தாராவின் சப்பாத்து

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 6, 2025
பார்வையிட்டோர்: 806 
 
 

(2016ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நேரம் அதிகாலை 5 மணி 

கருபந்தேயிலை ஒடி விறகுகள் எரிந்து கருகி, ஸ்தோப்பை புகைமண்டலமாக்கியிருந்தது. அடுப்பில் கரி படிந்து அமர்ந்திருக்கும் அண்டாபானையில் கொதிக்கும் நீரை மாட்டுவாளிக்கு மாற்றிக் கொண்டிருந்தாள் தாரா அடுப்பை ஊதி ஊதி பறந்திருந்த சாம்பல் துகள்கள் அவள் தலையெங்கும் வெண்பஞ்சென படிந்திருந்தன அதனிடையே 

“ஏம்மா தாரா அப்பிடியே அந்த தண்ணியில கொஞ்சம் புண்ணாக்கையும் அள்ளிப் போடு ஊறட்டும் மாடுக கத்தி தொலையுதுக” என்று அப்பாவின் கட்டளையும் சேர்ந்துக் கொண்டது. அதிகாலை 5 மணியில் இருந்து அலாரம் வைத்த கடிகாரமென இயங்கத் தொடங்கினால் பள்ளியில் வந்து அமரும் வரையில் அவளுக்கு ஓய்வென்பது கிடையாது. 

நேரம் காலை 08 மணி 15 நிமிடம். 

பள்ளி வளாகமெங்கும் சிட்டெனப் பறந்துத் திரிந்த மாணவர்கள் தங்கள் வகுப்பறைகளில் வந்தடங்கியதும் பள்ளி அமைதியில் திளைத்தது. 

பாடசாலையின் எல்லைகளில் சடைத்திருந்த வாகை மரங்கள் படர்த்தும் சில்லென்ற காற்று வகுப்பறைகளை நிறைத்திருந்தது. குளிரில் நடுங்கியப்படி உடலை சுருக்கி,கூனிக் குறுகி அமர்ந்திருந்த மாணவர்களிடம் ஒர் அழகிருந்தது. 

ஐந்தாம் வகுப்பு கதவு அரைவாசியளவில் திறந்துக் கிடந்தது. காற்று அசைத்துக் கொண்டிருந்த கதவை மூடி தாழிட்டு விட்டு பாடத்தை தொடங்கலாம் என்று எழுந்து வந்த கஸ்துாரி டீச்சர், மேல் மூச்சும் கீழ் மூச்சும் வாங்கியப்படி வாசலில் வந்து நிற்கும் தாராவைக் கண்ட மாத்திரத்தில் 

“சனியனே சனியனே ஒன்னோட பெரிய அக்கப்போறாப் போச்சி” 

“எந்த நாளும் இப்பிடி லேட்டா வந்து, ஏன்? என் உயிர வாங்குற” 

“நீயெல்லாம் படிக்கலனு யாரு அடிச்சா?” 

“எப்பிடியும் மலையில் போயித்தான் சாகப்போற அப்பொறம் என்னாத்துக்கு இங்க வந்து ஏன் உசிர வாங்குற?” என்று பற்களை நறுநறுவென கடித்துக் கொண்டார். கண்களில் இருந்து பாய்ந்த கோபக்கணைகள் தன் விரல் இடுக்கில் சிக்கிய தாராவின் காதுகளை நசுக்கியப்படி தணிந்தது. 

“எரும் மாடே போ போயி ஒங்கப்பன கூட்டிக்கிட்டு வா பெற்றோர் கூட்டம் போட்டா மூச்சப்புடிச்சிட்டு பெரிய சட்டம் பேசுவாரு போயி வரச் சொல்லு நானும் என்னோட சட்டத்த காட்டுறேன்” என்று வார்த்தைகளை அள்ளி வீசினாள் கஸ்தூரி டீச்சர். 

வழமைப் போலவே சுவரோடு சுவராகி, மெளனம் காத்து, சிலையென நின்று விட்டாள் தாரா. 

காவி படிந்த சட்டையும், எண்ணெய் வழிந்த முகமும், வாய் பிளந்த சப்பாத்தும் மட்டுமல்ல கிழிந்து நாராகிப் போன டையும் தாராவின் அடையாளங்கள். வேகமாக வகுப்பு வாசலுக்கு ஓடி வந்தவளுக்கு திடுமென டீச்சரைக்கண்டதும் கண்களில் உறைந்த அதிர்ச்சி அவரின் கடூர வார்ததைகளில் மூழ்கி மூச்சித் திணறிக் கிடந்தது. 

சுவரில் கிடந்த கடிகாரத்தில் நேரத்தை பார்த்துவிட்டு மீண்டும் ஒருமுறை தாராவை பார்த்த டீச்சர் 

“மக்கு மக்கு ஒன்னால நேரமே போச்சி” 

“இதுத்தான் ஒனக்கு கடசி மன்னிப்பு இனிமேலயும் லேட்டா வந்தனு வச்சிக்க அப்பறம் நான் மனுசியா இருக்க மாட்டேன் சொல்லிட்டேன்.” என்று வாத்தைகளை இரைத்துவிட்டு சமாதானம் அடைந்தார். 

ஒவ்வொரு நாளும் படபடத்துப் போகும் தாராவின் இதயம் கஸ்தூரி டீச்சரின் கைகளில் சிக்குவதும் பின்னர் ஆசுவாசப்படுவதும் இயல்பாகி போயிருந்தது. 

கண்ணீரோடு வகுப்பறையினுள் வந்தமர்ந்தவளுக்கு, டீச்சர் மாணவர் சுகாதார பதிவு அட்டவணையை கையில் எடுத்ததும் வயிற்றில் புளி கரையத் தொடங்கியது. வரவு டாப்பு ஒழுங்கில் மாணவர்கள் வரிசை கட்டி நின்றனர். தொண்டை வழி கீழிறங்கிய பயம் தாராவின் கால்களை நடுக்கி இருந்தது. தன் தோழிக்கு பின்னால் நிற்கிறோம் என்ற நம்பிக்கையைத் தவிர அவளிடம் ஒன்றும் இருக்கவில்லை. 

மாணவரின் தலைமயிர் தொடங்கி சப்பாத்து வரை டீச்சர் ஸ்கேன் செய்துக் கொண்டிருந்தார். தன் சட்டையில் ஒட்டிக்கிடக்கும் புழுதியை கைகளால் துடைத்து விடுவதோடு, பிளந்த வாயின் ஊடே வெளியே வந்து கிடக்கும் காலுறைகளை உள்ளே திணித்து விட்டுக் கொண்டு நின்றவளை “அடுத்தது தாரா” என்ற வார்த்தை திடுக்கிடச் செய்தது. 

“மக்கு மக்கு ஒனக்கு எத்தன மொற சொன்னாலும் புரியாது” 

“நாறி நாத்தமெடுத்த இந்த சப்பாத்த வீசுனு சொன்னா கேக்கிறியா?” 

“ஒங்களுக்காகத்தான் தீவாளி சேல்ல நல்ல சப்பாத்து போட்டு விக்கிறானுங்க அந்தி ஆனா ஒங்கப்பனுக்கு நல்லா வாங்கி ஊத்திக்க தெரியுது தானே? என்று வார்ததைகளை அடுக்கி கொண்டே போனார். 

“இங்க வா இன்னக்கி ஒன்ன ரெண்டுல ஒன்னு பாக்கிறேன்” என்று நாற்காலியை தூரத்தள்ளி விட்டு கோபமாய் எழுந்தப்போது தாரா மிரண்டுப் போனாள். கண்களில் தேங்கிக்கிடந்த கண்ணீர் மளமளவென கொட்ட 

“இங்க வாடி கோவத்த கிண்டாத வந்திரு” 

“என்னா சொன்னாலும் காதுல வாங்கிக்காம நிக்கிறியே ஒனக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் இருக்கும்” 

“போடுற விதத்துல போட்டா நீயெல்லாம் தானா அடங்கிடுவீ” என்று தலை மயிரை கொத்தாய் பிடித்திழுத்த வேகத்தில் கத்தி அழத்தொடங்கினாள் தாரா. 

“இங்கப்பாரு நல்ல கொணத்தோட சொல்லுறேன் சப்பாத்த கழற்றிரு இல்லனா அடிப்பட்டே செத்துப் போவ” என்றுதும் தயங்கித் தயங்கி பின்வாங்கி மெதுமெதுவாய் நகரத் தொடங்கியவளை பிடித்திழுத்து, நாறாய் கிழிந்துக் கிடந்த சப்பாத்துளைக் கழற்றியப் போது தாரா மருண்டுப் போனாள். 

நாறென நைந்துக் கிடந்த சப்பாத்துகளை காட்சி பொருளாக்கி, தன்னை ஏளனப்படுத்துவதை தாங்க முடியாமல் ஓவென ஓலமிட்டப்படி வகுப்பு கதவை விருட்டெனத் திறந்துக் கொண்டு ஓடத்தொடங்கினாள் தாரா. கஸ்தூரி டீச்சருக்கு என்ன செய்வதென்று புரியவில்லை தாராவைத் தொடர்ந்து டீச்சரும் ஓடத்தொடங்கினார். 

காற்றைக் கிழித்துக் கொண்டு தாரா, மைதானத்தைத் தாண்டி ஓடிக் கொண்டிருந்தாள். அப்போதும் தன் சப்பாத்துகளை நெஞ்சோடு சேர்த்து இறுக்கி அணைத்திருந்தாள். அவளுக்கு பின்னே 

“அடியேய் தாரா நில்லுடி நில்லு கையில மாட்டுன அடிப்பட்டே செத்துப் போவ நில்லும்” என்று கஸ்துாரி டீச்சர் ஓடிக்கொண்டிருந்தார். டீச்சரை தொடர்ந்து மாணவர்களும் தாராவுக்கு பின்னால் ஓடிக் கொண்டிருந்தனர். 

பாடசாலையின் முகப்பில் ஆழமாய் கீழிறங்கும் நெத்திக்காணில் கண் இமைக்கும் பொழுதில் இறங்கி மறைந்த தாராவை பின்தொடர்ந்து ஓடிய டீச்சருக்கு மேல் மூச்சும் கீழ் மூச்சும் வாங்கியது.கால்கள் உலைந்தன. இருப்பினும் தாராவை தொடந்து வந்த டீச்சருக்கு அங்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. 

காட்டுச் செடிகள் வளர்ந்து கிடக்கும் சுடுகாட்டில் ஆங்காங்கு பூத்துக்கிடக்கும் சிந்தாக்கட்டிப் பூக்கள் அங்குள்ள கல்லறைகளில் உதிந்துக் கிடந்தன. 

கல்லறைகளுக்கு நடுவே, ஈரம் காயாத குழிமேட்டில் வந்த வேகத்தில் விழுந்து, தாரா ஓவென அழத்தொடங்கினாள். 

“அம்..மா அம்..மா அம்..மா” 

“அம்..மா அம்..மா அம்..மா” 

“ம்மா என்ன மட்டும் ஏம்மா? தனியா வுட்டுட்டு போன?” 

“நானும் ஓங் கூடவே வாறேம்மா” 

“எனக்கு புது சப்பாத்து வாங்கிட்டு வாறேனுதானே வெளிநாட்டுக்குப் போன ஏம்மா? திரும்பி வரல?” “சொல்லுமா? சொல்லுமா?” என்று குழிமேட்டில் குவிந்துக்கிடக்கும் மண்ணை ஆவேசமாய் அள்ளி வீசி அழத்தொடங்கினாள் தாரா. 

கஸ்தூரி டீச்சர் சிலையென உறைந்துப் போனார். 

அவர் கண்களில் நீர் முட்டியது. 

தன் கனவுகள் உதிர்ந்த வலிகளோடு, பூவெனக் கிடந்தாள் தாரா. 

“தாராவுக்கு கற்பிப்பதற்கு முன் தாராவை கல்” எனும் உளவியல் அப்போதேனும் அவரை சுட்டதோ நானறியேன் பராபரனே 

– ஊற்று 

– மீன்களைத் தின்ற ஆறு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: மே 2016, பெருவிரல் கலை இலக்கியா இயக்கம், இலங்கை.

சிவனு மனோஹரன் சிவனு, மனோகரன் (1978.09.17 - ) ஹட்டனைச் சேர்ந்த எழுத்தாளர், ஆசிரியர். இவர் பேராதனைப் பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டதாரி. இவர் கவிதை, சிறுகதை, கட்டுரை, விமர்சனம் ஆகிய துறைகளில் எழுதி வருகின்றார். இவரது படைப்புக்கள் வீரகேசரி, ஞானம், தினமுரசு, தினக்குரல், சுடரொளி, மித்திரன், வடம், லண்டன், சுடரொளி, புதினம் ஆகியவற்றில் வெளியகியுள்ளன. ஒரு மணல் வீடும் சில எருமை மாடுகளும், கோடங்கி ஆகியன இவரது சிறுகதைத் தொகுப்புக்களாகும். இவரது நூல்கள்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *