இந்த கதையை படிக்காதீங்க
கதையாசிரியர்: நிர்மலா சந்திரசேகர்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: December 18, 2025
பார்வையிட்டோர்: 236

என் அம்மா இந்த கதையை படிக்க எடுத்தாலே,
“சாப்பிடும் போது இதைப்படிக்காதேன்னு படிக்காதேன்னு எத்தனை தடவை சொல்றது’’னு தலையில் குட்டி பிடுங்கி வைத்து விடுவார்.
அப்படி என்னதான் இந்த கதையில் இருக்கிறது.
இனி கதையை பார்ப்போம்.
சரவணனும், ராஜாவும் பக்கத்து பக்கத்து வீட்டில் குடியிருப்பவர்கள்.சின்ன வயதிலிருந்தே இருவரும் நண்பர்கள்.குடும்ப நண்பர்கள்.
இருவரும் ஒரே பள்ளி.ஒன்றாக ஒருவர் வீட்டில் மற்றொருவர் என மாறி மாறி இருவர் பெற்றோரிடமும் பாசத்துடன் வளர்ந்தவர்கள்.ஆனால் இதில் ராஜா எல்லாவற்றிலும் பின் தங்கியே இருப்பவன். படிப்பில், சாதுர்யத்தில், புத்திசாலிதனத்தில் என்று.
சரவணன் நன்கு படித்து ,என்ஜினியரிங் முடித்து, பெரிய கம்பெனியில் லட்சத்தில் சம்பாதிப்பவன்.
ராஜா டிகிரி முடித்து விட்டு ஒரு பைனஷ்ஷியரிடம் கலக்சன் க்ளர்க்காக வேலை செய்கிறான்.
சரவணனுக்கு திருமணமாகி ஏழு வயதில் ஒரு பையன், ஒரு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
ராஜாவிற்கு திருமணமாயிற்று. குழந்தை இல்லை.இப்பொழுதும் இரு குடும்பமும் பக்கத்து பக்கத்து வீட்டில் நண்பர்களாக, ஒருவர் வீட்டிற்கு மற்றவர்கள் வருவதும், போவதுமாக நெருக்கமாக தான் இருக்கிறார்கள்.
அன்றும் அப்படி தான்.ராஜாவும், அவன் மனைவி கீதாவும் சரவணன் வீட்டிற்கு வந்தார்கள். சரவணன் வீட்டில் இல்லை .ஹாலில் குழந்தை ஈஷா உட்கார்ந்து விளையாடி கொண்டிருந்தாள். அழகான படு சுட்டி குழந்தை. எல்லாரிடமும் வருவாள். யார் தூக்கினாலும் அழவே மாட்டாள் சிரித்துக்கொண்டே இருப்பாள்.
பையன் யாதித் போனை பார்த்துகொண்டிருந்தான்.
ராஜாவும், கீதாவும் வீட்டினுள் வந்து,
“ஈஷாக்குட்டி, ஈஷாகுட்டி என்ன பண்ணுது” என்று சொல்லியபடி கீதா குழந்தையை தூக்கினாள் .
உடனே ராஜா,” ஏன் அவள கசக்கறே. குழந்தை விளையாடிட்டு தானே இருக்கு. கீழ விடு”. என்று அவள அதட்டி வி்ட்டு, யாதித் கிட்ட போய்,
”செல்ல புள்ள இன்ன பண்ணுது”, என ராஜா கேட்க,
“அங்கிள் இந்த கேம் பாருங்க” என காட்ட,
“இத ஏன்டா பாக்கற, நம்ம டீவி பாக்கலாம் வா” என டீவி ஆன் பண்ண,
“கீதா போய் ரேகா கிட்ட டீ போட்டு கொண்டு வா” என ராஜா சொல்ல அதற்குள் சரவணன் மனைவி ரேகா இருவரையும் பார்த்து,
“வாங்க, வாங்கண்ணே” என்று கூப்பிட்டு,
“டீ கூடவே பஜ்ஜி போட்டேன். சாப்படறீங்களா?” என்று கேட்டுக்கொண்டே, சமையலறைக்குள் போய் தட்டில் நூடுல்ஸ் வைத்து ஸ்பூன் போட்டு யாதித் முன் வைத்தாள் .
ராஜா யாதித் முன் வைத்த நூடுல்ஸ் தட்டையே பார்த்துக்கொண்டிருந்தான்.
“ஏங்க, என்ன அவன் தட்டை பாக்கறீங்க. நம்மல்லாம் பஜ்ஜி சாப்பிடலாம்” என்று கீதா சமையலறைக்குள் ரேகாவுடன் நுழைந்தாள் .
“எனக்கு நூடுல்ஸ் தான் வேணும்”. என கீதா காதில் சொல்ல கீதா ‘கொன்னு’ என்பது போல கையை காட்டிவிட்டு சமையலறைக்குள் நுழைந்து,ரெண்டு பஜ்ஜி தட்டில் கொண்டு வந்து கொடுக்கவந்தாள் கீதா ராஜாவிடம்.
ராஜா அங்கு ஹாலில் டேபிள் மேலிருந்த சின்ன தட்டிலிருந்த சிறு சிறு தங்க நாணக்குழாய் உருளைகள் ஐந்து இருந்தன அவற்றை கையிலெடுத்து ‘திரு,திரு’ என பார்த்துக்கொண்டிருந்தான்.
கீதா வருவதைப்பார்த்து “இது என்னது?” என கேட்க கீதா
“அது தாலி ஜெயினில் போடும் உரு. அதை அந்த இடத்திலேயே வையுங்கள்” என்று அதட்டினாள்.
“சரி ,சரி கத்தாதே” என பஜ்ஜியைப்பாத்துக்கொண்டே
தெரியாமல் தங்க நாணக்குழாய் உருளைகள் தட்டை தரையில் வைத்து விட்டு பஜ்ஜி தட்டை எடுத்துக்கொண்டான்.
“எதுக்கும் நூடுலஸ் கேளேன்?” .என்றான் கீதாவிடம்.
“நம்ம வீட்டுக்கு வாங்க செய்து தரேன்.இப்ப இத சாப்பிடுங்க”
என்பதற்குள் ரேகா சுடசுட மேகி நூடுலஸ் செய்து கொண்டு வந்து ராஜாவிடம் தந்தாள் “சாப்பிடுங்க அண்ணா”
கீதா ராஜாவை முறைத்தாள்.
ஈஷாவிற்கு பஜ்ஜியை ஊட்டலாம் என்று கீதா தூக்க ஈஷாஅழுதுக்கொண்டிருந்தாள்.
“ஏம்மா நல்லா தானே இருந்தா, ஏன் அழறா” என்று ரேகா தூக்கி கொண்டு சமாதானம் செய்ய, அழுவது நின்ன பாடில்லை.
அவளுக்கு குடிக்க தண்ணி கொடுத்தாலும், தள்ளிவிட்டாள். நேரம் போக போக குழந்தைஅழுவது நிறுத்துவதாக தெரியவில்லை.
“ரேகா வா நம்ம டாக்டரிடம் போகலாம்” என கீதா சொல்ல ரேகா குழந்தையை தூக்கி கொண்டு, பையனையும் கூட்டி கொண்டு ஸ்கூட்டியில் சென்றாள்.
அவர்களை தொடர்ந்து ராஜாவும், கீதாவும் பின் தொடர்ந்தளர்.
சிறு க்ளினிக் தான். குழந்தை நல மருத்துவர்
குழந்தையை செக் பண்ணி பார்த்தார். குழந்தைஅழுதவாறே இருந்தது. “குழந்தை ஏதாவது வாயில் போட்டுக்கொண்டாளா” வயிற்றை அமுக்கி பார்த்தார்.
குழந்தை மேலும் மேலும் அழுதது.
“ஏதாவது வாயில் போட்டுக்கொண்டிருப்பாள் போல.இந்த ட்ராப்ஸை கொடுங்க” என்று எழுதிக்கொடுக்க
ராஜா உடனே ப்ரிப்க்ரிப்ஷனை வாங்கி, ஓடிபோய் மெடிக்கலில் மருந்தை வாங்கி வந்தான். குழந்தை அழகாக வாயை காட்டி மருந்தை சாப்பிட்டாள்.
வலி குறைந்ததோ தெரியவில்லை ,அழுகையை நிறுத்தி விட்டாள். உடனே கக்கா போக தொடங்கினாள்.
ரேகா குழந்தையை தூக்கிக்கொண்டு, ரெஸ்ட் ரூமிற்கு ஓடினாள்.
கீதா பின்னாடியே ஓடினாள்.
கீதாவிற்கு மனதிற்குள் ஏதோ ஒரு சந்தேகம் இருந்ததுக்கொண்டிருந்தது.
குழந்தையின் கக்காவை தன்கையிலேயே வாங்கிக்கொண்டாள்.
ரேகா கூடதிட்டினாள்.” என்ன பண்றே கீதா நீ”
“பரவாயில்லை குழந்தை தானே.”என்றாள் கீதா
பின் இருவரும் குழந்தையை சுத்தம் செய்து அவர்களும் கையை டெட்டால் போட்டுக்கழுவி பாத்ரூமை விட்டு வெளியே வந்தனர்.
குழந்தை நார்மலாகி சிரிக்க ஆரம்பித்து வாட்டாள்.
வெளியே வந்த கீதா நேராக ராஜாவிடம் வந்து, அவனை கொஞ்ச தூரம் தள்ளிக்கொண்டு வந்து
“ஏங்க இந்த கலாட்டாக்கு எல்லாம் காரணம் நீங்க தான். தெரியுமா?” என்றாள்.
“ஏன் நான் என்ன செய்தேன்” என்றதற்கு
கீதா, ”அந்த நாணக்குழாய் தட்ட ஏன் கீழ வச்சீங்க. குழந்தை அத வாயில போட்டுக்கிச்சு”.
“என்னது குழந்தை தங்க நாணக்குழாயை சாப்புட்டுடுச்சா..ஐய்யய்யோ .நான் தான் குழந்தை இருக்கேன்னு தெரியாம கீழ வச்சிட்டேனா. நல்ல வேளை கடவுள் காப்பாத்திட்டாரு. அப்ப அந்த தங்க நாணக்குழாய்?”
“இதோ என் கையில” என்று கையை விரித்துக்காண்பித்தாள் கீதா. “இதை யாருக்கும் தெரியாம அவங்க வீட்ல அந்த தட்ல பழையபடி வச்சிடனும்.”
“ஆமா நீங்க ஏங்க வயிற்றை பிடிச்சிக்கறீங்க?”
“ஏங்க உங்க கழுத்தில இருந்த கோல்ட் மெல்லிசான ஜெயினைக் காணோம் ?” என்றாள் கீதா.
“நான் என்ன பண்ணேன்?” பயத்தில் விழித்தான் ராஜா
“ம் குனிஞ்சு சாப்பிடும் போது நூடுஸ்ல விழுந்து அதோட சாப்டுட்டீங்களா?”.
“ஓடுங்க, ஓடுங்க. அந்த ஈஷாக்கு கொடுத்த சிரப்ப மொத்தமா குடிங்க நான் பாத்ரூம்க்கு வெளியே ரெடியா இருக்கேன்” என்று ரெடியானால் கீதா.
சரியாக இந்த நேரம் பாத்து,
“சாப்பிடும் நேரம் இந்த கதையை படிக்காதேன்னு படிக்காதேன்னு எத்தனை தடவ சொல்றது”
என்று மீண்டும் தலையில் குட்டி புத்தகத்தை பிடுங்கிக்கொண்டாள் என் அம்மா.