கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 21, 2025
பார்வையிட்டோர்: 6,278 
 
 

அத்தியாயம் 1-2 | அத்தியாயம் 3-4

அத்தியாயம் – 1

அம்பிகா நிறைய நேர யோசனைக்குப் பின்தான் இதைத் தவிர வேறு வழி இல்லை என்கிற முடிவிற்கு வந்தாள்.

அன்றும், இன்றும், என்றும் அவளது தலையாயப் பிரச்சனை குழந்தை..!

எவ்வளவுதான் சீரும் சிறப்புமாக வாழ்ந்தாலும், இருந்தாலும், வயிற்றுச் சோற்றுக்கு வழி இல்லை என்று கஷ்டப் பட்டாலும் திருமணமாகி காலாகாலத்தில் குழந்தை இல்லாமலிருப்பது எவ்வளவு பெரிய கஷ்டம், மானக்கேடு என்பது அம்பிகாவைப் போல அனுபவித்துப் பார்த்தவர்களுக்குத்தான் தெரியும்., புரியும்..!

அம்பிகாவிற்கும் கணேசனுக்கும் திருமணமாகி இதோடு மூன்றாண்டுகள் கடந்து விட்டது.

இன்று வரும், நாளை வரும்… என்று வருமோ என்று கலங்கியவளுக்கு இல்லாமலேயேப் போய்விட்டது. என்பதுதான் பெருத்த சோகம்.

சென்ற மாதம் 2ந் தேதிதான் அவளுக்குக் கர்ப்பப்பையில் கட்டி என்று அதையே அகற்றிவிட்டார்கள்..!

துடித்துப் போய்விட்டாள் அம்பிகா.

தாயாகவில்லை என்கிற வேதனை, தவிப்பைவிட….’ இனிமேல் தாயே ஆக முடியாது!’ – என்கிற பேரிடி, பெரு இடிதான் நினைவுதான் அவளை எந்நேரமும் வாட்டி, வதக்கி, வேதனைப் படுத்தியது.

இவள் குழந்தையாய் இருக்கும்போதே மழலைகள் என்றால் இவளுக்குக் கொள்ளைப் பிரியம். ஏன்… இவள் மழலையாய் இருக்கும்போதே அக்கம் பக்கத்து மழலைகளென்றால் தொட்டு விளையாடுவாளாம்.! – அம்மா சொல்லி இருக்கிறாள்.

இப்போதும்…. பக்கத்து வீடு, எதிர் வீடு… குழந்தைகள் என்றால் போய் உட்கார்ந்து கொள்வாள். தொட்டிலில் கிடந்தாலும் தூக்கிக் கொள்வாள். தூங்கினாலும் எடுத்துக் கொள்வாள். இடுப்பில் வைத்துக் கொண்டு விளையாட்டுக் காட்டுவாள். விளையாடுவாள்.

“பார்த்து… ஒரு கையால தலை ஆடாமல் அணைச்சிப் பிடிச்சுக்கோ. தலை மடக்குன்னு சாய்ஞ்சிடப் போவுது, முறிஞ்சிடப் போவுது..” என்று பெற்றவர்களிலிருந்து அந்த வீட்டில் தாத்தா, பாட்டி கிழங்கள் இருந்தாலும் பதறி துடிப்பார்கள்.

“அதைப்பத்தியெல்லாம் கவலைப் படாதீங்க. நான் எத்தனைக் குழந்தைகளைத் தூக்கி இருக்கேன்..!” என்று சொல்லி அரவணைப்புடன் அணைத்துக் கொண்டு பெரியவர்களை விட பத்திரமாக வைத்துக் கொள்வாள்.

என்னதான் இவள் பத்திரமாக வைத்துக் கொண்டாலும் அவள் கையிலிருந்து குழந்தை இவர்கள் கைக்கு வரும்வரை ‘உரம் ‘ விழுந்துவிடப்போகிறது. இல்லை… ஏதோ கை, கால்கள் பிசகிவிடப்போகிறது என்று தவிப்பு, கவலையாய் இருக்கும்.

ரயில், பேருந்துகளில் பயணம் செய்யும்போது….யார் குழந்தையுடன் அமர்ந்திருந்தாலும், நின்று கொண்டு வந்தாலும்…குழந்தையை வாங்கி கொள்வாள்.

“அசிங்கம் பண்ணிவிடப்போகுது!” அருகில் அமர்ந்து வரும் தாய் எச்சரிப்பாள்.

“பண்ணினாப் பண்ணிவிட்டுப் போவுது.” அலட்சியமாகச் சொல்வாள்.

“சரியான குழந்தை பைத்தியம்டி!” இவள் தலையில் குட்டாத குறையாய் அவள் முகத்தை இடிப்பாள்.

அம்பிகாவிற்குக் குழந்தைகளைக் கொஞ்சுவதில் அலாதி பிரியம். அதன் அழகை ரசிப்பதில் ரொம்ப ரசனை. அதன் பஞ்சு போன்ற மென்மை உடல் ஸ்பரிசம், பொக்கை வாய்ச்சிரிப்பை காணுவதில் அவளுக்கு தனியாத தாகம். இனம் புரியாத இன்ப மயக்கம்.

“ஏண்டி! குழந்தைன்னா இப்படி நாயாய்ப் பேயாய் அலையுறே..?” அம்பிகா ஊரிலிருந்து வந்த எதிர்த்த வீட்டு மாமி பேரனைத்து தூக்கி வைத்துக் கொண்டு கொஞ்சியபோது அவள்தான் கேட்டாள்.

“குழந்தைன்னா எனக்கு உயிர் மாமி!” என்று அந்தக் குழந்தைக்கு முத்தம் கொடுத்துக் கொண்டே சொன்னாள்.

“அப்போ. நிறையப் பெத்துப்பே..!” மாமி இவளைக் கேலி செய்தாள்.

“ம்ம்..”

“ம்ம்ன்னா… பத்து..? “

“அதையும் தாண்டி பெத்துப்பேன்.”

“உனக்கு நிறையத்தாண்டி ஆசை!” மாமி ஆசையாய் இவளை இழுத்து வைத்து முத்தம் கொடுத்தாள்.

திருமணமான முதல் இரவில்…

“உனக்குக் குழந்தைன்னா புடிக்குமாமே..?” கணேசன் கேட்டான்.

“யாரு சொன்னா..?”

“பேசிக்கிட்டாங்க. பத்து தாண்டி பெத்துப்பியாம்..?!”

“ஆமா”

“வளர்த்து ஆளாக்க முடியுமா..?”

“முடியாதா.. ?”

“இந்தக் காலத்துல ரெண்டு பெத்து வளர்க்கிறதே கஷ்டம். பத்து… ம்ம்…. முடியாது!”

“அப்படியெல்லாம் சொல்லாதீங்க என்னால் முடியும்..!”

திருமணமான முதல் மாதமே… இரண்டு நாள் தள்ளிப் போனதற்கு…

“என்னங்க..! நீங்க பெரிய ஆளுதான். நான் உண்டாகி இருக்கேன் போலிருக்கு. தள்ளிப் போகுது..” முகத்தில் பெருமையும் பீத்தாளமுமாகச் சொன்னாள்.

மூன்றாம் நாள் அது வந்ததும்… முகம் சுண்டிப் போயிற்று.

“என்னங்க இப்படி ஆச்சு…? ” சிணுங்கினாள்.

“ஏண்டி! முதல் மாசமே தள்ளனுமா..? இன்னும் ரெண்டு மூணு மாசம் போகட்டுமே..?”

“சில பொம்மனாட்டிங்க…வீட்ல தலை முழுகிறதோட சரி. புகுந்த வீட்டுல முதல் மாசம் குளிக்கிறதில்லே. டான்னு பத்தாவது மாதமே பொறந்த வீட்டுக்கு வந்து பிள்ளைப் பெத்துக்கிறாள்..” சொன்னாள்.

”ரொம்ப ஆசைப் படாதே. பொறுமையாய் இரு”

“1…2…3….6… மாதங்கள் இவள் எதிர்பார்ப்பில் ஏமாற்றம். அவளுக்கேப் பொறுக்கவில்லை.

“உங்க மேல சந்தேகமில்லே. வாங்க நாம டாக்டர்கிட்ட போவோம்!” அழைத்தாள்.

சென்றார்கள்.

கர்ப்பப்பை சுத்தம் செய்யப்பட்டது.

அது சம்பந்தமாக நான்கு மாதங்கள் கழிந்தது.

“வாங்க முண்டக்கன்னி அம்மன் கோயில்ல தொட்டில் கட்டுவோம். கை மேல் பலனாம்!”

சென்றார்கள்.

இப்படி ஆயிரத்தெட்டு மருந்து மாத்திரைகள், வேண்டுதல்கள், தொட்டில்கள். மூட நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள்.

கடைசியாக கர்ப்பப்பையையே அகற்ற… இடியாமல் என்ன செய்வாள்..?

கணேசன்தான் தேற்றினான்.

“கடவுள் ரொம்ப விசித்திரமானவர். கேட்பவர்களுக்கு, விருப்பப்படுபவர்களுக்கு கொடுக்க மாட்டார். அவர்களை அல்லாட வைப்பத்தில் அவருக்கு அலாதியான மகிழ்ச்சி.” சொன்னான்.

அம்பிகாவையும் அப்படித்தான் அல்லாட வைத்தார்.

இறுதியில்…”இல்லாமல் போகக் கடவது!” என்று சபித்து விட்டார்.

ஒருவாறாக இறுதியாக மனசு தெளிய அம்பிகா… அதற்கான மாற்று வழி யோசித்தாள்.

தத்து, வளர்ப்பெல்லாம் ….யோசித்து, கடைசியில்… கணேசனுக்கு மறுமணம் வரை வந்தாள்.

அவனிடம் சொல்ல…

“மூச்!” அவன் கண்டித்து விட்டான்.

அதையும் தள்ளி, தாண்டி….விடாமல் யோசித்ததின் பலன்தான்… அவளுக்குள் புதிய உதயம்!

அத்தியாயம் – 2

ஞாயிறு விடுப்பு.

கணேசன் ரொம்ப சாவகாசமாக படுத்திருந்தான். கையில் சாண்டில்யனின் ‘கடல் புறா’. அவனுக்கு சாண்டியனின் எல்லா சரித்திர நாவல்களும் ரொம்ப பிடிக்கும். இது மட்டுமில்லாமல் படிப்பென்றால் இவனுக்குக் கொள்ளை பிரியம்.

இப்போது என்றல்ல. எப்போதுமே அப்படித்தான். படிப்பு.! படிப்பு..!! படிப்பு !!! சிறு வயதில் ஆடு, மாடுகளை மேய்க்க ஒட்டிக்கொண்டு செல்லும்போதும் கையில் ஒரு புத்தகத்தை எடுத்துச் செல்வான். அவைகளை மேயவிட்டு படிப்பான்.

படிப்பென்றால் அவன் சோறு தண்ணி தேட மாட்டான். அந்தக் கால எழுத்தாளர்களிலிருந்து இந்தக் கால எழுத்தார்கள் வரை படிப்பான். கதை புத்தகங்கள் மட்டுமில்லாமல் கவிதை, இலக்கியம், சரித்திரம், பூகோளம்… குழந்தைகள் புத்தகங்கள் வரை சகட்டு மேனிக்குப் படித்துத் தள்ளுவான். மெல்ல அவன் மார்பில் படுத்து நெஞ்சு முடிகளைக் கோதிய அம்பிகா … “என்னங்க…?” சன்னமாக அழைத்தாள்.

புத்தகத்தை மூடி…

“என்ன..?” என்றான்.

ஏற்கனவே…மனைவி மீது இவனுக்கு அன்பு, ஆசை அதிகம். இந்த கர்ப்பப்பை எடுப்பிற்குப் பிறகு…அது இன்னும் அதிகமாகி… முகம் கோணாமல் நடப்பான்.

“நமக்கு இனி குழந்தையே பிறக்காதுல்லே..?”

“ஆமாம்…! இனி சாகிறவரைக்கும் நான் உனக்குக் குழந்தை. நீ எனக்குக் குழந்தை. அது முடிஞ்சி போன விசயம்.இப்போ அதுக்குள்ளே என்ன திடீர் குழப்பம்..?”

“கோபப்படுறீங்களா..?…”

”இல்லே. சொல்லு..?”

“வந்து… வந்து….”

“இதோ பார். எனக்கு இன்னொரு திருமணம் முடிகிறது, தத்து, அநாதை புள்ளைங்க ஆசிரமம் போய் புள்ளை தேடுற வேலையெல்லாம் வேணாம். ஆயிரம் தடவை சொல்லிட்டேன். முடியல அம்பிகா..”

“இது வேற…”

“சொல்லு…?”

“கோபப்படக்கூடாது!”

“சரி”

“உங்க குழந்தையே நம்ம கண் முன்னால இருக்கு. அதை ஏன் விட்டு வைக்கணும்..?”

“என் குழந்தையா..? எங்கே இருக்கு..?” துணுக்குற்றான்.

“நல்லா யோசனை பண்ணி பாருங்க..?”

“புதிர் போடாம சொல்லு..?”

“சுந்தரிகிட்ட இருக்கே..!”

“அம்பிகா!” அரண்டு மெலிதாக அலறினான்.

“அது உங்க குழந்தைதானே..?”

“அது.. அது…”

“அது உங்க குழந்தைதானே..?”

“அ..ஆஅ.. ஆமாம்.” குப்பென்று வியர்வை.

“அந்த சொந்தக் குழந்தை எனக்கு வேணும்.!.? “

“அ அது எப்படி முடியும் அம்பிகா..?” கலவரமாகப் பார்த்தான்.

“ஏன் முடியாது..?”

“அது… அவள் குழந்தை.”

“நீங்கதானே காரணம்..!”

“அ ஆமாம்!”

“அந்த குழந்தை ஏன் அங்கிருக்கனும்..?”

“அம்பிகா..!!?..”

“நம்ம பொருளை ஏன் இன்னொருத்தர் வீட்டில் விட்டு வைக்கனும்..?”

“அம்பிகா! அது பொருள் இல்லை. உயிர்!”

“அது ஏன் அங்கிருக்கனும்..?”

“அம்பிகா! புரிஞ்சி பேசுறீயா. புரியாம பேசுறீயா..?”

“சுய புத்தியோட பேசறேன்..!” – நிதானமாகச் சொன்னாள்.

“அவளிடம் போய் என் குழந்தையைக் கொடுன்னு எப்படி கேட்க..?”

“ஏன் கேட்டாலென்ன..?”

“கொடுப்பாளா..?”

“ஏன் கொடுக்கமாட்டாள்..?”

“எப்படிக் கொடுப்பாள்..?”

“சுமந்து மட்டும்தானே அவள்..! வாடகைத் தாய்!”

“அம்பிகா! அது வேற. இது வேற. அவள் இன்னொருத்தன் மனைவி!”

“உங்க விசயம் வெளியேத் தெரிஞ்சுதான்… புருசன் அவளை ஒதுக்கி வைச்சிட்டாரே..?!”

“இது சட்டப்படி விவாகரத்து இல்லே அம்பிகா. ஊர் முடிவு, ஒதுக்கல். நாளைக்கு அவுங்க சேர்ந்து வாழ வாய்ப்பு அதிகம்.”

“எனக்கு நம்பிக்கை இல்லேங்க. அவமானப்பட்டுத்தானே அவளை வேணாம்ன்னு சொன்னார். ஊர் ஒதுக்கலுக்கு சம்மதிச்சார். திரும்ப சேரமாட்டார்.”

“அதுக்காக அந்த குழந்தையைக் கேட்கிறது தப்பு. அது முடிஞ்சி போன கதை.”

“இல்லே ! இதனால்தான் அதுக்கு முடிவு.”

“அம்பிகா ! அதில் சிக்கல் அதிகம்.”

“சிக்கலே இல்லே..”

“அவ கொடுக்க மாட்டாள்.”

“எப்படி அவ்வளவு உறுதியா சொல்றீங்க..? அவளுக்கு உங்க மேல ஆசையா..? குழந்தை மேல ஆசையா..?”

“தயவு செய்து பழசைக் கிளற வேணாம் அம்பிகா.!” பம்மினான்.

– தொடரும்…

Karai adalarasan என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *