இணக்கம் அறிந்து இணங்கு!
(ஆத்தி சூடி கதைப் பாடல்)

இரண்டு இனிய நண்பர்கள்
இருட்டும் மாலை வேளையில்
விறகு வெட்ட காட்டுக்கு
வேக மாகச் சென்றனர்!
இரண்டு பேரில் ஒருவராம்
மரமேறத் தெரியா மனிதராம்
மற்றவரோ மரமேறும் கலையிலே
வல்ல நல்ல மனிதராம்!
காட்டில் நடந்து போகையில்
இருட்டுக் கட்டும் நேரத்தில்
கரடி ஒன்று அவர்களை
நெருங்க நேரே வந்தது!
மரமேறத் தெரிந்த மனிதனோ
ஏறத் தெரியா மனிதனை
தவிக்க விட்டுத் தாவியே
மரத்தில் ஏறி மறைந்திட
ஏறத் தெரியா மனிதனோ
இதயம் தவிக்க தரையிலே
இறந்த மனிதன் போலவே
இருகால்கள் நீட்டிப் படுத்திட
கரடி அவனை நெருங்கியே
காதுகளை நுகர்ந்து பார்த்தது
செத்த பிணமோ என்றெண்ணி
விட்டுவிட்டுச் சென்றது.
கரடி போன கணத்திலே
மரத்தி லிருந்து இறங்கிய
மனிதன் தனது நண்பனை
நெருங்கிக் கேட்டான் நேர்த்தியாய்.
கரடி உனது காதிலே
சொன்ன தென்ன சொல்லுவாய்
என்று கைகள் குலுக்கினாள்
இனியவன் போல நடித்தனன்.
இறந்தது போலக் கிடத்தவன்
‘மரமேறிக் கொண்ட மனிதனை
எண்ணி வெட்கம் கொண்டபின்
இந்த விதமாய் சொல்லினன்.
‘ஆபத்திலே கைவிடும்
அற்ப மனிதன் நட்பினை
அடியோடு விட்டுவிடு
அகன்று போகச் சொன்னது!’
என்று சொல்லி அவனையே
பிரிந்து சென்று பிழைத்தனன்
அன்று அவ்வைக் கிழவியும்
அறிவு சொன்ன கதையிது!
![]() |
இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க... |