உன் சித்தம் என் பாக்கியம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 28, 2025
பார்வையிட்டோர்: 139 
 
 

மணவாளன் சிறந்த முறையில் மண் பானைகள்; செய்து வாழ்க்கையை நடத்தி வந்தான் தேவைக்கேற்ப அழகான மண் பானைகள் செய்து அப்பானைகளைச் சுட்டு மெருகேற்றி வண்ணம் பூசி விற்பனை செய்து வந்தான். ஒருமுறை பானைகளுக்கு ஆர்டர் கிடைத்தது. உடனே அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வடிவமைத்து சூளையில் அடுக்க ஆரம்பித்தான்.

சூளை உள்ளே அடுக்கப்பட்ட பானைகளில் ஒரு சில பானைகள் ஐயோ அம்மா என்னை தீ மூட்டி எரிக்கப் போகின்றாரே என்று கதற ஆரம்பித்தன. ஒரு சில என்னை விட்டு விடுங்கள். எரிக்க வேண்டாம் என்றுப் புலம்பின. ஒரு பானை மணவாளனிடம் ஐயா என்னை ஒன்றும் செய்து விடாதீர்கள். நான் நன்றாகத்தான் இருக்கின்றேன். சூரிய ஒளியில் சுடப்பட்டு நான் வலிமையுள்ளவனாக மாறிப் போனேன். என்னை மட்டும் விட்டு விடுங்கள் என்று மணவாளனிடம் கெஞ்சியது.

அதற்குப் பக்கத்திலிருந்த பானை, கொஞ்சம் சும்மா இருக்கின்றாயா. களிமண்ணாக எந்த வடிவமும் இல்லாமல் இருந்த நம்மை எடுத்து பிசைந்து நம்மை அழகான பானையாக உருமாற்றி நாம் நீடூழி காலம் வாழ வேண்டும் என்பதற்காகத்தானே நம்மை சூளையில் வைத்து புடமிடுகின்றார்கள். அதைப்போய் வேண்டாம் என்கின்றாயே. சுற்று சும்மா இரு என்று அதட்டியது.

நீ சொல்வதெல்லாம் சரிதான். ஆனால் சூளையில் என்னை வைக்கும் போது அதிக சூட்டின் காரணமாக நான் பொசுங்கிப் போய் விடுவேனோ என்று எனக்குப் பயமாக இருக்கின்றது என்று புலம்பியது. அதற்கு அந்தப் பானை இதில் பயப்பட என்ன இருக்கின்றது. எந்த விஷயமும் இல்லாமல் மண்ணோட மண்ணாகக் கிடந்த நம்மை எடுத்துப் பிசைந்து பானைகளாக உருவாக்கிய குயவன் நமக்குக் கெடுதல் செய்ய மாட்டான் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன். நீயும் அதையே நம்பு என்றது. இருந்தாலும் அந்தப் பானைக்கு பயம் விடவில்லை. சூளையை நினைக்க நினைக்க துக்கம் தொண்டையை அடைத்தது

இவற்றையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த மணவாளனுக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை. வலியில்லாமல் வேதனை இல்லாமல் யாருக்காவது குழந்தை பிறக்க முடியுமா. குழந்தை பிறந்த பிறகு அந்த வலியும் வேதனையும் ஒரு நொடியில் மகிழ்ச்சியாக மாறிப் போகிறதே அதை நீ அறியவில்லையா. சுட்டால் தானே பொன் சிவக்கும்.

உன்னைப் படைத்த எனக்கு நீ நீடூழி வாழ வேண்டும் என்ற அக்கறை இருப்பதால்தான் உன்னை மெருகேற்றுகின்றேன். சூளையில் போடுவது உன்னை வேதனைப்படுத்த அல்ல. உன்னை வலிமைப்படுத்த மட்டுமே என்பதை உணர்ந்து கொள். பிறகு உன் இஷ்டம் என்று கூறித் தன் வேலையைப் பார்க்க ஆரம்பித்தான்

மணவாளன் சொல்வதை அந்தப் பானை ஏற்றுக் கொள்ளவில்லை. அதெல்லாம் சரிதான் ஐயா. இப்பவே நான் வெயிலியே காய்ந்து வலிமையாகத்தானே இருக்கின்றேன். சுட்ட பானைகள் செய்கின்ற எல்லா வேலையையும் என்னால் செய்ய முடியும.; தயவு செய்து என்னை இப்படியே விட்டு விடுங்கள் என்று பரிதாபமாகக் கெஞ்சியது.

மணவாளன்; சிரித்துக் கொண்டே சரி சரி அப்புறம் உன் இஷ்டம் என்று அந்தப் பானையை மட்டும் விட்டு விட்டு மற்ற பானைகளை நெருப்புச் சூளையில் வைத்து சூடு ஏற்றினான். பின்னர் சூடு தணிந்ததும் மற்ற பானைகளைப் போல சுடாத அந்தப் பானைக்கும் வண்ணம் தீட்டி மற்ற பானைகளோடு அதையும் வண்டியில் ஏற்றி சந்தைக்கு எடுத்துச் சென்றான். மற்ற பானைக்கும் அதற்கும் ஒரு வித்தியாசம் கூடத் தெரியவில்லை. அவ்வளவு அழகாக ஜொலித்தது.

அந்த பானைக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. ஒருவன் அந்தப் பானைகளைத் தேர்வு செய்து தனக்கு இரண்டு பானைகள் வேண்டும் என்று ஒரு சுட்ட பானையோடு சுடாத பானையையும் வாங்கிச் சென்றான். அப்போது சுட்ட பானையைப் பார்த்து, பார்த்தாயா எனக்கும் உனக்கும் ஒரு வித்தியாசமும் தெரியவில்லை. சூளையில் வைத்து சுடப்பட்டதால் எந்தப் பயனுமில்லை. நான் சுடாமலேயே உனக்கு இணையாக இருக்கின்றேன் பார்த்தாயா. நான் எவ்வளவு பெரிய அறிவாளி என்று பேசி ஏளனமாகச் சிரித்தது.அதற்கு அந்தப் பானை மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. அமைதி காத்தது.

பானை வாங்கிச் சென்ற அந்த மனிதன் அதன் கழுத்து மட்டும் தண்ணீர் நிரப்பினான். இப்போதும் சுடாத பானைக்கு ஒன்றும் ஆகவில்லை. அறிவிலியே என்னைப் பார். நான் எப்படி திடகாத்திரமாக இருக்கிறேன் பார் என்று சுட்ட பானையைப் பார்த்து மார்தட்டிக் கொண்டது.

ஆனால் அது கொஞ்சம் நேரம் கூட அந்த மகிழ்ச்சி நிலைக்கவில்லை. ஊற்றப்பட்டத் தண்ணீர் அதைக் கொஞ்சம் கொஞ்சமாக கரைக்க ஆரம்பித்தது ஒவ்வொரு இடமாக கரைந்து மண் உதிரத் தொடங்கியது. அப்போதுதான் சுடாத பானைக்கு சூளையின் மகத்துவம் புரிய ஆரம்பித்தது. கடைசியில் பழையபடி உருவமில்லாத மண் குவியலாய் உரு தெரியாமல் மாறிப் போனது.

மண்ணாய் இருந்த நம்மை உருவாக்கி நாசியில் சுவாசத்தை ஊதி, உயிர் தந்து நம்மை வாழ வைத்து வழி நடத்துகின்ற இறைவன் நமக்கு ஒரு புதிய ஆண்டினைக் கொடுத்துள்ளார். அதில் சிறப்பாக வாழ்வது நமது கடமை ஆகும். இந்த ஆண்டிலே நமக்கு என்ன கொடுக்க வேண்டும், எப்போது கொடுக்க வேண்டும், எப்படி கொடுக்க வேண்டும், ஏன் கொடுக்க வேண்டும், எதற்காகக் கொடுக்க வேண்டும், யார் மூலம் கொடுக்க வேண்டும் என்பதெல்லாம் நம்மைப் படைத்த இறைவனுக்கு நன்றாகத் தெரியும். எனவே அவர் மேல் பாரத்தைப் போட்டு அவனின்றி ஒரு அணுவும் அசையாது என்ற நம்பிக்கையில் வாழ்க்கைப் பயணத்தை ஆரம்பிப்போம்.

கடந்த கால இன்ப துன்பங்களை அலசி ஆராய்ந்து இந்த ஆண்டில் இறைவன் நம்மை சீறும் சிறப்புமாக வழி நடத்த இறையருளை இறைஞ்சுவோம். எல்லாம் இன்ப மயமாகட்டும். அனைவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

நான் ராணிப்பேட்டையைச் சேர்ந்த அல்போன்ஸ் மோசஸ். பல்வேறு உற்பத்தி பிரிவுகளில் மனிதவளத் துறையில் மேலாளராகப் பணியாற்றினேன். கடந்த 3 ஆண்டுகளாக வாரந்தோறும் சிறுகதைகள் எழுதி, புதுச்சேரியிலிருந்து வரும் வார இதழில் வெளியிட்டு வருகிறேன். முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸ் மற்றும் சென்னை மற்றும் மைலாப்பூர் பேராயரிடமிருந்து எழுத்தாளர் விருதைப் பெற்றுள்ளேன். ஆரோவில் ஐடிஐயில் துணை முதல்வராகவும் பணியாற்றியுள்ளேன். தேரி உயர்நிலைப் பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *