கண்ணன் வந்தான்

“கண்ணன் வந்தான் மாயக்கண்ணன் வந்தான்.
தேடி நின்ற கண்களிலே கண்ணன் வந்தான்.. கண்ணா! கண்ணா!”
என்று காதலாகி கசிந்து கொண்டிருந்தது கண்ணம்மா வீட்டு வண்ணத் தொலைக்காட்சி.
“கண்ணா! எங்கடா இருக்க?” என்று கண்ணம்மாவும் காதலாகிக் கொண்டிருக்க, கண்ணம்மாவின் அம்மாவோ “நீ கத்துறது அவன் காதுல கேக்குதா என்ன” என பொய்யாய் கேலி செய்ய, “உனக்கொன்னு தெரியுமாம்மா? ஹரி எங்கடா இருக்க? ன்னு கேட்டவுடனே ஓடி வந்து கையை பிடிச்சுப்பாராம்மா நரசிம்ம மூர்த்தி, நான் கூப்டா வர மாட்டாரா என்ன? இந்நேரம் வந்துருப்பாரு நம்ம கண்ணுக்கு தான் தெரில”ன்னு அம்மாவுக்கு பதிலளித்தவள் “ஏன்டா, கண்ணா!” என கேட்க, பதிலுக்கு தன் அழகு குட்டிப்பல்லைக் காட்டி சிரித்தான் அவள் வீட்டுச் சுவரில் ஒய்யாரமாய் படுத்திருந்த வெண்ணெய் கண்ணன்.
“நினைக்காத நேரமில்லை கோவிந்தனே!
இங்கு எனக்காக வர வேண்டும் கோபாலனே!”
எனப் பாடிக்கொண்டே, பஸ்க்கு நேரமாயிடுத்தே என பர பரப்பாய் கிளம்பிச்செல்ல, அவளுக்காகவே காத்திருந்த பேருந்து நிறுத்தம், பேருந்து இன்னும் போகவில்லையடி என் கண்ணம்மா, என சொல்ல வாயின்றி தவித்து நின்றது.
பதட்டமாய் கையில் கட்டியிருந்த கடிகாரத்தையும், கண்ணுக்கு எட்டிய தூரம் வரையும் பார்த்துக் கொண்டிருந்த அவளிடம், தாத்தா வயது நிரம்பிய முதியவர்,24ஆ- மா அது இன்னும் வரலம்மா பதட்டப்படாதன்னு சொல்லவும், கண்ணம்மாவோடு சேர்ந்து அந்த பேருந்து நிறுத்தமும் சற்றே சமாதானம் அடைந்திருந்தது.
நன்றி தாத்தா, என்ற அவளிடம், தானும் 24 க்காகத்தான் காத்திருப்பதாகவும், தான் ஓய்வு பெற்ற ஆசிரியர் என்றும், தன் பெயர் கோபால கிருஷ்ணன் என்றும் அறிமுகம் செய்து கொள்ள,அடடே! நம்ம கிருஷ்ணா என அகம் நினைத்த கணமே, முகம் புன்னகை அணிந்து மின்னியது.
அதற்கு மேலும் காக்க வைக்க விரும்பாத பேருந்து பறந்து வர, இருவரும் ஏறினர். இருக்கையில் அமர்ந்து நிமிர்ந்தவளை பார்த்து முன்னால் நாட்காட்டியாய் நின்று கொண்டிருந்த கண்ணன் புன்னகைத்தான்.
கண்ணா! இங்க தான் இருக்கியா? என பதிலுக்கு சிரித்து விட்டு ஜன்னல் வழியே பார்வையை ஓட விட, பக்கத்தில் சிறு குழந்தையோடு பெண்ணொருத்தி வந்தமர்ந்தாள். அந்த குழந்தையின் கண்களுக்கு கண்ணம்மா அவர்கள் சொந்தம் போல் தெரிந்து விட, கையை பிடித்து இழுத்தது. என்னடா தங்கம் என்று கொஞ்சியவாறே உன் பேர் என்ன என கேட்க, அந்த குட்டி சொந்தத்தின் அம்மா ஹரி கிருஷ்ணா எனக்கூற, அட கண்ணா நீதானா? என மன மொழி பேச அழகா இருக்கு டா உன் பேர் என மறுமொழி பேசி விட்டு கண்ணனை பெற்றவள் கையில் தர, அடுத்து வந்த நிறுத்தத்தில் அவர்கள் இறங்கி விட்டனர்.
அந்த இடத்தை நிரப்ப வந்த பாட்டி ஒருத்தர், அமர்வதற்குள் தடுமாற, பாட்டி பாத்து வாங்க என கை பிடித்து அமரச் செய்ததும், தோலும் தசையும் தனித்தனியே பிரிந்து விரல்களோடு நாங்களும் இருக்கிறோம் என எட்டிப்பார்த்த நரம்புகளோடு சற்று நடுக்கத்தோடு கன்னம் வருடி நெட்டி முறித்த போது, அம்மாச்சியின் நினைவு துளித்துளியாய் கண்ணம்மாவின் கண்களை நிறைத்தது.
எத்தனை முறை வெந்துடுச்சா? வேகலையா? வேகல அம்மாச்சி உங்க தோல் ஈஸியா வருது னு விளையாடி இருப்பாள். இந்த பாட்டி யின் செயல் அம்மாச்சியை சற்று வேகமாக இழுத்து கொண்டு வந்து கண்களில் நிறுத்தியிருந்தது.
அந்தப் பாட்டி இனிப்பின் காரணமாக சிலவற்றையும், இளமையின் இழப்பு காரணமாக சிலவற்றையும் இழந்து பொக்கை வாய் திறந்து சிரித்து கொண்டே என் பேத்தி மாறியே இருக்க உன் பேர் என்ன டா? என கேட்க, கண்ணம்மா என இதழ் மொழிந்த நேரத்தில், இதயத்தில் ஒரு மின்னல் கீற்று..
கண்ணன், கண்ணம்மாவினுள்ளும் சிரித்து கொண்டிருந்தான்.