மீண்டும் குழந்தையாய் உன் கையில்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 25, 2025
பார்வையிட்டோர்: 1,387 
 
 

உன் அப்பாவிற்கு உடல் நிலை நாளுக்கு நாள் மோசமாகி கொண்டே இருக்கிறது ஹரிணி, உன்னை காண வேண்டும் என ஆசைப்படுகிறார். நீ கிளம்பி வருகிறாயா? என வெளியூரில் வேலை செய்து கொண்டு இருக்கும் தனது மகளிடம் கேட்கிறாள் சிவகாமி.

விரைவில் வருகிறேன் நீங்கள் கவலைபட வேண்டாம் என கூறிவிட்டு அழைப்பைத் துண்டிக்கிறாள்.

என்ன ஆச்சு என உடன் வேலை செய்யும் தோழி ஷெரின் கேட்க என் அப்பாவிற்கு உடம்பு சரியில்லை அதனால் அம்மா என்னை ஊருக்கு வர சொல்கிறார் என்கிறாள்.

போய் பாரு இங்க இருக்க வேலை எல்லாம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம், நீ கவலைப்படாதே.

சரி என தனது இருக்கையில் இருந்து எழுந்து பால்கனி நோக்கிச் செல்கிறாள். அங்கு நின்று பழைய நினைவலையில் நீந்த அவளுடன் நாமும் கதைக்குள் செல்வோம்.


ஹரிணியின் தந்தை வெளியூரில் வேலைப் பார்க்கிறார், எனினும் ஒழுங்காக வீட்டிற்கு காசு கொடுக்காத காரணத்தால் ஹரிணி பிறந்து இரண்டு வருடத்திலேயே சிவகாமி அவளை பாட்டி வீட்டில் விட்டுட்டு வேலைப் பார்க்க வெளியூருக்கு போய்விட்டாள். அவளது பாட்டியுடன் தான் நேரத்தை செலவிடுவாள் ஹரிணி, மாதம் ஒருமுறை சிவகாமி ஹரிணியை காண வருவாள். அந்த ஒருநாள் அவள் வாழ்வில் பொக்கிஷமான நாளாக இருக்கும், வாசலில் நின்று அவளின் வருகைக்காக காத்து இருப்பாள். வந்ததும் ஓடிப்போய் அணைத்துக் கொள்வாள், நாள் முழுவதும் ஊர் சுற்றிவிட்டு அவளின் தோளில் உறங்கிவிட அப்படியே அவளை பாட்டி வீட்டில் படுக்கையில் போட்டுவிட்டு அவள் எழுந்து கொள்வதற்கு முன் சென்று விடுவாள். காலையில் எழுந்ததும் தேடுவாள், அழுவாள் போன் வசதி இல்லாத காலம் போனிலும் பேசமுடியாது, எனவே மீண்டும் அந்த ஒரு நாளுக்காக காத்திருப்பாள்.

இவ்வாறு தான் கடுமையாக ஆறு வருடங்கள் கடந்தது, ஒருநாள் சிவகாமி வந்து நாம் இருவரும் இனி ஒன்றாக இருக்க போகிறோம் என ஹரிணியிடம் கூற அவளுக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை. அம்மாவுடன் சென்றாள், ஹரிணியை பள்ளிக்கூடத்தில் சேர்த்து விட்டாள் சிவகாமி. அங்கு திறமையான பெண் என பெயர் எடுத்தாள், அனைத்து ஆசிரியருக்கும் பிடித்த குழந்தையாக மாறிப்போனாள். பள்ளி முடிந்ததும் சிவகாமி வேலைசெய்யும் இடத்திற்கு சென்றுவிடுவாள், இருவரும் ஒன்றாக வீட்டிற்கு செல்வார்கள். அவள் வீட்டில் டிவி கிடையாது ரேடியோ மட்டுமே இருந்தது அதில் பாட்டு கேட்டு கொண்டிருப்பாள். டிவி பார்ப்பதற்க்காக ஒவ்வொரு வீடாக அவள் போவதை பார்க்க முடியாத சிவகாமி,பழைய டிவி ஒன்றை வாங்கி வைத்தாள். இருவரும் அம்மா மகள் போல் அல்லாமல் தோழிகளாக பழகி வந்தார்கள். தெருக்களில் அனைவரும் மரியாதையுடன் தான் பார்ப்பார்கள் ஆண் இல்லாத வீட்டிற்கு பெண் சிங்கமாய் இருந்தாள் ஹரிணி.

அம்மாவின் வளர்ப்பால் என்னவோ காதல் வலையில் விழவும் இல்லை சிக்கவும் இல்லை. நல்லபடியாக பட்டப்படிப்பை முடித்தாள், படித்துக் கொண்டிருக்கும்போதே வேலை கிடைத்தது படிப்பை முடித்ததும் வேலைக்குச் சேர்ந்தாள் இப்பொழுது இப்படி நிற்கிறாள்.


கார் வரும் சத்தம் கேட்டு வாசலை நோக்கி வருகிறாள் சிவகாமி, ஹரிணியை பார்த்ததும் அணைத்துக் கொண்டாள். வீட்டின் உள்ளே செல்கிறாள் பாட்டி அக்கா சித்தி என அனைவரும் நலம் விசாரிக்கிறார்கள், பதில் சொல்லிவிட்டு குளித்துவிட்டு வருகிறேன் என கூறிவிட்டு அவள் அறைக்குச் சென்று குளித்து விட்டு கீழே வந்தாள்.

சிவகாமி அவளுக்கு பிடித்த உணவுகளை சமைத்து வைத்து இருந்தாள், அதை சாப்பிட்டு முடித்தாள். ஹரிணி அப்பாவை போய் பாரு என அவர் இருக்கும் அறையை காட்ட அவளும் செல்கிறாள். அவர் உள்ளே படுத்து இருக்கிறார் அப்பா என இவள் அழைக்க வாம்மா நல்லா இருக்கியா? என கேட்கிறார். நல்லா இருக்கேன்ப்பா நீங்க எப்படி இருக்கீங்க, நீதான் வீட்டிலேயே இருக்க மாதிரி வசதி பண்ணி கொடுத்து இருக்கியே ஏதோ போய்ட்டு இருக்கும்மா. அப்பறம் உன் வேலை எல்லாம் எவ்வாறு போகிறது என கேட்கிறார், நன்றாக போகிறது என்கிறாள். சாரிம்மா உனக்கு ரொம்ப சிரமம் கொடுக்குறேன் இந்த வயதிலேயே இந்த குடும்பத்தையே நீ தாங்கி நிற்கிறாய் என கூறுகிறார். இதெல்லாம் எனக்கு சிரமம் இல்லப்பா சின்ன பிள்ளையாக இருக்கும் பொழுது மிகவும் கஷ்டபட்டுட்டேன்ப்பா. அப்பாவும் அம்மாவும் ஒன்றாக கலந்து கொள்ளும் பள்ளி நிகழ்ச்சிகளில் அம்மா மட்டும் வந்து நிற்கும் பொழுது உங்க அப்பா வரவில்லையா? என கேட்பவருக்கு எளிமையாக பதில் சொல்லிவிட்டு தனிமையில் உடைந்து அழுவதன் வலியை நீங்கள் அறிந்திருக்கமாட்டீர்கள். ஆண் இல்லாத வீடு என சில நாய்கள் வீட்டை சுற்றி வர அவற்றில் இருந்து என்னைப் பாதுகாக்க அவள் இரவு முழுவதும் கண் விழித்து காவல் காத்ததை நீங்கள் அறிந்திருக்கமாட்டீர்கள். அவள் சிறுவயதில் இவ்வாறு சேட்டைகள் செய்தாள் என என் தோழியின் அம்மா கூறும்போது என் மகள் எவ்வாறு இருந்தால் என என்னால் பார்க்க முடியவில்லையே என அவள் உள்ளுக்குள் அழுததை நீங்கள் அறிந்திருக்கமாட்டீர்கள்.

மற்ற ஆண்களின் பார்வையில் இருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள அவள் பல தெருவை சுற்றி வீடு திரும்பும் வலியை நீங்கள் அறிந்திருக்கமாட்டீர்கள். தன் அப்பா இருந்திருந்தால் நான் நன்றாக இருந்துருப்போனே என ஒரு எண்ணம் என்னுள் தோன்றிவிட கூடாது என்பதற்காக அவள் என்ன என்ன செய்தால் என்பதை நீங்கள் அறிந்திருக்கமாட்டீர்கள். என்னுடன் நேரத்தை செலவிடும் பொழுது உங்களுக்கு கிடைக்கும் மகிழ்ச்சியை பற்றி நீங்கள் அறிந்திருக்கமாட்டீர்கள். இவ்வாறு பல விஷயங்களை நீங்களும் இழந்து இருக்கிறீர்கள். எங்களையும் இழக்க வைத்து இருக்கிறீர்கள்.

அப்பாவின் கையை பிடித்துக்கொண்டு மற்ற பிள்ளைகள் செல்லும் போது என்னைப் பிடித்து செல்ல நீங்கள் இல்லையே என ஏங்கி இருக்கேனே தவிர நீங்கள் இல்லாத குறை என் மனதில் தோன்ற என் அம்மா இடம் கொடுக்கவில்லை.

நான் மீண்டும் ஒரு ஜென்மம் கொண்டால் என் அன்பு எவ்வாறு இருக்கும் என நீங்களும் உங்கள் அன்பு எவ்வாறு இருக்கும் என நானும் அறிய விரும்புகிறேன்.

என கூறிவிட்டுச் சென்று விட்டாள். சிவகாமி மடியில் படுத்துக் கொண்டு மீண்டும் குழந்தையாய் உந்தன் கைகளில் தவல ஆசையாய் இருக்கிறது என் சேட்டைகளை நீங்கள் காண வேண்டும் என ஆசைப்படுகிறேன் என கூறுகிறாள். ஹரிணியை தூங்க வைத்து விட்டு சிவகாமி செல்வத்தை காண வருகிறாள்.

நான் இழந்த அனைத்தையும் திருப்பித் தாருங்கள் அப்பா என அவள் கூறும்பொழுதே நான் செத்து விட்டேன் சிவகாமி. என் பிள்ளைக்கு நான் ஒரு நல்ல அப்பாவாக இல்லை உனக்கும் ஒரு நல்ல கணவனாக இல்லை என்னை மன்னித்து விடு என சிவகாமியின் கையை பிடித்துக் கொண்டு அழுகிறார்.

முடிந்தவரை பிள்ளைகளுடன் நேரத்தை செலவிடுங்கள்.

அவர்களின் இளமை பருவத்தையும் அவர்களின் சேட்டைகளையும் மீண்டும் காண இயலாது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *