கல்லும் சொல்லும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: September 1, 2025
பார்வையிட்டோர்: 9,377 
 
 

(1955ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“கல்லைவிடச் சொல்தான் வலிமையானது” என் றான், மீண்டும் மீண்டும், பரஞ்சோதி, அயன் அந்த வார்த்தையை ஒப்புக் கொள்ளவில்லை! 

நிலவுத் தீவின் உபவனத்தில் கீதம் இசைக் கின்ற இனிய புள்ளினங்களின் ஒலியையும் மீறி, ஆவேசத்தோடு வந்து கொண்டிருந்தது அந்த விவா தம். இடையிடையே விவாதம் செய்கிறவரின் வாக் கியங்களுக்கு, அரைப்புள்ளி கால் புள்ளி என்று வரிகளுக்கு வேகத்தை வகுத்து ஓட விடுவதுபோல், ஒரு சிரிப்பு அங்கங்கே ஒலித்துக் கொண்டிருந்தது. அந்த வண்ணச் சிரிப்பு விவாதத்துக்கு முற்றுப் புள்ளியை மட்டும் வைப்பதாக இல்லை! ஓடவிட்டுக் கொண்டே ஒலித்தது. 

நிலவுத் தீவின் உபவனத்தில் சிற்பி அயனும், கவிஞன் பரஞ்சோதியும் பலமான விவாதத்தில் முனைந்திருந்தார்கள். அந்த விவாதத்தைச் சிரிப் போடு அநுபவித்தவாறு மல்லிகைத் திட்டில் அமர்ந் திருந்தாள் முத்து மேகலை. 

“கல்தான் வலிமை யுடையது. அதற்குள்ள சிறப்பு சொல்லுக்கு இல்லவே இல்லை!” என்று தீர் மானத்தோடு சொன்னான் அயன். அந்தச் சிற்பியி னுடைய வார்த்தைகள் உளியிலிருந்து சிதறுகிற கற்சில்லுகளைப் போல வேகத்தோடு தெறித்தன. 

“கல் காற்று மழைக்குப் பலக்காது. காலம் அதை மழுக்கும். மனிதர்கள் அதை அழிப்பார்கள். சொல் அப்படியில்லை. நாவினோடும் மனத்தினோடும் ஒட்டியது அது. மொழி உள்ளவரை, மக்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டிருக்கும் வரை, சொல் நிலைத்து நிற்கும்!” என்றான் கவிஞன் பரஞ் சோதி. ஆழமான கசத்தில் தண்ணீர் சுழித்துச் சுழலுவதைப் போல அந்த வார்த்தைகள் சுழன்றன. 

முத்து மேகலை இந்த ரசமான விவாதத்தை மகிழ்ச்சி பொங்கும் முகத்தோடு சற்றுத் தொலைவி லிருந்தே கேட்டுக்கொண்டிருந்தாள்! இவர்களுக்கு எதிரில் மல்லிகைக் கொடிக்கு அருகே நின்ற சிறு மேடையில் அமர்ந்து, விவாதத்தின் முடிவைப்பற்றி லக்ஷியம் செய்யாமல் கருத்தின் ஓட்டத்தில் மனத் தைச் செல்லவிட்டு மெளனமாக அநுபவித்துக் கொண்டிருந்தான், கமலக்கண்ணன். அவன் ஒரு ரசிகன்! 

“கல்லுக்கு நீளம், அகலம், உயரம் என்று மூன்று அளவைகள் உண்டு. சிற்பக்கலை இந்த மூன் றையும் கிளைகளாகப் பற்றிப் படர்ந்து மலர்கிறது!” என்று சொன்னான் சிற்பி அயன். 

“ஆமாம்; அப்படி மூன்று எல்லைகள் அதற்கு இருப்பதினால் தான் சொல்கிறேன், அது எல்லைக்குள் -நீளம், அகலம் உயரம் என்ற எல்லைக்குள்- அடங்கியது! சொல்லோ அப்படியில்லை. அதற்கு எல்லை கிடையாது. மனித மனந்தான் அது படரும் கொம்பு. மனித மனத்தின் விரிவுதான் அதன் வியாபகம். அது இந்தப் பிரபஞ்சத்தைவிட விசாலமானது. உருவமற்ற உணர்வின் வடிவிலே நித்திய மாக நிற்க வல்லது கவிதை. முத்து மேகலை இதை உணர்ந்திருக்கிறாள்!” என்றான் பரஞ்சோதி. 

பூ மொட்டு மலர்வதைப் போல, அவளுடைய முகத்தில் நகை மலர்ந்தது. 

சிற்பி சென்னான்: “இல்லை; முத்துமேகலைக்குச் சிற்பத்தின் வலிமையிலேதான் நம்பிக்கை. இந்தச் சோலை முழுதும் இன்னும் ஓர் இரவில் அவளுடைய: சிலைகளாக நிறுத்துவேன். அப்பொழுது அவள் சிற்பத்தின் வலிமையை நிதர்சனமாக உணர்வாள்” 

விவாதத்தின் இந்த நயமான இடத்தில் மனத் தை அமர்த்தி, சிந்தனையை நகைப்பிலே சிதறினான் பரம ரசிகனான கமலக் கண்ணன். 

“சிரிக்காதே.நீதான் வாய் திறந்து சொல்லேன்; எது வலிமையானது, கல்லா அல்லது சொல்லா?” என்று கேட்டான் அயன். 

“எது வலிமையானது என்பதைப் பற்றி எனக் குக் கவலையே இல்லை. இரண்டுமே அநுபவிப்பதற்கு இன்பமாக இருக்கின்றன. அவ்வளவுதான் எனக் குத் தெரியும். அநுபவம் சம்பந்தப்பட்ட மட்டில், வலிமை என்பது ஒரு சிறு மெல்லிய மலருக்குக்கூட. இருக்கிறது ஒரு மென்மையான அனிச்ச மலர் தருகிற இன்பமும், கம்பீரமான ஒரு பெரிய கோ வில் தருகிரி இன்பமும்–இரண்டுமே வலிமையாகத் தான் இருக்கின்றன!” என்றான் கமலக்கண்ணன். 

இந்தத் தருணத்திலேதான் முத்துமேகலை உரக் கச் சிரித்தாள். அந்த உபவனத்தின் இதயத் துடிப் பாக ஒலிக்கும் ஓடையின் மெல்லிய நாதம் போல வும், வன மகளின் பாதச் சிலம்பொலி போலவும் மேகலையின் பூங்குமுதச் செவ்வாயிலிருந்து நகை மலர்கள் உதிர்ந்தன! அப்படியே எழுந்து புனலின் கரையோரமாக நடந்தாள் அவள். 

“விவாதம் முடியவில்லையே இன்னும்?” என்றான் அயன். 

“இல்லை. இந்த விவாதத்துக்கு முடிவு செய்ய வேண்டியவள் மேகலைதானே!” என்றான் பரஞ்சோதி. 

“பார்க்கலாம்; இந்த விவாதத்துக்கு நீங்களே ஏதாவது முடிவு செய்கிறீர்களா என்று…” 

இவ்வாறு சொல்லிக் கொண்டே மேலே நடந்தாள் முத்து மேகலை. நட்சத்திரங்கள் உதிர்வது போல உதிர்ந்த அந்தச் சொல் மலர்களை மனக் கூடையில் தாங்கினார்கள் இரண்டு கலைஞர்களும். 

2

நிலவுத தீவின் உபவனம் ஒரு கலைக் கூடமாக மாறியது. சோலை நெடுகிலும் மேகலையின் வடிவங்கள். அவள் நடப்பது போலவும், நிற்பது போல வும், எதையோ கூர்ந்து நோக்கிக் கொண்டிருப் பது போலவும், சிரிப்பது போலவும் – அழகிய ஒரு நங்கையின் வண்ண வண்ணச் செயல்கள் எத்தனை உண்டு, அத்தனையும்- கல்லிலே கோலம் பெற்றுச் சோலையை நிரப்பி நின்றன! சிற்பி அயனுடைய கை வண்ணங்கள் அவை! 

சோலையிலே நின்ற அந்த உருவங்கள்—அத் தனை உருவங்களுக்கும் மத்தியிலே கவிதையும் பூத்திருந்தது. அந்தச் சிலை ஒவ்வொன்றின் பாதத் திலும் ஒரு ஏடு. அவள் நடந்து செல்வதைப் பாடுவதும், நின்று சொக்குவதைச் சித்திரிப்பதும், சிரிப்பதை வர்ணிப்பதும், பார்வையின் கூர்மை யைப் புகழ்வதுமாக -மேனியிலே வனப்பு பொங் கிக் கொண்டிருக்கிற ஒரு பேரழகிக்கு எத்தனை செயல்கள் உண்டு, அத்தனை செயல்களையும் வெறி வீசும் பாடல்களிலே கூறி மோகித்து நின்றன அந்த ஏடுகள்! கவிஞன் பரஞ்சோதியின் சொல் வண்ணங்கள் அவை! 

கல்லும் சொலலும் காதலிலே வெறியாகித் தங்கள் தங்கள் வலிமையை நிலை நாட்டப் போரா டின, அந்த உப வனத்திலே! 

அரிய ரசிகனான கமலக் கண்ணனோ, இந்த ரசமான கலைப் பின்னலில் இதயத்தை ஊடவிட்டு, இந்தப் பின்னலின் சரடாக இழையும் ரூபவதியின் எழிலை வியந்து மௌனமாக மயங்கினான்! 

மீண்டும் அந்தப் பாதச் சிலம்பொலி; நட்சத்திர மலர்கள் உதிர்வது போன்ற மெல்லிய சிரிப்பு, ஓடையின் அருகே ஒலித்தது. முத்து மேகலை அங்கு வந்தாள். 

”மேகலா,சொல்லம்மா. கல்லும் சொல்லும் உன்னையே துதிக்கின்றன. எதை நீ கொள்ளுகிறாய்?” என்றான் சிற்பி. 

அப்பொழுது அவளுடைய மோகனச் சிரிப்பை வர்ணிக்கும் ரம்யமான பாடல் ஒன்றை உணர்ச்சி மிகுந்த குரலிலே பாடினான் பரஞ்சோதி, சிற்பத் துக்குப் போட்டியாக! 

“பார்க்கலாம், நீங்களே இந்த விவாதத்துக்கு. ஒரு முடிவு செய்கிறீர்களா என்று!” 

இப்படிச் சொல்லியவளாய் புனலின் கரையிலே நடந்தாள் மேகலை. 

கமலக் கண்ணன் இந்தக் காட்சியில் தன்னை மறந்து நின்றான். 

3

நிலவுத் தீவு பௌர்ணமியின் அமுத எழிலில் நீராடிக் கொண்டிருந்தது! நிசப்தமான உபவனத் தில் அந்த நேரத்தில் சிலைகளுக்கு எதிரே நின்று மெளனமாகக் கண்ணீர் வடித்தான் கமலக் கண்ணன்! நேற்றுக் காலையில் அழகழகான கோலங் களில் அற்புதமான வனப்பு வடிவங்களாய் இலங் கிக் கொண்டிருந்த வண்ணச் சிலைகள், என்ன ஆச்சரியம், இப்பொழுது உடைந்து கிடைந்தன! யார் இந்த அக்கிரமத்தைச் செய்திருக்கக் கூடும் என்று அவன் யோசித்தான்! 

“பொறாமைதான் எத்தனை கொடுமையானது!” என்று எண்ணினான் அவன்! 

“கல் அழியக் கூடியது என்று காட்டுவதற்காக பரஞ்சோதி-ஒரு கவிஞன் – இந்தக் காரியம்செய்ய முடிந்தது என்றால் அவனுடைய அழகுணர்ச்சியை என்ன சொல்வது! பொறாமை என்பது கலையுணர்ச் சியை விட வலிமையானதா!” 

இவ்வாறு தனக்குள்ளேயே சொல்லிக் கொண் டான் கமலக் கண்ணன். அப்பொழுது அந்தச் சோலையில் சிலம்பொலி கேட்டது. திரும்பிப் பார்த் தான். யாரோ வேகமாக மலர்ச் செடிகளுக்கு மத்தி யில் மறைந்து செல்வது தெரிந்தது. 

உபவனத்திலிருந்து புன்முறுவலுடன் வேக மாக நடந்தாள் முத்துமேகலை. 

4

மறுநாள் இரவும் அதே நேரத்தில் அந்தச் சோலையிலே நின்று கண்ணீர் வடித்தான் கமலக் கண்ணன். ஆனால் இந்த முறை சிலைகளுக்காக அல்ல. கவிதைகளுக்காக; கல்லுக்காக இல்லை: சொல்லுக்காக! 

ஆமாம். அந்த உபவனத்தின் புல்வெளி முழுதும் ஏடுகள் கிழிந்து சிதறிக்கிடந்தன. இந்த அக்கிரமத்தை யார் செய்திருப்பார்கள் என்று யோசித்தான் அவன். 

“ஒன்று நிச்சயம், கல்லும் சொல்லும் எவ்வளவு வலிமையானவையோ தெரியாது. மனித உள்ளத் தின் ஆணவம் இந்த இரண்டையுமே மிஞ்சிவிடக் கூடியது!” என்றான் கமலக் கண்ணன். 

மீண்டும் அந்தச் சிலம்பொலி. திரும்பிப் பார்த் தான். மேகலை! அவள் மறையவில்லை. உபவனத்தி லிருந்து வெளியே செல்லவில்லை. இவனை நோக்கி வந்து கொண்டிருந்தாள். 

“யார் – மேகலையா?” என்று கேட்டான் கண்ணன். 

“ஆம். இந்தப் போட்டிகளுக் கெல்லாம் காரண மான குற்றவாளி! மனிதனுடைய ஆணவத்தின் அதி சய விளையாட்டுக்களைக் கண்டு ரசித்துக்கொண் டிருக்கிறேன்” என்றாள் அவள். 

”நானும் ரசித்துக்கொண்டுதான் இருந்தேன். ஆனால் இப்பொழுது கண்ணீர் வடிக்கிறேன்” என்றான் கமலக் கண்ணன். 

“இதற்குக் கண்ணீர் வடிப்பானேன்? விவாதத் தின் ஒரு கட்டந்தானே இது! முடிவு நெருங்குகிறது என்று அர்த்தம்!” 

சிலையிலே உருவாக்க முடியாத அமுத தாரை களைப் பொழிந்து கொண்டிருந்தது நிலவு. சொல் லுக்குள் அடங்காத மொழியிலே பாடிச் சென்று கொண்டிருந்தது சிற்றோடை. கண்ணன் மேகலையின் முகத்தைப்பார்த்தான். 

“சிலைகளுக்கு இப்படிச் சிரிக்கத் தெரியுமா? ஏடுகள் என்னோடு இப்படிப் பேசுமா ?” என்று கேட்டான் அவன். ஐவகை இன்பமும் “ஒண்டொடி கண்ணே உள” என்ற கவியின் வாக்குக்குப் பதவு ரையும் பொழிப்புரையுமாக இருந்தது அந்த நிலை! 

“என்னென்னவோ சொல்கிறீர்களே, புதிதாய் இருக்கிறதே!” என்றாள் முத்து மேகலை. 

“மன்னிக்க வேண்டும். சிரிக்காமல் சிரிப்பதும், பேசாமல் பேசுவந்து தானேகலையின் சிறப்பு. அதை மறந்து விட்டேன்!” என்றான் அவன்! 

முத்து மேகலை அந்த நிலவின் சோபையிலே, மெல்லிய காற்றில் ஓடுகிற தனது கேசத்தை ஒரு மித்து முடிந்தாள். 

“ஏதோ ஒரு போதையில் கலையின் அடிப்படை யை மறந்து விட்டேன். என்னுடைய புத்தி மயங்கி விட்டது!” என்றான் கமலன். 

மேகலை அவனுக்கு அருகிலே வந்து நின்றாள். குளிரும் தென்றல், வாசனைப் பூங்கொடி, சுவைமிக்க தீங்கனி, கண் நிரம்பிய முழுமதி, செவிக்கு இனிய நல்லிசை இந்த ஐந்தின்பங்களும் ஒன்று பேசிக் கலந்து உருவெடுத்து அவன் கண்முன்னே நிற்பது போல இருந்தது, முத்துமேகலை தன் எதிரே வந்து நின்ற நிலை ! 

“நீங்கள் அழகை ரசிப்பவர்கள். விவாதிப்பதில்லை!” என்று சொல்லிச் சிரித்தாள் மேகலை. 

விவரிக்க முடியாத ஒரு பேரூணர்ச்சி கமலனை உலுப்பியது. அவன் சொன்னான்: 

“மேகலா, உன்னுடைய நிலைமைக்கு அநுதாபப் படுகிறேன். சிற்பியும் கவியும் உன்னை மனப்பூர்வ மாகக் காதலிக்கிறார்கள். அதனாலேதான் இத்தனை போராட்டம். அது எனக்கு நன்றாய்த் தெரியும்.” 

“இருக்கலாம் – ஆனால் அப் போராட்டத்தில், அதன் லக்ஷ்யத்தை மறந்து விடுகிறார்கள். விவாதம் அதிகமாகி விவாதப் பொருள் மறைந்து விட்டது!” என்றாள். மறுபடியும் அந்த மெல்லிய சிரிப்பு. 

‘நிலவின் கிரணங்களுக்கு ஒலி என்று ஒன்று இருக்குமானால், அது இப்படித்தான் இருக்கும்’- என்று எண்ணமிட்டான் கமலன். 

ஒரு வினாடி மௌனம் நிலவியது. அவன் கேட்டான்: 

“நீ என்ன நினைக்கிறாய் மேகலா, கல் வலிமை யானதா அல்லது சொல் வலிமையானதா?” 

“என் வரையில் இப்பொழுதுள்ள நிலையில், இந்த இரண்டையும் விட வலிமையானது மனித உள்ளத்தின் பாசம்”

“அப்படியானால்?” 

“அப்படிப்பட்ட ஒரு உள்ளத்தைத் தேடித் தான் இதுவரை அலைகிறேன். இல்லை அலைந்தேன்!” என்றாள் முத்துமேகலை. 

“நீ சொல்வது புரிந்தும் புரியாமலும் இருக்கிறது – மேகத் திரைக்குப் பின்னால் தோன்றுகிற சந்திரன் மாதிரி, சல்லாத் திரைக்குப் பின்னால் அசைகிற அழகிய ஒரு பெண் மாதிரி.” 

“அயனும் பரஞ்சோதியும் தங்கள் ஆணவத்தை நிலை நாட்ட என்னை ஒரு கருவியாக ஆளுகிறார்கள். அவர்களுடைய வலிமையை மெய்ப்பிக்க நான் ஒரு சாதனமாக உதவுகிறேன். அவ்வளவுதான். எனக் காகவே என்னை விரும்புகிற இதயம் அவர்கள் இருவரிடமுமே இல்லை!” 

“மேகலா! இதெல்லாம் உண்மையா! இந்த ஒளி மிகுந்த குளிர்ந்த நிலவும், மனசை மயக்குகிற இந்த உபவனமும்,என் முன்னே இந்த இனிய மொழியில் உரையாடும் நீயும் – மேகலா, ‘என்னுடைய புத்தி மறுபடியும் மயங்குகிறதே -” 

கமலனுடைய வார்த்தைகள் சற்றுத் தடு மாறின. உணர்ச்சி என்பது ஒரு நிலையில் கல்லையும் சொல்லையும் கடந்துவிடுகிறது என்பதை அவன் அப்பொழுது உணர்ந்தான். 

“மேகலா கல்லையும் சொல்லையும் அநுபவித்துக் களித்தேன். அவை உயிர் பெற்று மனித உருவில் வந்தால் எப்படியிருக்கும் என்பதை இப்பொழுது உணர்கிறேன். 

தன்னை மீறிய அந்த உணர்ச்சியின் சுழிப்பில் ஆழ்ந்தவனாய்,அவன் நிலவின் ஒளியில்முத்துமேகலை யின் கரங்களைப் பற்றினான். சிற்றோடை நட்சத்திர ஒலிகளை உதிர்த்துக் கொண்டே ‘சல சல’ வென்று ஓடியது. 

5

முத்துமேகலையைக் கமலக்கண்ணன் கேட்டான்: 

“எல்லாம் சரி: அயன் செய்த சிற்பங்களைப் பரஞ்சோதி அழித்ததும், பரஞ்சோதி பாடிய பாடல் களின் ஏடுகளை அயன் கிழித்தெறிந்ததும் நினைத் தால் தான் மனம் வேதனைப்படுகிறது!” முத்து மேகலை பளிச்சென்று பதில் சொன்னாள்:- 

“இல்லை. அவற்றைக் கிழித்தது அவர்கள் இரு வருமே இல்லை. அவர்களுடைய ஆணவத்தை ஒடுக்க முனைந்த நான் தான் அந்தப் பாவம் செய்தேன்! வேறு வழி எனக்கு புரியவில்லை.ரசிகராகிய நீங்கள் என்னை மன்னித்து விடுங்கள்!” 

6

“எங்கள் இருவருக்கும் நல்லாசி கூறுவதுதான் உங்கள் கடமை” என்று சொன்னாள் முத்துமேகலை. 

உருத் தெரியாத ஒரு பெரும் மயக்கத்தில் சிந்தை இழந்தவர்களாய்க் கலைஞர்கள் இருவரும் அந்த உபவனத்தின் நாலு திசைகளையும் பொரு ளற்று நோக்கினார்கள். 

“உங்களுடைய கலையாக்கும் ஆணவத்தில் என்னை மறந்து விடுகிறவர் நீங்கள்!” என்றாள் மேகலை. 

பரஞ்சோதி கலங்கிய கண்களால் அவளைப் பார்த்தான். அவள் மேலும் பேசினாள்: 

“என்னை நீங்கள் காதலிப்பது உண்மை. ஆனால் என்னைவிட உங்களையே நீங்கள் அதிகமாகக் காதலித்துக் கொள்கிறீர்கள்!” 

அயன் உளியைக் கீழே எறிந்துவிட்டு மேகலை யை நோக்கிக் கேட்டான். 

“உன்னைவிட அதிகமாக என்னையே நான் காதலிக்கிறேனா?!” 

“ஆமாம், என் அழகைவிட அந்த அழகை உரு வாக்குகிற உங்கள் கை வண்ணத்தை நீங்கள் அதிக மாக வியக்கிறீர்கள். அது இயல்புதான். ஆனாலும் கலைஞனுடைய அந்த ஆணவத்தில் ஒரு பெண்ணின் இதயம் பொசுங்கி விடுகிறது! இப்படிச் சொல்வதற் காக என்னை மன்னிக்கவேண்டும்!” 

பரஞ்சோதியும் அயனும் அந்த வார்த்தைகளை மனந்திறந்து வாங்கினார்கள். பரஞ்சோதி சொன் னான்: 

“உண்மை; நீ சொல்லுவது ஒரு பேருண்மை: ஆனால் முடிவு எத்தகைய ஏமாற்றம் எங்களுக்கு.” 

இதுவரை மெளனமாக இருந்தகமலக்கண்ணன் இப்பொழுது பேசினான்: 

“நிறைவேறாத காதல் பூர்த்தியாகாத ஒரு கோபுரம்; அரைகுறையாக நின்ற ஒரு காவியம்; அதற்கு ஒரு தனியான கவர்ச்சி உண்டு. ரசிக னுடைய உள்ளத்தின் கற்பனைக்குத் தக்கவாறு மன உலகில் அது பூரணம் பெறுகிறது”. 

பரஞ்சோதியின் முகத்தில் ஒரு புன்முறுவல் தோன்றியது. அதில் மகிழ்ச்சி இல்லை. வருத்தம் இல்லை. கோபம் இல்லை. ஏமாற்றம்கூட இல்லை. அப் பொழுது மேகலை சொன்னாள்: 

“உங்களுக்கு உபதேசம் செய்கிறேன் என்று எண்ணாதீர்கள். நான் தேடிய பொருள் எனக்குக் கிடைத்து விட்டதால் ஏற்பட்டுள்ள ஒரு தெளிவி லிருந்து பேசுகிறேன். ஏமாற்றம் என்று நீங்கள் அழைக்கிற இந்த அநுபவம் உங்கள் கலைக்கு ஊக்கம் தருகிற மன எழுச்சியாக உதவட்டும் என்பதுதான் என் ஆசை! வாழ்க்கை அநுபவத்தில் என் சுய நலத்தை மன்னித்து விடுங்கள்.” 

அயனும் பரஞ்சோதியும் பேசினார்கள். அவர்களுடைய குரலில் நிதானம் இருந்தது: 

“உங்கள் இருவருக்கும் எங்களுடைய மனம் நிரம்பிய வாழ்த்துக்கள். உங்கள் காதலைக் கல் பேசும். சொல் பாடும். உங்கள் காதல் வாழ்க!” 

– கேளாத கானம் முதலிய கதைகள், முதற் பதிப்பு: பெப்ருவரி 1955, பாரி நிலையம், சென்னை.

மீ.ப.சோமு மீ. ப. சோமசுந்தரம் (Mi. Pa. Somasundaram; 17 சூன் 1921 – 15 சனவரி 1999) ஒரு தமிழ் எழுத்தாளர். மீ. ப. சோமு என்பது இவரது புனைபெயர். இவர் பத்திரிக்கை, கவிதை, புதினம், சிறுகதை, கட்டுரை, இசை போன்ற பல துறைகளிலும் சிறந்து விளங்கியவர். 1962ல் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றவர். அகில இந்திய வானொலியில் பணியாற்றியவர். வாழ்க்கைக் குறிப்பு சோமு திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *