அரை மணி நேரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 56 
 
 

அலுவலகக் கட்டிடத்துக்கு எதிர்ப்புறத்து நடைபாதை மேடையில் கொடுக்காப்புளிப் பழம் கூறு வைத்து விற்றுக் கொண்டிருந்த சூசையம்மாக் கிழவியிடம் அவசரம் அவசரமாக அரையணாவுக்கு நல்ல பழமாக வாங்கிக் கால் சட்டைப் பையில் திணித்துக் கொண்டான் பழநி,

பை நிறையக் கொடுக்காப்புளிப் பழத்தையும், மனம்நிறைய ஆசையையும் திணித்துக் கொண்டு அவன் நிமிர்ந்த போது அவ்வலுவலகத்துக்கு உரிமையாளரான முதலாளியின் கார் மிக அருகில் வந்து கொண்டிருப்பதைப் பார்த்து விட்டான். மனம் ‘அவர் தன்னைப் பார்த்திருப்பாரோ என்று பயந்தது. உடல் உதறியது. உள்ளும் புறமும் நடுக்கம். ஒரே ஓட்டமாக வீதியைக் கடந்து, அலுவலகத்துக்குள் நுழைந்து முதலாளியின் அறை முன் தனக்காக இருந்த ஸ்டுலில் உட்கார்ந்து கொண்ட பின்னே நிம்மதியாக மூச்சு வந்தது பையனுக்கு.

‘டக் டக்’ என்று பூட்ஸ் ஒலிக்கக் கம்பீர நடை நடந்து உள்ளே நுழையப் போகும் முதலாளியை எதிர்பார்த்துக் கொண்டிருந்த அவன் ‘சல்யூட்’ அடித்து எழுந்து நின்று அவரை வரவேற்க ஏற்றவாறு உடனே தன்னைத் தயாராக்கிக் கொண்டான்.

அவர் வருவதற்குத் தாமதமாயிற்று. அவன் அவருடைய காரை எந்த இடத்தில் பார்த்தானோ, அங்கிருந்து அலுவலக வாயிலுக்கு வர இரண்டு மூன்று விநாடிகள் கூட ஆகாதே! ‘ஏன் தாமதம்’ என்று விளங்காமல் வெளியே வந்து எட்டிப் பார்த்தான் பையன் பழநி, கார் எதிர்ப்புறத்து நடைபாதை ஓரம் நின்றது. பழநியின் உடல் வேர்த்தது; நடுங்கியது. ‘தான் அங்கே நின்று பழம் வாங்கியதை’ அவர் காரில் வரும் போதே பார்த்துவிட்டார் போலிருக்கிறது. அதுதான் அங்கே இறங்கிச் சூசையம்மாக் கிழவியிடம், “அந்தக் கழுதை பழநிப் பயல் இங்கே எதற்கு வந்தான்?” என்று மிரட்டிக் கேட்கப் போகிறார். அவள் உள்ளதைச் சொல்லி விடப் போகிறாள். இங்கே வந்து என்னை உதைக்கப் போகிறார். ‘ஏண்டா, தடிப்பயலே உன்னை இங்கே வேலைக்கு வைத்துக் கொண்டிருக்கிறேனா, அல்லது கொடுக்காப்புளிப் பழம் இருக்கிற குப்பைக் கடைகளையெல்லாம் தேடிக் கொண்டு ஓடுவதற்கு வைத்திருக்கிறேனா?’ என்று காய்ச்சி எடுக்கப் போகிறார். . இவ்வாறு எண்ணி நடுங்கினான் பையன். சிறிது நேரத்தில் கார் அலுவலக வாசலில் வந்து நின்றது. அவர் இறங்கி வந்தார். பழநி எழுந்து விறைப்பாக நின்று ‘சல்யூட்’ அடித்தான். கால் சராயிலிருந்த கொடுக்காப்புளி நுனி அவன் தொடையில் குத்தியது.
அவர் அவனைக் கவனிக்காததுபோல் ஸ்பிரிங் கதவைத் திறந்த கொண்டு தமது அறைக்குள் நுழைந்தார். முகம்கூட வழக்கத்தைக் காட்டிலும் சற்றக் கடுகடுப்பாகவே அன்று இருந்ததைப் பழநி பார்த்தான். பழநியின் பயம் அதிகமாயிற்று. மனத்தில் பலவிதமான ஆசை அவலக் களங்கங்களை வைத்துக் கொண்டு தவம் செய்ய முடியாத துறவியைப் போல் பையில் கொடுக்காப் புளியை வைத்துக் கொண்டு பயமின்றி.அங்கே நிற்க முடியாது போலிருந்தது அவனுக்கு. அவர் கோபமாக உள்ளே போயிருக்கிறார்; அதற்குத் தானே காரணமாக இருக்கலாம். திடீரென்று கூப்பிட்டு ‘கால்சராயில் என்னடா?’ என்று சோதனை போட்டு மானத்தை வாங்கினாலும் வாங்கிவிடுவார். எதற்கும் முன்னெச்சரிக்கையாக இந்தப் பழத்தை வேறு எங்கேயாவது எடுத்து வைத்துவிட வேண்டும்’ என்று விழிப்பாக நினைத்துக்கொண்டு ஒரு தீர்மானத்துக்கு வந்தான் பழநி,

‘ஆபீஸ் பையன்’ என்ற சிறிய பதவிக்குரிய அவனது ஆசனமாகயிருந்த ஸ்டுலின் அருகே குப்பைக் காகிதங்களைப் போடும் கூடை ஒன்று இருந்தது. அதில் அடியில் தன் பையிலிருந்த கொடுக்காப்புளிப் பழங்களை எடுத்துப் போட்டு மேலே குப்பைக் காகிதங்களை இட்டு மூடினான்.

ஒவ்வொரு நாளிலும், ஒவ்வொரு மணி நேரத்திலும் இலட்சக்கணக்கில் பணம் புரளும் பெரிய கம்பெனியின் அலுவலகம் அது. கோடீசுவரராகிய அந்த முதலாளிக்கு ஆபீஸ் பையனாக இருப்பதிலுள்ள பெருமையைக் கேவலம் கொடுக்காப்புளிப் பழம் தின்கின்ற ஆசையினால் கெடுத்துக் கொள்ளலாமா?’ என்று நினைக்கும்போதே தான் செய்தது தப்பு என்று உணர்ந்தான் பழநி,

“பாய்.!”

உள்ளேயிருந்து முதலாளியின் கடுமையும், கண்டிப்பும் நிறைந்த குரல் அவனை அழைத்தது. அவன் பயந்துகொண்டே உள்ளே விரைந்தான்.அவருடைய மேஜை மேல் ‘செக்’ புத்தகங்கள் விரிந்து கிடந்தன. பேனா, திறந்து வைத்திருந்தது. கடிதங்கள் அடுக்காக இருந்தன. இரண்டொரு பைல்கள் விரித்து வைக்கப்பட்டிருந்தன. அவர் பழநியிடம் கடுகடுப்போடு சொன்னார்.

“இன்னும் அரை மணி நேரத்துக்கு யாரையும் உள்ளே விடாதே. ‘ஐயா பிஸி’யாயிருக்கிறார். இப்போது பார்க்க முடியாது என்று சொல்லி அனுப்பிவிடு. “டெலிபோன் ஏதாவது வந்தாலும் அரைமணி நேரத்துக்கப்புறம் கூப்பிடச் சொல்லி விடு. முக்கியமான வேலையாயிருக்கிறேன் நான்.”

“சரி, சார்” என்று கூறிவிட்டு வெளியே வந்து தன் பதவியின் அடக்குமுறையை நிலைநாட்டச் சரியான சமயம் கிடைத்துவிட்டதுபோல் கர்வத்துடன் ஸ்டூலில் நிமிர்ந்து உட்கார்ந்தான்.

“ஏண்டா பழநி! ஐயா உள்ளே இருக்காரா? இந்தக் கடிதங்களிலெல்லாம் கையெழுத்து வாங்கணும்” என்று உரிமையோடும் ஒரு கொத்து டைப் காகிதங்களோடும் உள்ளே நுழைய முயன்ற ஹெட்கிளார்க் குருமூர்த்தியைப் பழநி தடுத்து நிறுத்தினான்.

“இப்போ ஐயாவைப் பார்க்க முடியாதுங்க. அரைமணி நேரங் கழிச்சு வாங்க.”

ஹெட்கிளார்க் திரும்பிப் போனார்.

வாயிலில் கார் வந்து நின்றது. கம்பெனி ‘பார்ட்னர்’ ஒருவர் வந்து இறங்கினார்.

“விஸிட்டர் ரூமிலே இருங்க. ஐயாவைப் பார்க்க அரைமணி ஆகும்” என்று சொல்லி அவரை விஸிட்டர் ரூமில் கொண்டு போய் உட்கார வைத்தான் பழநி,

வீட்டிலிருந்து முதலாளியின் மனைவி டெலிபோன் செய்து கூப்பிடுவதாக ‘டெலிபோன் ஆபரேட்டர்’ வந்து கூறினான். “அரைமணி நேரம் கழித்துக் கூப்பிடச் சொல்லி அப்புறம் ஐயா ரூமிலே இருக்கிற போனுக்குப் போடுங்க” என்று சொல்லி அவனை அனுப்பினான் பழநி, ஒரு பெரிய ‘லெட்ஜரைத்’ தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு வந்த ‘காஷியரையும் ‘பைல்’களோடு வந்த “அக்கெளண்டெண்டையும்’ திருப்பி அனுப்பினான் பழநி,

அப்பாடா! ஆபீஸையே ஒரு கலக்குக் கலக்கிவிட்ட அந்த அரைமணி நேரம் ஒருவாறு கழிந்தது.

“பழநி!”

பழநி உள்ளே ஓடினான்.

“இந்தா! இதைக் கொண்டுபோய் வெளியிலே போடு!” ஒரு காகிதத்தில் எதையோ சுருட்டிக் கசக்கி அவன் கையில் கொடுத்தார் முதலாளி.

பழநி அதை வாங்கிக் கொண்டு வெளியே வந்தான். தூக்கி எறியுமுன் என்னவோ ஒரு சந்தேகம் ஏற்பட்டது. பிரித்துப் பார்த்தான்.

கொடுக்காப்புளித் தோடுகளையும் விதைகளையும் வைத்துச் சுருட்டியிருந்தது காகிதம். பழநிக்கு மயக்கம் போட்டுவிடும் போலிருந்தது. அரைமணி நேரம் உள்ளே நடந்த வேலை இதுதானா? என்று மெல்லச் சிரித்துக்கொண்டான் அவன். பின்பு முதலாளியின் பேட்டிக்குக் காத்திருந்தவர்களை ஒவ்வொருவராக உள்ளே அனுப்பிவிட்டுக் குப்பைக் கூடையிலிருந்த கொடுக்காப்புளிப் பழங்களை வெளியே எடுத்துத் தைரியமாகத் தன் ஆசனத்திலிருந்தபடியே இரசித்துச் சாப்பிடலானான்.

– நா.பார்த்தசாரதி சிறுகதைகள் (முதல் தொகுதி), முதற்பதிப்பு: டிசம்பர் 2005, தமிழ்ப்புத்தகாலயம், சென்னை.

NaPa2 'நா. பா' என்று வாசகர்களால் அன்புடன் அழைக்கப் பெறும் நா. பார்த்தசாரதி அவர்கள் 18.12.1932ல் இராமநாதபுரத்தைச் சேர்ந்த நதிக்குடியில் பிறந்தவர். மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் 'பண்டிதர்' பட்டம் பெற்றவர். சென்னைப் பல்கலையில் வித்வான் பட்டமும், முதுகலைப் பட்டமும் பெற்றவர். பழந்தமிழர் கட்டிடக் கலையும் நகரமைப்பும் என்கிற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வேடும் சமர்ப்பித்தவர். இளம் வயதிலேயே எழுதத் தொடங்கிய இவர் சுமார் 50 நாவல்களையும் 200க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் பல…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *