மே தினம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 11, 2025
பார்வையிட்டோர்: 768 
 
 

(1970ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

காலை ஒன்பது மணி. வெளியில் ஏதோ பரபரப்பு. 

அது என்ன? 

ஒரு தொழிலாளி ஜன்னலால் பார்க்கிறான். 

ஆயுதம் தாங்கிய பொலீஸார் காரியாலயத்தைச் சுற்றி வளைக்கின்றனர். 

துப்பாக்கிகளுடன் சில பொலீஸ்காரர்கள் திடீரென்று, ஆனால் கவனமாகக் காரியாலயத்துக்குள் நுழைகின்றனர். 

அவர்களுடைய முகங்களில் ஒருவித பயபீதி. 

காரியாலயத்திலிருந்த தொழிலாளர்கள் பதட்டமின்றி, அமைதியாக இருக்கின்றனர். 

பொலீஸ்காராகளுக்குத் தென்பு பிறக்கின்றது. 

ஆபத்தொன்றுமில்லை. 

இதை அறிந்த பொலீஸ் அதிகாரி பொலீஸ்காரர்களை விலக்கிவிட்டு முன்னுக்கு வருகின்றான். 

தொழிலாளர்கள் மத்தியில் எதுவித மாற்றமுமில்லை. பொலீஸ் அதிகாரிக்கு ஆத்திரம் பொங்குகின்றது. 

தங்களை இந்த நிலையில் கண்டவர்கள் ஓட்டம் பிடிக்க வேண்டும். தாங்கள் அவர்களைக் கலைத்துப் பிடித்து அடி போட வேண்டும் என்பது, அவர்களுடைய எண்ணம். 

அது பலிக்கவில்லை. 

ஆத்திரத்தில் அவன் பல்லை நெருடுகின்றான். 

“சண்முகம் வாசலிலை நில். ஒருதரையும் வெளியாலை போக விடாதை.” 

கோபத்துடன் கத்துகின்றான். 

“பெர்னாண்டோ பின்வாசலுக்குப் போ.” 

தொழிலாளர்கள் நிதானத்துடன் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருக்கின்றனர். 

“மார்ட்டின் அந்தக் குப்பைக் கூடையைச் சோதி.” 

தயங்கியபடியே மார்ட்டின் குப்பைக் கூடையை நெருங்குகின்றான். 

“ஒருதரும் அசையககூடாது. அப்பிடியே இருக்க வேணும்.” 

தொழிலாளர்களைப் பார்த்து அதிகாரி அட்டகாசத்துடன் கத்துகின்றான். 

“சரி இந்த இடத்தை முதலில் வாடிவாய் சோதியுங்கோ.” ஒன்றும் அகப்படவில்லை. 

“அறைகளின்ரை துறப்புகள் எங்கே?” 

தோழர் கந்தையாவைக் கேட்கின்றான் அதிகாரி. 

“ஏன்?” 

“அறைகளைச் சோதனை போட வேணும்.” 

அதிகாரத்துடன் கூறுகின்றான். 

“எதற்காக?” 

“இங்கே கைக்குண்டுகள் கிடக்கெண்டு தகவல் கிடைச்சிருக்கு.” 

கந்தையா ஏளனமாகச் சிரிக்கின்றார். 

அறைகள் சோதிக்கப்படுகின்றன. 

இல்லை, சோதிப்பதாகப் பாவனை செய்யப்படுகின்றது.

சோதனை முடிந்தது. 

“நீ தானே வேலுப்பிள்ளை?” 

“ஓ.” 

“நீ கைக்குண்டுகளைக் கடத்தி வந்ததெண்டு தகவல் கிடைச்சிருக்கு. என்ன, கொண்டந்தனிதானே?” 

அதிகாரி கண்களை உருட்டி வேலுப்பிளையைப் பார்க்கின்றான். 

பதிலில்லை. 

“ஆர் சிவகுரு?’ 

“நான்தான்.” 

“கந்தையா?” 

“நான்.” 

“சரி மூண்டு பேரும் வந்து ஜீப்பிலை ஏறுங்கோ.”

தொழிலாளர்கள் ஆவேசத்துடன் பொங்கி எழுகின்றனர்.

தோழர் கந்தையா அவர்களை நிதானத்துடன் ஒரு மாதிரிப் பார்க்கின்றார். 

அவருடைய பார்வையில் பொருள் நிறைந்திருக்கின்றது. தொழிலாளர்கள் சாந்தமடைகின்றனர். 

“சரி நாங்கள் போட்டு வாறம். நீங்கள்……” 

கந்தையா கூறுகின்றார். 

“கெதியாய் ஏறுங்கோ. நேரம் போட்டுது” 

அதிகாரி அவசரப்படுத்தினான். 

மூவரும் ஜீப்பில் ஏறுகின்றனர். 

ஏழெட்டு ஜீப்களும் ஐந்தாறு பொலீஸ் வான்களும் உறுமிக்கொண்டு புறப்படுகின்றன. 

தொழிலாளர்கள் தங்களது முஷ்டிகளை உயர்த்தி ஆட்டிக்கொண்டு கந்தையாவாக்களை வழியனுப்பி வைக்கின் றனர். 

எல்லா வாகனங்களுக்குள்ளும் ஆயுதம் தாங்கிய பொலீஸார் நிறைந்திருக்கின்றனர். 

“இதுவும் ஒரு விதத்தில் மே தின அணிவகுப்புத்தான்.” 

தோழர் கந்தையா முறுவலித்துக் கொண்டு கூறுகின்றார்.

‘எதுவித கரைச்சலுமில்லாமல் இவையளை மடக்கியாச்சு. இனி ஊர்வலமில்லை. எனக்குப் பதவி உயர்வு….’ 

பொலீஸ் அதிகாரியின் உள்ளத்தில் பூரிப்பு. 

மூன்று தலைவர்கள் கைதுசெய்யப்பட்ட செய்தி காட்டுத் தீ போலப் பரவுகின்றது. 

“இனி கம்யூனிஸ்ட்காரர்களால் ஊர்வலம் நடத்தேலாது. இவங்களாலைதான் எங்களுக்குத் தலையிடியாகக் கிடந்தது, நாங்கள் தப்பிப் பிழைத்தம்.” 

பாராளுமன்றத்தில் நம்பிக்கை வைத்துள்ள இடது சாரித் தலைவர்களுக்கு” ஆனந்தம். 

“மே தின ஊர்வலத்துக்குத் தடை!’ 

ஒரு கிழமைக்கு முன்பு இதை அறிந்த தொழிலாளர்கள் மத்தியில் கொந்தளிப்பு. 

“என்ன, மேதின ஊர்வலத்துக்குத் தடையா?”

ஒரு தொழிலாளி ஆச்சரியத்துடன் கேட்கின்றான்.

“ஓ., மே தினத்தண்டு ஒருதரும் ஊர்வலம் நடத்தக் கூடாதாம்.” 

“ஆர் சொன்னது?” 

“வேறை ஆர் சொல்கிறது? முதலாளித்துவ யூ.என்.பி. அரசாங்கம் தான்.” 

வெறுப்புடன் ஒரு தொழிலாளி கூறுகின்றான்.

“ஏன்” 

ஆத்திரம் பொங்கிக் குமுற மற்றொரு தொழிலாளி கேட்டான். 

“வெசாக் பெருநாளும், மேதினமும் ஒரே நாளிலை வருகுதாம்.” 

“அதுக்கு?” 

“ஏதாவது குழப்பம் வந்தாலுமெண்டு மே முதலாம் திகதியலண்டு ஊர்வலம் நடத்தக் கூடாதெண்டு அரசாங்கம் சொல்லியிருக்கு.” 

“முந்தியும் ஒரு முறை இந்த இரண்டு கொண்டாட்டங் களும் ஒரே நாளிலை வந்தவைதானே, அண்டைக்கு இரண்டும் கொண்டாடப்பட்டவைதானே?” 

“ஓம்” 

“அப்ப இந்த வருஷம்?” 

“உந்த அரசாங்கம் சொன்னாப் போலை நாங்கள் கேக்கப்போறமே?” 

“கேளாமல்…?” 

சந்தேகத்துடன் நல்லதம்பி கேட்டான். 

“உதைப் போலை எத்தினை அரசாங்கங்களை நாங்கள் கண்டிட்டம். நாங்கள் செய்யப் போறதை நிச்சயம் செய்தே தீருவம்” 

மே தின ஊர்வலத்தை நடைபெறாமல் செய்வதற்கு அரசாங்கம் முழு மூச்சுடன் வேலை செய்கின்றது. 

முதலாளித்துவச் செய்திப் பத்திரிகைகள் அரசாங்க த்துடன் பூரணமாக ஒத்துழைக்கின்றன. 

பொலீஸார் தீவிரமாக வேலை செய்கின்றனர். 

சி.ஐ.டி.பொலீஸார் இரவு பகலாக ஓடித்திரிகின்றனர். 

“பொது மக்களே! பயங்கர ஆயுதங்களுடன் ஆபத்துப் பேர்வழிகள் விதிகளில் கூட்டம் கூட்டமாகத் திரிகின்றனர். உங்கள் உடைமைகளையும், உயிர்களையும் காப்பாற்று வதற்குப் பொலீஸாருடன் ஒத்துழையுங்கள்”. 

பொலீஸார் இரவுபகலாக ஒலிபெருக்கியில் அலறித் திரிகின்றனர். 

பொதுமக்கள் மத்தியில் ஒருவித பரபரப்பு. 

தொழிலாளர்கள் மத்தியில் மனக்கொதிப்பு. 

பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகிக்கும் “இடதுசாரித் தலைவர்கள்” மே தினத்தை ஏப்ரல் முப்பதாம் திகதி கொண்டாடித் திருப்தியடைந்தனர். 

ஏன் முப்பதாம் திகதி கொண்டாடினர்? 

அரசாங்கக் கட்டளையை மீறி மேதினத்தை நடத்த பொலீசுக்கு அவர்கள் பயம். அது மாத்திரமல்ல.வெசாக் கிலண்டு மே தினத்தைக் கொண்டாடினால் தேர்தலில் வாக்குகளைப் பெறமுடியாதென்ற அச்சம். 

கம்யூனிஸ்ட் கட்சி?

தொழிலாளி வர்க்கம்? 

“மே தினத்தன்றே மே தின ஊர்வலம்!” 

தொழிலாளி வர்க்கத்தின் பிரதிக்ஞை இது. மூன்று தலைவர்கள் காலையிலேயே கைது செய்யப் பட்டு விட்டார்கள். 

வேறு சில தலைவர்களுக்காகப் பொலீஸார் வலை வீசித்திரிகின்றனர். 

“சுன்னாகத்திலையிருந்து ஊர்வலம் துவங்கப் போகுதாம்.”  

இத்தகவல் கிடைத்ததும் ஒரு பகுதிப் பொலீஸார் சுன்னாகத்துக்கு ஓடுகின்றனர். 

“இல்லை, மட்டுவிலிருந்தாம்.” 

சில பொலீஸ் வாகனங்கள் மட்டுவிலுக்குப் பறக்கி ன்றன. 

“சங்கானையில் சில சிவப்புச் சட்டைகள் தெரிந்ததாம்”. 

சங்கானைக்கும் விரைகின்றது பொலீஸ். 

மாலை ஐந்தரை மணி. 

நகரத்தில் உயிர்த் துடிப்பு அதிகரிக்கின்றது. 

காக்கிச் சட்டைகள் தலை கால் தெரியாமல் ஓடித் திரிகின்றன. 

“உலகத் தொழிலாளர்களே! ஒன்று சேர்வோம்!”

நகரத்தின் இதயத்திலிருந்து திடீரென ஒரு கம்பீரமான குரல் ஒலிக்கின்றது. 

தொழிலாளி வர்க்கத்தின் தியாகச் சின்னமான செங்கொடி வானத்தை நோக்கி உயர்கின்றது. 

“மேதினம் வாழக!’ 

அலையலையாக வந்து குவிந்து கொண்டிருக்கும் மக்கள் திரள் கோஷிக்கின்றது. 

எங்கிருந்து இவ்வளவு மக்களும் வருகின்றார்கள்? இரண்டு பொலீஸ்காரர்கள் பீதியடைந்து ஒரு சந்துக்குள விழுந்தடித்துக் கொண்டு ஓடுகின்றார்கள். 

மேதின ஊர்வலம் ஆரம்பிக்கின்றது! ஊர்வலத்தில் தொழிலாளர்கள், விவசாயிகள், வாலிபர்கள், மாணவர்கள் அணிதிரண்டு சென்று கொண்டிருக்கின்றார்கள். 

இந்த வேளையில், உலகின் பல்வேறு நகரங்களிலுள்ள வீதிகளில் அணிவகுத்துச் சென்று கொண்டிருக்கின்ற கோடானுகோடி தொழிலாளர்களுடன் புதிய உலகை அமை க்கப்போகும் இந்தப் புரட்சிப் போராளிகள் ஒரே இலட்சியப் பாதையில் சென்று கொண்டிருக்கின்றார்கள். 

ஜனசமுத்திரம் முன்னுக்கும் பின்னுக்கும் அலைமோதிக் கொண்டிருக்கின்றது. அவர்கள் மத்தியில் ஒரே உத்வேக உணர்ச்சி வியாபித்திருக்கின்றது. 

“உலகத் தொழிலாளர் வர்க்கம் நீடூழி வாழ்க!” 

ஊர்வலத்திலிருந்து எழுந்த இந்தப் பாட்டாளி வர்க்க சர்வதேசியத்துவ உணர்வு நிறைந்த கோஷம் லட்சோப லட்சம் மக்களின் உள்ளத்தைக் கிளறி ஒரே அணியில் ஐக்கியப்படுத்தி பொங்கிப் பிரவகித்தது. 

ஊர்வலம் முன்னேறிக் கொண்டிருக்கின்றது. 

வீதியின் இரு மருங்கிலும் வியப்பும் பரபரப்பும் நிறைந்த மக்கள் திரள், நிரையிட்டு இந்த ஊர்வலத்தைப் பார்த்துக் கொண்டு நிற்கின்றது. 

சத்தியத்தை வலிமையாகக் கொண்டு, நிதானமாக முன்னேறிக் கொண்டிருக்கும் இந்தப் போராளிகள் மத்தியில் பொங்கிப் பிரவகித்துக் கொண்டிருக்கும் புரட்சி உணர்வுச் செந்தழல், உலகின் பழைய, உக்கி உளுத்துச் செத்துக் கொண்டிருக்கும் சகலவற்றையும் சுட்டுப் பொசுக்கிச் சாம்ப ராக்கி அந்த அழிவில் புதிய உலகைக் கட்டி எழுப்புவத ற்குத் துடித்துக் கொண்டிருக்கின்றது. 

மேதின ஊர்வலம் பொங்கிக் குமுறி உருகி வழியும் எரிமலைக் குழம்பு போல அலையலையாகப் பெருகிக் கொண்டிருக்கின்றது. 

ஊர்வலத்தின் முன்னால் செங்கொடி கம்பீரமாகப் பறந்து கொண்டிருக்கின்றது. 

செங்கொடியிலிருந்து பிறந்த மகத்தான சக்தி, தனக்கு முன்னேயுள்ள சகல தடைகளையும் தகர்த்தெறிந்து, தான் சென்று கொண்டிருக்கும் பாதையைத் தங்குதடையற்றதாகச் செய்து, மக்களைக் கவர்ந்திழுத்து முன்னேறிக் கொண்டிருக் கின்றது. 

“சொல்லுறதைச் செய்பவர்கள் கம்யூனிஸ்டுகள் எண்டதை இப்ப நாங்கள் நேரிலை பார்க்கிறம்.” 

வீதியோரத்தில் நின்று கொண்டிருக்கும் மக்கள் திரளி லிருந்து ஒரு குரல் ஒலிக்கின்றது. 

ஊர்வலத்தின் உத்வேக உணர்ச்சியினால் கவர்ந் திழுக்கப்பட்ட வீதியோரத்தில் நிற்பவர்களில் அநேகர் ஊர்வலத்தில் வந்து சேர்கின்றனர். 

“பொலீஸ்!” 

வீதியோரத்தில் நின்ற ஒருவர் கத்துகின்றார்.

ஊர்வலம் வீறாப்புடன் முன்னேறிக் கொண்டிருக்கின்றது.

ஆயுதமேந்திய பொலீஸ் படை ஊர்வலத்தை நோக்கி வந்து கொண்டிருக்கின்றது. 

பொலீஸ்காரர்களின் தோள்களிலேயுள்ள துப்பாக்கிச் சனியன்கள் சூரிய ஒளியில் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றன. 

பொலீஸாரின் மனிதச் சுவர் ஊர்வலத்தை நெருங்குகின்றது. 

“நில்லுங்கள்!” 

ஒரு பொலீஸ் அதிகாரி உரக்கக் கத்துகின்றான்.

“அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம்!’ 

பொலீஸ் அதிகாரியின் தன்னந்தனியனான முரட்டுக் குரலை தொழிலாளர்களின் இடிமுழக்கம் போன்ற கோஷம் விழுங்குகின்றது. 

மேதினப் போராளிகளின் அணிவகுப்பு கெம்பீரமாக முன்சென்று கொண்டிருக்கின்றது. 

“நில்லுங்கள்!” 

அதிகாரி கீச்சுக்குரலில் மீண்டும் மீணடும் கத்துகின்றான். அவனுடைய முழிகள் பயத்தில் பிதுங்குகின்றன. முகத்தில் குறி வியர்வை. 

கடந்த காலப் போராட்டங்களின் அனுபவங்களைத் தொகுத்து, அதன் அடிப்படையில், தமது எதிர்காலப் போராட்டப் பிரதிக்ஞையை, மே தினக் கூட்டத்தில் பிரகடனம் செய்து சபதமெடுக்க, புரட்சி உணர்வு பீறிட்டுக் கொப்பளிக்கச் சென்று கொண்டிருக்கும் அந்தப் போராளிகள் அந்தப் பொலீஸ் அதிகாரியின் உளறலைக் கேட்கவில்லை. 

“கலைந்து போங்கள்!” 

கூவுகின்ற அதிகாரியின் குரல் நடுங்குகின்றது.

ஊர்வலம் முன்னேறிக் கொண்டேயிருக்கின்றது.

“தாக்குங்கள்!” 

நடுங்கிய குரலில் பொலீஸாருக்குக் கட்டளையிட்டு விட்டுப் பின்வாங்குகின்றான் அதிகாரி. 

பொலீஸாருக்குத் தயக்கம். 

”தாக்குங்கோ!” 

மீண்டும் அலறிக்கொண்டு தனது ஜீப்புக்குக் கிட்டச் செல்கின்றான் அதிகாரி. 

பொலீஸ்காரர்கள் தாக்கத் தொடங்குகிறார்கள். 

ஊர்வலத்திலுள்ளவர்கள்? 

தம்மைப் பாதுகாக்க முற்படுகின்றனர். 

மோதல்! 

பொலீஸ் படை சிதறிச் சின்னாபின்னமடைகின்றது.

ஊர்வலம் முன்னேற முயல்கின்றது. 

மேலும் பொலீஸ்படைகள் வந்து குவிகின்றன. 

மோதல்! 

குண்டாந்தடிப் பிரயோகம்! 

தடியடி! 

கல்லெறிகள்! 

கண்ணீர்ப்புகை! 

கைகால்கள் முறிகின்றன. 

மண்டைகள் பிளக்கின்றன. 

ரணகளம்! 

மேதின உரிமைக்காக, இந்தப் புரட்சிப் போராளிகளின் ரத்தம் பூமியில் மழைமாதிரிப் பொழிகின்றது. அந்த இரத்தத் திலிருந்து சத்தியம் ஜனித்தது. புத்துலகு அவதரிக்க இருக்கின்றது. 

சுரண்டும் வர்க்கத்தின் காக்கிச் சட்டைக் காவல் நாய்கள் சிந்திய நாற்றம் பிடித்த ரத்தத்தால் எந்தவித பயனும் விளையப் போவதில்லை. அது மண்ணோடு மண்ணாய் மறைந்து மக்கியது. 

“சுந்தரமாக்களைக் கைது செய்துபோட்டாங்கள்!” 

ஒரு தொழிலாளி கத்துகின்றான். 

சுந்தரமாக்களிருந்த பொலீஸ் ஜீப்பை நோக்கி தொழி லாளர்கள் ஓடுகின்றார்கள். 

தொழிலாளர்கள் ஜீப்பை அடையுமுன் அது புறப்படுகின்றது. 

“தோழர்களே! மே தினப்பிரகடனம் கூட்டம்……..” சுந்தரம் கத்துகின்றான். 

அவனுடைய மண்டையிலிருந்து ரத்தம் பெருகிக் கொண்டிருக்கின்றது. 

“புரட்சிகர மே தினம் வாழ்க!” 

ஒரு கையால் மண்டையிலுள்ள காயத்தை அழுத்திப் பிடித்தபடியே, மறு கையின் முஷ்டியை உறுதியாக உயர்த்திப் பிடித்துக் கொண்டு கோஷிக்கிறான் சுந்தரம். 

“உலகத் தொழிலாளர்களே ஒன்று சேர்வோம்!” ஜீப்பிலிருந்து முருகேசு எழுந்து செங்கொடியை அசை த்துக் கொண்டு கோஷிக்கின்றான். 

ஜீப்பில் சென்று கொண்டிருக்கும் அவர்களுடைய கோஷங்கள் காற்றில் மிதந்து வந்து தொழிலாளர்களின் காதில் விழுகின்றன. 

அவர்களுக்குப் புத்துணர்வு. 

அநேக தொழிலாளர்களுக்கு ரத்தக் காயங்கள். அவர் கள் அதை பொருட்படுத்தவில்லை. 

ஒரு தொழிலாளி பக்கத்து வீடொன்றிலிருந்து ஒரு மேஜையைக் கொண்டு வந்து வீதியோரத்தில் வைக்கின்றான். ரத்தம் தோய்ந்த செங்கொடி ஒன்று கெம்பீரமாகப் பறந்து கொண்டிருக்கின்றது. 

ஒரு தொழிலாளி மேஜை மீதேறி சர்வதேசிய கீதத் தைப் பாடுகின்றான். 

புத்துலகை அமைக்கப் போராடுகின்ற அந்தப் புரட்சிப் போராளிகள் எந்தவித பரிசோதனைக்கும் தயாரென்ற நிலையில் உறுதியாக நிற்கின்றனர். 

அவர்களுடைய எதிர்காலப் போராட்டப் பிரதிக்ஞை இந்த மேதினக் கூட்டத்தில் பிரகடனப்படுத்தப்படுகின்றது. 

அந்தப் போராளிகளின் உள்ளங்களில் புரட்சித் தீ கனன்று கொண்டிருக்கின்றது. 

மாலைச் சூரியன் செங்குழம்பை அள்ளி வீசிக் கொண்டிருக்கின்றான். 

உலகம் சிவப்பாக மாறிக் கொண்டிருக்கின்றது. 

– 1970

– ஜென்மம் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: ஜூலை 2005, மீரா பதிப்பகம், கொழும்பு.

நீர்வை பொன்னையன் (மார்ச் 24, 1930 - மார்ச் 26, 2020) ஈழத்து முற்போக்கு எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதை, நாட்டார் கதை, இலக்கியக் கட்டுரைகள் எனப் பல எழுதியவர். ஐம்பது ஆண்டுகளாக இடதுசாரி அரசியலில் உறுதியாக நின்றவர். தனது கடைசிக் காலம் வரை எழுதிக் கொண்டிருந்தவர். வாழ்க்கைக் குறிப்பு யாழ்ப்பாணம் நீர்வேலியில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியில் தொடக்கக் கல்வி கற்று பின்னர் 1951…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *