அன்பின் வழி அது!
கதையாசிரியர்: நா.க.தங்கரத்தினம்
தின/வார இதழ்: ஈழநாடு
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: January 11, 2026
பார்வையிட்டோர்: 390
(1965ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
“பிள்ளை! பிள்ளை!! உந்தக் கதவைத் திற பிள்ளை” என்று கூறிக்கொண்டே மழையில் நனைந்து வந்த கந்தசாமி வாத்தியார் கதவிலே தட்டினார்..அவர் வீட்டில் இருந்து வரும்பொழுது மழை பெய்யுமென்று கனவி லும் நினைக்கவில்லை. அவர் நடந்து வரும்பொழுது பாதி வழியிலேயே மழை பெய்யத் தொடங்கிவிட்டது. கந்தசாமி வாத்தியாரோ எந்த நேரமும் குடையுடன்தான் வெளிவருவார். இன்றும் குடையுடன்தான் வந்தார். ஆனால் அவரது குடையில் பொத்தல்கள் பல இருந்த தால் மழை அவரை நனைத்துவிட்டது.
கந்தசாமி வாத்தியாரின் குரல் கேட்டதும் குசினி வேலையை விட்டுவிட்டு, ஓடி வந்து கதவைத் திறந்தாள் சரோஜா. கந்தசாமி வாத்தியார் கதவின் அருகிலே நின்றார். அவரின் உடையெல்லாம் நனைந்திருந்தது. தலையில் இருந்தும் தண்ணீர் வடிந்துகொண்டிருந்தது. ஏன் பெரியப்பு இந்தச் சோனாவாரி மழையுக்குள் வந்தனீங்கள். உடுப்பெல்லாம் நனைஞ்சு போச்சு. உதை யெல்லாம் கழட்டிப்போட்டு இந்தச் சாரத்தைக் கட் டுங்கோ” என்று சொல்லித் தனது தகப்பனாரின் சாரம் ஒன்றைக் கொண்டுவந்து கொடுத்தாள் சரோஜா.
கந்தசாமி வாத்தியாருக்குத் தம்பியாரின் சாரத் தைக் கட்ட ஒரு மாதிரியாகத்தான் இருந்தது. அவர் கட்டவா விடவா என்று யோசித்துக்கொண்டு இருந்தார்.
“என்னணை யோசிக்கிறியள். தம்பியாற்றை சாரம் தானே. மேலெல்லாம் விறைக்கப்போகுது. கெதியாக கட்டணை” என்று ‘சொல்லிக்கொண்டே கோப்பி தயா ரிப்பதற்காகக் குசினிப்பக்கம் சரோஜா போவதற்கும் சரோஜாவின் தாயார் பூரணம் நித்திரையிலிருந்து எழும்பி வருவதற்கும் சரியாக இருந்தது.
“என்ன நாலுமணியாகவில்லை. நித்திரை கொண்டு விட்டு வாறியள் போலைக் கிடக்கு.. நித்திரை எண்டா அதற்கு ஒரு அளவு கணக்கு வேண்டாமோ? தாய் மாரைப் பார்த்துத்தானே பிள்ளையளும் பழகிறது” என்றார் கந்தசாமி வாத்தியார்.
“இண்டைக்கு மழை ஒரு மாதிரிக் கிடந்தது. நித்திரை வந்துவிட்டது” என்றாள் பூரணம்.
“தம்பி எங்கே போவிட்டான்?”
“அவர் உங்கைதான் படுத்திருக்கிறார்.”
“என்ன அவனும் நித்திரை கொள்ளுகிறானோ? பின்னை இரண்டு பேரும் நித்திரை கொண்டனாங்கள் எண்டு சொல்லன்.” குறும்பாகச் சொல்லிச் சிரித்தார் கந்தசாமி வாத்தியார். பூரணமும் அவரது குறும்புப் பேச்சு விளங்கியது போல் அவருடன் சேர்ந்து சிரித் தாள். இருவரும் விழுந்து விழுந்து வயிறு குலுங்கச் சிரிக்கும்பொழுது காப்பியைக் கொண்டுவந்து வைத் தாள் சரோஜா.
“சரோ, கொப்பரை ஒருக்கா எழுப்பிவிடு”
“ஏன் பெரியப்பு? அவர் இப்பதான் படுத்தவர்”
“அதுக்கென்ன, ஒருக்கா எழுப்பிவிடன்.”
“நித்திரையாக் கிடக்கிறபோது எழுப்பினால் அடிச் சுப்போடுவார். நீங்கள்தான் போய் எழுப்புங்கோ.”
“ஏனத்தான் அவரை எழுப்பிறியள். ஏதாவது சொல்ல வேணுமெண்டாச் சொல்லுங்கோவன். அவர் எழும்பினதுக்குப் பிறகு சொல்லுறன்’ என்றாள். பூரணம்.
“என்னத்தைச் சொல்லுறது. சரோஜாவின் விஷய மாத்தான் கதைக்கவேணும்.”
“என்ன… என்ரை விஷயமோ!” குறுக்கிட்டாள் சரோஜா.
“ஓமடி பிள்ளை, உன்ரை.விஷயமாகத்தான் கதைக்க வேணும்”
“முந்திக் கொண்டுபோய் பாண்கிணத்திலை தள்ளினது போதாதெண்டு இன்னும் கொண்டுபோய்த் தள்ளப் போறியளோ.”
“சும்மா இரு பிள்ளை. உன்ரை புருஷன் மறியலுக் குப் போன பிறகு நல்லாத் திருந்திவிட்டான். அவனைத் தான் ஒற்றுமையாக்கி விடப்போறன்; அவன் இப்ப கள்ளுக்கிள்ளு ஒன்றும் குடிக்கிறதில்லையாம்” என்று கந்தசாமி வாத்தியார் சொல்லிக்கொண்டே இருந்தார். அவர் கள்ளைப்பற்றிச் சொன்னதும் அவளுக்குப் பழைய சம்பவங்கள் நினைவுக்கு வந்தன. அந்தப் பழைய சம்பவங்களைச் சிந்திக்க அவளுக்கு அருவருப் பாக இருந்தது.
***
சரோஜா அந்த ஊரைச் சேர்ந்த கதிரவேலு வாத் தியாரின் ஒரே ஒரு மகள். அவள் மிக்க அழகுடையவள். அழகிலே இலக்குமியை வென்றுவிடும் அழகிதான் சரோஜா.
சரோஜாவின் பொன்னைப் பழிக்கும் எழில் மேனி யும், கண்ணைக் கவரும் கட்டழகும், மானைப் பழிக்கும் கயல் விழிகளும், மாங்கனியைப் பழிக்கும் சிவந்த கன்னங்களும், பொன்னகையைப் பழிக்கும் புன்னகை யும், அன்ன நடையைப் பழிக்கும் அழகு நடையும் காண்போரைக் கவரும் சக்தி வாய்ந்தவை. சரோஜா உண்மையிலே ஓர் அழகிதான்.
அவள் தங்கத்தால் உருக்கி வார்த்த தங்கச்சிலை.
சரோஜா கண்ணைக் கவரும் கட்டழகி மாத்திரமல்ல. படித்தவள். பண்புள்ளவள். அவள் ஒவ்வொரு நாளும் காலையும் மாலையும் தண்ணீர் அள்ளுவதற்காக அவ்வூர் நல்ல தண்ணீர்க் கிணற்றுக்குப் போவாள். அவள் போகும்போது அவளின் அழகைக் கண்டு வாயினுள் இலையான் போவதையும் கவனிக்காமல் வாயைத் திறந்து சிரித்தபடி ரசித்துக்கொண்டு நிற்கும் இளைஞர்கள் ஏராளம்.
சரோஜா வெள்ளை வோயில் பாவாடையும் அதே சாரியும் அவற்றின் அழகைப் பளிச்சென எடுத்துக் காட்டும் இரத்தச்சிவப்பு பிளவுசும் அணிந்து, உடுக்குப் போன்ற இடுப்பிலே தண்ணீர்க்குடம் ஒன்றை வைத் துக்கொண்டும் அன்னநடை நடந்துகொண்டும் தண் ணீர் .அள்ளுவதற்காக அவ்வூர் நல்ல தண்ணீர்க் கிணற்றை நோக்கிச் சென்று கொண்டிருந்தாள்.
“சரோ! நானும் வாறன். கொஞ்சம் பொறுத்துக் கொள்” என்று சொல்லிக்கொண்டே, அவசர அவசர மாகத் தங்கள் வீட்டுப் படலையைத் திறந்துகொண்டு ஓடிவந்தாள் சரோஜாவின் சிநேகிதிகளுள் ஒருத்தி.
“ஏன் சரோ! இண்டைக்கு மாத்திரம் நேரஞ் செண்டு போச்சு. நீ வரும்வரையும் தான் காத்துக் காண்டிருந்தனான். வீட்டிலே ஏதாவது………” என்று இழுத்துக்கொண்டே நடந்தாள் கலா.
“என்னடி கலா! இண்டைக்கு ஏதோ புதுமையாகப் பேச்சை இழுத்துக்கொண்டே போகிறாய்.”
“எல்லாம் விஷயத்தோடைதான்.”
“சொல்லட்டே. சொன்னா என்ன தருவாய்?”
“….”
“என்ன ஒண்டும் பறையாமை நிற்கிறாய். எனக்கு எல்லா விஷயமும் தெரியும். மறைக்காமல் சொல்லு” என்று கலா கேட்டதும் சரோஜாவுக்கு மனதுக்குள்ளே ஒரு மாதிரித்தான் இருந்தது. இருந்தும் இருவரும் ஒரே பாடசாலையில் ஒரே வகுப்பில் படித்ததால் தனது விஷயத்தைச் சொல்ல எத்தனித்தாள். அவளுக்கு வெட்கமாக இருந்தது.
“என்ன ஒண்டும் பறையாமை நிற்கிறாய்? சினே கிதிக்கும் சொல்லக்கூடாதோ?”
“கலா! எனக்குச் சொல்ல வெட்கமாக இருக்குதடி”
“என்ன வெட்கம். எனக்குத்தானே சொல்லப் போகிறாய்?”
“சரி, சொல்லுறன் கேலி செய்யாதே” என்று கேட்டுக்கொண்டே தனது கலியாணக் கதையைக் கூறி முடித்தாள் சரோஜா.
”சரோ! நீ கூறியதைப் போலவே நான் கேள்விப் பட்டேன். ஆனால், அதுபற்றிப் புத்திமதி கூறவேண்டி யது உனது சிநேகிதியாகிய எனது கடமையாகும்.”
“கலா! என்ன புத்திமதியடி கூறப்போகிறாய்?”
“உனக்குக் கலியாணம் பேசியிருக்கும் தியாகனைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். அவன் ஓர் அரசாங்க உத்தியோகத்தன் – பணக்காரன் என்பதால் நீ ஆசைப் பட்டுச் சம்மதித்திருப்பாய் என்பதும் எனக்குத் தெரி யும். ஆனால், அவன் ஒரு குடிகாரன் – சூதாட்டக் காரன் என்பதை அறிந்திருந்தால் திருமணத்திற்குச் சம்மதித்திருப்பாயா?
“என்ன! குடிகாரனா!”
“குடிகாரன் மாத்திரமல்ல, சூதாட்டக்காரன் என்பதையும் மறந்துவிடாதே. குடியும் சூதும் அவனின் என்று பேச்சை இழுத்துக்கொண்டே கூட்டம் கூட்டமாகச் சென்று கொண்டிருந்த மாடுகளையும் துரத்தி வழி விலத்திக்கொண்டு அவசர அவசரமாக நடந்தாள் கலா. கலாவின் பின்னே சென்றுகொண் டிருந்தாள் சரோஜா.
இருவரும் கதைத்துக்கொண்டு சென்றதால் நேரம். போனது கூடத் தெரியவில்லை. மதியவேளையின் வெய் யில் சூடுதான் அவர்களுக்கு நேரத்தைக் காட்டியது. இருவரும் விறுவிறு என்று நடந்து சென்றனர்.
***
சரோஜா, வீட்டு முற்றத்தில் இருந்த சாய்வு நாற் காலியில் சாய்ந்துகொண்டு கதைப்புத்தகம் ஒன்றை வாசித்தாள். அவள் கதை வாசிக்கும்போது முதல் நாள் தண்ணீருக்குப் போகும்வேளை கலா கூறியது அவள் நினைவுக்கு வந்தது. ஒருவேளை நான் பணக் காரன் அரசாங்க உத்தியோகத்தன் ஒருவனைக் கலி யாணம் செய்வது அவளுக்கு விருப்பமில்லைப் போலும். அதுதான் அவள் அப்படிச் சொல்லியிருக்கிறாள். அல்லது அவள் அவரைக் கலியாணம் கட்டப்போகி றாளோ!” என்று பல முறை பல மாதிரியெல்லாம் தனக் குள்ளே யோசிக்கிறாள். கடைசியாகக் கலா பொறாமைப் பட்டுத்தான் அப்படிச் சொன்னாள் எனத் தீர்மானித் துக் கொள்கிறாள்.
“பிள்ளை! கொப்பர் நிற்கிறாரே? சாமான் எல்லாம் வாங்கவேணும். எங்க போவிட்டான்? இன்னும் ஒரு கிழமை மாத்திரம்தானே கிடக்கு.”
“எணை பெரியப்பு! எனக்குந்தக் கலியாணம் வேண்டாமணை”
“என்ன!……… கலியாணம் வேண்டாமோ?”
“ஏன்?”
“சரியான குடிகாரனாம்”
“ஆர் சொன்னது?”
“கலாதான் சொன்னவள்”
“அவள்தான் கட்டப்போறாளாக்கும். பொடியனைப் போலக் குணசாலியைத் தேடினாலும் கிடைக்குமோ? பொடியன்ரை வீடுவாசல், அறிவு, அந்தஸ்து இவை யெல்லாம் வேறு எந்த மர்ப்பிள்ளையிடம் இருக்கு. ஆனால், இந்தக் குடியொண்டுதான்… அதையும் பெண்கள் நினைத்தால் மாற்றிவிடலாம். பெண்களின் ஆணைச்சக்கரத்துக்குள் மயங்காத ஆண்களும் எங்கா கிலும் இருக்கினமோ?”
“என்னவோ எனக்குப் பயமாகத்தான் கிடக்கு”
“எடி விசரி! உன்னைக் கொண்டுபோய்ப் பாண்கிணத்துக்குள் தள்ள எனக்கு என்ன பைத்தியம் பிடிச்சிருக்கோ?”
“….”
“பொடியனுக்கு எத்தனை இடமெல்லாம் கேட்டவங்கள். அவன் உன்ரை அழகாலும் படிப்பாலும் அல்லோ உன்னைச் செய்ய விரும்பினவன்” என்று கதைத்துக்கொண்டு இருக்கும்பொழுது கதிரவேலு வாத்தியார் வந்து கதிரையில் இருந்தார்.
“என்னடா தம்பி! உன்பாட்டுக்குத் திரிகிறாய். சாமான் எல்லாம் வாங்கிப் போட்டியோ?”
“சாமானுக்குத் தானணை சொல்லிப்போட்டு வாறன்.”
“மேளத்துக்குக் கீளத்துக்குச் சொன்னாயோ?”
“ஓமணை. அவன் தச்சணாமூர்த்திக்கும் சின்னராசா வுக்கும் சொன்னனானணை”
“நீ உதிலைமாத்திரம் விடமாட்டாயெண்டு எனக்குத் தெரியும்.”
”என்னணை செய்கிறது. ஒரேயொரு பிள்ளைக்குச் செய்கிற நல்ல காரியத்துக்கு நல்லாத்தானே செய்ய வேணும். அதுவும் பணக்கார மாப்பிளை மருமகனாய் வரும்போது……”
“சரிசரி! நேரம்போச்சு. வீட்டை போய்விட்டு வாறன்.” கதிரையில் சாத்தியிருந்த குடையையும் எடுத்துத் தோளிலே போட்டுக்கொண்டு நடந்தார் கந்தசாமி வாத்தியார்.
***
சரோஜாவுக்கும் தியாகனுக்கும் வெகு கோலாகல மாகத் திருமணம் நடைபெற்றது. தியாகன் குணத்திலே தங்கமானவன். பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந் தவன். அரசாங்க உத்தியோகத்தன். மங்கையர் மயங் கும் அழகன். ஆனால், ஒன்றுதான் அவன் புகழைத் தடுத்துக்கொண்டிருந்தது. அந்த ஒன்று எது என்று கேட்பீர்கள். அதுதான்…… குடிப்பழக்கம். அது இடை யிலே தோன்றியதல்ல. அது அவன் பரம்பரையின் பழக்கம்.
அவன் ஒரு குடிகாரன் என்று கலியாணம் செய்ய முன்பே சரோஜாவுக்குத் தெரியும். தெரிந்திருந்தும் அவனது குடிப்பழக்கத்தை எப்படியாவது மாற்றிவிட லாம் என்று எவ்வளவோ பாடுபட்டாள் சரோஜா. அவளின் முயற்சிகள் யாவும் தோல்வியடைந்தனவே அல்லாமல் வெற்றி பெறவில்லை.
தினமும் அவளுக்கு அடியும் உதையும்தான் கிடைத்தது. அவனது அடியாலும் உதையாலும் அவளின் உடல் மெலிந்துவிட்டது. தினமும் காலையில் வேலைக்குப் போவான். வேலை முடிந்ததும் சாராயத் தவறணை கள்ளுக் கொட்டில் – சூதாட்ட மரத்தடி முதலிய இடங்களில் நேரத்தைப் போக்கிவிட்டு இரவு பதினொரு மணி, பன்னிரண்டு மணிக்குப் பின்பு வீட் டுக்கு வருவான். அவன் வீட்டுக்கு வரும்வரை அவள் காத்துக்கொண்டு இருப்பாள். அவன் வீட்டுக்கு வரும் பொழுதே படலையில் சத்தம் கேட்கத் தொடங்கிவிடும். அவனின் சத்தம் கேட்டால் போதும். சரோஜாவின் உடலெல்லாம் ‘குலப்பன்’ காய்ச்சல் மாதிரி நடுங்கும். பாம்பைக் கண்ட தேரை போல் நடுங்கினாலும் எந்த நேரமும் அவனுக்கு உணவளித்து விட்டே நித்திரைக்குப் போவாள்.
“எடியே சரோஜா! வாடி இஞ்சை. இந்தாடி இந்தக் கள்ளைக் கொண்டுபோய் மேசையிலை வையடி” என்று படலையடியில் வரும்பொழுதே கூறிக்கொண்டு வருவான்.
“என்ன, இன்னும் காணையில்லை. இண்டைக்கு வர மாட்டாள் போலைகிடக்கு. வராமை விட்டியோ கொண்டு போடுவன்” என்றதும் கைகள் பதறவும், கால்கள் நடுங்கவும் ஓடிப்போய் வாங்குவாள்.
“என்னடி, சோறு காச்சிப் போட்டியோடி?”
“….”
“என்ன கறியடி காச்சினனி. எத்தினை காசுக்கு மீன் வாங்கினனி?”
“ஒரு ரூபாவுக்கு” என்று சொல்லும் பொழுதே அவள் உதடுகள் படபடக்கும்.
“எல்லாத்தையும் திண்டுபோட்டியோ. அல்லது மிச்சம் கிச்சம் கிடக்கோ?”
“….” அவளது கண்களில் கண்ணீர் வடியும்
“என்னடி அழுகிறாய். சோத்தையும் கள்ளையும் எடுத்துக்கொண்டு வாடி.”
சரோஜா சோற்றையும் கள்ளையும் அவசர அவசர மாக எடுத்துக் கொண்டுவந்து அவன் முன்னே வைப்பாள்.
“என்னடி. இதுதானேடி ஒரு ரூபாவு மீன். நான் வர முன்னமே நீ போட்டு விழுங்கிப் போட்டியோடி”
“…”
“சரி சரி இந்தாடி. இதிலை கொஞ்சம் சாப்பிடடி. இந்தக் கள்ளிலையும் கொஞ்சம் குடிச்சுப் பாரடி. என்ன! குடிக்க வெட்கமாகக் கிடக்கோ? ஒருத்தரும் பாக்க மாட்டினம்,குடியடி. ஏன்ரி நீ வெட்கப்படுகிறாய். உந்தப் பிள்ளைத்தாச்சிமார் எல்லாம் குடிச்சுப் பழகி விட்டாளவையடி” என்று சொல்லி அலட்டிக்கொண்டே சாப்பிட்டுச் சாப்பிட்டுக் கள்ளையும் குடிப்பான்.
பக்கத்து வீட்டுக்காரர்கள் சரோஜாவை அவன் படுத்தும் கஷ்டங்களையெல்லாம் பார்த்து ஏசுவார்கள். அவன் ஒருவரது சொல்லையும் கேட்பதில்லை. சிலவேளை அவன் கண்டமாதிரியெல்லாம் கெட்ட வார்த்தைகளில் ஏசிவிடுவான் என்று அஞ்சியதால் தங்களுக்குள்ளே அவனின் நடத்தைகளைப் பற்றி மறைவாக கதைத்துக் கொள்வார்கள்.
அவள் அவனைத் திருத்தும் நோக்கமாக ஏதாவது எதிர்த்துக் கதைத்துவிட்டால் போதும், கையாலும் காலாலும் அடியும் உதையும் தராளமாக விழும். சில நாட்களில் சட்டி பானை எல்லாம் தாறுமாறாக உடையும். கன்னத்தில் பளார் பளார் என்று மாறி மாறி அடி விழும். ஆனால், அவள் அந்த அடிகள் எல்லாவற்றை யும் வாங்கினாலும் ‘கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்’ என நினைத்துக் கணவனையே தெய்வமாக மதித்து நடந்தாள்.
ஒருநாள்…….
சனிக்கிழமை அவனுக்கு அரைநேர வேலை. அரை நேரத்துடன் வேலையை முடித்துக்கொண்டு கள்ளுக் கொட்டில் – சாராயத்தவற்ணை இரண்டையும் தரிசித்து இரண்டு மூன்றென வயிற்றுக்குள் அளந்து விட்டுக் கொண்டு சூதாட்டப் பக்கமாகச் சென்றான்.
அந்த ஊரின் மத்தியிலே ஒரு புளியமரம். புளிய மரம் என்றால் புளியமரம்தான். அந்த ஊரின் ஆதிமரம் நான்தான் எனப் பறை சாற்றுவது போல் ஓங்கிப் பரந்து வளர்ந்து அவ்வூரவர்கள் தங்கி இருந்து சூதாடுவதற்கு உதவியாக இருக்கின்றது. எந்த் நடு மத்தியானத்திலும் அந்த மரத்தின் கீழ் இருந்து விளை யாடலாம். அவ்வளவுக்கு அந்த மரம் பரந்த நிழலைக் கொடுத்துக்கொண்டு நிற்கின்றது.
சம்பள நாள் ஆதலால் சூதாட்டம் போட்டர் போட்டியாக நடைபெறுகின்றது. தள்ளாடித் தள்ளாடி விழுந்து விழுந்து சூதாட்ட மரத்தடிக்கு வந்ததும் அவனுக்கு மனம் கேட்கவில்லை. சூதாட்டத்தில் இறங் கினான். சம்பளக்காசு முழுவதும் முடிந்துவிட்டது. மற்றவர்களைக் கடன் கேட்கிறான். மற்றவர்கள் கடன் கொடுக்க மறுக்கின்றனர். ‘வீட்டை போவுட்டு வாறன்” என்று சொல்லிக்கொண்டு வீட்டுக்குப் புறப்படுகிறான். வீதிவழியே தள்ளாடித் தள்ளாடிப் பாட்டுப் பாடிக் கொண்டு வீட்டுக்கு வந்தவன்,
“எடியே சரோ! காசிருந்தா எடுத்துக்கொண்டு வாடி.”
“ஆருட்டைக் காசு கிடக்கு. மீன்கார மனுஷி வந்து பேசிப்போட்டுப் போறாள். இன்னும் சம்பளம் எடுக்கயில்லையோ?” அவள் கேட்கும்போது அவளது நெஞ்சு படபடத்தது. இப்படி அவள் ஒருநாளுமே வாய் திறந்து கதைத்தது கிடையாது. இன்று மாத்திரம் அவளுக்கு எப்படித்தான் துணிவு வந்ததோ யாருக்குத் தான் தெரியும். ஒருவேளை மீன்காரி தாறுமாறாக ஏசிப் போட்டாளோ?”
“என்னடி இண்டைக்கு ஒரு மாதிரிக் கதைக்கிறாய். என்னை எதிர்த்துப் பேசவும் துணிவு வந்துவிட்டுதோ? எடியே! என்னைப் பற்றி உனக்குத் தெரியுமே. என்ரை அப்பன்ரை அப்பன் எல்லாம் பரம்பரைக் குடிகாறங்கள் தானடி. நான் குடிச்சுப்போட்டு றோட் டாலை போனேனெண்டால் இஞ்சத்தைப் பெரியவங்க ளெல்லாம் தலை குனிஞ்சுகொண்டு போவாங்களடி. நீ என்னடாவெண்டா என்னோடை எதிர்த்துப் பேசத் தொடங்கிவிட்டாய். கழட்டடி தாலியை.”
“அத்தான்! என்னைக் கொண்டுபோட்டுப் போங்க. ஆனால், தாலியை மட்டும் கேக்காதையுங்கோ.”
“என்னடி …அத்தான் போடுகிறாய். கழட்டடி தாலியை எண்டாக் கழட்டமாட்டியோ?”
“…”
“என்னடி பேசாமை நிற்கிறாய். கழட்டடி தாலியை.” சரோஜா தாலியைக் கழட்ட மறுக்கிறாள். இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்படுகின்றது. தியா கன் கண்டபடி அவளுக்குத் தாறுமாறாக அடிக்கிறான். அவனது அடியைப் பொறுக்க முடியாது அழுகிறாள் சரோஜா. தியாகன் தாலியைக் கழட்டுகிறான். தாலியைக் கழட்டிய பின் சரோஜாவைத் தாய்வீட்டுக்கு ஓடும்படி கலைத்துவிடுகிறான். படலைக்கு வெளியே சரோஜாவைக் கலைத்துவிட்டுச் சூதாட்டத்துக்குப் போகிறான். அவன் சூதாட்டத்துக்குப் போகும்போது வீதிவழியே பாடிக் கொண்டும் ஆடிக்கொண்டும் போகிறான்.
சூதாட்ட மரத்தடியில் தாலி, கூறை, காப்புப் போன்ற விலையுயர்ந்த பொருட்களெல்லாம் வைத்து ஆட்டம் வெகு மும்முரமாக நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. தியாகனும் தான் கொண்டுபோன தாலியை வைத்து ஆட்டத்தில் ஈடுபடுகிறான். சூதாட்டம் வெகு மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, சூதாட்டக்காரருக்கிடையே வாக்குவாதம் மூண்டு சண்டையில் முடிகின்றது.
சூதாட்டத்தில் ஈடுபட்டோர் அனைவரும் பொலிசா ரால் கைது செய்யப்பட்டு ஐந்து வருடம் மறியலுக்குச் சென்றனர். தியாகனும் மறியலுக்குச் செல்கின்றான்.
***
தியாகன். எப்பொழுதாவது திருந்தித் தன்னிடம் வருவான். மீண்டும் தன்னை மனைவியாக ஏற்றுக் கொள்வானென்ற முழுநம்பிக்கையில் காலத்தைக் கழித் தாள் சரோஜா. முதல் முதல் தன்னைத் திருமணம் செய்தபோது, தியாகன் எவ்வளவு அன்பாக தானோ அதேபோல இனிமேலும் வரவேண்டும் என்று நடந் கல்லுவைத்த கோயிலெல்லாம் கையெடுத்துக் கும்பிட் டாள். முன்பிருந்த பண்புடன் திரும்பவும் வந்தானா? …சரோஜாவின் தவம் பலித்ததா?
”என்ன பிள்ளை சரோ! யோசித்துக்கொண்டு இருக் கிறாய். தியாகன் இப்ப முந்தியைப் போல ஆளில்லை. தோற்றம், குணம் எல்லாம் மாறிவிட்டான்.”
“என்ன! எல்லாம் மாறிப் போச்சா? ஆர் மாத்தினது?”
“‘ஆமாம் பிள்ளை. அவரை மறியல்தான் மாற்றி விட்டது” என்று சொல்லும்போது படலையில் தியாகன் வந்து நிற்பதைக் கண்ட சரோஜா பழைய நினைவு களையெல்லாம் மறந்து அவன் நிற்குமிடத்திற்கு ஓடினாள். அவள் எங்கு ஓடுகிறாள் என்று உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார் கந்தசாமி வாத்தியார்.
சரோஜா தியாகன் நிற்குமிடத்திற்குப் போனதும், “சரோ! என்னை மன்னிப்பாயா?” என்றான் தியாகன்.
“அத்தான்! நீங்கள் எனக்கு என்ன பிழை செய்தீர்கள். குடியல்லவா உங்களைப் பிழை செய்யத் தூண்டியது.”
“சரோ! நீ சொல்வது முற்றிலும் உண்மை. குடி மனிதனை மயக்கி மிருகமாக்குகிறது. அது குடிகாரன். கொலைகாரன் என்ற பெயரையும் வாங்கிக்கொடுக் கிறது. குடி, குடியைக் கெடுத்து, வீடுவாசலை விற்று, , குணம், அந்தஸ்து முதலியவற்றை அழித்துவிடுகிறது. குடியும் சூதும் செய்த கொடுமைகளையெல்லாம் என் வாழ்க்கையில் கண்டுவிட்டேன். இனிமேல் கள்ளுக் கொட்டிலுக்கோ, சாராயத் தவறணைக்கோ, சூதாட்ட மரத்தடிக்கோ ஒரு நாளும் போகமாட்டேன். குடியும் சூதும் பொல்லாதது என்பதை இப்பொழுதுதான் உணர்கின்றேன்” என்றான் தியாகன்
“என்னுடைய தவம் பலித்துவிட்டது” என்று கூறிக்கொண்டே தியாகனின் காலில் விழுந்தாள் சரோஜா.
தியாகன் சரோஜாவின் இரு கரங்களையும் பிடித் துத் தூக்கித் தன்னுடன் இணைத்துக்கொண்டான்.
இவற்றையெல்லாம் கண்குளிரப் பார்த்துக்கொண்டிருந்த கந்தசாமி வாத்தியார், “தம்பி! நான் ஒற்றுமை யாக்கிவிட வேண்டுமென்று நினைத்தேன். நீங்களே ஒற்றுமையாகிவிட்டீர்கள். அன்பு வழி அது. ஆனால், ஒன்று “குடி, குடியைக் கெடுக்கும்” என்பதை மாத்திரம் மறந்துவிடாதே” என்று சொல்லிவிட்டு தோளிலே தொங்கிக் கொண்டிருந்த குடையை விரித்துக்கொண் டும் சுருட்டைப் பற்றவைத்துக் கொண்டும் நடந்தார் கந்தசாமி வாத்தியார். கந்தசாமி வாத்தியார் தாண்டித் தாண்டிச் செல்வதையே தியாகனும் சரோஜாவும் பார்த்துக்கொண்டு நின்றனர்.
– 14-2-1965, ஈழநாடு.
– கன்னிப்பெண் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: மே 1965, நகுலன் வெளியீடு, கலையகம், கலைநகர், சித்தன்கேணி.
![]() |
சித்தன்கேணி கலைநகரைச் கேர்ந்த திரு. நா. க. தங்கரத்தினம் அவர்கள் அராலி வடக்குச் செட்டியார் மடத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற திரு நாகர் கந்தையாவுக்கும் திருமதி மனோன்மணி கந்தையாவுக்கும் 8-6-35ல் பிறந்தார். 'நகுலன்', 'அராலியூரான்', 'கலை நகரான்', 'கொழும்பு மாமா', 'இராசாக்குட்டி' என்னும் புனை பெயர்களுள் மறைந்திருந்து சிறுகதை, கட்டுரை, கவிதைகள் எழுதும் இவர், சமூகத்தொண்டனில் முதன் முதலாகக் கட்டுரை எழுதத் தொடங்கி, தினகரன், வீரகேசரி, ஈழநாடு. ஸ்ரீலங்கா, சுதந்திரன், விவேகி, கலைவாணி…மேலும் படிக்க... |
