மன நடிப்பு!




வெளி நாட்டில் ஹனிமூனுக்காக சுற்றுலா சென்ற இடத்தில் கணவனுடன் மகிழ்ச்சிப்பட்ட படி தான் எடுத்த செல்ஃபி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் போட்டதும் பல லட்சம் பேர் பார்த்து வாழ்த்து சொன்னதை மகிழ்ச்சியோடு ஏற்க முடியாமல் பைவ்ஸ்டார் ஹோட்டல் சொகுசு அறையில் சண்டை போட்டு அழுது கொண்டிருந்தாள் நடிகை நனேனா.
பல லட்சம் பேர் தங்களது புகைப்படத்தை பார்த்து மகிழ்ந்ததோடு, தங்களுக்கு இது போன்ற வாழ்வு அமையவில்லையே என பொறாமைப்பட்டது அவர்களது பதிவில் வெளிப்பட்டிருந்தது. ஆனால் நிஜத்தில் நிலைமை வேறு. ‘நிஜ வாழ்வும் நடிப்பாகி விடக்கூடாது’ என பயப்பட்டவளுக்கு அது தற்போது நடந்து விட்டதை எண்ணி வேதனையில் குமுறினாள்.
சுற்றுலாவை ரத்து செய்து விட்டு ஊருக்கு சென்று விடலாம் என தோன்றியது. ஹனிமூனுக்காக சென்ற சுற்றுலாவைக்கூட காசாக்க கணவன் ரஞ்சன் திட்டமிட்டிருந்தும், அதற்க்காக ஒரு நிறுவனத்திடம் தனக்குத்தெரியாமல் ஒப்பந்தம் போட்டிருந்ததும் தான் சண்டைக்கு காரணம்.

சூழ்நிலை காரணமாக, பணத்தேவைக்காக பிடிக்காத நடிப்புத்தொழிலுக்கு வந்து விட்டாலும் திருமணமாவது மனதுக்குப்பிடித்தவருடன் நடக்க வேண்டும் என உறுதியாக திட்டம் போட்டு வைத்திருந்தாள். ஆனால் தாயின் பேராசையால் எல்லாம் தவிடு பொடியாகி விட்டது.
சிறுவயதிலேயே அவளது தந்தை குடும்பத்தை விட்டு விட்டு வேறு பெண்ணைத்திருமணம் செய்து கொண்டதால் தாய் மகளை வளர்ப்பதற்க்கு மிகவும் சிரமப்பட்டதோடு, படிக்கும் போதே நாடகங்களில் நடிக்க அழைத்துச்சென்று அதில் வரும் வருமானத்தில் குடும்பத்தைக்காப்பாற்றினாள். வாடகை கொடுக்க முடியாததால் பல வீடுகளை மாற்றிய நிலையில் ஒரு செல்வந்தரான தயாரிப்பாளர் முதலில் சினிமா வாய்ப்பு கொடுத்ததோடு நடிகையின் நிலைமையை அறிந்து சம்பளத்துக்கு பதிலாக ஒரு பங்களா போன்ற வீட்டையே வாங்கிக்கொடுத்ததால் அவர் மீது அளவில்லாத நம்பிக்கை அவளுடைய தாயாருக்கு வந்து விட்டது.
ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில் நனேனாவின் அழகில் மயங்கிய தயாரிப்பாளர், முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டு இரண்டாவதாக தன்னைத்திருமணம் செய்தது அவளுக்குப்பிடிக்கவில்லை.
“அழகு சீக்கிரம் போயிறும். இந்த அளவுக்கு உச்சத்துல வாழ்ந்துட்டு ஐயாயிரம், பத்தாயிரத்துக்கு வேலைக்கு போக முடியாது. போனாலும் அதுக்கு டிகிரி லெவல்ல படிப்பு வேணும். அதுவும் சரியா இல்லை. எனக்கு வேற எந்த யோசனையும் சரின்னு தோணலை. அடுத்த படத்துல புதுசா ஒரு பொண்ணு நடிக்க வந்தா அவளை தயாரிப்பாளருக்கு பிடிச்சுப்போறதுக்கு வாய்ப்பிருக்கு. அதுக்குள்ள நீ அவரை கல்யாணத்தப்பண்ணிட்டீன்னா உன்ற ஆயுசுக்கும் இதே மாதர கார், பங்களான்னு கஷ்டப்படாம இஷ்டப்பட்ட மாதர வாழ்ந்திடலாம்” என அம்மா கூறியதில் இருந்த உண்மையை ஆராய்ந்ததால் திருமணத்துக்கு விருப்பமில்லா விட்டாலும் சம்மதித்தாள்.
‘பணம் எனும் சக்தி சிலரை விருப்பம்போல வாழ வைக்கிறது. பலரை விருப்பத்துக்கு மாறாக வாழத்தூண்டுகிறது’ என சிந்தித்தவள் முதலில் முடிவெடுக்க முடியாமல் பல இரவுகள் தூக்கம் தொலைத்தாள். முடிவில் பணமே வென்றது.
நனேனாவின் மனமோ முதல் படத்தில் உடன் நடித்த வினகனைச்சுற்றியே வந்து கொண்டிருந்தது. அவன் மிகவும் நல்லவன். ஆனால் நனேனா வாங்கிய சம்பளத்தில் கால் பங்கு கூட வாங்க இயலாதவன். சகோதரியின் திருமண செலவுக்காக வாங்கிய சம்பளத்தை வீட்டிற்கு கொடுத்து விட்டு ஒரே அறை கொண்ட நகரின் ஒதுக்குப்புறமான இடத்தில் வாழ்பவன்.
அடுத்த படம் கிடைக்குமெனும் உறுதியில்லாமல் விளம்பரங்களில் நடித்து காலத்தைப்போக்குபவன். ஆனால் நனேனாவின் மனம் அவன் மீது காதல் கொண்டது.
இரவு உறக்கமின்றி பல கோணங்களில் பின் விளைவுகளை ஆராய்ந்து, தான் சூழ்நிலைக்கைதியாகியதை உணர்ந்து முதலில் உடலை நடிப்பிற்குப்பழக்கியவள், தற்போது மனதையும் நடிப்பிற்குப்பழக்கத்தயாரானாள். ஹோட்டலை விட்டு கணவனுடன் சுற்றுலா ஸ்தலத்துக்குச்செல்ல இரவு போட்ட சண்டையை முற்றிலும் மறந்து சிரித்துப்பேசியபடி சென்றாள்.
இன்ஸ்டாகிராமில் நேற்று பதிவிட்ட புகைப்படத்தை விட இன்று பதிவிட்ட புகைப்படம் லைக்குகளை அதிகமாக பெற்றிருந்தது.
![]() |
ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க... |