தோழர் விக்கிரம யாழ்ப்பாணம் செல்கின்றார்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 8, 2025
பார்வையிட்டோர்: 617 
 
 

(2010ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மாத்தளை மணிக்கூட்டுச் சந்தி மீன்மார்க்கட்டிலிருந்து, இராஜ வீதிக்குச் செல்லும் படிக்கட்டுகளில் ஏறி; விஹாரரோட்டை நோக்கி “தோழர் விக்கிரம” என்ற விக்கிரம ஆராச்சி ‘கன்வென்ட் மதில்களுக்கு சமாந்தரமாக நடைபயிலும் போது “சகோதரயா – சகோதரயா” என்ற குரல் பின்னாலிருந்து சன்னமாக ஒலித்தது. 

பழக்கப்பட்ட குரல்தான். டவுனில் தாமதிக்காமல், உச்சிவெயில் ஏறும் முன்னர் வீடு வந்து விடும்படி அவர் மனைவி “மெனிக்கே ஆமினி” சற்று கண்டிப்பாகவே கூறியிருந்தபடியால், கொங்காவெல ஞாயிறு சந்தையில் அவசர அவசரமாக வாங்கியவைகளோடு ஹெரிசன்ஸ் ஜோன்ஸ் குறுக்கில் ஏறி, மீன் மார்க்கட்டில் இரண்டு “கூரி சாளையாவையும் வாங்கிக்கொண்டு உச்சிவெயில் தலைக்கேறும் முன்” வீடு போய் சேர்ந்து விட வேண்டும் என்று தோழர் விக்கி விரைவாக நடந்த போதுதான் இந்த அழைப்பு கேட்டது. 

முன்பெல்லாம் ஞாயிறு சந்தைக்குப் போய்; கிருமிநாசினி மருந்தடிக்காத; நாட்டுக் காய்கறிகளாகப் பார்த்துப்பார்த்து வாங்கிக் கொண்டு; பின்னர் தர்மபால மாவத்தையிலுள்ள பென்சனியர் கிளப்பிற்குப் போய், பழைய சிநேகிதங்களை யெல்லாம் கண்டு வாயாரப்பேசி, “நாலுரவுன்ட்” வரை எடுத்து விட்டு ஆட்டோவில் ஏறி வீடு வந்து சேரும் போது ஆமினேபகல் சாப்பாடு பிந்திவிட்டது “கட்டியத்தெக்க செட்டுனாத” என்று கோபம் கொள்வாள். 

வழமையான கோபம் தான்; பாசத்தின் மறுபக்கம் இது! பென்சனியர் கிளப்பில் ஒன்று சேரும் தினம் இறந்த கால இனிமைகளை மீட்டும் வீணை. அந்த வீணாகானம். சங்கமித்து விட்ட தோழமைகளுடன் மனம் விட்டு பேசி, வாய்விட்டுசிரித்து தர்க்கித்து, விமர்சித்து இறந்த காலத்தின் உயிர்ப்புள்ள நிகழ்ச்சிகளை மட்டுமன்றி நிகழ்காலத்தின் சமூக, அரசியல், பிரச்சினைகளின் கள நிலவரங்களை அலசி ஆராய்ந்து. உள்ளுர் சர்வதேச நிகழ்வுகளின் சங்கப்பலகையாக நடக்கும் அந்த சந்திப்பு அர்த்தம் நிறைந்தது. மனதிற்கு ஆறுதல் தருவது. 

இன மத மொழி பேதங்களுக்கு அப்பால் “கொமரேட்” என்ற இணைப்புடனும், புரிந்துணர்வுடனும் “அடே மச்சான்” என்ற பாசத்துடன் வேற்றுமையின்றி பழகி சங்கமிக்கும் அந்த சந்திப்பு. மாந்தர் என்பார் இவர் தானா? மானுடம் என்பதும் இதுதானா? என்ற வரிகளுக்கு அர்த்தமான நித்தியநிதர்சன தரிசனமுமாகும். 

“சாராயத்தை ஊத்து சங்கீதத்தை காட்டு” என்பது போல இந்துஸ்தானி சங்கீதம், கர்நாடக சங்கீதம், பெல்கவி, ஆங்கில பாடல்கள், பைலாக்கள் எல்லாம் ஒருவர் ஒரு வரியை ஆரம்பிக்க “தன்னோ புதுன்கே ‘அதிரமணி நில்மலதாரா”…”ரோசா பொல்லகனிங் பல்லாமரான்ட;” “டிங்கிரி; டிங்காலே மீனாட்சி… ‘அடி, என்னடி ராக்கம்மா… வரை கதம்பமாக ஒலிக்கும் இந்த சங்கீத ராட்டினத்தில் அவ்வப் போது தாள லய, அபிநய, ஓரங்க, கூட்டு நடனமும் அரங்கேறுவதும் உண்டு. சில வேளைகளில் குழந்தைத்தனமாகவும் இது காட்சியளிக்கும். 

பல்லு போனாலும் சொல்போகாத சுருதிலயம் என மேலோங்கி நிற்கும் ராகத்தில் ஓய்வு பெற்ற முன்னாள் ஓவசியர் நடராஜா ஆரம்பித்துவைத்த பாடலை சிங்கரெஜிமெட் செக்கன் லெப்டினன் ஹெட்டிபொல முடித்து வைத்து ‘அப்லாஸ்” வாங்கும் கச்சேரியாக பரிமளிக்கும்; பரிமாணம் பெறுவது போன்ற பல அம்சங்கள் அடங்கியுள்ளமை ஒரு தனிச் சிற்பாகும். இவ்வாறான மாலை சந்திப்புக்கள் நடுநிசி வரை நீள்வதும் உண்டு. 

இறந்தகாலத்தின் இறவாத நினைவுகள் இந்த சந்திப்புகள் அவ்வப்போது அரங்கேறும் போது ஏற்படும் சுகானுபாவத்தின் சுகந்தத்தில்; இந்த உள்ளங்கள் இளமை பூரிப்பில் பூத்து குலுங்கும். 

தியத்தலாவை கெடட் கேம்பில் அணி வகுப்பு மரியாதைக்கு பின்னர் நடைபெற்ற இரவு நேர விருந்துபசாரத்தில் பங்கு பற்றி நிதானமாக நடந்து வந்து “நாளை முதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி முத்து என்று செக்கன் லெப்டினன் மனைவியை நினைத்து பாடியது முதல்; மாத்தளை ஹொக்கி டீம்முக்கு கப்டனாக விளங்கிய அப்புகஸ்பிட்டிய சுப்பையா புல்பெக்கிலிருந்து தனியே பந்தை உருட்டிச் சென்று மறுபக்கத்திலுள்ள கோல் போஸ்டில் கோலை செலுத்தி; வெற்றியீட்டி, டெல்லி டீமை மண்கவ்வச் செய்த சாதனை. 

முண்டாசு கட்டிய சிங் ஹொக்கி பிளேயர்கள் லாவகமாக சூழலும் இவரது ஹொக்கி ஸ்டிக்குக்கு பின்னும் உள்ளும் சிறைபட்டு நிற்கும் பந்தினை தடுத்து தம்பக்கம் எடுக்க முடியாது; பின்னாலேயே ஓடி வரும் பரிதாபம்; மாத்தளை ஹொக்கி வீரர்களின் திறமைக்கு என்றுமே சான்று பகர்வதாகும். இந்தவரிசையில் எ.ஜி. எம் பாறுக்; ஜனாப் மூசீன்; மாத்தளைதான் இலங்கை ஹொக்கியின் தொட்டில் 

அதிபர் ஜனாப் இசட் ஒமர்தீன் அவர்கள் நடந்து வரும்போது; சரக்… சரக்.. எனும் காலடி ஓசை கேட்டு; வகுப்பறைக்கு ஓடிச் செல்லும் மாணவர்களை மட்டுமன்றி ஆசிரியர்கள் பற்றி, அபுதாலிப் அப்துல் லத்தீப் அவர்களுக்கு லெனின் சமாதான பரிசு கிடைத்தமை, பண்ணாமத்துக்கவிராயர் பலஸ்தீன கவிதைகளை மொழி பெயர்த்து ஆற்றிய இலக்கிய பணி. அவருடைய சொல்லாட்சி, நவாலியூர் சொக்கநாதன் எழுதிய மாத்தளை முத்து மாரியம்மன் குறவஞ்சியை கவிஞர் ஈழவாணனும், வீ. கந்தவனமும் வெளியிட்டு ஆற்றிய விமர்சன உரைகள் மட்டுமா? 

அதிபர் சுதுமலை தம்பிராஜா, அளவெட்டி கு. திரவியராசா ஆசிரியர் ஆகியோர் பாடசாலை கதம்ப விழாவில் அரங்கேற்றிய நாடகங்கள் பற்றிய இலக்கிய மஞ்சரியும் இடைக்கிடையே குறிஞ்சி மலர்களென மலரும். 

கவிஞர் சுபத்திரன், சாருமதி, புதுவை இரத்தினதுரை, சில்லையூர் செல்வராஜன், மாத்தளை ஆ. இராஜசிங்கம் மலைத்தம்பி, திருகோணமலைக் கவிராயர் ஆகியோர் பாரதியின் பேத்தி விஜயபாரதியின் முன்னே பாக்கிய வித்தியாலய அரங்கில் “இதய நெருப்பெடுத்து இலக்கிய கவி வடித்த நாளில் பொழிந்த இலக்கிய வேட்கையும் அவ்வப்போது நினைவு மலரில் மலரும். செ. கனேசலிங்கம், எஸ். பொன்னுத்துரை, பேராசிரியர் தில்லைநாதன் இர. சிவலிங்கம் ஆகியோர், தமிழக கு. அழகிரிசாமி அவர்களுக்கு ஈழத்து சிறுகதைச் சிறப்பை எடுத்துக்காட்டியமை இன்றும் மணதில் மணக்கும் மலராகும். 

“காட்டிற்கு கரடி, புலி, சிங்கம் கோட்டிற்கு எதிர்மான சிங்கம்” பீடிக்கு சொக்லால் ராம் செட் பீடி என்று கோமாளி வேடக்காரன் ஆடி; ஆடி, பாடிப்பாடி விளம்பரம் செய்த தகவல்களை வியந்து விமர்சிப்பதோடு அது முடிந்து விடுவதில்லை. 

சிந்து பாத்தின் கன்னித்தீவு, கடற்பிரயாண சித்திரத் தொடர்கதை என அது தொடரும்… தொடரும்… 

புறன் அப்புவை தூக்கிலிட்டது அவருக்கு சேர்மன் தம்பிராஜா நினைவுத்தூபி எழுப்பியது; தம்பிராஜா எலிசபெத் மகாராணியை வரவேற்றது வி.டி நாணயக்காராவை துப்பாக்கியால் சுட்டது முதல் கொங்காவெல கொய்யா முதலாளி காட்சியானது வேகட பொலவின் வீரசாகசங்கள், மேஜர், ரிச்சட் உடுகம யாழ்ப்பாணத்திற்கு சென்றது அப்போது ஏற்பட்ட கலவரம்……. 

வில்லியம் கொபல்லாவ அவர்கள் சனாதிபதியானது; சேர் ரிச்சர்ட் அலுவிஹார முதல் பொலிஸ் மா அதிபராக பதவியேற்றது முதலான மாத்தளை வரலாற்றின் பக்கங்களை திருப்பி; மனோரதியக் குதிரையை கட்ட விழ்த்து களிப்பில் மூழ்குவது மட்டுமல்ல இன்னும் எத்தனை எத்தனையோ புதையல்கள். புதைய மறுத்து நினைவுச் சஞ்சாரம் புரியும் வைரச்சுரங்கம். நினைவுகளின் சங்கமத்தில் மனதில் பதித்த அழியாச் சுடர்கள். முதியோர்கள் சமூகத்தின் சுமை என்று கூறியது யார்? அவர்களுக்கென ஒரு பொருளாதார பின்னணி மட்டும் இருந்து விட்டால் அவர்களின் வாழ்வே தனி வழி. தனிக்காட்டு இராஜாக்கள்தான். யாருக்கும் சுமை இல்லை. 

கடந்த சில மாதங்களாக “விக்கி”யால் இந்த சந்திப்புகளில் பங்கு கொள்ள முடியாமல் போய்விட்டது. திடீரென ஒரு நாள் மாலை நெஞ்சு வலி ஏற்பட்டது. வலி அதிகமாக துடிதுடித்துப் போய்விட்டார். உடனே வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். இரண்டு நாள்கள் வார்டில் தங்கும்படி ஆகிவிட்டது. பரிசோதனைகள் பலவற்றையும் செய்த பின்னர் பயப்படும் படியாக ஒன்றுமில்லை “ஹைபிரசர்” சாப்பாட்டில் கவனமும், ஓய்வும் அவசியம் என்று கூறி அனுப்பிவைத்தது ஆதாரவைத்தியசாலை. 

வீட்டிலேயே அடைந்து கிடப்பது எரிச்சலாக இருந்தபடியால் இன்று நீண்ட நாள்களுக்கு பின்னர் நகருக்கு வந்தார்; விக்கி. ஆமினேவின் பல நிபந்தனைகளோடு! தான்!. 

நகரிலிருந்து வீடு திரும்பும் வழியில் அழைப்புச் சத்தம் கேட்டு திரும்பினார் விக்கி. பழக்கப்பட்ட குரல்தான் தோழர் பஸ்நாயக்க தன்னை நோக்கி வேகமாக வருவது தெரிந்தது. விக்கிரம மாத்தளை கச்சேரியில் சீப்கிளாக்காக கடமையாற்றிய பொழுது பஸ்நாயக்க கிறிஸ்து தேவ கல்லூரியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்தார். 

தோழர் விக்கரமவுக்கு அருகில் வந்து சேர்ந்த பஸ்நாயக்காவினால் உடனடியாக பேச முடியவில்லை லேசாக மூச்சு இரைத்தது. பஸ்நாயக்காவின் முகத்தில் வியர்வை துளிகள் கொப்பளித்து இருந்தன. குள்ளமான உருவம். நரைத்த தலை “பட்டேல் மீசை” அதில் செம்பட்டை கலர் ஒளிவிட்டது. 

“தோழரை பார்க்க நான் வீட்டிற்கு வர இருந்தேன். உங்களுக்கு சுகமில்லையென்று கேள்விப்பட்டேன். இப்போது எப்படி…? 

“பெரிதாக ஒன்றுமில்லை. ஈ.சி.ஜி எல்லாம் எடுத்து பார்த்தாகி விட்டது. குடிப்பதற்கு கொஞ்சம் மருந்து தந்துள்ளார்கள்.” 

“எதற்கும் உடம்பை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள் போன் செய்தால் ஏன் ரிசீவரை தூக்குவதில்லை. நான் பல தடவைகள் முயற்சி செய்தேன் இப்போது டெலிபோன் என்பது ஒரு தொல்லையாகிவிட்டது. யார் எப்போது எதற்காக எடுக்கிறார்கள் என்று தெரியாமல் போய்விட்டது. அநாவசியமான தொல்லை “ஆம் ஆம்” 

இருவரும் வாய்விட்டு சிரிக்கிறார்கள். 

“சரி ஏதோ அவசரமாக சொல்ல வந்தீங்களே” விக்கிரம கேட்டார். 

“ஆமாம், உங்களை கண்ட சந்தோஷத்தில் அதனை மறந்து விட்டேன் நாங்கள் எல்லோரும் யாழ்ப்பாணம் செல்ல ஏற்பாடு செய்துள்ளோம். அடுத்த சனிக்கிழமை காலை ஒரு தனி வண்டியில் யாழ்ப்பாணத்திற்கு புறப்படுகின்றோம் நம்மோடு ரட்ணசாரர் தேரோவும் வருகின்றார்.’

விக்கிரமவின் முகம் தாமரையாக மலர்ந்தது. யார்? “ஓவிலிகந்த பன்சல தேரர் ரட்ணசாரர் நம்மோடு வருகின்றார். அவர் மிகவும் கருணை உள்ளம் படைத்தவர் ஆச்சே இனக்கலவரத்தின் போது பன்சலயில் பல தமிழ் குடும்பங்களை மறைத்து வைத்து காப்பாற்றிய பெருமை அவருக்கு உண்டு. சரி சரி தமிழருக்கு உதவி செய்தமையினால் சில அந்தவாதிகள் அவருக்கும் தொல்லை கொடுத்தனர். நானும் மனைவி ஆமினேவும் வருகின்றோம். நாம் யாழ்ப்பாணத்திற்கு போவோம் என்று நினைத்துப் பார்க்கவில்லை. இளமை காலத்தில் நமது தொழிற்சங்க மகாநாடுகளை அங்கே நடத்தினோம். காங்கேசன்துறை தொகுதிக்காக நடைபெற்ற இடைத்தேர்தலில் தோழர் வி. பொன்னம்பலத்திற்காக பிரச்சாரம், அரசியல் வேலை செய்தோம்.” விக்கிரம பூரித்தார். 

“ஆம், எனக்கு நினைவிருக்கின்றது. எழுத்தாளர் நண்பர்களான தோழர் அகஸ்தியர், தோழர் டேனியல் ஆகியோர் நம்மை வரவேற்று விருந்து கொடுத்தார்கள். இனமத பேதங்களின்றி வர்க்க நலனுக்கு முன்னுரிமை கொடுத்து தேசிய, சர்வதேசிய போராட்டங்களை முன்னெடுத்தார்கள். இப்போது அவர்களில் பலர் நம்மிடையே இல்லை. சிலர் இறந்து விட்டார்கள். ஒரு சிலர் அகதிகளாக வேறு நாடுகளுக்கு புலம் பெயர்ந்து போய்விட்டார்கள். நாங்களும் அன்று நினைத்த அந்த யுகம் மலர்ந்திருந்தால் கடந்த காலங்களில் நிகழ்ந்த வேண்டத்தகாத விளைவுகள் எல்லாம் நிகழ்ந்தே இருக்காது.” பஸ்நாயக்காவின் உள்ளம் காலசக்கரத்தில் தடம் பதித்தது, இருவரிடேயும் மௌனம் நிலவியது. கடந்தகால நினைவலைகளில் அவர்கள் சஞ்சாரம் செய்தார்கள். 

அந்த மௌனத்தை கலைத்துக் கொண்டு பஸ்நாயக்க “தென்னிலங்கை நம்பக்கத்திலும் பல தவறுகள் நிகழ்ந்து விட்டன. யாழ்ப்பாண நூலகத்தை எதிர்த்திருக்கக் கூடாது. அது மனித குலத்தின் பொக்கிசம். ஈனச் செயலை செய்துவிட்டோம். பஸ்நாயக்காவின் குரலில் சத்திய ஆவேசம் வெளிப்பட்டது.” 

“ஆமாம். அவர்கள் யாழ்ப்பாணத்தில் நடத்திய தமிழ் ஆராய்ச்சி மகாநாடு கூட குழப்பத்தில்தானே முடிந்தது. துக்ககரமானது அது மிக மிக துக்ககரமானது. இதன் வினைவுகள் பின்னால் எப்படி ஆனது பார்த்தீர்களா? பல்கலைக்கழக அனுமதியில் இனவிகிதாசாரத்தை கொண்டு வந்தது போன்ற விடயங்கள் தான் விரக்தி அடைந்த இளைஞர்கள் ஆயுத போராட்டங்களில் சேர ஒரு காரணமாயிற்று . பஸ்நாயக்க ஒரு குட்டி பிரசங்கத்தையே நிகழ்த்தி விட்டார்.

”ஆம், 1971 – 1989ல் தென்னிலங்கை இளைஞர்கள் ஆயுத போராட்டங்களில் ஈடுபட்டார்கள். இரு பகுதிகளிலும் நமது அழியாத செல்வங்களான இளைஞர்களே மடிந்தார்கள். நமது எதிர்கால சந்ததி இவ்வாறு மடிந்தது போல் இனிவரும் காலங்களிலும் நடக்காது இருக்க நாம் தக்க பரிகாரம் செய்ய வேண்டும். இப்போது நாம் யாழ்ப்பாணத்திற்கு செல்வது வேடிக்கை பார்ப்பதற்காக அமையக்கூடாது. நமது நல்லெண்ணத்தை எடுத்துக்காட்டும் விஜயமாக அது அமைய வேண்டும். பிரிந்த மண்ணை ஒன்று சேர்த்தால் போதாது. உடைந்த உள்ளங்களையும் ஒன்றிணைக்க வேண்டும். அவர்களின் கண்ணீரை துன்ப துயரங்களை அவலங்களை போக்க வேண்டும். இதற்காக நம்போன்றோர் அங்கே செல்லவேண்டும். அது நம்முன்னே உள்ள கடமை. 

இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போது பாதையின் மறுபக்கத்திலிருந்து தோழர் லதீப் கைத்தடியை ஊன்றியபடி மெல்ல மெல்ல இவர்களை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார். தலையில் தொப்பி, நரைத்ததாடி கணுக்காலுக்கும், முழங்காலுக்கும் இடையில் கட்டம் போட்ட சாரம் முழங்காலுக்கு கீழே இறங்கியுள்ள ஜிப்பா மொத்தத்தில அவரது தோற்றம் ஒரு அனுபவமிக்க ஞானியை நினைவுபடுத்தியது. 

நெருங்கி வந்த தோழர் லத்தீப் “என்ன இருவரும் எந்த கோட்டையைப் பிடிக்கத் திட்டம் போடுகின்றீர்கள்” – என்று சிரித்தபடியே கேட்டார். 

“யாழ்ப்பாண கோட்டையைத் தான்” “இல்லை, அதைத்தான் உடைத்து விட்டார்களே! நாங்கள் யாழ்ப்பாணம் போகின்றோம். நீங்களும் வருகின்றீர்களா? உங்களை போன்ற ஒரு அனுபவசாலி எம்மோடு வருவது காத்திரமாக அமையும்”. 

“இல்லை. இப்போது என்னால் அது முடியாது. யாழ்ப்பாணம் வர எனக்கும் ஆசைதான், எனது உடல்நிலை காரணமாக பிள்ளைகள் நீண்ட தூரம் பயணம் செய்ய சம்மதிக்க மாட்டார்கள். அந்த காலத்தில் யாழ்ப்பாண முற்ற வெளியில் நடந்த பல கூட்டங்களில் நான் பேசியிருக்கின்றேன். சாதி எதிர்ப்பு தீண்டாமை, ஆகிய போராட்டங்களிலும் கலந்து கொண்டிருக்கின்றேன். என்னோடு நமது மாத்தளை மதார் சாய்புவும் வந்துள்ளார். அவர் அப்போது தமிழரசு கட்சியின் தீவிர ஆதரவாளர். 

தமிழரசுக்கட்சி நடத்திய மொழியுரிமை சம்பந்தமான சத்தியாகிரகப் போராட்டத்தில் கலந்து கொண்டதால் அவருக்கு அரசாங்க தொழிலும் இல்லாமல் போய்விட்டது… லத்தீப் அவர்கள் வரலாற்று ஏடுகளை புரட்டினார். சம்பவங்கள் கோர்வையாக வந்து விழுந்தன. 

“ஆமாம் நான் கிறிஸ்து தேவ கல்லூரியில் படிக்கின்ற காலத்தில் டேனியல் பிரின்சிபலாக இருந்தார். அக்காலத்தில் மதார் சாய்பு தோட்டம் தோட்டமாக போய் தோட்டத்துப் பிள்ளைகளை கிறிஸ்து தேவ கல்லூரியில் சேர்த்தார். அப்போது ஆங்கிலமொழி மூலமான கல்வியும் கற்பிக்கப்பட்டது. தோட்டத்துப்பிள்ளைகளை கிறிஸ்து தேவ கல்லூரியில் மதார் சாய்பு ஆ சிரியர் எட்மிஷன் எடுத்து படிப்பிக்கச் செய்தது ஒரு சாதனைதான்.”

“சத்தயாகிரகப் போராட்டத்தில் கலந்து கொண்டு தொழிலை இழந்த மதார் சாய்பு நீண்ட காலம் கஸ்டப்பட்டார். சிறந்த ஓவிய ஆசிரியரான அவர் அஜந்தா முதல் சீகிரியா வரையிலான சித்தரங்களை ஆய்வு செய்த கட்டுரைகளை எழுதினார். அவரது மாணவர்கள் அவற்றை நூலுருவாக்குவதாகக் கூறி ஏமாற்றி விட்டனர். அவரால் கல்வி கற்று உயர்நிலை அடைந்த பலர் அவரை நினைத்துக்கூட பார்க்கவில்லை.” லத்தீப் அவர்களின் பேச்சில் சத்திய ஆவேசம் ஆதங்கம் வெளிப்பட்டது. 

“அவருக்கு மட்டுமா இந்நிலை? அந்தகாலத்தில் ஆசிரியர் தொழிலை ஒரு தெய்வீகப் பணியாக, தொண்டாகவும் கருதி உழைத்த அனேகருக்கு இதேகதிதான். ஆனால் எல்லா மாணவர்களும் நன்றி கெட்டவர்கள் அல்ல. ஆசிரியர்கள் ஏணிதான்.’ 

“அன்றொருநாள் நான் சைக்கிள்வண்டியை தர்மபால மாவத்தையில் தள்ளிக்கொண்டு செல்லும் போது அந்த வழியாக காரில் வந்த எனது பழைய மாணவர் ஒருவர் காரை மெல்ல நிறுத்தி; என்ஜினை ஆப் செய்யாமலே காரின் கண்ணாடியை சாடையாக இறக்கி; சற்று தன் முகத்தை வெளியே நீட்டி “மாஸ்டர் இன்னும் அதே பழைய சைக்கிள் வண்டிதானா?” என்று பகிடியாக பழித்து விட்டு போனான். அவனுக்கு என்ன சேர் என்று அழைக்கக் கூட மனம் வரவில்லை” – பஸ்நாயக்க நகைச்சுவையுடன் கூறினாலும் இந்த சமுதாயத்தின் போக்கு பற்றிய கவலை அதில் தொனித்தது. 

“மதார் சாய்பு என்றவுடன் தான் எனக்கு நினைவிற்கு வருகின்றது. ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பத்தெட்டில், ஸ்ரீ பிரச்சினையில், மாத்தளை சந்தியிலுள்ள அன்னலிங்கம் சுருட்டுக்கடை, பாக்கியலெட்சுமி ஸ்டோஸ்,  சரஸ்வதி பவான் ஆகிய தமிழ் கடைகளின் பெயர்ப்பலகையில் உள்ள தமிழ் எழுத்துக்களுக்கு ஏணிமேல் ஏறி நின்று தார் பூசியவனை; ஒரெட்டில் எட்டி உதைத்து தார் வாளியோடு ஏணியும் சரிந்து கீழே விழ அவனை இடுப்பு ஒடியச்செய்த இந்த தோழர் லத்தீப் வீரன் மட்டும் என்ன போராட்டத்தில் குறைந்தவரா?” என்றார் விக்கிரம. 

லத்தீப் நானா புன்முறுவல் பூத்தார் ” சரி பகல் தொழுகைக்கு நேரம் ஆச்சி, தோழர்களை சந்தித்தது மிக்க மகிழ்ச்சி நான் வருகின்றேன்” என்று கொடபொல பக்கமாக நடந்தார். லத்தீப்நானாவின் ஆஜானுபாகுவான தோற்றம் முதுமையிலும் கம்பீரம் சற்றும் குறையவில்லை. அவர் நடந்து செல்லும் பாணியை தோழர்கள் இருவரும் ரசித்தனர் மிடுக்கான நடை…. 

மேற்காவுகை ஒட்ட மழை இறங்கி வந்து சினுங்கியது. மாத்தளை நகரின் அழகுக்கு கட்டியங்கூறி நிற்கும் அழகு மலையில் ஒங்கி வளர்ந்துள்ள “பைனஸ் மரங்களை அப்பி; வெண்மேகக்கூட்டங்கள் போர்த்திக் கொண்டுள்ளன. குளிர்ப்போர்வையில் மலை உறக்கம் கொண்டுவிட்டது. வெண் மேகங்கள் படிய யானை படுத்து உறங்குவதைப் போன்ற தோற்றமுடைய அழகு மலை; இப்போது இந்திரனின் வெள்ளை ஐராவதத்தைப்போல் விளங்கியது. 

முத்துமாரியம்மன் ஆலயத்தின் நவதள இராஜகோபுரத்தை வணங்கி ஆசி பெற்றவை. போல தவழ்ந்த குட்டி; குட்டி மேகங்கள் ஆலயத்திற்கு கிழக்கில் அமைந்துள்ள செந்தாக்கட்டி மலையின் உச்சியில் பழநி என அருள் பொழியும்; சென்பகப் பெருமானின் பாதங்களில் சரண்புகுந்து விடுகின்றன. 

கொங்காவெல பள்ளியிலிருந்து “அல்லா ஹு அக்பர்” என தொழுகைக்கு அழைக்கும் பாங்கொலி தேனென ஒலித்தது. 

பஸ்நாயக்காவும், விக்கிரமவும் விடைபெற்றுக்கொண்டனர். அடுத்த சனிக்கிழமை காலை புனித தோமையர் கல்லூரிக்கு முன்னாலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் வேனில் விக்கிரம தம்பதிகளும் யாழ் செல்வது என்பது முடிவாயிற்று. 

பயண ஒழுங்கில் ஏதாவது மாற்றம் இருப்பின் பஸ்நாயக்கா டெலிபோனில் தெரிவிப்பார் என்பதும் பேசியாகியது. அதன்படி புதன்கிழமை இரவு தொலைபேசியில் தொடர்பு கொண்ட பஸ்நாயக்கா; இப்பயணத்தில் கச்சேரியை சேர்ந்த ஒரு சில குடும்பங்களும் வரவிரும்புவதாகவும் எவ்வளவோ தட்டிக்கழித்தும் என்னால் அவர்கள் வேண்டுகோளை மறுக்க முடியாமல் போய்விட்டதென்றும் எனவே வேனில் அல்லாமல் அறுபதுபேர் செல்லக்கூடிய பஸ்ஸிலேயே யாழ் செல்வது என்ற முடிவினை தெரிவித்தார். 

அத்துடன் நாகதீப, நெடுந்தீவு உட்பட வேறு பல இடங்களுக்கும் செல்வதால் புதன்கிழமையே அங்கிருந்து திரும்பவரவுள்ளதையும் எடுத்துக்கூறினார். 

யாழ்ப்பாணம் செல்கின்றோம் என்ற வார்த்தையை பஸ்நாயக்கா கூறிய பொழுதிலிருந்து தோழர் விக்கிரம கடந்த காலங்களில் தாங்கள் யாழ்ப்பாணத்தோடு நெருங்கி பழகிய தொடர்புகள்; சிவப்பு சட்டை அணிந்து கொண்டு, சிவப்பு கொடிகளை ஏந்தி தோழர்களோடு சமதர்ம கீதம் இசைத்தது “ப்ளாவில்” கள் குடித்து மீன், நண்டு வகைகளை சுவைத்தது. ஒடியற்புட்டு, கூழ் என்பனவற்றை அருந்தி மகிழ்ந்தது போன்ற நினைவுகளில் சஞ்சரிக்கத் தொடங்கிவிட்டார். 

அப்போது இனித்தது பனங்கட்டி, மட்டுமா? கஸ்தூரியார் வீதியில் நடைபெற்ற சந்திப்புகள், கைலாசபதி, சிவத்தம்பி ஆகியோரின் திறனாய்வுத்திறன், தோழர் எம்.சி. சுப்பிரமணியத்தின் எளிமை என்பனவெல்லாம் மானுடத்திற்கு இலக்கணம் வகுத்தமை. இன்றும் பசுமையானவை மட்டுமல்ல! அவை என்றும் மானிலம் சிறக்க அவசியமானவை. 

இந்த நேசங்களை இப்போது வளர்க்க வல்லார் உண்டா? ஆம் உண்டு வடக்கிலும் தெற்கிலும் உண்டு, தற்காலிகமாக இவர்களது குரல் ஒடுக்கப்பட்டிருந்தாலும் அது ஓயாது. “வேறுள குழுவையெல்லாம் மானுடம் வெல்லும்” 

சனிக்கிழமை பொழுது புலர்ந்து கொண்டிருந்தது. யாழ்ப்பாணம் செல்ல புனித தோமையர் கல்லூரிக்கருகில் களைகட்டி நிற்கும் பஸ் வண்டிக்கருகில் விக்கிரம தம்பதியினர் ஏறிவந்த ஆட்டோ வந்து நின்றது. 

மப்பும், மந்தாரமுமான வானம், சிலு சிலு வென்று வீசும் காற்று குளிரை விதைத்துச் செல்கின்றது. தளர்ந்த உடல், தளராத மனம். விக்கிரம தம்பதியினரை குளிர்வாட்டி வதைத்து விடுமா? 

யாழ்ப்பாணம் செல்லத்தயராக நின்ற பஸ்சில் விதம் விதமான “பெனர்கள்” குயுத்தியான வாசகங்கள் அவற்றில் பளபளத்தன. வண்டியினுள்ளே ஒரே ஆரவாரம். இளைஞர்களும் யுவதிகளும் அந்த அதிகாலை வேளையிலேயே குதியாட்டம் போட்டுக் கொண்டிருக்கின்றனர். கடைசி சீட்டில் விநோதமான உடையணிந்த இளைஞர்கள் பேன்ட் வாத்தியத்தில் காவடி பைலாவையும் விளாசித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் மத்தியில் அரை அர்த்தநாரீசுர நங்கை ஒருத்தி ஆடிக் கொண்டிருந்தாள். 

“சூடாமணிகே பலலா யனவானே அப்பி பைலாவிற்கு யாப்பா பட்டுன பலண்ட அப்பியனவானே அப்பி” – என்று இட்டுக்கட்டிய சரணம் உச்சஸ்தாயில் முழங்குகின்றது. பல்லவி, அனுபல்லவி, சரணம் எல்லாம் அது தான்! மங்கலான ஒளி. தோழர் விக்கிரமவின் கண்கள் பஸ்நாயக்காவை தேடித்துளாவின. பஸ்ஸினுள்ளே மூத்தோர்கள் திறந்த வெளிச் சிறைச்சாலையில் இருப்பது போன்று அமர்ந்திருந்தனர். ரத்னாயக்கா தம்பதியினருக்கு பின்னாலுள்ள சீட்டில் நமசியும் தௌபிக்கும் மொயினும், எலி; பொறி பெட்டிக்குள் அடையுண்டது போல் தொங்கிய முகத்துடன் உட்கார்ந்திருந்தனர். தோழர் இராமாவும் மெனேஜர் ஞானப்பண்டிதன் முன்கூட்டியே யூகித்து சொல்லியது இப்போது எவ்வளவு உண்மையெனப்பட்டது. 

பாடல்கள்… ஆடல்கள்… பாடல்கள் காட்டுக் கூச்சலாக ஒலித்தன, ஆடல்கள் அலங்கோலமாக விக்கிரமா தம்பதியினர் பஸ்ஸினுள் ஏறவில்லை. பஸ்ஸிலிருந்து “சகோதரயா” என்று அழைத்தபடி ரத்னாயக்கா இறங்கி வந்தார். அவர் முகத்தில் ஏமாற்றம் இழையோடியது. இனம் புரியாத வெறுப்பு படர்ந்திருந்தது. தயாரா என்ன என்று கேட்டார். 

பஸ்நாயக்க எங்கே? என்று விக்கிரம கேட்ட கேள்விக்கு இப்பதான் அறுபது பேருக்கும் காலைச் சாப்பாடு எடுக்க அருனாலோக்க பேக்கரிக்கு போயுள்ளார் என்றார் சலிப்புடன். 

பஸ்ஸினுள்ளே ஒரு கார்னிவேலே நடந்து கொண்டிருந்தது. வணதர்மரத்ன தேரரும் அவசர வேலை உண்டு என கூறி திரும்பிப் போய்விட்டதாகவும், ஹெலனும் புதிதாக சேர்ந்த ஆட்களோடு இணைந்து வர விரும்பவில்லையெனவும் ரத்னாயக்கா தெரிவித்து விட்டு மீண்டும் பஸ் ஏறி தனது மனைவிக்கு பக்கத்தில் பாதுகாப்பாக அமர்ந்து கொண்டார். 

இந்த பயணம் இப்படி போகத்தான் வேண்டுமா? விக்கிரமவின் அந்தராத்மா ஒப்பாரி சொல்லி அழுதது இப்படி ஒரு பயணம் அவசியம் தானா? 

நாம் யாழ்ப்பாணத்திற்கு போவது உடைந்த உள்ளங்களை ஒன்று சேர்க்க; அகதிகளாக கவலையுடன் வாழும் நம் சகோதரர்களுக்கு ஆறுதல் சொல்ல; அவர்களின் நாளைய வாழ்விற்கு நம்பிக்கையூட்ட; அவர்களது மனங்களை வெற்றி கொள்ள; காயப்பட்ட மனங்களை தழும் பேறி வைரம் பாயாது சுகமடைய; விக்கிரமவின் எண்ணங்கள் சுழன்றன. “ஆமினே நாம் திரும்பி வீட்டுக்குப் போவோம்” அவர் குரல் திடமாக ஒலித்தது. இது ஆமினே எதிர்பார்த்தது தான். 

ஜன்னல் கண்ணாடியைத் தட்டி; ரத்னாயக்காவிடம் கூறினார். “எனக்கு உடம்பிற்கு சரியில்லை என்று கூறுங்கள் நாங்கள் வீட்டிற்குப் போகின்றோம். இந்த பணத்தை பஸ் கட்டணத்திற்காக எடுத்துக் கொள்ளச் சொல்லுங்கள்” 

ஆமினே தான் கொண்டுவந்திருந்த கொண்டை பலகாரம்,’ கொக்கிஸ், அதிரசம் ஆகிய பட்சணங்கள் அடங்கிய பார்சலை ரத்னாயக்காவின் மனைவியிடம் கொடுத்து இவற்றை நீங்கள் யாழ்ப்பாணத்தில் சந்திக்கும் ஏழைகளிடம் கொடுங்கள் என்று விநயமாக கேட்டுக்கொண்டார். 

அவர்கள் ஏறி வந்த ஆட்டோ வண்டி துரத்தி வரும் கூச்சல்களையும், ‘பைலா’ பாடல்களையும் செவியில் ஏற்காது வீடு நோக்கி விஹார வீதியில் விரைந்து கொண்டிருந்தது. 

தோழர் விக்கிரம யாழ் நூலகத்திற்கு கையளிப்பதற்காக கொண்டு வந்த “தம்மபதம்” தேசிய இனங்களும் சுய நிர்ணயமும் லெனின் உட்பட புத்தகங்கள் அடங்கிய பார்சலை மடியில் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருந்த போதும் முச்சக்கரவண்டியின் குலுக்கலுக்கு புத்தகப் பார்சல் பிரிந்து சரிந்தது. புத்தகங்கள் விரிய பக்கங்கள் திறந்தன. 

சீட்டில் அமர்ந்தபடியே லாவகமாக குனிந்து விரிந்த பக்கங்களை கையில் எடுத்தார். தம்மபதத்தின் வாசகங்கள் பளிச்சிட்டன “ஆகாயத்திலே பறந்த பட்சிகளின் அடிச்சுவட்டை காணமுடியாது” ஆசையே துன்பத்திற்கு காரணம்” 

பகைமையை; குரோதத்தை பகையால் வெல்லமுடியாது அன்பினாலேயே அது முடியும். அன்புதான் இன்ப ஊற்று அன்பே உலக மகாஜோதி. 

தம்மபதத்தை மூடி கைகளினால் இறுகப்பற்றிக் கொண்டார் விக்கிரம. தர்மம்… தர்மம்… “தர்மம் தன்னை சூது கெளவும் தர்மம் மறுபடியும் வெல்லும். 

எது நடக்க விருக்கின்றதோ; அதுவும் நன்றாகவே நடக்கும் 

தோழர் விக்கிரம வீட்டை சென்றடைந்தார் மீண்டும் ஒரு நாள் அவர் யாழ்ப்பாணம் செல்வார். 

– உதயன் பத்திரிகையின் வெள்ளி விழா (2010) சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு ரூபா 15,000/= பெற்ற சிறுகதை.

– உதயன், 2010.

– அட்சய வடம், முதற் பதிப்பு: 2012, பூபாலசிங்கம் பதிப்பகம், கொழும்பு.

மாத்தளை பெ.வடிவேலன்2 சிறுகதை, நாவல், நாடகம், கவிைன ஆகிய இலக்கியத் துறைகளில் ஈடுபாடு கொண்டுள்ள வடிவேலன், இதுவரை ஐம்பதுக்கு மேற்பட்ட சிறுகதைகளையும் இரண்டு நாவல்களையும் எழுதியுள்ளார். கதைகள் சில சிங்களம், ஆங்கிலம் மொழிகளில் பெயர்க்கப் பட்டுள்ளன. இவர் எழுதி தமிழகத்தில் வெளியான சில கதைகள் அங்கு மறுபிரசுரமும் செய்யப்பட்டன.  வடிவேலனின் 12 சிறுகதைகள் அடங்கிய 'வல்லமை தாராயோ!' என்னும் சிறு கதைத் தொகுதி மலையக வெளியீட்டகத்தின் பிரசுரமாக வெளிவரவுள்ளது. 'தோட்டக் காட்டினிலே…' என்னும்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *