யாரொடு நோகேன்!





காலம் பெருங் கால் கொண்டது போல எவருக்கும் காத்திருக்காது நடந்து கொண்டே இருந்தது.
ஆனால் கல்யாணிக்கோ… காலத்தின் கால்கள் முடமாகிப்போய் நடப்பதற்குத் தயங்கித் தடுமாறுவதாய்த் தோன்றியது.. அவளைப் பொறுத்தவரையில் ஒருநாள் பொழுதுகூட கடப்பதற்கு அரியதாய் அவளது கால்களிடையே தேங்கிப்போவதாய் இருந்தது.
அவள் பெரும் பாலும் வீட்டுக்குள் முடங்கிப் போய்விட்டாள்.
முன்னர் ஏங்கி பின்னர் கிடைத்த போது மகிழ்ந்த கொலனிய பாணியில் அமைக்கப்பட்ட மாடி வீடு… தனது கம்பீரம் குறையாது உறுதியும் அழகுமாய் …பார்ப்பவர்களைக் கவர்ந்திழுக்கும் வகையில் தான் இருக்கிறது… ஆனால் அவளால்தான் அதனைக் கட்டி ஆள முடியவில்லை.
தகிக்கும் தனிமையில்… உடல் பலம் குன்றி முதுமையின் இரும்புப் பிடியில் சிக்கி… தவிக்கும் அவளுக்கு நிழல் கூட பாரமாய் கவிழ்கிறது.
அப்படியிருக்க வீடு ஒரு கேடா..?
பாலையாகிவிட்ட அவள் வாழ்வில் பசுமை தூரத்துப் பச்சையாகத்தான் தெரிகிறது.
கல்யாணியின் தகப்பன் சிவராசா ஓர் ஆங்கில ஆசிரியர். அவருக்கும் விசாலாட்சிக்கும் மூன்று பெண்கள். மாலினி மூத்தவள் .கலியாணி இரண்டாவது மகள், பாமினி மூன்றாமவள். வசதிக்குக் குறைவில்லாத குடும்பச்சூழல்…
கலியாணி படிப்பில் புலி …இதனால் சிவராசரின் பாசம் கூட அவள் மீது அதிகம் தான்.
கல்லூரியில் அவளது புத்திக்கூர்மை, செய்யும் வேலைகள் எவற்றிலும் நேர்த்தி, கீழ்ப்படிவு, தமிழ் மூலக் கல்வியால் ஆங்கிலம் மாணவர்களால் சரளமாகப் பேசவோ எழுதவோ தடுமாறி நின்ற நிலையில் அதனை அவள் திருத்தமாகப் பேசவும் எழுதவும் தெரிந்தமை எனப் பல காரணங்கள் இருந்தன ஆசிரியர்களின் மனங் கவர்வதற்கு… அவள் அவர்களின் செல்லப்பிள்ளையானாள்.எல்லோரோடும் இனிமையாகப் பழகும் சுபாவம்… மிகவும் பிரபலியமான அவளது கல்லூரியில் அவள் மாணவத் தலைவி.
அவள் வாழ்வின் பசுமைப் பக்கங்கள் இவை…
மாலினி படிப்பில் சராசரி என்றால் பாமினி அதற்கும் கீழ்.. மாலினிக்கு வெளிநாட்டுச் சம்பந்தம் வரவே தனது காணியில் பத்துப் பரப்பை வழங்கிக் கலியாணம் செய்து வைத்தார் சிவராசா.
பருவ வயதின் அலைக்கழிப்புக்கு என்றுமே ஆட்படுபவளான பாமினி மோகனின் கம்பீரமான தோற்றத்தில் மயங்கித்தான் போனாள்.. மோகன்
காய்கறி வியாபாரி, சிவராசரின் சபை சந்திக்கு வரக்கூடிய சமூகத்தைச் சேர்ந்தவனும் இல்லை. அந்தஸ்தாலும் சாதியாலும் தனக்கு சமமில்லாத ஒருவனை கட்டுவதற்கு சிவராசர் ஒரு போதும் ஒப்புக்கொள்ளப் போவதில்லை என்பது பாமினிக்குத் தெரியும்.
அதனால் அவள் கடிதம் எழுதி வைத்துவிட்டு மாலைப் பொழுது ஒன்றில் மோகனோடு ஓடிப்போய் விட்டாள்.
தான் தலைநிமிர்ந்து நடக்கமுடியாத பெரும் அவமானத்தைத் பாமினி தந்துவிட்டதாக சிவராசரின் மனம் விம்மிப் பொருமியது. அடக்கமுடியாத அளவு உச்சபட்ச கோபத்தில் துடித்த அவர் பாமினி உணர்ந்து வருந்த வேண்டும் என்பதற்காக ஒரு காரியத்தைச் செய்தார். அவளுக்குக் காரியம் செய்ததற்கு அடையாளமாய் அரப்பு எண்ணை வைத்து தலைமுழுகினார். அப்பொழுதும் மனம் அடங்காதவராய் மாலினிக்குக் குடுத்ததைத் தவிர்த்து முழுச் சொத்தையும் கலியாணியின் பெயருக்கு எழுதி வைத்தார் இப்படித்தான்.
கடைக்குட்டியான பாமினிக்கு குடுப்பதாக எண்ணியிருந்த வீடும் கலியாணிக்கானது.
பாமினி ஓடிப்போனதை ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் அவளைத் தலைமுழுகவோ அவளுக்கு சொத்தில் குண்டுமணி கூட கொடுக்காது விடுவதிலேயோ விசாலாட்சிக்கு சிறிதும் உடன்பாடில்லை. அவளின் கருத்துக்கோ உணர்வுக்கோ என்றுமே மதிப்பளித்தறியாத சிவராசரிடம் விசாலாட்சியின் எதிர்ப்புக்குரல் அடங்கி ஒடுங்கித்தான் போனது.
பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது பரமேஸ்வரன் என்ற சக மாணவன் கலியாணியின் காதலுக்காய்த் தவமிருந்தான். கலியாணிக்கும் அவன் மீது ஈடுபாடு இல்லாமல் இல்லை. ஆனாலும் தந்தையை மீறும் தைரியம் மட்டும் அவளுக்கு இருக்கவில்லை. பாமினி போல குடும்பத்தைத் தலை முழுக அவளால் இயலாது.
பரமேஸ்ரனின் வீட்டுக்காரர் அவள் தந்தையிடம் பெண் கேட்டு வந்தார்கள். அவர்கள் தீவுப்பகுதியைச் சேர்ந்தவர்கள் எனச் சொல்லி அந்தச் சம்பந்தத்தைத் தட்டிக்கழித்தார் சிவராசர்.
கலியாணி படிப்பை முடித்தபோது சாதகக் கட்டை எடுத்தபடி உள்நாட்டில் உத்தியோக மாப்பிளை தேடினார். உள்நாட்டுப் போரினால் பல இளைஞர்கள் வெளிநாட்டுக்குப் புலம்பெயர்ந்திருந்தனர் – சிலர் இயக்கத்துக்குப் போய்விட்டனர். படித்த உத்தியோக மாப்பிளைகளுக்குத் தட்டுப்பாடு இருந்த காலம்.அது.
கலியாணியின் சாதகத்தில் 80 சதவீதப் பாவமாம்.ஏழுச் செவ்வாய் வேறு…. சாதகங்கள் பல பொருந்திவர மறுத்தன. சில சம்பந்தங்கள் சிவராசரின் அந்தஸ்துக்குப் பொருந்தி வரவில்லை. உத்தியோகம் சரியில்லை என சிவராசரால் புறக்கணிக்கப்பட்டன. எல்லாம் பொருந்தி வந்த சில சம்பந்தங்கள் கூட பாமினியின் கலியாணத்தால் மாப்பிள்ளை வீட்டாரால் நிராகரிக்கப்பட்டன. இப்படி பத்துவருடங்கள் கடந்த நிலையில் கலியாணிக்கு கலியாணம் செய்து வைக்க முடியவில்லையே என்ற கவலையுடனேயே கண்ணை மூடினார் சிவராசர்.
கலியாணி பல்கலைக்கழக நூல்நிலையத்தில் நூலகராக வேலை செய்து கொண்டிருந்தாள். முது கன்னியான அவளை தம் மன இச்சைக்கு பலியாக்கிவிட மெத்தப் படித்த சில ஜென்மங்கள் முயற்சி செய்தன, அவர்களை அவள் தன் கடுமையான போக்கால் இலகுவாகவே கடந்தாலும் மனதில் ஒருவிதமான கசப்பு மண்டியதை அவளால் தவிர்க்க முடியவில்லை.
கணவனின் இறப்புக்குப் பின்பு .விசாலாட்சி தன் பங்குக்கு உறவினர்களிடம் சொல்லியும் தரகர் மூலமும் முயற்சித்தும் பலன் கிடைக்கவில்லை.
42 வயதில் இளமை பிறைநிலாவாய் தேய்ந்து கொண்டிருந்த நிலையில் கலியாணம் பற்றிய கனவுகள் மறைந்து கலியாணியின் மனம் வெறுமையடைந்திருந்தது. தனது உத்தியோகத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு அதனால் சற்று அமைதியடைந்தாள். ஒரு சில நட்புகள் தந்த ஆதரவுடன் ஒருவாறு அறுபது வயதைக் கடந்துவிட்டாள்,..
வேலையில் இருந்து ஓய்வு பெற்றபோது…அந்த வாழ்க்கையை அவளால் ஜீரனிக்கவே முடியவில்லை,.. அப்பொழுது தான் கோவிட் பெருந்தொற்றும் ஏற்பட்டிருந்த வேளை..அந்தப் பெரிய வீட்டில் அவள் மட்டுமே ….தகிக்கும் தனிமை ….பத்தாதற்கு உடலில் பல உவாதைகள் வேறு..வாத உடம்புக்காரி. மூட்டு வலி ஆளைக்கொல்லும் …மேல்மாடிக்கு அவள் செல்வதே இல்லை….வீட்டைத் துப்பரவாக்கி வைப்பதே பெரும் சுமையாகி… மனச்சுமையையும் அதிகரித்தது…
கோவிட் பிரச்சினை முடிந்த சமயத்தில் தான் பாமினி கணவனை இழந்த நிலையில் இந்தியாவில் இருந்து இவளிடம் வந்து ஒட்டிக்கொண்டாள். அவளும் அவளது வளர்ந்த மூன்று பிள்ளைகளும் வந்து வீட்டை நிறைத்த போது கலியாணி அடைந்த மன நிறைவுக்கு அளவே இல்லை.
ஆனால் அந்த நிறைவு நீடிக்கவே இல்லை…
கல்யாணியின் சொத்து முழுவதையும் தனதாக்கிக் கொள்ள வேண்டும் என்பதில் பாமினி குறியாக இருந்தாள். பல்கலைக் கழக நூலகராக இருந்ததால் அவளது ஓய்வூதியமும் சற்று அதிகம்தான். அதனை முழுமையாகக் கறந்துவிடுவதற்கு அவள் பலவகையில் முயற்சித்தாள். இது பத்தாதற்கு அவளது இரண்டு பையன்களான சூரியும் கரியும் செய்யும் அட்டகாசங்கள் தாங்க முடியாதனவாக இருந்தன.
எப்பொழுதும் வீட்டை மிகத் தூய்மையாக வைப்பதற்கு முயற்சிப்பாள் கலியாணி. மேல் மாடிக்கு ஏறா விட்டாலும் ஆளை வைத்து ஒரு மாதத்துக்கு நான்கு தடவைகளாவது தூய்மை செய்வித்துவிடுவாள். வீட்டின் முன்னால் அழகிய பூந்தோட்டத்தை அவள் மிகுந்த காதலோடு உருவாக்கியிருந்தாள்.
சூரியும் கரியும் வீட்டை இரண்டாக்குபவர்களாக இருந்தார்கள். கண்ட இடங்களில் உடைகளையும் சாப்பிட்ட கழிவுகளையும் பாத்திரங்களையும் போடுவது என்று இருந்தார்கள். T.V பார்ப்பது ஒன்றே பொழுதுபோக்காக கலியாணிக்கு இருந்து வந்தது. அவர்கள் வந்தபின் அதுவும் முற்றுமுழுதாக அவர்கள் வசமானது. T.Vஐ மிக அதிகமான வொலியுமில் வைப்பது வேறு கலியாணியை எரிச்சல் ஊட்டியது இவற்றை எல்லாம் கலியாணி சகித்துக் கொண்டாள். ஆனால் அவர்களின் நண்பர்கள் என்று சொல்லிக் கொண்டு வரும் சில பையன்களின் பழக்கவழக்கங்களும் செயற்பாடுகளும் சகிக்கவொண்ணாதவையாக இருந்தன .
பாமினி கூட “குமர்ப்பிள்ளை இருக்கிற வீட்ட ஏன் இந்தக் காவாலிகளைக் கூட்டி வாராய்” என்று பல தடவைகள் திட்டிவிட்டாள்.
அவர்கள் ஒரு காதால் கேட்டு மறுகாதால் விட்டு விடுவார்கள்.சற்று ஆறுதல் தரும் விடயம் என்னவென்றாள் பாமினியின் கடைசிப்பெண் சைந்தவி மட்டும் சற்று ஒழுக்கத்தைக் கடைப்பிடித்ததுதான். பாமினி குடும்பம் வந்தபோது மகிழ்ந்த கலியாணி இப்பொழுது இவர்கள் தன்னை விட்டுப் போய்விட்டால் நிம்மதியாக இருக்கும் என எண்ணமிடும் அளவுக்கு நிலமை மோசமாகி இருந்தது.
அப்பொழுதுதான் கலியாணிக்கு ஒரு யோசனை தோன்றியது. தாய் காமட்சிக்கு சிவராசர் பாமினிக்குத் தன் சொத்தில் ஒரு பிடிகூட கொடுக்காது கலியாணிக்கு முழுவதையும் எழுதியதில் உடன் பாடு சிறிதும் இல்லை, அதனால் தனது ஊரான பளையில் தனக்குச் சீதனாமாக வழங்கப்பட்ட வீட்டோடுகூடிய தென்னந்தோப்புக் காணி ஐந்துபரப்பையும் பரந்தனில் வழங்கப்பட்ட ஐந்தேக்கர் வயல்க் காணியையும் கணவனின் இறப்புக்குப் பின் பாமினியின் பெயரில் எழுதிவைத்துவிட்டா. அவ எழுதிய காலத்தில் பாமினி அகதியாகக் கணவன் பிள்ளைகளுடன் இந்தியாவுக்குப் போய் விட்டாள். அவள் பற்றிய விபரம் எதுவும் தெரியாத நிலையில் காணி உறுதியைக் கலியாணியிடம் ஒப்படைத்திருந்தா. இப்பொழுது அந்த உறுதிகளை வழங்கினால் பாமினி ஒரு வேளை பளை வீட்டுக்கு குடிபோகக்கூடும்…
கலியாணியின் ஆசை நப்பாசையாகவே முடிந்தது…
காணி உறுதியைக் கண்ட போது பாமினி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஆனால் மூன்று நான்கு கோடிகளே பெறுமதியான தனது சொத்தில் பார்க்க கலியாணியின் சொத்து மதிப்பு மூன்று நான்கு மடங்கு கூடியது. அதுவும் வீடும் அதோடு கூடிய காணியும் கடைக்குட்டியான தனக்குத் தருவதாக ஒரு காலத்தில் சிவராசர் பேசியதும் அவளுக்குத் தெரியும். கலியாணிக்கு வாரிசு இல்லாததால் கலியாணிக்குப் பின் அந்தப் பங்காவது தனக்கு வரவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாள். அவள் கலியாணியை விட்டு செல்லத் தயாராகவில்லை.
கலியாணி அனுபவித்த துன்பங்களையெல்லாம் சாப்பிடுவது போல ஒரு மாதத்தின் பின் ஒரு சம்பவம் நடந்தது.
மாலினி கனடாவில் இருந்து தன்னுடைய காணியை விற்பதற்காக வந்திருந்தாள். அப்பொழுதுதான் கலியாணிக்குச் சொந்தமாக இருந்த வீடும் வீட்டோடு இணைந்த ஆறுபரப்புக் காணியும் அருகில் இருந்த பத்துப் பரப்புக் காணியும் கலியாணியின் இறப்புக்குப்பின் மாலினிக்கும் அவள் இறக்குமிடத்து அவள் வாரிசுகளுக்குமாகக்க எழுதப்பட்டது பாமினிக்குத் தெரியவந்தது. திருநெல்வேலியில் ….இன்றைய மதிப்பில் பல கோடிகள் பெறுமதியான சொத்து,….பாமினி தந்தையால் ஒதுக்கப்பட்ட பின் அவளுடனான் தொடர்பு முற்றாக அறுபட்ட நிலையில் தனக்குப்பின்னான ஏற்பாடாக இதனைச் செய்திருந்தாள் கலியாணி.
பாமினி இதனைச் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. அவள் எரிமலையாய்ச் சீறினாள்…அவளுக்குப் பக்க பலமாக அவள் பிள்ளைகள் கரியும் சூரியும் இருந்தார்கள். கலியாணி நாலைந்து பரப்புக் காணியை பாமினி பெயருக்கு மாற்றிச் சமரசம் செய்யலாம் எனப் பார்த்தாள்.ஆனால் மாலினி அதற்குத் தயாராயில்லை…
வாய்த்தகராறு வன்முறையில் முடிந்தது. சூரி மாலினியை வெட்டும் அளவுக்குப் போய்விட்டான் . சிறு வெட்டுக்காயங்களுடன் மயிரிழையில் தப்பிய மாலினி எதையும் எழுதிக் கொடுக்காமலே கனடாவுக்குச் சென்றுவிட்டாள்.
கலியாணி பாவம் .. பொலிசுக்கும் கோட்டுக்கும் அலைகிறாள்.
பாமினி அவள் வீட்டைவிட்டும் அகலவில்லை…
தனக்குச் சொந்தமான வீட்டிலேயே கலியாணி நரக வேதனையை அனுபவிக்கிறாள். அவளுக்கு பாமினி மேல் உள்ள கோபத்தால் சொத்து முழுவதையும் தனக்கு எழுதி வைத்த தந்தையை நோவதா…
அல்லது சிறிதும் விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லாத மாலினியை நோவதா…
அல்லது வீட்டில் இருந்த படியே தன்னைச் சித்திரைவதைப்படுத்தும் பாமினியை நோவதா… அல்லது அவளுடைய விதியை எழுதிய கடவுளை நோவதா ….புரியவில்லை…
அவள் இதற்கு ஏதாவது தீர்வு கிடைக்காதா என்ற ஆதங்கத்துடன் சட்டவல்லுந்ரை நாடுகிறாள். அவள் இதுவரை உழைத்து வைத்த பணமும் தண்ணீராய்க் கரைகிறது..
கூடவே அவளின் நிம்மதியும் தான்…
வாசுகி நடேசன் யாழ்ப்பாணம், நாயன்மார்கட்டில் கலாநிதி க சொக்கலிங்கம், தெய்வானை ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். இவரது தந்தை சொக்கன் என்ற புனைபெயரில் எல்லோராலும் அறியப்படும் சிறந்த தமிழறிஞர், எழுத்தாளர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. வாசுகி யாழ் இந்துக்கல்லூரியில்த மது உயர்கல்வியைக் கற்றார். பின் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழைச் சிறப்புப் பாடமாக எடுத்து கலைமாணி பட்டதை பெற்றோர். பேராசிரியர் கா.சிவத்தம்பி, பேராசிரியர் ஆ.சண்முகதாஸ் ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் "சங்க இலக்கியங்களில் மருதத்திணையின்…மேலும் படிக்க... |