செவ்வந்திப்பூ சிங்காரி
(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மணி நாலுக்கு மேலாகிவிட்டது. சிங்காரியை இன்னும் காணவில்லை. வழக்கமாக மூன்று மணிக்கே வந்து ‘அம்மா’ என்று கதவை இடித்துச் சிரித்துச் சிரித்துப் பேசி அந்த அரைமணி நேரத்தை ஐந்து நிமிஷம் போல் எண்ணச் செய்யும் அவளை இன்னும்காணவில்லை. பெண் சுகுணா, ‘இன்றைக்குச் சினிமாவுக்குப் போக வேண்டும். பூந்தோட்டத்தையே தலையில் வைத்துக் கொள்ளப்போகிறேன்’ என்று குதித்துக் கொண்டிருந்தாள். வாசலுக்கும் உள்ளுக்குமாக சிங்காரியைக் காணவில்லையே என்று அலைந்து கொண்டிருந்தாள்.
சிங்காரி என்றால் எங்களுக்கெல்லாம் உயிர். சிரித்துப் பேசும் சுபாவமும், ‘அம்மா’ என்னும் குரலில் ஒலித்துக் கனியும் அன்பும் அவளை எங்கள் குடும்பத்தில் ஒருத்தியாகவே எண்ணச் செய்து விட்டன.
செவ்வந்திப்பூ பூக்கும் நாள்களில் உதிரியாகவும், மாலையாகவும் கட்டிக் கூடையை அவள் இடையில் சுமந்துவரும் அழகொன்றே போதும். அதனாலேயே ‘செவ்வந்திப்பூ சிங்காரி’ என்று அழைக்க ஆரம்பித்து விட்டாள் சுகுணா.
சுகுணா அப்பொழுது ஐந்து வயதுக் குழந்தை. செவ்வந்திப்பூ வாங்கித் தந்தால்தான் ஆச்சு என்று பிடிவாதம் பிடித்தாள். சிங்காரிக்கு என்ன தோன்றியதோ, என்னவோ… அவள் கூடையில் அப்பொழுது பூ எல்லாம் தீர்ந்துவிட்டது. நேரே வீட்டுக்குப் போய்த் தோட்டத்துச் செடிகளிலிருந்து மீதியிருந்ததையும் பறித்துக் கொண்டு வந்து சுகுணாவிடம் கொடுத்தாள்.
அந்த நாளிலிருந்து ஒரு வருஷமாகச் சிங்காரி வராத நாளில்லை. மணி மூன்றடித்ததும் அவள் குரல் கேட்பதுபோக, அன்று ஐந்து மணி வரையில் காணோமே என எண்ணிக் கொண்டிருந்தோம்.
அப்பொழுதுதான் சிங்காரி என்னிடம் தான் வளர்ந்த கதையையும் வாழ்ந்த கதையையும் மனம்விட்டு ஒருநாள் உருக்கமாகச் சொன்னது நினைவுக்கு வந்தது.
சிங்காரியின் தகப்பனார் சாமிநாத நாயக்கர் கட்டட வேலை செய்பவர். பாலாற்றுச் ‘சலசல’ ஓசையை அடுத்துள்ள பாலூரில், சாமிநாத நாயக்கரைத் தெரியாதவர்களே கிடையாது. வீடு கட்டும் வேலை அந்தச் சுற்று வட்டாரத்தில் எங்கு நடப்பதானாலும் சாமிநாதன் இல்லாமல் கடைக்கால் ஓர் அங்குலம்கூட எழாது.
சிங்காரியைப் பெற்று ஏழாண்டு வளர்த்து அவள் தாயார் இறந்தாள். சாமிநாத நாயக்கருக்கு தம் மகளை வளர்ப்பதோடு, வயிற்றுக்கு உணவு சமைக்கும் பெரும் பாரமும் தலையில் விழுந்தது. காலையில் எழுந்ததும் அநேகமாக எட்டு எட்டரைக்குள்ளாக வேலைக்குப் போக வேண்டியிருக்கும்.
சிங்காரி எழுந்து, இருள் மறையும் அந்த விடிவேளையில் மண் ருடத்துடன் பாலாற்றுக்குப் போய் ஊற்றெடுத்து தோண்டி நீர் மொண்டு வீடு வருவாள். அதற்குள் அவள் தந்தை அடுப்பு மூட்டி வைத்திருப்பார். அதிலிருந்து இலையில் சோறு விழும் வரையில் இருவரும் சக்கரமாகச் சுழல்வார்கள். மகளுக்குத் தாயில்லையே என்னும் ஏக்கமில்லாமல் சாமிநாதன் வளர்த்து வந்தார்.
பாலூர் வட்டாரத்தில் கிடைக்கும் வேலை வயிறு வளர்க்கும் அளவுக்கு ஊதியம் அளிக்கவில்லை. சிங்காரியும் துறுதுறு என வளர்ந்து விட்டாள். பதினேழு வயதுப் பருவம் அவளைப் பெயருக்கேற்றபடி ஆக்கிவிட்டது. இரண்டு முழுஜீவன்கள் வாழ வேண்டியதோடு, மகளுக் குக் கல்யாணம் செய்விக்க வேண்டிய மகத்தான பொறுப்பும் வேறு.
பட்டணத்தில் மிலிடரி காண்ட்ராக்டர்களிடம் சென்று வேலை செய்தால் நிறையப் பணம் சம்பாதிக்கலாம் என்று யாரோ சொன்னதன் பேரில் சாமிநாத நாயக்கர் பட்டணத்துக்குப் போய்ச் சேர்ந்தார்.
அவர்கள் போய்ச் சேருவதற்கும் அரிசி ரேஷன் வருவற்கும் சரியாக இருந்தது.ஆகவே கை நிறையக் கூலியும் பணமும் இருந்தும், வயிறு நிறைய ஒருே வேளை சாப்பாட்டுக்கே திண்டாட்டமாகப் போய் விட்டது. ரேஷனின் கொடுக்கப்பட்ட அரிசி ஒரு வாரத்துக்குக் காணவில்லை.
பல்லாவரத்தில் அரிசி கிடைக்கிறதென்று யாரோ சொன்னார்கள். உடனே கிளம்பினாள் சிங்காரி. அரிசியைக் கோணிப் பை ஒன்றில் வாங்கி இடுப்பில் வைத்துக் கொண்டு கோட்டை ஸ்டேஷனில் இறங்கிய சிங்காரியை, போலீஸ்காரர் பிடித்து விட்டார். அவளைப் போல் அரிசி கொண்டு வந்து அங்கு கூட்டமாக நிற்பவர்கள் ரொம்பப் பேர்.
ஒருகணம் வெலவெலத்துவிட்டது சிங்காரிக்கு. ஐயோ! என்ன ஆகுமோ? எப்பொழுது விடுவார்களோ? ஒருவேளை இதற்காகத் தண்டனை ஏதாகிலும் அளித்து – தான் பெண்பிள்ளை என்பதற்காகத் தன் தகப்பனாரைப் பிடித்துக் கொண்டால்..?
இதை நினைத்தபோது சிங்காரிக்கு அழுகை அழுகையாக வந்தது. போலீஸ்காரர்களின் குத்தூசிப் போன்ற கேலிப் பேச்சு வேறு; தன்னைப் போலவே அகப்பட்டுக் கொண்ட மற்றவர்களின் வாடிய முகம் வேறு! எல்லாம் சேர்ந்து சிங்காரியைக் கலக்கின.
இதற்குள் தகப்பனார் சாப்பிட வந்திருப்பாரே என்று நினைத்தபோது தான் துக்கம் தாங்க முடியவில்லை.
அப்பொழுது தன்னைச் சுட்டிக்காட்டி ஒரு வாலிபன் அந்தப் போலீஸ்காரரிடம் ஏதோ பேசுவது தெரிந்தது. அவனை அதற்கு முன் ஒரு தடவை பார்த்திருப்பதாக அவளுக்கு நினைவு. வாரிவிட்ட அந்தக் கிராப்பு; அரும்பிய மீசை; மெல்லிய மல் ஜிப்பாவுடன் கூடிய அவன் எதற்காகத் தன்னைச் சுட்டிக்காட்டிப் பேசுகிறான் என்பது தெரிய வில்லை.
போலீஸ்காரரும், அந்த வாலிபனும் இவளருகே வந்தார்கள்.
“ஏ புள்ளே! இவரு உங்க மனுஷரா? நான்தான் அரிசியைக் கொண்டு வந்தேன் என்கிறாரே” என்றார் போலீஸ்காரர்.
இவளைப் பதில் பேசவிடாமலே அவன்-சுந்தரமூர்த்தி, “ஆமாய்யா… நான்தான் சொல்கிறேனே! நம்பிக்கை இல்லையா? நாங்கள் இரண்டு பேருமாகத்தான் கொண்டு வந்தோம். வயசுப் பெண் கேஸ் நடக்கிற வரையில் எதற்கு ஐயா உட்கார்ந்திருக்கணும்? அதுவரையில் நானிருக்கிறேன். அவளை விட்டு விடுங்க” என்றான். சிங்காரிக்கு ஒருகணம் மகிழ்ச்சியும், மறுகணம் வேதனையுமாக இருந்தது.
“தம்பி! உண்மையோ, பொய்யோ? பெண் பிள்ளையாய் இருந்தால் பத்து ரூபாய் அபராதத்தோட விட்டு விடுவார்கள். மாஜிஸ்ட்டிரேட் உன்னைப் பார்த்தவுடன் ஒரு வாரம் போட்டுடுவாரே!” என்றார் போலீஸ்காரர்.
“பரவாயில்லை…” என்ற பதிலைக் கேட்டவுடன் திடுக்கிட்டாள் சிங்காரி.
‘தனக்காக யாரோ ஒருவன் ஒரு வாரம் சிறைத் தண்டனை இருப்பதா வேண்டாம். நாமே இருந்து விடுவோமே!’ என்று எண்ணினாள்.
ஆனால், ‘உம், ஓடிப் போ புள்ளே!’ என்னும் அதட்டல் சப்தம் கேட்டதும் அவள் தன்னையறியாமலே ஸ்டேஷனை விட்டு வெளியே துந்தாள்.
ஒருமுறை தனக்காகப் பரிந்து வந்த அவனைத் திரும்பிப் பார்த்தாள். அவனும் அந்தக் கூட்டத்தின் மத்தியிலிருந்து பார்க்காமல் இருக்க முடியுமா?
வீட்டுக்குப் போய் சேர்ந்தாள். தகப்பனார் அங்கே மகளைக் காணாது வாயிலுக்கும் உள்ளுக்குமாக நடந்து தவித்துக் கொண்டிருந்தார்.
சிங்காரி அந்தப் பதைபதைக்கும் வெயிலில் வீட்டுக்குள்நுழைந்தாள். உடனே விவரத்தைக் கூறினாள். மகள் அகப்பட்டுக் கொள்ளாமல் தப்பி அந்ததற்குச் சந்தோஷமடைந்தார். அரிசி போனது பற்றிச் சற்றும் தவலைப்படவில்லை.
ஆனால், சிங்காரியினால் அந்த வாலிபனின் உருவத்தை மட்டும் மறக்க முடியவில்லை.
நாள்கள் சென்றன. ஓடி மறந்தன என்றுகூடக் கூறலாம். வேலை முன்போல் லாபகரமாக இல்லை. ஆகவே, பாலூருக்கே வந்து விட்டார்கள் தந்தையும் மகளும். கையில் ரொக்கம் கொஞ்சம் செர்ந்திருந்தது. வீடும் சிறு தோட்டமுமாக வாங்கிக் கொண்டார்கள். இனி அவருடைய அபிலாஷை மகளுக்குக் கல்யாணம் செய்து அவத்து மகிழ வேண்டியதுதான்.
சிங்காரிக்கு மிகவும் வியப்பாக இருந்தது என்னவென்றால் நிச்சயம் செய்திருந்த கணவர், முன்பே அவள் இதயத்தில் வரித்திருந்த, தனக்காகக் குற்றத்தை ஏற்க முன்வந்த சுந்தரமூர்த்தியே என்பதுதான்.
தந்தையிடம் என்னவென்று சொல்ல? சுந்தரமூர்த்தி சிங்காரியின் தூரத்து உறவாகவும் இருந்தான் என்றால் சிங்காரியின் சந்தோஷத்துக்குக் கேட்கவா வேண்டும்?
கல்யாணமாகி இரண்டு மாதம் வாழ்க்கை மிக மகிழ்ச்சியுடன் சென்றது.
கொத்து வேலையைத் தவிர வேறு வேலையே செய்தறியாத சுந்தர மூர்த்திக்கு, அந்த வட்டாரத்தில் வேலை ஏதும் கிடைக்கவில்லை. மாமனார் வீட்டில் ஜம்மென்று சாப்பிட்டு, மடிப்புக் கலையாமல் சொக்காய் போட்டுக் கொண்டு காலங்கழித்து வந்தான். ஆனால், சாமிநாத நாயக்கர் கண்டிப்புப் பேர்வழி.
இடைஇடையே இடித்து இடித்து ஏதோ கூற ஆரம்பித்தார்; சிங்காரியும் தந்தையின் அந்தச் சொற்களுக்கு ஏதாவது பதில் கூறி அடக்கியே வந்தாள்.
ஓரிடத்தில் சுந்தரமூர்த்தி வேலையை ஒப்புக் கொண்டு, நடுவில் நாலைந்து நாள் மேஸ்திரியிடம் கோபம் என்று போகாமலிருந்ததைக் கேள்விப்பட்டார் நாயக்கர். கோபம் பொத்துக் கொண்டு வந்தது அவருக்கு.
சிங்காரியைக் கூப்பிட்டார். “இதெல்லாம் நல்லா இல்லை. கல்யாணம் கட்டியாச்சு. நாலு காசு சம்பாதிக்க யோக்யதை இல்லைன்னா ஊர்லே தான் மதிப்பாங்களா? இடைத்த வேலையையும் செய்யாமப் போனா எனக்குன்னா அவமானமாக இருக்குது!” என்று கத்தினார்.
திண்ணையில் உட்கார்ந்திருந்த சுந்தரமூர்த்தியின் காதில் இரு விழுந்தது. வெடுக்கென்று எழுந்து உள்ளே வந்தான். அவனும் பதிலுக்கு ஏதேதோ பேசிவிட்டான்.
ஆனால், கடைசியில் சிங்காரியின் தகப்பனார், “அவ்வளவு ரோசமுள்ளவன் ஏதாவது வேலை வெட்டி செய்யணும்” என்று சொன்னது அவன் மனத்தைக் கலக்கியது; உடம்பைக் குலுக்கியது.
என்ன நினைத்தானோ என்னவோ! வெளியே போனான். அன்று வரவில்லை. மறுநாள், அதற்கு அடுத்த நாளும் காணவில்லை. சிங்காரி அழுதழுது முகம் வீங்கினாள். சாமிநாத நாயக்கரும் எங்கெல்லாமோ தேடினார். ‘அப்படி என்னதான் சொல்லிவிட்டேன்? அவல் நல்லதுக்குத்தானே சொன்னேன். சும்மா கிராப்பு வாரிக்கிட்டு, மல் ஜிப்பா மடிப்புக் கலையாம போட்டுக்கிட்டா ஒண்ணும் நடக்காது உலையிலே அரிசி வந்து குதிக்காதுன்னு அவன் நல்லதுக்குத்தானே சென்னேன்?’ என அங்கலாய்த்தார்.
ஒரு மாதம் கழித்து மணிப்புரியிலிருந்து சுந்தரமூர்த்தி ஒரு கடிதம் எழுதியிருந்தான். ஏதும் வருத்தப்பட வேண்டாமென்றும், அங்கு பெரிய சாலையொன்று போடும் வேலை நடக்கிறதென்றும், நல்ல சம்பளம் கிடைப்பதாகவும் எழுதியிருந்தான்.
மாதம் இரண்டு கடிதாசிதான் போட முடிந்தது. மாதா மாதம் ஏதாவது பணமும் வரும். கல்யாணமாகி நான்கு மாதங்களிலேயே புருஷன் தன்னைவிட்டுச் சம்பாதிப்பதற்கென்று வடக்கே தூர தேசம் போனது சிங்காரிக்கு அடங்காதத் துயரமாகிவிட்டது.
துயரத்தை மறக்க வீட்டுத் தோட்டத்திலே செடிகள் பயிரிட்டாள். அழகான ரோஜா, செவ்வந்திப்பூ காலத்தில் கண்ணைப் பறிக்கும் மஞ் சள் நிறப்பூ. இவை குலுங்கக் குலுங்கப் பூக்கும் என்று பயிரிட்டிருந்தாள். பட்டணத்திற்குக்கூட அனுப்பும் அளவுக்குத் தோட்டம் செழிப்பாகி விட்டது. ஆகவே, அவள் ‘அவ்வளவு தொலைவு போய் சம்பாதிக்க வேண்டாம்; இங்கே தோட்டத்துப்பூ ஒன்றே நாம் இருவரும் சாப்பிடப் போதுமான பணம் தரும்’ என்று அடிக்கடி எழுதுவாள்.
எங்கள் வீட்டிற்குத் தினமும் முதன் முதலில் பூவைக் கொடுத்து விட்டுத்தான் நாலரைக்கு வரும் பாசஞ்சரில் காஞ்சிபுரத்துக்குப் பூவைக் கொடுத்து அனுப்புவாள். அப்படிப்பட்டவள் அன்று வராதது என்னவோ போலிருந்தது.
மணி ஐந்தடித்தது. வீட்டு வாசலில் ‘கடக் கடக்’ என்று வண்டி வந்து நிற்கும் சப்தம் கேட்டது. ‘யாரது?’ என்று பார்க்க நாங்கள் எல்லாரும் ஓடினோம். வண்டியினின்று சிங்காரி குதித்து ஓடி வந்தாள். நாங்கள் “பூஎங்கே? வண்டியில் வருகிறாயே! எங்கேயாவது போய் வந்தாயா?” என்று கேட்பதற்குள், அவளே, “அம்மா, அம்மா! அவரு நாலரை பாஸஞ்சருக்கு வந்துட்டாரு, அம்மா! வண்டியிலே இருக்காரு. ஸ்டேஷன்லே பூ கொடுத்துட்டுத் திரும்பினேன். பெட்டி படுக்கையோட தம்ப ஊரு ஸ்டேஷனிலே யாரு இறங்குராருன்னு பார்த்தேன். அவர்! ‘அத்தான்’ என்று அலறிப்புட்டேன். அந்த தேசத்திலே நல்ல மழையாம். ஆறு மாசம் வேலை நடக்காதாம். பார்த்துட்டுப் போக வந்தாராம்” ன்றாள். அவள் முகத்தில் சந்தோஷம் பொலிந்தது.
“சிங்காரி! இனிமேல் எங்களே மறந்திடுவே…” என்றேன். “அத்தானையும் பூ வியாபாரத்தையும் நான் விட மாட்டேன் அம்மா!”
“நீ செவ்வந்திப்பூ தரலைன்னா பூவே வெச்சுக்க மாட்டேன்” என்று சிணுங்கினாள் சுகுணா.
“அதெப்படிங்க உங்களை மறக்க முடியும்? அத்தானை இனித் திரும்பி மணிப்பூர் போகக்கூடாது என்று சொல்லிவிட்டேன். இனி பிழைப்பே பூந்தோட்டத்தில்தான்” என்றாள் செவ்வந்திப்பூ சிங்காரி.
– 1949
– செவ்வந்திப்பூ சிங்காரி, கலைமாமணி விக்கிரமன் எழுதிய சமூகச் சிறுகதைகள், தொகுதி-1, முதல் பதிப்பு: 2010, யாழினி பதிப்பகம், சென்னை.
![]() |
கலைமாமணி விக்கிரமன் (மார்ச் 19, 1928 - டிசம்பர் 1, 2015) நன்கறியப்பட்ட தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர். இவர் அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக உள்ளார். 54 ஆண்டுகள் தொடர்ந்து "அமுதசுரபி" மாத இதழின் ஆசிரியராகப் பணியாற்றியபின் இலக்கியப் பீடம் மாத இதழின் ஆசிரியரானார். இவர் வரலாற்றுப் புதின ஆசிரியருமாவார். முதலில், வேம்பு என்ற புனைப்பெயரில் எழுதத் தொடங்கி, பின்னர், விக்கிரமன் என்று மாற்றிக் கொண்டார். ஆக்கங்கள் உதயசந்திரன்…மேலும் படிக்க... |