வாட்ஸாப்ப் தாத்தா
கதையாசிரியர்: முனைவர் வெங்கடேஷ் கணபதி
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: March 12, 2026
பார்வையிட்டோர்: 140

பெங்களூரு விஜய நகர் பகுதி. விஜய நகர் மெட்ரோ நிலையத்தில் இருந்து பதினைஞ்சு நிமிட நடையில் அந்தச் சிறிய பங்களா. நம்ம வாட்ஸாப்ப் தாத்தா இங்கு தான் வசிக்கிறார். நாகராஜன் …அது தான் நம்ம வாட்ஸாப்ப் தாத்தா பெயர். வயது எழுபத்தி ஐந்து முடிந்து எழுபத்தி ஆறு தொடங்கி விட்டது. பெம்மல் கம்பெனியில் வேலைபார்த்து ஓய்வு பெற்று வருடங்கள் ஓடி விட்டன.
ஐந்தாவது குறுக்குத் தெரு.. இரண்டாவது மெயின். வெளிர் பச்சை நிறத்தில் பெயிண்ட் அடிக்கப்பட்ட அந்த வீட்டில் வசிப்பவர்கள் நான்கு பேர் மட்டுமே – நாகராஜன், அவர் இளைய மகன், மருமகள் மற்றும் மூன்று வயது பேத்தி.
அந்தப்பகுதியிலேயே நாகராஜன் வாட்ஸாப்ப் தாத்தா என்கிற பெயரால் தான் அறியப்பட்டார். எந்நேரமும் வாட்ஸாப்ப் தான். எந்நேரமும் சாட் தான்.
மனைவி விஜயலக்ஷ்மி போய்ச் சேர்ந்து மூன்று வருடங்கள் ஓடி விட்டன. ரஹியூமட்டாய்டு ஆர்த்ரிடிஸ் என்கிற முடக்கு வாதத்தால் பல வருடங்கள் அவஸ்தைப்பட்டு சிவ பெருமான் தனது காலடியில் அவளை வரவழைத்துக்கொண்டார்.
இரண்டு மகன்கள் நாகராஜனுக்கு. ஒருவன் – அது தான் – மூத்தவன் – ஐதராபாடில் ஒரு மருந்துகள் தயாரிக்கும் நிறுவனத்தில் மூத்த ஆராய்ச்சியாளர். மனைவி மக்களுடன் அங்கே தான் வாசம். காதல் திருமணம். தெலுங்கு நாயுடு பெண். மறுப்பேதும் சொல்லாமல் நாகராஜன் தம்பதிகள் மருமகளை மனசார ஏற்றுக்கொண்டார்கள்.
இரண்டாவது மகன் பெங்களூர் வாசி. மைசூர் ரோட்டில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் Chief Financial Officer என்கிற பெரிய பதவி. கை நிறைய சம்பளம். திருமணம் ஆகி நான்கு வருடங்கள் ஆகி விட்டன. மூன்று வயதில் நாகராஜனுக்கு ஒரு பேத்தி – பெயர் – ஷைலஜா. இப்போதுள்ள பெற்றோர் அனைவரும் புது விதமாக பேர் சூட்டுகிறேன் பேர்வழி என்று ” முக்கா” “இசை” “ரியா” “பியா” ” ஆஸூ” “குஹு” “மைனா” என்று பேர் வைக்க நாகராஜனின் இளைய மகன் பிரகாஷும் அவன் மனைவி லலிதாவும் பாரம்பரியம் மிக்க பெயரை செல்ல மகளுக்கு சூட்ட விழைந்தார்கள்.
லலிதா பக்கத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் கிண்டர் கார்டென் குழந்தைகளுக்கு பகுதி நேர ஆசிரியர் ஆக வேலைப்பார்த்து வந்தாள்.. காலை எட்டு மணி முதல் பதினொன்று மணி வரைக்கும் தான் பள்ளி. காலையில் சைலஜாக்குட்டியைப்பார்த்துக்கொள்வதற்கு ஒரு பெண்ணை அமர்த்தி இருந்தார்கள். வாழ்க்கை அமைதியாகப் போய்க்கொண்டு இருந்தது. அதாவது இந்த வாட்ஸாப்ப் என்கிற பேய் வரும் வரை.
மனைவி இருக்கும் வரை ஏதோ அவ்வப்போது வாட்ஸாப்ப் பார்த்துக்கொண்டிருந்த நாகராஜன் மனைவி காலம் அடைந்த பின்னர் வாட்ஸாப்ப் – அதுவேகதி என்றாகி விட்டார். காலையில் எழுந்தவுடன்
டெக்கான் கிரோனிக்ல் செய்த்தித்தாள் படித்து முடித்த பின்னர் வாட்ஸ்சப்பில் மூழ்கிவிடுவதே அவரது வழக்கமாகிப்போனது.
பேத்தியை க்கொஞ்சுவார் நாகராஜன். ஆனால் வாட்ஸாப்ப்புக்குத்தான் முதலிடம். அவ்வப்போது இறந்து போன நடிகைகள் மற்றும் இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் அவர்களின் அந்தரங்க வாழ்க்கையை சமூக வலை தளங்களில் அலசும் மனிதர்களின் காணொளிகள் நாகராஜனைக்காந்தம் போல இழுக்கும்.
எந்த நடிகை ஒரு நடிகன் சினிமாவில் கட்டிய தாலியை அவிழ்க்கவில்லை என்பதில் இருந்து எந்த இயக்குனர் எந்த நடிகையை கன்னத்தில் அறைந்தார் என்பது வரை அவருக்கு அத்துப்படி.
மகனும் மருமகளும் சொல்லிப்பார்த்து அலுத்து விட்டார்கள். நாகராஜனின் வாட்ஸாப்ப் மோகம் கொஞ்சம் கூட மட்டுப்படுவதாக இல்லை. லலிதா மற்ற பெண்களைப்போல இல்லாமல் மாமனாரைத் தந்தை போலவே பாவித்தாள். அவள் வளர்ப்பு அந்த மாதிரி. சிறிய வயதிலேயே தந்தையை இழந்த அவளுக்கு நாகராஜன் , அவள் திருமணத்திற்குப்பின் , தந்தை ஆகிப்போனார். ஆனால், என்ன, அடுப்பில் வெந்நீரைக் காய்ச்சுகிறேன் பேர்வழி என்று அடுப்பை அணைக்க மறந்து விடுவது தான் விபரீதம். இந்த மாதிரி இரண்டு மூன்று முறை ஆனவுடன் பிரகாஷும் லலிதாவும் நாகராஜனிடம் திட்டவட்டமாகக் கூறி விட்டார்கள் -” அப்பா நீங்கள் சமையல் அறை பக்கமே போகக்கூடாது”. வேறு வழியே இல்லை.
பிரகாஷின் அலுவகத்தில் வேலைபார்த்து வந்தார் ஒருவர். அவர் பெயர் ரவிமோகன். அவர் தாயார் தனியாக மைசூரில் இருந்தார். ஒரு நாள் அந்த பெண்மணி பாவம் அடுப்பை பற்ற வைக்க , தீக்குச்சி சரியாக எரியவில்லை. அதற்குள் தொலைபேசி ஒலிக்க (அப்பொழுதெல்லாம் அலைபேசி கிடையாது) அதில் பேசிக்கொண்டிருந்தவர் காஸ் அடுப்பை மூட மறந்து விட்டார்.
வயோதிகம் காரணமாக, மறதி அழையாத விருந்தாளியாக வந்து ஒட்டிக்கொண்டு விட்டது. போனில் பேசி முடித்து விட்டு சமையலறையில் வந்து மறுபடியும் தீக்குச்சியைப்பற்ற வைக்க நெருப்பு பற்றிக்கொண்டு விட்டது. துரதிர்ஷ்ட வசமாக அவருக்கு இரண்டு மூன்று நாட்களாக மூக்கடைப்பு. அதில் காஸ் வாடைதெரியாமல் போய் விட்டது தான் பரிதாபம். ஆஸ்பத்திரியில் தாயாரின் சடலத்தைப்பார்த்து ரவிமோகன் கலங்கி விட்டார். இந்த விஷயம் கேள்விப்பட்டதுமே பிரகாஷ் இதை லலிதாவிடம் கூற வயதானவர்கள் தனியாக இருந்தால் என்ன மாதிரி பிரச்னைகள் எல்லாம் எழும் என்பது தெளிவாகத் தெரிந்து போனது.
அன்று ஞாயிற்றுக்கிழமை. நடக்கும் தூரத்தில் உள்ள கிருஷ்ணர் கோவிலுக்கு போய் வாங்களேன் அப்பா என்ற மருமகளிடம் “சரிம்மா, க்ரிஷ்ணரைப்பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது” என்று நாகராஜன் கிளம்பினார். “தாத்தா நானும் வரேன்” என்று பேத்தி அழ ஆரம்பிக்க,
“வாம்மா” என்று பேத்தியை வாரி அணைத்துக்கொண்டவர் கோவிலுக்கு நடையைக்கட்டினார்.
அன்று கிருஷ்ணர் கோவிலில் சத்தியநாராயணா பூஜை இருந்ததகையால் கோவிலில் நல்ல கூட்டம். தரிசனம் முடிந்து பிரகாரத்தில் இருந்த துளசிமாடத்தை வணங்கி விட்டு நாகராஜன் அங்கு போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தார். பேத்தியும் அருகில் அமர்ந்தாள். சட்டை பாக்கெட்டில் இருந்து அலைபேசியை எடுத்த நாகராஜன் அடுத்த அரைமணிக்கூர் வாட்சப்பில் மூழ்கிப்போனார். அவரது பால்ய நண்பன் கே ன் கிருஷ்ணனுடன் சாட் பண்ணிக்கொண்டிருந்தவர் எதேச்சையாக பக்கவாட்டில் திரும்ப திக்கென்றது. பேத்தியைக்காணவில்லை. எங்கே போய் இருக்கும் குழந்தை?
பதறிப் போனவர் அங்கேயும் இங்கேயும் தேடினார். அங்கே கோவிலில் பிரசாதம் விநியோகம் பண்ணிக்கொண்டிருந்தவர் ஓடியே வந்தார். அவரும் மற்றவர்களை அழைத்து நாகராஜனுக்கு உதவியாக குழந்தையைத் தேடச்சொன்னார் .
குழந்தை எங்கே போய் இருப்பாள்? அந்த கோவில் வளாகம் பெரியது. கேட்டு வழியே குழந்தை போகவில்லை என்று செக்யூரிட்டி ஆள் சத்தியமே செய்தான். நுழைவு வாயில் பக்கம் அமர்ந்து இருக்கும் பூக்காரி கூட குழந்தையை பார்க்கவில்லை என்றாள். நாகராஜனுக்கு சற்றே நிம்மதியாக இருந்தாலும் வயிற்றைக்கலக்கியது. லலிதாவிடமும் ப்ரகாஷிடமும் எந்த மூஞ்சியை வைத்துக்கொண்டு குழந்தை இல்லாமல் நிற்பார்? யாரேனும் குழந்தையைக்கடத்தி இருந்தால்? நினைத்துப்பார்க்கவே முடியவில்லை.
மணித்துளிகள் கரைந்துகொண்டிருக்க நாகராஜனுக்கு வியர்த்து விட்டது. மகனுக்கு ப் போன் பண்ண வேண்டியது தான் என்கிற போது ஒரு இருபது ஐந்து வயது மதிக்கத்தக்க ஆள் ஓடியே வந்தான்..
“சார் சார் , அங்கே கோவிலின் பின்புறத்தில் பூங்காவின் பின்னே உள்ள கிருஷ்ணர் சிலையின் பக்கத்தில் ஒரு சிறிய பெண் உட்கார்ந்து அழுது கொண்டு இருக்கிறாள்” என்றான் அவன்.
எல்லோரும் ஓடினர். நாகராஜன் தனது வயசை மறந்து ஓடினார். அங்கே பேத்தியைக் கண்டதும் அவர் வயிற்றில் பால் வார்த்தது போல் உணர்வு ஏற்பட்டது. அந்த ஆளை அணைத்துக் கொண்டவர் – “நீ நல்லா இருப்பா” என்று ஆசீர்வதித்து பேத்தியை நோக்கி ஓடினார்.
“ஷைலஜாக்குட்டி, நீ இங்கேயா இருக்கே? தாத்தா உன்னை எங்கே எல்லாம் தேடினேன் தெரியுமா..உன்னைக் காணாம தாத்தா பதறி போய்ட்டேன்.நீ இப்படி பண்ணலாமா?”
“பின்னே என்ன தாத்தா. நான் உன்கூட வந்திருக்கேன். நீ மொபைலையே பார்த்துட்டு இருக்கே. கிருஷ்ண பகவான்கிட்ட நாம் வேண்டினதெல்லாம் கிடைக்கும்னு அம்மா சொன்னாளே. ஸ்வாமிட்ட வேண்டிக்க வந்தேன். அம்மாவும் இங்கே தான் வருவா. கிருஷ்ணா, எங்க தாத்தா ஏன் என்கிட்டே பேசாம மொபைலையே பார்த்துக்கிட்டு இருக்கார்..என்று சாமிகிட்ட பேசிண்டு இருந்தேன்” என்று மழலைக்குரலில் பேசிய பேத்தியை வாரி அணைத்துக்கொண்டு நாகராஜன் “என்னை மன்னிச்சுடுமா. கிருஷ்ண பகவான் உன் மூலமா என் கண்ணைத் தெறந்துட்டான்” என்றவர் மற்றவர்களிடம் “தன்யவாதுகளு” என்று கன்னடத்தில் கூறி விட்டு பேத்தியை அழைத்துக்கொண்டு வீடு நோக்கி நடக்கலானார்.
கீ கீ என்று சத்தம். மொபைலை எடுத்தார்… அவரது பழைய ஆபீஸ் நண்பன் ராஜகோபாலன் – “என்ன நாகராஜன், நாளைக்கு பிராமண சேவா சங்கத்தில் சீதா கல்யாணம்.. வரேளா” என்று குறுஞ்செய்தியை அனுப்பி இருந்தார்.
பதில் ஏதும் கூறாமல் அலைபேசியை சட்டைப் பைக்குள் வைத்த நாகராஜன் இந்த மாயையில் இருந்து எப்படி விடுபடலாம் என்று யோசித்தவாறே வீடு நோக்கி நடக்கலானார்.
நீங்கள் அவருக்கு கூறும் அறிவுரை என்ன?