பென்சில் – ஒரு பக்க கதை





அவள் மட்டும் அந்த அறைக்குள் சிந்தித்துக் கொண்டு இருந்தாள். சீக்கிரம் படிப்பு முடியனும்; நல்ல வேலைக்குச் செல்லனும்; நேர்மையான வழியில் சம்பாதிக்கனும். தான் விரும்பியவனையே கல்யாணம் பண்ணிக்கனும்; உடல் ஊனமுற்றோருக்கு உதவனும்; நாள்காட்டியை தினமும் கிழித்து வரும் நாட்களை எண்ணினாள்.
இவளின் ஆசைகள் நேர்மையானது என்று அனைவருக்கும் தெரியும். பிறகு இவளுக்கு தடையாக இருப்பது…? இவளின் படிப்பு முடிய ஓராண்டு இருக்கிறதே!
ஒவ்வொரு நாளும் முள்ளின் மேல் நடப்பது போல் உணர்ந்தாள். எதிர்கால கணவன் மேல் அதிக பற்றுதலாக இருந்தாள். தான் எதிர்பார்த்தவனையே அவளது பெற்றோர் தேர்ந்தெடுத்ததில் பெரும் மகிழ்ச்சி. ஆனால் விரைவிலேயே தேர்ந்தெடுத்துவிட்டதால் காதல் வயப்பட்டாள். இவள் சாதிக்க துணிந்தவள் என்பதால் கல்வியில் முன்னேறிக் கொண்டு தான் இருந்தாள்.
அறைக்குள் நிசப்தமாக இருந்ததை அறிந்துகொண்ட அவளின் தாய் “சிவரஞ்சனி..” என்றவாறு உள்ளே நுழைந்தாள்.
பென்சிலை சீவி சீவி கூர்மையாக்கிக் கொண்டே இருந்தாள் சிவரஞ்சனி.
‘பென்சிலைப் போல் கடைசிவரை கூர்மையானவள்; நாளைய வரலாற்றில் எனக்கும் சாதனைப் பிரிவில் இடமுண்டு’ என்று தாயின் கண்களை நோக்கி விழிகளாலே பேசினாள்.
அவளின் விரல்களில் இருந்த பென்சில் தானாகவே மக்கள் சமூகத்தில் மலர்ச்சி காண வழியொன்றை தேடிக்கொண்டு இருந்தது.
– 2006 ஆகஸ்ட் முதல் வார பாக்யா இதழில் வெளியானது.
– முதல் பரிசு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூலை 2015, இனிய நந்தனம் பதிப்பகம், திருச்சி.
![]() |
என் இயற்பெயர் தீ.திருப்பதி. சோலச்சி என்பது யார்......? இதற்கான விளக்கத்தை எனது "முதல் பரிசு " சிறுகதை நூலில் என்னுரையில் பதிவு செய்துள்ளேன். நான் புதுக்கோட்டை மாவட்டம் இராமநாதன் செட்டியார் மேல்நிலைப் பள்ளி , நச்சாந்துபட்டியில் பத்தாம் வகுப்பு (1997-1998) படிக்கும்போது எனக்கு அறிவியல் ஆசிரியராக இருந்தவர் தான் திருமதி. எஸ்.சோலச்சி அவர்கள். என் குடும்பம் சோற்றுக்கும் துணிக்கும் தங்குவதற்கும் வழியில்லாமல் ஊர் நடுவிலே இருந்த புளியமரத்தடியில் வாடி வதங்கிய…மேலும் படிக்க... |