மஞ்சள் ரோஜா
(1954ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“மோகம் என்பது இதுதானே- இதை
முன்னமே நான் அறியேன்! ஓ!”
என்ற குறவஞ்சிப் பாடலை இதற்கு முன் முத்தையன் எத்தனையோ தடவை மந்தை நாடகத்தில் கேட்டிருக் கிறான். ஏன்? தானே பாடியும் இருக்கிறான். ஆனால், இப்பொழுதுதான் அந்தப் பொல்லாத பாட்டின் உண்மையான பொருள் அவனுக்குப் புலப்பட்டது. ஹும்! என்னமாய்ப் பாடியிருக்கிறான் பாட்டு!” என்று தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டான்.
அன்று பூஞ்சோலையிலே தங்கம்மையைக் கண்டு ஆசை கொண்டது முதல், இரண்டு மாதத்துக்கு அந்தப் பாட்டையே அடிக்கடி பாடிக்கொண்டிருந்தான் முத்தை யன். மீனாட்சிபுரத்திலிருந்து பூதத்தான் முக்குக்குப் போய், களப சந்தனம், புனுகு, ஜவ்வாது எல்லாம் வாங்கி வரலானான். கஸ்தூரி மஞ்சளைக் கண்டு விட்டாலோ அவனுக்குத் தங்கம்மையின் ஞாபகந்தான் வந்தது!
முத்தையனுக்கு நல்ல தேகக் கட்டு. “கரு கரு’ என்று கருமெழுகு போல் இருப்பான். முறுக்கு மீலக சொருக்குக் கொண்டை. கையிலே நெற்றிமட்டக் கம்பைப் பிடித்துக்கொண்டு ரத வீதியில் நடந்தாள் என்றால், பதினெட்டாம் படிக் கருப்பன்கூடத் தலைப் பாகையை அவிழ்த்து ஒரு கும்பிடு போட்டு விட-டுத்தான் மேலே நடப்பான்!
தங்கம்மை – அவள் பறிக்கும் பருவத்திலுள்ள கத்தரிப் பிஞ்சுபோல இருந்தாள். முகம் இளம் மாம்பழம் மாதிரி இருக்கும்! மாதுளந்தோடு போல நிறம்! மயில்- கழுத்துப் புடவையைக் கொசவம் வைத்துக் கட்டிக் கொண்டு எதிரே வந்துவிட்டால்,
“எண்ணம் உரைத்துவிடில்
தங்கமே தங்கம் பின்னர்
ஏதெனிலும் செய்வமடி
தங்கமே தங்கம்”
என்ற கவியின் வாக்கிற்கு உள்ள பொருளில், ஒரு புதிய வளைவு கொடுக்கத் தோன்றும்!
இந்த இருவருந்தான் பூஞ்சோலையிலே சந்தித்தார்கள். எப்படி? அது ஒரு கதை!
2
மேலநத்தம் பண்ணையார் மேகலிங்க முதலியாருக் கும் மீனாட்சிபுரம் பண்ணையார் மெய்யப்ப பிள்ளைக்கும் சண்டை. சண்டைக்குக் காரணம் என்ன என்று கேட் டால், இருவருக்கும் தெரியாது. வேறு ஒருவருக்குமே தெரியாது. தாவர ஜங்கம சொத்துக்களோடு இரண்டு பண்ணையார்களுக்கும் வழிவழியாக வந்துகொண்டிருந்த பிதிரார்ஜிதம் இந்தச் சண்டை!
ஒரு நாள் மேலநத்தம் பண்ணையார் தம்முடைய தோட்டத்துக் காவல்காரி தங்கம்மையைக் கூப்பிட்டுக் கேட்டார்:-
“தங்கம், எதிரி தோட்டத்தில் புதிதாக மஞ்சள் ரோஜாச் செடி முளைத்திருக்குதே, பார்த்தியா?”
“ஆமா ஆண்டே,” என்றாள் தங்கம்.
“என்ன ஆமா? அவன் தோட்டத்தில் மட்டும் என்ன மஞ்சள் ரோஜா?” என்று ஒரு அதட்டல் அதட்டினார்.
“ஆண்டே, இப்ப என்ன செய்யணும்?” என்று மிக்க அடக்கத்தோடு தங்கம்மை கேட்டாள்.
“எப்படியும் இன்னும் இரண்டு நாளில் மஞ்சள் ரோஜா நம்முடைய தோட்டத்துக்கு வந்தாக வேண்டும்; இல்லாவிட்டால் என்ன செய்வனோ தெரியாது. ஆமாம்!”
மறு நாள் தங்கம்மை எங்கெல்லாமோ அலைந்து திரிந்து பார்த்தாள். முந்நீர்ப்பள்ளம், மேலநத்தம், கொக்கிரகுளம், வண்ணார்பேட்டை, மூர்த்தீச்வரம், சிந்துபூந்துறை, குறுக்குத்துறை எங்குமே இல்லை மஞ்சள் ரோஜா! மீனாட்சிபுரத்தில் அந்த ஒரு தோட்டத் தில்-எதிரி தோட்டத்தில்தான்-அது இருந்தது!
முதல் நாள் முழுதும் அலைச்சலில் கழிந்துவிட்டது. மறுநாள் முழுதும் ஏக்கத்திலே! மூன்றாம் நாள் விடிந் தால் என்ன ஆவது?
‘கருங்கும்’ என்று அந்தி இருண்டு வருகிற நேரத்தில் தங்கம்மை ஒரு கத்தி எடுத்து முந்தியிலே செருகிக் கொண்டு, ஆற்றைக் கடந்து மேலநத்தத்திலிருந்து மீனாட்சிபுரத்துக்கு நடந்தாள். அக்கரைக்குப் போய் எதிரி தோட்டத்து வேலியின் ஊடாகக் கூர்ந்து பார்த் தாள். உள்ளே மஞ்சள் ரோஜா “கொளு கொளு” என்று பூத்துக் குலுங்கியது!
தோட்டத்துக் காவல்காரன் முத்தையனைத் தங்கம்மைக்குத் தெரியாது. தலையாரி தடிவீரத் தேவ னுடைய மகன்தான் முத்தையன் என்று, கேள்விப் பட்டிருக்கிறாள். அதனாலேயே பயம் அதிகம்! அங்கு மிங்கும் கண்களைச் சுற்றிப் பார்த்தாள்; ஆசாமியைக் காணோம்! நெற்றி மட்டக் கம்பு மட்டும் சவுக்கையிலே சாத்தியிருந்தது. ஐந்தரை அடி உயரம் இருக்கும். வெண்கலப் பூண் நிலா வெளிச்சத்தில் ‘தள தள’ என்று மின்னி மேலே நடக்கவொட்டாமல் அவளைப் பின்னுக்கு இழுத்தது. அதே சமயம் பண்ணையாரை நினைத்தாள்; ‘பகீர்’ என்றது. சொன்ன வேலையைச் செய்யாமல் சாவதைவிட, செய்துவிட்டுத்தான் சாவோமே என்று எண்ணினாள். விறு விறு என்று தோட்டத்துக்குள்ளே நடந்தாள்.
முந்தியில் இருந்த கத்தியை உருவினாள். கை பதறியது. பதற்றத்தோடு பதற்றமாக, ரோஜாச் செடியை வளைத்து ஒரு நீளமான குச்சியை நறுக்கினாள்.
“யாரது?” என்று ஒரு ஆங்காரமான குரல் கேட்டது! பதினெட்டாம் படிக் கருப்பனே தோட்டத்துக்குள் இறங்கி வந்து குரல் கொடுப்பது போல இருந்தது அது!
”யாரது?” – மீண்டும்!
“ஐயா…சாமி!” என்று பதறிக்கொண்டே தங்கம்மை கீழே விழுந்தாள்.
நினைவு திரும்பியபோது அவள் முத்தையன் மடியில் தலை வைத்துப் படுத்துக்கொண்டிருந்தாள். நிலா வெளிச்சத்தில் கண்ணைத் திறந்து ஒரு தரம் பார்த்து விட்டு அப்படியே மறுபடியும் இமைகளைப் ‘படக்’கென்று மூடினாள்,
“என்னியேக் கண்டா ஒனக்கு அம்புட்டுப் பயமாவா இருக்கு?” என்று கேட்டான் முத்தையன்.
“ஒன்கிட்டே பயமில்லை. அந்த மீசையைப் பார்த்தாத்தான் என் தலை சுத்துது!” என்றாள் தங்கம்.
“ஒனக்காக வேணும்னா நான் இந்த மீசையை எடுத்துரட்டுமா?” என்று முத்தையன் கேட்டான்.
“எனக்காகவா! அம்மாடீ!…அப்படியெல்லாம் செய்யாதே! ஓங்க ஆண்டை கோவிச்சுக்கிடுவாரு!” என்று அவள் சொன்னாள்.
“ஒனக்கு ரோசாக்குச்சி வேணும்னா என்கிட்டே கேக்கக்கூடாதா? பைத்தியக்காரி” என்று இழுத்தான் முத்தையன்.
“முன்னப் பின்னப் பளகாத ஆம்புளைகிட்டே நான் எப்படி வெக்கமில்லாமப் பேசுவேனாம்!” என்று தங்கம்மை கேட்டாள்.
“அட பைத்தியமே! அக்கரைப் பண்ணையாருக்கும் இக்கரைப் பண்ணையாருக்கும் சண்டையின்னா, நம்பளுக்கு என்னட்டி?” – இப்படிச் சொன்னபோது முத்தையன் முகத்தில் நிலா வெளிச்சம் நல்ல பிரகாசமாக விளை யாடியது.
“நான் போறேன். எங்க ஆண்டை கோவிச்சுக்கிடு வாரு” என்று சொல்லிக்கொண்டே கன்றுக் குட்டியைப் போல ஒரு துள்ளுத் துள்ளி ஓடினாள் தங்கம்மை.
“இந்தா இந்தா, ரோசாக்குச்சியை மறந்துட்டியே!” என்று சொல்லிக் கீழே விழுந்து கிடந்த குச்சியை எடுத்து அவள் கையிலே கொண்டு கொடுத்தான் முத்தையன்.
3
மன்மதன் மலர் அம்புகளை எய்கிறான் என்று சொல்லுகிறார்கள். அதன் நிஜம் பொய் எப்படியோ தெரியாது. ஆனால் முத்தையன் சம்பந்தப்பட்ட மட்டில், மன்மதன் மெய்யாகவே மலர் அம்புகளைத் தான் எய்தான்! அதிலும் நல்ல ரோஜா மலர் அம்புகள்! பண்ணையார்களுடைய பகை என்ற முள்ளுக்கு நடுவிலே மலர்ந்த மஞ்சள் ரோஜா மலர்கள்!
ஒரு நாள் தங்கம்மையைப் பார்த்து அவன் கேட்டான் :-
“கானாரும் வள்ளி தனைக்
கந்தனார் கூடியதும்
மானாள் சுபத்திரையை
வாள்விசயர் மணந்ததுவும்
தாங்களாய்ச் சம்மதித்தோ
தந்தைதாய் சம்மதித்தோ?”
தங்கம்மை நிதானமாகப் பதில் சொன்னாள் : “அதெல்லாம் பாட்டிலே சரி. நம்ம ரெண்டு பேருக்கும் தாயும் தகப்பனாரும் சம்மதிச்சாக்கூடப் போதாது. எங்க பண்ணை ஐயாவும் ஒங்க பண்ணை ஐயாவும் சம்மதிக்கணும்!”
தங்கம்மை சொன்ன அந்த வார்த்தைகளின் உண்மை, இரண்டு மாதம் கழித்துத்தான் அவனுக்குப் புரிந்தது.
ஆமாம்; தங்கம்மை மறந்து விட்டுப் போன ரோஜாக் குச்சியை அவ்வளவு கவனமாக ஞாபகப்படுத்தி அவளிடம் கொடுத்தபோது, முத்தையனுக்கு எவ்
(பக்கம் 15-16 கிடைக்கவில்லை, உங்களிடம் இருந்தால் அனுப்பவும்)
மான வல்லூறு! அதற்கு நாக்கில் நரம்பு கிடையாது! ஆனால் சம்பந்தப்பட்ட ஒரு மனித மனம் அப்படி யிருக் குமா? எந்த நிமிஷம் முத்தையன் காணாமல் போனானோ அதிலிருந்து தங்கம்மைக்கு உலகமே முள்ளும் செடியும் அடர்ந்த ஒரு நெருஞ்சில் காடாக இருந்தது. பூஞ் சோலைக்குள்ளே பூத்திருந்த மெல்லிய மலர்கள் எல்லாம் அவளுடைய கண்களைக் குத்தின!
ஓடிப் போன முத்தையன் முன்னதாகத் தன்னிடம் ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் தானும் அவனோடு புறப்பட்டிருக்கலாமே என்று நினைத்தாள் தங்கம்மை. ஆனால் தன்னால் அல்லவா இத்தனை துன்பமும் நேர்ந்தது என்று நினைத்து அவன் தன்னையே வெறுத்து உதறி யிருந்தால்-? அந்த எண்ணத்தை அவளால் தாங்க முடியவில்லை!
மீனாட்சிபுரம் கிராமமும், மேலநத்தம் கிராமமும், என்றும்போல் உதிப்பதும், வெயில் காய்வதும், அஸ்த மிப்பதுமாக, அலட்சிய பாவனையில் நாட்களைக் கழித்துக் கொண்டிருந்தன! மனிதர்கள் வழக்கமான தங்கள் அலுவல்களிலே, உறங்கி விழித்து உலாவிக் கொண்டிருந் தார்கள்! முத்தையனைப்பற்றி யாருக்கு என்ன கவலை?
கிராமங்கள் அவனை மறந்தன! தோட்டங்கள் அவனை மறந்தன. அவன் கையால் நட்டு வளர்த்த செடி கொடிகளுங்கூட அவனை மறந்துவிட்டனவா? இருக்கலாம். ஆனால் தங்கம்மை? அவளுக்கு ஓர் உள்ளம் இருந்தது; அந்த உள்ளத்திலே அவன் இருந்தான்! எனவே…
கல்யாண மாதங்கள் ஒவ்வொன்றாக வந்து வட்டம் சுற்றின! ஆற்றுக்கு அக்கரையிலும் இக்கரையிலுமாக இரண்டு கிராமங்களிலும் வாலிபர்கள் கன்னியரைக் காதலித்தார்கள். திருமணங்கள் நடந்தன. மேளம் முழங்கியது. ஊர்வலம் வந்தது. வயதான பெண்டுகள் தம்பதிகளை வாழ்த்தினார்கள். கிழவர்கள் தாம்பூலத் தைப் போட்டவாறு மகிழ்ச்சியை மென்று சுவைத்துக் கொண்டே பட்டணப் பிரவேசம் வந்தார்கள்! ஆனால் தங்கம்மை?
தங்கம்மையின் தாயும் தகப்பனும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்கள். பண்ணையார் எத்தனையோ சொன்னார். அவள் அசையவில்லை. காலையில் எழுந்தது முதல், இரவு இருட்டுகிற வரை, அவள் இந்தத் தோட் டத்தில் களை எடுப்பதும், மண்ணைக் கொத்திக் கொடுப் பதும், பதியங்கள் போடுவதும், தண்ணீர் இறைப்பது மாகத் தனது நாட்களைக் கழித்தாள்.
ஆரம்பத்தில் நெருஞ்சில் காடாக இருந்த தோட்டம் இப்பொழுது, பிரிவிலே ஆறுதல் தருகிற மலர் மெத்தை யாக இருந்தது அவளுக்கு! சில இரவுகளில் நீண்ட நேரத் துக்குப் பிறகு, உறக்கம் வராமல் அவள் தோட்டத்துக் குள்ளே சென்று, அந்த மஞ்சள் ரோஜாச் செடிக்கு அருகிலே நிற்பாள். நிலா வெளிச்சத்தில் முத்தையன் கொடுத்த ரோஜா, தழைத்துப் பூத்துக் குலுங்குவதை இமை கொட்டாமல் பார்த்துக்கொண்டே இருப்பாள்! அந்த மலர்கள் சிரிப்பது போலவும், ஏதேதோ தன்னிடம் பேசுவது போலவும் எல்லாம் அவளுக்குத் தோன்றும்!
ஐந்து வருஷங்கள் இப்படி ஓடியபோதுதான் மீனாட்சிபுரம் பண்ணையார் மெய்யப்ப பிள்ளை, அவருக்கு நேர்ந்திருந்த வியாதிக்கு வேண்டும் அவிழ்தம் கொடுத்தும் குணத்துக்கு வராமல்’ சிவலோக பதவி அடைந்தார். அவ்வளவு பெரிய சொத்துக்கு யாதொரு வாரிசும் இல்லாமல் அந்த மகானுபாவர் இந்த உலகத்தை விட்டுப் பிரிந்தார்!
மரணத்திற்குச் சில நாளைக்கு முன்புதான் அநேக ருக்கு எண்ணங்கள் உதிக்கும் என்று சொல்வதுண்டு. அப்படித்தானோ என்னவோ, அவர் முத்தையனைப் பற்றி எங்கெல்லாமோ விசாரணை செய்து தெரிந்து, ஒரு கடிதம் எழுதினார்:-
‘சிரஞ்சீவி முத்தையாவுக்கு,
ஆசீர்வாதம். நீ கொழும்பில் வீரப்ப செட்டி யாரிடம் வேலை பார்த்து வருவதாக இங்கு தேவகோட் டைக் கணக்குப் பிள்ளை மூலம் தாக்கல் அறிந்தேன். நான் இவ்விடம் மரணப் படுக்கையில் இருக்கிறேன். வாரி சில்லாத என்னுடைய சொத்து சுதந்திரங்களுக்கு தாயாதி கள் இருக்கிறார்கள். வயல் வரப்புகளுக்கு அவர்கள் தண்ணீர் பாய்ச்சுவார்கள். ஆனால் பூந்தோட்டத்தை யார் கவனிக்கப் போகிறார்கள்? நஞ்சை நிலத்தைப் பங்கு போட்டுக் கொள்வதிலேதான் பந்துக்கள் எல்லாரும் போட்டி போடுகிறார்கள்!
ஒரு ரோஜாக் குச்சி போனதற்காக உன்னை விரட்டி அடித்தேன். இப்பொழுது அந்தப் பூந்தோட்டமே கவனிப்பார் இல்லாமல் கிடக்கிறது. பூஞ்செடிக்குத் தண்ணீர் விடுவதற்கும், நெல்லுக்கு நீர் பாய்ச்சுவதற் கும் உள்ள வித்தியாசம் இந்த ஐந்து வருஷத்தில் எனக்கு நன்றாகத் தெரிந்துவிட்டது. அன்பு என்ற விஷயத்தை சாகப் போகிற சமயத்திலேதான் என்னால் உணர முடிந்தது. அதிகமாக ஒன்றும் எழுத எனக்கு ஓடவில்லை. பூவெல்லாம் தீய்ந்து கருகுவதற்கு முன்னால் இங்கு வந்து சேரவும்.
மெய்யப்ப பிள்ளை
பின் குறிப்பு:-
நீ வருகிற நாளைப் பார்த்துப் பார்த்து அக்கரைக் கிராமத்தில் தங்கம்மை வாடுகிறாள். காரணத்திற்கே அவசியம் இல்லாத எங்கள் பண்ணைச் சண்டையினால், பாவம், அந்தப் பெண் கிடந்து தவிக்கிறது.’
5
“மச்சான், நான் சொல்லுதேன்னு கோவிச்சிக் கிடாதே! நான் மட்டும் நீ கொடுத்த ரோசாவை வாடிப் போகவே விடவில்லை! என்னமா பூத்திருக்கு தெரியுமா!” என்றாள் தங்கம்.
“என்னைப் போல முரடா நீயி! பூவோட அருமை தெரிஞ்ச தங்கமில்லே.” என்றான் முத்தையன். தங் கம்மை இதைக் கேட்டு ரோஜா மலரைப் போல மௌனமாகச் சிரித்தாள்.
“தங்கம்! எனக்கு என்னமோ ஒரே ஒரு வருத்தந்தான். சாகிறதுக்கு முந்தி அவரை ஒரு தடவை பாக்க முடியாமேப் போச்சே!”
“முகத்திலே முழிக்காமப் போயிடச் சொன்னாரில்லே? அப்படியே ஆயிட்டுது” என்றாள் தங்கம்மை.
”சேச்சே! கோபத்திலே அப்படிச் சொன்னாரு. இப்ப பாரு! உயிலிலே இந்தத் தோட்டத்தை யாரு பேருக்கு எழுதி வச்சிருக்காரு? நம்பளுக்குத்தானே!” என்றான் மிகப் பெருமையோடு முத்தையன்.
‘மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்’ என்று வசனம். மலர்ச் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்ற முத்தை யன் வந்துவிட்டான். அந்த மகிழ்ச்சியிலே சொக்கித் தங்கம்மையைப் போலவே மஞ்சள் ரோஜாவும் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தது!
– இந்த தொகுப்பில் உள்ள பன்னிரண்டு கதைகளும் கல்கி, ஆனந்த விகடன், கலைமகள், வசந்தம் முதலான பத்திரிகைகளில் வெளியானவை.
– மஞ்சள் ரோஜா முதலிய கதைகள், முதற் பதிப்பு: நவம்பர் 1954, பாரி நிலையம், சென்னை.
![]() |
மீ. ப. சோமசுந்தரம் (Mi. Pa. Somasundaram; 17 சூன் 1921 – 15 சனவரி 1999) ஒரு தமிழ் எழுத்தாளர். மீ. ப. சோமு என்பது இவரது புனைபெயர். இவர் பத்திரிக்கை, கவிதை, புதினம், சிறுகதை, கட்டுரை, இசை போன்ற பல துறைகளிலும் சிறந்து விளங்கியவர். 1962ல் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றவர். அகில இந்திய வானொலியில் பணியாற்றியவர். வாழ்க்கைக் குறிப்பு சோமு திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில்…மேலும் படிக்க... |
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு:
கதைப்பதிவு: December 5, 2025
பார்வையிட்டோர்: 75
