தாலிக்குள் இல்லை தங்கம்!

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 12, 2026
பார்வையிட்டோர்: 4,792 
 
 

(2004ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15

அத்தியாயம் – 13

சுரேந்தர் ஆலுவலகத்திற்கு வந்தும் வேலையில் மனம் பதியவில்லை.

‘இருவரையும் ஆள் வைத்து அடித்துத் துாக்கிப் போட்டாலென்ன?’ ஆத்திரம் வந்தது.

அதற்கு ஆளைப் பிடித்து அவனுக்குக் காசு கொடுத்து…? நமக்கு அதெல்லாம் சரிபடாது. நம் படிப்பு தகுதிக்கு இப்படி நாலாந்தரமாக சிந்தனை தேவை இல்லை. ஒதுக்கினான்.

பின் எப்படி முடிக்க?….

‘நான்கு ஆட்களை வைத்து பஞ்சாயத்துப் பேசி முடிக்கும் காரியம் இல்லை இது. இவள் முடிவைச் சொல்லி விட்டாள். நீ ராசேந்திரனைத் தொடு’ – மனம் சொல்ல கை தொலைபேசியை எடுத்து எண்களை அழுத்தி காதில் வைத்தான்.

“எஸ்!” ரோசி குரல் ஒலித்தது.

“நான் சுரேந்தர் பேசறேன்.”

“ஹாய்! எப்படி இருக்கீங்க?”

“நல்லா இருக்கேன்!“

“வர்றீங்களா?“

“எங்கே?”

“வீட்டுக்கு”

“ஏன்?“

“அவர் இல்லே.”

‘அவள் எதற்கு அழைக்கிறாள்’ – புரிந்தது.

“ராசேந்திரன் எங்கே?“

“நானும் அவரும் ஒருத்தொருக்கொருத்தர் வெளியில எங்கே போறோம்ன்னு சொல்லிக்கிறதே இல்லே.”

“ரெண்டு பேருக்கும் சண்டையா?”

“அதெல்லாம் ஒன்னுமில்லே. எங்களுக்குள்ளே அநாவசியப் பேச்சு கெடையாது. உடனே வர்றீங்களா?“

‘ச்சே! என்ன பெண்?’

போனை அணைத்தான். சிறிது நேரம் கழித்து மறுபடியும் கை தொலைபேசி எடுத்து அழுத்தினான்.

“எஸ்! ராசேந்திரன் பேசறேன்”

“நா….நான் சுரேந்தர்.”

“சொல்லுங்க?“

“நீங்க உடனே கடற்கரைக்கு வாங்க. நாம பேசனும்”.

“என்ன விசயம்?“

நாம தனியா

“வந்து… வந்து.. நேரடியா பேசலாம்!” அணைத்தான். அலுவலகத்திற்கு விடுப்பெழுதி கொடுத்துவிட்டு கடற்கரையை நோக்கி வண்டியை விட்டான்.

அங்குஓரம்கட்டி நிறுத்திவிட்டு ‘எப்படி பேசலாம்?’ மணலில் இப்படியும் அப்படியும் அலைந்தான். வெகு நேரம் கழித்து ராசேந்திரன் வந்தான்.

“சொல்லுங்க சுரேந்தர்?. குழப்பமா இருக்கீங்க போலிருக்கு?” மணலில் அமர்ந்தான்.

“ஆமாம் உங்களால எனக்கு ஒரு உதவி?”

“சொல்லுங்க?“

“நீங்க என் மனைவிகூட பேசறது பழகறதைத் தவிர்க்கனும்”.

துணுக்குற்றுப் பார்த்தான்.

“ஆமாம் ராசேந்திரன். நாம செய்ஞ்ச தப்பு இப்போ நம்மையே தாக்குது. பிரவீணா உங்க மேல பிடிப்பா இருக்கா. உண்மையைச் சொல்லப் போனா நம்ம சந்திப்புக்குப் பிறகு அவ என்கிட்ட குடும்பம் நடத்தலை.”

“எப்பவும் உங்க நெனப்பா இருக்கு” என்று எல்லாம் ராசேந்திரனுக்குப் பிரவீணா புட்டுப்புட்டு வைத்தவை. என்ன சொல்வதென்று புரியவில்லை. தலைகவிழ்ந்தபடி இருந்தான்.

“மனசு கஷ்டமாக இருக்கு என் குடும்பம் உங்க கையில இருக்கு. பிரவீணா பழையபடி என்கூட வாழனும்ன்னா நீங்க விலகனும்” சுரேந்தர் மேலும் கெஞ்சினான்.

ராசேந்திரனுக்கு அவனைப் பார்க்க பாவமாக இருந்தது. தன் வீட்டிலும் கோளாறு நினைக்க வருத்தம் வந்தது.

“நீங்க பிரவீணா போன் பண்ணினா பேசக் கூடாது. தேடி வந்தாலும் ஒதுக்கனும் ” என்று அவன் மேலும் சொல்ல…

“உங்களுக்கு வருத்தம்ன்னா நான் அப்படியே நடக்கிறேன்”. சொல்லி எழுந்தான்.

சுரேந்தர் முகத்தில் கலக்கம் விலகி திருப்தி வந்தது.

***

மாலை வீட்டிற்குள் நுழையும் போது பிரவீணா உர்ரென்று அமர்ந்திருந்தாள். என்ன காரணம் தெரியவில்லை. இவன் தலையைக் கண்டதும்…

“நீங்க ராசேந்திரனுக்குப் போன் செய்தீங்களா?” கேட்டாள்.

சுரேந்தருக்குப் புரிந்து விட்டது. மறைக்க விருப்பமில்லை.

“ஆமாம் ஏன்?” கேட்டான்.

“நான் போன் செய்தேன். சுரேந்தருக்கு பிடிக்கலை நம்ம பழக்க வழக்கத்தை நிறுத்திக்கலாம் சொன்னார்” உண்மையைச் சொன்னாள்.

“சரிதானே?” இவன் அவளைத் திருப்பிக் கேட்டான்.

“என்ன சரி? எனக்கு புடிச்சிருக்கு. அவர் கரு என் வயித்துல வளருது” இடியை இறக்கினாள்.

“பிரவீணா?!” அலறினான்.

“உண்மை!“ அடுத்தும் இறக்கினாள்.

‘தன் வீட்டில் மாற்றான் குழந்தை!’ சுரேந்தருக்கு நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.

‘கடவுளே ! என்னென்ன பின் விளைவுகள்?‘

“கலைச்சிடு பிரவீணா?”

“ஏன்?“

“எனக்கு அவமானம்!”

“மனைவி அடுத்தவன்கிட்டஇருக்கும் போது இல்லாத அவமானம் இப்போ எங்கே இருந்து வந்தது?”அவள் திருப்பித் தாக்கினாள்.

இப்படி ஒரு கேள்வி மனைவியிடமிருந்து பிறக்குமென்று சுரேந்தர் எதிர்பார்க்கவே இல்லை. சப்த நாடியும் ஒடுங்கியவனாய் அவளைப் பார்த்தான்.

“சொல்லுங்க?” பிரவீணா அதட்டினாள்.

ரொம்ப சங்கடம் சிக்கல்! சுரேந்தருக்கு மனம் துவண்டது.

‘நாளைக்குப் பிள்ளை அப்பா ஜாடையுமில்லாமல் அம்மா ஜாடையுமில்லாமல் வேறெருவன் ஜாடையில் பிறந்து வளர்ந்தால் யாருக்கு அவமானம்?’ – நினைக்க அவனுக்குள் தலைக்குனிவாய் இருந்தது.

‘பெரிய தவறு செய்து விட்டோம்? எப்படி இந்த யோசனையெல்லாம் வராமல் போனது. சபலம் ஆசை இதைப் பற்றியெல்லாம் சிந்திக்காமல்… மேல் மட்டம் இந்த அவமானங்களையெல்லாம் கழற்றி வைத்துவிட்டுதான் இந்த களியாட்டம் போடுகிறதா? அவர்கள் எதைப்பற்றியும் கவலைப்படவில்லையா இல்லை பணம் எல்லாவற்றையும் மூடி மறைத்து விடுகிறதா?’ இவன் மனசுக்குள் கேள்விமேல் கேள்வி கேட்டான். எதற்கும் சரியான பதில் வராமல் தவித்தான்.

பிரவீணா அவனை ஒரு புழுவைப் போல் பார்த்து விட்டு அறைக்குள் சென்றாள்.

இந்த சிக்கலை எப்படி அவிழ்ப்பது? பிரச்சனையை எப்படி முடிப்பது? சிந்தனைக்குத் தாவினான்.

இவள்தான் அவனை விடாப்பிடியாக பிடித்திருக்கிறாள் புரிந்தது. காரணம் அவன் மேல் உள்ள ஈர்ப்பு. இதை எப்படி சரி செய்ய? தீவிரமாக சிந்தித்து ஒரு முடிவிற்கு வந்தான். கைதொலைபேசியை எடுத்தான்.

“ஹலோ!” இந்த முறையும் ரோசிதான் எடுத்தாள்.

“நான் சுரேந்தர் பேசறேன்!”

“வர்றீங்களா?“ அவள் ஆவலாக கேட்டாள்.

‘ச்சே! இவளுக்கு எப்போதும் இதே நினைப்புதானா…?! ராசேந்திரன் தண்ணி தெளித்து விட்டானா?‘ – இவனுக்குள் எரிச்சல் வந்தது. கோபப்படக்கூடாது, இவளால் காரியம் ஆகவேண்டும். அடக்கிக் கொண்டான்.

“இல்லை ரோசி. இது வேற விசயம். நாம உடனே சந்திக்கனும்.”

‘எங்கே எப்போ?” அவளுக்கு இவனை எப்படியும் வீழ்த்திவிடலாம் நினைப்பு. அக்கரையாய்க் கேட்டாள்.

“உடனே வா. நாம அஞ்சு மணிக்கெல்லாம் பாரதி பூங்காவுல சந்திக்கனும். காத்திருக்கேன்!”

“வேற எங்கேயாவது ஒரு லாட்ஜ்ல அறை போடலாமே?” அவள் காரியத்தில் குறியாய் இருந்தாள்.

“இது ஜாலியா இருக்க வேண்டிய நேரமில்லே. முக்கியமான விசயம். நம்ப தலைக்கு ஆபத்து. உடனே வா.” போனை வைத்தான்.

***

பூங்காவில் ஆளில்லா இடத்தில் இருந்த சுரேந்தர் உட்கார மனமில்லாமல் அங்கேயும் இங்கேயுமாக நடை பயின்றான். இவன் பொறுமையை அதிகம் சோதிக்காமல் விரைவிலேயே ரோசி இவனை நோக்கி வந்தாள்.

“உட்கார்.” எதிரில் கை காட்டி அமர்ந்தான்.

அவள் அங்கு அமராமல் இவன் அருகில் வந்து அமர்ந்தாள். மெல்லிய ஷிப்பான் சேலை. முன் பக்கம் நெஞ்சு பாதி தெரிகிறாப்போல ரொம்ப இறக்கி வெட்டி தைக்கப்பட்ட ஜாக்கெட். பின்னால் ஜன்னல். சுரேந்தரை சூடேற்றி வீழ்த்தும் நோக்கத்திலேயே ஆடைகள் அணிந்து வந்திருந்தாள்.

நகர்ந்து அமர்வது நாகரீகமில்லை. சகித்துக்கொண்டான்.

“என்ன ஆபத்து?”

எப்படியெல்லாம் இவளிடம் பேச்சை தொடங்குவது என்று யோசித்து வைத்திருந்த சுரேந்தர்…

“ரோசி! நான் கேட்கிற கேள்விக்கு நீ உண்மையைச் சொல்லனும்” – தொடங்கினான்.

அவள் மௌனமாக அவனை ஏறிட்டாள்.

“உனக்கு ராசேந்திரன் மேல அன்பு பாசம் உண்டா இல்லியா?“

”உண்டு.”

“அவரில்லாமல் உன்னால வாழ முடியுமா?”

“வாழ முடியும்ங்குறது வேற சேதி. எந்த புருசன் செத்தாலும் மனைவி உடன்கட்டை ஏறுறது இல்லே”.

“தற்போது உங்களுக்குள்ளே மனக்கசப்பு வருத்தம்.?”

“எதுவும் கெடையாது.”

“குழந்தை?”

“அதை ஒரு பெரிய குறையாய் நினைக்கிறோமே யொழிய நானும் அவரும் பிரிஞ்சு வாழ முடியாது.”

“ராசேந்திரனும் அப்படியா…?”

”நான் இப்போ அவர் பேச்சை கேட்க மாட்டேன்கிறேன்ங்குற சின்ன மனக்குறையைத் தவிர எங்களுக்குள்ளே எந்தவித கசப்பு கஷ்டமும் கெடையாது”

“அந்த குறையையும் போக்கிக்க வேண்டியதுதானே?”

“இல்லே சுரேந்தர். அந்த குறையால நான் ரொம்ப பாதிக்கப்பட்டுட்டேன். இந்த சமுதாயம் என்னை மலடி மலடின்னு துரத்தித் துரத்தி அடிச்சிது. இதெல்லாம் துாசு குழந்தை ஒரு குறை இல்லேன்னு நான் தைரியமா தலை நிமர்ந்த போதெல்லாம் குறைதான்னு என் நெஞ்சுல மிதிமிதின்னு மிதிச்சிருக்கு. அந்த பாதிப்பை என்னால தாங்கவே முடியலை. இதுக்கப்புறம்தான் பெத்தே ஆகணும் இவுங்க மூஞ்சியில கரியைப் பூ சனும்ங்குற வெறி எனக்குள்ளே தலை துாக்கிஅவர் சம்மதத்தோட இந்த வழிக்கு வந்தேன்.” சொன்னாள்.

“அந்த குறையும் இப்போ தீர்ந்து போச்சு.” சுரேந்தர் மெல்ல சொல்லி அவளை அடிக்கண்ணால் பார்த்தான்.

“என்ன சொல்றீங்க?” ரோசி துணுக்குற்றாள்.

“உன் குழந்தை என் வீட்டுல வளருது.” – இவன் சுருதி மாறவில்லை.

குழம்பினாள்.

“உன் கணவன் கரு என் மனைவி வயித்துல இருக்கு!”

“என்ன சொல்றீங்க?” அதிர்ச்சியாய்ப் பார்த்தாள்.

“உண்மை ரோசி.”

இவளால் நம்பவே முடியவில்லை.

“இதனால எனக்கும் உனக்கும் என்ன பாதிப்புன்னா… பிரவீணாவுக்கு ராசேந்திரன் மேல பிடிப்பு அதிகமாகிடுச்சு. காரணம் தாம்பத்திய திருப்திங்குறா. ராசேந்திரன் விலக தயாராய் இருந்தும் அவள் தாயாராய் இல்லே. நான் தடுத்தும் ராசேந்திரனை விட மாட்டேன்னு சொல்றா. யோசித்துப் பார்த்தா அவனை உன்கிட்டேயிருந்து பிரிச்சு உன்னையும் என்னையும் ஏமாத்திடுவாங்களோன்னு பயமா இருக்கு. அப்படி நடந்தால் நீ சுமந்திருக்கிற தாலிக்கும் நான் கட்டின தாலிக்கும் அர்த்தம் மரியாதை இல்லை” – நிறுத்தினான்.

ரோசி முகத்தில் சிந்தனைக் கோடுகள் பரவலானது

“இன்னைக்கு விவகாரத்து சாதாரண விசயம். நீ போ நான் போ விலகிடலாம். நம்ம எதிர்காலம் மத்தவங்க சிரிக்கிறாப் போல ஆகிடும். உன்னை விட ஆம்பளை எனக்கு அதிக அவமானம்”. கமறினான்.

ரோசிக்குப் பேச தோன்றவில்லை.

சுரேந்தர் தொடர்ந்தான். “உனக்கு உன் கணவர் உண்மையிலேயே வேணும்ன்னா பிரவீணாகிட்டே இருந்து காப்பாத்திக் கொள்ள வேண்டியது உன் பொறுப்பு.” என்றான்.

இவளுக்கு முகம் கறுத்து சிந்தனை தீவிரமாகியது.

இவளால் ஏதாவது நடக்கும் சுரேந்தருக்கும் மனதின் ஒரு மூலையில் நம்பிக்கை வந்தது.

சுரேந்தர் தொடர்ந்தான். “ரோசி! அவுங்க ரெண்டு பேரும் ஜோடியானால் நாம இருவரும் ஜோடியானால் என்னன்னு நீ நெனைக்கலாம். எனக்கு விருப்பமில்லே. புருசன் பொண்டாட்டியை மாத்திக்கிட்டாங்கடான்னு நம்மைப் பத்தி மத்தவங்க கேவலமாப் பேசுவாங்க. வெளியில தலை நிமிர்ந்து நடக்க முடியாது. அப்படி வாழுறதைவிட செத்துடலாம்!” சொன்னான்.

ரோசியால் அதற்கு மேல் தாங்க முடியவில்லை.

‘ஒரு வழி பண்றேன்!” அழுத்தமானசொல்லி எழுந்தாள்.

இவனிடம் சொல்லாமல் நடந்தாள்.

சுரேந்தர் அவள் செல்வதையேப் பார்த்தான்.

‘என்ன வழி செய்யப் போகிறாள்?! ஒருவேளை பிள்ளைக்காக ஒருத்திக்கு இருவர் வாழலாம் நினைப்பில் புருசனுக்கு பிரவீணாவைச் சேர்த்துவிட்டு தன்னை அனாதையாக்கிவிட்டால்?’ நினைக்க திக்கென்றது.

என்ன நடக்கப்போகிறது ? வயிற்றைக் கலக்கியது.

***

“இதோ பார் பிரவீணா! சுரேந்தர் நம்ம பழக்கத்தை விரும்பலை. இனி நீயும் நானும் பிரியறதுதான் நல்லது. இனிமேல் நானும் உனக்கு போன் பண்ணமாட்டேன். நீயும் என்னை போன் பண்ணி அழைக்க வேணாம்!” என்று ராசேந்திரன் சொன்னது அறுத்தது. கணவன் மீது கோபம் வந்தது.

இரண்டு நாட்களாக ராசேந்திரனைக் காணாதது என்னவோ போலிருந்தது. எதிரில் யாரைக் கண்டாலும் கடித்துக் குதறிவிடுவது போல் கோபமாக இருந்தாள்.

சுரேந்தரும் அவளிடம் பேச்சுக் கொடுக்க வில்லை.

இவனுக்கும் ரோசியை ஏன் காணேம்? என்ன செய்யப் போகிறாள்? கவலையாக இருந்தது. போனால் போகட்டும் நரி இடம் போனாலும் வலம் போனாலும் நம்மைக் கடிக்காமல் போனால் சரி இருக்கிறாளா. இல்லை, பிரவீணாவைக் கொண்டு வந்தாலும் குழந்தைக்கு குழந்தை ஆச்சு ஒன்றுக்கு இரண்டு ஒற்றுமையாய் இருக்கலாம் என்று நினைத்து இருக்கிறாளா. இல்லை, அவளைப் பார்க்காதே! பேசாதே! பழகாதே! கணவனுடன் சண்டையா. நீ பிரவீணாவைப் பிடித்துக் கொண்டால் நான் சுரேந்தரைப் பிடித்துக் கொள்வேன்! தகராறா? அப்படி வாழ முடியுமா?

ரோசியை நினைக்கும் போதே ‘எத்தனை பேரோ?’ இவனுக்கு இப்போது குமட்டிக் கொண்டு வந்தது.

இந்த நேரம்தான் ரோசி புயலைப் போல் வீட்டிற்குள் நுழைந்தாள்.

“ஏன்டிம்மா! உமட்டுது உமட்டுதுன்னு அன்னைக்கு இருந்தே. இன்னைக்கு வாந்தி எடுத்து என் புருசனை விட்டா வேற ஆள் வேண்டாம்ன்னு துடிக்கிறீயா?” ஏக ஏக வசனத்தில் சோபாவில் அமர்ந்திருப்பவளைப் பார்த்துக் கத்தினாள்.

பிரவீணா இவளை இப்படி எதிர்பார்க்கவே இல்லை. அதிர்ந்தாள்.

“புள்ளையைக் காட்டி என் புருசனை கவிழ்க்கலாம்ன்னு மட்டும் நெனைக்காதே! இனி அவரை நெனைச்சே செருப்புப் பிய்ஞ்சிடும்!” அடிக்க வருபவள் போல் பாய்ந்தாள்

பிரவீணாவிற்கு அழுகை ஆத்திரம் முட்டிக் கொண்டு வந்தது, எதிர்த்துப் பேசினால் எதிரி அடித்து விடுவாளோ! பயமாகவுமிருந்தது.

சுரேந்தரும் இதை எதிர்பார்க்காமல் அறையை விட்டு வெளியே வந்தான்.

அவனைக் கண்ட ரோசிக்கு இன்னும் ஆத்திரம் வந்தது.

“யோவ்! உன் பொண்டாட்டி என் புருசனை மயக்கிட்டா. அந்த ஆள் அங்கே இவ பேரைச் சொல்லிப் புலம்பறான். உன் பொண்டாட்டியைப் பத்திரமா வைச்சுக்கோ. இல்லே… எவனையாவது தேடிப் போகச் சொல்லு. மீறினா நான் பொம்பளை மட்டும் இல்லே. ராட்சசி பின்னி புடுவேன் பின்னி!” என்று இவன் மேலும் பாய்ந்து வந்த வேகத்தில் வெளியேறினாள்.

பிரவீணா ஒரு கணம் சிலையாக இருந்தாள். நிரம்ப யோசித்து ஆட்டோ பிடித்து பசுபதி மருத்துவ மனைக்குச் சென்றாள். உடனே வயிற்றைச் சத்தம் செய்து கொண்டு திரும்பினாள்.

அப்பாடா! பிரச்சனை முடிந்தது. சுரேந்தருக்குத் திருப்தி வந்தது.

உடல் தேறிய மூன்றாவது வாரம் இவன் அலுவலகம் விட்டு வீட்டிற்குள் நுழையும் போது அவள் எவருடையுடனோ போனில் பேசிக் கொண்டிருந்தாள்.

அத்தியாயம் – 14

அன்றைக்குப் பக்கத்து வீட்டுப் பரமசிவம் சுரேந்தரைத் தேடிக் கொண்டு அலுவலகத்திற்கே வந்தார்.

அவர் ரொம்ப நல்ல மாதிரி. ஓய்வு பெற்ற தாசில்தார். யாரையும் அதண்டு பேச மாட்டார். தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பார். அவருக்கு ஒரு மகள், இரண்டு மகன்கள். மூவருமே அமெரிக்காவில் குடும்பம் கோத்திரமாய் வாழ்கிறார்கள். இவர் யாராவது பேசினால்தான் பேசுவார். அநாவசியமாக யாருடனும் பேசமாட்டார். அவருடைய மனைவி மங்கையர்க்கரசி இவரைப் போலவே நல்ல மாதிரி. கணவன் மனைவி வீட்டிலிருப்பதே அடுத்தவர்களுக்குத் தெரியாது.

‘இவருக்கென்ன உதவி நம்மைத் தேடிக் கொண்டு வருகிறார் ?’ இவனுக்கு அவரைப் பார்த்ததும் ஆச்சரியமாக இருந்தது.

“வாங்க சார்!” – ஆச்சரியமும் ஆர்வமுமாக வரவேற்றான்.

“உட்காருங்க” எதிர் நாற்காலியைக் காட்டினான்.

தனி அறைதான். அறைதான். உட்கார்ந்தவர் சுற்றும் முற்றும் பார்த்தார்.

“ஒ.., ஒரு சின்ன பிரச்சனை..?” மெல்லிய குரலில் சொன்னார்.

“யாரும் வரமாட்டாங்களே?” – மறுபடியும் ஒரு முறை சுற்றிப் பார்த்தார்.

அவர் ஏதோ தனிமையில் பேச விரும்புகிறார் – புரிந்தது.

“நான் மணியடிச்சாத்தான் யாரும் வருவாங்க. சொல்லுங்க?” – என்றான்.

“தப்பா எடுத்துக்க மாட்டீங்களே?” தயங்கினார்.

“மாட்டேன் சொல்லுங்க?”

அவருக்கு அப்புறம்தான் தைரியம் வந்தது. நிமிர்ந்து அமர்ந்தார்.

“உங்க வீட்டுத் தொலைபேசிக்கும் என் வீட்டுத் தொலை பேசிக்கும் கடைசி எண்தான் வித்தியாசம்…”

“ஆமாம்.” தலையசைத்தான்.

“உங்க வீட்டுக்கு வர்ற தொலைபேசியெல்லாம் என் வீட்டுக்கு வருது…”

“….”

“சாதாரணமா இல்லே. கொஞ்சம் விவகாரம்…”

திடுக்கிட்டுப் பார்த்தான்.

“பத்துப் பதினைஞ்சு நாளா தினம் தொல்லை. இப்போ காலையில நடந்த சமாச்சாரத்தை மட்டும் சொல்றேன். பத்து மணிக்குப் போன் அடிச்சுது. என் மனைவி போய் எடுத்தாள். இவ ஹலோன்னு சொல்றதுக்குள்ள பிரவீணா வீடுதானேன்னு எதிர்ல ஒரு ஆம்பளைக் குரல் கேட்டுது, இவ இல்லேன்னு சொல்லி போனை வைக்கிறதுக்குள்ள நான் இன்னைக்குப் பன்னிரண்டு மணிக்கெல்லாம் சரியா வந்துடுறேன் மேடம். தயாரா இருங்க சொல்லி போனை வைச்சுட்டான்!” நிறுத்தினார்.

சுரேந்தருக்குத் தலையைச் சுற்றியது,

“போனோட சமாச்சாரம் முடியலை. உங்க வீட்டுக்குச் சமயத்துல முகம் தெரியாத இளைஞர்களும் வர்றாங்க. நீங்க அலுவலகம் வந்த பிறகு தொடர்ச்சியாய் இது நடக்குது நேத்திக்குக்கூட என் வீட்டு அழைப்பு மணியை அழுத்தி இது பிரவீணா வீடுதானேன்னு ஒருத்தன் உள்ளே நுழைஞ்சான். இல்லேன்னு சொன்னபிறகுதான் சாரின்னு வெளியே போனான். உங்க மனைவி எனக்குப் பொண்ணு போல நான் தப்பா சொல்லலை. விருந்தாளியாவும் இருக்கலாம். ஆனா தினம் ஒரு ஆள்ங்குறதுனால விருந்தாளி போல தெரியலை. ஏதோ சிக்கல்! அக்கம் பக்கம் ஒரு மாதிரியா பேசுறதுக்குள்ள நீங்க தீர்க்கனும். இந்த விசயத்துல நீங்க ஆத்திரப்படக்கூடாது. நிதானம் பொறுமையைக் கடைபிடிக்கனும். தப்பு இருந்துதுன்னா முள்ளை முள்ளால எடுக்கிறாப் போல இதம் பதமாய் செய்யனும்.” – நிறுத்தினார்.

சுரேந்தருக்கு உடம்பெல்லாம் பற்றி எரிவது போலிருந்தது.

“நான் வர்றேன் தம்பி!” எழுந்தார், சென்றார்.

“பொம்பளை மட்டும் ருசி காணக்கூடாது. கண்டுட்டா ஆணை விட மோசம். யாரையும் நெகிர் பண்ண மாட்டா.”

“பொண்டாட்டி நெனைச்சா புருசன் என்ன? படைச்ச பிரம்மனே வந்தாலும் ஏமாத்துவா!” கல்லுரி வாழ்க்கையில் நண்பர்களெல்லாம் சொன்னது ஞாபகத்திற்கு வந்து வலித்தது,

‘இதை எப்படி யோசிக்காமல் போனோம்?’ – தனக்குள்ளேயே நொந்தான்.

சின்ன ஆசை சபலம் எதையும் யோசிக்க விடாமல் குப்புற தள்ளி விட்டது. குமைந்தான்.

***

இனி கண்டிக்காமல் விடக்கூடாது.! துணிந்தான்.

எப்படி கண்டிக்க… அடித்துத் துரத்தவா? அம்மா அப்பா பெற்றவர்கள் இல்லை. எங்கு செல்வாள்?

அது எப்படி நியாயம் ? நியாயம்? மனம் அவள் பக்கமும் சாய்ந்தது. அடித்துத் துவைக்க வெளியில் தெரிந்தால் அசிங்கம். வம்பே வேண்டாம் விவாகரத்து கொடுத்துவிட்டாலென்ன? பிள்ளை? நினைக்க திக்கென்றது.

இது என்ன விபச்சாரம்? அலுவலகத்திற்கு விடுப்பு எழுதிக் கொடுத்து விட்டு பறந்தான். வண்டியில் செல்லும் போதே வீட்டில் ஆளில்லை என்றால் என்ன செய்ய? அடுத்தவன் இருந்தால் எப்படி நடப்பான்? பிரவீணா அவனை ஆண் நண்பனென்று அறிமுகப்படுத்தினால் என்ன செய்ய? யோசனை மேல் யோசனை ஓடியது,

வாசலில் வண்டியை நிறுத்தி அழைப்பு மணி அழுத்தினான். பிரவீணாதான் திறந்தாள். வீட்டில் வேறு எவருமில்லை. கொஞ்சம் நிம்மதியாய்ப் போய் அமர்ந்தான்.

என்ன திடீர்ன்னு வந்து நிக்கிறீங்க? அவளுக்குச் சந்தேகம்.

“சு….சும்மா…”

அவளுக்கு நம்பிக்கை இல்லாததை முகம் காட்டியது, ”உன்னால எனக்கு நிம்மதி போச்சு பிரவீணா!” அதற்கு மேல் தாங்க முடியாமல் சொல்லி சரிந்தான்.

“என்ன?“ திடுக்கிட்டவள் போல் கேட்டாள்.

“உன் நடத்தை செய்கை…”

பதில் சொல்லாமல் நின்றாள்.

“ஏன்… ஏன் பிரவீணா இப்புடி?”

“எனக்கு இன்னொரு ராசேந்திரன் கெடைக்க தேடறேன்.”

எவ்வளவு வெட்கம், கூச்சம், பயமில்லாமல் சொல்கிறாள்!? தப்பு செய்ய சொன்னவன் தண்டிக்க முடியாமல் அவளைப் பாவமாக பார்த்தான்.

போன் மணி அடித்தது.. எடுத்தாள். எவரோ பேச…

“மிஸ்டர் வரதன்! உங்க விருப்பப்படி ஓட்டல் காண்டீபத்துல அறை எடுத்திடுங்க நான் வந்திடுறேன்.” வைத்தாள்.

புருசன் இருக்கும்போதே அடுத்தவனுக்கு அழைப்பு! சுரேந்தருக்கு அவளைக் கொலை செய்யும் அளவிற்கு ஆத்திரம். வந்தது.

“தப்பு நண்பா தப்பு!” மனம் தடுத்தது.

‘புருசன் எவ்வளவு அழிச்சாட்டியம் பண்ணினாலும் பொறுத்து மனைவி அவனைத் திருத்தும்போது புருசன் ஏன் அப்படி சகிச்சு பொண்டாட்டியைத் திருத்தக் கூடாது. அதுவும் நீயே வழி காட்டி அவளைக் கெடுக்க வைத்த குற்றவாளி. இன்றைக்கு கொலைவரை போவது எப்படி நியாயம்?’ அதுவே கேள்வி கேட்டது,

காலை கையை உடைச்சி வீட்டுல கெட்டி நாயே! – மீண்டும் மிருகம் எழும்பியது அடக்கினான்.

எப்படி சரி செய்ய? விவாகரத்து? செய்தாலும் பாவம். போடா சக்கை! என்று அவள் உதறி சென்றாலும். அவமானம். என்ன வழி?

வீட்டில் அம்மா அப்பா இல்லாதது பெரிய குறை. அவர்களிருந்தால் பெண்ணோ மருமகளோ இப்படி போக வாய்ப்பே இல்லை. எங்கே போறே போறே? கேள்வி கேட்பார்கள். வீட்டில் பெரியவர்களிருக்கிறார்கள் என்ற பயம் வரும். ஆள் வைக்கலாமா? பிரவீணா அவளையும் கைக்குள் போட்டுக்கொண்டு வெளியில் செல்வாள். இல்லை அவளை காவலுக்கு வைத்து விட்டு விருப்பப்படி உள்ளிருப்பாள். இது சரி வராது. வேறு? மூளைக்கு வேலை கொடுத்தான்.

“சார் போஸ்ட்!” வாசலில் குரல் கேட்டது. எழுந்து போய் வேண்டா வெறுப்பாக வாங்கி பிரித்தான்.

‘பாசமுள்ள பெற்றோர்களுக்கு

மாணவர்களுக்கு அரையாண்டு விடுப்பு விடப்பட்டுள்ளதால் தங்கள் மகனை உடன் வந்து அழைத்துச் செல்லவும்.

இப்படிக்கு
வார்டன்.’

இது புது சிக்கல். விடுப்பு விட்ட குழந்தையை அழைத்து வராமல் இருக்க முடியாது. உடன் தங்கி இருந்த குழந்தைகளெல்லாம் ஊருக்குப் போக மனோ மட்டும் விடுதியில் தனியே தங்க முடியாது.

அவன் வந்து தாய் சென்றால் ?!….மடித்து பாக்கெட்டில் வைத்தான்.

அத்தியாயம் – 15

சொல் பேச்சு கேட்காததால் சுரேந்தர் மனைவியிடம் சொல்லாமலேயே மகனை அழைக்க புறப்பட்டான். அந்த அளவிற்கு அவள் மீது வெறுப்பு. அவர்களுக்குள் பேச்சு இல்லை. ஏதோ தானுண்டு தன் வேலையுண்டு என்று இருவருமே இருந்தார்கள்.

பரவீணாவிற்கு கணவன் ராசேந்திரனை வெட்டிவிட்டதில் கோபம். அதனால் இவளும் கணவன் பேச்சைப் பற்றி கவலைப்படவில்லை.

சுரேந்தர் பேருந்துவில் தான் புறப்பட்டான். காலை சரியாய் பத்து மணிக்கெல்லாம் மனோ விடுதியில் இறங்கினான். விடுதிக்கு அருகிலேயே பள்ளி.

“ஹை! அப்பா வந்தாச்சு. நான் ஊருக்குப் போறேன்!” ஏழு வயசு மனோ விடுதியிலிருந்த நாலைந்து மாணவர்களிடம் குதுாகலத்துடன் சொல்லி அங்கிருந்து குதித்துக் கொண்டு ஓடிவந்தான்.

பிரிவு ஏக்கம் தகப்பனைக் கண்டதும் தாவி இறுக்கமாக கட்டிக்கொண்டான். சுரேந்தருக்கும் மகனைப் பார்த்ததில் மகிழ்ச்சி அரையாண்டு விடுப்பு பையனை வந்து அழைத்துச் செல்லவும் என்று பள்ளியிலிருந்து கடிதம் வரவில்லையென்றால் இவனை மறந்தே போயிருப்போம் நினைக்க நெகிழ்ச்சியாக இருந்தது.

குழந்தைக்கு அம்மா நினைப்பு. எப்போதும் அப்பாவும் அம்மாவும்தானே வந்து அழைத்துச் செல்வார்கள். காலாண்டு பரீட்சை முடிந்ததும் அப்படித்தானே வந்து அழைத்துச் சென்றார்கள். இப்போது ஏன் வரவில்லை. குறை. “அம்மா வரலையாப்பா?” – கேட்டான்.

“வரலை.” – சொன்ன சுரேந்தர் மனோவுடன் சென்று தலைமை ஆசிரியை வார்டனிடம் சொல்லிக் கொண்டு வெளியே வந்தான்.

பேருந்தில் குழந்தை தகப்பனை நெருங்கி அமர்ந்து கொண்டான்.

“முந்தியெல்லாம் நீயும் அம்மாவும் மாறி மாறி கடிதம் போடுவீங்க போன் பேசுவீங்க. இப்போ ஏன்ப்பா கொஞ்ச நாளா ஒன்னும் பண்ணலை?“ கேட்டான்.

மனோ கேட்டது சுரேந்தருக்குள் சுருக்கென்றது, ‘ஆழம் தெரியாம காலை விட்டு இப்போது அவஸ்தை மகனே!’ நெஞ்சுக்குள் உடைந்தான்.

“அம்மா நல்லா இருக்காங்களாப்பா?” மனோ தாயைப் பற்றிய நினைப்பு அடுத்தும் கேட்டான்.

“இருக்கா”

“அம்மாவுக்கு இன்னொரு பாப்பா பொறக்கப் போவுதா?”

“இல்லியே! ஏன்?” சுரேந்தர் திடுக்கிட்டான்.

“அம்மாகிட்டேயிருந்து போனே வரலையேன்னு ஒரு நாள் ரொம்ப கவலையா இருந்தேன். என் பிரண்டு சொன்னான். அம்மா வயித்துல பாப்பா மொளைச்சிருக்கும் அதைக் கவனிச்சதுல உன்கிட்ட பேச நேரம் இருந்திருக்காதுன்னு சொன்னான் சரிதானேப்பா?”

என்னதான் படிப்பு கருதி விடுதியில் படிக்க வைத்தாலும் பிள்ளைகளுக்கு வீட்டு ஏக்கம் அம்மா நினைப்பு சரிதான் என்றாலும் இந்த வயதில் ஒருத்தருக்கொருத்தர் எவ்வளவு ஆறுதலாக இருக்கிறார்கள். நினைக்க சுரேந்தருக்கு வியப்பாய் இருந்தது.

இப்போதெல்லாம் குழந்தைகளுக்குப் புத்தி கூர்மை. மட்டுமில்லாமல் ஐந்து வயது குழந்தைகளுக்கு அனைத்தும் தெரிகிறது. எல்லாம் மீடியாக்கள் செய்கிற வேலை. கற்காதவைகளையும் கற்றுக் கொடுத்து விடுகிறது. ஆனாலும் சில விசயங்கள் அந்தந்த வயதுக்கேற்பதான குழந்தைகளுக்குப் புரிகிறது.

ஒரு நாள் பிரவீணா இவன் முதுகில் சுரீரென்று வைக்க அவன் அலறிக் கொண்டு வந்து தகப்பனைக் கட்டிக்கொண்டான்.

“ஏன்டி அடிச்சே?”- இவனுக்கு மகா கோபம்.

“அவன் கேட்ட கேள்விக்குக் கொன்னே போட்டுடுவேன்.” – அவளுக்கு அதைவிடக் கோபம்.

“என்ன கேட்டான்?”

“உன் பிரா குயினா நாயுடு ஹாலான்னு கேட்டான்.”

“ஏன்டா அப்புடியா கேட்டே?!”

“ம்ம்” – மனோ வழிந்த கண்ணீரைத் துடைத்தான்.

“பிரான்னா உனக்கு என்னன்னு தெரியுமா”

“தெரியும் அம்மா போட்டுப்பா”

“பிராண்டு?”

“அதான் தெரியாது. டி.வில ரெண்டு விளம்பரமும் வந்துது. அதான் அம்மா போட்டிருக்கிறது என்னன்னு கேட்டேன்.” குழந்தைத்தனமாகச் சொன்னான்.

இந்த குழந்தை போய் தாயைத் திருத்துமா. திருத்தாவிட்டாலும் பத்து நாட்களுக்காவது காவல். இவனுக்குத் திருப்தியாக இருந்தது.

பெற்றவள் மாறிவிட்டாள். தாய்ப் பாசம் இருக்குமா? சிந்தித்தான். இவர்கள் செல்வதற்குள் அவள் வீட்டில் இருக்க வேண்டும் ! வேண்டினான்.

***

மறுநாள் மதியம் அப்பனும் பிள்ளையும் வீட்டிற்கு வந்த போது பூட்டி இருந்தது.

சுரேந்தர் தன்னிடம் உள்ள சாவியை எடுத்துத் திறந்தான்.

“அம்மா எங்கேப்பா?” மனோ ஏமாற்றத்துடன் கேட்டான்.

கடைக்குப் போயிருக்காள் என்று சொன்னால் அவள் உடன் வந்துவிட வேண்டும். அவள் எங்கேயாவது சிக்கி இரவும் வராமல் போனால் அம்மாவை ஏன் இன்னும் காணோம்? பிள்ளை துளைப்பான் தவிப்பான். என்ன பதில் சொல்ல? யோசித்தவன்

“அம்மா ஒரு விசேசத்துக்கு வெளியூர் போயிருக்கா, காலையில வந்துடுவா.” சொல்லி வைத்தான்.

மனோ அடங்கினான்.

காலையிலேயே பிரவீணா புத்தம் புது பூ வாக வந்தாள். இரவு என்ன கேளிக்கை கொண்டாட்டம் ஆட்டமோ கசங்கிப் போய் வந்தாள். கண் விழிப்பு கண்கள் உள் வாங்கிப் போய் கருவளையமிட்டிருந்தது.

வீடு திறந்திருப்பதைப் பார்த்து திகைத்தாள். கணவன் வந்து விட்டான் என்கிற பயம் படபடப்பு தலையைக் கவிழ்ந்து கொண்டு நுழைந்தாள்.

தாயைக் கண்ட மகிழ்ச்சி.

மனோ “அம்ம்மா !” ஓடி வந்து கட்டிக் கொண்டான்.

பிரவீணா மகனை எதிர்பார்க்கவில்லை.திகைத்தாள். பின் இன்ப அதிர்ச்சியாக மாற “மனோ!” அணைத்து தாய்ப்பாசம் முத்த மழை பொழிந்தாள்.

சுரேந்தர் இவர்களைப் பார்த்தபடி சோபாவில் அமர்ந்திருந்தான்.

“எங்கேம்மா போய் வர்றே?”

பிரவீணா என்ன சொல்வதென்று தெரியாமல் விழித்தாள்.

“நாங்க நேத்தியே வந்துட்டோம். உன்னை ராத்திரி முழுக்க காணோம்!“

“வந்து…வந்து…”

“சித்தி வீட்டு கலியாணத்துக்குப் போய் வர்றேன்னு சொல்லு பிரவீணா.” தாயின் அசிங்கம் பிள்ளைக்குத் தெரியக் கூடாதென்பதற்காக சுரேந்தர் எடுத்துக் கொடுத்தான்.

:ஆமாம். சித்தி வீட்டு கலியாணத்துக்குப் போய் வர்றேன்”.

“எந்த சித்தி?”

‘உனக்குத் தெரியாது மனோ” சுரேந்தர் வந்து மகனை அணைத்து மனைவியைக் காப்பாற்றினான்.

தான் முழுதும் காப்பாற்றப்பட்டதற்காக நிம்மதி மூச்சு விட்ட பிரவீணா கணவனை நன்றி பெருமையுடன் பார்த்தாள்.

அடுத்து தாயும் பிள்ளையும் ஒட்டிக்கொண்டார்கள்.

***

சுரேந்தர் பழைய நினைவுகளில் மூழ்கி எழுந்தான். மகன் தகப்பனை விட்டு எப்போது சென்றானோ தெரியாது.

மனோ பக்கத்து அறையில் கணனியில் விளையாடிக் கொண்டிருந்தான்.

பிரவீணா சமையற் வேலையில் இருந்தாலும் யாருக்கோ வருவேன் என்று சொல்லி இருந்தாள் போல படபடப்பாக இருந்தாள். மகன் இருக்கையில் எப்படி வெளியில் செல்வது என்பது போல் தவிப்பாக இருந்தாள். அடிக்கடி வேர்த்தாள்.

போன் மணி அடித்தது. அவள் சமையல் கட்டிலிலிருந்து ஓடி வருவதற்குள் சுரேந்தர் எடுத்தான்.

“ஹலோ! யார்?” கேட்டு முகம் மாறி பிரவீணாவிடம் கொடுத்தான்.

“ஹலோ!”

“மேடம் நான் தாமோதர்”

“சாரி ராங் நம்பர்”. வைத்தாள்.

அடுத்தும் அடித்தது.

எடுத்தாள்.

“மேடம்…” – மறுபடியும் அவன் குரல்.

வீட்டில் மகனிருக்கிறான் வர முடியாது என்ற உண்மையைச் சொல்ல முடியாமல் “சாரி” – வைத்தாள்.

மறுபடியும் அடித்தது.

பக்கத்து அறையில் விளையாடிக் கொண்டிருந்த மனோவிற்கு எரிச்சல் தாளவில்லை. ஓடி வந்து எடுத்தான். பட்டனை அழுத்தி போனிலுள்ள ஒலி பெருக்கியை உயிர்ப்பித்தான்.

“ஹலோ யார்?“

“யார் தம்பி நீங்க?”

“நான் பிரவீணாவோட பையன்.”

“போனை அம்மாகிட்ட குடுங்க“

“எதுக்கு?“

“நான் அவுங்களோட பேசனும்!”

“என்ன பேச போறீங்க?”

“அம்மா ஓட்டலுக்கு என் கூட சாப்பிட வர்றேன்னாங்க. வரச்சொல்லனும்.”

“நீங்க யார்?”

“அம்மாவோட பிரண்ட்!”

பிரவீணா அதற்கு மேல் பொறுக்க முடியாமல் மனோ கையிலிருந்த ஒலி வாங்கியைப் பிடுங்கி ஆத்திரத்துடன் வைத்தாள். தாயின் செய்கை மனோவிற்கு அதிர்ச்சியாய் இருந்தது.

“ஏம்மா! போன் பண்ணி ஓட்டலுக்குச் சாப்பிடக் கூப்பிட்டா போவீயா?” தலையை ஆட்டி ஆர்வம் ஆச்சரியமாகக் கேட்டான்.

“போவேனே! “- சமாளித்தே ஆக வேண்டிய கட்டாயம். பிரவீணாவும் பதில் சொன்னாள்.

“அப்புடின்னா நானும் நாளைக்குப் பெரிய மனுசனாகி ஓட்டலேர்ந்து போன் பண்ணி சாப்பிடக் கூப்பிட்டா வருவீயா?!” – குழந்தை வியப்பாய்க் கேட்டான்.

அவ்வளவுதான். ‘பிள்ளை அழைத்து தாய்! தாயும் பிள்ளையும்!’ கண்களில் காட்சிகளாய் விரிய அது பிரவீணாவின் இதயத்தில் ஓராயிரம் ஈட்டிகளாக உருவெடுத்து நெஞ்சு சொருகியது.

“ஐயோ! செத்தேன்!” அவளையும் அறியாமல் அலறி துடித்தாள். தாங்க முடியாமல் சுரேந்தரிடம் ஓடிப் போய்,

“என்னங்க! மனோ என்ன கேள்வி கேட்கிறான் நீங்க பார்த்துக்கிட்டு சும்மா இருக்கீங்களே…?! தாயும் புள்ளையுமா..? ஐயோ கடவுளே நான் செத்தேன். என்னைக் கொன்னுடுங்க கொலை பண்ணிடுங்க” முகத்தில் மாறி மாறி அறைந்து அவன் காலடியில் விழுந்து புரண்டு கதறினாள்.

‘சமயத்தில் குறி பார்த்து விடாத அம்பு வேங்கையை வீழ்த்தும். பெரிய சிக்கலாய் இருக்கும். நுால் எவராவது தொட அவிழும்.! எப்படியோ உருவான பொறி, எங்கோ விழுந்து ஒரு காட்டையே அழிப்பது போல இவையெல்லாம் எதிர்பாராத திருப்பங்கள், மாற்றங்கள்’

‘அது போல சிறுவன் சிறுவன் விட்ட எதார்த்த சொற்கள். பிரவீணா மனச் சேற்றில் சொதக்கென்று விழுந்து புதைந்த கற்கள். இந்த வார்த்தைகளும் அதனால் வரும் கற்பனையும் இவளை உயிருள்ளவரை அறுக்கும். அறுக்கும். ஏன் புருசன் தொட்டால் கூட குமட்டும். இனி இவள் தவறு செய்ய மாட்டாள் செய்பவளென்றால் இப்படி துடிக்க மாட்டாள். தவறு செய்ய வாய்ப்பில்லை.’ தெளிவாகத் தெரிய….சுரேந்தர் அவளை ஆறுதலாக அணைத்தான்.

தன்னால் ஒரு பெரிய மாற்றமே உண்டானதை அறியாத மனோ தாயின் கதறலைக் கண்டு மிரண்டு போனவனாய் தகப்பனைப் பார்த்து மலங்க மலங்க விழித்தான்.

(முற்றும்)

Karai adalarasan என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *