மனசுக்குள் மாலதி…





அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9
அத்தியாயம்-4
ராகுலுக்குக் சாதாரண சுரம்தான். ஒருவேளை மாத்திரை மருந்தில் குணமாகி விட்டது.
‘விளையாடி வியர்வை சிந்தும் நேரம் தண்ணீர் குடித்திருப்பான். அது சட்டென்று குளிர்வித்து உடலின் சூட்டை குறைத்ததால் வந்த சுரம். நாம்தான் அலட்டிக்கொண்டு விட்டோம்!’ மாலதி தெளிந்தாள்.
ராகுல் எப்போதும் போலிருந்தது அவளுக்குத் திருப்தியாக இருந்தது.

பிள்ளைக்குள் இருக்கும் தகப்பன் ஏக்கம் தாய்க்குத் தெரிய வேண்டுமென்பதற்காக ஏற்பட்ட சோதனையா இந்த சுரம் !! ராகுலுக்கு அப்படி ஒரு ஏக்கம் இருக்கிறதா. .? இல்லாவிட்டால் இவன் ஏன் பிள்ளைகளுடன் இருக்கும் தகப்பன்களையெல்லாம் அப்படி ஏக்கமாகப் பார்த்தான். .?!
இவனுக்குத் தந்தை முகம் தெரிய வாய்ப்புண்டு. இரண்டு வயது குழந்தைக்கு அப்பா முகம் கண்டிப்பாகத் தெரியும். பாசம்?
பிள்ளைக்குக் காரணமான பெற்றவன் சிறிது நேரம்கூட பிள்ளையைத் தூக்கி கொஞ்சி குளாவியது கிடையாது. அதற்காக பிள்ளையை வெறுக்கவுமில்லை, தொடவுமில்லை. பெற்றதற்குக் காரணம்…. இவனை வைத்துக்கொண்டு இவளிடம் காரியம் சாதிக்க வேண்டுமென்கிற எண்ணம். நிறைவேறவில்லை என்கிறபோது குழந்தை ஒதுக்கப்பட்டவனாகி விட்டான்.
இல்லை இல்லை ! ….அப்பன் ஆத்தாள் இல்லாத அனாதையாக இருந்தாலென்ன. .?
குழந்தைகளுக்குத் தாய், தகப்பன் பாசம் இயற்கை. அவர்கள் மடி மீது அமர்ந்து கொஞ்ச மாட்டோமா ஏக்கம் ஆளை அடிக்கும். ராகுலுக்கு அந்த ஏக்கம் உண்டு ! அதற்காக இவன்தான் தகப்பனென்று வேறு ஒருவனை எப்படி அறிமுகப்படுத்தமுடியும். .? அப்படி அறிமுகப் படுத்தப்பட்டவனிடம் இவனெப்படி உண்மையான தந்தை பாசத்தை அனுபவிக்க முடியும். ? உறுத்தல் இருக்கவே செய்யும்.!
அலுவலகத்தில் சுதாகரைப் பார்க்கவே இவளுக்கு அச்சமாக இருந்தது.
அவனை நிமிர்ந்து பார்க்காமலேயே வேலைகள் செய்தாள்.
ஆனாலும் பதில். .? அவளுக்குள் உறுத்தல் இருந்துகொண்டே இருந்தது.
மாலை மூன்று மணிக்கு அவனிடம் சென்று…
”சாயந்திரம் உங்ககூட பேசனும். !”மெல்ல செல்லிவிட்டுத் திரும்பினாள்.
காலையிலிருந்தே. பரீட்சை விடைத்தாளுக்காகக் காத்திருக்கும் மாணவன் போல் இவளை எதிர்பார்த்துக் கொண்டிருந்த சுதாகருக்கு முகம் பிரகாசம் அடைந்தது.
நேரம் மெல்ல ஊர்வதைக் கண்டு நெளிந்தான்.
மாலதி அலட்டிக்கொள்ளவே இல்லை.
ஐந்து அடித்ததுமே…
‘ நான் தயார் ! ‘ என்பது போல சுதாகர் அலுவலகத்தை விட்டு வெளியே வந்தான்.
பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடந்தான்.
மனதில் மகிழ்ச்சி, குறுகுறுப்பு. அவனுக்கே அவன் நடையில் மாற்றம் தெரிந்தது.
மனம் என்னவளோ மலர்களால் அர்ச்சிக்கப்படுவதைப் போலிருந்தது.
மாலதி மிச்ச சொச்ச வேலைகளையும் அவசர அவசரமாக முடித்துவிட்டு கடைசியாகத்தான் வேகமாக வந்து பேருந்து நிறுத்தத்தில் நின்றாள்.
சுதாகர் ஏற்கனவே இவனை எதிர்பார்த்து அங்கு நின்றான்.
அந்த நிறுத்தத்தில் எப்போதும் அவ்வளவாக கூட்டம் இருக்காது. அது புறநகர்ப்பகுதி.
சுதாகர், மாலதி முகத்தை ஆவலாகப் பார்த்தான்.
தன் பேருந்து வருவதற்குள் மாலதி அவனிடம் பேசி முடித்துவிட வேண்டிய கட்டாயம், அவசரம்.
” நீங்க என்னை எதுக்காக அப்படி கேட்டிங்கன்னு தெரிஞ்சுக்கிலாமா. .? ” கேட்டு நேராகவே விசயத்திற்கு வந்தாள்.
சுதாகருக்கு இந்த அதிரடியில் ஒன்றுமே புரியவில்லை. .
” மனசுல பட்டதைச் சீக்கிரம் சொல்லுங்க. என்னைத் திருமணம் செய்துக்கனும்ன்னு ஏன் தோணிச்சு.?”
” வாழ்க்கையில் ஒண்டியா இருந்து கஷ்டப்படுறீங்களே உதவலாம் என்கிற எண்ணம். ” அவனும் தன் மனதில் இருப்பத்தைச் சொன்னான்.
” உங்க நல்ல எண்ணத்துக்கு என் பாராட்டுக்கள். ஆனா. ..இதே எண்ணத்தை ஒரு ஏழை, விதவை, சம்பாதிக்காதவள் மேல காட்டினா நான் இன்னும் சந்தோஷப்படுவேன்.”
”மாலதிஈஈ ! ” துணுக்குற்றான்.
” இவ விவாகரத்தாகி தனியே வாழ்றவள். இப்படி சுலபமா மடக்கி, தடுக்கி விழ வச்சுடலாம்ன்னு நெனைச்சா மறந்துடுங்க. இல்லே. .. கை நிறைய சம்பாதிப்பவள், சேர்ந்து வாழ்ந்தால் சுகமா வாழலாம்ன்னு தப்புக்கணக்குப் போட்டிருந்தாலும் அடிச்சுடுங்க. நான் என் மகனோட தனிச்சு வாழனும்ன்னு சபதம் ! ” சொன்னாள்.
கேட்ட சுதாகரை யாரோ நெஞ்சில் ஏறி மிதித்தார்கள். வலி ! சுருண்டான்.
” அப்போ உங்க முடிவு. ..” பாவமாய்ப் பார்த்தான்.
” இன்னும் விளக்கமா சொல்லனுமா. .? ”
” மாலதி ! நீங்க ஒரு நல்ல சந்தர்ப்பத்தை நழுவ விடுறீங்கன்னு என் மனசுக்குப் படுது. ” சொன்னான்.
” எனக்கு அதிகம் பேசி பழக்கமில்லே சுதாகர். கடைசியா ஒன்னு சொல்றேன். ”
” என்ன. .? ”
” நான் மனசு மாறினால் உங்களுக்குத் சொல்றேன். ” என்று இவன் முகத்திலடித்த மாதிரி சொல்லிவிட்டு வந்து நின்ற பேருந்தில் வேகமாக ஏறி மறைந்தாள்.
சுதாகருக்கு அவமானமாக இருந்தது. அக்கம் பக்கம் பார்த்து தலை குனிந்தான்.
‘ நாயே ! நான் என்ன பிச்சைக்காரனா. .? ‘ மனசுக்குள் கோபப்பட்டான்.
அந்த கோபம் தணிய கொஞ்ச நேரம் ஆனது.
முன்பின் பழக்கமில்லாதவனிடம் , சண்டைக்காரனிடம் பேசும் பேச்சாய், ஏனிப்படி பேசுகிறாள். எதற்காக இப்படி முரண்டு பிடிக்கின்றாள். வாழ்க்கையில் எதோ பெரிய அடி. அது இவளை வெகுவாகப் பாதித்து விட்டது. அதனால்தான் வெறுப்பு கொண்டவள் போல் பேசுகிறாள். பிறர் பரிவு, பச்சாதாபம் அவளுக்குப் பிடிக்கவில்லை கோபத்தை ஏற்படுத்துகிறது. இல்லை, தான் கொண்ட கொள்கைக்கு இது வேட்டு என்கிற எண்ணம் இப்படி பேச வைக்கிறது.
அப்படி என்ன அடி. ..?
குடும்பமென்றால். ..சண்டை, சச்சரவு, கணவன் மனைவிக்குள் மனஸ்தாபம், வலி, வருத்தம் வரத்தான் செய்யும். மேடு பள்ளங்கள் பார்த்து நிரவி செல்வதுதான் வாழ்க்கை.
விவாகரத்து…. ஒரு வசதி. ஒத்துக்கொள்ளவில்லையென்றால் ஒதுங்கிப் போவதற்கு பொதுவாய் எல்லாத் தம்பதிகளும் இதை கையிலெடுப்பதில்லை. முடிந்த அளவிற்குப் பொறுத்துதான் போகிறார்கள். போராடத்தான் செய்கிறார்கள். முடியாத பட்சத்தில்தான் விலகுகிறார்கள்.
மாலதி பிரிந்து வந்து விவாகரத்து பெறும் அளவிற்குப் பிரச்சனை. !
கணவன் குடிகாரனா…? குடியே குடும்பமாக உள்ளவனா..? இருக்கின்றானா….? இருந்தானா..? … சூதாடியா. .?!!
சின்ன வீடு வைத்துக்கொண்டு இவளை ஒதுக்கி விட்டானா. ? சித்ரவதை செய்தானா ? இனி சரிவராது என்று சண்டை போட்டு விவாகரத்தாகி வெளியேறிவிட்டாளா. .?
ஆணுக்கு ஏன் இன்னும் சபலம் வருகின்றது. ஒரு பெண்ணின்மேல் இருக்கும் மோகம் குறைந்து அடுத்தவள் மேல் தாவுகின்றது. இவனுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்கிற மன சுதந்திரம், தைரியம்.
பெண்களை போல் கருத்தரிக்கும் கட்டாயம், உடல் மாற்றம், பிள்ளை பெறும் சுமை, வலி , வருத்தம் இருந்தால்..அது ஏன் வம்பு, அவலம், அசிங்கம் என்று விலகிப் போவார்கள்.
பெண்கள் அப்படித்தான் போகிறார்கள். அடுத்தவனை நிமிர்ந்து பார்க்க அஞ்சுகிறார்கள். நம் பத்தினித்தன்மை பல்லிளித்து , புதுசு என்பது மாறி, கைபட்டது என்றாகி அடுத்தவர்கள் அலட்சியமாக ஒதுக்கி விடுவார்களென்ற பயம் அவர்களைத் துரத்துகிறது. அதனால்தான் வயசுக்கு வந்த பிறகு வாலிபர்களை ஏறெடுத்துப் பார்க்க அஞ்சுகிறார்கள். நாம் தவறி விடுவோமோ, தடுமாறப்பட்டு விடுவோமோ என்று பயப்படுகிறார்கள்.
ஆண்களுக்கு அந்த பயமெல்லாம் இல்லை. எத்தனை முறை தவறு செய்தாலும் அவர்களுக்கு எந்த பாதிப்புமில்லை. அதனால்தான் கண்டது மேய்கிறார்கள். கிடைத்தது அனுபவிக்கிறார்கள். கிடைக்காவிட்டாலும் தேடுகிறார்கள், அலைகிறார்கள்.
பெண்ணுக்கு இந்த பயம் நமக்கொருவன் வேண்டும். அவன் நம்மவனாக இருக்க வேண்டும் என்று தாலி வாங்கி கொள்கிறாள்.
ஆண் இதை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறான். அவளுக்குத் தாலிகட்டி, காலில் மெட்டி அணிவித்து, நீ எனக்கு உரிமையானவள் என்று முத்திரைக்குத்தி கொள்கிறான்.
மாலதி மனசு மாறுவாளா. .? அப்படி மனசு மாறுபவள் முன் நாம் நிற்பது சரியா. .?
உலகில் உன்னைத் தவிர எனக்கு வேறு பெண்ணே கிடைக்கவில்லை. நீதான் எனக்கேற்ற அழகி. என் மகாராணி ! என்பதற்கடையாளமாய் கை கட்டி நிற்பதற்கு சமானமில்லையா அது. .?
அம்மா தாயே ! போடு பெற்றுக் கொள்கிறேன். ! என்பதில்லையா அது. பெண் உசத்தி ஆண் மட்டம் என்கிற மனநிலையை மனைவிக்கு ஏற்படுத்தும்.
மனம் ஏன் அவளை நாடியது. .?
அழகு, அடக்கம், ஒடுக்கமென்பதெல்லோ சும்மா பம்மாத்து. அடி மனதில்… ஒரு பெண் வாழ வேண்டிய வயதில் கஷ்டப்படுகின்றாளே என்கிற கழிவிரக்கம்.!
கழிவிரக்கம் மட்டும் எப்படி காதலாகும். . ? அது அப்படியே நிலைத்து நின்று…. கடைசி வரையில் கணவன் மனைவி உறவைக் காப்பாற்றும் ? அவள் மீது கழிவிரக்கம் கொள்வதற்கும், அவளைக் காப்பாற்றுவதற்கு அப்படி என்ன தகுதி. அவள் சம்பாத்தியமில்லாமல் கஷ்டப்படுகின்றாளா ஓடிப் போய் தாங்க. .?
மாலதி படித்திருக்கிறாள். சம்பாதிக்கிறான், ஒரு சராசரி மனித வாழ்க்கையில் அவளுக்கு எள்ளவும் குறைவில்லை. பின் ஏன் மனம் துக்கப்படுகிறது. வாழ வேண்டிய வயதில் ஒரு பெண் துணையின்றி கஷ்டப்படுகிறராள் என்கிற பாவம் . வெயில், நிலவு வீணாகிப் போகிறதென்ற வருத்தம்.
காதலென்பது ஒருவருக்கொருவர் அன்பு, பரிமாற்றம். மனசு மாற்றம். கவர்ச்சி, ஆண் பெண்ணென்கிற ஏதோ ஒருவித ஈர்ப்பு. பேசி பேசி இறுக்க வைக்கின்றது.
காதலுக்காக ஆண் பெண் காத்திருக்கிறார்கள். ஒருத்தருக்கொருத்தர் நிலைத்திருக்கிறார்கள்.
மாலதி மனசு மாறும்வரை காத்திருக்க முடியுமா. .?
காத்திருக்க வேண்டும் ! – சுதாகர் மனசு திடப்பட்டது. !
அத்தியாயம்-5
மறுநாள்.
அலுவலகத்தில் மாலதிக்கு சுதாகரைப் பார்க்க அருவருப்பாக இருந்தது. பார்க்கவே பிடிக்காதவள் போல் அவன் பக்கம் திரும்பவே இல்லை.
சுதாகருக்கு அப்படி இல்லை. அவளை பார்க்க அச்சமாக இருந்தது. நிமிர்ந்து பார்க்க கூச்சமாக இருத்தது.
இரண்டாம் நாளே அவன் துணை மேலாளர் பதவி உயர்வு பெற்று தணிகாசலம் அறைக்குப் பக்கத்தில் தனி அறையில் அமர்ந்தான்.
ஊழியர்களெல்லாம் வாழ்த்துச் சொல்ல அவன் அறைக்குச் சென்றார்கள். மாலதியும் சென்றாள். கூட்டத்தின் கடைசியில் வேண்டா வெறுப்பாக நின்றாள்.
சுதாகரும் அதை பற்றி கவலைப்படவில்லை. அவன் முகத்தில் எந்தவித உணர்ச்சி மாற்றமும் இல்லை.
திரும்பி வந்தபிறகு மாலதி அவன் அறைக்கு வேலை விஷயமாக தனியே சென்றாள்.
சுதாகர், மற்றவர்கள் சந்தேகப்படாத வகையில் பைலைப் புரட்டிக் கொண்டே. ..
” நாம நட்பாக இருக்கலாமே மாலதி ” சொன்னான்.
இவள் வந்த ஆத்திரத்தை அடக்கிக் கொண்டாள்.
” அதை பற்றி அப்புறம் பேசலாம் ! ” சொன்னாள்.
அன்று மாலையே அதைப் பற்றி விலாவாரியாகவும் சொன்னாள்.
” இருக்கலாம்.! அந்த நட்பு ஒருத்தரை ஒருத்தர் மனம் விட்டு பேச வைக்கும். அன்பைப் பரிமாற வைக்கும். அது இறுக்கமாகும், காதலாகும்.! வேணாம் சுதாகர். என் வழியை நான் தேர்ந்தெடுத்தாச்சு. தயவு செய்து குறுக்கே வந்து குளறுபடி செய்யாதீங்க. உங்களுக்கு நல்ல எதிர்காலமிருக்கு. என்னை மாதிரி இல்லாம… அழகான பொண்ணு கிடைப்பாள். வாழ்க்கையை உல்லாசமாக அனுபவிக்கலாம். ”
” அப்போ இந்த காதலை நினைச்சுப் பார்த்தீங்கன்னா சிரிப்பு வரும். அட ! இதைப்போய் தலையில் பெரிசாக தூக்கி ஆடினோமேன்னு மனசுக்குள் வெட்கம் வரும். மாலதியைத் திருமணம் முடித்திருந்தால் இதைவிட சிறப்பா வாழ்க்கை அமைஞ்சிருக்குமான்னு யோசனை வரும். காதலெல்லாம் சும்மா சுதாகர். தாம்பத்தியமில்லாத வாழ்க்கையை யோசனைப் பண்ணிப் பாருங்க…? வெறுப்பு வரும்.! காதல்…. காமத்துக்கு
அழகு செய்கிற ஒரு ஆடை, நகை. அவ்வளவுதான் ! ” தன் மனதிலிருப்பதை மறைக்காமல் சொன்னாள்.
சுதாகர் மெளனமாக கேட்டுக் கொண்டானேயொழிய. .. இதில் அவனுக்கு உடன்பாடில்லை. காதலென்பது சும்மா என்பதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
‘ காதலென்பது ஒரு ஜீவிதம். உள்ளங்கள் ஒட்டிய உள்ளன்பு ! ‘ என்பது அவனுக்கு நிச்சயமாகத் தெரியும்.
காதல் வேறு. காமம் வேறு. ஒரு நூலிழை மாற்றமென்பது அவனுக்கு நன்றாகவேத் தெரியும்.
அதேசமயம்… ஆண் பெண் உறவு அவசியமில்லாதது போலவும் மனசுக்குப் பட்டது. வயசு காலத்தில் தாம்பத்தியம். வயதான காலத்தில் துணை என்பதை இவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
வாலிப காலத்தில் எந்தவித பயம், வெட்கம், கூச்சம் இல்லாமல் தாம்பத்தியத்தை உரிமையாக அனுபவிக்க ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் வேண்டியதாக இருக்கலாம். அந்த உறவு… வயதான காலத்தில் துணை என்பதுதான் தப்பு.!!
சுதாகருக்குத் தெரிந்தவர் ஒருவர். ஆண், பெண் இரண்டு பிள்ளைகள்.
பெண்ணைக் கட்டிய வகையில்…. பையன் பிரான்சுக்குப் போய்விட்டான்.
மாப்பிள்ளையைத் தேர்ந்தெடுத்த வகையில்… பெண் அமெரிக்காவில் குடியேறி விட்டாள்.
நோய் நொடியில் அவர் மனைவி ஐம்பது வயதில் காலமாகி விட்டாள்.
எஞ்சிய இவர் மட்டும் தனிமையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
உயிருள்ளவரை இவர் தனிதான் !
இப்படி எவ்வளவோ ஆண் பெண்கள் இருக்கிறார்கள்.
வயோதிக வாழ்வில் வாடிக்கொண்டிருக்கிறார்கள்.!! ஆக துணை என்பது தப்பு.!!
இதோ… மாலதி திருமணம் முடித்து கணவனில்லாமல் கையில் குழந்தையோடு இருக்கின்றாள். காலச் சக்கரம் சுழன்று அடித்து பிள்ளையைப் பிரித்து அவளையும் தனிமைப் படுத்தும். அந்த வாழ்க்கைதான் அவளுக்கு அல்லாடல், கஷ்டம் !
கடைநிலை ஊழியன் மாலதியிடம் சென்றான். எதுவோ சொன்னான்.
அடுத்த வினாடி அவள் எழுந்து தணிகாசலம் அறைக்குள் நுழைந்தாள்.
அவர் மேசை மேலிருக்கும் அவள் பைல் பார்த்து முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க கோபப்பட்டார்.
மாலதிக்கு அழுகை வெடித்தது. முகம் பம்மி அடக்கிக்கொண்டு வெளியே வந்தாள்.
கவனித்த சுதாகருக்கு மனசு வலித்தது.
‘ என்ன அது. .? ‘ மண்டை காய்ந்தது.
வேலையில் தவறு. சுட்டிக்காட்டி… மனசு நோகாதவாறு மன்னித்து விட்டிருக்கலாம். அவருக்கு நிதானம், பொறுமை இல்லாதது பெரிய குறை.
அவர் ஒரு தேள். வேலையில் தவறு கண்டால் பொறுக்க மாட்டார். கொட்டிவிடுவார்.
மாலதியையும் அவ்வாறு கொட்டி இருக்கிறார் ! மனசு இப்படித்தான் நினைத்து கலங்கியது. அவள் கஷ்ட…ம் இவனை வருத்தப்பட வைத்து.
நேற்றுக் கூட…. ராகினியை, இப்படித்தான் கூப்பிட்டு வைத்து கொட்டினார்.
அவள் முகம் சுண்டி வெளியே வந்தாள்.
இவன் கவலைப்படவில்லை ஏன். .? தற்போது மாலதிக்கு வருத்தப்படக் காரணம். .?
அன்புள்ளவர்கள் பாதிக்கப்பட்டால் மட்டுமே சம்பந்தப் பட்டவர்களுக்கு மனசு வலிக்கும். அது மட்டுமல்ல. .. ராகினிக்குக் கணவர் இருக்கிறான் . துக்கம், வருத்தமென்றால் சாய்ந்து கொண்டு அழுவதற்கு நெஞ்சும், படுத்துக் கொண்டு அழுவதற்கு மடியும் , ஆறுதல் படுத்த கையும், தேறுதல் படுத்த மனமுமிருக்கிறது.
மாலதிக்கு. ..???
கத்தினாலும், கதறினாலும் தானே அனுபவிக்க வேண்டிய நிலை.!
நாம் மாலதியைக் காதலிப்பதால் கரைகின்றோமா. பரிவு, பச்சாதாபத்தால் கவலைப்படுகின்றோமா. இந்த வலி காதலா, இல்லையா . .?! சுதாகர் குழம்பினான்.
மாலை. … மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பேசினான்.
” உங்களைச் சந்திச்சு பேசவே பயமா இருக்கு மாலதி. நான். … நாம நட்பா இருக்கலாம்ன்னு சொன்னதுக்கே பயந்து மறுத்த நீங்க என்னைத் தப்பா பேசிடுவீங்களோன்னு இன்னும் தயக்கமா இருக்கு. இருந்தாலும் மனசுல உள்ள வலியைச் சொல்றேன். மேலாளர் திட்டி நீங்க கண்கலங்கி வந்ததைப்பார்த்த எனக்கு கலங்கிப் போச்சு. அவர்… இன்னைக்கு, நேத்தி நமக்கு அறிமுகமானவரில்லே. நீங்க வேலையில் சேர்ந்த நாள் முதலாய் அறிமுகம். அவர் கோபதாபம், குணம், நலமெல்லாம் நம் எல்லோருக்கும் தெரிஞ்ச விஷயம். அதனால அவர் பேச்சை மனசுல வச்சு கலங்க கூடாது, காயப்படக்கூடாது. அவர் திட்டாத அளவுக்கு வேலையில் தப்பு நடக்காத படி கவனமா இருங்க. இதை நான் உங்களுக்கு வேண்டியப்பட்டவன் முறையில் சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க. என் மனசு வலி, மனிதாபிமானம், நல்லெண்ணத்தோட சொல்றேன் ! ” சொல்லிவிட்டு நகர்ந்தான்.
இந்த அன்பு, அரவணைப்பு, ஆறுதலான பேச்சு மாலதிக்கும் இதமாய் இருந்தது. இளக்கியது. ஆனாலும்… அவள் ஒரு நிமிடம் நிதானித்து இளகிய மனதை இறுக்கினாள்.!
இந்த அன்பான பேச்சு, அரவணைப்பான சொல், ஆறுதல் மொழி, மனிதாபிமானம்…. ஆளை அடித்துவிடும். தன் உறுதிக் களைத்து விடும் ! நினைத்தாள். அதனால் அவளுக்குள் பயம், நடுக்கம் வந்தது.
இவனுக்கு ஏன் வலி, அக்கறை. ?! தன் மீது தனிக்கவனம் செலுத்த இவன் யார். இதே வலி மற்றவர்களுக்கு வந்திருந்தால் சொல்வானா. நேற்று ராகினிக்கச் சொல்லவில்லை. சந்தித்துக்கூட பேசவில்லை. மனிதாபிமானத்தைப் பொதுவாக காட்டினால் நல்லது. தனக்கு மட்டும் என்பது தவறு.
இப்படி மெல்ல பேசி வீழ்த்தப் பார்க்கிறானா. .? தன் மேல் அன்பும் அக்கறையும் கொண்டவனாகக் காட்டி வளைக்கும் சூழ்ச்சியா. .? – மாலதி மனசுக்குள் மெல்ல கோபப்பட்டாள்.
சரி… இதையே ராகினியோ, வசந்தாவோ தன்னிடம் சொல்லியிருந்தால் மனசு எப்படி ஏற்றுக்கொண்டிருக்கும். ?! என்று சிந்தனை செய்தாள்.
சாதாரணமாக ஏற்றுக் கொண்டிருப்போம்.! அது சுதாகர் விசயத்தில் ஏன் மாறுபடுகிறது, கொச்சைப்படுகிறது. கோபம் வருகிறது.! சுதாகர் மனசாட்சி இல்லாதவன். மனிதாபிமானம் இல்லாதவனா. .? எல்லாம் உள்ள நல்லவன்.!!
வசந்தா அலுவலக நேரத்தில் மயக்கமாகிவிட. . பதறி தூக்கிக்கொண்டு மருத்துவரிடம் ஓடிய முதல் ஆள் அவன். அப்படி இருக்கும்போது கோபம் ஏன். .?
ஆண் அக்கறை கொள்வதை இவளால் சகித்துக்கொள்ளமுடியவில்லை. பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஆணே அருவருப்பு ! முகத்தைச் சுளித்துக் கொண்டாள்.
ஆரம்ப பேச்சிலேயே இவனுக்குச் சரியான சூடு கொடுத்திருந்தால் இப்படி நெருங்கி வந்திருக்க மாட்டான். சூடு சரி இல்லை. ! நினைத்துக்கொண்டாள்.
” உங்ககிட்ட பேசவே பயமா இருக்கு மாலதி ! ” அவன் குரல் இவள் காதுகளில் ஒலித்தது.
அந்த பேச்சு பாதிக்கவில்லை என்றால் இந்த பயம் வந்திருக்காது. இருந்தாலும் நெருங்குகிறான்.
சரியான சவுக்கு கொடுத்து இவனை நம் பக்கமே திரும்பி பார்க்காமல் வைத்தால்தான் சரிப்படும்.! அப்போதுதான் இவன் நம்மை வந்து அண்டமுடியாது, ஒண்ட முடியாது. அன்பைக் கொட்டி பாசத்தைக் காட்டி ஆளை அலைக்கழைத்து மீண்டும் படுகுழியில் தள்ள முடியாது ! – மாலதி தீர்மானத்திற்கு வந்து பேருந்து ஏறினாள்.
‘ நல்லவனைக் காயப்படுத்தலாமா. .? ‘ மனசு முரண்டியது.
‘ எனக்கு… நல்லவன், கெட்டவன் தேவை இல்லை. என்னை யாரும் தொடக்கூடாது. எந்த ஆணும் தொந்தரவு கொடுக்கக் கூடாது. நான் ஆண் பகையாளி…!! ‘ உள்ளுக்குள் சொல்லி மனதை இறுக்கினாள்.!
அத்தியாயம்-6
இரவு .
” அம்மா ! என் வகுப்பு ஆசிரியை இந்த நோட்டைக் காட்டச் சொன்னாங்க. ..” ராகுல் அவளிடம் நோட்டை நீட்டினான்.
” என்ன. .? ” வாங்கிப் பார்த்தாள்.
‘ நாளை வகுப்பாசிரியைச் சந்திக்கவும் ! ‘ குறிப்பிட்டிருந்தது.
‘ என்ன விஷயம். .? ‘ மனசுக்குள் சின்ன தடுமாற்றம்.
மறுநாள் காலை.
அலுவலகத்திற்கு தொலைபேசியில் ஒரு மணி நேரம் தாமதமாக வருவதாக தகவல் சொல்லிவிட்டு, ராகுலை வழக்கமாக ஆட்டோவில் அனுப்பாமல் தான் கொண்டு விடுவதாக சொல்லி அந்த ஆட்டோக்காரனை அனுப்பிவிட்டு, வேறொரு ஆட்டோ பிடித்து கொண்டு மகனுடன் சென்று பள்ளியில் இறங்கினாள்.
அவனுடன் வகுப்பிற்குச் சென்றாள்.
” வணக்கம். வாங்க. ” வகுப்பாசிரியை வரவேற்றாள்.
” என்ன விஷயம் மேடம். .? ” இவள் கேட்டாள்.
” ஒண்ணுமில்லே. பள்ளிக்கூடத்துல நாங்க மாறுவேடப் போட்டி நடத்துறோம். ராகுலுக்கு நேரு முகச் சாயல் இருக்கு. ஒரு வெள்ளை பேண்ட், சட்டை வாங்கி கொடுத்தீங்கன்னா அசத்திடுவான் ! ” சொன்னாள்.
” அப்படியா. ..?! ” மாலதிக்கு ஆச்சரியமாக இருந்தது.
மகனை உற்றுப் பார்த்தாள். ஓரளவிற்கு அவனுக்கு நேரு சாயல் ஒத்திருந்தது.
” சரி ” மகிழ்ச்சியாய்த் தலையாட்டினாள்.
”அடுத்த வாரத்துக்குள்ள எடுத்துக் கொடுத்துடுங்க. .”
தலையாட்டிக்கொண்டு திரும்பினாள்.
மாணவ மணிகளுக்கு பாடம் மட்டும் சொல்லிக் கொடுத்து வெறுமனே அனுப்பாமல் இது என்ன மாறுவேடப்போட்டி, எழுத்துப் போட்டி, பேச்சுப்போட்டி, நாடகம், ஆண்டுவிழா என்றெல்லாம் அவர்கள் கவனத்தை திருப்பி வீண் வேலை பார்க்கிறார்கள். ! நினைவு ஓடியது.
பாடம், படிப்பு… என்கிற ஒரே மாதிரியான நடைமுறை படிக்கும் பிள்ளைகளுக்கு சலிப்பு தட்டும். இப்படியெல்லாம் அவர்களுக்குப் புத்தியை மாற்றினால் படிப்பிலும் சோர்வு தட்டாது, அவர்களுக்குள் உறங்கி கிடைக்கும் கலை நுணுக்கங்கள் வெளி வந்து பிற்கால பிரகாசத்திற்கு பிள்ளையார் சுழி போடும்.! – புரிந்தாள்.
நாட்டுத் தலைவர்கள், பெரியவர்களை எல்லாம் மறந்து வருகின்ற இந்த காலத்தில் வேஷம் போட்டாலாவது நினைவு படுத்துவது நல்ல செயல் ! நினைத்தாள்.
அலுவலக நிறுத்தத்தில் பேருந்தை விட்டிறங்கி கை கடிகாரத்தைப் பார்த்தவளுக்குச் சொரக். !
‘ தணிகாசலம் குதறுவார் ! ‘ – பயத்துடன் நுழைந்து இருக்கையில் அமர்ந்து அடிக்கண்ணால் அவர் அறையைப் பார்த்தாள்.
” மேனேஜரும், சுதாகரும் இல்லே மாலதி ! ” பக்கத்தில் இருக்கை ராகினி சொன்னாள்.
ஒருவகையில் தப்பித்தோம் ! நிம்மதி மூச்சு விட்டவளாய். .
” எங்கே. .? ” கேட்டாள்.
” கம்பெனியை விரிவு படுத்தும் விஷயமா முதலாளியைப் பார்த்து பேசப் போயிருக்காங்க. ”
சுதாகர் இல்லை ! நினைப்பு இவளுக்குள் இனிப்பாய் இருந்தது.
அன்றைய பேச்சுக்குப் பிறகு சுதாகர் இவளை நெருங்கவில்லை. இவளும் அவனை ஒரு பொருட்டாக நினைக்காமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்தாள். தொலைபேசி அடித்தது.
எடுத்துப் பேசிய சுப்புராமன்…
” உங்களுக்குத்தான் மாலதி ! ” சொல்லி வைத்தான்.
” தனக்கா. .?! ” இவளால் நம்ப முடியவில்லை.
யார். .? இதுவரை அலுவலகத்திற்குப் போன் செய்து தன்னை யாரும் அழைத்ததில்லை. அப்படி அழைக்கும் அளவிற்கு வெளியில் பழக்கமுமில்லை ! எவர். .? சுதாகரா. ..? – எழுந்தாள்.
எடுத்து, ” ஹலோ. .! ” என்றாள்.
” யாரு மாலதியா. .? ” பெண் குரல்.
” ஆமாம் நீங்க. .? ”
”நான் காயத்ரி !”
” எ. .. எந்த காயத்ரி. .? ” அடையாளம் தெரியாமல் முயங்கினாள்.
” அஞ்சு வருசத்துக்கு முன்னால நான் உன் அறைத் தோழி ! ”
மாலதிக்கு அடையாளம் தெரிந்துவிட்டது.
” அடிப்பாவி ! ஆண்டாள் காயத்ரி !” கூவினாள்.
” அவளேதான் ! ”
” எங்கிருந்து பேசறே. .? ”
” உள்ளூர்தான். செந்தமிழ்செல்வி ஏற்றுமதி இறக்குமதி கம்பெனியிலிருந்து பேசறேன். ”
” அங்கே வேலையா. .? ”
” ஆமாம்! உன்னை ரெண்டொரு தடவை பேருந்துல போகும்போது பார்த்தேன். ”
” எப்படி நானிருக்கிற இடம் தெரியும். .? ”
” உன் கம்பெனி துணை மேலாளர் சுதாகர் என் வீட்டு பக்கம்தாண்டி. ஒருநாள் உன்னையும் அவரையும் பேருந்து நிறுத்தத்துல பார்த்தேன்.
பேருந்தில் நான் போனதால நின்னு பேச முடியாத நிலை. அவரை விசாரிச்சு உன்னைக் கண்டுபிடிச்சுட்டேன். நாலு நாளாய் முயற்சி செய்து இன்னைக்குத்தான் நீ மாட்டினே ! ”
” அப்புறம். .? ”
” நான் உன்னைப் பார்க்கனும். நாம சந்திக்கனும். ”
” என் வீட்டுக்கு வர்றீயா. .? ”
” எனக்கு இந்த ஊர் அவ்வளவு பழக்கமில்லே. நான் உண்டு என் வேலை உண்டு. ”
” நான் உன் வீட்டுக்கு வர்றேன். சனி, ஞாயிறு சந்திக்கலாம். விலாசம் சொல்லு ? ”
சொன்னாள்.
பேசி முடித்து இருக்கையில் வந்து அமர்ந்த மாலதிக்குப் பறப்பது போல் உணர்வு.
இந்த ஆண்டாள் காயத்ரி கல்லூரி நாட்களில் கலகல. அழகு. எப்போதும் சிரித்த முகம். எவரையும் வம்புக்கு இழுக்கும் சுபாவம். விடுதி மாணவிகளைக் கலங்கடிப்பாள். இவளைப் பார்த்தாலே அலையாய் ஒதுங்குவார்கள். அரண்டு ஓடுவார்கள். அவர்கள் வட்டாரத்தில் இவளுக்கு புரட்சிப்பெண் ! என்கிற அடையாளம் பட்டப்பெயர்.
பேருந்தில் இடிப்பவனை , இடுப்பில் கை வைப்பவனை, ” நான் தயார் ! நீ தயாரா. ? . ” கேட்டு கலங்கடிப்பாள்.
அதற்கும் ஈ என்று இளிப்பவனை, … ” ஆனா ஒரு நிபந்தனை!. என் கையில் நீ ராக்கி காட்டிதான் தொடணும். ‘! சொல்வாள்.
தொடுபவன் கை வெடுக்கென்று விலகும். முகம் வெளிறும்.
‘ எப்படி இவளால் இப்படி மாறுபாடாக சிந்திக்க முடிகிறது. .? ‘ எல்லோருக்கும் வியப்பு வரும்.
பேச்சுப்போட்டி, எழுத்துப்போட்டி, எல்லாம் அவளுக்கு நிகர் அவள்தான். பாரதியார் பாடல்களெல்லாம் மனம் விட்டு பாடுவதில் கைகாரி. எத்தனையோ ராகமெட்டுகளை இழைத்து, குழைத்து இஷ்டத்திற்குப்
பாடுவாள். இவ்வளவிற்கும் காயத்ரிக்கு ராகம், தாளம் தெரியாது. ஏன்… விடுதியில் எவருக்குமே தெரியாது. ஆனால் காயத்ரி மெட்டுகள் கேட்பதற்கு இனிமையாக இருக்கும்.
கல்லூரி கடைசி நாளில் எல்லோருமே உருகி உருகி பிரிந்தார்கள். கொஞ்சம் கடிதத் தொடர்பும் வைத்துக் கொண்டார்கள். அதன்பிறகு எல்லோரும் காணாமல் போனார்கள். இருக்குமிடம் தெரியாமல் போனார்கள். ஆனால் நட்பு. .? அது மட்டும் என்றும் இளமை, பசுமை.
உலகத்தில் காதலைவிட நட்புதான் பெரியது. தாயன்புக்கு அடுத்தபடியாக கைமாறு கருதாமல் உழைப்பது, உதவுவது அதுதான்.
இந்த உண்மையை மாலதி விடுதியில்தான் உணர்ந்து கொண்டாள்.
அது பல்கலைக்கழகம். பல சாதி, பல மொழி. ஆனால் நட்புதான் அவர்களை எல்லாம் கட்டி வைத்து இறுக்கிப் பிணைத்திருக்கிறது.
ஒருத்திக்கு ஒன்றென்றால் எல்லாம் கூடுவார்கள். நேரம் காலமில்லாமல் ஏகத்துக்கும் கவலைப்படுவார்கள். உதவுவார்கள்.
மாலதிக்கு ஒரு மாதவிலக்கு நேரம். சரியான வயிற்று வலி. துடித்துப் போனாள். அதிக ரத்தப்போக்கு. இரவு மணி பத்து என்றும் பாராமல் மருத்துவமனைக்கு காவலாளியைத் துரத்தினார்கள். ஒருத்தி ஆட்டோ பிடிக்க ஓடிப்போய் டாக்சி பிடித்துக்கொண்டு வந்தாள். மருத்துவமனையில் சேர்த்தார்கள். பதறினார்கள்.
இது போல் ஆயிரம் கண்டு சளித்துப் போய் அலட்சியமாய்ப் பார்த்த டாக்டரிடம் சண்டை போட்டார்கள்.
” நீங்க நிறைய பார்த்திருக்கலாம் சார். உயிருக்கு ஆபத்தில்லேன்னு உங்களுக்குத் புரியலாம் தெரியலாம். ஆனா. .. எங்களுக்குப் புதுசு. மொத மொதல்ல சந்திக்கிறோம், துடிக்கிறோம். ” சொன்னார்கள்.
கைம்மாறு கருதாத உதவி. ஊரில் திருமணம். மார்பில் சந்தனம். என்று கிராமத்தில் பழமொழிக்கு உண்டு. ஒற்றுமைக்கு அது உதாரணம். திருமணம், நல்லது, கெட்டது எந்த வீட்டில் இருந்தாலும் ஊரை மறித்து கூடுவார்கள்.
அதே கதைதான் இங்கேயும்.
ஆண்டாள் காயத்ரி, மாலதிக்கு எத்தனையோ வழிகளில், எப்படி எப்படியோ உதவி இருக்கிறாள். அன்பு, பாசம், அரவணைப்பாக இருந்திருக்கிறாள்.
மாலதியும் அப்படியே உயிரை வைத்துப் பழகி இருக்கிறாள்.
அந்த நட்பு… கல்லூரிக்குப் பின் புதுப்பிக்கப் படவில்லை. எவருக்கு என்னென்ன சூழலோ. .? அதற்காக அந்த நட்பு அழிபடவும் இல்லை. அன்றும் இன்றும். என்றும் அப்படியே இருக்கிறது. இல்லையென்றால் மறந்து போன நட்பு, தொலைந்து போன முகம் கண்டதும் கைகாட்டி அழைப்பு விடுக்குமா..? விடுத்திருக்கின்றது.!!
என்றோ பழகினோம். எப்படியோ இருக்கிறோம் என்று எண்ணாமல் ஆளைக் கண்டதும் விலாசத்தைத் தேடி காயத்ரி அழைக்கிறாள்.
காயத்ரிக்குத் திருமணம் முடிந்திருக்குமா. .? இன்னும் கன்னியாக இருக்கின்றாளா. அப்படி இருக்க வாய்ப்பில்லை. திருமணம் முடிந்திருக்கும். ஆண் ஒன்று, பெண் ஒன்று பெற்று கணவன் மனைவி சந்தோசமாக இருக்கின்றார்களா . திருமணம் பெற்றோர்களாய்ப் பார்த்து முடித்ததா. .? காதலா,? காயத்ரிக்கு கல்லூரி முடிக்கும் வரை காதலில்லை. அதன்பின் ஏற்பட்டிருக்குமா. எப்படியும் இருக்கலாம்.
கணவன் எப்படி. .? அவள் அழகிற்கேற்ற மன்மதனா. . சம்பாத்தியமுள்ளவனா, குணவாளனா.?? ..
தணிகாசலம் இல்லாதது மாலதிக்கு வசதியாய்ப் போய்விட்டது. கோப்புகளை விரித்து வைத்துக்கொண்டு சிந்தனையிலாழ்ந்துவிட்டாள். .
– தொடரும்…
– ஆகஸ்ட் 1, 2001ல் குங்குமச் சிமிழ் இதழில் பிரசுரமான குறுநாவல்.
![]() |
என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க... |