பிறந்த வீட்டு சொத்து!

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 14, 2024
பார்வையிட்டோர்: 3,335 
 
 

கவிதாவின் முகம் வாடியிருந்தது. எப்போதும் பிறந்த வீட்டிற்கு சென்று விட்டு புகுந்த வீட்டிற்கு வரும்போது சிரித்த முகத்துடன் மகிழ்ச்சியாக வருவாள். இன்று நேர்மாறாக இருந்ததைக்கண்டு கணவன் கணேசன் அதிர்ச்சியடைந்தார்.

“என்ன கவி…உன்னோட அம்மாவுக்கு ஏதாச்சும் ஒடம்புக்கு சரியில்லையா?”

உடனே சீறியவளாய், “அந்த சனியனப்பத்தி இனிமேல் என் கிட்ட கேட்காதீங்க. அவ செத்துத்தொலைஞ்சாலும் நான் அவ வீட்டு வாசலை மிதிக்க மாட்டேன்… ” ஒருமையில் பொறுமையிழந்து சொன்னவள் வேகமாகச்சென்று சேலையிலிருந்து நைட்டிக்கு மாறாமல் பெட்டில் படுத்துக்கொண்டாள்.

என்றுமில்லாத பிரச்சினை ஏதோ இன்று  நடந்திருக்கிறது. சரி காலையில் கேட்டுக்கொள்ளலாம் என கணேசனும் தனது அறைக்கு உறங்கச் சென்று விட்டான்.

படுக்கையில் பஞ்சு மெத்தையில் படுத்தும் நெஞ்சு வலித்தது. ஒரு கண்ணுக்கு வெண்ணையும், இன்னொரு கண்ணுக்கு சுண்ணாம்பும் வைத்தது போல தம்பிக்கு சொத்துக்கள் அனைத்தையும் எழுதி வைக்கப்போவதாக சொன்னதோடு “உனக்கெதுக்கு பொம்பளப்புள்ளைக்கு சொத்துக்கொடுக்கோணும்….? நகை நட்டு போட்டு கண்ணாலம் மூச்சு வெச்சது பத்தாதா….? நோம்பிக்கு உன்ற புருசனுக்கு செஞ்சது பத்தாதா…? செத்தா கொள்ளி வைக்கிறவன் ஆம்பளப்பையன்தானே…? கொள்ளி வைக்கிறவனுக்குத்தான் பூர்வீகச்சொத்துங்கிறது காலங்காலமா இருக்கற பழக்கம் தானே…..? இன்னைக்கு என்ன புதுசா பேசறே…?” என தன் தந்தையும் பேசியது அவர்கள் மீது வெறுப்பை வரவழைத்தது.

‘தான் அவர்கள் வயிற்றில் பிறக்கவில்லையா? சொத்து குறைவாக இருந்தாலும், சகோதரன் படித்து சம்பாதிக்காமல் இருந்தாலும், தனக்கு கணவன் வீட்டில் பிறந்த வீட்டை விட அதிக சொத்திருந்தாலும் கூட கேட்காமல் விட்டு விடலாம். கட்டிக்கொடுத்த இடத்திலும் வசதியில்லாமல் பிறந்த வீட்டில் முன்னோர்கள் சம்பாதித்த சொத்துக்கள் பல ஏக்கர் நிலங்களாக இருப்பதோடு, ஒரு ஏக்கர் பத்துக்கோடி என முப்பது ஏக்கர் முன்னூறு கோடிக்கு விற்கும் இந்தக்கால கட்டத்தில் திருமணத்துக்கு ஐம்பது பவுன் நகை போட்டு முதல் நோம்பிக்கு மாப்பிள்ளைக்கு இரண்டு பவுன் பிரேஸ்லெட் போட்டதைப்போய் அம்மா சொல்லிக்காட்டி சொத்து இல்லையென பிச்சைக்காரியை ‘போ…’ என சொல்வது போல் எப்படிப்பேசத்தோன்றியது?’ நினைத்து, நினைத்து மனம் புழுங்கி கண்ணீர் வடித்தாள்.

அலைபோசி ரிங்காகிக்கொண்டிருக்க எடுத்துப்பார்த்தவள் தாயின் போனிலிருந்து அழைப்பு வந்ததால்  பேசாமல் வைத்து விட்டாள். கடந்த ஒரு வாரமாகவே தாயின் அழைப்பை நிராகரித்திருந்தாள். இது வரை நூறு முறை அழைப்பு வந்திருந்தது. இப்போது அத்தை மகள் சுகன்யா அழைத்தாள்.

“சொல்லு சுகன்யா….”

“உங்க வீட்லதான் இருக்கேன். உடனே அவரையும், பொண்ணையும்‌ கூப்பிட்டு சீக்கிரமா வா கவிதா….”

“எனக்கு வரதுக்கு மனசில்ல நீ போன வையி..‌‌..”

“கவிதா சீரியஸான விசியம், சீக்கிரமா வா. இல்லேன்னா காலம்பூரா வருத்தப்படுவே….‌‌”

பத்து வயது பெண் கயாவையும், கணவன் கணேசனையும் அழைத்துக்கொண்டு பிறந்த வீட்டிற்கு கவிதா போன போது வீட்டின் முன் கூட்டமாக இருந்ததைப்பார்த்தவள் அதிர்ச்சியுடன் உள்ளே போய் பார்த்த போது தாயும், தந்தையும் உயிரற்ற உடலாக இருந்ததைக்கண்டு கதறினாள், கண்ணீர் சிந்தினாள். இரண்டு பேரும் கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்டதால் அந்த நோயைப்பற்றி வெளி நாட்டிலிருந்த தம்பிக்கும், பக்கத்து ஊரிலிருந்த தனக்கும் சொல்லாமலேயே இருந்திருக்கின்றனர் என்பதை அத்தை மகள் சுகன்யா சொல்லக்கேட்டு வேதனையின் உச்சத்துக்கே சென்றாள். 

அப்போது குடும்ப வக்கீல் கவிதாவிடம் வந்து “உனக்கும், உன்னோட தம்பிக்கும் இருக்கிற சொத்துல ஆளுக்கு சரிபாதியா தானக்கிரையமா எழுதி வெச்சிட்டாங்க. நீ போன வாரம் இங்கே வந்த போது உனக்கு சொத்து இல்லேன்னு சொல்லி அவங்களை நீ வெறுக்கும்படி செஞ்சாத்தான் இப்படி செத்துப்போகும் போது அதிகமா மனசால மகளான நீ பாதிக்கப்பட மாட்டீன்னு அப்படி மனசக்கல்லாக்கிட்டு பேசியிருக்காங்க. மத்தபடி உன்னோட தம்பி மேல இருக்கிற பாசத்த விட உன் மேல தான் அதிகமா பாசம் வெச்சிருந்தாங்க…. இந்தாங்க கிரயம் செஞ்ச உங்களுக்கான பத்திரம்” என வக்கீல் சொல்லிக்கொடுத்த போது, தான் சொத்துக்காக பெற்றோரை திட்டி வெறுத்ததோடு போனடித்தும் எடுக்காமல் பாவியானதை நினைத்து மார்பில் அடித்துக்கொண்டு மயங்கிச்சரிந்தாள் கவிதா.

கே.ஆர்.வேலுச்சாமி ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *