முதிர் கன்னியின் முடிவு!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 16, 2025
பார்வையிட்டோர்: 441 
 
 

கனிகாவுக்கு கண்களை இறுக மூடிப்பார்த்தும், மனதில் இருந்த கவலையான நினைவுகளை அமைதிப்படுத்த முடியாமல் உறங்கும் நிலைக்கு உடலைக்கொண்டு செல்ல இயலாமல் தவித்தாள்.

கடந்த சில நாட்களாகவே மனம் மகிழ்ச்சியை இழந்து தவிப்பதை உணர்ந்தாள். காரணம் தன்னுடன் படித்த நாற்பது பெண்களில் தன்னைத்தவிர முப்பத்தொன்பதாவது பெண்ணான சுபாவுக்கும் திருமணம் நடந்து விட்டது தான்.

பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரி சேரும் காலத்திலேயே உறவில், ஊரில் பலர் தன்னைப்பெண் கேட்டு வந்த போது “எனக்கு இந்த வயசுல தான் ஆச்சு. வாழ்க்கை நல்லாத்தான் இருக்குது. பசிக்கிற போது சாப்பிட்டாத்தான் ருசியோட அருமையே தெரியும். பையனுக்கு படிப்பு, பணம்னு எங்க காலத்துல ஆரும் பார்த்து பொண்ணு குடுகலே. பருவத்துல பயிர் செய்னு முன்னோர்கள் சொன்ன மாதர பருவத்துல கல்யாணம் பண்ணினாத்தான் நல்ல படியா கொழந்தைகளையும் பெத்து வளர்த்தி வயசாகறதுக்குள்ளே பேரம்பேத்திகள பாத்துட்டு போய் சேர முடியும். பேரம் பேத்தி எடுக்கிற வயசுல கொழந்தைகளை நாம பெத்துக்கிறது எனக்கென்னமோ புடிக்கல” என தாய் ராசாத்தி பேசியது சரியெனப்பட்டாலும் ‘நல்ல வேலைக்கு சென்று கை நிறைய சம்பாதித்து, சொந்தக்காலில் நிற்க வேண்டும்’ எனும் உந்துதலால் மூன்று டிகிரி படித்து பதிவுத்துறையில் அதிகாரியாக வேலையில் சேர்ந்தாள்.

கைநிறைய சம்பாதனை, நல்ல வீடு, கார்கள், வங்கியில் சேமிப்பு, ஆசைப்பட்டதை விட அதிக நகைகள் என அனைத்தும் இருந்தாலும் தனக்கேற்ற சரியான வரன் அமையாததே கனிகாவின் வேதனைக்கு காரணமானது.

ஜாதக பொருத்தமே வந்தாலும் வசதி குறைவு, படிப்பு குறைவு, சம்பளம் குறைவு, தூரம் அதிகம், குணம் சரியில்லை, குடிகாரன், பெண்கள் சகவாசம் என தவிர்க்கும் காரணங்களை தந்தை கண்டு பிடிப்பதிலேயே குறியாக இருந்ததும் தனக்கு முப்பத்தைந்து வயதிலும் திருமணம் நடக்காமல் போனதிற்கான காரணமாக உள்ளதாக நினைத்து வருந்தினாள்.

“குறையில்லாத மனுசங்களே உலகத்துல இல்லை. எல்லாத்திலேயும் நல்லவர்னு நம்பித்தான், விசாரிச்சுதான் என்னோட பெற்றோர் என்னை கல்யாணம் பண்ணிக்கொடுத்தாங்க. கல்யாணமான அடுத்த நாள்ல இருந்து தினமும் குடிக்கிறவரா என்னோட கணவர் மாறிட்டார். அதுக்கு என்ன பண்ண முடியும்? நல்லா சம்பாதிக்கிறார். சம்பளத்துல அவரோட செலவுக்கு எடுத்துட்டு பாக்கிய என் கைல கொடுத்திடுவார். பத்து வருசத்துல கொடுத்த பணத்துல என்ன செலவு பண்ணினேன்னு இது வரைக்கும் ஒரு நாள் கூட கேட்டதில்லை. பொண்ணுக விசயத்துல ராமந்தான். பையன், பொண்ணு மேல பாசத்தைப்பொழியறார்‌. கணவனா எனக்கு எந்தக்குறையும் வைக்கிறதில்லை. மத்த விசயங்களால குடிக்கிறதை பொறுத்துக்கிறேன்” தனது இரண்டு குழந்தைகளுடன் தோழி சுபாவின் திருமணத்துக்கு வந்திருந்த இன்னொரு தோழியான கயல் தன்னைப்பார்த்து சொன்னதை நினைத்துப்பார்த்தாள்.

“அப்பா….” தந்தையை அழைத்தாள்.

“சொல்லும்மா….”

“மேட்ரிமோனில தமிழ்நாடு பூராவும் பணம் கட்டி மாப்பிள்ளை தேடறதை விட்டுட்டு நம்ம ராசு மாமம்பையன் தினேசுக்கே என்னைக்கட்டி வெச்சிருங்கப்பா…..” வேதனை மேலோங்க சொன்னாள்.

“உனக்கென்ன பைத்தியமா…? அவனுக்கும் உனக்கும் ஏழேணி வெச்சாலும் எட்டாது. அவனுக்கு உன்னைய கட்டிக்குடுக்கிறதும் ஒன்னுதான், பவானிசாகர் டேம்ல உன்னைய கொண்டு போயி தள்ளிப்போட்டு வாரதும் ஒன்னு தான்…”

“அப்ப ஒன்னு பண்ணுங்க….”

“என்ன?”

“பேசாம என்னைய பவானிசாகர் டேம்லயே கொண்டு போய் தள்ளீட்டு வந்திருங்க…” சொன்னவள் தேம்பினாள்.

“என்னத்துக்கு சின்னப்புள்ளையாட்ட அழுகறே….?” 

“அழாம என்ன பண்ணுவேன்? எனக்கு வார மாப்பிள்ளை எல்லாத்துலயும் என்ற மாதிரியே இருக்கோணும்னு நெனனைச்சீங்கன்னு ஒடம்புலயும் என்னை மாதிரியே இருக்கிற ஒரு பொண்ணத்தான் நானும் கல்யாணம் பண்ணிக்கோணும்…. பண்ணிக்கிட்டா…‌?”

“நீயென்ன பெத்த அப்பனையே திடீர்னு இப்படி எதுத்துப்பேசறே….?”

“நானொன்னும் உங்களை எதுத்துப்பேசலை. நீங்கதான் என்ற நெனப்புக்கு எதிரா பேசறீங்க. இத பாருங்க. எனக்கு இப்ப வயசு ஒன்னும் பதனெட்டு இல்லை. முப்பத்தஞ்சு. ஒன்னங்கொஞ்ச நாள் போச்சுன்னா பீரியட்ஸ் நின்னு போயிரும். பெத்த அப்பனா இருந்தாலும் பரவாயில்லைன்னு வெட்கத்த உட்டு சொல்லறேன். நாப்பதுக்கு மேல வயசாயிருச்சுன்னா… அப்பறம் சொத்துல சம தகுதி, பணக்காரனா மாப்பிள்ளை பார்த்து கட்டி வெச்சீங்கன்னா பணத்தத்தான் நாங்கட்டிப்புடிச்சு தூங்கோணும். தகுதிக்குங்கீழ போனா சொந்த பந்தம் என்ன பேசும்னு தானே நெனைக்கறீங்க…? அப்படி நெனைக்கிற எந்த சொந்தத்தால எனக்கு புருசஞ்சொகத்த குடுக்க முடியும்? ஒரு ஏழை பையனுக்கே என்னைக்கட்டிக்கொடுங்க. பெரிய எடத்துல அழகான பொண்ணு கெடைச்சதா நெனைச்சு அவனாவது சந்தோசமா இருந்துட்டு போகட்டும். நம்மனால ஒரு உசுரு சந்தோசப்படுதுன்னா அது நமக்கும் சந்தோசந்தான்….”

“அதுக்காக ராசு மாமம்பையன் தினேசுக்கெல்லாம் உன்னைப்புடிச்சு குடுக்க முடியாது. வேணும்னா வசதியில்லாத வெளியூர் மாப்பிள்ளை பார்க்கிறேன் கட்டிக்கோ….”

“அவம்பேர்ல உங்களுக்கு அப்படியென்ன தீராப்பகை? அவன் நம்ம சொத்த ஏதாச்சும் அபகரிச்சுட்டானா? அவங்குடிக்கிறான். வசதியான வீடு இல்லை. சம்பளம் கம்மியா வாங்கறான். இதுதானே உங்களுக்கு குறையா தெரியுது? உள்ளூர்ல இருக்கிறதுனால தெரியுது. வெளியூர்ல பார்க்கிற மாப்பிள்ளையும் இந்த மாதிரி இருக்க மாட்டானுங்கிறத உறுதியா சொல்ல முடியுமா?”

“அதெல்லாம் ஆள் வெச்சு விசாரிச்சுப்போடுவனில்ல.”

“சரி நல்லவன் கல்யாணத்துக்கப்புறம் கெட்டவனா மாறிட்டா என்ன பண்ணுவீங்க….?”

“அப்புறம் விதின்னு நெனைச்சுக்க வேண்டியதுதான்.” 

“அதையே இப்ப நெனைச்சுட்டா…‌.?”

“முடிவே பண்ணிட்டியா?”

“ஆமா. என்னோட வாழ்க்கைய நானே முப்பத்தஞ்சுல கூட முடிவு பண்ணலேன்னா நான் வாழவே தகுதியில்லாதவளா ஆயிடுவேன். என்னோட அழகுனால பல பேருக்கு கனவுக்கன்னியாவே இருந்துட்டேன். ஒருத்தனுக்காவது நிஜக்கன்னியா ஆக வேண்டாமா? அதோட நானும் கனவுல மட்டும் வாழற கன்னியாவே கடைசி வரைக்கும் இருந்திடக்கூடாதுன்னு தான் இந்த முடிவு எடுத்தேன்”

“…….‌?…….?…….?…….?!” 

தந்தை மௌனமானது சம்மதத்தின் அறிகுறி என்பதைப்புரிந்த கனிகா, மனம் நிம்மதியானதால் படுக்கையில் படுத்தவுடன் பல நாட்களாக உறங்க மறுத்த உடலை எளிதாக உறக்கத்துக்கு கொண்டு சென்றாள்.

கே.ஆர்.வேலுச்சாமி ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *