இப்படியுந்தான்…!




(1997ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அன்று மாலை ஆறரை மணியிருக்கும். சிங்கப்பூர் தேசிய அரங்கத்தில் கலாரசிகப் பெருமக்களின் கூட்டம் “எக்கச்சக்கம்” என்று சொல்லிவிட முடியாவிட்டாலும் “ஏதோ” என்ற அளவில் கூடியிருந்தது. சென்னை சகோதரிகள் சசி, கலா, மாலா நாட்டியம் பார்க்க வந்த கூட்டத்தினர் தங்கள் தங்கள் “கூட்டாளிகளுடன்” கும் பல் கும்பலாக நின்று கொண்டிருந்தனர். நேரம் போக நின்றுதானே ஆகவேண்டும். ஆமாம்; எட்டு மணிக்குத் தான் நடனம் ஆரம்பிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆகக் கடைசி நேரத்தில் “அறக்கப் பறக்க” ஓடிக் கொண்டிருக்காமல் ஆரம்பத்திலிருந்தே பார்த்து விட வேண்டும் என்ற கலைரசிகப் போக்கில் கூடியிருந்த கூட்டம் அது.
தேசிய அரங்கத்தின் முன்னால் கட்டப்பட்டிருந்த செயற்கை நீர் வீழ்ச்சியின் முன்னால் ஆங்காங்கே நின்று கொண்டு வண்ண நீரின் வடிவழகை வர்ணித்துக் கொண்டிருந்தனர் பலர். வாடிக்கை ஜோடிகளுக்கு அது அலுத்துப் போன ஒன்றாக இருக்கலாமோ என்னவோ அதையொரு பொருட்டாகக்கருதாமல் தங்கள் கைப்பிடியில் கவனம் செலுத்திக்கொண்டு மீன் காட்சிச் சாலையின் எதிரில் உள்ள திடலிலோ அல்லது மலைமீதோ “நல்ல இடம்” தேடிக்கொண்டு உல்லாசமாக நடந்து கொண்டிருந்தனர். சில ஜோடிகளின் வேகம் சொல்லி முடியாதது. எண்ணிக்கையிடாத நாற்காலிகள் போடப்பட்டிருக்கும் நாடக அரங்குகளுக்குள் முண்டியடித்துக் கொண்டு செல்ப வர்களைத்தான் நினைவுக்குக் கொண்டுவரும் அவர்களின் அந்தப் போக்கு. அவர்களுக்கு என்ன அவசரமோ? யாருக்குத் தெரியும். “பாம்பின் கால் பாம்பறியும்” என் பார்கள்.
என்னதான் சிங்காரித்து விட்டிருந்தாலும் செயற்கை செயற்கைதான்! இயற்கையின் ரகசியமே ரகசியம். என் சிந்தனை இயற்கை – செயற்கை அழகுகளின் எடையைக் கணிப்பதிலே எடுத்தடி வைத்திருந்தது. கடற்கரையோரத் தில் இருந்து பார்க்கும்போது மாலை வெயிலின் தங்கநிறக் கதிர்கள் தண்ணீரில் பாய்ந்து “தகத் தகாயம்” ஏற்படுத்துவதற்கு முன்னால் நீருக்கடியில் வண்ண விளக்குகளைப் பொருத்தி பீறிட்டெழும் நீரில் வண்ணக் கலவை ஒளிக்கற்றைகள் பட்டு அழகை ஏற்படுத்துவது எம்மாத்திரம்? இயற்கையின் வண்ண ஜாலமே ஜாலம் என்று வியந்து “இத்தனை மாயங்களும் உன்னாலல்லவோ இறைவா?” என்று நினைத்து இயற்கையின்பால் நெஞ்சைப் பறி கொடுத்துச் செயல் மறந்துநின்றேன்.
“கழுதை பொதிசுமக்க ஆரம்பிச்சிடிச்சா…?” என்று கத்தினான் நண்பன் பத்துமலை. அவன் சொன்னது ஒரு வகையில் சரிதான் என்று நினைத்ததும் எனக்குக் கொல் என்று சிரிப்பு வந்தது.
“ஏண்டா சிரிக்கிறே ? அறைஞ்சனா பாரு ! கேள்வியும் ஆத்திரமும் சேர்ந்தே பிறந்தது அவனுக்கு. இல்லேடா ; எழுத்தாளன் கற்பனைகளைச் சுமக்கின்றான்; தாய் கரு வைச் சுமக்கிறாள். அதுமாதிரி….சொல்ல முயன்ற என் னைத் தடுத்து நிறுத்தி, “சரிதான் வாடா…” என்று கற்பனை யைக் “கட்” பண்ணிவிட்டு என்னை அழைத்தான்.
“இன்னும் எங்கேடா….?” என்று அலுத்துக்கொண். டேன். இங்கேயே உட்கார்ந்து ஏதாவது பேசிக்கொண்டி ருப்போமே என்று அங்கலாய்த்துக்கொண்டேன். இங்கே இருந்தா நீ எங்கேயாவது போயிடுவே; அப்புறம் உன் மூஞ்சிய பார்த்துக்கொண்டு நான் கொட்டாவி விடனும். அதெல்லாம் முடியாது வாடான்னா!” என்று கூறி என் பதிலுக்குக் காத்திருக்காமல் முன்னால் நடந்தான் – நடந்தேன்.
சீனத்துச் சிங்காரிகள் சிற்றாடை சுழல, சிற்றிடை குலுங்க சிரித்துப் பேசிச் சென்ற காட்சி சிந்தனையை ஒரு கிள்ளு கிள்ளத்தான் செய்தது. உடன்கட்டை ஏறுவது போலத்தான் உடலங்கள் ஒன்று சேர்ந்து நடந்து கொண்டிருந்தன. “ஏண்டா, இவர்களுக்கு மறைவிடம் ஒரு கேடா?” என்று மிதமிஞ்சி வந்த ஆத்திரத்தில் நண்பனைக் கேட்டேன்.
“அடே, உத்தமபுத்திரா…. உன்னையே நீ உலகம் என்று நினைத்துக் கொண்டிருக்காதே… பரந்த வெளி பல மாதிரிகள் இருக்கத்தான் செய்யும் – பதறாதே வா..” என்று தத்துவம் கூறிக்கொண்டு அவன் நடந்து கொண்டேயிருந்தான். எனக்கு ஏனோ தொடர்வதற்குத் தோன்றவில்லை. கண்ணராவிக் காட்சிகளைக் கண்டுவிட்ட கண்களைக் கங்கை நீர் விட்டுக் கழுவ வேண்டும் போல் கருதியது என் மனம். நான் அவன் பின்னால் வரவில்லை யென்பதை பத்துதப்படி தொலைவில் சென்ற பிறகுதான் உணர்ந்திருக்கின்றான். அவனும் திரும்பி விட்டான் வந்த வழி செல்ல…! அப்போது ஏறக்குறைய ஏழரை மணி இருக்கும். அரங்கத்துக்குப் போக ஆயத்தமானோம். இரண்டடி எடுத்து வைத்தவுடன் எங்கிருந்தோ ஒரு கூக்குரல்! – இல்லை; அழுகுரல்! என்ன அது? இருவரும் ஏக காலத்தில் கேட்டுக் கொண்டோம். இனி நாம் இங்கே நிற்கக்கூடாது. இப்படி அசம்பாவிதங்கள் அவ்வப்போது நடைபெறத்தான் செய்யும். நாம் போய் விடுவோம் வா…என்று என்னைத் துரிதப்படுத்தினான் நண்பன். அரைகுறை என்றால் எனக்கு அறவே பிடிக்காது. என் வலியுறுத்தலுக் கிணங்கி இருவரும் அழுகுரல் கேட்ட திசை நோக்கிச் சென்றோம். அங்கே…அங்கே….!
ஓர் இளம் பெண்….! சற்றே சரிந்த குழல் – உதிர்ந்த மலர் கசங்கிய மேலாடை வாடிய முகம் “அலங்கோலக் காட்சி”யில் செத்துக் கிடந்தாள். இளைஞன் ஒருவன் ஏதும் புரியாத நிலையில் ஏக்கம் பிரதி லிக்க விக்கி விக்கி அழுது கொண்டிருந்தான். அவன் காலடியில் கசங்கிய மலராகக் கருகிக் கிடந்தாள் அவள். “கற்பூரக் காட்டினிலே கனல் வந்து விழுந்ததம்மா – இரு காலடியில் கன்னி மலர் கசங்கியே உலர்ந்ததம்மா…பெண்ணே உன் கதி இதுதானா….?” – பாடல் தேசிய அரங்கத்திலிருந்து ஒலித்துக் கொண்டிருந்தது. நிகழ்ச்சி ஆரம்பிக்கப் போவதற்கான அறிகுறி அது. நண்பன் விரைவுபடுத்தினாள். அவனை மட்டும் அரங்கத்துக்கு அனுப்பிவிட்டு அவள்தன் சாவுக்குக் காரணம் கண்டு பிடிப்பதில் முனைந்தேன். இதற்கிடையில் போலீஸ் வேன் ஆம்புலன்ஸ் அனைத்தும் வந்து விட்டது. அவளை ஆம்புலன்சில் பயணப்படுத்தினார்கள்.
கைகோர்த்து வந்தவனின் கைகளைக் கோர்த்து விலங்கிட்டு அழைத்துச் சென்றார்கள் போலீசார். வெறிச் சோடிக் கிடந்த நிர்மலமான வானைப் பார்த்துக் கொண்டிருந்த என் வாய் என்னையுமறியாமல் “நிலையற்றது மனித வாழ்க்கை” என்ற சொற்களை உதிர்த்தது. காரணமறியக் காத்திருந்த நான் ஏமாற்றம் எதிரொலிக்க எப்படியோ அரங்கத்துக்குள் நுழைந்து விட்டேன். கண்கள் கண்கவர் நடனத்தில் கருத்தெல்லாம் கன்னிப் பெண் மரணத்தின் காரணம் அறிவதில்! முடிந்தது நடனம் விடிந்தது பொழுது!
நாளிதழ்களில் செய்தி பிரசுரமாகியிருந்தது. காரணம் தெரியவில்லை காதலன் சிறைப்படுத்தப் பட்டிருக்கின்றான் – புலன் விசாரணை நடைபெறுகிறது – காதலனே கொன்றிருக்கலாம் எனவும் போலீசாரால் யூகிக்கப்படுகின்றது. இதுதான் பத்திரிகைகளில் வந்திருந்த செய்தி. ஏனோ என் மனம் அமைதிய டையவில்லை. எப்படியும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று என்மனம் துடித்தது. முயன்றேன் ; முடிவு…!
சிங்கப்பூர் “பிரபலங்களில்” அவரும் ஒருவராக இருந்தார். வளர்க்க – படிக்க வைக்க வசதியும் வாய்ப்பும் இருப்பவர்களுக்குத் தான் ஏனோ வாரிசுகள் இருப்பதில்லை. அப்படியே இருந்தாலும் அபூர்வமாக ஒன்று அல்லது இரண்டு இருக்கும். ஆரம்பப் பள்ளிக்கு அனுப்பக்கூட அருகதை யற்றவர்களுக்குத் தான் ஆண்டவன் ஏனோ அதிகமாகக் “கடாட்சம்” தருகின்றான். நீண்ட கால வேண்டுதலில் நீலகண்டருக்குப் பிறந்த ஒரே வாரிசுதான் பிரேமா. பெயர் என்னவோ பிரேமாதான். செல்லப் பிள்ளையாக, வெல்லக்கட்டி கிடைத்ததால் நீலகண்டர் முதல் அவர் வீட்டு வேலைக்காரர்கள் வரை அனைவரும் “பாப்பா” என்று தான் கூப்பிடுவார்கள். பிரேமா என்ற பெயர் அடையாளக்கார்டு வரைதான். செல்லப் பெயர்தான் அவளுக்கு விளங்கிற்று.
பாப்பா, “பாப்பா” பருவத்திலிருந்து மாறி பள்ளிப் பருவம் எய்தினாள். பள்ளிக்குச் சென்றாள். “பாப்பா” பாட்டிலிருந்து பாரதியார் பாட்டுக்கு வந்து விட்டாள். பள்ளிக்கூட டிரஸ் மாறி பார்டர் போட்ட சேலையாகத் தேடித் தேடிக் கட்டினாள். ஆமாம், பாப்பா இப்போது பருவ மடந்தை. இது நாள் வரை அவள் தலைவலி என்றுகூடப் படுத்ததில்லை யாரிடமும் சொன்ன தில்லை. திடீரென்று ஒரு நாள் குளிர்கிறது என்று போர்த்திப் படுத்ததுதான் தாமதம். டாக்டருக்கப் போன் பறந்தது. தொலைபேசிச் செய்தி கிடைத்து டாக்டர் வீடுவந்து சேருவதற்குள் காய்ச்சல் சாதாரண எல்லையை மீறி நின்றது. டாக்டர் சோதித்துப் பார்த்தார். நீலகண்டரின் மனைவியை மட்டும் தனியாக அழைத்து என்னமோ இரகசியமாகக் கேட்டார். அந்த அம்மாள் பதிலுக்கு, “ஆமாங்க இன்னைக்கு மூணாம் நாளுங்க டாக்டர்” என்று கூறினார். நினைவிழந்து கிடந்த பாப்பாவின் பக்கத்திலிருந்த நீலகண்டர் பதறிப்போய் ஓடிவந்து “என்னங்க டாக்டர்?” என்று கேட்டார். பரிசோதனையில் பாவம் காட்டினார் அவர்.
“இந்த மருந்தைக் கொடுங்கள். ஊசி போடுகிறேன். குணமாக எப்படியும் ஒர வாரமாகலாம். நிலைமையறிந்து எனக்கு அவ்வப்போது டெலிபோன் செய்யுங்கள். தேவைப்பட்டால் வந்து பார்க்கிறேன்” “கிடுகிடு” என்று சொல்லிவிட்டு டாக்டர் விரைந்து போய்விட்டார். டாக்டர் தம் அந்த விரைவில் ஏதோ ஒன்று அடங்கிக் கிடப்பதாகப் பெற்றோர்கள் உணர்ந்தார்கள். பெற்றவர்கள் தானே; பேதலித்தார்கள் – பேந்தப் பேந்த விழித்தார்கள். “ஆண்டவன் நம்மைக் கைவிட மாட்டான் அவன் அருளால் கிடைத்த பிள்ளை – அதற்கு ஒன்றும் ஆகாது” என்று ஆறாத்துயரை அடக்கிக்கொண்டு ஆறுதல் சொன்னார் நீலகண்டர். அவரென்ன, ஆள்பவன்கூட ஆறுதலுக்காக ஆண்டவனைத்தானே துணைக்கழைக் கின்றான். அவருக்கும் உள்ளூரக் கலக்கம்தான். ஆனாலும் அவரே வெளிப்படையாகக் கலங்கினால் அப்புறம் அந்த அம்மாளை யார் தேற்றுவது? யார் தேற்றுவது? மனத்துக்குள் புழுங்கினார் – புழுவாகத் துடித்தார். நம்பினார் கைவிடப் படுவதில்லை என்ற நம்பிக்கையில் ஆண்டவனிடம் அடைக்கலம் கேட்டு அமைதியுற்றார்.
நீலகண்டர் வாய்க்குச் சர்க்கரைதான் போடவேண்டும். ஆமாம் ; அவர் சொன்ன மாதிரியே ஆண்டவன் அவர் களைக் கைவிடாமல் இருந்தார். பிரேமா ஒரு மாதத் தொடர்க்காய்ச்சலால் பாதிக்கப்பட்டாளே தவிர வேறெந்த வேண்டாததும் நடந்துவிடவில்லை. சரீரம் கொஞ்சம் சரிந்தி ருந்தது – சாரீரம் சற்று இறங்கியிருந்தது. தெம்பு இல்லாம லிருந்தாள். இருக்காதா என்ன? ஆப்பிள் ஜுசும், ஆரஞ்சுப் பழச் சாறும், ஹார்லிக்சுமாகவே அருந்தி உடம்பை “தங்கப் பஸ்பம்” சாப்பிட்ட மாதிரி கட்டுக் குலையாமல் – கவர்ச்சி குறையாமல் இருந்தவள் அரை வயிற்றுக் கஞ்சி கூடக் குடிக்காமல் முப்பது நாட்கள் முழுமையாகப் படுத்த படுக்கையிலேயே இருந்தால் என்ன ஆகும் ? தேங்கியிருந்த சத்துதான் அவளைக் காப்பாற்றியது. உயிர் இருந்தால் போதும்; உடம்பைத் தேற்றிக் கொள்ளலாம் என்று உயிரையே விட்டார்கள் பெற்றவர்கள்.
ஒரு மாத காலத்துக்குப் பிறகு ஒருவாறு எழுந்து உட்கார்ந்தாள் பிரேமா. டானிக் டப்பாக்கள் பழக் கூடைகள் – சூப் வகைப் புட்டிகள் அனைத்தும் வந்து இறங்கின. இல்லாதவர்களா என்ன? கடன் வாங்கியா வாங்கப் போகிறார்கள்? டாக்டர் இப்போதும் வந்து போய்க் கொண்டு தான் இருந்தார். நீராகார நிலைமையிலிருந்து விடுபட்டு நீரும் ஆகாரமும் உட்கொள்ளும் அளவுக்குத் தெம்பு பெற்றாள். பிரேமாவின் தோழிகள் ஆள் மாற்றி ஆள் அவள் பக்கத்திலேயே உட்கார்ந்து கதை பேசிக்கொண்டிருந்து கலக்கத்தைப் போக்கிக்கொண்டு வந்தார்கள்.
“பூரண குணம் ஆகிவிட்டது இனி மருந்து தேவையில்லை” என்று டாக்டர் உறுதியாகச் சொன்னார். கடவுள் புண்ணியமும், உங்க புண்ணியமும் சேர்ந்துதான் எங்க மகளைக் காப்பாத்தியிருக்குங்க டாக்டர் என்று உதட்டளவில் இல்லாமல் உளமார்ந்தே தங்கள் நன்றி யைப் புலப்படுத்திக்கொண்டார்கள் பெற்றவர்கள்.
“இருப்பினும்….” என்று எதையோ சொல்ல ஆரம் பித்த டாக்டர் “என்னங்க டாக்டர்” என்று ஏககாலத்தில் எழுந்த இடைமறிப்பால் கொஞ்சம் நிதானித்தவாறு, “உங்கள் ஆறுதலுக்காக வேண்டுமானால் ஒரு “மெடிக் கல் சர்டிபிகேட்”தருகிறேனே….” என்று வலிய சிரிப்பை வரவழைத்துக்கொண்டது போலச் சிரித்துக் கொண்டே சொன்னார். எல்லோருமே; பிரமோ உட்பட எதற்காகச் சிரிக்கிறோம் என்பது தெரியாமலேயே சிரித்தார்கள். இதற்கிடையில் பணக் கற்றை ஒன்றை எடுத்து வந்து டாக்டரிடம் நீட்டினார் நீலகண்டர். டாக்டர் அந்தப் பணக் கற்றையைப் பார்த்து ஒரு புன்சிரிப்பு உதிர்த்தார். அந்தச் சிரிப்பில் வறட்சி இருந்தது. “நீங்க சாயந்திரமா ‘டிஸ்பென்சரிக்கு’ வந்து சரியான கணக்குப் பார்த்துவிட்டு சர்டிபிகேட்டும் வாங்கிக் கொண்டு வரலாம். இப்ப நான் அவசரமா ஒரு பேஷண்டைப் பார்க்கப் போகிறேன்…” என்று பதிலுக்குக் காத்திராமல் விருட்டென்று எழுந்து ‘விர்’ எனப் போய்விட்டார் டாக்டர். டாக்டரின் இந்தப் போக்கு அங்கு பெரியதொரு பரபரப்பையே உண்டு பண்ணிவிட்டது. அவரவர்கள் சிந்தனைக்கேற்ப அந்தப் போக்குக்கு அர்த்தம் கற்பித்துப் பார்த்துக் கொண்டார்கள்.
நீலகண்டர் மட்டும் நெற்றியைச் சுளித்தவாறு, “அவசரப் பட்டுவிட்டேன்” என்று சொல்லிக்கொண்டார்.
“அப்பாவுக்கு இங்கிதமே தெரியாது. இப்படித்தான் எதையாவது செய்துவிட்டு அப்புறம் வருத்தப்படறது” என்று பிரேமா கடிந்துகொண்டாள்.
அந்த வீட்டில் நாற்பது நாட்களுக்கப்புறம் பிரேமாவின் நளினக் குரல் “கணீர்” எனக் கேட்டது. அம்மாடியோ…! நீலகண்டர்; ஏம்மா நிறுத்திட்டே! ஏசும்மா நல்லா ஏசும்மா….உன் தேன் குரல் கேட்டால் போதும் என்று பூரித்தார். பிரேமாவின் தாயார் பிறைநெற்றி தொட்டு நெட்டி முறித்தார். “கடக்” – நெட்டி நன்றாக முறிந்தது. “கல்லெறி பட்டாலும் கண்ணெறி படக்கூடாதும்பாங்க, திட்டி சுத்திப்போடணும்….” என்று தனக்குத் தானே பித்துப் பிடித்தவள் போலச் சொல்லிக்கொண்டார் கள். அவ்வளவு ஆனந்தம். பிரேமாவின் மீது அந்தத் தாயும் தந்தையும் வைத்துள்ள அளவுகடந்த பாசத்தைக் கண்டு தோழிகள் சிலர்கூட நெஞ்சம் நெகிழ்ந்தார்கள்.
மாலை மறைந்துகொண்டிருந்தது. உலகம் இருளைச் சுமக்க ஆரம்பித்தது. நீலகண்டர் வெளிறிய முகத்தோடு எதையோ பறிகொடுத்தவர் போல உணர்ச்சியற்ற பிண்டம் போல நடந்து வந்து உள்ளே நுழைந்தார். ஏன்? ஏனோ!
நீலகண்டர் வெளியேறிய சற்று நேரத்துக்கெல்லாம் “பேங்க்” திவாலான செய்தி பத்திரிகையில் பிரசுரமாகியிருந்தது. அதைப் பார்த்து அங்கலாய்த்துக் கொண்டிருந்த வீட்டிலிருந்தவர்கள் அவருக்கு அதிர்ச்சியால் எதுவும் ஆகிவிடக்கூடாது என்று ஆண்டவனைப் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்கள். அதே சமயத்தில் ‘சப்த சுரங்களும்’ அடங்கிவிட்ட மாதிரியில் அவர் வந்து உள்ளே நுழைந்தார். அங்கே சிறிது நேரம் சுடுகாட்டு அமைதி சூழ்ந்து கொண்டிருந்தது.
யாரும் எதுவும் பேசவில்லை. பெருமூச்சு கூட இல்லை. அத்தனை பெரும் அமைதி. நீலகண்டரின் மனைவி மெதுவாகப் பேச ஆரம்பித்தார்கள். அடக்க முடியாத துன்பத்தை அடக்கிக்கொண்டு, ‘நமக்குக் கொடுத்து வைத்தது அவ்வளவுதான். கடவுள் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு கவலைப் படாமல் இருங்கள்’ என்று மட்டும் எப்படியோ விம்மலுக்கும் விக்கலுக்கும் இடையில் சொல்லி முடித்துவிட்டார்கள்.
அதற்குள் இங்கே எப்படி….? அவர் மனம் துணுக் குற்றது. நீலகண்டர் வெறிச்சோடிய பார்வை ஒன்றை உதிர்த்தார். பத்திரிகையில் பார்த்து விட்டோம் பதறுவதால் என்ன பலன்? கொஞ்சம் ஆறுதலாக இருங்கப்பா… என்று நீர் மல்கிய விழிகளைத் துடைத்துக் கொண்டே பிரேமா மங்கலான குரலில் சொன்னாள்.
இப்போதுதான் நீலகண்டருக்கு “சுதாரிப்பு” வந்தது. தன்னுடைய கலக்கத்துக்கு அவர்கள் கொண்டிருக்கும் காரணத்தைத் தாம் புரிந்துகொண்டதைப் புலப்படுத்திக் கொள்ளாதவாறு, அவர் எல்லாவற்றுக்கும் பொருந்து மாறு, “நாமொன்று நினைக்கக் கடவுள் ஒன்று நினைக்கிறது எல்லாம் அவன் சித்தம்” என்று சொல்லிவிட்டு எழுந்து போய்விட்டார் நீலகண்டர்.
தன்னுடைய பொறுமலுக்குரிய காரணம் வெளிப்ப டாமல் இருந்து விட்டதிலே அவருக்கொரு திருப்தி. தாங்கள் சொன்ன தேறுதல் மொழிகளிலே அதிர்ச்சியிலிருந்து விடுபட்டு ஆறுதலடைந்துவிட்டார் அவர் என்பதிலே அவர்களுக்கொரு சாந்தி. இவ்விரு ஆத்மசாந்திகளும் வெவ்வேறு திருப்பத்தின் முனைகளைத் தொட்டுக் கொண்டு நின்றதுதான் இடைச்செருகலற்ற ஒரு பெரும் விந்தையாக இருந்தது.
பெருங்காயம் இருந்த டப்பா மணக்காமல் இருக்காது. “பெருங்காயம்” பட்ட இடத்தின் வடுவை மறைக்கவும் முடியாது. காற்று கொள்ளும் பலூன் கூட கொள்ளளவுக்கு மிஞ்சிவிட்டால் வெடித்துவிடுகிறதல்லவா?
அதைப் போலத்தான் மனத்துக்குள் போட்டுமறைத்துப் புழுங்கிக்கொண்டிருந்த உண்மையை இப்போது தன் வாழ்விலும் தாழ்விலும் இன்பத்திலும் துன்பத்திலும் இணைபங்கேற்கும் தன் மனைவியின் காதுகளில் ஒலித்து வைத்தார் நீலகண்டர். ஒளித்து வைத்திருந்த அந்தச் செய்தி ஒலித்ததுதான் தாமதம்…ஓலமிட்டு ஒப் பாரி வைத்து அழுது தீர்த்துவிட வேண்டும் போல் அவர்களுக்கத் தோன்றியது. நீலகண்டர் விடவில்லை. “ஐயோ…” என்று தொடங்கும் போதே வாயை இறுகப் பொத்தித் தன் பரந்த நெஞ்சில் அந்த அம்மாளைப் புதைத்துவிட்டார்.
அவ்விருவர் நெஞ்சுக்குள் புதைந்துவிட்டது அந்த இரகசியம். புதைந்துவிட்டதா ? இல்லை. அவ்வப்போது ஏன்; அன்றாடம் புகையத்தான் செய்யும். ஆற்ற மாட்டா மல் அல்லும் பகலும் அறுபது நாழிகையும் அலைக்கழிந் தார்கள். ஆறோடிப் போன பின்பு ஆற்றாமை என்ன செய்யும்? தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது தம்பிரான் புண்ணியம் என்று கூறித்தான் அவர்கள் ஆறுதல் பெற்று வந்தார்கள்.
நாளும் கிழமையும் நலிந்தோர்க்கு இல்லை என்பார்கள். இதனால் நிலைகுலைந்து விட்டார் நீலகண்டர் என்று கருதிவிடாதீர்கள். நிலவி வந்த செல்வாக்கில் எந்தவிதப் பாதிப்பும் இல்லை. நிம்மதிக் குறைவு என்பது மட்டும் தான் அவரை வாட்டி வதைத்தது. நல்லது கெட்டது நடக்கிறது என்பதற்காக நாட்கள் நகராமலா இருக்கின்றன. காலதேவன் வழக்கம்போல் தன் கடமையில் கண்ணும் கருத்துமாகவே இருந்தான். செல்வமும் செல்வாக்கும் சேர்ந்தே நீலகண்டருக்குப் பெருகி வந்தது. ஆனால் நீலகண்டரின் முகத்தில் ஏனோ அந்தப் பழைய பொலிவு இன்னும் வந்த பாடில்லை. ஒப்புக்குச் சிரிப்பார்- ஒப்புதலோடு மிகழ்வதில்லை. சேரும் பொருளும், பேரும் புகழும், அவரைப் பொறுத்தவரை, “கானில் மழை பெய்தென்ன? நாய்ப்பால் சுரந்து மென்ன?” என்ற பாடலுக்கு உடன்பாடாக இருந்து வந்தது. இளமை தரும் செழுமையை முன்னிலும் பன்மடங்கு பெற்று முகராசி கொண்ட மகராசியானாள் பிரேமா. இன்பத்தின் எக்களிப்பில் இறுமாந்தாள் பிரேமா! துன்பத்தின் விளிம்பில் துவண்டார்கள் பெற்றோர்கள்.
பிரேமாவிற்குத் துணையாக எப்போதும் கூடவே இருப்பதற்காக சம்பளம் கொடுத்து ஒரு வேலைக்காரியை அமர்த்தியிருந்தார் நீலகண்டர். வேண்டுமானால் ஆங்கி லத்தில் சொல்வார்களே “ஸ்பை” என்று அந்த மாதிரியில் தான் அந்த வேலைக்காரியைத் துணை வைத்திருந்தார்கள் என்று கூடச் சொல்லலாம். சொல்ல முடியுமா ? காலம் கெட்டுக் கிடக்கிறது. அதிலும் கண்டவர்கள் கருத்திழக்கும் கண்கவர்ப்பாவையவள். ஒருநேரம் போல இருக்குமா? ஒரே பிள்ளை. உல்லாச புரியில் இருப்பவள். கணநேரத் தவறுதலில் … நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் பொறுக்கவில்லை நீலகண்டருக்கு.
தனிமனித சுதந்திரத்தைப் பறிப்பது தவறு என்ற கொள்கையை உடையவர் நீலகண்டர். ஆகவே தான் தன் மகள் பிரேமாவைச் சுதந்திரப் பறவையாக்கி யிருந் தார் . தளையறுந்திருக்கும் வேகத்தில் தவறு நிகழ்ந்து விட்டால்? அதற்குத் தான் துணை வைத்திருந்தார். தலைவியும் தோழியும் தன்னிகரற்ற இன்பத்தில் இணைந்தே இருந்து வந்தார்கள்.
கட்டுக்குள் அடங்கும் பெட்டி; பெட்டிக்குள் அடங் கும் பொருட்கள். இதுதான் உலக நியதி. இந்த எதிலுமே அடங்காதது இளமை. ஆம்; அதுதான் காதல். எப்ப டியோ வந்து விடுகிறது அந்த வயது வந்து விட்டால். தடுத்து நிறுத்த முடியுமா? அந்த வேலைக்காரி பாவம்; அவள் ஒரு விளையாட்டுப் பொம்மைதானே….! அது வும் “தலையாட்டிப் பொம்மை! தலையாட்டிக்கொள்ள வேண்டியது அவள் தலைவிதி. இல்லாவிட்டால் சம்பளம் பெறும் “தோழியாக” இருக்கமுடியுமா? தலைமறைவாகத் தானே – தடுத்து நிறுத்துவானேன் என்று அவளும் தலையாட்டிக் கொண்டாள்.
ஆயிரக்கணக்கானோர் குழுமியுள்ள “அரங்கில்” உதயமாகி, நூற்றுக்கணக்கானோர் கூடும் ‘நூலகத்தில்’ உறவாகி, ஒரு சிலரே வந்து போகின்ற “பார்க்கில்” மலர்ந்து மணம் பரப்பியது. அவர்கள் – அதுதான் பிரேமா ஜோடி காதல்!
பழக்கம் “பழுத்து வந்து” கொண்டிருக்கும் பருவத் தில் ஒரு நாள் காதல் தலைவன், “பனிமலர்ப் பார்வையில் பரவசம் கொண்டேன்-உந்தன், பழரசப் பேச்சில் பறி கொடுத்தேன் நெஞ்சம் பறிகொடுத்தேன்…” என்று ஓர் உயிர்க் கவிதையே பாடி விட்டான். தேனருவிப் பேச்சில் திசை திரும்புவாள் என்ற ஓர் அவலாசை அந்தக் காதல் தலைவனுக்கு. தலைவி தன்னடக்கத்தோடு சுருக்க மாக “உலகம் தூற்றாத உறவுக்கு துணை நிற்பீர்” என்று சொன்னாள். தலைவன் தலைவி சொன்ன சொல்லுக்குத் தலை வணங்கினாள். உறுதி கொண்டனர் இருவரும்.
நாள் தப்பினாலும் இவர்கள் சந்திப்பு மட்டும் தவறாது : ஆயினும் அன்றொரு நாள் அவர்கள் எடுத்துக் கொண்ட “அந்த’ உறுதியிலிருந்து அணுவளவும் தவ றாது “தெய்வீக உறவு” கொண்டு வந்தார்கள்.
“மூக்கு செவந்திடுச்சே… முகூர்த்த பிராப்தம் வந்தாச்சே… மாலை பூத்துடுச்சே… வேளை வந்தாச்சு… என்று அவ்வப்போது நீலகண்டர்தம் வீட்டுக்கு வந்து போகும் “பெரியவர்கள்” பேச்சைத் தொடங்கி வைத்தார் கள். என்னென்ன வியாதிக்கெல்லாமோ மருந்து கண்டுபி டிக்கின்றார்கள். மற்றவர்கள் விஷயத்தில் அனாவசியமாகத் தலையிடும் சில “ஆர்ப்பாட்டங்களுக்கு” ஒரு மருந்து கண்டுபிடிக்க வில்லையே என்று எரிந்து விழுந்தார் நீலகண் டர்.அவர்தம் ஆத்திரம் அவருக்குத் தானே தெரியும்…?
கனிந்திருக்கும் மரமென்றால் கல்லெறி படத்தானே செய்யும். அந்த ஓர் உலக நியதிக்கு மட்டும் நீலகண்டர் தப்பவே முடியவில்லை. தரகர்கள் வந்து சென்றனர். மூணாங்கால் நாலாங்கால் சொந்தம் கொண்டாடிக் கொண்டு உறவினர்கள் வந்து போய்க் கொண்டிருந்தார்கள். “வராதே” என்று சொல்ல முடியுமா? சந்தர்ப்பத்துக்கு ஏற்றார் போல் சமாதானங்களும் காரணங்களும் சொல்லிச் சமாளித்து வந்தார்கள் நீலகண்டர் தம்பதிகள். மிகவும் இக்கட்டான சமயங்களில் பிரேமாவையே கூப் பிட்டு சம்மதம் கேட்டார்கள். சரி என்று வருமா ? எப்படி வரும்? மனம் தான் “பசு மரத்தாணி போல்’ பதிந்து விட்டிருக்கிறதே ஓரிடத்தில். “எனக்குக் கல்யாணமே வேணாம்பா – நான் கன்னியாகவே இருந்துடறேன்” என்று அவ்வப்போது பிரேமாவும் சொல்லி வந்தாள். அவர்கள் தம் தீர்க்கமான முடிவுக்கு அந்த வார்த்தைகளும் ஓர் ஆறுதலாகவே இருந்து வந்தன. இருந்தாலும்….இருந்தாலும்…. இயற்கையின் திருவிளையாடல்களுக்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டியவர்களாகத் தான் இருந்து வந்தார்கள். நாளும் பொழுதும் நடை பயின்று கொண்டே இருந்தது.
குறிக்கோளின்றி நடப்பவர்கள் கூட குறிப்பிட்ட அளவு தொலைவு நடந்து விட்டால் களைப்பாறிக் கொள்கிறார்கள். அதுபோல், நீலகண்டர் தம்பதிகள் மனப் போக்குக்கு “முத்தாய்ப்பு” இடவேண்டிய தொலைவுக்குக் காலமும் நேரமும் கடுகிவிட்டது என்றுகூடச் சொல்ல லாம்.
பிரேமாவே, தன் காதல் தலைவனிடம் “காலத்தைக் கடத்தாதீர்கள்” என்று சொல்ல வேண்டிய நிலைமைக்கு வந்து விட்டது. கன்னல் சுவை…..கனிச்சுவை…என்ப தெல்லாம் “புரியாத புதிராக” இருந்து கொண்டேயிருந் தால் அவர்களும் “மனிதப் பிறவிகள்” தானே….? “காத்திருப்பதைவிட மரண வேதனையே மேல்” என்று யாரோ சொன்ன “பொன் மொழி” நினைவுக்கு வந்து விட்டிருக்க வேண்டும். பிரேமா தன் வீட்டில் நடை பெறும் வழிமுறைகளோடு பெண் கேட்க வரும்படி தூண்டினாள்.
பிரேமா “வழி காட்டி” யதன்படி காதல் தலைவன் பெற்றோர்கள் சகிதம் பெண் கேட்க வந்தான். பிரேமா வுக்கு அன்று நிலைகொள்ளவில்லை. வலிந்து வலிந்து வந்து பெற்றோர்கள் சொல்லும்போதெல்லாம் அலட்சி யம் செய்து வந்தவள் இன்று வலியவலியச் சென்று அலங்காரம் செய்து கொண்டாள். ஆயிற்று நேரம்! அவர்களும் வந்தார்கள். வழக்கப்படி பேசிக்கொண்டிருக் கும் போது வழக்கப்படி பிரேமாவைக் கூப்பிட்டுக் கேட்கும் “படலம்” வந்து விட்டது. பழக்கமான பதில் தான் வருமென்று பார்த்துக் கொண்டிருந்த பெற்றோர்களுக்கு, “எல்லோருக்கும் சம்மதமென்றால் எனக்கும் பூரண சம்மதம்” என்று பிரேமா சொன்னவுடன் திகைத் துப் போய் நீலகண்டரும் அவர்தம் மனைவியும் பேய றைந்தது போல் ஒருவரை யொருவர் பார்த்துக் கொண்டனர்.
நீலகண்டர் கண்ணசைத்தார். பிரேமாவின் தாயாரும் தந்தையாரும் தனியறை சென்று ஏதோ “கிசுகிசுத்துக்” கொண்டார்கள். பிரேமா நிலைகலங்கிப் பிதுங்கிய விழி இமைக்காது தன் அறையில் நின்று கொண்டிருந்தாள். நீலகண்டர் மட்டும் பிரேமாவின் அறைக்கு வந்து “என் னம்மா இது” என்று மட்டும்தான் கேட்டு வைத்தார். பிரேமா “பிரசங்கம்” வைக்கவில்லை. இரண்டே வரிக ளில் சொன்னாள். நான் அவரைக் காதலிக்கிறேன்- எங்கள் உறவை முறித்தால் முடிவைப் பிறகு சொல்கிறேன்…. என்பவைதான் அந்த இரண்டு வரிகள். நீலகண்டரின் நெற்றி சுருங்கி நெளிந்தது – வியர்த்துக் கொட்டியது. வியர்வையைத் துடைத்துத் துளிர்த்து விட்ட வண்ணம் நீலகண்டர் சிரித்தார். அப்பாவின் புன்னகையில் அம்மா வின் சம்மதமும் பிரதிபலிப்பதாக பிரேமா உணர்ந்தாள்.
அப்பாடா…? நீலகண்டர் ஒன்பான் ரசங்களில் எந்த ரசமும் முகத்தில் தொனிக்காதவாறு சம்மதம் தெரிவித்தார். “ரெடிமேட்” உலகத்தில் கேட்கவா வேண்டும். எல்லாம் ரெடியாகவே வந்திருந்தார்கள் மாப்பிள்ளை வீட்டார். “எங்க்கேஜ் மெண்ட்” மோதிரம் விரல் மாறியது. மண நாள் குறித்தாயிற்று.
பிரேமா பக்கத்திலிருந்த தன் தோழியைக் கன்னம் சிவக்க கடித்து விட்டாள். தோழிக்கு “அண்டசராசரமும்” கலங்கியது. பாசாங்காகச் சிரித்தாள். பாவி மகளுக்கு இத்தனை துடிப்பா? நினைந்தாள் நிலை குலைந்தாள். அவளுக்கு நிம்மதியே இல்லை – அத்தனை அலைக்கழிப்பு!
நீலகண்டர் வீடு நெறிதுளிபட்டுக் கொண்டிருந்தது. முதல் முதலாக நடைபெறப்போகும் முக்கிய விசேசமல்லவா?” திங்கட்கிழமைதான் திருமணம். சனிக் கிழமை சாங்கிய பூர்வமாக “அரசாணைக்கால்” நட்டு பந்தல் எழுந்து விட்டது. அலங்கரிப்பு வேலைகள் அதிமும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருந்தன.
“கிரேப்’
பூக்காகித மல்லிகை மலர்கள் சரம் சரமாக கோர்த்துக் கொண்டிருந்தனர். ஆமாம்; போடப் போவது மல்லி கைப் பந்தல் தானே…. ! மணக்கும் மல்லிகையே மலைய ளவு குவிக்க முடியும். ஆனால் அது வாடி விடுமல்லவா? ஆகவேதான் “வாடா மல்லிகை” தயாராகிக் கொண்டிருந் தது. வாடாது என்றாலும் “கசங்கி விடும்” என்பதைப் பற்றி யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. துரிதமாக மல்லிகை மலர்ந்து கொண்டிருந்தது. தூரத்து உறவுகள் “நலுங்கு” வைக்க நான் முந்தி நீ முந்தி என்று போட்டி போட்டுக் கொண்டு இருந்தார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகை நாட்டம்!
வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடம் கழியும்போதும் நீ உன்பிணக் குழியை நோக்கி ஒவ்வோர் அங்குல தூரம் நகர்ந்து கொண்டிருக்கிறாய்” என்று இயேசுநாதர் சொன்னார். அதைக் கருதிக்கொண்டிந்தால் முடியுமா? நேரம் வந்தால் எல்லாம் சொல்லிவைத்தாற்போல் நடக்கும்.
மாலை மணி ஐந்தாயிற்று. பிரேமா அலங்காரப் பதுமை போல் வந்தாள். சென்னை சகோதரிகள் சசி, கலா, மாலா டான்ஸ் பார்க்கப் போக அனுமதி பெறத் தான் வந்திருந்தாள். திருமண வேலைகளில் திக்குமுக்கா டிக்கொண்டிருந்த அப்பாவும் அம்மாவும் கொஞ்சம் முணுமுணுத்தார்கள். அவர்களைச் சமாதானப்படுத்தவும் சம்மதம் வாங்கவும் அவளுக்கா தெரியாது?
அப்பா….. நான் கடைசி கடைசியா இந்தக் கலை நிகழ்ச் சிக்கு மட்டும் போறேம்பா…என்று சிணுங்கினாள். அப்ப டிச் சொல்லாதேம்மா….அவள் வாயைப் பொத்தினார் நீலகண்டர். நெருப்பென்று சொன்னால் வாய் சுட்டுவிடாது என்று அவருக்கும் தெரியும். ஆனாலும் மனம் கேட்கவில் லையே…! இல்லேப்பா…. தாய் வீட்டிலிருந்தது போல் சுதந்திரப் பறவையாக இனி நான் எங்கும் போக முடி யுமா? அதுக்குத்தாம்பா அப்படிச் சொன்னேன். ‘ஐஸ்’ வைத்தாள் பிரேமா! நீலகண்டர் பிரேமாவின் நெருக்குதல் பொறுக்கமாட்டாமல் “சரீம்மா, போ!” என்று சொல்லிவிட்டார்.
இப்போதும் அவருக்கு நெஞ்சில் “சுருக்” என்று பட்டது. எப்போதும், “போயிட்டு பத்திரமா வாம்மா” என்று விடை கொடுத்தனுப்பக் கூடியவர் இன்று மட்டும் ஏதோ வேகத்தில் “சரீம்மா, போ” என்று சொல்லிவிட்டார் அல்லவா? அதுதான் அவருடைய அந்த மின்வேக அதிர்ச்சிக்குக் காரணமாக இருக்குமோ என்னவோ? மனித மனம்தானே; பேதலித்தது!
அன்று சனிக்கிழமையாதலால் வழக்கத்திற்கு அதிக மாகவே கூட்டம் தேசிய அரங்கத்தைச் சுற்றி இருந்தது. அதிலும் நடன நிகழ்ச்சி வேறு இருக்கிறது அல்லவா? திரும்பிய இடமெல்லாம் தெரிந்தவர்கள் இருந்தார்கள். கொஞ்சம் மனம்விட்டுப் பேச “மறைவிடம்” தேடிச் சென்றுகொண்டிருந்தார்கள் பிரேமா ஜோடிகள். போகும் பாதையில் ஆங்காங்கே பல காதற் சிட்டுகள் பல மாதிரிகளில் பசும் புற்றரையைப் பஞ்சுமெத்தையாக்கிக் கொண்டிருந்தார்கள்.
பிரேமாவின் நெஞ்சில் கொஞ்சம் “பிரேமை” உணர்வு பிறந்தது. சபலம் தட்டியது. இன்னும் இரண்டு நாட்களில்தான் திருமணம் ஆகப்போகிறதே; அப்புறம் என்ன? மிகைப்பட்ட சிந்தனையோடு நடந்துகொண்டிருந் தாள் பிரேமா. இடம் கிடைத்தது. இருவரும் அமர்ந்தனர் இல்லை; சாய்ந்தனர். ஆமாம்; பிரேமாவுக்கு உண்மையி லேயே தலை சுற்றியது. அவளுக்கு ஒரு மாதிரி மயக்கம். அந்தச் சாய்வு நிலையைத் தனக்குச் சாதகமாக்கிக்கொண் டான் காதலன். காத்துக் கிடந்தவனாயிற்றே…! முடிவு! முடிவு!! இதோ பிரேமா பிணமாகக் கிடக்கின்றாள்.
பிரேமாவின் மரணச் சேதி நீலகண்டருக்கு அறிவிக் கப்பட்டது. மண வீடு மரண வீடாயிற்று. வாழ்த்தி மங்கள அரிசியும் மலரும் போட வந்தவர்கள் வாய்க்கரிசி போட வந்தார்கள்.
நாளை என்னைத் தூக்கிலிடலாம். அதற்கு முன் எனக்கு ஒரே ஒரு ஆசை. என் ஆசை நாயகியின் முகத்தைக் கடைசியாகப் பார்க்க என்னை அனுமதியுங்கள் என்று கேட்டுக் கொண்டதன் பேரில் காதல் தலைவனும் தகனக் காட்டுக்கு வந்திருந்தான்; எல்லோரும் அழுதார்கள்.
இனி அழுது என்ன ஆகப்போகிறது என்று மனம் வெதும்பினாரோ என்னவோ, நீலகண்டர் மட்டும் அழவே இல்லை. பிரேமாவின் காதல் தலைவனை அழைத்து, “தம்பி, நான் பத்தொன்பது வருடமாக மகளே, மகளே என்று ஆசை தீரக் கூப்பிட்டுவிட்டேன். மனைவி என்று ஒருநாள் கூட உன்னால் பிரேமாவைப் பார்க்க முடியவில்லை. நீ கொடுத்து வைத்தது அவ்வளவு தான். இந்தா, நீ போட்ட “என்கேஜ் மெண்ட்” மோதிரம் என்று பிணமாகக் கிடந்த பிரேமாவின் விரலிலிருந்து மோதிரத்தைக் கழற்றிக் கொடுத்தார் நீலகண்டர். வீறிட்ட முதான் அவன் வெறிச்சோடிப்போய் நின்றார் அவர்!
பிரேமாவின் பிரேதம் எரிந்து கொண்டிருந்தது. “துஷ் டிக்கு’ வந்தவர்கள் கலைந்துகொண்டிருந்தார்கள். நீல கண்டர் காதல் தலைவனுக்குப் பாதுகாவலாக வந்திருந்த போலீஸ் இனஸ்பெக்டரிடம் “வாக்கு மூலம்” கொடுத்தார். உண்மையான கொலைகாரன் நான்தான் இன்ஸ் பெக்டர் என்று நீலகண்டர் சொன்னார். இன்ஸ்பெக்டருக்கு ஒரே அதிர்ச்சி!
பிரேமாவை மாலையும் கழுத்துமாய்ப் பார்த்துவிட வேண்டும் என்று நானும், மஞ்சள் குங்கும மங்களத் தோடு மகராசியாய் வாழும்மா என்று வாழ்த்த அவள் தாயாரும் துடித்தோம். பிரேமாவின் திருமணம் முடிந்த மறுநாளே அவர்கள் இருவரையும் அழைத்து, “பிரேமா தாம்பத்திய உறவு கொண்டால் அந்த நிமிடமே இறந்து விடுவாள் என்று டாக்டர் கொடுத்த மெடிக்கல் சர்டிபிகேட் டைக் காட்டி அவர்களைச் சமாதானப் படுத்திவிட்டு என் மருமகனுக்கு வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து வைக்கவேண்டும் என்று தான் நினைத்தோம். எங்களின் இந்த ஆசை நிறைவேறாமலேயே போய்விட்டது என்று சொல்லிவிட்டு, நான் வீட்டிற்கு வந்து டாக்டர் கொடுத்த அந்த “சர்டிபிகேட்டைத்” தருகிறேன்” என்று விளக்கமா கக் கூறினார்.
பூச்சூடி மங்கல நாண் பூண தோழிகள் புடைசூழ மணமேடை நோக்கி வரவேண்டிய பெண் பூச்சுமந்து பிணக்காடியில் சுடுகாடு சென்றால் அந்தக் கோரம் பூமடந்தைக்குத் தான் ஏற்குமா? நிலமகள் நெடுமூச்செறிந்து கண்ணீர் சொரிந்தாள் போலும். பயங்கரமாக வீசிய காற்றும் மழையும் மல்லிகைப் பந்தலைப் பிரித்துக் கொண்டிருந்தது.
– மனங்கமழும் பூக்கள், முதல் பதிப்பு: நவம்பர் 1997, மலர்மாமணி பதிப்பகம், சென்னை.
![]() |
மு.தங்கராசன் தமிழகத்தின் திருச்சி மாவட்டம் முசிறி வட்டத்திலுள்ள தளுகை பாதர்பேட்டை என்ற ஊரில் 1934ல் பிறந்தார். இரண்டாவது வயதிலேயே தனது தாயை இழந்தவர், தந்தையோடு மலாயாவுக்கு வந்தார். ஜோஹூர் மாநிலத்திலுள்ள ‘நியூஸ்கூடாய்’ தோட்டத் தமிழ்ப் பள்ளியியில் ஆசிரியராக இருந்த தனது தந்தையிடம் தமிழ்க் கல்வியைக் கற்றார். 1955ல் ஆசிரியர் பட்டயம் பெற்ற இவர் உமறுப்புலவர் தமிழ்ப் பள்ளி உட்பட பல்வேறு பள்ளிகளில் தலைமையாசிரியராகவும் ஆசிரியராகவும் பணியாற்றினார். 1955ல் தமிழ்முரசில் பிரசுரமான…மேலும் படிக்க... |