பெண்மை தவறேல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 5, 2025
பார்வையிட்டோர்: 1,005 
 
 

அந்த தொழிற்கூடம் இத்தனை நாள் வாடகை கட்டிடத்தில்தான் இயங்கிக் கொண்டிருந்தது என்று அநேகம் பேர்களுக்கு தெரியாது. அன்று, அலுவலர்களையும் தொழிலாளர்களையும் கான்பரன்சு அறைக்கு வரச் சொல்லி நிர்வாக இயக்குனர் இவ்வாராக சொன்னார்: “சிப்காட்டில் புதியதாக சொந்த கட்டிடத்திற்கு நாம் மாறப் போகிறோம். நாளை காலை ஆறு மணிக்கு பூஜை. அனைவரும் வந்துவிடுங்கள். காலை உணவு ஏற்பாடு செய்திருக்கிறேன். முடிந்தவரை இரு சக்கிர வாகனத்திலும் கார்களிலும் இருக்கைகளை பகிர்ந்து கொண்டு ஆப்செண்ட் இல்லாமல் வாங்க!”.

கூட்டம் முடிந்ததும், யார், யார் வாகனத்தை எப்படி பகிர்ந்து கொள்வது என்று அலுவலர்களும், தொழிலாளர்களும் பேசி முடிவு செய்து கொண்டனர். அருள் சார் இருக்கும் பகுதியில்தான் சங்கீதா மேடம் இருப்பதால், அவர் காரில் மேடம் வருவது என்றும் அதிகாலை 4.30 மணிக்கு சிவன் கோயில் அருகில் வந்துவிடுவது என்றும் முடிவாகி இருந்தது. ஏனெனில் நகரத்திற்கு வெளியே புறநகர் பகுதியில் சிப்காட் இருப்பதால் பயண தூரம் சற்று அதிகம்.

அதிகாலை மூன்றரை மணிக்கே எழுந்து குளித்துவிட்டு பிரதான சாலயை அடைய மணி நான்கரை ஆகிவிட்டதால் அங்கிருந்து சிவன் கோயில் வர இன்னும் கால் மணி நேரம் ஆகும் என்பதால் அருள் சாரை காத்திருக்கும்படி சங்கீதா மேடம் அலைபேசியின் மூலம் வேண்டினார். ஆனால், அருள் சாரோ காத்திருக்க மறுத்துவிட்டு கிளம்பி போய்விட்டார். மேடத்தால் அன்று பூஜைக்கு போக முடியவில்லை.

சிப்காட் புதிய கட்டிடத்திற்கு எல்லோரும் ஆஜராகி இருக்க, மேடம் மட்டும் இல்லாததால் நிர்வாக இயக்குனர் தான் அருள் சாரை முதலில் கேட்டார். “அவங்க ரொம்ப லேட் பண்ணிட்டாங்க சார்” – என்று பட்டென்று அருள் சாரிடமிருந்து பதில் வந்தது. சங்கீதா மேடம்தான் கோலம் போடுவதாக இருந்தது. சக அலுவலர் மேடத்திற்கு போன் செய்து பேசிக் கொண்டே…, “சார், அவங்கதான் பத்து நிமிஷத்துல வந்துர்றேனு சொன்னாங்களாமே. இருந்து அழைச்சுட்டு வந்திருக்கலாமே” – என்றார். “யோவ், வெயிட் பண்ணி அழைச்சுண்டு வர்றதுக்கு அவங்க என்ன என் பொண்டாட்டியா!” – என்று அருளிடமிருந்து நாராசமாக வந்த வார்த்தையை அலைபேசி மூலமாக கேட்ட சங்கீதா மேடம் துடிதுடித்துப் போனார்.

சில வாரங்களிலேயே சிப்காட்டுக்கு நிறுவனம் ஜாகை மாறியது. பணியாட்களை அழைத்து வரவும் மாலையில் வீடு சேர்க்கவும் வாகனம் அமர்த்திக் கொண்டது நிர்வாகம். யார்யாரை எங்கிருந்து எத்தனை மணிக்கு அழைத்துச் செல்வது என்ற பட்டியல் தயார் செய்து, வாகன பொறுப்பு நிர்வாகியாக சங்கீதா மேடத்தை நியமனம் செய்தார் எம்.டி. எப்போதும் அலுவலகத்திற்கு தாமதமாக வரும் அருள்சாருக்கு தன் பிறவி குணத்தை சட்டென்று மாற்றிக் கொள்ள முடியவில்லை. அவரது இலக்கு சிவன் கோயில். காலை ஆறு அரை மணி. அதற்கு அவரே ஒப்புதல் கையெழுத்தும் இட்டிருந்தார். ஒவ்வொரு இலக்கிலும் ஐந்து நிமிடங்கள் மட்டுமே காத்திருப்பு இருக்க வேண்டும் என்பது எம்.டியின் உத்தரவு.

அன்று சிவன் கோயில் முன் ஆறரை மணிக்கு வாகனம் வந்த போது அருள் சாரிடமிருந்து சங்கீதா மேடத்திற்கு போன் வந்தது. அதில் பத்து நிமிட காத்திருப்புக்காக வேண்டினார். முடியாது என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டு வாகனத்தை எடுக்க உத்தரவு பிறப்பித்தார் மேடம். அடுத்த கணமே ஓட்டுநர் அலைபேசிக்கு  அழைப்பு சென்றதும் , “சார்!….” என்றார் ஓட்டுநர். “மேடம், பத்து நிமிஷம் நிக்க சொல்றாரு அருள்”- ஓட்டுநர்.

“வெயிட் பண்ணி கூப்பிட்டு போவதற்கு அவரு என்ன என் புருஷனா?”-கோபமாக மேடம் சொல்லவும், வாகனம் புறப்பட்டது.

அன்று தாமதமாக அலுவலகம் வந்த அருள் சார் தலை கவிழ்ந்தே இருந்தார்.

‘பெண்மை தவறேல்’- இது நவீன ஆத்திச் சூடி!

– இக் கதை ‘தமிழ்நெஞ்சம்’, மின்னிதழ் ஜூலை 2025 ல் பிரசுரம் கண்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *