அதிதி
கதையாசிரியர்: நாஞ்சில்நாடன்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: September 1, 2026
பார்வையிட்டோர்: 99
(2009ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கை வேலையாக இருக்கும்போது, இரண்டு வயதுப் பெண் ஜோர்ணாவை, பாக்கியம் வீட்டில் கொண்டு விட்டு விட்டுப் போய்விடுவாள் அதிதி. ஜோர்ணா என்பது வங்காளத்தில் ஓடும் நதியின் பெயர். ஜோர்ணாவும் நதிபோல் ஓடிக்கொண்டே இருக்கும் பெண்குழந்தை. பாக்கியத்தின் பிள்ளைகள் வளர்ந்து விட்டவர், பள்ளியில் வாசித்துக்கொண்டிருப்பவர். காலையில் ஏழே காலுக்குப் புறப்பட்டுப் போவார்கள். நடந்து போகும் தூரம்தான். மதியச் சாப்பாடு கொண்டுபோய்விடுவார்கள். அவர்கள் திரும்பி வர பிற்பகல் ஆகிவிடும். பூமிநாதன் காலை எட்டு மணிக்கு அலுவலகம் புறப்படுவார். இரவு திரும்பி வர அந்த நேரம் ஆகிவிடும். போகவரப் பயண நேரம் நான்கு மணிக்கூர், அதை ஒன்றும் செய்வதற்கில்லை.
ஜோர்ணாவின் அப்பா, தாதா, சாந்தனு பொன்வேலை செய்பவர். பூமிநாதனுடன்தான் போகும்போது பயணம். பெஸ்ட் பஸ் வந்து நின்றதும் பூமிநாதனுக்காக இருக்கை ஒன்று பிடித்து வைத்திருப்பார். எப்போதும் சாந்தனு முன்பேறாக வந்து, வரிசையில் நின்று, பேருந்தில் மேல்மாடியில் முன் முதல் வரிசையில் இடதுபக்கச் சன்னல் இருக்கை பிடித்துக்கொள்வார். பால் கிடைக்கவில்லை, இரண்டு நாட்களாகத் தண்ணீர் வரவில்லை, சனிக்கிழமை வாஷி பாலம் பழுதுபார்க்க மூடிவிடுவார்கள் என மான்கூர்ட் ரயில் நிலையம் வரும்வரை நாற்பது நிமிடங்கள் பேசிக்கொண்டு போவார்கள்.
மான்கூர்டில் இறங்கி, கடற்கரைப் பாதை இரயில் பிடித்து மேலும் ஐம்பது மணித்துளிகள் பயணப்பட்டு, விக்டோரியா டெர்மினசில் இறங்கி ஐந்து நிமிடங்கள் நடக்க வேண்டும் பூமிநாதனுக்கு. சாந்தனு குர்லாவில் இறங்கி மெயின் லைனில் வண்டி மாறி, தாதரில் இறங்கி நடப்பார். திரும்புகாலில் இரு வரும் சந்தித்துக் கொள்வதற்கான வாய்ப்பு இல்லை.
காலையில் பெரிய தம்ளரில் நிறையப் பாலூற்றித் தயாரித்த சாயும் காரி பிஸ்கட்டும் தான் நாஷ்டா. மதியத்துக்கு சப்ஜி செய்து ரொட்டி சுட்டுக் கொடுத்தனுப்புவாள் அதிதி. சப்ஜி எனில் உருளைக்கிழங்கு, கோவக்காய், பூக்கோசு என ஏதோ ஒன்று. கிளம்புவது வரைக்கும் அதிதிக்கு வேலை சரியாக இருக்கும். ஜோர்ணாவை சாந்தனு பார்த்துக் கொள்வார். சாந்தனு இறங்கிய பிறகு, பூமிநாதன் இறங்கிய பிறகு, ஜோர்ணா பாக்கியம் பொறுப் பில் வந்துவிடுவாள். பிறகுதான் வீடு பெருக்கித் துடைப்பு, பாத்திரம் தேய்த்தல், துணி துவைத்தல், குளித்தல்.
இரண்டு வயதுக் குழந்தை என்ன வேலை செய்ய அனுமதிக் கும்? எப்படியும் பத்துமணி வரைக்கும் ஜோர்ணாவைப் பாக்கி யம் பார்த்துக்கொள்வாள். வெளுத்த நிறமும் உருண்டை முகமும், பெரிய கண்களும் எடுப்பற்ற மூக்குமாய் அசல் வங்காள வார்ப்பு. குழந்தை மெல்ல மெல்ல இட்லி, தோசை, குழாய்ப்புட்டு, நூல் புட்டு எனப் பழகிக்கொண்டிருந்தாள். வங்காளிகள் தமிழ்நாட்டுக் காரர்களைப் போலவே சோற்றுப் பிரியர்கள். தோலுள்ள முழு உளுந்தை வறுத்து உடைத்து கறுப்பு நிறத்தில் டால் செய்து அதில் பொரித்த முழு அயிலை மீனைத் தோணிபோல் மிதக்கவிட்டு சோற்றுக்குத் தொடுகறியாக வைப்பார்கள். வெண்டைக்காய், விளக்கெண்ணெய், சேப்பங்கிழங்கு, உளுந்து இவற்றின் வழு வழுப்பை நீக்க முடியாது, தமிழனிடம் இருந்து சொரணை கெட்டதனத்தை எப்படி நீக்க முடியாதோ அப்படி. என்றாலும் அந்த டால் வாசமாக இருக்கும். உணவு என்றல்ல, எதுவாயினும் புதியன முயற்சி செய்து பாராதவன் உச்சங்களை அடைய இயலாது.
அதிதி வீட்டு வேலைகள் முடித்து, குளித்துத் தலைவாரி, பெரிய வட்டத்தில் பொட்டும் வகிட்டில் சிந்தூரமும் வைத்து, குழந்தையைத் தூக்க வரும்போது அதன் காலை ஆகாரம் முடிந்திருக்கும். இனிமேல் சாந்தனு வந்து சேரும் இராப்பொழுது பத்தரை பதினொன்று மணிவரை ஓய்வுதான். எப்படியும் சாப்பாடு முடிந்து பாய் போட பன்னிரண்டாகிவிடும்.
பாக்கியம் வீட்டில் தென்னிந்தியப் பலகாரம் என்ன செய் தாலும் ஜோர்ணாவுக்கு ஒரு பங்கு போகும். கிண்ணத்தின்மேல் தட்டுப்போட்டு மூடி கொழுக்கட்டை, ஆப்பம், இடியாப்பம் என. சிலசமயம் பிள்ளைகள் போவார்கள், சிலசமயம் பாக்கியம், அபூர்வமாய் பூமிநாதன். ஜோர்ணாவும் சுடுகஞ்சி, உளுந்தங்கஞ்சி என்ற தரத்தில் நீந்த ஆரம்பித்தது.
நவி மும்பையில் புதியதாய் அமைந்த குடியிருப்பு அது. பாக்கியத்துக்கு வாய்த்தது மூன்றாம் மாடி எனில் அதிதிக்கு அதற் கும் மேல் மாடி. புது மும்பை விரிவாக்கத் திட்டத்து வீடுகளில் அதிகபட்சம் ஐந்து மாடிகள். மின்தூக்கி ஏற்பாடுகள் இருக்காது. மாடியில் இருந்த நான்கு வீடுகளில் ஜோர்ணா வீட்டுக்கு எதிர் வீடு மொகித்தே வீடு. மொகித்தே வீட்டில் அவர், சகோதரி குடும்பம், இன்னொரு சகோதரி மகன் வாடகைக்கு டெம்போ ஓட்டுகிற பிரதீப் என எண்ணிக்கை அதிகம்.
மொகித்தே வீட்டில் தண்ணீர் பற்றாக்குறை, பாக்கியம் வீட்டில் தாராளமாக வரும். மேலே இருந்து இறங்கி வந்து பிடித் துக் கொள்வார்கள். சில சமயம் அதிதியும் பித்தளைப் பானை களில் சுமந்து கொடுப்பாள். சிலசமயம் நள்ளிரவில் வரும் தண்ணீர். தண்ணீர் வரும் நாட்களில் அல்லானாலும் பகலானாலும் பாக்கியத்தின் வீடு அடையா நெடுங்கதவு. மராத்தியரும் வங்காளி களும் பொதுவாகச் சூது பயிலாதவர். பிடித்து முடித்ததும் கதவைச் சாத்திவிட்டுப் போங்கள் என்று படுக்கை அறைக் கதவடைத்துத் தூங்கப் போகலாம். பாக்கியம் வீடு, அதிதி வீடு, மொகித்தே வீட்டாருக்குள் நல்லிணக்கமும் உறவும் இருந்தது.
இட்லி சாம்பார் என்பது வட நாட்டவருக்கு விலை மதிப் பற்ற பலகாரம். இடது கையில் வடைபோன்று இட்லியைப் பிடித்து மென்கடி கடித்தவாறு சாம்பார் கிண்ணம் தூக்கி உறிஞ்சு வார்கள், ரசனையோடும் பாலியல் உச்சத்தின் பரவசத்தோடும்.
வீட்டில் பிள்ளைகள் சோம்பற் பட்டால், பாக்கியம் கை சோலியாக இருந்தால் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்பட்ட இட்லிக் கிண்ணமும் சாம்பார் கிண்ணமும் தாங்கி லுங்கி கால் தடுக்காமல், கோகுலத்துக் கோபியர் போல் பூமிநாதன் போவார் சிலநாள். ஜோர்ணாவின் ‘தாதா’ எனும் விளி ஆனந்தமாக இருக் கும். குழந்தை தூங்கிவிடக் கூடாது என்று பெரும்பாலும் முதல் ஈட்டிலேயே கொண்டுபோக வேண்டும்.
அன்று அலுவலகம் திரும்பிப் போகாமலேயே, வெளி வேலைகள் சில முடித்துவிட்டு, நேராக வீட்டுக்கு வந்துவிட்டார் பூமிநாதன். ஐந்துமணி நேரப் பயணம் என்பதாலும் அலையும் வேலை என்பதாலும் தினமும் வீட்டுக்கு வந்தவுடன் மறுபடியும் குளிக்க வேண்டும். குளித்ததும் சாப்பாடு.
இட்லி ஆவி வந்துகொண்டிருந்தது. குக்கர் அல்ல, கொப்பரை, இட்லி வெந்து ஆவிவரும் வாசம் நன்றாக இருக்கும். சுடச்சட, எதுவும் தொட்டுக்கொள்ளாமல் ஒன்றிரண்டு தின்னவும் செய்யலாம். குளித்து, தலைதுவட்டி, சாரம் உடுத்து, தலைவாரி, சாப்பிட உட்காருவதுதான் வழமை.
“கொஞ்சம் இரிங்கோ, ஜோர்ணாவுக்கு குடுத்துக்கிட்டு வந்திருகேன்” என்று சொல்லி, இட்லியைக் கை பொறுக்கத் தட்டத்தில் இருந்து கிண்ணத்துக்கு மாற்றி, வேறொரு கிண்ணத் தில் தேங்காய்ச் சட்னி கோரி, தட்டுப்போட்டு மூடி… இனி அடுத்த ஈடுதான் என பூமிநாதன் ஆசுவாசப்பட்டார்.
மணி ஏழே முக்கால் ஆகி இருந்தது.
கறுப்பு வெள்ளை டி.வி.யில் ஏதோ பாய்ந்து கொண்டிருந்தது. கிண்ணங்கள் சாய்ந்துவிடாமல் நிதானமாகப் படியேறிப் போன வள் இருபதடி நீள ராஜவெம்பாலை பாம்பைப் பார்த்த பதற்றத் தில் தடதடத்து இறங்கி வந்தாள்.
“என்ன?” என்றார் பூமிநாதன்.
கிண்ணங்களைக் கொண்டு அடுக்களை மேடை மீது நிதானம் இல்லாமல் வைத்தாள் பாக்கியம். பதைத்த மூச்சு வாங் கலில் நின்றாள். மேலெல்லாம் சளசளவென வியர்த்துக் கொட்டி யது. ஒன்றும் யூகிக்க இயலவில்லை. சற்று ஆற்றிக் கொள்ளட்டும் என்று அமைதியானார்.
ஆசுவாசமாகிப் பக்கத்து இருக்கையில் வந்து அமர்ந்தாள். “சரி, சாப்பிடுதேளா?”
“சாப்பிடலாம், ஏன் மேலாங்கோட்டு இசக்கியை நேரிலே கண்டது மாதிரி ஓடிவந்தே? அதைச் சொல்லு!”
“பொறவாட்டு சொல்லுதேன்… பிள்ளையோ எல்லாம் முழிச்சுக்கிட்டிருக்கு… நீங்க சாப்பிடுங்கோ…”
ஒன்றும் பெரிய அபாயம் இல்லை என்று தோன்றியது. பூமிநாதன் சாப்பிட ஆரம்பித்தார். அன்று டைனிங் டேபிள் வசதிகள் வெகுவாக வந்திருக்கவில்லை. மேலும் 350 சதுர அடி ஒன் ரூம் கிச்சன் வீட்டில் எங்கு கொண்டுபோய் யாவற்றையும் அடைப்பது? ஜோர்ணாவின் அம்மா அதிதி, மேலிருந்து இறங்கி, படிக்கட்டு திரும்பும் இடத்தில் நின்று, “தீதி” என்று பாக்கியத்தைக் கூப்பிட்டாள். சாப்பிட்டு முடிக்கும் தோதில் இருந்த பூமிநாதன், போய்ப் பார் என்று சைகை காட்டினார். கண்கள் கலங்கி, முகம் சற்று வீங்கியது போல் தென்பட்டாள் அதிதி. பாக்கியம் மேலேறிப் போனாள். ஒலி மிகாவண்ணம் பேசிக் கொண்டனர்.மூக்குறிஞ்சும் ஓசை கேட்டது. பாக்கியம் அவள் தோளைத் தட்டிச் சமாதானப்படுத்துவதும் தெரிந்தது. பூமிநாத னுக்கு எதுவும் அர்த்தமாகவில்லை. ஏதும் ‘பொம்பளைகள் சமாச்சாரம்’ என்று எண்ணிக்கொண்டார். ஆனால் அதற்குப்போய் ஏன் இத்தனை வேர்த்துப் பூக்கவேண்டும்?
சாப்பாட்டுக்கடை ஒதுங்கி, ஒரு சடங்கு போல் அடங்கிக் கொண்டிருந்தது வீடு. கற்பனைக்கும் யதார்த்தத்துக்குமானதோர் மாய யுத்தம். எதற்காகப் பதைபதைத்து ஓடிவந்தாள்? எதற்காக அதிதி சற்று அழுது காட்டிவிட்டுப் போகிறாள்?
குழந்தைகளுக்கு ஊட்டி, அடுக்களை ஒதுக்கி, எச்சிற் பாத்திரங்கள் தேய்த்து, படுக்கை விரித்து, சில்லறைச் சின்னப் பிள்ளைகள் சண்டை விலக்கி, தலைமாட்டில் தண்ணீர்ச் செம்பு வைத்து, நாலரை மணிக்கு அலாரம் வைத்து பால்பாட்டில் டோக் கன் எடுத்து வைத்து, வாயிற்கதவு சன்னல்கள் மூடி… இல்லத்தரசி நேரம் என்பது சீரியல் குடும்பத் தலைவி வாழ்வு போலவா?
எல்லா வீடுகளிலும் இரைச்சல் அடங்கிக் கொண்டிருந்தது. மொகித்தே வீட்டில் இனிமேல்தான் சப்பாத்தி உருட்டுவார்கள். சாந்தனு வர இன்னும் நேரமாகும். பக்கத்தில் வந்து படுத்தவள் மேல் காலைத் தூக்கிப்போட்டார் பூமிநாதன். தலைப்புச் செய்தி கள் வாசிப்பது போலத் தகவல்கள் வந்துவிடாது என்று தெரியும். பெண்கள் உரையாடலை ஆரம்பிப்பது என்பது, பாகவதர் கீர்த்தனையை எங்கிருந்து எடுக்கிறார் என்பது போன்றது. அந்தக் கணத்தின் மனோலயம் போல, காலக்கணக்கு.
“ஆனாலும் பொம்பளையோ இப்பிடி இருக்கப்பிடாது!” “எப்படி இருக்கப்பிடாது?”
“சும்ம தற்குத்தறம் பேசாதீய… வீட்டுக்குள்ள போறன், ஜோர்ணா உறங்கிட்டிருக்கு. ராத்திரி சாப்பிட்டுதோ என்னவோ? பொறவு எழுப்பிக் குடுப்பாளோ என்னவோ? இவ எங்க போயிருப்பா, கிச்சன்லே எட்டிப் பாத்தா எனக்கு பொசுக்குண்ணு ஆயிப்போச்சு!”
“ஏன்!”
“அந்தப் பய, மேல்வீட்டு மொகித்தே மருமகன் பிரதீப்பு, அவளைக் கெட்டிப் புடிச்சுக்கிட்டு நிக்கான். அவ மொகம் அவன் தோள்ப்பட்டையிலே சாஞ்சிருக்கு… ரெண்டு கையும் வச்சு முதுகை இறுக்கிப் பிடிச்சிருக்கா… நிமிந்து என்னைப் பாத்திட்டா”
“ம்?”
“எனக்கு ஒரே வெப்ராளமாப் போச்சு… ச்சே… என்ன சவத்து எளவு? வெசர்த்து ஊத்துகு எனக்கு… எப்பிடி எறங்கி வந்தேம்ணு இப்பம் யோசிச்சா பிடி கெடய்க்க மாட்டங்கு…”
“சரி, போயிட்டுப் போறா! பெரிசு படுத்தாத, விட்டுத் தள்ளு…”
“ஆனாலும் இப்பிடியும் உண்டா?”
“சரி போறா, விடு… ஆமா, பொறவு என்னத்துக்கு வந்து அழுதிட்டுப் போறா?”
“நான் ஒண்ணுமே செய்யல்லே தீதி, அவந்தான் வல்லந்தமா வந்து…”
“அது இல்லாட்டாலும் அப்பிடித்தானே! பெண்ணாப் பொறந்த காலத்திலேருந்து தொயந்து நடக்கப்பட்ட காரியந்தான். நீ யாரிட்டேயும் சொல்லீட்டு நடக்காத. ”
“ஆமா, எனக்கு வேற சோலி இல்லேல்லா? ஆனா அவ என்ன சொல்லுகா தெரியுமா, பாய் சாப் கிட்டே சொல்லீராத தீதிண்ணு!”
“அதுதான் நியாயம். எனக்குச் சொன்னா, தெனமும் பக்கத் துலே உக்காந்து பஸ்ஸிலே போகச்சிலே சாந்தனுவுக்கு சொல் லீட்டா என்ன செய்யது பொறவு?”
“எனக்கு மேல எல்லாம் மசுக்குட்டி ஊருக மாரி இருக்கு. சே! என்ன பொம்பளை?”
“நீ அப்பிடித் தீர்ப்பு எழுதீராத! அவளுக்கு என்ன பிரச்னையோ?”
“என்ன எளவெடுத்த பிரச்னை? கொழுப்பெடுத்து அலையுதா!”
“அப்பிடிப் பேசப்பிடாதும்மா… கொஞ்சம் இரக்கத்தோட யோசிச்சுப் பாக்கணும். நீயும் பொம்பள தான?”
“ஆமா! நான் அப்பிடி இருந்தா வச்சுப் பாப்பையோ!”
“சரி, சரி யாருகிட்டேயும் சொல்லீட்டு நடக்காத, என்ன?”
“எனக்கு இதுதான சோலி? எவ எவங்கூடப் போனாள்ணு பொரணி பேசீட்டுத் திரியதுக்கு? நாளைக்கு பிள்ளையைத் தூக்கீட்டு வரட்டும்!”
“அதுக்கு ஜோர்ணா என்ன செய்யும்?”
“ஜோர்ணாவும் பூர்ணாவுந்தான்! நமக்கு வேண்டாம் இந்தக் கூதறயோ சாவாசம்!”
மசுக்குட்டி ஊர்வது நிற்கட்டும் என்று எண்ணினார் பூமிநாதன். ஒருவேளை நாளை சொன்னால் புரிந்து கொள்வாளாக இருக்கும்.
– யுகமாயினி, 2009.
நன்றி: https://nanjilnadan.com
![]() |
நாஞ்சில்நாடன் வாழ்க்கைக் குறிப்பு: பெயர் : G. சுப்ரமணியம் (எ) நாஞ்சில் நாடன்எழுதும் துறை : நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரைபிறந்த நாள் : 31 டிசம்பர் 1947பிறந்த இடம் : வீரநாராயணமங்கலம்தாழக்குடி அஞ்சல், தோவாளை வட்டம்,கன்னியாகுமரி மாவட்டம்.தமிழ் நாடு – 629 901.முகவரி : G. Subramaniyam (NanjilNadan)Plot No 26, First Street, VOC Nager, Near Euro Kids, KovaipudurCoimbatore – 641 042, Tamilnadu.Phone:…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
வெத்தலை மடிச்சுக் கொடுக்க ஆசையா?
வளர்கவி
September 6, 2026
இதய ஓசைகள்
மா.வீ.தியாகராசன்
September 6, 2026
உறவுகள் ஆயிரம்
ஐ.சாந்தன்
September 6, 2026
