சாதித்த மௌனம்
பேசி சாதிப்பது ஒருவகை என்றால், பேசாமல் சாதிப்பது இன்னொரு வகை. பொதுவாக, பேச வேண்டிய இடங்களில் நாம் பேசித்தான் ஆகவேண்டும். சில இக்கட்டான தருணங்களில் பேசி சாதிப்பதை விட, பேசாமல் சாதிக்கக் கூடியதன் அழுத்தம் அதிகமாகவே இருக்கும்.
ஸ்வாமி விவேகானந்தரின் வாழ்வில் நடந்த இரு சம்பவங்கள் இவை. இரண்டுமே அவரது ரயில் பயணங்களின்போது நிகழ்ந்தவை.

ஒரு முறை விவேகானந்தர் பயணித்துக்கொண்டிருந்த பெட்டியில் இருந்த சில துடுக்குத்தனமான இளைஞிகள், அவரிடம் ஒரு வேடிக்கை செய்ய ஆசைப்பட்டனர். அவர் தனது கையில் கடிகாரம் கட்டி இருப்பதை கவனித்த அவர்கள், “உங்களது கடிகாரத்தைக் கழற்றி எங்களுக்குக் கொடுத்து விடுங்கள். இல்லாவிட்டால், நீங்கள் எங்களைத் தொந்தரவு செய்ததாக ரயில்வே போலீசில் புகார் செய்வோம்” என மிரட்டினர்.
விவேகானந்தர் பேச்சு மற்றும் கேள் திறனற்றவர் போல் நடித்து, நீங்கள் சொல்வது எனக்கு கேட்காது, ஒரு தாளில் எழுதித் தாருங்கள் என்று சைகை காட்டி கேட்டார்.
உடனே அந்தப் பெண்களும் ஒரு தாளில் அவர்கள் சொன்னதை எழுதி அவரிடம் கொடுத்தார்கள்.
அதை அவர்களிடம் காட்டி, விவேகானந்தர் சொன்னார்: “இனி ரயில்வே காவலர்களை அழையுங்கள். நான் அவர்களிடம் இந்த மிரட்டல் கடிதத்தைக் கொடுத்து புகார் செய்ய வேண்டும்!”
இன்னொரு முறை விவேகானந்தர் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தபோது, அவருக்கு எதிர் இருக்கையில் இரண்டு ஆங்கிலேயர்கள் அமர்ந்திருந்தனர். விவேகானந்தரின் சன்னியாச ஆடைகளைப் பார்த்த அவர்கள், அவருக்கு ஆங்கிலம் தெரியாது என்று நினைத்து, ஆங்கிலத்தில் அவரைப்பற்றி கேலியாகவும் இழிவாகவும் பேசிக்கொண்டு வந்தனர். விவேகானந்தர் அதைத் தெரிந்துகொண்டதாகவே காட்டிக் கொள்ளவில்லை.
சற்று நேரம் கழித்து அவர் வேறு ஒருவரிடம் ஆங்கிலத்தில் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டார். அதைப் பார்த்த ஆங்கிலேயர்கள் ஆச்சரியப்பட்டு, “உங்களுக்கு ஆங்கிலம் தெரியுமா? அப்படி இருந்தும் ஏன் நாங்கள் பேசும்போது அது உங்களுக்குத் தெரிந்ததாகவே காட்டிக்கொள்ளவில்லை?” என வினவினர்.
விவேகானந்தர் சொன்னார்: “நான் முட்டாள்களை சந்திப்பது இது முதல் தடவை அல்ல!”
போட்டியிட்டும், போராடியும், எதிர்த்தும், சண்டையிட்டும், எதிரிகளை அழித்தும் வெல்வது உலகாயதம். அமைதி காத்து வெல்வது ஆன்மிகம். அது மற்றவர்களையாயினும் சரி; தன்னையே ஆயினும் சரி!
![]() |
இலக்கியவாதி மற்றும் நவீன தாந்த்ரீக ஓவியர். 5 சிறுகதைத் தொகுப்புகள், 4 நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு, ஒரு சிறார் கதைத் தொகுப்பு ஆகியவை வெளியாகியுள்ளன. சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும் பெற்றவர். நாவல் போட்டிகளிலும், ஓவியப் போட்டிகளிலும் ஓரிரு பரிசுகள் / விருதுகள் / பதக்கங்கள் பெற்றுள்ளார். அச்சில் வெளியான நூல்கள்: வடக்கந்தறயில் அம்மாவின் பரம்பரை வீடு – சிறுகதைகள் (2004). வேலந்தாவளம்…மேலும் படிக்க... |