐயரே முன்னின்று ஏராளமாகப் பணத்தைச் செலவிட்டு அவர்களைத் தம் பங்களாவிற் கழைத்துப் போய், பாத பூஜை முதலியவை நடத்தி உபசரித்து அனுப்பி வைப்பார். அவர்கள் இவ ருக்கு குருபக்த சிகாமணி, வைதிக தர்ம பரிபாலன கேசரி முதலிய ஆடம்பரமான பட்டங்களை வழங்கிவிட்டுப் போவார்கள். 

அத்தகைய அற்புதகுண புருஷருடைய புத்திரியே நம் ஸ்வர்ணாம்பாள். அவளைத் தவிர அவருக்கு வேறு சந்ததி யில்லை. அவள்கூட அவருடைய வளர்ப்புப் பெ ண்ணோ என்றும் சிலர் ஐயமுற்றனர். ஆனாலும் அவரு டைய அபார சம்பத்து முழுதும் அவளுக்கு வந்து சேரு மென்ற பிரஸ்தாபம் பரவி யிருந்ததாகையால், அவளைத் தம் தம் பிள்ளைக்குத் தரவேண்டு மென்று எத்தனையோ பிரபுக்கள் அவருக்குத் தூதனுப்பியபடி இருந்தனர். அவர்களுள் நம் கிருஷ்ணமூர்த்தி ஐயருடைய தந்தையான வக்கீலும் ஒருவர். அவர் பெருத்த கடனாளியாயிருந்தா ரென்றும், தமது ஆடம்பரச் செலவுகளுக்குத் தேவை யான பெருந் தொகையை அடையும் வழியைப் பற்றிச் சிந் தனை செய்து கொண்டிருந்தாரென்றும் நாம் முன்னர் தெரி வித்தோம். அவருடைய பங்களாவும் புரசைப்பாக்கத்தில் அடுத்திருந்தமையால், இவருடைய வெளிப் பகட்டைக் கண்டு அவரும், அவருடைய வெளிப் பகட்டைக் கண்டு இருவரும் பிரமித்து ஒருவரைப் பற்றி மற்றவர் மிகப் பெருமையான அபிப்பிராயங் கொண்டிருந்தனர். 

பெரிய பாங்கரான எஸ்.ஆர். ஐயருடைய ஏக புத்ரியான ஸ்வர்ணாம்பாளைத் தம் புதல்வனுக்கு மனையாளாக்கி விட்டால், தாம் குபேர பட்டணத்தையே குத்தகைக்கு எடுத்து விட்டது போலத் தம் நிலைமை மாறிப் போகும் என்று வக்கீல் தமக்குள் நினைத்துப் பகல் கனவு கண்டு ஆகாயக் கோட்டை கட்டத் தொடங்கினார். பெண்ணைப்பற்றி எஸ். ஆர். ஐயருக்குத் தூதனுப்பிய மற்ற சீமான்களுக்கு இல்லாத ஒரு பிரத்யேகமான அநுகூலம் இந்த வக்கீலுக்கு இருந்தது. அதாவது இருவருடைய’ பங்களாக்களும் அடுத்தடுத் திருந்தமையால், வக்கீல் பெரிய ஜெமீனுக்கு உடையவரென்றும், அபார சம்பத்தில் கிட ந்து புரளுகிறார் என்றும் எஸ்.ஆர். ஐயர் தூரப்பார்வையி லிருந்தே மதிப்பிட்டு விட்டார். அதுவுமன்றி வேண்டு மென்றே வக்கீல் தமது புத்திரனான கிருஷ்ணமூர்த்தியை எதேனும் ஒரு சாக்கின்மேல் அடிக்கடி எஸ். ஆர். ஐயருடைய பங்களாவிற்கனுப்பி, கிருஷ்ணமூர்த்தி அவருடைய திருஷ்டியில் பட்டுக்கொண்டே இருக்கும்படி செய்தாரா தலால், அது அவருடைய மனதில் பெரிய மாறு பாட்டை உண்டாக்கிக் கொண்டே வந்தது. கிருஷ்ண மூர்த்தி ஐயர் தத்ரூபம் மன்மதன் போலவே இரு ந்தாராதலாலும், அவர் அன்னிய மனிதருக்குமுன் புதுச் சோபனப் பெண்போல நாணிக் குனிந்து மான்குட்டி மரு. ளுவது போல பயந்து பயந்து நடந்துகொள்ளும் அடக்க மான சுபாவமுடையவ ராதலாலும், அவருடைய மேனி யழ கையும், முக வசீகரத்தையும், ஒழுக்க விநயத்தையும் கண்டு மயங்காதவர் எவருமில்லை. ஆகவே, எவருக்கும் மசியாத எஸ். ஆர். ஐயர் அவருடைய மோகனாஸ்திர வலையிற் சிக்கி, அவருடைய வசிகரத் தன்மைக்கு அடிமையாய்விட்டார். அதுவுமன்றி பங்களாவிற்குள் ளிருந்த ஸ்வர்ணாம்பாள் கிரு ஷ்ணமூர்த்தி ஐயர் அங்கே வரும்போதெல்லாம் அமிதமான நாணல் கோணல்களை வகித்து ஜன்னல்கள், கதவு மூலைகள், இண்டு இடுக்குகள் முதலிய மறைவிடங்களில் ஒளிந்து நின்று, திருட்டுத்தனமாக அவரைப்பார்ப்பதும், அவர் பார்த் தால் புன்னகையோடு தலையைக் குனியவைத்துக் கொள்வது மாய் நடிக்கத் தொடங்கிய தன்றி, தன் தந்தையோடும் தா யோடும் சம்பாஷித்த காலங்களில், கிருஷ்ணமூர்த்தி வந்த தைப் பற்றிய பிரஸ்தாபத்தைக் கிளப்பி, என்ன காரியத்திற் காக அவர் தமது பங்களாவிற்கு வந்தார் என்பது போன்ற தகவல்களை நிரம்பவும் கனிகரமாக விசாரித்துத் தெரிந்து கொள்வாள். எஸ். ஆர். ஐயர் அந்த இலாகாவில் முதல் வகுப்பில் தேறிய பழம் பெருச்சாளி யாகையால், அவளு டைய மனோவிகாரத்தை அவர் மிக சூட்சுமத்தில் தெரிந்து கொண்டார். 

அவருடைய மனதிலும் அவளைக் கிருஷ்ணமூர்த்தி ஐய ருக்கே வாழ்க்கைப் படுத்திவிடலாம் என்ற எண்ணம் ஏற்கனவே தோன்றி நிலைத்துக் கொண்டே இருந்ததற்கு அநுசரணையாகவே,ஸ்வர்ணாம்பாளும் நடந்துகொண்டதைக் காண, அதுவே முடிவான ஏற்பாடு என்று அவர் தமக்குள் தீர்மானித்துக்கொண்டு, அதைத் தந்திரமாய் அநுகூலப்படு த்திக் கொள்வதற்கான சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தார். தானே முதலில் அந்த விஷயத்தைப் பற்றி வக்கீலிடம் பிர ஸ்தாபிப்பது அநுசிதமானதென்று கருதிய எஸ்.ஆர். ஐயர் வேறொரு மனிதரைத் தூண்டி, அவர் மூலமாக விசை யை முடுக்கிவிட்டார். அந்த மனிதர் தற்செயலாய் வக்கீலைக் கண்டு பேசுகிறவர்போல் நடித்து, எதிரில் உட்கார்ந்தி ருந்த கிருஷ்ணமூர்த்தியைப் பார்த்துவிட்டு அப்போதே நினைத்துக்கொண்டவர் போல் காட்டி, “நம்முடைய பிள்ளை யாண்டானுக்குக் கல்யாணம் பண்ண வயசாய் விட்டதே. ஏன் பேசாமலிருக்கிறீர்கள்? நஙகள் பெண்ணுக்காக கட்டு சாத மூட்டை கட்டிக்கொண்டு அதிக தூரம் போகவேண்டிய அவசியம்கூட இல்லைபோ லிருக்கிறதே. இதோ பக்கத்தில் பெரிய கோடீசுவரருடைய பெண் தங்கப் பதுமைபோலத் தயாராயிருக்கிறதே. இருவருக்கும் இரு வரே ஜோடி சொல்லத் தகுந்தவர்கள். அந்தப் பெண்ணைக் கட்டி விடுகிறதுதானே?” என்றார். 

வக்கீல், “அடேயப்பா, நானெங்கே, அவரெங்கே. அவர் படே படே கைகளாய்ப் பார்க்கக்கூடியவரல்லவா. நம் வரையில் அது எட்டப் போகிறதா” என்றார். 

அந்த மனிதர், “என்ன நீங்கள் இப்படிப் பேசுகிறீர் களே. அவரவருடைய மகிமை அவரவருக்குத் தெரியா தென்று சொல்வது சரியாய்ப் போய்விட்டது. நீங்கள் மனசு வைத்தால் ஆகாத காரியங்கூட உண்டா? யோக்கியதா பக்ஷத்தில் நீங்கள் மாத்திரம் இளப்பமா என்ன ? எந்த விதத்தில் நீங்கள் அவருக்குச் சளைத்தவர்கள். அவ ருக்கு ஐம்பது லக்ஷம் ரூபாய் பெறுமான பாங்கியிருந்தால், உங்களுக்கு அதற்குமேல் அதிகம்பெறத்தக்க ஜெமீன் இரு கிறது. அதோடு எப்போதும் காமதேனுவைப்போல் பணத் தைச் சொரியும் வக்கீல் உத்தியோகமும் இருக்கிறது. அதோடு பெரிய அந்தஸ்து இருக்கிறது. உங்களுக்கு சம் மதமாயிருந்தால், சொல்லுங்கள். நான் போய் அவரிடம் கேட்டுப் பார்க்கிறேன். நீங்கள் அவரிடம் இதைப்பற்றி நேரில் பிரஸ்தாபிக்க லஜ்ஜைப்படலாம். நீங்கள் ஒரு வார்த்தை சொல்லுங்கள். நான் போய் முயற்சி செய்து பார்க்கிறேன் ” என்றார். 

அத்தகைய அநுகூலமான சந்தர்ப்பமும் வாய்க்குமா என்று ஆவலுற்று வாயைப் பிளந்துகொண்டிருந்த வக்கீல் அதற்கு உடனே இணங்குவது அநுசிதமானதென்று கருதி லகுபிகுவாக நடந்து தயங்கித் தயங்கி அதற்குச் சம்மதி யளித்தார். அந்தத் தூதர் உடனே எஸ்.ஆர். ஐயரிடம் வந்து, வக்கீலுக்கும் தமக்கும் நடந்த சம்பாஷணையைத் தெரிவிக்க, அவரும் தந்திரமாகவே நடந்து, தாம் அந்த விஷயத்தில் ஆத்திரப்படாதவர் போல் கடைசிவரையில் நடித்து, அந்த விவாகத்தை நிறைவேற்றிக் கொண்டார். 

விவாக காலத்தில் வக்கீலுக்கு ரொக்கமாகப் பதினா யிரம் ரூபாய் கைமேல் கிடைத்ததாகையால், அதனால் அவ ருடைய படாடோப காலக்ஷேபம் சில மாதகாலம் வரையில் நடந்தேறியது. எஸ்.ஆர்.ஐயருடைய சொத்துகள் முழு மைக்கும் ஸ்வர்ணாம்பாளே உரியவளென்பது பிரத்தியக்ஷ மாய்த் தெரியவே, மாப்பிள்ளை தங்கள் பங்களாவிலேயே இரு ந்துவிட வேண்டுமென்ற பிரஸ்தாபம் நடக்க, கிருஷ்ணமூர் த்தி ஐயர் இரட்டிப்புச் சந்தோஷத்துடன் அங்கேயே இரு ந்து, தம்மனையாளோடு ஆநந்தமாய்க் காலங்கழிக்கத் தொடங்கினார். 

அவ்வாறு அவர் பெருத்த ஐசுவரியத்தில் கிடந்து புரண்ட சமயத்தில், ஏராளமான சொத்துக்களைத் தெரிந் தும் தெரியாமலும் அபகரித்துத் தம் தந்தைக்கு அனுப்பி அவரைக் காப்பாற்றி வந்தார். அப்படிச் சில வருஷகால மிருந்த சந்தர்ப்பத்தில் ஸ்வர்ணாம்பாளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதற்கு அவர்கள் சுந்தரி என்று பெயர் வைத்தனர். சுந்தரியின் அழகு எத்தகையதென் பதை நாம் ஏற்கனவே நன்றாக விளக்கி இருக்கிறோம். அதன் அற்புத தேஜஸைக் காணக்காண, எஸ்.ஆர்.ஐயர், அவருடைய மனைவி, கிருஷ்ணமூர்த்தி ஐயர், ஸ்வர்ணாம் பாள், இன்னும் மற்றுமுள்ள சிப்பந்திகள் முதலிய எல்லோ ரும் பூரித்துப் பொங்கி அதோடு சதாகாலமும் கொஞ்சிக் குலாவியபடி அதை மாறி மாறித் தூக்கிச் சீராட்டிப் பாராட்டி வந்தனர். 

எஸ்.ஆர்.ஐயரின் குபேரச் செல்வத்தினால் அந்தக் குடும்பத்தாருக்கு ஏற்பட்ட அபார சந்தோஷசுகங்களைக் காட்டிலும் சுந்தரியின் விளையாட்டுகளும் மழலை மொழிக ளும் ஆயிரமடங்கு அதிகமான ஆநந்த குதூகலத்தை உண்டாக்கின. எல்லோருக்கும் சுந்தரி விலைமதிப்பற்ற பொக்கிஷம்போல் விளங்கினாள். 

கிருஷ்ணமூர்த்தி ஐயருடைய தாய் தந்தையர் கூட ஒவ்வொரு நாளைக்கு ஒரு தடவையாகிலும் அங்கு வந்து சுந்தரியைத் தூக்கிச் சீராட்டாமல் போகமாட்டார்கள். அவள் பிறந்த பிறகு எஸ். ஆர். ஐயருடைய பாங்கியின் வருமானமும் அபாரமாய்ப் பெருகிப் போனதாகையால், சுந்தரி நிரம்பவும் அதிர்ஷ்டசாலி என்று எல்லோரும் அடிக் கடி வாய்விட்டுக் கூறி அதுபற்றியும் அவளைப் பன்மடங்கு அதிகமாய்ச் சீராட்டிக் கொண்டாடியதன்றி, அடிக்கடி திருஷ்டி தோஷம் கழித்து, அவளுக்காக சாஸ்திரி களைக்கொண்டு வெள்ளி செவ்வாய்க் கிழமைகளில் முறையே அம்பாளுக்கும், பழனியாண்டவருக்கும் சகஸ்ர நாம் அர்ச்சனைகள், விசேஷ ஏறுப்படிகள் முதலியவற்றை விமரிசையாக நடத்தினர். அவ்விதமான சீராட்டுகளும், சடங்குகளும் சுந்தரிக்கு ஐந்து வயதாகும் வரையில் நடந்துவந்தன. எஸ்.ஆர். ஐயருடைய பாங்கி வர்த்தக மும் அமோகமாய்ப் பெருகிப்போயின. அவர் அமிதமான ஆநந்தத்தினால் பூரித்து ஒன்றுக்கு நான்கு பங்காய்ப் பொதிந்து தொந்தி தொப்பைகள் பெற்று வடி வத்தில் பூதம்போல் மாறிப்போய் விட்டார். 

நிலைமை அப்படி இருந்த காலத்தில், திடீரென்று ஒரு முக்கியமான சம்பவம் நிகழ்ந்தது. அதுவரையில், எஸ்.ஆர். ஐயர் புரசைப்பாக்கத்திலிருந்த தமது பங்களாவில் தம் போஜனத்தை முடித்துக்கொண்டு. மோட்டார் வண்டியில் உட்கார்ந்து திருவல்லிக்கேணியி லிருந்த தமது பாங்கிக்கி வந்தாரானால், இரவு பத்து மணிக்கே மறுபடி தம் பங்களாவிற்கு வந்துசேருவார். ஆனால் அதுவரையில் அவர் பாங்கியிலேயே இருக்க மாட்டார். பாங்கியின் அலுவல்கள் மாலை ஆறு மணியோடு முடிந்து போம். அதற்குமேல் அவர் கடற்கரைக்குப் போய்த் தமது மோட்டார் வண்டியை ஒரு பக்கத்தில் நிறுத்தி விட்டு, இரவு பத்துமணி வரையில் கடற்கரையில் அலைந்து திரிந்து பல நண்பர்களோடு உல்லாசமாய்ப் பொழுதைப் போக்கிவிட்டு, பங்களாவிற்கு வருவார்; வந்தால் போஜ னத்தை முடித்துக்கொண்டு மேன்மாடம் போய் விடுவார். அங்கு என்னென்ன காரியங்கள் நடக்குமென்பதை நாம் முன்னரே குறிப்பிட்டிருக்கிறோம். 

இப்படி ஒரே மாதிரியாக நடந்துகொள்ளும் சுபாவ முடைய எஸ்.ஆர். ஐயர் ஒருநாள் மாலை ஏழு மணிக்கே தமது மோட்டார் வண்டியை அபாரமான விசையோடு ஓட்டிக்கொண்டு தம் பங்களாவிற்கு வந்து சேர்ந்தார். அவருடைய முகம் பெருத்த திகிலைக் காட்டியது. அவர் எவரோடும் பேசாமல் தமது சயன அறைக்குள் போய்ப் படுத்து விட்டார். 

அவர் அவ்வாறு வழக்கத்திற்கு மாறாக மாலையிலேயே வந்ததையும், அவருடைய கலவரமான தோற்றத்தையும், அவர் படுக்கையிற் படுத்துக்கொண்டதையும் கண்ட அவ ரது மனையாள், அவருக்கு தேக அசௌக்கியம் ஏற்பட் டிருக்க வேண்டுமென்று நினைத்துக் கவலைகொண்டு மிக விரைவாக அவரிடம் சென்று, விஷயத்தைக் கேட்க, அவர் எவ்வித மறுமொழியும் கூற மாட்டாமல் மருள மருள விழித்தபடி சிறிது நேரம் இருந்த பின், அவளை நோக்கி “நம்முடைய விரோதி ஜெயிலிலிருந்து எப்படியோ தப்பித் துக்கொண்டு வெளியில் வந்து விட்டான். நம்மெல்லோ ருக்கும் இனி ஆபத்து சம்பவிப்பது நிச்சயம் ” என்று திக்கித் திக்கிப் பேசினார். 

அவருடைய மனைவி திடுக்கிட்டு நடுங்கி, “ஹா, அப் படியா! அவன் ஜெயிலிலிருந்து வந்துவிட்டானா? எப் போது வந்தான்? அது உங்களுக்கு எப்படித் தெரிந்தது ?” என்றாள். 

எல்.ஆர். ஐயர்:- அவன் எப்போது வந்தானென்பது எனக்குத் தெரியாது. நான் வழக்கம்போல் கடற்கரைக் குப் போய் உலாவிவிட்டு ஒரு பெஞ்சியில் உட்கார்ந்திருந் தேன். எனக்குக் கொஞ்ச தூரத்தில் வேறு சிலர் நின்று கொண்டிருந்தனர். துருக்கப் பக்கிரிபோல் உடுப்புகள் போட்டுக்கொண்டிருந்த ஒருவன் கொஞ்ச தூரத்திற்கப்பால் நின்று, வேறு திக்கைப் பார்த்தபடி தனக்குத் தானே பைத்தியக்காரன் போல உரக்கப் பேசிக்கொண்டிருந்தான்.என் கவனம் அங்கு திரும்பியது. அவன் என்ன சொன்னான் தெரியுமோ, “பாப்பார நாயி ஊருச் சொத்தைக் கொள்ளை யடிச்சு பாங்கி வச்சிருக்குதுடோய்! காலம் கிட்டிப்போச் சுன்னு சொல்லு போய். சீட்டுக் கிளிஞ்சி போச்சுடா பாப் பாரக்களுதே! கடைசிவரைக்கும் ஒத்தாசெ பண்ணினவனெ சயிலுக்கா அனுப்பறே! ஒங்க கருவெ அடியோடெ அறுத் துட்டு மறு வேலை பாக்கப்போறான் ஒம் பொஞ்சாதிக்கு ஆசை நாயகன்னு நெஞ்சுலெ வச்சுக்கடா நன்னி கெட்ட பன்னியே!” என்று தாறுமாறாய்ப் பிதற்றிக்கொண்டிருந் தான். மற்றவர் அவன் பைத்தியக்காரன் என்று நினைத்து அசட்டையாக இருந்து விட்டனர். நான் அதை கவ னித்து அவனுடைய முகத்தை உற்றுப் பார்க்க, அவன் இன்னான் என்பது எனக்கு உடனே விளங்கி விட்டது.நம் முடைய விரோதி அந்தமாதிரி வேஷம் போட்டுக்கொண்டு வந்து அந்த இடத்தில் எனக்காகக் காத்திருந்து, வேண்டு மென்றே அப்படிப் பயமுறுத்தினானென்பது எனக்கு உடனே தெரிந்துபோய் விட்டது. எனக்கு உடனே பெரு த்த திகில் உண்டாய் விட்டது. நான் எழுந்து வந்துவிட வேண்டுமென்று நினைத்து நம் மோட்டார் வண்டியைப் பார்த்து இரண்டோரடி நடந்து வந்த சமயத்தில், அவன் தன் சட்டைக்குள் மறைத்து வைத்திருந்த பட்டாக் கத் தியை சரேலென்று இழுத்துப் பிடித்துக்கொண்டு என் கழுத்தில் குத்துவதற்கு இலக்குப் பார்த்துக்கொண்டு பாய்ந்து வந்தான். அதைக் கண்டு, பக்கத்திலிருந்தவர்கள் கும்பலாய் வந்து குறுக்கிட்டு அவனைப் பிடித்துக்கொண்டு, அவன் கத்தியைப் பிடுங்கிவிட்டனர். உடனே அவன் பைத்தியக்காரன்போல் சம்பந்தா சம்பந்தமின்றிப் பேசி நாட்டியமாடத் தொடங்கினான். அவன் பித்துக்கொள்ளி யென்று மற்றவர் நினைத்துச் சிரித்தனர். அப்படியெல்லாம் அவன் பாசாங்கு பண்ணுகிறானென்பது எனக்கு நன்றாகத் தெரிந்தது. ஆனாலும், அதை நான் வெளியில் சொல்லவு மில்லை. அவன் இன்னான் என்பது எனக்குத் தெரியுமென்றும் நான் காட்டிக்கொள்ளவில்லை. சிலர் அவனைப் பிடித்துப் போலீஸாரிடம் ஒப்புவிக்க வேண்டுமென்றனர்.”அவனுக்கு சித்தஸ்வாதீன மில்லைபோ லிருக்கிறது. விட்டுவிடுங்கள். போகட்டும்” என்று நான் சொல்லி, அவர்களை சமாதானப் படுத்திவிட்டு மோட்டாரை ஒட்டின சமயத்தில், அவன் வேறே திக்கைப் பார்த்தபடி, “ஐயா ரொம்ப தயாளப் பிரபு. நல்ல மனிசரு. ஆனாக்கா,ஆளுங்க நாளைக்குள்ளற கூண்டோடெ கைலாஷத்துக்கு எல்லாரையும் அனுப்பிச் சுடப்போறானுவ. ஐயருக்கு மனசுலெ பயம் வாணாமின்னு காத்து மூலமாச் சேதி வருது. சீட்டுக் கிளிஞ்சு போச்சுது. கிளிஞ்சு போச்சுது. நல்ல காலம் பொறக்குது. நல்லகா லம் பொறக்குது. இந்தப் பட்டணத்தைப் புடிச்ச சனியன் ஒளிஞ்சு போவப்போவுது. நல்ல வாக்குச் சொல்லடி முண்டே. இந்த அக்கினி மூலேலெ ஒரு விரோதி இருக்க றான். அவனாலெ, ஒரு குடும்பமே ஐயோன்னு போயிடப் போவுது. ஜெயம் பொறக்குது. ஜெயம் பொறக்குது. மோட்டாருக்காரனுக்கு அதிஷ்டம் வருது. அதிஷ்டம் வருது” என்று குடுகுடுப்பாண்டி மாதிரி பேசிக்கொண்டு அசட்டையாக அப்பால் போய்விட்டான். அவன் சொன்ன வார்த்தைகளின் குறிப்பை நான் தெரிந்துகொண்டு என் மோட்டாரை ஒட்டிக்கொண்டு விசையாக வந்துவிட்டேன். அதுதான் விஷயம். மற்றவர் அவனைத் தடுத்திருக்கா விட்டால், இந்நேரம் என் உயிர் போயிருக்கும். ஏதோ, தெய்வ சங்கல்பத்தினால் நான் இப்போது திரும்பி வந்து சேர்ந்தேன். ஆனாலும், அவன் இனி சும்மா இருக்கிறவனல்ல. எந்த சமயத்தில் வந்து நம் எல்லோருக்கும் என்ன விதமான கெடுதலைச் செய்வானோ தெரியவில்லை.

மனைவி :- ஏன் நாம் போலீஸாருக்கு எழுதி, நம் யாங்கியிலும்,இந்த பங்களாவிலும் சில போலீஸாரைக் காவலாக நியமிக்கும்படி கேட்டுத் கொண்டால் என்ன? 

எஸ். ஆர். ஐயர் :- கேட்டுக் கொள்ளலாம். போலீ ஸார் சில தினங்கள் வரையில்தான் அப்போதைக்கப்போது வந்து பார்த்துக் கொண்டு போவார்கள். எப்போதும் நம் மோடு பல போலீஸார் இருப்பதென்றால், அது சாத்ய மானதல்ல. 

மனைவி:- அப்படியானால் நாம் என்ன செய்கிறது? 

எஸ்.ஆர்.ஐயர்:- நீங்கள் எல்லோரும் இந்த பங்க ளாவை விட்டுப் புறப்பட்டு எங்கேயாவது போய் ஒளிந்து கொள்ளுங்கள். நான் பத்துப் பதினைந்து கூலியாள்களையும் போலீஸாரையும் எனக்குத் துணை வைத்துக் கொண்டு சில தினங்கள் வரையில் இந்த ஊரில் இருந்து நம்முடைய சொத்துகளையெல்லாம் பந்தோபஸ்தாக வேறே பாங்கியில் வைத்துவிட்டு நீங்கள் இருக்கும் இடத்திற்கு வந்து சேரு கிறேன். அது வரையில் நீங்கள் பயப்படாமல் ஜாக்கிரதையா யிருங்கள். 

மனைவி:- நாங்கள் நம்முடைய மாப்பிள்ளையின் பங்களாவிற்குப் போய் ஒளிந்து கொண்டிருக்கலாமா? 

எஸ்.ஆர்.ஐயர் :- அது உபயோகப்படாது. நீங்கள் ங்கே இல்லா விட்டால், பக்கத்து பங்களாவில்தான் இருப் பீர்களென்பது அவனுக்குத் தெரியும். எப்படியும் அவன் நீங்கள் இருக்கு மிடத்தைக் கண்டுபிடித்துவிடுவான். நீங்கள் இந்த ஊரிலேயே இருக்க வேண்டாம். இப் போதே நீ, மாப்பிள்ளை, ஸ்வர்ணாம்பாள், சுந்தரி ஆகிய நால்வரும், கையில் கொண்டுபோகக் கூடிய சொத்துக் களை எடுத்துக்சொண்டு ராத்திரி ரயிலிலேயே ஏறி, நாமக்கல்லிற்குப் பக்கத்திலிருக்கும் நம் மாப்பிள்ளையின் ஜெமீன் கிராமத்திற்குப் போய் விடுங்கள். அங்கே அவ ருடைய பெரியவர்களுக்குச் சொந்தமான ஜாகை இருக் கிறது. பல ஆள்களை உங்களுக்குத் துணையாகக் காவல் வைத்துக் கொண்டு அங்கே இருங்கள். நீங்கள் அங்கே இருப்பதாக இவன் சம்சயம் கொள்ளமாட்டான். இவன் அங்கே வந்தாலும், இவனுடைய ஆட்டம் அந்த ஊரில் பலிக்காது. அந்த ஊரில் உள்ள ஆள்கள் இவனைப் பலி போட்டுவிடுவார்கள். நானும் கூடியசீக்கிரம் நம் சொத்து களை ஜாக்கிரதை பண்ணிவிட்டு அங்கே வந்துவிடுகிறேன் -என்றார். 

அது சரியான யோசனையென்று அவருடைய மனைவி ஏற்றுக்கொண்டு உடனே அவ்விடத்தை விட்டுப் போய் ஸ்வர்ணாம்பாள் முதலியோரைக் கண்டு, விஷபத்தை அவர் களுக்குத் தெரிவிக்க, எல்லோரும் ஆவேசங்கொண்டவர் போலக் கிளம்பி அங்குமிங்கும் ஓடித் தங்கள் தங்கள் கையில் அகப்பட்ட சொத்துக்களை எடுத்துப் பெட்டிகளில் வைத்துக்கொண்டு ரயிலுக்குப் போகப் பிரயாணமாயினர். 

கிருஷ்ணமூர்த்தி ஐயர் ஒரு சிப்பந்தியைப் போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பிவிட்டு, இன்னொருவனை வெளியில் அனுப்பி இருபது கூலியாள்களை அழைத்துவரச் செய்து, பாங்கிக் கட்டிடத்தையும், எஸ். ஆர். ஐயரையும் அவர்கள் காவல் காக்கும்படி செய்து, மற்றவர்களை அழைத்துக்கொண்டு இரகஸியத்தில் ரயில் ஸ்டேஷனுக்குப் போய் சேர்ந்தார். 

எஸ்.ஆர்.ஐயர் ஏராளமான ஆட்கள் தமது பாங்கிக் கட்டிடத்தையும், பங்களாவையும் மிக ஜாக்கிரதையாகக் காக்கும்படி செய்து, கோட்டைக்குள் இருப்பவர் போல் நிரம்பவும் பந்தோபஸ்தாக இருந்து வந்தார். அவருடைய பாங்கி, பங்களா ஆகிய இரண்டிடங்களிலும் பொருத்தப்பட் டிருந்த டெலிபோன் இயந்திரங்களுக்குப் பக்கத்திலேயே ஒவ்வொரு குமாஸ்தா இரவு பகல் பாராமல் எப்போதும் உட்கார்ந்திருந்தனர். ஏதேனும் விபரீதமான சம்பவம் நேர் ந்தால், உடனே போலீஸ் கமிஷனருக்கு அதைத் தெரிவிக் கும்படி எஸ்.ஆர்.ஐயர் இரண்டு டெலிபோன் குமாஸ்தாக் களுக்கும் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்திருந்தாராதலால் அவர்கள் எந்த நிமிஷத்தில் எவ்வித அபாயம் நேருமோ என்று சதாகாலமும் எதிர்பார்த்து, திகில் கொண்டு, நடுங் கிக் கலங்கியபடி இருந்து வந்தனர். 

எஸ்.ஆர். ஐயர் பங்களாவிலிருந்து பாங்கிக்கும், பாங் கியிலிருந்து பங்களாவிற்கும் மோட்டார் வண்டியில் போன சமயங்களில், தமது வண்டியின் கதவுகளை மூடிக்கொண்டு டு பல ஆள்களோடு உட்புறத்தில் மறைவாக இருக்க, மோட் டார் ஒட்டி யொருவன் முன்னால் உட்கார்ந்து வண்டியை வாயுவேக மனோவேகமாய் ஒட்டிக் கொண்டு சென்றான். 

எஸ். ஆர். ஐயர், கட்டிடத்திற்குள்ளிருந்த சமயங் களில்கூட பலர் அவரைச் சுற்றிலும் எச்சரிக்கையாக இருந்து அன்னியர் எவரும் அருகில் நெருங்காதபடி பாராக் கொடுத்தனர். அவர் தமது கொடுக்கல் வாங்கல் வியாபாரத் தை மேற்கொண்டு நடத்தாமல், கையிருப்பில் இருந்த ஏராளமான சொத்துக்களைப் பெட்டிகளில் வைத்துப் பூட்டி அரக்கு முத்திரைகள் இட்டு, அவற்றை இம்பீரியல் பாங்கிக்கு அனுப்பி, அவ்விடத்தில் பத்திரப்படுத்தத் தொடங்கினார். அவ்வாறு பெட்டிகள் யாவும் வெளி யேறிய தகவலை எவரும் தெரிந்து கொள்ளாதபடி தினம் தினம் சில சிலவாக இரகவஸியத்தில் யாவற்றையும் அப்புறப் படுத்தலானார். 

அவர் மேலும் ஒரு வாரகாலம் தாம் சென்னையிலிருந்து, தமது சகலமான சொத்துக்களையும் இம்பீரியல் பாங்கியில் வைத்து பத்திரப்படுத்தி விட்டு, வீடுகளை வாடகைக்கு விட்டு விட்டு, தாம் இரகஸியத்தில் அந்த ஊரைவிட்டுப் புறப்பட்டு, தமது மாப்பிள்ளையின் ஜெமீன் கிராமத்திற்குப் போய்விட வேண்டுமென்ற தீர்மானத்துடனிருந்துவந்தார். 

ஆரம்பத்தில் இரவில் தூங்காமல் சதாகாலமும் திகில் கொண்டு அஞ்சி நடுங்கி வேதனையி லாழ்ந்து தவித்தபடி இருந்தவர், சொத்துக்களில் பெரும்பாகமும் பத்திரப்படுத் தப்படவும், ஐந்தாறு தினங்கள் எவ்வித சம்பவமுமின்றிக் கழியவும், சிறிதளவு துணிவும் மன அமைதியு மடையத் தொடங்கினார். அதற்கு மேல் தமக்கு எதிரியால் எவ்வித அபாயமும் நேராதென்ற எண்ணமும் மனதில் தோன்றிப் படிப்படியாய் நிச்சயப்படலாயிற்று. 

ஆயினும் தம்மை விட்டுப் பிரிந்து போன தம் மனைவி, முதலியோர் தம் மாப்பிள்ளையின் ஜெமீன் கிராமத்தில் க்ஷே மமாக இருக்கின்றனரோ வென்பதைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆவல் ஒரு புறத்தில் அவரை வதைத்த தாகையால் அவர் தம் மாப்பிள்ளைக்குக் கடிதம் எழுதி இரக வசியத்தில் அதைத் தபாலில் அனுப்பிவைத்தார். 

அதற்கு இரண்டு தினங்களுக்குப் பிறகு கிருஷ்ண மூர்த்தி ஐயரிடத்திலிருந்து எஸ்.ஆர். ஐயருக்கு ஒரு கடிதம் வந்தது. அது அடியில் வருவாறு எழுதப்பட்டிருந்தது : 

மகா-ள-ள-ஸ்ரீ தீர்த்த ரூபியான ஸ்ரீமான் மாமா அவர் கள் சமூகத்திற்கு, பாலன் கிருஷ்ணமூர்த்தி அநேக சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து எழுதுவது. உபய குசலோபரி. தாங்கள் பிரியபூர்வமாக எழுதியனுப்பிய கடிதம் வந்து சேர்ந்தது. படித்துப்பார்க்க எல்லோருக்கும் கொஞ்சம் மன நிம்மதி ஏற்பட்டது. 

அவ்விடத்தை விட்டுப் புறப்பட்ட தினத்திற்கு மறு நாள் பகலில் நாங்கள் எல்லோரும் சௌக்கியமாய் இந்த ஊருக்கு வந்து சேர்ந்தோம். இந்த ஊரிலுள்ள எங்கள் பூர்விகமான வீடு இரும்புக் கோட்டைபோல் நிரம்பவும் பங் தோபஸ்தாக இருக்கிறது. ஆள்கள் சிலரை வெளியில் காவல் போட்டு நாங்கள் தலைமறைவாக உள்ளேயே இருந்துவருகி றோம். இவ்வாள்கள் நல்ல முண்டர்களாகையால், எதிரியோ அவனுடைய ஆள்களோ இந்த இடத்திற்குள் வருவதே கூடாத காரியம்; வர முயன்றாலும், இவ்வாள்களும் இன் னும் கிராமத்தார் எல்லோரும் ஒன்றாகத் திரண்டு வந்து வளைத்துக் கொண்டு, அவர்களைத் தவிடுபொடி யாக்கிக் காற்றில் ஊதி விடுவார்கள். ஆகையால், நாங்கள் எங்களைப்பற்றி எவ்வித பயமுமின்றி நிம்மதியாயிருந்து வருகிறோம். 

ஆனால், எங்கள் எல்லோருக்கும் உங்களைப்பற்றிய கவலை தான் ஓயாக்கவலையாக இருக்கிறது. அங்கிருந்து வந்தது முதல் இராப்பகல் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். உங்களைப்பற்றி முக்கியமாய் மாமி படுகிற சஞ்சலம் சொல்லமுடியாது. இங்கே வந்தபின் மாமிக்கு ஆகாரம் முதலிய எதிலும் நாட்டமே ஏற்படவில்லை யாகையால், இளைத்துத் துரும்புபோலாய்விட்டாள். எங்கள் எல்லோரை யும் விட்டுப் பிரிந்து நீங்கள் மாத்திரம் அந்த ஊரில் தனியா யிருப்பது எங்கள் மனதுக்குக் கொஞ்சமும் சரிப்படவில்லை. 

ஆகையால் நீங்கள் நம்முடைய சொத்துக்களை பந்தோபஸ்து செய்துவிட்டு கூடிய சீக்கிரம், இங்கே வந்துவிடவேண்டும் என்று மாமி லக்ஷம்தரம் கேட்டுக் கொள்வதாக எழுதச் சொன்னாள். சகலமும் அறிந்தவர்களான உங்களுக்கு நாங்கள் அதிகமாய் எழுதவேண்டிய அவசியமில்லை யென்று நினைக்கி றேன். இந்த இடத்தில் நம் எதிரியின் முயற்சி பலிக்கா தாகையால், நீங்கள் உடனே இங்கே வந்துவிட வேண்டும் என்று மாமி எழுதச் சொன்னாள். 

நீங்கள் இங்கே வருகிற வரையில் தினம் ஒரு கடிதம் எழுதி தவறாமல் எங்களுக்கு அனுப்பினால், அது எங்கள் மனவேதனைக்கு ஓர் ஆறுதலை உண்டாக்கும். 

இப்படிக்கு உங்கள் விதேயன், 
கிருஷ்ணமூர்த்தி.

என்று எழுதப்பட்டிருந்த கடிதத்தைப் படித்த எஸ். ஆர். ஐயர் மனத்துணிவும் உற்சாகமும் கொண்டார். தமக்கோ தம்மனிதருக்கோ எதிரி எவ்விதமான அபாய மும் விளைவிக்க இயலாதென்ற நம்பிக்கையும் மனோ திட மும் தோன்றி உறுதிப்படத் தொடங்கின. தமது பாங்கி யின் சொத்துக்களை யெல்லாம் இம்பீரியல் பாங்கியில் பாது காப்பாக வைத்து விட்டுத் தாம் இரகஸியத்தில் ஊரை விட்டு ஓடிப்போய்த் தம் மாப்பிள்ளையின் ஜெமீன் கிராமத் தில் ஒளிந்து கொண்டிருக்க வேண்டுமென்று அவர் அதற்கு முன் செய்த தீர்மானம் தளர்வடைய வாரம்பித்தது. தமது சொத்துக்களின் பெரும் பாகத்தை இம்பீரியல் பாங்கியில் வைத்து, அவசியமான சொற்ப பாகத்தைத் தம் வசத்தில் வைத்துக்கொண்டு தமது வர்த்தகத்தை நடத்தலாமென்ற எண்ணம் தோன்றலாயிற்று. மேலும் இரண்டொரு தினங் கள் வரையில் தாம் நிதானித்துப் பார்த்து விட்டு, அதற்கு மேல் அந்தப் புதிய ஏற்பாட்டை அமுலுக்குக் கொண்டுவர வேண்டு மென்று நினைத்து எஸ். ஆர். ஐயர் தமது பகை வனைப்பற்றி அசட்டையாயிருந்த சமயத்தில் தபால் மூல மாய் அவருக்கு ஒரு கடிதம் வந்து சேர்ந்தது. அதன் மேல்விலாசத்தின் எழுத்தைப் பார்த்த போதே, அவருடைய முகம் விகாரமாக மாறிப்போயிற்று. அவருடைய மனதில் அபாரமான திகில் குடிகொள்ளத்தொடங் கியது. உடம்பு கைகால்கள் முதலிய அங்கங்கள் யாவும் வெடவெடவென்று ஆடவாரம்பித்தன. அதீதமான அச் சத்தினால் ஏற்பட்ட மனக்குழப்பத்தினால், அவருடைய மனம் நிலைத்து நிற்காமல் சஞ்சல மடைந்து மயங்கியது. ஆயினும், அவர் இரண்டொரு நிமிஷகாலம் நிதானித்து, தம்மனத்தை திடப்படுத்திக்கொண்டு கடிதத்தைப் பிரித்துப் படிக்கலானார். அது அடியில் வருமாறு எழுதப்பட்டிருந்தது:- 

இந்த எழுத்தைப் பார்க்கும்போதே இந்தக் கடிதம் யாரால் எழுதப்பட்டதென்பது உனக்கு சுலபத்தில் தெரிந்துபோகும். ஆகையால், நான் பெயர்களைக் குறிக்க வேண்டிய அவசியமில்லை யென்று நினைக்கிறேன்.நீ அசாத் தியமான புத்திசாலி என்பதை நான் ஒப்புக்கொள்ளாமல் இருக்கமுடியாது. இத்தனை வருஷகாலமாய் நீ செய்துள்ள எத்தனையோ பராக்கிரமச் செய்கைகளைப்பற்றி நான் உன்னை மெய்ச்சிக் கொள்ளாமலும் இருக்கமுடியாது. 

இது வரையில் நீ செய்த சாமர்த்தியக் காரியங்களை விட இந்த ஐந்தாறு தினங்களாய் நீ என்னை வென்றுவிடும் பொருட்டு செய்துவரும் ஏற்பாடுகள் உன் அசகாய சூரத் தனத்தை நன்றாகக் காட்டுகின்றன. ஆனாலும், இந்த உல கத்தில் உனக்குமாத்திரமே மூளை யிருப்பதாகவும், நீ மற்ற -எல்லோரையும் கடைசி வரையில் ஏமாற்றிவிடலாமென்றும் நினைத்து இறுமாப்படைந்து தந்திரமாக நடந்து கொள்வது தவறு என்று செய்கையின் மூலம் உனக்குக் காட்ட இந்த உலகில் ஒருவன் கங்கணங் கட்டிக் கொண்டு முனைந்து நிற்கிறா னென்பதை இந்த நிமிஷம் முதல் நீ நினைவில் வைத்துக் கொள். 

இதுவரையில் நீ, மற்றவர் விஷயத்திலும், என் விஷயத் திலும் செய்துள்ள பாவங்கள் எண்ணத் தொலையா. எனக் கும் உனக்கும் நெடுங்காலத்துக் கணக்குகள் தீராமலேயே இருந்து வருகின்றன. அவைகளை நான் தீர்த்துக்கொள்ள எத்தனிக்கிறேன் என்பதை உணர்ந்து நீ முன் ஜாக்கிரதை யான பல ஏற்பாடுகளைச் செய்துவிட்டு, நிரம்பவும் பாது காப்பாயிருப்பதாக எண்ணி மனக்கோட்டை கட்டிக்கொண் டிருக்கிறாய். அந்தக் கோட்டையை ஒரே நொடியில் இடித் துத் தரைமட்ட மாக்கும் திறமை என்னிடம் உண்டு என் பதை நீ மிக சீக்கிரத்தில் தெரிந்து கொள்ளப் போகிறாய். 

இதுவரையில் நீ செய்துள்ள அட்டூழியச் செய்கை கள் கணக்கி லடங்கா. அவைகளுக்கெல்லாம் உன்னிடம் நான் இப்போது பரிகாரம் தேடுவதென்பது சாத்தியமற்ற காரியம். முக்கியமாய் நீ உன் மூத்த மனையாள் விஷயத்திலும், என் விஷயத்திலும் இழைத்த கொடுமைகளுக்கு உன்னைத் தண்டியாமல் நான் விடமுடியாது. அந்த தண் டனை இன்னதென்பதை நான் உன்னிடம் முகதாவிலே தான் தெரிவிக்கவேண்டும். ஆகையால் நீ இந்தக் கடி தத்தைப் படித்தவுடன், உன்னைச் சுற்றிலும், உன் பாங்கியைச் சுற்றிலும் காவல் காத்திருக்கும் தண்டச் சோற்றாள்களை அனுப்பிவிட வேண்டியதோடு நீ இம் பீரியல் பாங்கியில் கொண்டு போய் வைத்திருக்கும் சொத்துக்களை யெல்லாம் கொணர்ந்து முன்போல் உன் வசத்தில் வைத்துக்கொள்ள வேண்டியது. இந்த உத்தரவை நீ நிறைவேற்றினால், நான் நேரில் வந்து, உனக்கு உரிய தண்டனை இன்னது என்பதை நிரம்பவும் காருண்யத்தோடு நிர்ணயிப்பேன். துவே என்னுடைய முடிவான உத்தரவு. 

எக்காரணத்தைக் கொண்டும் நீ இதை அசட்டை செய்தால், மிக பயங்கரமான அநர்த்த பரம்பரையை நீயே விலைக்கு வாங்கிக் கொண்டவனாவாய். இதுவரையில் நீ செய் தது போல் இனியும் செய்யலாமென்று நினைத்து ஏதேனும் தந்திரம் செய்ய எண்ண வேண்டாம். உன் தந்திரம் எதுவும் இனி பலியாதென்று நான் முக்காலும் உன்னை எச்சரிக்கிறேன். 

இப்படிக்கு உன் பிரிய 
சட்டகன். 

என்று எழுதப்பட்டிருந்த கடிதத்தைப் படித்த எஸ். ஆர். ஐயர் மனக் கலக்க மடைந்து சிந்தனையி லாழ்ந்திருந் தாரானாலும், ஒரு மணி காலத்திற்குப் பிறகு அவர் தெளி வடைந்தவராய், அந்தக் கடிதத்தைச் சிறிதும் பொருட்படுத் தாமல் கிழித்து அசட்டையாக எறிந்துவிட்டுத் தமது அலுவல்களைக் கவனிக்கலானார். ஏராளமான ஆள்கள் தம்மைப் பாதுகாத்திருந்ததனாலும், தம் சொத்துக்கள் யாவும் இம்பீரியல் பாங்கியின் பொறுப்பில் வைக்கப்பட் டிருந்தமையாலும், தமக்கோ, தம் சொத்துக்களுக்கோ எவ் வித அபாயமும் நேர சந்தர்ப்பம் ஏற்படாது என்ற நிச்சயம் அவருடைய மனத்தில் பூர்த்தியாக உண்டாகி விட்டது அதுவுமன்றி, தம் மனைவி முதலியோர் மறைவாக இருந்த டம் இன்னதென்பதே அந்தப் பகைவனுக்குத் தெரிந் திராதென்றும், அது தெரிந்தாலும், அவனுடைய திறமை அவ்விடத்தில் பலியாதென்றும் எஸ். ஆர். ஐயர் நினைத்து, அந்த விஷயத்திலும் சிறிதும் கவலையோ, அச்சமோ கொள் ளாமல் இருந்து வந்ததன்றி, அந்தப் பகைவன் எழுதியிருப் பது பொய்யான பயமுறுத்தலென்றும், அவனால் எந்தக் காரியமும் சாயா தென்றும் கருதி, தமது வர்த்தகத்தையும் தமது சிறுகச் சிறுக நடத்தத் தொடங்கினார். 

அவருடைய சொத்துக்களில் பெரும்பாகம் இம்பீரியல் பாங்கியிலேயே இருந்தது.ஏராளமான ஆள்கள் அவ ருடைய பாங்கிக் கட்டிடத்தையும், அவருடைய பங்களாவையும், அவரையும் இடைவிடாமல் பாதுகாத்து வந்தனர். 

அவ்வாறு எவ்வித சம்பவமுமின்றி சுமார் ஒரு வார காலம் கழிந்தது. எஸ். ஆர். ஐயருக்கு அவருடைய பகைவ னிடத்திலிருந்து மறுபடி கடிதமும் வரவில்லை. அந்த மனி தனைப் பார்த்ததாக ஐயரிடம் அவருடைய நண்பர் அல்லது காவலாளர் எவரும் கூறவுமில்லை. கடைசியாகக் கடிதமெழுதித் தம்மை பயமுறுத்தி பார்த்துவிட்டு தம் பகைவன் அதோடு ஓய்ந்து சும்மா இருந்து விட்டானென்றும், அதற் குமேல் தமக்கு எவ்வித அச்சமுமில்லை யென்றும் ஐயர் நினைத்து தமது பாங்கியின் நடவடிக்கைகளைப் பூர்த்தியாக நடத்தவும், தமது மனைவி முதலியோரைத் தருவித்துக் கொள்ளவும் எண்ணி இருந்த காலத்தில், ஒரு நாள் தபா லில் அவருக்கு இன்னொரு கடிதம் வந்தது. 

– தொடரும்…

– ஸதாநந்த போதக சாமியார் (நாவல்), முதற் பதிப்பு: செப்டம்பர் 1933, எம்.எஸ்.ராமுலு கம்பெனி, மதராஸ்.

வடுவூர் கே.துரைசாமி ஐயங்கார் வடுவூர் துரைசாமி ஐயங்கார் (1880-1942) தமிழ் எழுத்தாளர். பொதுவாசிப்புக்குரிய வணிகக் கேளிக்கைப் படைப்புகளை எழுதிய முன்னோடிகளில் ஒருவர். திகம்பரச் சாமியார் என்னும் துப்பறியும் கதாபாத்திரத்தை உருவாக்கியவர். 1942-ல் வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் காலமானார். தமிழில் பிரிட்டிஷாரால் நவீன காவல்துறையும், நீதிமுறையும் உருவாக்கப்பட்டதை ஒட்டி குற்றங்களை காவலர் நவீன முறையில் துப்பறிவதன் மீது வாசகர்களின் ஆர்வம் உருவாகியது. தொடக்ககால தமிழ் பொதுவாசிப்பு எழுத்துக்கள் பெரும்பாலும் துப்பறியும் மர்மக் கதைகளாகவே அமைந்தன.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *