வெகுளிப்பெண்கள்!

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: September 30, 2025
பார்வையிட்டோர்: 142 
 
 

கயாவின் கண்களில் கண்ணீர் கரைபுரண்டு ஓடியது. இருபது வயது வரை இப்படி ஒரு போதும் அழுததில்லை. நம்பிக்கை துரோகம் என்பதை வார்த்தையாகக்கேட்பதை விட, வாழ்க்கையில் பார்ப்பவர்களுக்குத்தான் அதன் வலியை உணர முடிகிறது என்பது புரிந்தது.

முகன் எனும் பெயரைக்கேட்டாலே முன்பு ஆனந்தம் மனதில் ஏற்பட்டது மாறி ஆத்திரமாக வந்தது. அவனைக்கண் முன் பார்த்தால் அடித்து துவைத்து, கடித்துக்குதறி, காறித்துப்பி விட்டாலும் ஆத்திரம் தீராது என்பது போல் நினைக்க, நினைக்க நிதானத்தை இழக்கச்செய்தது அவன் மீதுள்ள கோபம்.

‘எத்தனை வெகுளியாக இருந்திருக்கிறோம்? வெகுளிகளைத்தானே ஒரு கயவனால் ஏமாற்ற முடிகிறது. ஆண் வெகுளியாக இருந்தால் பணத்தால் ஏமாறுகிறான். பெண் வெகுளியாக இருந்தால் மனதால் ஏமாறுகிறாள் என்பது ஏமாற்றுக்காரர்களுக்கு நன்றாகத்தெரிந்திருக்கிறது . இப்போது நினைக்கத்தோன்றுவது ஏன் அப்போது தோன்றாமல் போனது?’ என நினைத்தபோது கண்ணீரின் வேகம் மேலும் அதிகரித்தது.

நினைத்து, நினைத்து உடல் வாடியது போக உயிரும் வாடியதை உணர முடிந்தது. ‘சாதாரண நம்பிக்கையா? வாழ்வே அவன் மட்டும் தான் என நினைத்தாயே மனமே….’ மயக்கம் வருவது போலிருந்தது. 

பேருந்து நிறுத்ததில் பலரும் தன்னைப்பார்ப்பதாகத்தோன்றிய போது அடையாளம் தெரியாமலிருக்க கைப்பையிலிருந்த முகக்கவசத்தை எடுத்து அணிந்து கொண்டாள்.

‘பள்ளியில் படிக்கும் போது கொரோனா காலத்தில் அணிந்தவள், பின் தற்போது தான் முகக்கவசம் பயன்படுத்துகிறாள்.

‘கொரோனாவைப்போல கண்களுக்குத்தெரியாத நோய் தான் காதல்’ என தனக்குத்தானே பைத்தியகாரியைப்போல் பேசினாள்.

“கயா….”

“ம்…”

“நான் உன்னை முதலாகப்பார்த்தது ஞாபகம் இருக்கிறதா….?”

“மறக்க முடியுமா….? நான் மண்ணில் வழுக்கி விழாமல் நீ பிடித்தாய். ஆனால் நான் அப்போதே உன்னில் வழுக்கி விழுந்து விட்டேன்… “

“கவிதையாகச்சொல்லுகிறாய். என் காதல் தேவதை நீ. காதலும் ஒரு வித போதைதான். மதுவின் போதை உடலை மயக்கும். மாதுவின் போதை உள்ளத்தை மயக்கும் என்பதை இப்போது நன்றாகப்புரிந்து கொண்டேன். இந்தப்போதையை அறியாதவனே அந்தப்போதைக்கு அடிமையாகிறான். மதுவை அருந்தினால் தான் போதை ஏறும். மாதுவின் அருகில் இருந்தாலே போதை ஏறுகிறது. அணைக்கும் போது ஏற்படும் சுகத்தை விட நினைக்கும் போதும் சுகம் அதிகம் தருவது மாது தான்…” ஏதேதோ பிதற்றினான். கயா முகனின் புகழ்ச்சியில் மயங்கினாள்.

இதுவரை தன்னை பெற்றோர் உள்பட ஒருவர் கூட புகழ்ந்து பேசிக்கேட்காததால் முகன் புகழ்ந்தது மிகவும் பிடித்துப்போனது.

நன்றாகப்படிப்பவனை விட பெண்களுக்கு தங்களை நன்றாக பாராட்டிப்பேசி நடிப்பவனைப்பிடித்துப்போகிறது. நடிப்பதும், பிடிப்பதும் வெகுளிப்பெண்களிடம் தான் எடுபடுகிறது என்பதை பாதிப்புக்குப்பின்பே புரிந்து கொள்ள முடிகிறது.

பல நாட்கள் காதல் வானில் தன்னுடன் சிறகடித்துப்பறந்தவன் திடீரென பேசாமல் ஒதுங்கிச்சென்றதற்கு காரணத்தை நினைத்தாலே அருவருப்பாக இருந்தது.

பைக்கில் வந்த முகனை கைநீட்டி தடுத்து நிறுத்தினாள். பின் சீட்டில் அவனை இறுக அணைத்தபடி அமர்ந்திருந்த மாயா கயாவைப்பார்த்து ஏளனமாகச்சிரித்தாள்.

“தப்புப்பண்ணின நாங்களே மாஸ்க் போடாம சுத்தற போது உத்தமப்பொண்ணு நீ எதுக்கு கொரோனா இல்லாதப்ப மாஸ்க் போட்டிருக்கே? உனக்கென்ன பைத்தியமா…?” கயாவைப்பார்த்து கிண்டலாகக்கேட்டான்.

“ஆமாண்டா…. எனக்கு பைத்தியம் தான்…. அதுக்கு வைத்தியம் பண்ணச்சொல்லத்தான் நிறுத்தினேன். பண்ணறியா….? ஹ….ஹ….ஹ… ” என உண்மையான பைத்தியகாரி போலவே சிரித்தவள், பின் சீறினாள்.

“உசுரு மாதிரி நெனைச்சனே…. மசுரு மாதிரி புடுங்கிப்போட்டுட்டு போயிட்டே….?”

“கவிதை…. கவிதை…. கோபத்துலயும் கவிதை கொட்டுது…. உச்….உச்… பாவம். என் கிராமத்து தேவதையே… உன்னை மராமத்து செய்து பார்த்தேன்… உன் தோற்றத்தில் மட்டும் தான் வந்தது மாற்றம். என் விருப்பத்தைச்சொன்னதும் வந்ததே கிராமத்துப்பெண்ணின் சீற்றம்…. மசிவாய் என நினைத்துக்கேட்டேன். மறுத்து விட்டாய்…. அதனால் உன்னை நானும் வெறுத்து விட்டேன்… மாயாவைப்பார். உல்லாச வாழ்வின் சல்லாபம் தெரிந்தவள்.சொர்க்கலோகத்துக்கு சென்று விட்டு வருகிறோம்…” மாது போதையுடன் மது போதையிலும் பேசினான்.

வீட்டிற்கு சென்றவள் கைப்பையை வீசி எறிந்து விட்டு கட்டிலில் போய் வேதனையில் குப்புறப்படுத்துக்கொண்டாள். வேறு என்ன செய்வாள் வெகுளி….?

‘நரகத்தை சொர்க்கம் என்கிறான். நாற்றத்தை போதை என்கிறான்’ வேதனை தந்த அசதியில் உறங்கிப்போனாள் கயா.

கதையைப்படித்து விட்டு உறங்கிப்போன காலையில் எழுந்து கல்லூரியின் முதல் நாளில் அடியெடுத்து வைக்க ஆர்வமுடன் சென்றாள் ரியா.

பேருந்திலிருந்து இறங்கியவுடன் கல்லூரி நுழைவாயிலிலேயே பைக்கில் நின்று கொண்டு பெண்களை நோட்டமிட்டுக்கொண்டிருந்த ஒருவன், ரியாவின் அருகில் வந்து “ஹாய்…. ஐயம் சிகன்…” என்றான்.

சொன்னவனது முகத்தை பார்க்காமல் வெடுக்கெனத்திருப்பிக்கொண்டாள் ரியா. நேற்று முகன், கயா கதையைப் படிக்காமல் இருந்திருந்தால் வெகுளியாகச் சிரித்திருப்பாள்.

அடுத்த நிமிடம் அங்கு வந்த இன்னொரு பெண்ணுடன் பேசச்சென்றான். அவளது அலைபேசி எண்ணை தனது அலைபேசியில் பதிந்து சென்றான். 

உடனே அப்பெண்ணிடம் சென்ற ரியா, தான் நேற்று படித்த கதையைக்கொடுத்து படிக்கச்சொன்னாள். சற்று நேரத்துக்கு பின் சிகனது எண்ணிலிருந்து அழைப்பு வர, எச்சரிக்கையுடன் அவனுடன் பேசுவதைத் தவிர்த்தாள் அந்த வெகுளிப்பெண்.

கே.ஆர்.வேலுச்சாமி ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *