சுமக்காதவர்கள்….!
கதையாசிரியர்: காரை ஆடலரசன்
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: February 16, 2026
பார்வையிட்டோர்: 3,121
(2004ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 3-4 | அத்தியாயம் 5-6 | அத்தியாயம் 7-8
அத்தியாயம் – 5
‘இவ்வளவு நேரம் சாமியாரிடம் சாமியாரிடம் என்ன பேச்சு, என்ன சொன்னார்? என்று மதர் சுப்பீரியரோ தலைமை ஆசைரியையோ கேட்டால் என்ன சொல்ல?’ பள்ளிக்கூடத்தை நோக்கி நடந்த பிலோமினாவிற்குள் யோசனை ஓடியது.
‘நிச்சயம் உண்மையைச் சொல்ல முடியாது. சொல்லக்கூடாது!’
‘உள்ளூர்க்காரர் அப்பா அம்மா நலன் விசாரித்தார். சொல்லலாம். அதற்கா இவ்வளவு நேரம்? அவர்கள் கண்களில் சந்தேகம் துளிர்க்கும். வேறு என்ன சொல்ல?…’ கால்கள் நடக்க நடக்க யோசனையைத் துரிதப்படுத்தினாள்.
‘கலாவைப் பற்றி விசாரித்தார். அவள் குண நலன் எப்படி. வகுப்பில் நல்ல பெண்ணா, சூட்டிகையா, ஒழுங்காக படிப்பவளா விசாரித்தார். அடுத்து வகுப்பில் எப்படி நடந்து மாணவ மாணவிகளைக் கண்காணிக்க வேண்டும், படிப்பு சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று உபதேசித்தார் சொல்லி சமாளிக்க வேண்டும்!’ முடிவெடுத்துக் கொண்டு வளாகத்தினுள் நுழைந்து தலைமை ஆசிரியை அறைக்குள் சென்றாள்.
அங்கு ஒரு கூட்டமே கூடி இருந்தது. மதர் சுப்பீரியர், தலைமை ஆசிரியை எதிரில் நான்கைந்து முக்கிய ஆசிரியைகள் இருந்தார்கள்.
இவள் உள்ளே நுழைந்ததுமே, “வா பிலோமினா?” ஏஞ்சல் அழைத்தாள். “உட்கார்” பணித்தாள்.
ஆசிரியைகளுடன் அமர்ந்தாள்.
‘ஏதாவது முக்கிய முடிவெடுக்க வேண்டுமென்றால்தான் இந்த ஆலோசனைக் கூட்டம் கூடும். இன்று என்ன முடிவெடுக்கப் போகிறார்கள்?’ புரியாமல் பார்த்தாள்.
“நாங்க கலாவை இந்த பள்ளிக்கூடத்தை விட்டு நீக்கிறதைப் பத்தி முக்கிய முடிவு எடுக்கறோம்!” ஏஞ்சல் சொல்லி இவள் வயிற்றுக்குள் கத்தி சொருகினாள்.
‘ஏன்?’ பிலோமினா துடித்துப் போய்க் கேட்டாள்.
“அவளால நமக்கு அவமானம். பள்ளிக்குக் கெட்ட பேர். இந்த தாக்கம் நாளைக்கு அட்மிசன் குறையலாம்.” ஏஞ்சல் தொடர்ந்து சொன்னாள்.
கூடி இருந்த மற்ற எவரும் வாயைத் திறக்கவில்லை. எல்லா நேரங்களிலும் அப்படித்தான். தலைமை ஆசிரியைச் சொல்வதைத்தான் கேட்டுக்கொண்டு செல்வார்கள். எதிர்த்துப் பேசினால் தொந்தரவு, வேலை போனால் கஷ்டம் என்றெல்லாம் பயம். ஆகையால் அவள் சொல்வதை ஏற்றுச் செல்வார்கள். நிர்வாகமும் இப்படி சாதகமான இப்படி சாதகமான ஆட்களைத்தான் தங்களுக்குத் துணையாய் கமிட்டியில் வைத்துக் கொள்ளும்.
“என்ன முடிவு?” பிலோமினா தலைமை ஆசிரியைத் திகிலாய்ப் பார்த்தாள்.
“நீக்கிறதா முடிவு. உன்னை அடுத்து ஒரு முக்கிய ஆள் வரனும். காத்திருக்கோம்.”
“யார்?”
“கோயில் சாமியார்!”
‘லாரன்சும் வந்து சம்மதித்து கையெழுத்துப் போட்டால்தான் நடவடிக்கையே எடுக்க முடியும்!’ பிலோமினாவிற்குள் தெம்பு வந்தது,
“நம்ம கோமதியை விட்டு அழைக்கச் சொன்னேன். நீங்க ரெண்டு பேரும் பேசிகிட்டிருக்கிறதா வந்து சொன்னாள். எனக்கு இடையில உங்களைத் தொந்தரவு கொடுக்கக் கூடாதுன்னு எண்ணம்.” என்றவள் இன்டர்காம் எடுத்து எண்ணை அழுத்தினாள். யாரும் எடுக்கவில்லை. வைத்தாள்.
“ஏன் ஏஞ்சல்?“ மதர் சுப்பீரியர் அபூர்வமாக வாயைத் திறந்து கேட்டாள்.
“ஆள் இல்லே.கீழே யாருடையோ பேசிக்கிட்டிருக்கார்ன்னு நெனைக்கிறேன்.” என்றவள், “பிலோமினா! கலா வகுப்பாசிரியை, கமிட்டி உறுப்பினர் முறையில உன்னோட கருத்து?” தலைமை ஆசிரியை இவளைப் பார்த்து கேட்டாள்.
“தப்பு மேடம்!”
அவள் முகம் விழுந்தது.
அதே சமயம் கோமதி சொல்லி லாரன்சு உள்ளே நுழைந்தான்.
“உட்காருங்க.”
அமர்ந்தான்.
மதர் சுப்பீரியரும் தலைமை ஆசிரியையும் மாறி மாறிச் சொல்லி, “கலாவை நீக்கிறதா முடிவு சரிதானே?!” ஏஞ்சல் தன் கருத்திற்குப் பலம் சேர்க்க ஆவலாய்க் கேட்டாள்.
“சரி இல்லே.” லாரன்சு திடமாக சொன்னான்.
பிலோமினாவிற்கு உயிர் வந்தது,
இவர்கள் இது குறித்துதான் கலந்து பேசி வந்திருப்பார்களோ என்பது போல் மற்றவர்கள் இவர்களைப் பார்த்தார்கள்.
திடுக்கிட்ட தலைமை ஆசிரியை, “ரெண்டு பேரும் கலந்து பேசிதான் வந்தீங்களா?” தன் சந்தேகத்தை வாய்விட்டே கேட்டாள்.
‘இல்லே!“ லாரன்சு உண்மையைச் சொன்னான்.
“பின்னே எப்படி ரெண்டு பேரும் ஒரே பதிலைச் சொல்றீங்க?!“
அப்போதுதான் பிலோமினாவும் ‘தவறு’ சொல்லி இருக்கிறாள் என்பது லாரன்சுக்குப் புரிந்தது.
“தப்பைத் தப்புத்தானே தப்புத்தானே சொல்லனும் மேடம்!?” ஏறிட்டான்.
புரியாமல் பார்த்தார்கள்.
“கலா நல்லா படிக்கிற பெண் மேடம். அதிலும் இந்த வருசம் பத்தாம் வகுப்பு பள்ளி இறுதி கட்டம். இப்போ நடப்பு மாசம் சனவரி. மார்ச் மாதம் இவளுக்கு அரசாங்கத் தேர்வு. இந்த நேரத்துல போய் அவளைப் பள்ளியை விட்டு நீக்கினோம்ன்னா அவள் மனசு பாதிச்சு தேர்வு எழுதுறது கஷ்டம். எதிர்காலம் பாதிக்கும். நல்லதோ கெட்டதோ அவள் தேர்வு முடிவு வெற்றியோ தோல்வியோ… நாம எந்த ஒரு முடிவும் எடுக்காம விட்டோம்ன்ன அவள் தேர்வுல தவறினாலும் பழி நம்ம மேல வராது. தேர்வுல தவறினாலும் கலாகிட்ட குறைஞ்சபட்ச கல்வித்தகுதி இருக்கும். நாம மாணவ மாணவிகள் எதிர்காலத்தைப் பார்த்துதான் எந்த ஒரு முடிவும் எடுக்கனுமேத் தவிர அவள் நடப்பை வைத்து நடவடிக்கை எடுக்கக் கூடாது, அந்த அடிப்படையிலதான் நான் தப்புன்னு சொன்னேன்.” பிலோமினா தன் கருத்தைச் சொன்னாள்.
“ஃபாதர் நீங்க?” ஏஞ்சல் லாரன்சைப் பார்த்தாள்.
“பிலோமினா ஒரு ஆசிரியைப் பொறுப்பிலேர்ந்து தன் கருத்தைச் சொன்னாங்க. ரொம்ப சரி. நான் பொதுப்படையா எல்லாம் யோசிச்சு சொன்னேன். இந்த நீக்கம் கலா மனசைப் பாதிச்சு அவள் தற்கொலை முடிவுக்குப் போனால்…போலீஸ் அவள் மேல தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யிறதோட விடாம நம்மையும் தற்கொலைக்குத் தூண்டியதாக குற்றவாளியாய்ப் பதிவு செய்து அலைக்கழிக்கும். அப்படியே இந்த விசயம் பத்திரிக்கைங்களுக்குப் போனால் பள்ளிக்கூடத்துப் பேர் பெரிசா பாதிக்கும்.”
“அடுத்து அவள் தற்கொலை முயற்சியே தொடலைன்னாலும் நீக்கியதற்கு விளக்கம் கேட்டு அவள் அம்மா அப்பா நியாயம் கேட்டு நம்மகிட்ட வருவாங்க. போலீஸ் உதவியை நாடுவாங்க. மாணவி பாதிப்பு. நிச்சயம் எல்லா அரசியல் கட்சியும் சேர்ந்து நியாயம் கேட்கும். கெடைக்கலைன்னா… போராட்டம் அது இதுன்னு போவாங்க. நாம அரசாங்க அங்கீகாரம் பெற்ற பள்ளி. அரசாங்க உதவித் தொகையும் நம்ம நிர்வாகத்துக்கு வருது. விசயம் பெரிசா போகும்போது அரசாங்கமும் சும்மா இருக்காது. அதுவும் நம்மை விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கும். அது உதவித்தொகை பாதிப்பை ஏற்படுத்தும். பாதிப்பை ஏற்படுத்தும். அவள் பாதிப்புனால பள்ளிக்கூட மாணவ மாணவிகளும் சும்மா இருக்க மாட்டாங்க. போராட்டத்துல குதிப்பாங்க. அப்படி குதிச்சாங்கன்னா விசயமே வேற”
“பள்ளிக்கூடத்து வளர்ச்சி உயிர் நாடியே மாணவ மாணவிகள் சேர்க்கைதான். நாம் வருசா வருசம் கட்டிடம் கட்டுறோமோ இல்லையோ கட்டிட நிதின்னு சொல்லி புது மாணவ மாணவிகள்கிட்ட நாம மானாவாரியாய் ஒரு பெரிய தொகை வசூல் செய்து நிர்வாகத்துக்கு நிறைய பணம் சேர்க்கிறோம். நாம் நடவடிக்கை எடுத்து விசயம் பெரிசானால் அது நிச்சயம் மாணவர்கள் சேர்க்கையைப் பாதிக்கும். ஒரு வருட பாதிப்பு நிமிர பல வருடங்களாகும். நம்ம பள்ளி பெரிசா இப்படியொரு கெட்ட பெயரைச் சம்பாதிச்சால் அது மறைய பல வருடங்களாகும். திடீர்ன்னு விழுந்த மாணவர்கள் சேர்க்கை கொஞ்சம் கொஞ்சமாய் நிமிர காலங்களும் ஆகும்.” நிறுத்தினான்.
எல்லாரும் ஆடிப்போய் அவனைப் பார்த்தார்கள்.
ஏஞ்சல் முகத்தில் ஈயாடவில்லை.
லாரன்சு தொடர்ந்தான், “கலா மேல் நடவடிக்கை எடுக்காமல் இந்த விசயத்தை இதோட விட்டோம்ன்னா சேதி பத்துப் பேருக்குத் தெரிஞ்சதோட முடிஞ்சுடும்.. நடவடிக்கை எடுத்து ஊதி பெரிசாக்கினால் அழிஞ்சோம். அடுத்து இது பெரிய தப்பும் இல்லே. வயசு கோளாறுல. இது மாணவ மாணவிகளிடையே ஏற்படுற சாதாரண தவறு. கலா மேல நடவடிக்கை எடுக்கிறது தப்பு.” முத்தாய்ப்பாய்ச் சொல்லி முடித்தான்.
தலைமை ஆசிரியை ஏஞ்சலுக்கு இதில் திருப்தி இல்லை. மேலும் அவளுக்குத் தோல்வி என்பது அவமானம்.
“ஃபாதர்! நீங்க அதிகமா பயமுறுத்துறீங்க. பள்ளி நிர்வாகத்துல தப்பு செய்த மாணவ மாணவிகளுக்குத் தண்டனை கொடுக்கனும். கலா மேல நடிவடிக்கை எடுக்காம விட்டோம்ன்ன நாளைக்கு இந்த தவறை இன்னொருத்தன் செய்வான். இன்னொருத்தி செய்வாள்.” கொஞ்சம் காட்டமாக சொன்னாள்.
“அப்படி தவறு செய்யாமல் இருக்கத்தான் நம்ம கண்காணிப்புத் தேவைன்னு சப்-இன்ஸ்பெக்டர் சொன்னார். அதிலும் அதிக கண்டிப்பு கூடாதுன்னு எச்சரித்தார்.” என்றான்.
மதர் சுப்பீரியருக்கு விசயம் புரிந்தது.
“ஏஞ்சல்! கலா மேல நடவடிக்கை எடுக்க வேணாம். விட்டுடுடலாம்“ பின் வாங்கினாள்
ஏஞ்சலுக்கு இப்போதுதான் ஆட்டம் கண்டது.
“ஓ.கே.” மனமில்லாமலேயே தலையசைத்தாள்.
கூட்டம் முடிந்து எல்லாரும் கலைந்தார்கள்.
‘என்ன ஒரு அறிவு தெளிவு!’ பிலோமினா லாரன்சைப் பற்றி நினைத்துக் கொண்டு வகுப்பிற்குச் சென்றாள். அதே போல…
‘என்ன ஒரு பொறுப்பு திறமை?! இதெல்லாம் ஒரு பணக்காரப் பெண்ணிடம் எப்படி வந்தது. கன்னிகாஸ்திரி பாடம் ஆசிரியைப் பயிற்சியா?!’ லாரன்சும் பிலோமினாவைப் பற்றி உயர்வாக நினைத்துக் நினைத்துக் கொண்டு தன் இருப்பிடம் நோக்கி நடந்தான். மாடி ஏறி வரண்டாவைத் தொட்டவனுக்கு இன்னொரு நினைவு வந்தது.
இன்டர்காம் எடுத்து காதில் வைத்து, “மேடம்! உங்க உடற்பயிற்சி ஆசிரியர் பாலன் இருக்காரா?“ ஏஞ்சலைக் கேட்டான். “இருக்கார் ஃபாதர்!” வெறுப்பைக் காட்டிக் கொள்ளாமல் பவ்வியமாக சொன்னாள்.
“அவர் வகுப்பு இல்லாம ஓய்வில் இருந்தால் என்கிட்ட அனுப்புங்க.” வைத்தான்.
பாலன் துடிப்பான இளைஞன். வயது இருப்பதைந்து. வந்து சேர்ந்த இரண்டாண்டுகளிலேயே பெண் உடற்பயிற்சி ஆசிரியையை ஓரம் கட்டி மாணவ மாணவிகளைப் பெண்டெடுத்து மாநிலம், தேசிய அளவில் சென்று வெறும் பரிசுகளாய் வாங்கி பள்ளியை நிரப்பி இருக்கிறான். ஆளைப் பார்த்தாலே நல்ல விளையாட்டு வீரன் என்று சொல்கிற அளவிற்கு நல்ல உடல்வாகு அழகு.
அவன் லாரன்சு இருப்பிடம் வந்தான்.
“வணக்கம் ஃபாதர்!”
“உட்காருங்க. உங்களுக்கு டென்னிஸ் பிடிக்குமா?”
“நல்லா விளையாடுவேன்.” எதிரிலமர்ந்தான்.
“நானும் விளையாடுவேன்”
ஏறிட்டான்.
“எனக்குத் தினம் காலை உடற்பயிற்சி செய்து பழக்கம்.. இங்கே டென்னிஸ் கிரவுண்ட் தயார் செய்து நாம ரெண்டு பேரும் பூசை நேரம் பாதிக்காம காலையில விளையாடலாமா?”
“விளையாடலாம் ஃபாதர்!”
“உங்களுக்குச் சிரமம் இல்லியே?!”
“இல்லை ஃபாதர் எனக்கும் சரியாய் விளையாட ஆளில்லாமல் காலை மாலை ஓடி பொழுதைக் கழிக்கிறேன்.”
“சந்தோசம். இங்கே கோயிலைச் சுத்தி நிறைய இடம் இருக்கு. எங்கே விளையாட்டிடம் தயார் செய்யலாம்?”
“கிழக்கு மேற்குப் போட்டால் சூரிய ஒளி கண்ணை மறைக்கும். அந்த பாதிப்பு இல்லாம நாம எங்கே வேணும்ன்னாலும் போடலாம் ஃபாதர். அடுத்து இன்னொரு யோசனை ஃபாதர்!”
“சொல்லுங்க?”
“உங்களுக்கு ஷட்டில் விளையாடுவீங்களா?”
“நான் அதுல நான் மாநில அளவுல வீரன்!“
“அப்படின்னா நாம இங்கே ஷட்டில் விளையாடலாம்.”
“ஏன்?“
“டென்னிஸ் கிரவுண்ட் இன்னைக்குத் தயார் செய்து நாளைக்கு விளையாட முடியாது. பணச் செலவும் அதிகமாகும். ஷட்டில்ன்னா இப்பவே ரெண்டு போஸ்ட் நட்டு உடனே விளையாடலாம். நெட் பேட் எல்லாம் பள்ளிக்கூடத்துல இருக்கு. அது தேவை இல்லேன்னாலும் வாங்கிக்கலாம். செலவு குறைவு“ சொன்னான்.
“நல்ல யோசனை!” என்று மகிழ்ந்த லாரன்சு, “உடனே ஏற்பாடு செய்யுங்க. பள்ளிக்கூடத்து பொருள் ஏதுவும் வேணாம். செலவை நான் ஏத்துக்கிறேன்.” என்றான்.
“வேணாம் ஃபாதர் பகிர்ந்துக்கலாம். போஸ்ட் எங்கே நடலாம்?”
“உங்க விருப்பம். இந்தாங்க பணம்!” இரண்டு ஐநுாறு ரூபாய் நோட்டுக்களை நீட்டினான்.
“இப்பவே வேலையை ஆரம்பிச்சுடுறேன்.” பெற்றுக் கொண்டு எழுந்த பாலன், “உதவிக்கு உங்க ஆள் ஆரோக்கியசாமியை அழைச்சுக்கிறேன்.” சொல்லி படி இறங்கினான்.
“தாராளமா…” உள்ளே சென்றான்.
நான்கு மணிக்கெல்லாம் ஆரோக்கியசாமி கோயிலுக்கும் பள்ளிக்கூட சுற்றுச்சுவருக்கும் இடையில் உள்ள பெரிய இடத்தில் போஸ்ட் நடும் வேலையில் மும்முரமாக இருந்தான். கடப்பாறையை வைத்துக் கொண்டு குழி தோண்டினான்.
அத்தியாயம் – 6
வழக்கம் போல் காலை ஆறு மணிக்கெல்லாம் கண்களைத் துடைத்துக் கொண்டு எழுந்து வெளிச்சத்திற்காக கதவைத் திறந்த கன்னிகாஸ்திரி காதரீனுக்கு காட்சி ஆச்சரியமாக இருந்தது.
அவசரமாக பேஸ்ட் பிரஷ் எடுத்து வாயில் இடுக்கிக் கொண்டு பிலோமினா அறைக்கதவைத் தட்டினாள்.
ஏற்கனவே முகம் கழுவி பல் விளக்கி பைபிள் படித்துக் கொண்டிருந்த அவள் திறந்தாள்.
நைட்டி, வாயில் பிரஷுமாக இருந்தவளைப் பார்த்து, “என்ன?“ என்றாள்.
உள்ளே நுழைந்து கதவை அடைத்த அவள் எச்சிலை வாஷ்பேசனில் துப்பிவிட்டு, “மொதல்ல சன்னலைத் திறந்து அதிசயத்தைப் பாரு” என்றதோடு நிற்காமல் அவளே சன்னலைத் திறந்து விட்டாள்.
பிலோமினா பார்த்தாள்.
வெள்ளை அரைக்கால் சட்டை, டி ஷர்ட். காலில் வெள்ளை சாக்ஸ், கேன்வாஸ் ஷு சகிதம்… லாரன்சும், உடற்பயிற்சி ஆசிரியர் பாலனும் ஷட்டில் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
பாலனைவிட லாரன்சு அந்த உடை கையில் பேட்டுடன் பார்க்க படு அழகு, அமர்க்களமாய் இருந்தான். சினிமா நடிகர்கள் கவர்ச்சியில் இருந்தான். பிலோமினாவிற்கே கண் பட்டுவிடும் போலிருந்தது,
விளையாட்டும் சுறுசுறுப்பாக இருந்தது.
“ஃபாதர் துாள் கிளப்புறாரில்லே!?” காதரீன் முகத்தில் மகிழ்ச்சி மின்னியது
பிலோமினாவிற்கும் சந்தோசமாக இருந்தது. அடைக்க மனமில்லாமல் கட்டிலில் அமர்ந்து பார்த்தாள்.
“போன ஃபாதர் சரியான கிழம். நரைத்த தலை. வெண் தாடி மீசை. படு கிளாமரான கிழவரா இருந்தாலும் பூசை நேரத்தோட சரி. அடுத்து வரண்டாவை விட்டு கீழே இறங்காமல் பைபிளும் கையுமாய் இருந்தார். இவரைப் பாரு இள ரத்ததுக்கு ஏற்ற மிடுக்கு, உடற்பயிற்சி. இப்போ இந்த ஆள் இந்த மாதாக் கோயில் சாமியார், பூசை வைக்கிறவர்ன்னு நாம அடையாளம் காட்டினாக்கூட யாரும் நம்ப மாட்டாங்க. இன்னொன்னு சொல்ல மறந்துட்டேனே நேத்து ராத்திரி எட்டு மணிக்கு நான் கடைத்தெரு போய் பேஸ்ட், பிரஷ் வாங்கினேன். அப்போ டி ஷர்ட் பேண்ட் செண்ட் மணத்தோட ஒரு ஆள் என் பக்கத்துல வந்து பூஸ்ட் வாங்கினார். திரும்பிப் பார்த்தால் இவர். ஆடிட்டேன்.” சொன்னாள்
‘இவளென்ன லாரன்சு புகழ் பாடுகிறாள்!’ பிலோமினாவிற்குக் கஷ்டமாக இருந்தது. பிடிக்கவில்லை.
காதரீன் முகத்தில் வெட்கத்தின் சாயலும் செம்மையும் கலந்திருப்பது வேறு கடுப்பாக இருந்தது,
கன்னிகாஸ்திரிகளின் அடிப்படை பாடமே இந்த வெட்கம், நாணம் விடல்தான். முதல் நாளே இந்த பாடம்தான்.
“மொதல்ல மனுச ஆண், பெண் நெனப்பு உருவம் உங்க மனசை விட்டு மறையனும். அச்சம், நாணம், வெட்கம் விடனும். மனசுல கர்த்தர் நினைவைத் தவிர மற்ற குப்பைகள் இருக்கக்கூடாது. அன்பு, ஆசை, பாசத்தையெல்லாம் அறுத்துட்டு கர்த்தரே நான் உனக்கு தொண்டு செய்யும் அடிமைன்னு மனசுக்குள்ளே சொல்லி அதுவாகவே ஆகிபோய்….சுத்தமான கன்னிகாஸ்திரியாய் மாறிப்போகனும். இந்த சீருடையும் சுருவமும் எந்த நேரமும் கழட்டக்கூடாது!” என்பதுதான்.
காதரீன் அவள் நினைவை வெட்டினாள்.
“இப்போ ஃபாதர், கன்னிஸ்திரியெல்லாம் ரொம்ப மாறியாச்சு பிலோமினா. இருபது வருசத்துக்கு முன்னால யார் கர்த்தருக்குச் சேவை செய்ய வந்தாலும் கடைசி வரை கன்னிகாஸ்திரி, ஃபாதர் உடை சுருவம். அறுபது வயசுக்கு மேலுள்ள கன்னிகாஸ்திரி ஃபாரெல்லாம் இன்னைக்கும் அப்படித்தான் பழய பாரம்பரியம் மாறாம இருக்காங்க. ஆனா…. இன்னைக்கு நாம பொழைப்புக்கு வேசம் கட்டுறாப்போல வேலை நேரம் கன்னிகாஸ்திரி சீருடை படுக்கையில நைட்டின்னு மாறிட்டோம். சாமியார்கள் பூசை நேரம் தவிர மத்த நேரங்கள்ல சாதாரண உடையில அலையுறாங்க. ஏன்… நம்ம வேளாங்கண்ணியிலேயே இந்த கூத்து நடக்குது. ஃபாதர் பூசை முடிச்ச அடுத்த நிமிசம் பேண்ட், டி ஷர்ட்ல பைக்ல கிளம்புறார்.”
“அன்னைக்கு சாமியார், கன்னிகாஸ்திரிங்க பைபிள், ஜெப மாலைகளைத் தவிர வேற எதையும் தொடாம இருந்தாங்க. இன்னைக்கு அஞ்சு வருச படிப்பு, பயிற்சியில அதைத் தொட்டது போதும்ன்னு தின, வார, மாத பத்திரிக்கைகள் படிக்கிறாங்க. நாமளும் இந்த உலகத்துலதான் இருக்கோம், வாழ்றோம், உலக நடப்புத் தெரியனும்ங்குற விசால மனம். நல்ல மதப்போதகராய் இருக்கிறதை விட நல்ல மனுசனாய் இருக்கிறதுதான் நாட்டுக்கும் நமக்கும் நல்லதுன்னு நெனைச்சு சிலர் தானாக போய் மக்களுக்கு நல்லதும் செய்யுறாங்க. மக்கள் மனதுல ஆழமாய்ப் பதியறாங்க. அதைத்தான் கர்த்தர் விரும்புறார்ங்குறது என் கருத்து.” சொல்லி முடித்துச் சென்றாள்.
‘காதரீன் எவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறாள்!?’ பிலோமினாவிற்கு நினைக்க வியப்பாய் இருந்தது.
‘இப்போது சில சாமியார்கள் நல்ல மதப்போதகர்களாக மட்டும் இருப்பதில்லை. கஷ்டப்படும் மக்களுக்குத் தன்னால் முடிந்த அளவு கருணை உள்ளத்தோடு உதவுகிறார்கள். பொதுத் தொண்டுகள் செய்கிறார்கள். முன்னேற உதவிகள் செய்து அதில் அக்கறையும் காட்டுகிறார்கள்‘.
‘கன்னிகாஸ்திரிகள் செவிலிப் பணி, கல்விப் பணி என்று பிரிகிறார்கள். அனாதை இல்லம், முதியோர் இல்லம் நடத்துகிறார்கள். மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று நடைமுறைப் படுத்துகிறார்கள்.’
‘நாம் கல்விப் பணி செய்கிறோம். மக்கள் அறிவுக்கண் திறக்கிறோம். லாரன்சு என்ன செய்கிறான்? பூசை நேரம் தவிர படிப்பு, ஆட்டம்தானா? எப்போதிருந்து எப்போதிருந்து ஆடுகிறார்கள்?’ எண்ணங்களைச் சுழல விட்டவாறு…
பிலோமினா நைட்டியிலிருந்து சீருடைக்கு மாறி பணிக்குச் செல்ல ஆயத்தமானாள்
பாலனும் லாரன்சும் விளையாடி முடித்து பிரிந்தார்கள்.
லாரன்சு தன் இருப்பிடம் சென்று வரண்டாவில் நின்று வியர்வை சட்டையைக் கழற்றி கொடியில் போட்டான். உடல் திண்ணென்றிருந்தது,
அப்போது வேலைக்காரி கீழிருந்து குடத்தில் குடி நீர் எடுத்துக் கொண்டு மேலே செல்ல படி ஏறினாள்.
பார்த்த பிலோமினாவிற்குள் கலவரம் வந்தது.
‘விளையாடி களைத்தவனுக்கு இவள் வெந்நீரும் விளாவி வைக்கலாம்!‘ நினைக்க என்னவோ போலிருந்தது.
‘உதவிக்கு ஆரோக்கியசாமியே போதும். இவளெதற்கு அநாவசியம்!?’ யோசனை வந்தது.
விடுதியை விட்டு இறங்கி தலைமை ஆசிரியையிடம் போய் வெளி ஆசிரியைகள் போல் மண்டியிட்டு ஆசி பெற்று வகுப்பறைக்குள் நுழைந்தாள்
கலா வந்திருந்தாள். நேற்றைய சுவடுகள் எதுவும் அவள் முகத்தில் இல்லை. ‘தனியே அழைத்து பேச்சுகள் கொடுத்து உபதேசம் செய்யலாமா?’ தோன்றியது.
‘தெளிந்து பழையபடி மாணவியாய் வந்திருக்கும் போது எதற்கு வீண் பேச்சு பேசி குப்பையைக் கிளற வேண்டும். மனம் புண்பட செய்ய வேண்டும்!? ‘ ஒதுக்கினாள்.
‘இவர்கள் காதல் ஜெயிக்குமா. தோற்குமா சப்-இன்ஸ்பெக்டர் கமலநாதன் சென்னதை எல்லாரும் கடைப்பிடித்ததார்கள் என்றால் இரண்டு வருட முடிவில் இவள் திருமண வயதைத் தொடும்போது கண்டிப்பாக காதல் இருக்காது’, நினைக்க மனம் லேசாக இருந்தது.
வகுப்பு நேரம் முடிந்து இவளுக்கு அடுத்து ஓய்வு அதற்கு அடுத்துதான் வகுப்பு. மணி அடித்ததும்தான் அடுத்த வகுப்பிற்கு தான் ஆயத்தமாகதது நினைவிற்கு வந்தது. வகுப்பறையை விட்டு வெளியே சென்ற பிலோமினா திரும்பி வந்து “ஜூலியா!“ அழைத்தாள்.
வகுப்பில் அவள்தான் முதல் மாணவி. நன்றாக படிப்பதோடு மட்டுமில்லாமல் எதையும் மறக்காமல் எடுத்து வருவாள். எந்த நோட்டு புத்தகங்களும் அவளிடம் சுத்தமாக இருக்கும். பார்க்க அழகாகவும் இருப்பாள்.
“என்ன மிஸ்!” எழுந்தாள்.
“உன் கணக்குப் புத்தகம் கொடும்மா.” கேட்டாள் அவள் தனக்கு முன் பெஞ்ச் மீது இருந்ததை எடுத்து வந்து பிலோமினாவிடம் கொடுத்தாள்.
அதே சமயம் அவளுக்குப் பின் அமர்ந்திருந்த மாணவன் வேர்த்தான்.
– தொடரும்…
![]() |
என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க... |
