தெய்வங்களும் நானும்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 25, 2025
பார்வையிட்டோர்: 2,015 
 
 

சிறுவயது முதலே எனக்கு தெய்வங்களின் மீது அதீதமான பக்தி உண்டு. எனக்கு சிறுவயதில், முதல் முதலில் அறிமுகமான தெய்வங்கள் எங்கள் தோட்டத்தில் வைத்திருந்த காவல் தெய்வங்கள் கருப்பராயன், கன்னிமார், வேட்டை நாய், நந்தி மற்றும் ஆற்றிலிருந்து எடுத்து வந்து நட்டு வைத்திருந்த நான்கைந்து கல் சாமிகள் தான்.

தை மாதம் பொங்கல் பண்டிகை வரும்போது அந்த தெய்வங்களின் மண் சிலைகள் முந்தைய வருடம் வைப்பது சிதிலமடைந்து விடுவதால் அவற்றை எடுத்து கிணற்றில் போட்டு விடுவார்கள்.

பக்கத்து ஊரில் பானை செய்யும் உடையார் ஒருவர் தன் மாட்டு வண்டியில், மாடுகள் இல்லாமல் கணவன் மனைவியாக நுகத்தைப்பிடித்து வண்டியை தேர் போல் இழுத்து வருவார்கள். சட்டி பானைகளோடு சேர்த்து சிலைகளையும் ஏற்றிக்கொண்டு வந்து கொடுக்கும் புதிய மண் சாமி சிலைகளை, காளைமாடு, நாய் உருவ மண் சிலைகளையும் சேர்த்து அப்பாவின் அப்பாவான அப்பாரு வாங்கி வைப்பார்.

கன்னிமார் சிலைக்கு பாவாடை துணியோடு காதோலை, கருகமணி அணிவித்து , கல் சாமிக்கு பொங்கல், அபிசேகம் தலைவாழை இலை போட்டு படையலிட்டு வாயில் துண்டு கட்டி பூஜை செய்து, சந்தனக் குச்சி சாம்பிராணி காட்டி, தேங்காய் உடைத்து, பழம் ஒரு சீப்பு, வெற்றிலை பாக்கு, காணிக்கை வைத்து தீர்த்தம் சுத்திப்போட்டு வழிபாடு நடத்தும்போது அப்பத்தாவுக்கு கருப்பராயன் கால் போடும். உடனே அவரது கையில் வேப்பிலையை ஒரு பிடி எடுத்து கொடுப்பார்கள்.

‘இந்த வருசம் வெள்ளாமை விளைச்சல் எப்படி இருக்கும்? யாருக்காவது குடும்பத்தில் ஆபத்து இருக்கிறதா?’ எனும் கேள்விகளுக்கு பதில் சொல்லுவதோடு, தனக்கு கிடா வெட்டி வழிபடும்படியும் சாமி சொல்லும்.

அப்பாரு சாமியிடம் எதிர் கேள்வியும் கேட்பார். “போன வருசம் நாங்க வேண்டுனது ஒன்னையுமே நீ நிறைவேத்தி வெக்கிலியே…? அப்பறம் எப்படி உன்ற எசகடத்த நாங்க நெறைவேத்த கெடா வெட்ட முடியும்?” என கேட்பார்.

“இந்த வருசம் நெறைவேத்தறேன். என்ற எசகடத்த நீ நெறைவேத்தோணும். என்ற கோயில்ல பூச பண்ணாம கொறை போட்டீன்னா நாலு தலை முறைக்கு தோட்டத்தக்கொறை போட்டு வெச்சிருவேன்….” என அப்பத்தா மூலமாக கருப்பராயன் மிரட்டலாகக்கூறுவதை கேட்டு மெய் சிலிர்த்திருக்கிறேன்.

அந்தக்காலத்தில் ஒவ்வொரு தோட்டத்திலும் மரத்தடியில் மேடை போட்டு கருப்பராயன், கன்னிமார் வைத்திருப்பார்கள். ‘கோவில் இல்லாத ஊரில் குடியிருக்கக்கூடாது என்பது போல கருப்பராயன், கன்னி மார் இல்லாத தோட்டத்தில் வெள்ளாமை செழிக்காது’ என்று அப்பாரு அடிக்கடி சொல்லுவார்.

சாமி பிடித்து ஆடுவது போலவே சில பெண்களுக்கு ஆவி பிடிப்பதும் உண்டு. செத்துப்போனவர்கள் பேயாக வந்து உயிரோடு உள்ளவர்களைப்பிடித்து தங்களுடைய ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ளுவதாகக்கூறுவார்கள்.

மாலை நேரத்தில் பூ மணத்தோடு சுடுகாட்டு வழிப்பாதையில் செல்வோரை பேய் பிடிக்கும் என்பார்கள். மல்லிகைப்பூவை வைத்துக்கொண்டு மட்டும் செல்ல வேண்டாம் என்பார்கள். வெள்ளைப்பூண்டை உறித்து பச்சையாக ஒரு பருப்பு சாப்பிட்டால் பேய் கிட்டவே வராது என்று அப்பத்தா கூறியதைக்கேட்டதிலிருந்து அந்தப்பழக்கம் எனக்கு வந்து விட்டது.

என்னுடைய பாடப்புத்தகப்பைக்குள் அடுப்புக்கரி, வறண்ட மிளகாய், ஆணி, வெள்ளைப்பூண்டு எப்பொழுதுமே இருக்கும். சிலர் புளியமரத்தில் பேய் தங்காமலிருக்க மரத்துக்கு ஆணியடிப்பார்கள்.

எங்கள் தோட்டத்துக்கருப்பராயன் கோவிலுக்கு பேய் பிடித்தவர்களை அழைத்து வந்தால் தாத்தா வேப்பிலையில் பாடம் அடிப்பார். நான்கு வாரம் வெள்ளிக்கிமை வந்தாலே ஆவி ஓடி விட்டதாகக்கூறுவார்கள். அதற்கு தட்சணையாக பண முடிப்பை கருப்பரராயனுக்கு செலுத்துவார்கள். அந்தப்பணத்தில் கிடாய் வாங்கி ஆடி மாதம் பொங்கல் வைத்து கிடாய் பலியிட்டு ஊரையும், உறவுகளையும் அழைத்து தாத்தா விருந்து வைப்பார்.

தலைவாழை இலை போட்டு, வண்ணாத்தி விரிக்கும் மாத்தில் வாசலில் கீழே உட்கார்ந்துதான் சாப்பிடுவார்கள். நானும் அசைவம் விரும்பி சாப்பிடுவேன். பரம்பரையாக அசைவம் சாப்பிடும் பழக்கம் எங்கள் குடும்பத்துக்கு இருந்தாலும் அம்மா மட்டும் சாப்பிட மாட்டாள். ஆனால் எங்களுக்கு உப்பு நக்கி பார்க்காமல் கூட சமைத்துக்கொடுப்பாள். உப்பு சரியான சுவையைக்கொடுப்பதாகவே இருக்கும்.

கிடாய் விருந்து சாப்பிடும்போது திடீரென சுழல் காற்று வரும். அதில் குப்பைகள் கூட விருந்து உணவின் மீது விழும். அதை கருப்பராயன் வந்து சாப்பிட்டுச்செல்வதாக நம்பி மகிழ்ச்சியடைவார்கள்.

வீட்டிற்குள் பழனிமலைக்கு சென்று வந்த போது பாட்டையன் வாங்கி வந்த ராஜ அலங்கார முருகனுடைய கண்ணாடி பிரேம் செய்திருந்த ஒரே சாமி படம் மட்டும் சுவற்றில் ஆணியடித்து மாட்டப்பட்டிருக்கும். அதற்கு கீழே தட்டத்தில் திருநீறு வைத்திருக்கும்.

அப்பத்தா யாரைப்பார்த்தாலும் அவர்களது பெயர் சொல்லி அழைக்காமல் ‘முருகா, முருகா’ என்றே கூப்பிடுவாள். நெற்றியில் திருநீறு பூசாத நாளே இருக்காது. அப்பத்தா பெயரே முருகாத்தாள்.

அப்பாவை ஐயா எனவும், தாத்தாவை அப்பாரய்யா எனவும், பாட்டனை பாட்டய்யா எனவும் கூப்பிடுவோம். அம்மாவை அம்மா என்றும், பல சமயங்களில் சுருக்கி மா.‌‌… தான். அப்பாவின் அம்மாவை அப்பத்தா எனவும், அப்பாவின் அப்பத்தாவை பாட்டி எனவும், அம்மாவின் அம்மாவை அம்மிச்சி எனவும், அம்மாவின் அப்பாவை அப்புச்சி எனவும் கூப்பிடுவோம்.

அம்மா, வீட்டிற்கு தேவையான மண் பாத்திரங்களை வாங்கி விட்டு அதற்கு விலையாக நெல், கம்பு, ராகி, சோளம் என ஏதாவது உடையாருக்குக்கொடுப்பாள். அந்தக்காலத்தில் பணத்தை விட பண்ட மாற்று முறைதான் வழக்கத்தில் இருந்தது.

நூறு மைல் தொலைவிலிருந்த குலதெய்வக்கோவிலுக்கு ஆடி நோம்பி என்று சொல்லக்கூடிய ஆடி பதினெட்டு நாளில் மாட்டு வண்டி பூட்டி குடும்பத்துடன் சென்ற போது தான் முதன் முதலாக சிலையாக உள்ள தெய்வத்தை நேரில் கண்டு மெய் சிலிர்த்தேன்.

‘இந்த சிலையை எப்படி செய்திருப்பார்கள்? தெய்வம் இந்த உருவத்தில் தான் இருக்கிறதென்றால் யாராவது சாமியை நேரில் பார்த்திருக்க வேண்டும். நிச்சயமாக கற்பனையாக இப்படியொரு சிலையை யாராலும் செய்யவே முடியாது’ என பல கோணத்தில் சிந்தித்தேன். அதன் பின் தெய்வத்தின் மீது எனக்கு நம்பிக்கை அதிகரித்தது.

ஐயனுக்கு ஒரு முறை உடல் நிலை சரியில்லாமல் போனது. அம்மா கவலையே உருவாக தூக்கம் தொலைத்தாள். பக்கத்து நகரத்திலிருந்து சைக்கிளில் ஒரு பெட்டியை பின் கேரியரில் வைத்தபடி மருத்துவர் என சொல்லக்கூடியவர் வந்து ஊசி போட்டு விட்டு ஐந்து ரூபாய் பணமும், தேங்காய், பச்சைக்கடலைக்காய், கொய்யாப்பழங்களை அம்மா பாசமாகக்கொடுப்பதை சிரித்தபடி வாங்கிச்செல்வார். அவர் உதவியாளராக மருத்துவரிடம் வேலை பார்த்தவர் என அப்புச்சி ஒரு முறை என்னிடம் சொன்னது ஞாபகம் இருக்கிறது.

மாதக்கணக்கில் ஊசி போட்டு, மருந்து, மாத்திரை கொடுத்தும் சரியாகவில்லை. அதை பக்கவாதம் என நலம் விசாரிக்க வந்த சொந்தக்காரர்கள் பேசிக்கொண்டார்கள். நகரத்திலிருக்கும் பெரிய மருத்துவமனைக்கு போனால் சரியாகலாம் என்றார்கள். அதற்கு பணம் நிறைய செலவாகும் என்றார்கள்.

தோட்டத்தை விற்று இப்போது போல் அப்போதெல்லாம் உயிரே போனாலும் வாரிசுகளுக்கு வேண்டுமென்று சிக்கனமாக வாழ்ந்து செலவழிக்க மாட்டார்கள். மருத்துவமும் பார்க்க மாட்டார்கள். ஏனென்றால் சொத்து தான் குடும்பத்தின் வாழ்வாதாரம். இன்று போல் அன்று விலையும் கிடைக்காது.ஆயிரம் ,ரெண்டாயிரம் என விலை போனாலும் நூறு மட்டும் அட்வான்ஸ் கொடுத்து ரெண்டு வருடம் வரை சிறிது, சிறிதாக கொடுத்து கிரையம் செய்வார்கள்.

பங்காளிகள் அல்லது பக்கத்து தோட்டத்துக்காரர்கள் தான் வாங்குவார்கள். வெளியூரைச்சேர்ந்தவர்கள் வந்து வாங்க உள்ளூரைச்சேர்ந்தவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். உறவு முறை என்றால் சில சமயம் ஒத்துக்கொள்வார்கள்.

பத்து மைல் தாண்டி இருந்த பெரிய கருப்பராயன் கோவிலுக்கு அம்மாவுடன் சில பக்கத்து தோட்டத்திலிருந்து வருபவர்களுடன் நானும், அப்பத்தாவும் இரவு நிலா வெளிச்சத்தில் பௌர்ணமி நாளில் நடந்தே சென்றிருக்கிறேன். அப்பத்தா சாமியாடி சொல்வதை விட அந்த சாமியாடி சொல்லுவது உடனே நடக்கிறது என பலர் கூறியதால் அங்கு செல்வதாக அம்மா என்னிடம் சொன்னாள். அப்பத்தாவுக்கும் மற்றவர்கள் சாமியாடுவதை பார்க்க ஆர்வம் இருந்ததால் உடன் வந்தாள்.

ஒரு பெரியவர் கால்களில் பல ஊசிகளைப்பொருத்தியிருந்த பாதணி மீது ஏறி நின்று வாக்கு சொல்லுவார். எனக்கு வேதனையாக இருக்கும். ‘அவருக்கு வலிக்காதா? ரத்தம் ஏதும் வந்து விடாதா? எதற்க்காக சிரமப்பட வேண்டும்? பாத கொறடு மேல் நின்றால் தான் சாமிக்கு பிடிக்குமா?’என நினைப்பேன்.

இரவு எட்டு மணிக்கு துவங்கி பனிரெண்டு மணி வரை வாக்கு சொல்வது நடக்கும். சாமி மலையேறியதாக பூசாரி சொன்ன பின் சாதாரண மனிதரைப்போல் பக்தர்களிடம் வந்து சாமியாடியவர் பேசுவார்.

குண்டான எனது கன்னத்தைப்பிடித்து கிள்ளுவார்.‌ என்னைப்பார்த்து ‘நல்ல பையன்’ என கூறியதால் எனக்கு அவரை மிகவும் பிடித்திருந்தது.

கோவிலில் கூட்டம் அலை மோதும். அனைவரையும் வரிசையாக உட்கார வைப்பார்கள். சில பேருக்கு மட்டும் குறி சொல்லுவார் சாமியாடி. பக்கத்தில் நிற்கும் பூசாரி தட்டத்திலிருந்து திருநீறை எடுத்து வீசுவார். எவ்வளவு தூரமானாலும் குறி தவறாமல் பக்தர் நெற்றியில் வந்து விழும். விழுந்தவுடன் எழுந்து நிற்க வேண்டும்.

ஒரு முறை என் அம்மா நெற்றி மீது விழுந்தது. அம்மா எழுந்து தேம்பி அழுது கண்ணீர் வடித்தபடி நின்றாள். “உன்ற வேதன எனக்கு புரியுது தாயி. பன்னண்டு வருசங்கழிச்சு ரெண்டு சிசுவ ஒட்டுக்கா வகுத்துல சொமக்கறே…. சிசு உருவான பின்னால கெரகணம் புடிச்ச சந்திரண நீ ராத்திரி நேரத்துல நேரா பாத்துப்போட்டதுனால கெரகண தோசம் சிசுவுக்கு வந்துருச்சு… காலம்பூரா கஷ்டத்த நீ மட்டும் சொமக்கோணும்னு உன்ற தலைல எழுதி வெச்சிருக்கறத மாத்த முடியாது. ஒன்னி வெசனப்பட்டு என்ன தாயி பண்ணறது? பெத்து வளத்து போடு…. இந்தக்கருப்பராயன் உனக்கு தொணையா இருப்பேன்… உன்ற பட்டில ஒத்த சேதாரம் வந்தாலும், மத்த சேதாரம் வராம நாங்காத்து வருவந்தாயி….” சாமி சொன்ன போது அம்மாவை விட அப்பத்தாதான் கதறி அழுதாள்.

“சாமி என்ன சொல்லுச்சு? கொஞ்சம் வெளக்கமா சொல்லு அத்தே…” என அம்மா அப்பத்தாவிடம் கேக்க “நான் என்னத்த சொல்லுவேன்? எப்புடிச்சொல்லுவேன்?” என சொன்னதும் மயக்கம் வர, பூசாரி தீர்த்தம் தெளிக்க கண் விழித்த பின் எதுவும் கேட்காமல் வீட்டிற்கு அழைத்து வந்தோம்.

“இருக்கற ரெண்ட காப்பாத்தவே வழியிலாத நேரத்துல ஒன்னம் ரெண்ட உன்ற பொண்டாட்டி பெத்துக்கப்போறான்னு கருப்பராயன் சொல்லிப்போடுச்சு…. சென்னாப்பரவாயில்ல. கஷ்டத்த நீ மட்டுஞ்சொமக்கோணும்னு சொல்லுச்சே…. அதுக்கு அர்த்தம் புரிஞ்சுதா….? ஒத்த சேதாரம் வரும்னு சொல்லிப்போடுச்சே…. கடவுளே…. நான் என்ன பண்ணுவேன்….? என்ற மவன காப்பாத்த எந்த சாமியும் இல்லியா….?” சொன்ன அப்பத்தா மாறடித்த படி அழுதாள்.

அம்மா, நோயால் நடக்க முடியாமல் இருந்த அப்பா, அப்பாரு, அப்பத்தாவுடன் சேர்ந்து எல்லோரும் அழுதார்கள். எனக்கு மட்டும் ஏழாவது படிக்கும் பனிரெண்டு வயதில் ஒன்றும் புரியவில்லை.

அம்மாவுக்கு வயிறு பெரிதான பின் தான் மறுபடியும் தனக்குக்குழந்தை பிறக்கப்போவதாக என்னிடம் சொன்னாள். ஒரு நாள் வயிற்று வலி தாங்க முடியாமல் அம்மா அழுதாள். தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த வேலைக்காரப்பெண்களில் ஒருத்தியை அழைத்து வந்தார்கள். அந்தப்பெண் அம்மாவுக்கு பிரசவம் பார்த்தாள்.

இரண்டு குழந்தைகள் வீட்டிலேயே பிறந்தனர். பின் ஒரு மாதத்தில் அப்பா இறந்தும் போனார். அப்போது தான் புரிந்தது சாமியாடியவர் குழந்தை வயிற்றிலிருப்பதை சொன்னதோடு, ‘கஷ்டத்த நீ மட்டும் சொமக்கோணும்’ என சொன்னது அப்பா இறக்கப்போகிறார் என்பது தான் என புரிந்தது. சில விசயங்களை இலைமறை காயகத்தான் கூறியிருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.

இந்த பிரபஞ்சம் நமக்கு நடக்கக்கூடிய ஒரு விசயத்தை ஏதாவதொரு ரூபத்தில் தெரியப்படுத்துகிறது. அது தான் குறி சொல்லுவது, சாமியாடி சொல்லுவது, சோதிடம் மூலம் சொல்லுவது என புரிந்து கொண்டேன். அதன் பின் தெய்வத்தின் மீது மதிப்பும், நம்பிக்கையும் எனக்கு கூடியது.

நான் பள்ளிக்குச்சென்று விட்டு வந்து அம்மாவுக்கு துணையாக தோட்டத்து வேலைகளை செய்வதும், இரவில் தம்பி, தங்கை அழுதால் தொட்டிலாட்டுவதுமாக ஒரு பெரிய மனிதரின் மனநிலைக்கு மாறியிருந்தேன். எங்களது பக்கத்து தோட்டத்து தாத்தா அடிக்கடி ‘உனக்கு பத்து வயிசுலியே நூறு வயிச்சுக்காரங்க அறிவு வந்திருச்சு. அதனாலதான் ஆண்டவன் உங்கொப்பனப்புடிங்கீட்டு போயிட்டான் போலிருக்குது’ என்பார்.

பேனா பிடிக்க வேண்டிய வயதில் பிஞ்சுக்கைகளில் மம்பட்டியும், ஏரின் மேழியும் பிடித்ததால் கையில் கொப்புளங்கள் தோன்றி புண்ணாகி கை முழுவதும் காப்புக்காய்த்து விடும். வயலில் வரப்பு கட்டுவது, சேறோட்ட ஏரோட்டுவது, மரம் ஏறி உரத்திற்காக தளை வெட்டி வயலில் போட்டு மிதிப்பது, சேறு நெறவுவது, நாற்று நடுவது, களை எடுப்பது, மருந்து அடிப்பது,நீர் பாய்ச்சுவது, நெல் அறுவடை முடித்து நெல் பிரிக்க குந்தான் போட்டு அடிப்பது, நெற்பயிரை மாடு பூட்டி மிதிக்கவைக்க தாம்பு பூட்டி ஓட்டுவது, வைக்கப்போர் போடுவது, நெல்லை வேக வைத்து காயப்போட்டு உரலில் குத்தி அரிசியாக்குவது என அனைத்து வேலைகளையும் மறுக்காமல் மட்டுமில்லை, யாரும் சொல்லாமலேயே பள்ளி விடுமுறை நாட்களில் விளையாடப்போகாமல் செய்து முடிப்பேன்.

தோட்டத்து கூரை வீட்டில் அரிக்கன் விளக்குதான். மின்சாரம் கிணற்று மோட்டருக்கு மட்டும் இருக்கும். சில சமயம் நடு இரவில் கிணற்றுக்குள் இறங்கி மோட்டார் பம்பின் காற்றை எடுத்து விட்டால் தான் பம்பிலிருந்து குலாயில் தண்ணீர் வரும். சறுக்கும் படிகளில் கருக்கின்றி ஒவ்வொரு படியாக உட்கார்ந்து, உட்கார்ந்து செல்வேன். எனக்கு வந்த கஷ்டம் உலகத்தில் ஒருவருக்கும் வரவே கூடாது என கருப்பராயனிடம் தினமும் சிறுவயதிலேயே வேண்டிக்கொள்வேன்.

அம்மாவுக்கு என்னை ஆசிரியர் வேலைக்கு படிக்க வைக்க வேண்டும் என்பது தான் ஆசை. நானும் ஆசிரியர் வராத நாளில் மற்ற மாணவர்களுக்கு பாடம் நடத்துவேன்‌. பிரம்பு கூட கையில் வைத்துக்கொண்டு அச்சசலாக ஆசிரியர் தோரணையோடு பாடம் நடத்துவேன். ஆசிரியரிடம் சந்தேகங்களைக்கேட்டுக்கொண்டே இருப்பதால் என்னை ‘ஆராய்ச்சியாளர்’ என்றுதான் அழைப்பார்.

என்னுடைய பெயரை மாற்ற வேண்டும் என்று அம்மாவிடம் சண்டை போட்டுள்ளேன்.

ராஜாமணி என்ற பெயரை எனக்கு பிடித்திருந்தாலும் என்னுடைய வகுப்பிலேயே ராஜாமணி என்கிற பெண்ணும் படித்ததால் ஆசிரியர் பெயர் சொல்லி அழைக்கும் போது இரண்டு பேரும் எழுந்து நிற்பதைப்பார்த்து வகுப்பறையே சிரிக்கும். பின்பு தான் இனிசியல் சேர்த்து அழைத்து பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

ராஜா என்பது ஆண் பெயர் தான்.ஆனால் எங்களது ஊரில் பல பெண்களுக்கு இந்தப்பெயரை வைத்துள்ளதால் அனைவரும் பெண்ணின் பெயர் என நினைத்துக்கொள்கின்றனர்.

என்னை ‘ராஜா’ என்றுதான் அம்மா கூப்பிடுவாள். ராஜ அலங்கார முருகன் பெயர் என்பதால் அப்பத்தா வேண்டுதலுக்காக வைத்ததாகச்சொல்லிய பின் பெயரை மாற்றும் எண்ணத்தையே கை விட்டேன்.

பள்ளியில் மகாத்மா காந்தி, பாரதியார், காமராஜர், ஜவஹர்லால் நேரு, சுபாஷ் சந்திர போஸ் படங்களைப்பார்த்து தெய்வமாக வணங்கிக்கொள்வேன்.

பள்ளி இடை வேலை நேரத்தில் தனது வீட்டில் உள்ள தன் குழந்தை தூங்குகிறதா? என பார்த்து வரச்சொல்லி ஒரு மாணவனை ஆசிரியர் அனுப்புவார். டீ வாங்கி வரச்சொல்லி ஒரு மாணவனை அனுப்புவார். அவர் பாடம் நடத்துமிடத்திலேயே அவர் டீ குடிக்கும் போது எங்களுக்கு வாயில் எச்சில் ஊறும். என்னை மட்டும் ஏனோ தெரியவில்லை ஒரு நாள் கூட டீ வாங்கவோ, அவரது வீட்டு வேலைக்காகவோ அனுப்பியதில்லை.

பணம் திருட்டு போய்விடக்கூடாது என்பதற்காக அம்மா தானியம் வைத்துள்ள மூட்டைக்குள் சுருக்குபைக்குள் வைத்து பால்காரனுக்கு பாலூற்றுவதால் வாரம் ஒரு முறை கிடைக்கும் பணத்தைப்போட்டு வைத்திருப்பாள். நாலணா, எட்டணா,ஒரு பைசா, இரண்டு பைசா, ஐந்து பைசா, பத்து பைசா, சில ஒரு ரூபாய் நோட்டுகள் இருக்கும்.

ஒரு முறை வியாபாரிக்கு ஆடுகள் விற்ற போது இரண்டு நூறு ரூபாய் நோட்டுக்களை அவர் கொடுத்த போது அம்மா வாங்க மறுத்தாள். அப்போது தான் நான் நூறு ரூபாய் தாளை முதலாகப்பார்த்ததால் அம்மாவிடம் வாங்கச்சொல்லிக்கெஞ்சிய பின் ஒரு நூறு ரூபாய் என் விருப்பத்துக்காக வாங்க ஒத்துக்கொண்டவள், மற்ற நூறுக்கு ஒரு ரூபாய் நோட்டுக்களாக வாங்கிக்கொண்டாள்.

அப்பணத்தை பிரித்து பல இடங்களில் மறைத்து வைப்பாள். ஒரு முறை பத்து ரூபாய் பணம் வைத்திருந்த தானிய மூட்டையை வியாபாரிக்கு ஐந்து ரூபாய்க்கு விற்று விட்டாள். பின்பு வியாபாரி வீட்டிற்கு சென்று கேட்ட போது அவர் பணம் தானியத்தில் இல்லை என சொன்னதும் தேம்பி, தேம்பி அழுதாள். அந்த சம்பவத்துக்குப்பின் வியாபாரிக்கு தானியம் விற்கும் போது கீழே சாக்கு விரித்து கொட்டிப்பார்த்து பின் கொடுக்கும் பழக்கத்துக்கு மாறி விட்டாள்.

வாரம் முழுவதும் வீட்டிலிருந்து சிலேட்டு பென்சில், நோட்டு பென்சில் வாங்க ஐந்து பைசா, பத்து பைசா அம்மாவிடம் வாங்கிச்செல்வேன். பள்ளி அருகே இருக்கும் பெட்டிக்கடையில் காய்ந்து போன பன், வறிக்கி, கம்பரக்கட்டு, தேன் மிட்டாய், சாதாரண மிட்டாய் என ஒவ்வொன்றும் ஐந்து பைசாவுக்கு கிடைக்கும். சில சமயம் எங்கள் தோட்டத்து கொய்யா பழங்களை பறித்து புத்தகப்பையில் வைத்துச்சென்று பத்து பைசாவுக்கு பத்து பழங்களை விற்று அந்தக்காசை மண் உண்டியலில் சேமித்து வைப்பேன்.

பெட்டிக்கடையில் ஸ்டிக்கர் போல ஒரு பேப்பர் தொங்கிக்கொண்டிருக்கும். அதைக்கிழித்தால், பிரைஸ் வந்தால் இரண்டு மிட்டாய் காசே வாங்காமல் தருவார்கள். இல்லையென்றால் ஐந்து பைசா வீண்தான். பல பேருக்கு பிரைஸ் சீட்டே வராது. எனக்கு பிரைஸ் சீட்டு மட்டும் தான் வரும்‌. அதனால் பெட்டிக்கடைக்காரர் என்னை சீட்டு கிழிக்கவே அனுமதிக்க மாட்டார். ஓரளவு சீட்டு கிழித்தவுடன் அவரே எடுத்து வைத்துக்கொள்வார்.

வாரக்கடைசி நாளில் டீ கடைக்கு சென்று பத்து பைசாவுக்கு மிக்சர் வாங்கினாலே வயிறு நிறைந்து விடும். நியூஸ் பேப்பரைக்கிழித்து குழல் போல் சுற்றி அதற்குள் பூந்தி, கொண்டை கடலை, வறுத்த அவல் கலக்கி கொடுப்பார்கள். அங்குள்ள மர பெஞ்சிலேயே உட்கார்ந்து சாப்பிட்டு முடித்தவுடன் அஸ்கா டீ பதினைந்து பைசா, சாதா என்கிற கரும்பு சர்க்கரை டீ பத்து பைசா விலை இருக்கும். அஸ்கா வீட்டில் வாங்காததால் அதையே வாங்கி குடிப்பேன். என்னுடன் கேசவன், முருகேசன், பத்திரனும் வருவார்கள். அனைவருக்கும் நானே டீக்கடைக்காரரிடம் காசு கொடுத்து விடுவேன்.

ஒரு முறை எனக்கு காய்ச்சல் குறையாமல் போனதால் அம்மாவுக்கு பயம் அதிகமாகி விட்டது. இரவில் கிராமத்திலிருந்து நகரத்துக்குச்செல்ல போக்கு வரத்து வசதியில்லை. மறு நாள் மருத்துவரிடம் நகரத்திற்கு அழைத்துச்செல்வதற்குள் காய்ச்சல் குறைய கடவுளை வேண்டியதால் அப்பத்தாவுக்கு போலவே அம்மாவுக்கும் சாமி கால் போட்டதால் அருள் வந்து விட்டது.

அம்மா கன்னட மொழியில் வாக்கு சொன்ன போது கன்னட மொழி படித்திருந்த மாமா அருகிலிருந்ததால் சொல்வது புரிந்தது. புவனேஸ்வரி சாமி வந்திருப்பதாகவும், அத்தெய்வத்தின் மகன் தான் நான் என்றும், என் மகனுக்கு பாதிப்பு வராது, பயப்பட வேண்டாம் என சாமி கூறியதாகவும் மாமா கூறினார்.

சாமி மலையேறிய பின் அம்மாவிடம் கன்னடத்தில் பேசியது பற்றிக்கேட்டபோது ஆச்சர்யமாக இருப்பதாகவும், கன்னடம் தெரியாத நான் எப்படிப்பேசினேன்? என கேட்டதோடு, எனக்கு பாதிப்பில்லை என்பதையறிந்து‌ அம்மா நிம்மதியடைந்ததால் நானும் வியந்து போனதோடு ‘நான் பராசக்தியின் மகன்’ என்று உறுதியாக நம்பவும் அன்று முதல் ஆரம்பித்து விட்டேன்.

தெய்வ சக்தி மனித மனதுக்குள் இறங்கி பேசுகிறது என்பதையறிந்து ஆச்சரியப்பட்டுப்போனேன். பராசக்தி போட்டோ ஒன்றை பெட்டிக்கடையில் வாங்கி பாடப்புத்தகம் போடும் பைக்குள் வைத்துக்கொண்டேன்.

ஒரு நாள் பையின் ஒரு கச்சை அறுந்து போய் விட்டது. அம்மா ஊசியில் நூல் கோர்த்து தைத்துக்கொடுத்தாள். பூ கட்ட பயன்படும் பச்சைக்கலர் நூல் சிவப்பு கலர் பையில் வேறாகத்தெரிந்தது. அதை மற்றவர்கள் பார்க்காதவாறு கையை வைத்து மறைத்துக்கொள்வேன்.

டெய்லரிடம் கொடுத்திருந்தால் சிவப்பு நூல் போட்டுத்தைத்துக்கொடுத்திருப்பார். என் அப்பா உயிரோடு இருந்திருந்தால் டெய்லரிடம் தைத்து வாங்கி கொடுத்திருப்பார். இப்படி அவமானப்பட விட்டிருக்க மாட்டார் என நினைத்து அழுதிருக்கிறேன்.

நகரத்தில் உள்ள அரசு கல்லூரியில் படிக்கச்சென்ற பின் பல ஊர்களுக்கு நண்பர்களுடன் டூர் சென்றிருக்கிறேன். ஊட்டி, ஏற்காடு, கொடைக்கானல், குற்றாலம் என பல இடங்களுக்கு சென்று வந்தேன். எங்கு சென்றாலும் அங்கு கோவில்கள் இருக்கிறதா? என தேடிச்சென்று வழிபடுவேன்.

அம்மா ஆசைப்பட்ட ஆசிரியர் வேலையே எனக்குக் கிடைத்தது. பல மாணவர்களை அறிவிற்சிறந்தவர்களாக உருவாக்கியிருக்கிறேன்.

திருமணமாகி மனைவி குழந்தைகளுடன் நகர வாழ்க்கை என்னை அணைத்துக் கொண்டது. கிராமத்து தோட்டத்தை விற்று விட்டேன். அப்பாரு, அப்பத்தா, அம்மா என ஒவ்வொருவராக மறைந்து விட்டார்கள். நாமும் நிரந்தரமில்லை என்பதை புரிந்து கொண்டதால் கோபம், பொறாமை, பேராசை எனும் தீய சக்திகள் எதுவும் மனதில் இல்லை. சிறுவயதிலிருந்தே அவற்றிற்கு என் மனதில் இடமளிக்கவில்லை.

இப்போது ஓய்வு பெற்றதால் எனது சம கால நண்பர்களுடன் கோவில் சுற்றுலாக்களுக்கு சென்று வருவதில் ஆர்வமாக இருக்கிறேன்.

வள்ளுவரின் குறளுக்கு ஏற்ப பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை…. பெற்றாயிற்று. அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை… பெற ஓடிக்கொண்டிருக்கிறேன்.

அந்த பக்தி ஓட்டத்தில் ஒருநாள் வில்லிபுத்தூரில் ஆண்டாளை தரிசிக்க சென்றிருந்த போது தீபாராதனை முடிந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கிக்கொண்டிருந்தார்கள். நான் பல முறை கை நீட்டியும் எனக்கு பிரசாதம் கொடுப்பவர் கொடுக்கவில்லை. நாம் தெய்வத்தை பார்த்தாலும் தெய்வம் நம்மைப்பார்க்கவில்லை போலிருக்கிறது என நினைத்து ஏங்கினேன்.

மார்கழி மாதத்தில் தினமும் பெருமாள் கோவிலில் ஆண்டாள் பாசுரங்களை தவறாமல் சொல்லுவேன். அப்படிப்பட்ட பக்தனுக்கு பிரசாதம் ஏன் கிடைக்கவில்லை? என நினைத்து மனம் வருந்தினேன்.

அப்போது தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. ஒரு பெண் மணிக்கு சிறிதான வாழை இலையில் சுவாமிக்கு படைக்கப்பட்டிருந்த பிரசாதத்தை புரோகிதர் கொடுத்தவுடன், கையில் வாங்கியவர், சிறிதும் யோசிக்காமல் சற்று தூரத்தில் நின்றிருந்த எனது கையில் கொண்டு வந்து கொடுத்துச்சென்ற போது எனது கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகியது. ஆண்டாள் நம்மைப்பார்த்து விட்டாள் என்பதையறிந்தபோது நான் என்னையே மறந்தேன்.

கே.ஆர்.வேலுச்சாமி ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *