தமிழனென்று சொல்லடா…?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 3, 2025
பார்வையிட்டோர்: 82 
 
 

(1985ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கையிலிருந்த ‘தவஸ’ (சிங்களம்) பத்திரிகையைப் பிரித்து அதில்மூழ்கிவிட்டது போல் பாவனை பண்ண ஆரம் பித்தான் தியாகு. பின் சீட்டில் உட்கார்ந்திருந்த சிவா வைத் திரும்பிப் பார்க்க எண்ணினான். இருப்பினும் ஏதோ ஒருவகை] அச்சம் அவனைத் தடுத்தது. 

வழக்கம் போல் தனியாக வந்திருந்தால் இந்த அதி கப்படியான பிரச்சனை இருந்திருக்காது. நண்பன் சிவாவை உடன் அழைத்து வந்ததில் உள்ள தவறை இப்பொழுதுதான் உணர்ந்தான். 

வீட்டுக்கு ஒரே பையன். வெளியுலகத்தில் அடிப் பட்ட அனுபவம் இல்லாதவன். அவனிடம் விளையாட் டாக ஒருநாள் “சிவா…பரீட்சை தான் முடிந்து விட்டதே, பெண்களைப்போல் வீட்டோடு முடங்கிக் கிடக்காமல் இந்த ‘ஆகஸ்டி’ல் மடுத்திருவிழாவுக்கு வருகிறாயா?” எனக் கேட்டான் தியாகு. 

“அதற்கென்ன மச்சான்…நான் அங்கு போனதே கிடையாது. இந்தியாவிலுள்ள அன்னை வேளாங்கண்ணி கோவில் போல் இதுவும் கிறிஸ்துவர்கள் மத்தி யில் பிரசித்தமான மாதா கோவிலாமே! நீ போகும் போது நானும் வருகிறேன்” எனச் சிறுவனைப்போல் தியாகுவின் தோளைக் கட்டிப்பிடித்தபடி ஆனந்தமாகக் கூறினான். 

ஆனால் நண்பர்கள் இருவரும் திருவிழாவுக்குப் புறப் படுகின்ற சமயத்தில் தியாகுவின் வீட்டிலிருந்து கொஞ் சம் ஆட்சேபனை கிளம்பியது.! 

“தியாகு’நீ எப்பதாண்டா சொன்ன பேச்சைக் கேட்கப்போகிறாய். இப்ப கொஞ்ச நாட்களாய் ‘ஜூலை, ஆகஸ்ட்’ மாதங்கள் பிறந்தாலே தமிழனுக்கு ஆகாத காலம் போலிருக்கிறது. வருஷாவருஷம் ஏதாவது கல வரம் மூண்டு கொண்டேயிருக்கு. மடுத்திருவிழாவுக்கோ சிங்களவர்களும் எக்கச்சக்கமாய் கூடுவார்கள். வீண் சச்சரவுகள். தமிழர்கள் போவதே குறைஞ்சிட்டிருக்கு. நீயேண்டா பிடிவாதமாய் போகிறாய், அதுவும் அந்தப் பையனைவேறு அழைத்துக் கொண்டு. சிவாவுக்கு வயது தான் ஏறியிருக்கிறதே தவிர உலகம் தெரியாதவன்!” நிறுத்தாமல் பேசிக்கொண்டே போன தாயாரை இடை மறித்து, 

“போம்மா, எதற்கெடுத்தாலும் பயந்து பயந்து செத்துக் கொண்டு. எலக்ஷன் வருகிறதா? தமிழனுக்கு நடுக்கம்… திருவிழாக் கூட்டமா? சொந்த மண்ணில் சுதந்திரமாகப் போகவும் பயம்… குட்டக் குட்டக் குனியக் கூடாதும்மா. நாமும் திருப்பி நாலு சாத்தினால் அவன் தன்னாலே வழிக்கு வருவான்…” தியாகு தாயை சமாதானப் படுத்துவதற்காக இந்த வார்த்தைகளைக் கூறினானே தவிர அவனுக்கும் உள்ளூர ஒரு தயக்கம் இருந்தது. அவன் கேள்விப்பட்ட சில வதந்திகள் பிரயாணத்துக்குச் சாதக யாக இருக்கவில்லை. 

“பார்த்துப் பார்த்துச் சலித்துப்போன திருவிழாக் காட்சிகள் தானே. இந்தத் தடவை போகாமலிருந்தால் கொஞ்சம் பணமும் மிச்சமாகும்”-தியாகு தனக்குள்ளாகச் சிந்தித்து ஒரு முடிவுக்கு வரச் சிவா விடவில்லை. 

“எவ்வளவு கஷ்டப்பட்டு அப்பாவிடம் ‘பர்மிஷன் வாங்கியிருக்கிறேன்! இவ்வளவு நாளும் உனக்காப் போனாய்! இந்தத் தடவை எனக்காக வாவேண்டா…!” என நச்சரிக்கத் தொடங்கினான். நண்பனின் ஆசையை நிராகரிக்க முடியவில்லை. 

கோயிலில் கூட்டம் நிரம்பியிருந்தது. ஆனால் எந்தப் பக்கம் திரும்பினாலும் சிங்களவர்கள் முகங்கள் தான் அதிகமாகத் தெரிந்தன. அங்கொன்றும் இங்கொன்று மாக எண்ணிப்பார்த்துவிடலாம் போல் தமிழர்கள் ஒரு சிலரேயிருந்தனர். அவர்கள் முகங்களிலும் ஏதோ ஒரு வகை பீதி…அச்சம், அமைதியின்மை தெரிந்தது. 

மாதாவின் திருவுருவத்துக்கு மாலையணிவித்துப் பிரார்த்தனையை முடித்துக் கொண்டு வெளியே வந்த நண்பர்களிருவரும் கடைத் தெருக்களை வேடிக்கையாகச் சுற்றிப் பார்க்க ஆரம்பித்தனர். 

மிட்டாய்க் கடைகள், பாத்திரக் கடைகள், பாய் கடைகள் அனைத்தையும் தாண்டி வளையல் கடைப்பக்கம் வந்தபொழுதுதான் எதிர்பாராத அந்தச் சம்பவம் நடந்தது. 

வளையல் கடைக்குச் சொந்தக்காரர் ஒரு தமிழர்; அவர் கடையில் சிங்களத் தம்பதிகள் இருவர் வளையலுக் காசுப் பேரம் பேசிக்கொண்டிருந்தனர். விலையில் இரு பகுதியினருக்கும் ஒத்துவரவில்லை. 

“போம்மா, அந்த விலைக்குத் தரமுடியாது. அசல் விலைக்கே கட்டுப்படியாகாது!” என்றபடி சிங்களப் பெண்ணின் கையிலிருந்த வளையலை எரிச்சலுடன் பிடுங்கித் தம் கடையில் போட்டார் வியாபாரி. 

அதனைப் பார்த்துக் கொண்டிருந்த சிங்களவனுக்கு எங்கிருந்து அப்படியொரு வெறி தோன்றியதோ தெரியாது. “அடோ… பறதெமளா! உம்பட ஒச்சர ஆடம்பரத (அடேய் பறத்தமிழா! உனக்கு அவ்வளவு திமிரா) எனக் கூச்சலிட்டபடி அவ்வியாபாரியின் கன்னத்தில் ‘பட்’டென்று அறைந்தான். 

கடைக்காரரும் கொஞ்சம் ரோஷக்காரர். தமிழன் என்பதற்காக அடிமைப்பட்டுக் கொண்டு தலையைக் குனிந்துவிடவில்லை. 

‘சட்’டென அச்சிங்களவனின் ‘ஷேர்’டைப் பிடித்து நான்கு உலுக்கு உலுக்கி ‘பளார் பளார்’ எனத் திருப்பி அறைந்தார். 

அதனைப் பார்த்ததும்; “தெமளு கோமத அபே சிங்கள யன்ட காண்ட, புளுவாங்” (தமிழன் எப்படி எங்கள் சிங்களவரை அடிக்க முடியும்?) என அங்கிருந்த சிங்களவர்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு தமிழர் கடைகளைச் சுற்றி வளைத்துத் தாக்கத்தொடங்கினர். புகைந்து கொண்டிருந்த நெருப்புத் திடீரென ஒரு சின்னப் பொறியில் பற்றிக்கொண்டது. 

எங்கும் கூச்சல்-குழப்பம். தமிழர்கள் தங்கள் உடமை களையும் விட்டுவிட்டுச் சிதறியோடினர். 

சிவா பேயறைந்தவன் போலானான். தியாகுவின் கைகளைக் கெட்டியாகப் பிடித்தபடி, “ஊருக்குப்போகும் வழியைப் பாரடா” என்றான். அவன் குரல் அச்சத்தில் கர கரத்தது. 

கோயிலை விட்டு வெளியே வந்ததும்தான் அங்கு மட்டுமல்ல நாடு முழுவதுமே இனக்கலவரம் காட்டுத் தீபோல பரவியிருப்பதை அறிந்தான் தியாகு. 

எப்படி நீர்கொழும்புக்குப் போய்ச் சேருவது? அவன் சொந்த இடம் அதுவே. இடையில் எத்தனையோ சிங்களக் கிராமங்களைத் தாண்டியாக வேண்டும். 

“சிவா, உனக்குச் சிங்களம் நன்றாகப் பேச வருமா?” எனக் கேட்டான் தியாகு. 

“முடியாதுடா…. ஓரிரு வார்த்தைகளுக்கு அர்த்தம் தான் தெரியுமே தவிர பேசவராது” – சிவா பரிதாபமாகக் கூறினான். 

இவ்வளவு காலம் நீர்கொழும்பில் வாழ்ந்தும் அவனுக்குச் சிங்களம் தெரியாதெனக் கூறியபொழுது அவனை அறைந்து விடலாம் போல் ஆத்திரப்பட்டான் தியாகு. சிவாவை நிமிர்ந்து நோக்கினான். அவன் பயத் தில் நடுங்கிக் கொண்டிருந்தான். 

“பயப்படாதே. எப்படியும் அநுராதபுரம் போய்ச் சேர்ந்து விட்டால் அங்கிருந்து அடிக்கடி நீர்கொழும் புக்கு பஸ் புறப்படும். போய் விடலாம்” எனச் சிவாவுக்கு. ஆறுதலளித்த தியாகு, ‘பாண்ட்’டைக் களைந்து விட்டு ‘பட்டிக் லுங்கி’யை எடுத்து அணிந்துகொண்டான். அதற்கு மேல் அகலமான பெல்ட், 

இருவரும் தங்கள் உடைகளை அவசர அவரமாக மாற்றிக் கொண்டு, ஏறக்குறைய நாட்டுப்புறத்துச் சிங்களவர்களைப் போன்ற வேஷத்தில் அநுராதபுரம் வந்தடைந்தனர். 

அவர்கள் எதிர்பார்த்ததுக்கும் மேலாகத் தமிழர் கடைகள் அனைத்தும் சாம்பல் மேடாகிக் கிடந்தன. கண்ணுக்கெட்டிய தூரம்வரை புகை மூட்டமாய் இருந்தது. தமிழர்கள் சாக்கடைக்குள்ளும்… கழிவறைக் குள்ளுமென கண்ட கண்ட இடத்திலெல்லாம் பதுங்கி விட்டனர் போலும். 

தமிழன் என்ற பெயரில் ஒரு ஈ, காக்கைகூடக் கண்ணில் படவில்லை. சிங்களவர்கள் கூட்டம் கூட்டமாக நின்று எரியும் கடைகளையும், சித்திரவதைப்பட்டுச் செத்துக் கிடக்கும் தமிழர்களையும் வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருந்தனர். 

ஆண்களே வெளியே வர அச்சப்படும் அச்சமயத்தில் இளம் வயதுச் சிங்களப் பெண்களும் ஒருவரோடொரு. வர் கைகோத்தபடி வேடிக்கையும், விளையாட்டுமாக இக்காட்சிகளை ரசித்ததைப் பார்த்த தியாகு மனம் வெதும்பினான். 

சிவா பயப்பிராந்தியுடன் தியாகுவின் முகத்தை அடிக்கடி ஏறிட்டுப் பார்த்துக் கொண்டான். அவனது மிரண்ட பார்வையும், கூர்மையான நாசியும், கருமை நிறமும் காது ஓட்டையும் எல்லோருக்கும் அவனை அடையாளம் காட்டிவிடும் போலிருந்தது. தியாகு அவனை எண்ணியபடியே எப்பொழுதும் போல் அலட்சிய மாக நடந்தான். ஒற்றைக் கதவு திறந்திருந்த பெட்டிக் கடையொன்றில் புகுந்து ‘தவஸ’ பத்திரிக்கையை வாங்கிக் கொண்டான். 

நீர்கொழும்புக்குப் புறப்படுவதற்கு ‘பஸ்’ஸொன்று தயாராக நின்றது. பஸ்சில் ஏறினான். உள்ளே திரு விழாக் கூட்டம் நிரம்பி வழிந்தது. அத்தனை பேரும் சிங்களவர்கள். எல்லோர் வாயிலும் தமிழர்களுக்கு எதிரான பேசுக்கள்… துவேஷம் நிறைந்த வசை மொழிகள். இந்தியாவைப் பற்றிய மட்டமான விமர் சனங்கள். இந்திரா அம்மையாரிலிருந்து எம். ஜி. ஆர். வரை எல்லோரையும் திட்டிக்கொண்டிருந்தார்கள் 

தன் பக்கத்திலேயே சிவாவையும் உட்கார வைத்து விட வேண்டுமென முயன்றான் தியாகு, முடியவில்லை. இரண்டு சீட் தள்ளிப் பின்னாலேயே சிவாவுக்கு இடம் கிடைத்தது. தைரியமாக அவனை உட்காரும்படி கண் ஜாடை காட்டிவிட்டு முன்னால் அமர்ந்தான் தியாகு. 

கையிலிருந்த ‘தவஸ’ பத்திரிகையை விரித்து அதில் மூழ்கிப்போனவன்போல் பாவனைபண்ண ஆரம்பித் தான். ‘பஸ்’ வேகமாக ஓடிக் கொண்டிருந்தது. 

“மாதாவே… எங்களைக் காப்பாற்றிவிட்டாய். உனக்குத் தோத்திரங்கள்” தியாகு அடிக்கடி மனதுக்குள் இதனை ஒப்புவித்துக் கொண்டான். 

சில மணித்தியாலங்களுக்குப் பின்னர், அடர்ந்த தென்னந்தோப்புகள் அவன் கண்களுக்குத் தெரிய ஆரம் பித்தன. ‘ஓ… சிலாபம் வந்து விட்டது. இன்னும் சில மைல்கள் தான். ஊர் வந்து விடும்’ தியாகு நிம்மதியாக நிமிர்ந்து உட்கார்ந்தான். 

வேகமாகச் சென்றுகொண்டிருந்த பஸ் திடீரென நின்றது. தியாகு ஒரு குலுக்கலுடன் நிமிர்ந்தான். இருபது, முப்பது சிங்களவர்கள் பயங்கர ஆயுதங்களு டன் திமு திமுவென பஸ்சுக்குள் ஏறினர். பேசிக் கொண்டிருந்த பயணிகள் நிசப்தமானார்கள். 

“மே பஸ் அதுலே தெமளு கவுருத் கிட்டியத் எலிய பேபல்லா” (இப் பஸ் உள்ளே தமிழன் இருந்தால் வெளியே இறங்கு) – ஏறிய பயங்கரவாதிகளில் ஒருவன் கனத்த குரலில் கூச்சலிட்டான். 

தியாகுவின் நெஞ்சுக்குள் பகீரென்றது. இருந்தாலும் அதனை வெளியே காட்டிக்கொள்ளாமல் விச்ராந்தையாய் உட்கார்ந்திருந்தான். சிவாவை ஒரு தடவை திரும்பிப் பார்க்க வேண்டும்போலிருந்தது. ஆனால் அச்சம் அவனைத் தடுத்தது. 

“தம்ஸ கோயித யண்ணே…” (நீங்கள் எங்கே போகிறீர்கள்?) தியாகுவின் முகத்தை உற்று நோக்கிய படியே ஒருவன் கேட்டான். 

“மங் மீகமுவ யனவா” (நான் நீர்கொழும்பு போகிறேன்) 

தியாகுவின் உச்சரிப்பு நழுவாத சிங்களம், கையிலிருந்த சிங்களப் பத்திரிக்கை, லுங்கியைக் கட்டியிருந்த பாணி… அதைத் தவிர அவனது குருட்டு அதிர்ஷ்டம் அனைத்தும் அவனுக்குக் கை கொடுத்தன. 

கேட்டவன் பின்னால் நகர்ந்தான். தியாகு ‘தவஸ் வில் மீண்டும் மூழ்கினான். 

“அடோ… உம்ப தெமளு நேத (அடேய்…நீ… தமிழன் தானே…)” 

நிசப்தமான சூழ்நிலையைக் கிழித்துக் கொண் டெழுந்த வார்த்தைகள் தியாகுவின் அடிவயிற்றைக் கலக்கியது. மனசு கேட்கவில்லை. திரும்பிப் பார்த்தான். 

சிவாவின் தலை மயிரை ஒருவன் கோதிப் பிடித்திருக்க, இன்னொருவன் அவன் காதுத் துவாரத்தை இழுத்துப் பார்த்துக்கொண்டிருந்தான். 

இரையைப் பார்த்ததும் அதன்மீது கூட்டமாக வந்துவிழும் காக்கைகள்போல் சிங்களக் குண்டர்கள் அனைவரும் சிவாவின் மேல் பாய்ந்தனர். ஆளுக்கொரு ஆயுதத்தால் அவனைத் தாக்கத் தொடங்கினர். 

சிவாவின் உதடுகள் பிய்ந்து தொங்கின; நெற்றி யிலிருந்து குருதி வடிந்தது. ‘ஷேர்ட்’ கிழிந்து நார் நாராய்ப் பறந்தன. எவனோ ஒருவன் உதைத்த உதை யில் வலிதாங்காத சிவா, கூச்சலிட்டபடி பஸ்சிலிருந்து எகிறிப்போய் நிலத்தில் விழுந்தான். 

கண்ணில் சுரந்த நீரைக் கஷ்டப்பட்டு உள்ளடக்கினான் தியாகு. 

நிலத்தில் விழுந்தவன் எழுந்துவிடாவண்ணம் அவன் முதுகில் ஏறி நின்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்த குண்டர்கள், வேகமாக அவனைச் சுற்றிக் ‘கார் டயர்’ களை அடுக்கித் தீ மூட்டினர். 

உயிருடன் நெருப்பில் வெந்துகொண்டிருந்த சிவாவின் மரண ஓலம் தியாகுவின் இரத்த நாளங்களை உறைய வைத்தது. 

‘நண்பா! நானோர் கோழை. கையாலாகாதவன். சுயநலவாதி. என்னை மன்னித்துவிடடா. ஈனத் தமிழ்க் குலத்தில் பிறந்த இளைஞனே! நீ நெருப்பில் எரிக்கப்படுகிறாய். நான் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடிக்கொண்டிருக்கிறேன்!’ தியாகுவின் நெஞ்சம் வெடித்துச் சிதறியது. 

பஸ் மெதுவாக நகர்ந்தது. 

தியாகுவின் இதயத்துக்குள் தீப்பற்றிக் கொண்டிருந்தது. ஓடும் பஸ்சிலிருந்து எட்டிப்பார்த்தான். 

உடல் கருகிக்கொண்டிருந்த சிவாவை அக்கொடியவர்கள் ஒரு தடியைக்கொண்டு பாதை ஓரத்திற்கு தள்ளிக்கொண்டிருந்தனர். 

– அக்கினி வளையம், ஈழத்துக் கண்ணீர்க் கதைகள், முதற் பதிப்பு: ஆகஸ்ட் 1985, தேனருவி வெளியீடு, சென்னை.

 

அக்கினி வளையம் அக்கினி வளையம், ஈழத்துக் கண்ணீர்க் கதைகள் - ஆகஸ்ட் 1985 தமிழினத் தலைவர் மாண்புமிகு டாக்டர் கலைஞர் அவர்களின் அணிந்துரை  தென்னிலங்கைத் தீவில் தேம்பியழும் தமிழ் இனத்தினர் படும் சித்ரவதைக் கொடுமைகளைத் 'தேவி' இதழ் 'கண்ணீர்க் கதைகள்' என்ற தலைப்பில் வெளியிட்டது தொடர்ச்சியாக!  அதன் தொகுப்பே இந்த நூல்! நூல்அல்ல; நம் இதயத்தில் பாயும் வேல்!  இலங்கைத் தமிழ்க்குலத்தில் உதித்த எழுத் தாளர் ஞானப்பூங்கோதை அவர்கள் தாய் உள்ளத் தில் பொங்கிப்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *