கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 20, 2025
பார்வையிட்டோர்: 76 
 
 

இந்த நகரின் பிரதான சாலை புதிதாக அகலமாக சீராக மீண்டும் மீண்டும் போடப்பட்டுள்ளது. சாலையின் டிவைடரை மறைத்து விடும் போல. ஏற்கனவே பழைய கட்டிடங்களும் கடைகளும் சாலைக்கு சற்று கீழே உள்ளது. சிலவற்றை மாற்ற முடியாது.

விஷ்வா எப்போதும் இதே சாலையில் தான் வீட்டுக்கு சென்று வருவது வழக்கம். ஒரு வார காலமாக புதிதாக சாலை போட்ட போது புழுதியும் புகையும் எழுந்து கொண்ட இருந்தது. அதிக நெரிசல் காரணமாக ஆமை போல மெதுவாக நிதானமாக செல்ல வேண்டியிருந்தது. சிலருக்கு எரிச்சல் முகத்திலும் கண்களிலும் எரித்து கொண்டே இருந்தது. ஹாரன் சத்தம் கேட்டு கொண்ட இருக்கும். சிலருக்கு அது ஒரு பழக்கமாகவே மாறி விட்டது. அவ்வபோது சண்டைகள் வருவதும் உண்டு. ஆனால் இப்போது பெரிய விடுதலை கிடைத்தது. சுலபமாக இந்த வழியில் செல்ல முடிகிறது.

பிரதான சாலையை வலது புறம் திரும்பி தெருவின் பெயர் பலகையை கடந்து சென்றால் தெருவுக்குள் போகும் சாலை வந்து விடும். இரண்டு புறமும் வீடுகள் மற்றும் மரங்கள் நிறைந்து இருந்தது. அவன் வீடு முதல் தெருவில் தான் உள்ளது. அவனுக்கு சாந்தி ஸ்டோர் வரும் போது ஒரு அழைப்பு வந்தது. வண்டியை கடைக்கு முன் ஓரமாக நிறுத்திவிட்டு அழைப்பை எடுத்து பேசினான்.

ஹலோ சார் வணக்கம். நான் தான் சபேசன் பேசுறேன். விஸ்வநாதன் சார் தானே.

ஆமாம், விஷ்வா தான் பேசுறேன் சொல்லுங்க, யாருன்னு தெரியலையே, என்ன விஷயம் ?

நான் ஒரு தேர்வுக்கு பணம் கட்டணும் , அர்ஜென்ட்டா 300 ரூபாய் பணம் வேண்டும். அடுத்த மாதம் 1 ஆம் தேதி திருப்பி கொடுத்துடறேன்.

எனக்கு யாருன்னு தெரியலையே, நீங்க எங்க இருக்கீங்க.

நான் தாராசுரம் தான் சார். சன்னதி தெரு.

அப்படியா நானும் தாராசுரத்தில் தான் வேலை பார்க்கிறேன். ஆனால் உங்களை எனக்கு தெரியவில்லை.

சார் நீங்க ஏற்கனவே எனக்கு பணம் 3000 இந்த எண்ணுக்கு GPAY பண்ணி இருக்கீங்க மறந்துட்டீங்க.

சரி. நாளைக்கு தாராசுரம் மேல்நிலைப் பள்ளிக்கு மாலை நேர்ல வாங்க. பேசிக்கலாம்.

சரி வரேன் நன்றி சார்.

விஷ்வாவிற்கு ஒரே குழப்பம். அவனுக்கு யாருன்னு தெரியவில்லை. அவனை தெரிந்தால் கூட பணம் தரலாம். இது என்ன புது பிரச்சனையா இருக்கு என்று நினைத்தான். அவன் வீட்டுக்குள் நுழைந்தவுடன்.

என்ன பெரிய யோசனை என்றாள் பிரியா.

ஆமா, எப்போதும் நீ தான் என்ன குழப்புவ. இன்னைக்கு எனக்கு ஒருத்தன் போன் பண்ணுனான். நல்லா பேசுனாள். யாருன்னு தெரியல. 300 ரூபாய் பணம் கொடுங்க. ஞாபகப்படுத்தி பார்த்தேன் அப்பவும் தெரியல என்றான்.

அப்பறம், இது என்ன புது கத. எனக்கு தெரியாம காசு பணம் என்று, நீயாவது உடனே பணம் குடுக்குரதாவது. ஆமா என்னா உடனே பணம் அனுப்பிட்டியா என்றாள்.

நானே கடுப்புல இருக்கேன். நீ வேற.

சரி மீதி கதையை சொல்லு.

செல்றேன் தலைய வலிக்கிறது. முதலில் ஒரு காபி கொடு.

பிரியா காபி போட்டு எடுத்து கொண்டு வந்தாள். விஷ்வா காபி குடித்து முடித்து விட்டு இதற்கு தான் நீ வேண்டும் பிரியா என்றான். காபி கொடுத்தா பிரியாம்மா. கொடுக்கலைன்னா உம்முன்னு இருப்ப என்றாள்.

அவன் பேரு சபேசன் என்றான். உனக்கு யாராவது தெரியுமா. இல்ல, கேட்ட பெயரா இல்லையே. சரி என் போனை சரி பாரு, இந்த

எண்ணுக்கு ஏதாவது பணம் ஏற்கனவே அனுப்பி இருக்குரோமா. பிரியா GPay வை சரி பார்த்தாள்.

விஷ்வா 3000 ரூபாய் இந்த எண்ணுக்கு போன மாசம் அனுப்பி இருக்கோம்.

எதற்காக?

அதான் நம்ம டிரைவர் அண்ணனுக்கு அனுப்பி இருக்கோம். தாராசுரம் கோயிலுக்கு போனோம் இல்ல, அதுக்காக.

சரி ஒரு உதவி செய் அந்த டிரைவர் ஆறுமுகத்துக்கு போன் போட்டு கேளு.

பிரியா டிரைவருக்கு போனில் அழைத்தாள். ஆறுமுகம் எடுத்து பேசினார். சபேசன் பற்றி கேட்டாள். ஆறுமுகம் கூறினார். அவர் என் அக்கா மகளின் புருஷன் தான். என்கிட்ட GPay இல்ல. அதான் என் அக்கா மகளுக்கு பணம் போடச் சொன்னேன். அந்த எண்ணைப் பார்த்து தான் உங்க வீட்டுக்கு போன் போட்டு இருப்பார். அவருக்காக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். பணம் எதுவும் கொடுக்க வேண்டாம். எல்லாம் என்னுடைய தப்புதான். நான் பார்த்துக் கொள்கிறேன். அவர் எல்லோரிடமும் எளிதில் கடன் வாங்கி உபயோகப் படுத்துவார். ஆனால் சரியாக திருப்பி கொடுத்து விடுவார் என்றார்.

பிரியா கூறினாள் விஷ்வாவிடம், அவர் டிரைவருடைய சொந்தம் தான்.

Thanks priya. நாளைக்கு நான் அவரை பார்த்துக் பேசிக் கொள்கிறேன். பிரியா, நீ சொல்லு. அவருக்கு பணம் கொடுக்கவா, வேண்டாமா.

எனக்கு ஸ்கூல் வேலை நிறைய இருக்கு. நாளைக்கு பேப்பர் திருத்தி கொடுக்கனும், நீ எல்லா வேலையையும் பள்ளியிலேயே முடித்து விட்டு வந்து உட்கார்ந்து இருப்ப என்னை ஏதாவது வம்பு இழுப்ப. உனக்கு பொழுது போகலைன்னா, ஏதாவது புக் படி என்றாள்.

இல்ல, அவருக்கு பணம் கொடுக்க வா வேண்டாமா, சொல்லு.

அதான் யாருன்னு தெரிந்திருச்சுல விடு. அத நாளக்கு பார்த்துக்கலாம். முதல்ல ஒரு வேலை பண்ணு. வாஷிங் மெஷின்ல துணி கிடக்கு. எடுத்து நல்லா உதறி காயப்போடு. தெண்டமா நிறைய செலவு பண்றோம். 300 ரூபாய் தானே. வேலைக்கு தானே. பாவம். கொடு என்றாள்.

உன்ட்ட கேட்காமலேயே இருக்கலாம் என்றான்.

விஷ்வா அவருடன் வேலை பார்க்கும் கணக்கு ஆசிரியர் ஜேம்ஸிடம் விவரத்தை சொன்னான். ஜேம்ஸ் நானும் மாலை வருகிறேன் அவன் யாரென்று பார்க்கலாம் என்றார். மீண்டும் பள்ளி முடியும் நேரத்திற்கு போன் வந்தது. சபேசன் தான் அழைத்தான்.

சார், நான் ஸ்கூலுக்கு வெளியில் தான் இருக்கேன். உள்ளே வர வா சார்.

இல்ல நாங்களே புறப்பட்டு விட்டோம். அங்கேயே நில்லுங்க ஓரமா என்றான். விஷ்வாவும் ஜேம்ஸூம் சபேசனை நோக்கி சென்றார்கள்.

சபேசன் நல்ல உயரம். சிவந்த நிறம். முடியை எண்ணெய் வைத்து வாகெடுத்து சீவி இருந்தான். சிரித்த முகம்.

சார், வணக்கம் என்றான் இருவரையும் பார்த்து.

விஷ்வாவுக்கு சபேசனை தெரியவில்லை.

உங்களை எனக்கு தெரியவில்லை என்றான் விஷ்வா.

ஜேம்ஸ் சபேசனை பார்த்து உங்களை எங்கேயோ பார்த்தது போல் இருக்கிறது. எங்கு என்று சரியாகத் தெரியவில்லை என்றார்.

சபேசன் சிரித்துக் கொண்டே தன்னைப் பற்றி சொல்லத் தொடங்கினான்.

நான் இதே பள்ளியில் தான் படித்தான். அதுவும் பள்ளியிலேயே முதல் மாணவனாக அதிக மதிப்பெண்கள் எடுத்தேன். அன்று எல்லோரும் என்னை கொண்டாடினார்கள்.

ஜேம்ஸ் அவனை கண்டு கொண்டார். விஷ்வாவிடம் ஜேம்ஸ், சார் இந்த பையன் நம்ம ஸ்கூல்ல தான் படிச்சான். உங்களுக்கு தெரியாது. நீங்கள் இரண்டு வருடத்திற்கு முன்பு தான் மாற்றலில் வந்தீர்கள். சபேசன் படிப்பதில் மட்டும் அல்ல. எல்லா போட்டிகளிலும் வெற்றி பெற்று பரிசுகள் பெற்றிருக்கிறான் என்று பெருமையாக கூறினார். இப்போது இருவருக்குமே தர்மசங்கடமாக இருந்தது. அதுவும் விஷ்வாவுக்கு, பணத்தை நேற்றே அவனுக்கு அனுப்பி இருக்கலாம் என்று தோன்றியது. ஜேம்ஸ் விஷ்வாவிடமும் சபேசனிடமும் சார் நாம் ஒரு

டீ சாப்பிடலாம் என்று சூழ்நிலையை கொஞ்சம் மாற்ற முயற்சித்தார். விஷ்வா விற்கும் ஒரு வித சங்கோஜமாக இருந்தது.

ஜேம்ஸ் சபேசனிடம் நீ என்ன செய்து கொண்டு இருக்கிறாய் என்றார். சபேசன் மீண்டும் தன் கதையை சொல்ல தொடங்கினான். சார் நான் கலைக் கல்லூரியில் தான் தமிழை பாடமாக எடுத்து படித்தேன். பிஏ, எம்ஏ மற்றும் பிஹெச்டி வரைக்கும் படித்தேன். அதுவும் பிஹெச்டி முடிப்பதற்கு என் மனைவியின் நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்று தான் முடித்தேன். என் மனைவி கேட்டவுடன் எந்த கேள்வியும் கேட்காமல் கொடுத்து விட்டாள். தற்போது ஒரு தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன். சம்பளம் ஒழுங்காக வந்து கொண்டிருந்தது. ஏன் என்று தெரியவில்லை கல்லூரி நிர்வாகத்திற்குள் ஏதோ பிரச்சனை அதனால் இரண்டு மாதங்களாக சம்பளம் சரியாக வரவில்லை. என் மனைவி தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்க்கிறார். அதனால் ஓரளவு வாழ்க்கை ஓடுகிறது. நெட் சிலெட் எக்ஸாம் எல்லாம் எழுதினேன். நான் கட் ஆப் மார்க்கில் இரண்டு மார்கில் தேர்வாக முடியவில்லை. ஆனால் இந்த முறை தேர்ச்சி பெற்று விடுவேன் என்று நம்பிக்கையுடன் பேசினான். விஷ்வா அவனுக்கு பணம் உடனே அனுப்பினான். சபேசன் விஷ்வாவிடம் 1 ம் தேதி திருப்பி தந்து விடுகிறேன் என்றான். ஜேம்ஸும் விஷ்வாவும் ஒரே குரலாக நீ பணம் எதுவும் திருப்பி தர வேண்டும் என்றார்கள். தேர்வில் வெற்றி பெற்றவுடன் சந்திக்கலாம் எந்த உதவியாக இருந்தாலும் கேட்கலாம். எப்போது வேண்டுமானாலும் பள்ளிக்கு வரலாம் என்று கூறி விடைபெற்றுக் கொண்டனர்.

விஷ்வா வீட்டுக்குள் நுழைந்தவுடன் பிரியா சிரித்துக் கொண்டே என்ன 300 ரூபாய் பணம் அனுப்பியிருக்க மாட்டியே என்றாள். விஷ்வா எதுவும் கூறாமல் புன்னகைத்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *