நொண்டி
கதையாசிரியர்: தொ.மு.சி.ரகுநாதன்
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு:
சமூக நீதி முல்லை
கதைப்பதிவு: November 7, 2025
பார்வையிட்டோர்: 83
(1946ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“என்னைப் பார்க்க யாரோ வந்ததாகச் சொன்னாயே, யாரது?”
‘ஒரு தொழிலாளப் பெண். ஒரு மிஸ். பீட்டர்ஸன்னோ, ஸ்வென் ஸென்னோ – ஏதோ ஒரு பேரு!”
அவசரமாக எழுதிக்கொண்டிருக்கும்போது, இடைவெளித்தட்டில் தன்னைப் பார்க்க யாரேனும் வாசகர் வந்துவிட்டால்கூட, அவர்களை வரவழைத்துப் பேசும் சுபாவம் படைத்தவர் அந்த ஆசிரியர். அவள் உள்ளே வந்தவுடன், ஆசிரியர் தன்னிருப்பிடத்தைவிட்டு எழுந்து, கரம் குலுக்குவதற்காக, அவளிடம் கையை நீட்டினார். ‘சாதாரண நாட்டுப் புற மனுஷியோடு, அந்தஸ்தில் உயர்ந்த ஒரு ஆசிரியர் கை குலுக்கவா’ என்று அவள் கட்டாயம் பிரமித்திருப்பார் என்று அந்த பத்திரிகாசிரியர் நினைத்தார், நம்பினார்.
அந்த பெண்ணோ முகம் சிவந்தாள்.
‘என்னால் கை குலுக்க இயலாது’ என்றாள்.
‘இயலாதா? உனக்கு நான் என்ன பண்ணிவிட்டேன்’ என்று கையை இழுத்துக்கொண்டே கேட்டார், ஆசிரியர்.
“ஏன் என்றால், – நீங்கள் எனக்கு ஒன்றும் செய்துவிடவில்லை- ஆனால்-ஆனால், எனக்கு – கை இல்லையே!”
உடனே ஆசிரியர் இடத்தைவிட்டு வெளிவந்து, அவளுடைய தோளைப் பற்றினார்: “நீதானா அது? நான் உடனே கவனிக்கவில்லை… வந்து,- உட்காரேன்” என்று சொல்லிக்கொண்டே, அவளைப் பிடித்து, மேஜைக்கருகே கிடந்த நாற்காலியில் அமர்த்தினார். “இப்போது சொல்லு, நீ எதற்காக வந்தாயென்று என்னால் உனக்கு இன்னும் ஏதாவது ஆக வேண்டுமா?”
“இன்னும்” என்ற அந்த வார்த்தையைக் கேட்டவுடன் ஒரு சிறு புன்னகை அவளுடைய உதடுகளில் வளைந்தது; உடனேயே வளைவுமாறி, கசப்புணர்ச்சி வலை விரித்தது. அவரும் அதைப் பார்த்துவிட்டார். கனிந்த, பணிந்த பார்வையால், அந்தப் புன்னகையை மாய்க்கு முன்பே, அவர் அதைக் கண்டுவிட்டார்.
“இன்னும் ஏதேனுமா? ஆமாம், ஸார், நீங்கள் மனம் வைத்தால் முடியும். எனக்கும் நீங்கள் செய்வீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்று தழுதழுத்த குரலில் சொன்னாள், அவள்.
அவளுடைய பார்வையிலிருந்து தப்புவதற்காக, ஆசிரியர் எதையும் செய்துவிடச் சித்தமாயிருந்தார். அந்த யுவதியோஅங்க ஊனம் அடைந்து, சரீர வேதனையோடு, வலியைக் கஷ்டத்தோடு தாங்கி வந்திருக்கிறாள். இது அவருக்கு எரிச்சல் மூட்டியது. அவளைப்பற்றி அவர் பத்திரிகையில் சாங்கோபாங்கமாக எழுதியிருந்தது வாஸ்தவந்தான். ஆனால், அது பிறருடைய இதயங்களைக் கவர்வதற்காகவே அன்றி, தன்னுடைய இதய நெகிழ்ச்சிக்காகவோ இளக்கத்திற்காகவோ அல்ல.
அவள் தன் முன் இருப்பதுகூட, அவருக்குப் பிடிக்கவில்லை. “ஏன் தயங்குகிறாய்? என்னுடைய கட்டுரையைப் பார்த்தவுடன், உனக்காக அனுதாபப்பட், நானும் ஒருவன் இருக்கிறேன் என்று உன் மனசில் படவில்லையா?” என்று கேட்டார்.
அவர் ஆச்சரியமுறும்படி அவள் பதில் சொன்னாள்: “நீங்கள் எதையும் மறுத்து எழுதுவதில்லை என்று வெளியில் பேசிக் கொள்கிறார்கள்.”
“வாஸ்தவம். தப்பிதமானவற்றைப் பிரசுரித்து விட்டால் தானே, மறுப்போ, திருத்தமோ எழுதவேண்டும். நேற்றைய பத்திரிகையில் உன்னைப்பற்றி நான் எழுதியதை வாபஸ் வாங்கச் செல்லவில்லையே, நீ?” என்று அவள் சொன்ன வார்த்தைகளைப் புரிந்து கொள்ளாமல், சிரித்துக் கொண்டே, பிரதாபம் பேசினார் ஆசிரியர்.
“ஆம், அதைத்தான் மறுத்து எழுதவேண்டும்!” என்றாள், அவள். எப்படியோ ஒரு மட்டும் அவள் அதைத் துணிந்து சொல்லிவிட்டாள்.
“ஓ! அப்படியானால், நீ உன்னுடைய வலக்கையை இழக்கவில்லையா?” என்று ஆச்சரியத்துடன் கேட்டார் ஆசிரியர்.
கட்டுப்போட்டிருந்த தன்னுடைய கையை, போர்வையிலிருந்து வெளி எடுத்து, மேஜையில் அவள் வைத்தாள்: “ஆனால், அந்த விபத்து நீங்கள் எழுதிய மாதிரி நடக்கவில்லை. அதனால் -” என்று வார்த்தையை இழுத்துப் போட்டாள்.
பேசவும் செய்யாமல், பேசினாலும் சரியாகப் பேசாமலிருக்கும் அந்தப் பெண்ணைக் காண அவருக்கு நெஞ்சில் புழுக்கம்தான் அதிகரித்தது. ஆனாலும், அவள் அழுவதைப் பார்த்துவிட்டார்.
அவள் தன்னுடைய இடது கையால், இத்தனை நேரமும் தயாராக வைத்திருந்த அந்தக் கவரை நீட்டினாள். கவரின் மேலுள்ள விலாசம் கண்ணீரால் நனைந்து கரைந்திருந்தது.
“இது எனக்குத்தானே” என்று சொல்லிக்கொண்டே அதைத் திறந்தார். அதனுள் ஒரு டைப் அடித்த கடிதம் இருந்தது:
ஸ்வியா தொழிற்சாலையில் இரண்டுமாதங்களுக்கு முன் நடந்த விபத்தைப்பற்றி, நேற்று வெளிவந்த உங்கள் பத்திரிகையில், பிரசுரமான உங்கள் கட்டுரை, தப்பிதமான தகவல்களின் ஆதாரங்கொண்ட தாயிருக்கிறது.
அவர் உடனே நிமிர்ந்து அவளைப் பார்த்தார். அவள் தலை குனிந்திருந்தாள். தொப்பிக்குள் அடங்காமல் வளர்ந்து கழுத்துப் பக்கம் புரளும் அவளுடைய கூந்தல் கற்றைகளைக் கவனித்தவாறே இருந்தாள் அவள்.
அவர் மேலும் படித்தார்:
இந்தத் தப்பிதமான தகவல் எப்படி வந்தது என்று எனக்குத் தெரியவில்லை. எனினும், தாங்கள் அதைத் திருத்தம் செய்வீர்கள் என்று நம்புகிறேன். ஒரு புதிய வெட்டு யந்திரத்தைச் சோதித்துக் கொண்டிருக்கும்போதுதான் மிஸ். ஸிக்னே கார்ல்ஸன் படுகாய மடைந்தாள் என்பது உண்மைதான். ஆனால், அந்தச் சம்பவம் ஒரு விபத்துத்தான். யந்திரம் ஒடிக்கொண்டிருக்கும்போது, திடீரென விளக்குகள் அணைந்து விட்டதால், புது யந்திரத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த கார்ல்ஸன் பதறிப்போய் கையை யந்திரத்தில் கொடுத்துவிட்டாள். அந்த விபத்துக்கும், முதலாளிக்கும் யாதொரு சம்பந்தமும் கிடையாது. விபத்துக்குப்பின்தான் அவர் அங்கு வந்தார். விபத்தின்போது, நான் மட்டும்தான் அங்கிருந்தேன்.
சட்டப்படி குறிப்பிட்ட காலத்துக்கு மேலாகவே நிர்வாகம் மிஸ் கார்ல்ஸனுக்கு கூலித் தொகையைக் கொடுத்துவருவதோடு முடமானவர்களைப் பராமரிக்கும் ஸ்தாபனத்தில் அவளிருப்பதற்கு வேண்டிய வசதிகளுக்கும் பண உதவிசெய்து வருகிறது. காலக்கிரமத்தில் அவளை மீண்டும் வேலைக்கு அமர்த்துவதோடு, பழைய சம்பளத்தையே போட்டுத் தரவும், நிர்வாகம் தயாராயிருக்கிறது.
ஆதலின், நிர்வாகத்தைப்பற்றி, பத்திரிகையிலோ, சர்க்காரிலோ அவள் புகார் செய்ய, முகாந்திரம் இல்லை. அதனால், பொது ஜனங்களுக்கு உண்மையை விளக்குவதற்கென்று, தாங்கள் சந்தோகாஸ்பதமான கட்டுரை ஒன்றை எழுதவும் காரணமில்லை. உங்களுடைய கட்டுரையால் பல பேருக்குத் தெரிந்துபோன, முதலாளியின் ஒழுங்கீனத்தைக் குறிக்கும் தப்பிதமான தகவலை முதன்முதலில் மறுப்பதும் மிஸ் கார்ல்ஸனேதான்.
உண்மையுள்ள
கார்ல் ஆண்டர்ஸன், கங்காணி.
ஆசிரியர் கடிதத்தை மடித்து மேஜைமேல் வைத்தார்.
முதலாளியே இந்தக் கதையை கட்டியிருக்கக் கூடுமென்று நினைத்தார், ஆசிரியர். மேலும், இந்த மறுப்பை இத்தனை பவ்யத்தோடு ஏன் எழுதவேண்டும என்று அதிசயித்தார்.
“என்மேல் எதிர் நடவடிக்கை எடுக்க, இந்த சந்தர்ப்பத்தை ஏன் பயன்படுத்தவில்லை? அந்தப் பெண் வேலை செய்து கொண்டிருக்கும்போது, அவளுக்குப் பின்புறமாகச் சென்று, அவளுடைய கழுத்தில் முத்தமிட்டதனாலேயே, அந்த விபத்து ஏற்பட்டது என்னும் செய்தி பொய்யாயிருந்தால், மானபங்கம் ஏற்படுத்திய குற்றத்திற்காக, நானல்லவா சிறைசெல்ல வேண்டும்?”_
“மிஸ் கார்ல்ஸன்!” என்று சத்தமிட்டார், ஆசிரியர். அவர் எதிர்பார்த்த போலவே, அவள் குதித்தெழுந்தாள். அந்த விபத்தன்றும் அவள் அப்படித்தானே குதித்திருப்பாள்-
‘உனக்குப் பதிலாக, அந்தக் கங்காணி இதையேன் எழுதவேண்டும்.?”
‘என்னை அவருக்கு நிச்சயமாயிருக்கிறது, ஸார்….’ என்று தயங்கினாள், அவள்.
“ஓஹோ, அந்த விபத்திற்குப் பிறகு, அவன் அந்தக் கலியாண ஒப்பந்தத்தை முறித்துவிட்டானா?’
‘எல்லாம் இதைப் பொறுத்துத்தான், ஸார். நீங்கள் மட்டும் இதைப் பிரசுரித்துவிட்டால், எல்லாம் சரியாகிவிடும்”
“அப்படியா? ஒப்பந்தத்தை முறிக்காமல் இருப்பதற்கு இது ஒரு நிபந்தனை என்கிறானாக்கும்? அப்படித்தானே. நான் மட்டும் உன் நிலையிலிருந்தால், அவனைப்பற்றி சிறிதும் சஞ்சலப்பட மாட்டேன்”.
“வாஸ்தவம் ஸார். ஆனால், கை முடமான அனாதை ஒருத்தியை அவர் கல்யாணம் செய்துகொள்வார் என்று எதிர்பார்ப்பதே கஷ்டந்தானே” என்றாள் அவள்.
அவர் விரைவாக யோசித்தார். அந்தக் கடிதப்படி, அவளை மீண்டும் வேலைக்கு எடுத்துக் கொண்டால், நிர்வாகம் அவளுக்கு முழுச் சம்பளமும் கொடுத்தாகவேண்டும். ஆனால், அந்தக் கடிதத்தை வெளியிடாவிட்டால், நிர்வாகம் தன்னுடைய வாக்குறுதியைக் காப்பாற்றும் என்பதும் நிச்சயமில்லை. மனுஷத் தன்மைகூடக் காட்டாமல், நிபந்தனைகள் போடுகிறார்களே, அவர்கள். கங்காணியைக்கூட, அவனுக்கு நிச்சயமான பெண்ணை சல்லிக்காசு இன்றி விட்டுவிடுவதாகப் பயமுறுத்தி, அதன் மூலம் ஒரு அண்டப் புளுகுக்கு கதையைச் சிருஷ்டித்து அந்த கங்காணி நிச்சயதார்த்தத்தை முறித்து விடுவேன் என்ற மிரட்டலோடு அந்தப் புளுகு மூட்டையை அவளைக்கொண்டே என்னிடம் அனுப்பி… எல்லாம் ஒரே திருகு தாளங்கள்!
“எல்லாம் எனக்குப் புரிகிறது” என்று ஒரு நிமிஷ மௌனத்துக்குப் பின் அவர் சொன்னார்.
அவளுக்கு அவருடைய வார்த்தை பிடிக்கவில்லை. ஆனால், தான் செய்யக்கூடாததைஅல்லவா, அவர் ‘புரிந்து’ கொள்கிறார்!
“ஸார், ஸார். இந்தச் செய்தியை நல்லபடியாய்ப் பிரசுரிக்கக் கருணை செய்யுங்கள், ஸார்!” என்று தயங்கித் தயங்கிக் கெஞ்சினாள், அவள். பின்னால் அவள் எழுந்து செல்ல நினைத்தாள்; அவர் அவளைப்பிடித்து நாற்காலியில் மீண்டும் அமர்த்தினார்.
“இந்தா பார். நான் இதை இப்படியே பிரசுரிக்கமுடியாது. கூட ஏதேனும் சேர்த்துத்தான் ஆகவேண்டும். இந்த விபரத்தை யெல்லாம், தறிநெசவாளர் சங்கக் காரிய தரிசியான உன் அண்ணனிடமிருந்தே பெற்றதாக, பொது மக்களுக்குத் தெரிவிக்கவேண்டும். தெரியுமா, கார்ல்ஸன்? அவனும் அந்தத் தொழிற்சாலையிலேயே வேலைக்கு இருப்பதால், அவன் வேண்டுகோளின்படி அவனைப் பற்றிக் குறிப்பிடாமல் விட்டேன். ஆனால், இதை வெளியிட்டால், அவன் பெயரையும் சந்திக்கு இழுத்துத்தான் ஆகவேண்டும். ஆதலால், நீ எழுதச்சொல்லும் இந்த மறுப்பு உன்னுடைய குடும்பத்துக்கே நல்லதாகப் படவில்லையே!”
“இல்லையில்லை. அவன் பெயரை நீங்கள் இழுத்துவிடக் கூடாது” என்று திணறினாள், அவள்.
பின்-நானே எல்லாக் கதையையும் என் சுயபுத்தியாலேயே கண்டு பிடித்துவிட்டதாக, நடிக்கச் சொல்லுகிறாயா? அது முற்றும் முடியாத காரியம்”,
“ஐயோ!- ஆனால் ஸால், நீங்கள் செல்வாக்கும் பலமும் பெற்றவர்கள். நீங்கள் யாருக்கும் அடிமையில்லை. இந்தப் படிச்செய்தால்கூட, தோஷமில்லையே.”
அவர் தலையை அசைத்தார்: “இந்த ஜன்மத்தில் இல்லை!” “ஸார், ஸார்-ஆனால்-ஸிக்னே கார்ல்ஸனுக்கா ஒவ்வொரு இதயமும் ரத்தம் சிந்த வேண்டும் என்று நீங்கள் எழுதக்கூடச் செய்தீர்களே!’
“ஆம். ரத்தம் சிந்தட்டும். எப்படிச் சிந்துவது?”
அந்தப் பெண் வாயே திறக்கவில்லை. வாசலை நோக்கி விரைந்தாள்.
அவளை அவர் ஓடிப் பிடித்துக்கொண்டார். அவளை எட்டிப் பிடித்துக்கொண்டு, “நீ உன்னுடைய காதலனிடம் ஓடிப்போய்விடலாம் என்று பார்க்கிறாயா? முடியவே முடியாது. இதை ஒரு முடிவு செய்தே ஆகவேண்டும். என்றார், தம்முடைய அதிமனுஷ புத்திசாலித்தனத்துடன். அவளுடைய தோள் சிறு பறவையைப்போல ஆசிரியரின் கைகளுக்குள் நடுங்கியது.
”முடிவு செய்ய, இனி நான் எதுவும் சொல்வதற்கில்லை.”
“ஆம். நீ நடந்ததை, உண்மையைச் சொல்ல வேண்டும் சொல்ல முடியும்.”
“வாஸ்தவம், ஸார். ஆனால்…”
மீண்டும் அவள் நாற்காலியில் அமர்ந்தாள். அவர் கேள்வி மாரிகளைப் பொழிந்தார். தற்காத்துக் கொள்ளத் திராணியற்ற பேதையர் அவ்வளவு சீக்கிரத்தில் விஷயத்தைத் திரித்துக் கூறாத வண்ணம், அவர் கேள்விகளைப் பொறுக்கி எடுத்து நிதானத்துடன் கேட்டார்.
அவர் நினைத்தபடியே அவளுடைய அண்ணன் சொன்ன தகவல்தான் உண்மை என்று தெரிந்தது.
“இதை வெளியிட்டால்தான் நிர்வாகம் தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றும் என்ற நிபந்தனையில் பேரில், கங்காணி உன்னை இங்கு அனுப்பினான் என்பதை ஒப்புக்கொள்கிறாயல்லவா?” என்று கேட்டார்.
அந்தப் பெண்ணுக்கு இது ரொம்பவும் சிக்கலான கேள்வி. அதற்குப் பதில் சொல்வது எவ்வளவு அபாயகரமானது என்றும் அவளுக்குத் தெரியும். என்னுடைய பயங்கலந்த கண்களால், ஆசிரியரை கருணைவேண்டினாள், அவள். அவரோ அவளை உத்ஸாகப் படுத்தித் தட்டிக் கொடுத்தார். மேலும், அவளை அவர் தொந்தரவு செய்ய வில்லை. வேண்டிய தெல்லாம் தான் கிடைத்துவிட்டதே.
“எத்தனை புரளி? இது அந்த விபத்தையும் விட அல்லவா, மோசமாயிருக்கிறது! தனி மனிதன் ஒரு பெண்ணை முத்தமிட்டதால் விபத்து ஏற்படுத்தியது குற்றந்தான். எனினும், இதைக்கொண்டு முதலாளித்துவத்தைக் குற்றம் சாட்ட முடியாது. ஆனால், தன்னுடைய அஜாக்கிரதையினாலேயே விபத்து ஏற்பட்டது என்று அவள் ஒப்புக் கொள்ளாத பக்ஷத்தில், தங்கள் வாக்குறுதிகளை உடைத்தெறிவதாகப் பயமுறுத்துவது. அது அதிகாரத்திமிர், ஆணவத்திமிர், பணக்கொழுப்பு! ஆதலால், இனி…முதலாளி, அந்த முதலாளி தொலைந்தான்!” என்று யோசித்தார் ஆசிரியர்.
“நீ எங்கே வசிக்கிறாய்?” என்று அவர் அவளை ஆவலுடன் கேட்டார்.
உடனே அவள் பதில் சொல்லத் துணியவில்லை. தன்னுடைய வரவால் விளைந்த விபரீதங்களை அவள் நினைத்துக்கொண்டிருந்தாள்.
“நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?….. உங்களுக்கு என்மீது கொஞ்சம்கூடக் கருணை கிடையாதா? என்று கேட்டாள், அவள்.
அதற்கு அவரிடம் பதில் இல்லை.
“சரிசரி. உன் அண்ணன் எங்கு இருக்கிறான்?”
“ஏன்?”
“ஏனா? அவனோடு இந்த விஷயத்தை ஆலோசித்தாக வேண்டும்”
“ஐயோ, நீங்கள் என்னதான் செய்யப்போகிறீர்கள்?” “மலையைப் புரட்டுவேன்! ஆமாம், நாம் அந்த முதலாளி மீது போர் தொடுப்போம். அவனுடைய முட்டாள் தனத்துக்காக அவனாகவே பணந்தரும்படி நிர்ப்பந்தப் படுத்துவோம்”
“ஆம் அவர் கொடுக்கவேண்டு மென்பதற்காகத்தானே, இந்தச் செய்தியை நான் வெளியிடச் சொல்லுகிறேன்” அதுவும் வெளியாகிவிட்டது!
“வேறு வழிகளும் உண்டு. அவன் கொடுத்துத்தான் தீரும்படி, நாம் நிர்ப்பந்தப் படுத்தலாம். நீ மட்டும் அவன் மீது கேஸ் போட்டாயானால், அவன் கதி அதோகதிதான்!”
“நானா… என்னால் முடியாதே… முடியவே முடியாது..ஐயோ!”
அவளுக்கோ அந்த ஆசிரியர் இன்னொரு பைத்தியம் என்றுதான் பட்டது.
தன்னுடைய கோட்டைப் போட்டுக் கொள்ளும் போது ஆசிரியருக்கு ஒரே உத்ஸாகம். சீட்டிகூட அடித்தார். காருக்காக, போனில் பேசும் போதுகூட, அவர் குரல் கணீர் என்றிருந்தது.
அவள் அவரை அனாதரவான பார்வையுடன் பார்த்தாள். “அவருக்கென்ன வந்தது? ஒரு முடமான பெண்ணின் வாழ்க்கையைப் பாழாக்கவா எண்ணுகிறார்?” – இதை நினைக்க நினைக்க அவளுடைய முறிந்துபோன கையின் கணுக்கள் விண்ணென்று தெறித்தன.
“இந்த மனிதர்களெல்லாம் ஏனிருக்கிறார்கள்? எல்லாரும் எனக்கு உதவவிரும்புவதாகவே சொல்லுகிறார்கள். முதலாளியோ எத்தனை வாக்குறுதிகளாகப் பொழிந்தார்! ஆண்டெர்ஸன்தான் எவ்வளவு நல்லபடியாய் நடந்துகொண்டார்! என் அண்ணன்கூட, அப்படித்தான்! இந்த மனுஷரும் எனக்காக, எல்லோரும் ரத்தக்கண்ணீர் சிந்தவேண்டும் என்று எழுதினாரே! ஆனால், இப்போதோ, அவர்கள் எல்லோரும் ஒருவருக்கொருவர் முறைத்துக் கொண்டு, சண்டையிட எண்ணுகிறார்களே! ஐயோ, கடவுளே! அப்படியானால் என்கதி? நான்தானே உண்மையிலேயே கை இழந்தவளானேன்!” என்று நினைத்தாள்.
ஆசிரியர் வந்தார். அவள் கரத்தைப் பற்றிச் சொன்னார்: “இது, ஒரு பெரும்விஷயமாக மாறப்போகிறது. இதற்காக, கண்டனங்கள் கட்டுரைகள், பொதுக் கூட்டங்கள், எல்லாம்! அங்கு நீயும் இருப்பாய். இந்த நகரத்திலுள்ள பாட்டாளி மக்களெல்லாம் உனக்காக, உன் நல உரிமைக்காகப் போராடுவார்கள்!”
“எனக்கு இதெல்லாம் வேண்டவே வேண்டாமே!” என்றாள் அவள். மீண்டும் அவளை விபத்துக்குள் ஆக்குவதுபோலிருந்தது. தன்னையே தும்புதும்பாய்க் கிழித்தெறிவதுபோலிருந்தது, அவளுக்கு.
“நீ செய்துதான் ஆகவேண்டும்” என்றார், ஆசிரியர். “வேண்டாம்”
“உனக்கு உதவியே வேண்டாமென்கிறாயா?”
“இந்த மாதிரி வேண்டாம். வேண்டாம், ஸார்”
“இந்தாபார். நானும் உன் அண்ணனும் தீர்மானிக்கிற படிதான் நீ நடக்க வேண்டும்…. ஓ! அந்தக் கடிதத்தை மறந்தே விட்டேனே. எனக்குத் தெரியும். நான் வருமட்டும் நீ காத்திருக்கமாட்டாய். ஒடிவிடுவாய். ஆதலால், நீயும் என்னோடு வந்துதான் திரும்பவேண்டும்” என்று கூறிக்கொண்டே அவளுடைய கரத்தைப் பிடித்தார்.
“அந்தக் கடிதத்தைக் கொடுத்துவிடுங்கள்” என்று பரிதாபமாகக் கேட்டு, தன்னுடைய நொண்டிக்கையை நீட்டினாள், அவள்.
“முடியாது, மகளே, முடியாது, என்னோடு வா. டாக்ஸியிலே போவோம்’சரி, உன் அண்ணன் எங்கிருக்கிறான்?”
‘என்னால் சொல்ல..’
“சொல்லித்தானாகவேண்டும், இந்தா அமைதியாயிரு. இந்தப் படபடப்பெல்லாம் சீக்கிரம் போய்விடும். நாங்கள் உனக்கு தைரிய மூட்டுவோம். தொழிலாளிவர்க்கமே உனக்காக உதவிக்கு நிற்பதை நீயே காண்பாய். நான் சொல்வதை நம்பு”
“ஆனால், ஆண்டர்ஸன்? அவர் என்ன சொல்வார்?”
“அவன் முகத்திலேயே நீ விழிக்காமலிருப்பதுதான் நல்லது. அவன் ஒரு வஞ்சகன்; அவனுடைய வஞ்சனைக்குத்தக்க கூலிகிடைக்கத்தான் செய்யும்… ச்சூ…அழாதே, இவன் இல்லையென்றால், உனக்கு இன்னொரு கணவன்!”
“ஐயோ, அது வேறியா?” என்று கத்திக்கொண்டு, கையைத் திமிறி விடுவித்து ஓட முயன்றாள். ஆனால் முடிய வில்லை. மறு நிமிஷம் அவள் டாக்ஸியில் இருந்தாள்.
‘சரிசரி, அவன் விலாசமென்ன? சொல்லு சீக்கிரம்” என்று ஆசிரியர் படபடத்தார்.
இந்தக் காரியத்தினால், அந்த ஆசிரியர் அடுத்த தேர்தலில் வெற்றி பெற்றார். ஸிக்னே கார்ல்ஸனோ-? அவள் வாழ்வு பாழாய்ப்போனதுதான் கண்ட பலன்.
– எலின் வாக்னர், தமிழில்: ரகுநாதன்.
– முல்லை – 10, முல்லை இலக்கியக் களஞ்சியம், 1946-1947இல் வெளிவந்த முல்லை இதழ்களின் முழுத் தொகுப்பு, பதிப்பும் தொகுப்பும்: முல்லை மு.பழநியப்பன், முதற் பதிப்பு: டிசம்பர் 2003, முல்லை பதிப்பகம், சென்னை.
![]() |
தமிழ்ப் படைப்பாளி தொ.மு.சிதம்பர ரகுநாதனின் பற்றிய அரிய முத்துக்கள் பத்து: • ‘தினமணி’யில் உதவி ஆசிரியர், வை.கோவிந்தன் நடத்திய ‘சக்தி’ இதழின் ஆசிரியர், ‘சோவியத் நாடு’ இதழின் ஆசிரியர் போன்ற பொறுப்புகளில் செயல்பட்டார். • ‘சாந்தி’ என்னும் முற்போக்கு இலக்கிய மாத இதழைத் தொடங்கி நடத்தியவர், அதன் வாயிலாக டேனியல் செல்வராஜ், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், கி.ராஜநாராயணன் உள்ளிட்ட அன்றைய இளம் எழுத்தாளர்களை தமிழ் இலக்கிய உலகுக்கு அறிமும் செய்தார்.…மேலும் படிக்க... |
