கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: October 9, 2025
பார்வையிட்டோர்: 225 
 
 

கூதிர் காலத்தில் குன்றுகூட குளிரும். மனிதர்களுக்கு சொல்லவா வேண்டும். மத்தியானம் தொடங்கிய மழை அந்திக்குத்தான் விட்டது. ஆனாலும் தொடர்ந்து அடிக்கிற குளிர் காற்றுக்கு மேலெல்லாம் ‘நடுக்கல்’ எடுத்தது. பற்கள் தானாக படபடத்து அடித்துக்கொண்டது. ஆறுமுகம் இரண்டு மூன்று தேத்தண்ணியை குடித்துப் பார்த்தார். தொண்டையை நனைத்தவுடன் ‘மேலு’ கொஞ்சம் சூடாக இருந்தது. அதுவும் ரொம்ப நேரம் தாங்கவில்லை. இதைகூட சகித்துக் கொள்ளலாம். பழகிபோன ஓன்று. போலீஸ் ஸ்டேசனுக்கு தான்வர நேர்ந்த நிலைமையை நினைத்துப் பார்க்கத்தார் கொஞ்சம் அவமானமாக இருந்தது. ஆறுமுகம் யோசித்துக் கொண்டே டீகடையிலிருந்து போலீஸ் ஸ்டேசனுக்கு நடந்து போனார். வானத்தை அண்ணாந்து பார்த்தார். கறுத்துபோய் கிடந்தது. மறுபடியும் மழைவரும்போல இருந்தது. வேலு ஸ்டேசனிலிருந்து வெளியே நடந்து போனான். ஆறுமுகத்தை பார்த்ததும் அருவருப்பான ஒரு மிருகத்தை பார்த்ததுபோல முகத்தை திருப்பிக்கொண்டான். அவன் முகத்தை திருப்பிகொண்ட தோரணை ஆறுமுகத்திற்கு பெரும் வேதனையாக இருந்தது. ஒருகனம் எப்போதும்போல பொறுமை காத்திருக்கலாமோ என நினைத்தார். பொழுது விடிந்து பொழுது சாய்ந்தால் அண்ணே அண்ணே என்று கூப்பிட்ட அந்த முகமா இப்படி ஏறெடுத்தும் பார்க்காமல் முறைத்துக்கொண்டு போவது. எல்லாம் இந்த பூரணத்தால் வந்தத வினை என்று நினைத்தாலும், பாவம் அவளும் என்னதான் செய்வாள். காடு மேடெல்லாம் அலைந்து திரிகிறவள்தானே. எத்தனை நாள்தான் ‘லேசுபாசா’ சொல்லிப் பார்ப்பாள். சுத்தக்காரியாக இருந்தாள்கூட பரவாயில்லை. அவள் தன்னுடைய சம்சாரம் ஆயிற்றே. அவள் பேச்சை கேட்காமல் இருக்கமுடியுமா?

ஆறுமுகம் ஸ்டேசன் உள்ளே நுழைந்தார். அவரைப் பார்த்ததும் ஏட்டு ஏளனமாக சிரித்தான். “என்னய்யா….. இதெல்லாம் ஒரு பிரச்சனைன்னு கம்ப்ளைன்ட் குடுக்க வந்திடுறிங்க? எங்களுக்கு வேறவேலை இல்ல பாரு … வெளியில போய் நில்லு. இன்ஸ்பெக்டர் ரவுண்ட்ஸ் போய் இருக்காரு. வந்ததும் விசாரிக்கலாம். உன் பொண்டாட்டிதான் வாய் பேசியிருக்கு. நீயும் கத்திய காட்டி மெரட்டுனியா… அவ்ளோ பெரியா ஆளா நீ.”

“இல்லைங்க சேர் நா ஒண்ணும் பண்ணலைங்க “

“ஆமா உங்க லட்சணத்தை எங்களுக்கு தெரியாது பாரு. போய் அங்க ஓரமா நில்லுய்யா”

“ஐயா எப்போ நான் வரட்டுங்க”

“என்னது எப்போ வரட்டுமா இங்கேயே நில்லுய்யா. தொரைக்கு வந்ததும் வீட்டுக்கு போவனுமோ”

ஏளனமாகபேசி ஏட்டு எரிந்துவிழுந்தான்.

‘இந்த எழவுக்குத்தான் போலீஸ் ஸ்டேசன் பக்கமே வரக்கூடாது. கொஞ்ச பாடா படுத்துனானுங்க’ இன்னும் எதுவும் மாறவில்லை என்று நினைத்தார் ஆறுமுகம். அவர் மனதில் நீங்கா வடுவாக இருந்த

பழைய காட்சி இன்னும் அவரைவிட்டு அகழவே இல்லை. கடந்த காலத்தின் அந்த சம்பவங்களுக்கு பிறகுதான், எந்த போலீஸ்காரனை கண்டாலும் மரியாதையும் வரவில்லை; நியாயம் கிடைக்கும்ங்கிற நம்பிக்கையும் ஆறுமுகத்திற்கு வரவில்லை.

அது தொண்ணூறுகளின் காலம். இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி சென்னையில் நடந்த கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டபோது குண்டுவெடித்து பலியானார். குண்டு வெடிப்பில் சிதறிக் கிடந்த அவரின் உடலின் புகைப் படங்கள் செய்தித்தாள்கள் தோறும் இடம்பெற்றன. நாடே அல்லோலப் பட்டது. வாரக்கணக்கில் துக்கம் அனுசரிக்கப்பட்டது. கொலையாளிகளை பிடிக்க போலீஸ் நாடெங்கும் வலை வீசி தேடியது. ‘கொலையாளி அங்க இருக்கான் ‘இங்க இருக்கான்’ அந்த நாட்டுல இருக்கான் ‘இந்த நாட்டுல இருக்கான்’ என போலீஸ் பேயாய் அலைந்தது.

ஆனால், எங்கயோ நடந்ததுக்கு காலனி ஜனம் என்ன செய்யும். பொழுது விடிஞ்சு பொழுது சாஞ்சா தேயிலைக் காட்டுல திரியிற ஜனத்துக்கு என்ன தெரியும். காலனி ஜனமே போலீஸ் ஸ்டேசன்ல நின்னுச்சு. பாஸ்போர்ட்ட காட்டுச்சு. குடும்பகார்டை காட்டுச்சு. ‘தாய்நாட்டுக்கு திரும்பி வந்திருக்கம்’ ; இது எங்க நாடுன்னு’ சொல்லியும் யாரும் நம்பல. “நீங்கள்லாம் அகதிங்க. வந்த இடத்துல ஒழுங்கா இருங்க” என அதிகாரி ஒருவன் புத்திமதி சொன்னதோடு ஏக வசனத்தில் பேசினான். ஜனம் கண்ணீரும் கம்பலையுமாக என்னென்னவோ சொல்லுச்சு. யாரும் காதுகுடுத்து கேட்கல “உங்களையெல்லாம் கண்டிலயிருந்து கப்பல்ல கொண்டுவரும்போது கடல்லே தள்ளிருக்கணும்” என ஒரு போலீஸ்காரன் ஏசினான்.

“எங்கே இருந்து வந்து, எங்க நாட்டு பிரமரை கொலை பண்ணுறிங்க” பாவம் அவனுக்கு அகதிக்கும், தாய்நாட்டுக்கு திரும்பியவனுக்கும் வித்தியாசம் தெரியவில்லை. ஸ்டேசனில் நின்ற தேயிலைக்காட்டு சனத்துக்குள்ள குண்டு வைத்த பயங்கவாதியை தேடினான் அவன். விசாரணை …விசாரணை ஒரு வழியாக போலீஸ்கார்கள் சந்தேகம் போனது. இருந்தாலும் ‘எப்ப கூப்பிட்டாலும் ஸ்டேசன் வரணும்’ என்று எச்சரித்தே அனுப்பினர்.

அதன் பிறகு இப்போதுதான் ஸ்டேசன் பக்கம் வந்திருக்கிறார் ஆறுமுகம். அவர் உருவகித்ததுபோலவே ஸ்டேசன் நடவடிக்கைகள் இருந்தன. ஒரு காலத்தில் வெள்ளைக்காரன் கட்டிய பங்களாவில்தான் அந்த ஸ்டேசன் டவுனின் ஒதுக்குப் புறத்தில் இருந்தது. வெள்ளைக்காரன் கட்டிய பங்களாவிற்கு சாட்சியாக கூரையின்மேலே புகைகூண்டுகள் இருக்கும். அவர்கள் தங்கள் வீடுகளை ‘மோல்டுபோட்டு’ கட்டியதே இல்லை. விறகுகட்டைகளை அடுப்பில் போட்டு எரித்து அந்த வெளிச்சத்தில் மதுவுடன் குளிரை போக்குவது அவர்கள் வழக்கமாகவும் பழக்கமாகவும் இருந்திருக்கிறது. உயர்ந்து நிற்கும் சுவரில் பூதம்போல வாயைத் திறந்துகொண்டு அடுப்பு இருக்கும். இப்போது அதை வண்ணம் தீட்டியிருந்தனர் அதன் முன்னேதான் இன்ஸ்பெக்டர் உட்கார்ந்து இருந்துகொண்டு ராஜீவ்காந்தி படுகொலைக்காக காலனி ஜனத்தை போலீஸ் விசாரித்ததை ஆறுமுகம் பார்த்திருக்கிறார். இப்போது நவீன கட்டிடங்கள் வந்துவிட்டன. கட்டிடங்கள் மாறிவிட்டால் போதுமா. அதற்குள் வசிக்கிற மனிதர்கள் மாறவேண்டாமா? ஆறுமுகத்திற்கு உடலெல்லாம் வியர்த்தது. தன்னையறியாமல் உடல் தள்ளாடியது. முதன் முதலாக சக மனுஷன் ஒருவன் தன்னை தனித்து நிற்கும்போது , ஏளனமாக பேசுவதையும் மரியாதைகுறைவாக நடத்துவதையும் அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எப்பதான் இந்த பிரச்சனை முடியப்போகுதோ என்று அவருக்குள் பயம் வந்தது.

வேலுவுடன் நின்றிருந்த ஊர்த்தலைவர் சிங்காரத்தை பார்த்ததும் இன்னும் பயம் கூடியது. இவன் பொல்லாத ‘த்ரிக்ஸ்காரன்’. ஒண்ணுக்கு ரெண்டா சொல்லி, ரெண்டு பக்கமும் பேசிக்கிட்டு சாராயத்துக்கு வேலை பாக்குறவன்தானே. இவனைத் தலைவரா ஆக்குன காலனி மக்கள்மேல் கெட்டகோபம் வந்தது ஆறுமுகத்திற்கு.

வெளியே நின்றிருந்த ஆறுமுகத்தை பார்த்தும் சிங்காரம் வேகமாக வந்தான். “என்ன அண்ணே கொஞ்சம் பொறுத்துப் போயிருக்கலாம். வீட்டுல அக்காகிட்டே சொன்னேன். கோடிப்புற ‘காவாயை ‘ ஆழமா வெட்டனும். அப்பத்தான் மூத்திரம் மழதண்ணியெல்லாம் சொவத்துக்கு ஏறாம கானுல போவும். கட்சிக்காரன்கிட்டே சொல்லிப் பாத்தேன். எவனும் கண்டுக்க மாட்டேங்கிறான். நான் என்ன பண்ண. சொல்லுங்க பாக்கலாம் . சரி நில்லுங்க வேலுக்கிட்டே பேசிட்டு வாறன்” ஆறுமுகம் தலையை அசைத்தார். அவனிடம் பேசி ஒன்றும் ஆகப்போவதில்லை என்பதே அவர் எண்ணமாக இருந்தது.

ஸ்டேசன் உள்ளேபோய் சிறிதுநேரம் கழித்துவந்த சிங்காரம், “அண்ணே பேப்பரும் பேனாவும் வாங்கணும். ஒரு நூறு ரூபாய் கொடுங்க. ஏட்டு கேட்டாரு.” ஆறுமுகம் தன் பாக்கெட்டை தடவி அழுக்கடைந்த ஐந்து ரூபாய்… பத்து ரூபாய் நோட்டுக்களை எடுத்து எண்ணிக்கொடுத்தார். அவனை கெட்டமாதி ‘ஏசனும்’போல இருந்தது. பொறுத்துப்போவோம் என ஆறுமுகம் தனக்குள் சொல்லிக்கொண்டார். சிங்காரம் பணத்தை வாங்கிக்கொண்டு கடைத்தெருப் பக்கம் போனான். அவன் எங்கே போவான் என்பது ஆறுமுகத்திற்கு ஏற்கனவே தெரிந்திருந்தது . சாரல் காற்று விசிறியடித்தது. போலீஸ் ஸ்டேசனின் தாழ்வாரத்தில் ஒடுங்கிக்கொண்டு நின்றவாறு டவுனை பார்த்தார். மழைநீர் ரோடெங்கும் இழைந்து பள்ளம்நோக்கி ஓடியது. மழைநீர் இப்படி ஓடினால்கூட பரவாயில்லை. மூத்திரமாக இருந்தால் என்ன செய்வது.

வனங்களும் தேயிலைத் தோட்டங்களும் படர்ந்துகிடந்த நீலகிரியின் ஒரு மலையின் இடுப்பில் ஒதுங்கி கிடந்தது அந்த காலனி. புல்லு புதர்களாகவும் குண்டும் குழிகளாகவும் கிடந்த அந்த இடங்களில்தான் இரவோடு இரவாக குடிசைகள் அடித்தனர். இரவு அடித்த குடிசைகள் பகல் வேளைகளில் அதுவும் பிடுங்கி எரியபட்டது. சில இடங்களில் தீ வைக்கப்பட்டது. சிலோன் அகதிகளுக்கு இங்கு இடம் இல்லை என உள்ளூர் மக்களால் விரட்டப் பட்டனர். துப்பாக்கி சூடுகூட நடந்தது. ‘ நாங்கள் அகதி இல்லை இது எங்கள் ஊரு’ என்று கண்ணீர் மல்க கதறியபோதும் கேட்க ஆளில்லை. குடிசைகளைத் தேடி போலீஸ் ஜீப்புகள்தான் வந்தன. இரவு வந்தாலே ஆண்களுக்கு பயம் தொற்றிக்கொண்டது. அவர்கள் வீட்டில் படுக்கவில்லை. மலைகளுக்கு போனார்கள். தேயிலைத் நிரைகளில் படுத்து அதிகாலையின்போதே வீட்டிற்கு வந்தனர். இரவு நேரங்களில் வீட்டிற்கு வந்த போலீசார் பெண்கள் மட்டுமே வீட்டில் இருக்க ‘ஏதோ பரிதாபம் காண்பித்து எல்லோரையும் ‘விட்டுட்டு’ போனார்கள். இப்படியே அல்லும்பகலுமாக பல மாதங்களாக… பல வருடங்களாக போராடி ‘அடித்த’ குடிசைகள்தான் காலனிகளாக நீலகிரி மலைகளில் உருவானது. அதுவும் ஒன்றையொன்று இடித்துக்கொண்டு, மலைச்சரிவுகளில் நின்றன. படிக்கட்டுகளில் பாத்திகள்போல அமைந்த குடிசைகளிடையேதான் கழிவுநீர்க் கால்வாய்களும் , பெருமழையின்போது வெள்ளமும் கோடிப்புறங்களிலும் வழிந்தோடின. பள்ளம் கண்டபக்கம் பாய்வதுதானே நீரின் இயல்பு. ஆனாலும் பலருக்கு ‘ஏவுட்டு வீட்டுக்கு தண்ணி ‘வரக்கூடாது; ‘பீலி வரக்கூடாது ; குப்பை விழக்கூடாது, என்று சண்டைகள் போட்டனர் . ஊத்தை பேச்சுக்கும் குறைவில்லை. சண்டைகள் இல்லாத கிழமைகள் இல்லை. வேலு வீட்டில் கோடிப்பக்கம் பெய்யும் மூத்திரம்

மழைக்காலங்களில் வாங்கிகளில் வழிந்து கீழிறங்கின. ஆறுமுகம் வீட்டின் கோடிப் பக்கமும் வழிந்தோடின. பச்சைமண்ணில் வைத்த செங்கல் சுவர் நனைந்து ஈரம் வீடெங்கும் பரவின. பெருமழைக்கு சில குடிசைகளும் இடிந்துபோனது.

“ஏங்க இந்த மேல்வீட்டுக் காரனுக்கு கொஞ்சம் சொல்லுங்க . கெழமையான போதும் சாராயம் குடிக்க மட்டும் காசு இருக்கு . அந்த கானை வெட்டமாட்டானா. மூத்திரம் நாத்தம் பொறுக்கமுடியல. ‘தண்ணிவென்னி குடிக்கவே அய்யரவா’ இருக்கு. குடிசை வீடா இருந்தாலும் சுத்த பத்தமா இருக்கணும். மனுஷனுக்கு நோவுநொடின்னு வந்தா, நமக்கிட்ட கட்டு கட்டா பணமா இருக்கு ஆஸ்பத்திரி போய் பாக்க. கவுருமெண்டு ஆஸ்பத்திரிதான் நமக்கு கெதி ” பூரணம் அடிக்கடி சொல்லும் வார்த்தை அது. அதுதான் சண்டையாக முடிந்தது.

ஆறுமுகம் கவாத்துக்கு போயிருந்தார். ஓவருக்கும் வெட்டினால் செடிகள் எண்ணிக்கை கொஞ்சம் கூடும். ‘மேமிச்சமான ‘ செலவுகளுக்கு ஆகும் என்று இருட்டும்வரை கவாத்து வெட்டிவிட்டு காலனிக்குள் நுழைந்தார். வழக்கம்போல பீலிக்கரையில் சத்தமாக கிடந்தது. வேறு ஒரு குரலும் கேட்டது. அது பூரணத்தின் குரல். வேகமாக மேடேறிப் போனார். குடுமிகளை பிடித்து உருளாத குறையாக பூரனத்திற்கும் வேலு சம்சாரத்திற்கும் சண்டை நடந்தது. வழக்கம்போல காலனி ஜனம் வேடிக்கை பார்த்தது. மேல்வீட்டிலிருந்து ‘வாங்கி’யில் நின்றவாறு மீனாட்சி கெட்ட ராங்கியில் பேசினாள். பதிலுக்கு பதிலாக பூரணமும் பேசினாள்.

“ஏய் வேலு இது ஒனக்கே நல்லாருக்கா எத்தனை கிழமையா என் சம்சாரம் உன்கிட்ட சொன்னா அந்த கோடிப்புற கானை ஆழமா வெட்டக் கூடாதா . வீட்டுக்கு ஆம்பிளை நீதானே செய்யணும்”

“ஆமா இவரு பெரிய கலெக்ட்டரு எனக்கு உத்தரவு போடுறாரு. பொம்புலய பேச விட்டுட்டு பேச வந்திட்டான்” வேலு நிக்க முடியாத அளவிற்கு போதையில் இருந்தான். அவன் தள்ளாடி ‘வாங்கி’யிலிருந்து ஆறுமுகம் கூரைமீதே விழுந்துவிடுவான் போலிருந்தது அவனின் தள்ளாட்டம். சிலர் அவனை கைத் தாங்களாக பிடித்தனர். திமிறிகொண்டு ஏசத் தொடங்கினான்.

“டேய் ஆறுமுகா வாடா மேல. பொம்புள சீலைக்குள்ளே நுழைஞ்சிகிட்டியா “

ஆறுமுகத்திற்கு ஆத்திரம் பொறுக்கமுடியவில்லை.

“டேய் கவாத்து கத்திதான் இருக்கு பாத்துக்க. உசுரு பத்திரம் ” ஆறுமுகம் பேக்கிலிருந்து கத்தியை எடுக்க பூரணம் அவரைத் தடுத்து பேக்கை பிடுங்கி ஒழியவைத்தாள்.

“எல்லாம் உன்னால வாறதுடி…வாயை குடுக்காதேன்னு சொன்னா கேக்குறியா ” பூரணத்தையும் ஆறுமுகம் ஏசினார்.

“அப்ப குப்பைக் குழியா வீடு கெடக்கட்டும். அவ குப்பையையும் கூட்டி நம்ம வாசலுக்கு தள்ளட்டும். மூத்தரம் பேஞ்சு கோடிப்பக்கத்தை நாறடிக்கட்டும். வீட்டுக்குள்ள வந்து பேலச் சொல்லுங்க. இனி அதுமட்டும்தான் பாக்கி . எத்தனை நாள் சொல்லுறது. “

” இப்ப வாயை மூடுறியா இல்லையா ” ஆறுமுகம் ஓங்கி அதட்டினார். துணிகளை அள்ளிக்கொண்டு

முனகிக்கொண்டே பீலிக்கரைபக்கம் போனாள் பூரணம். மேல்வீட்டில் சத்தம் அடங்கினாலும் வேலு மட்டும் கத்திக்கொண்டிருந்தான். “கவாத்துகத்தில வெட்டுவியோட நீ. ஒனக்கு நாளைக்கு ஒரு ‘பாடம் படிச்சு ‘ காட்டுறேன்டா விடியட்டும் ” வேலு திரும்ப திரும்ப அதை அன்று ஊரடங்கும்வரை சொல்லிக்கொண்டிருந்தான். காலையில் எழுந்து வேகமாக போனான் . போனவன் ஆறுமுகம் வீட்டை பார்த்த பார்வையே சரியில்லாமல் இருந்தது. ஆறுமுகம் அதை கவனித்தார். அவர் நினைத்ததுபோலவே அவர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டிருந்தது.

அன்றைய பொழுதுமுடிந்துபோயிருந்தது. மலைகளில் இருள் கவிழத் தொடங்கியது. இனிமேலும் விசாரனை நடக்கும்ங்கிற நம்பிக்கை ஆறுமுகத்திற்கு இல்லை. மலைக்கு போயி யிருந்தாலாவது ஒரு நூறு தேயிலைச் செடியை வெட்டியிருக்கலாம். கூலி கிடைத்திருக்கும். எல்லாம் போச்சே என்று ஆறுமுகத்திற்கு ஆதங்கமாக இருந்தது. போலீஸ் ஸ்டேசனுக்குள் வண்டிகள் போகும்போதெல்லாம் ஓடிப்போய் எட்டிபார்த்தார். யாரும் கூப்பிட்டபாடில்லை.

சிங்காரம் வந்தான். அவனோடு வேலுவும் உள்ளே போனான். ஏதேதோ குசுகுசுத்து பேசிக்கொண்டு அவர்கள் வெளியே வந்தனர்.

“அண்ணே நம்மள விசாரிக்க இங்க யாரும் இல்லை. இன்ஸ்பெக்டர் நாளைக்குத்தான் வருவாராம் வாங்க வீட்டுக்கு போகலாம்”

“நாளைக்கும் வரணுமா வேலை கெடுமே” அதுக்கு நான் என்ன அண்ணே பண்ணுறது போலீஸ் கேசுன்னா அப்பிடித்தான் இருக்கும். சரி கோவிச்சுக்காம இரு நூருபாய் காசு குடுங்க ” சிங்காரத்திற்கு என்னபதில் சொல்வது என்றே ஆறுகத்திற்கு தெரியவில்லை. அவர் முகத்தில் ஆத்திரத்தின் ஆங்காரத்தை சிங்காரத்தால் அந்த மங்கிய பொழுதில் பார்க்க இயலவில்லை. கையில் எஞ்சியிருந்த சில ரூபாய் நோட்டுக்களையும் எடுத்துக்கொடுத்துவிட்டு காலனி நோக்கி நடந்தார். பணத்தை வாங்கிக்கொண்ட சிங்காரத்தின் கால்கள் சாராயகடையைநோக்கி நடக்க வேலுவும் அவனோடு நடந்துபோனான். அவன் ஆறுமுகத்தை கேலியாக பார்த்த பார்வையைசொல்லி அன்று உறங்கும்வரை பூரணத்துடன் கதைத்துக் கொண்டிருந்த ஆறுமுகம் மீண்டும் பூரணத்திடமே அந்த கதை வந்து நின்றது. அதுதான் அவளுக்கு பெரிய ஆத்திரத்தை கிளப்பியது.

“நீ கொஞ்சம் பொறுத்துப் போயிருக்கலாம் உன் வாயும் சரியில்ல”

“புள்ளைக படுத்துகிடக்குது இல்லேன்னா கெட்டமாதிரி பேசிப்புடுவேன் ஆமா. அங்க சுத்தி இங்க சுத்தி என்கிட்டேயே வாரியா நீ ” பூரணம் போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு திரும்பிபடுத்துக்கொண்டாள்.

“உனக்கு என்னா தெரியும் அலையிரவனுக்குதானே வருத்தம் தெரியும் ” ஆறுமுகத்தின் பேச்சை அவள் சட்டை செய்யவில்லை. அவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. அடுத்த நாளும் போலீஸ் ஸ்டேசன் போகவேண்டுமே. வெட்டி ‘குறைபோட்டுவிட்டு வந்த கவாத்து மலையை நினைத்த ஆறுமுகத்திற்கும் உறக்கம் வரவில்லை. பொழுது விடிந்தும்கூட பூரணம் ஆறுமுகத்திடம் ‘முகம் கொடுத்து ‘ பேசவில்லை. அன்றைய செலவுக்கு என்ன செய்வது டவுனுக்கு போனால் என்னென்ன

செலவு வருமோ என்று நினைத்தவர் பரிதாபமாக பூரணத்தை பார்த்தார். அவள் அவரை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. தூக்கு சட்டிகளையும் பைகளில் எடுத்துகொண்டு கொழுந்துக் கூடையை தலையில் மாட்டியவள்

“இந்தா இருக்கு. இத வச்சி என்னமோ பண்ணிட்டு வாங்க . இதத்தவிர என்கிட்டே ஒத்தைபைசா இல்ல ” சில ரூபாய்த் தாள்களை ‘சாமிதட்டில்’ வைத்துவிட்டு வீட்டைவிட்டு இறங்கி தோட்டம்நோக்கி போகும் ஜனங்களோடு கலந்தாள்.

“வேணுமிண்ணே அலைய வைக்கிறானுக நாசமா போனவனுங்க. எல்லா பயலும் ஒண்ணுக்குள்ள ஒண்ணா திரிஞ்சி த்ரிக்ஸ் பண்ணுறானுக. அந்த நாட்டுல தொரைமாரோட திரிஞ்சிகிட்டு, கங்காணி மாறுக த்ரிக்ஸ் பண்ணுறமாதிரிதான், இந்த ஊருல தலவருமாருகளும். எல்லாரும் ஏமாத்துக்காரனுங்க… எம்புருஷன அநியாயமாக ‘கேசுல’ மாட்டிவிட பாக்குறானுக நாசமாத்தான் போவானுங்க ” ஆற்றாமையால் பூரணம் புலம்பிக்கொண்டே போனாள். கூடவந்த பொம்புள ஆட்கள்தான் தைரியம் சொன்னார்கள். கவாத்து ஆட்கள் புறப்பட்டு காலனியைவிட்டு இறங்கிப்போவதை பார்த்த ஆறுமுகத்திற்கு மனம் கனத்தது. இன்னும் எத்தனை நாள் அலையனுமோ விதிவிட்ட வழி என்று …….நடந்து போனார்.

போலீஸ் ஸ்டேசனில் அன்றும்கூட்டமாகவே இருந்தது. கூட்டத்தை பார்த்தததுமே ஆறுமுகத்திற்கு இன்றும் விசாரணை இருக்காதுபோல என நினைத்தவர் ஏக்கமாக சிங்காரத்தை பார்த்தார்.

“ஸ்டேசன்னு வந்தா அப்படித்தான் அண்ணே இருக்கும் . உங்களுக்கு தெரியாதா ” என்றான் அவன்.

“அதுக்கில்ல சிங்காரம் கவாத்து வெட்டுனவாக்குல குறையா கெடக்கு. இந்த கிழமைக்கு ‘செலவு’ வாங்கவும் பணம் இல்லை. எப்போ வரணும்னு கேட்டு சொல்லுப்பா அன்னிக்கி வந்திடுறேனே” கெஞ்சாத குறையாக கேட்டார் ஆறுமுகம்.

“அதுக்கு இல்லேண்ணே, திடீர்னு இன்ஸ்பெக்டர் கூப்பிட்டா அந்த நேரம் நீங்க இல்லன்னா என்னைய புடிச்சிகிட்டு ஏசுவாங்க … அப்புறம் பெரிய கேசா போட்டு விட்டுருவாங்க. சண்டை போட்ட நீங்கதான் ஒத்துப்போவனும். ஸ்டேசனுக்கு வந்திட்டா, இனி அவங்க சொல்றதைத்தானே கேட்கனும் “

“அப்படி என்னய்யா பெரிய குத்தம் செஞ்சுபுட்டேன். காலனிகள்ல நடக்காததா . நீதான் ஊரு தலைவரு நீ வேலுக்கிட்டே பேசிப்பாரேன். வேலு என்ன தெரியாதவனா. நடந்தது நடந்திரிச்சு நாமலே பேசிமுடிச்சிக்கலாம்.” ஆறுமுகம் அப்படி சொன்னதும் கொஞ்சம் உற்சாகமாக பேச ஆரம்பித்தான் சிங்காரம்.

“அண்ணே நீங்க உள்ளே வரவேணாம் . வெளியேயவே நில்லுங்க இந்தா வந்திடுறேன்”

இன்ஸ்பெக்டர் அறைக்குள் நுழைந்தான் . அவன் உள்ளே நடந்துபோகும் தோரணையே அவனுக்கு எந்த அளவிற்கு ஸ்டேசனில் ‘செல்வாக்கு’ இருக்கிறது என்பதை உணர்த்தியது.

“என்னய்யா சிங்காரம்…. என்ன சொல்றான் உங்க ஊருக்காரன் “

“அய்யா நாங்களே பேசிமுடிச்சிக்கிறலாம்னு….” தலையை சொரிந்தான் சிங்காரம் .

“யோவ் எங்களுக்கு வேற வேலை இல்லபாரு. நீங்களே கம்பளைண்டு கொடுப்பிங்க அப்புறம் ஒத்துப்போய்டுவிங்க . என்ன விளையாட்ட பண்ணுறிங்க. யாரு புகாரு கொடுத்தது?”

“வேலுங்க சேர் “

“அவன் எங்கய்யா”

” வெளியில நிக்கிறாரு அய்யா “

” போய் கூட்டிகிட்டு வா … போ “

சிங்காரம் வெளியே வந்து வேலுவிடம் ஏதோ கிசுகிசுத்தான். ஆறுமுகம் அண்ணே அய்யா கூப்பிடுறாரு உள்ள வாங்க ” சிங்காரம் அழைத்த தோரணையிலேயே அவனின் களவாணித்தனத்தை ஆறுமுகத்தால் உணரமுடிந்தது.

“என்னய்யா கவாத்து கத்தி வச்சிருந்தா நீ பெரிய ரவுடின்னு நெனப்பா. தூக்கி உள்ள வைக்கவா உன்ன கொடூரமான ஆயுதம் வச்சி தாக்க பாத்திருக்க இது எவ்வளவு பெரிய ‘கேஸ் ‘ தெரியுமா “

“நான் திட்டமிட்டு அப்படி பண்ணலங்க அய்யா அவங்க பேசின ஊத்தை பேச்சை தாங்க முடியாமத்தான் ….. அதுவும் வேணுமின்னு பண்ணலங்க அய்யா ” நடுக்கத்தோடு ஆறுமுகம் பேசினார்.

“ஓ …நீ எனக்கே சட்டம் சொல்லி தாரியா ஹூம் …. கான்ஸ்டபில் இந்த ஆள அங்கே உட்கார வைய்யியா ” எழுந்து வந்த ஏட்டு ஆறுமுகம் தோளில் கையை போட்டு அறையின் ஒரு மூலைக்கு தள்ளிக்கொண்டு போனவன். ” யோவ் அய்யாகிட்டே எதுவும் பேசாத எல்லாம் உங்க ஊரு தலைவரு சிங்காரத்துகிட்டே சொல்லியிருக்கேன் . நீ பேசாம இங்க உட்காரு.” ஏட்டு சூசமாக ஏதோ சொல்ல வருகிறார் என்று மட்டும் புரிந்தது. வேலு ஆறுமுகத்தை ஏளனமாக பார்த்ததும் ஆறுமுகத்திற்கு ஆற்றாமையும் அவமானமும் ஓன்றுசேர கண்ணீரே வந்துவிட்டது. வேறு ஏதோ இரு நபர்கள் கூனிக்குறுகி நிற்க இன்ஸ்பெக்டர் ஊத்தைபேச்சில் ஏசிக்கொண்டிருக்க ஒரு கனம் ஆறுமுகத்திற்கு கண்கள் இருளடைந்து வந்தது. சிங்காரமும் வேலுவும் காணாமல்போயிருந்தனர். பொழுதுபோய்கொண்டிருக்க உடலெல்லாம் நடுக்கமும் பயமும் உறைந்திருக்க எல்லோரையும் வேடிக்கை பார்ப்பதுவும் ‘வாக்கிடாக்கி’ உத்திரவுகளும் ஆறுமுகம் காதில் ஒலித்தன. தாயகம் திரும்பும்போது இலங்கைதொடங்கி ராமேஸ்வரம் வந்திறங்கிய நாள்முதலாக இப்படி குந்தியிருந்த இடங்களும் அலைக்கழித்த அதிகாரிகளும் நினைவில் வந்துநிற்க ஓங்கி கதறி அழனும்போல இருந்தது ஆறுமுகத்திற்கு. அடுத்து என்ன நடக்கும் என்று நினைத்துகொண்டிருந்தவர் வெளியே எட்டிப் பார்த்தார் . தேயிலை மலைகள் இருளோடு இருளாக மறைந்துகொண்டிருந்தது.

சற்று நேரத்தில் சிங்காரமும் வேலுவும் வந்து நின்றனர். இருவரும் நிற்கும் நிலையே வழமைபோல கொஞ்சம் தடுமாற்றம் இருந்தது. ஏதோ ஒரு அறைக்கு போனவன் வேகமா வந்தான்.

“அண்ணே நீங்க வாங்க . அய்யா போகச் சொல்லிட்டார் வெளியே நில்லுங்க வாறன்”

அவனை ஏக்கமாக ஆறுமுகம் பார்த்தார். “அண்ணே அதெல்லாம் விடுங்க அண்ணே. எல்லாம் நான் பாத்துக்கிறேன் ” அவனும் ஏட்டுபோல ஏதோ பீடிகை போடுறான் என்பது ஆறுமுகத்திற்கு தெரிந்தது.

“யோ ஊருத் தலைவரு சிங்காரம் இங்க வாய்யா நீ சொன்னதால விடுறேன் இல்லண்ணா உள்ளே வைக்க வேண்டியிருக்கும். ஏய்யா… வேலு நீயும்தான் ரொம்ப லொள்ளு பண்ணியிருக்க” வேலுவும் சிங்காரமும் கொஞ்சம் பணிவாக குனிந்து நிற்க வெளியே போன ஆறுமுகம் நடக்கும் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டே நின்றார். வேலுமட்டும் வெளியே வந்தான். அவன் பின்னால் வந்த சிங்காரம் ஆறுமுகத்திடம் வந்து நின்றான்.

“அண்ணே ஏதோ நமக்கு நல்ல காலம் . நான் சொன்னதால அய்யா விட்டுட்டார். ‘கேஸ்’ எதுவும் போடலையாம் ஆனா …..” சிங்காரம் தலையை சொரிந்தான். ஏட்டுவும் கூடவந்து நின்றான் .”இங்கே என்னய்யா கூட்டம் மறுபடியும் . ஏய் சிங்காரம் உள்ளே வந்திட்டு போ ” சொல்லிவிட்டு ஏட்டு உள்ளே போனான்.

சிங்காரம் கேட்பதற்கு முன்பே, பூரணம் கொடுத்த பணத்தை எடுத்துக்கொடுத்தார் ஆறுமுகம். சனியன் இத்தோடு தொலையட்டும் என்று நினைத்தவர் காலனி நோக்கி நடந்தார். “எவனெவனோ ஒப்பந்தம் போட்டுட்டு, இங்கே கொண்டுவந்து இந்த கரையில கொட்டிட்டு போய்ட்டானுங்க ஒழுங்கா ஒரு இடத்தை கொடுத்து இருந்தா, நாம ஏன் கண்ட கண்ட நாய்கிட்டே லோல்படனும்” ஆறுமுகம் முனகிக்கொண்டே நடந்தவர் மலைகளை பார்த்தார். கவாத்து வெட்டி வாங்கிசெலவான பணத்தை ‘மூத்திரச் செலவு ‘ கணக்கில்தான் வைக்கவேண்டும் என நினைத்தார். மங்கிய அந்தியில் தெரியும் காலனியை பார்த்தார். வழமைபோல கழிவுநீரில் கலந்த மழைநீர் காலனிகளின் ஊடாக வழிந்துகொண்டிருந்தது. எங்கோ பார்த்த ஓர் அழகிய வீட்டின் தோற்றம் ஆறுமுகத்தின் மனத்திரையில் நிழலாடிக்கொண்டேயிருந்தது .

– லண்டன் விம்பம் சிறுகதை போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற சிறுகதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *